முட்டாள்கள் இந்தியாவுக்கு மட்டுமா சொந்தம்?
முட்டாள்கள் உலகிற்கே சொந்தம்!
இராகு கால நேரத்தை கைக்கடிகாரம் பார்த்துத் தெரிந்து கொள்வதற்கான ஒரு மூடத்தனத்தை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த போர்கியால் நிறுவனம் அரங்கேற்ற உள்ளதாம்.
தற்போது, இந்த வகை வாட்சுகள் 150 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. வரவேற்பை பொறுத்து, அதிக அளவில் தயாரிக்கப்படும். இந்தப் புதிய ரக வாட்சின் அறிமுக விழாவில் பேசிய, போர்கியால் நிறுவனர் சித்ரா சுப்பிரமணியம் கூறுகையில், ஒவ்வொரு நாளும் 90 நிமிடங்கள் அளவுக்கு ராகுகாலம் உள்ளது. கெட்ட நேரமாகக் கருதப்படும் அந்தக் காலகட்டத்தில் நல்ல காரியங்களைச் செய்வதில்லை. அதனால், அந்த நேரத்தைத் தெரிந்துகொள்ளும் வகையில், அவற்றை தெரிவிக்கும் வகையிலான சிறப்பு அம்சம் கொண்ட வாட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என, தனித்தனி மாடல்களில் இந்த வாட்சுகள் தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறை என்றார். கைக்கடிகாரம் ஒன்றின் விலை ரூபாய் ஒரு லட்சம்முதல் 2 லட்சம் வரையாம்! மூடத்தனத்தின் விலை அதிகம்தான்போலும்!
ஒவ்வொரு நாளும் ராகு காலம் தொடங்கும்போது, வாட்சின் டயல் பகுதியில், புதுவிதமான கலர் தோன்றும். அந்த 90 நிமிடங்கள் முடிந்தவுடன் மீண்டும் பழைய நிறத்திற்கே... டயல் வந்துவிடும். கலர் தோன்றும்போது, ராகு காலம் நடப்பில் உள்ளதை அறிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இந்தக் கடிகாரத்தை இந்தியாவின் தலையில்தான் கட்டப் போகிறார்கள். கடிகாரத் தொழிலில் சுவிட்சர்லாந்து மிகவும் முன்னேறிய நாடாகும். மேட்இன் சுவிட்சர்லாந்து என்று போடப்பட்ட கடிகாரங்களை வாங்குவதில் ஒரு ஈர்ப்பு இந்தியாவில் உண்டு.
இந்தியர்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கித் திளைப்பவர்கள்; அவர்கள் மத்தியிலே நல்ல போனியாகும் என்ற வியாபாரத் தந்திரத்தில் இந்தக் கேவலமான வேலையில் இறங்கியிருக்கக் கூடும். நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?
இராகு காலம், எமகண்டம், குளிகை என்பதெல்லாம் சுவிட்சர்லாந்தில் கிடையாது. அதுவும் இந்திய நேரத்திற்கும், சுவிட்சர்லாந்தின் நேரத்திற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு.
இதில் ஒரு கடைந்தெடுத்த நகைச்சுவை என்னவென்றால் தமிழர்கள், இந்தியர்கள் எங்கு சென்றாலும் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கக் கூடியவர்கள். சிங்கப்பூர்வரை சென்று அலகுக் காவடி, செடில் காவடி எடுப்பதில்லையா?
சிங்கப்பூர் நேரத்திற்கும், நமது நேரத்திற்கும் இடைவெளி இரண்டரை மணிநேரம் உள்ளது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் அறிவைச் செலுத்தாமல், ஞாயிற்றுக்கிழமை என்றால் இங்கு கடைபிடிக்கும் அதேநேரத்தை அங்கும் மாலை நாலரை மணிமுதல் 6 மணிவரை இராகு காலம் என்று நம்புகிறார்கள்.
பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் கூறிய கருத்து எவ்வளவுத் துல்லியமானது என்பதற்கு இது ஒன்று போதாதா?
இராகுகாலம், எமகண்டம், குளிகை என்று கூறி பகல் நேரத்தில் நான்கரை மணிநேரத்தைப் பாழாக்கும் ஒரு நாடு உருப்படுமா - வளர்ச்சிப் பாதையில் தான் பயணிக்குமா? மூடத் தனத்தை விஞ்ஞான ரீதியாகப் பரப்பும் மோசடிதானே இது?
இராகுகாலத்தில் இரயில்கள் ஓடுவதில்லையா - விமானங்கள் பறப்பதில்லையா? நீதிமன்றங்கள் நடப்பதில்லையா? நீண்ட காலம் வராத கடன் இராகு காலத்தில் திரும்பி வந்தால் வேண்டாம் என்று நிராகரித்துவிடுவார்களா?
நல்ல நேரம் பார்த்து, பொருத்தம் பார்த்து கல்யாணம் கட்டிக்கொண்ட ராமன் - சீதை வாழ்க்கை எவ்வளவு சோகமானது!
வால்மீகி இராமாயணப்படி இராமன் சரயு நதியில் வீழ்ந்தும், சீதை பூமி வெடித்தும் தற்கொலை செய்துகொண்ட னர் என்பது எதைக் காட்டுகிறது? 14 வருடம் இராமன் காட் டுக்குச் சென்றதும், கர்ப்பிணியாகிய சீதை காட்டில்கொண்டு போய்விடப்பட்டதும் எதைத் தெரிவிக்கின்றன?
மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டி கல்யாணம் கட்டிக் கொண்ட கோவலன் - கண்ணகி கதை கற்பிக்கும் பாட மென்ன? கோவலன் குற்றவாளியாகி மரண தண்டனைக் கல்லவா ஆளானான்? கணவனை இழந்து பரிதவித்த கண்ணகிக் காதை உணர்த்துவது என்ன?
இரண்டாம் உலக மகாயுத்தத்தில் அணுகுண்டு வீச்சுக்கு ஆளான ஜப்பான் இன்று உலக அளவில் தொழில் வளத்தில் நிமிர்ந்து நிற்பது எந்த அடிப்படையில்? எந்தவித மூல ஆதாரப் பொருள்கள் இல்லாத அந்த எரிமலை நாடு எப்படி ஒளி வேகத்தில் முன்னேறியது? குள்ளன் என்றால் அது ஜப்பான்காரர்கள்தான் என்று கேலிப் பேசப்பட்ட காலம் மலையேறிவிட்டதே - விஞ்ஞான அணுகுமுறை முறைகளால் இன்று ஆறடி மனிதர்களாக வளர்ந்துவிட்டனரே!
எப்படி? எதனால்? நல்ல நேரம், கெட்ட நேரம், மங்கலம், அமங்கலம் பார்த்தா?
உழைப்பு! உழைப்பு!! உழைப்பு!!! திட்டமிடல், திட்டமிடல், திட்டமிடல் - இவற்றின் அடிப்படையில்தானே அந்த நாடு உலகில் மிகச் சிறந்த இடத்தை வகிக்கிறது!
தந்தை பெரியார் அவர்கள் ஒருமுறை சொன்னதுபோல முட்டாள்கள் இந்தியாவுக்கு மட்டுமா சொந்தம்? அது உலகத்துக்கே சொந்தம் என்றார்.
சுவிட்சர்லாந்தும் அதற்கு விதிவிலக்கல்ல; ஆனாலும், அவர்கள் மிக சாமர்த்தியமாக இந்தியாவின் தலையில் கட்ட முயற்சிப்பது - இந்தியாவுக்கு மாபெரும் வெட்கக்கேடாகும்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com