தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!
'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
ஏதோ ஒரு பாட்டு mp3
ஏதோ ஒரு பாட்டு mp3 | ||
Found at bee mp3 search engine |
Pages
Tuesday, June 30, 2009
"கசக்கும் கச்சத் தீவு..! "தினமணி கட்டுரை
இரா. செழியன்
தமிழில் "கச்சம்' என்றால் "ஆமை' என்று பொருள். ஒருவகை ஆமைகள் நிறைந்திருந்த காரணத்தினால் கச்சத்தீவு என்ற பெயர் ஏற்பட்டது. 5 கிலோ மீட்டர் நீளமும், இரண்டரை கிலோ மீட்டர் அகலமுமாக மொத்தம் 255 ஏக்கர் பரப்பளவில் கச்சத்தீவு உள்ளது. சிறியதொரு கடல் திட்டு என்றாலும், கடுமையான புயல் அதனைச் சூழ்ந்து கிளம்பியுள்ளது. கடல் பரப்பில் காற்று அழுத்தம் குறைந்தால் கடும் சூறாவளி எழும். அதைப்போல், இந்திய அரசின் அழுத்தம் குறைந்த, பலவீனம் அடைந்த நிலையில் புயலின் வேகம் பலமாகக் கூடுகிறது.
கச்சத்தீவில் இலங்கை ராணுவத் தளம் ஒன்றை அமைக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை அடுத்து, கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். ""எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க முன்வந்தால் கச்சத்தீவை மீட்க சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரத் தயார்!'' என்று தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதி அதற்கு ஒருவகையான ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.
கச்சத்தீவில் இலங்கை அரசாங்கம் ராணுவத் தளம் அமைக்கப்போவதாக தற்பொழுது வந்திருப்பதைப்போன்ற செய்திகள் கடந்த 40 ஆண்டுகளில் பல தடவைகள் வந்துள்ளன.
1968 பிப்ரவரி 29-ஆம் தேதியில் தில்லி பத்திரிகைகளில், ""இலங்கை ஆதிக்கத்தில் கச்சத்தீவு முழுமையாக அடங்கியிருப்பதால், தனது முழு நிர்வாகத்தையும் அங்கு செயல்படுத்த இலங்கை அரசாங்கம் முற்பட்டிருக்கிறது'' என்ற செய்தி வந்தது. அதனையொட்டி, ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை நான் நாடாளுமன்ற மக்களவை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன்.
என்னைப்போலவே மற்றும் பலரும் அத்தகைய தீர்மானங்களைக் கொடுத்திருந்ததால் குலுக்குச் சீட்டு முறையில் உறுப்பினர் மது லிமாயிக்கு முதலிடம் கிடைத்து, 1968 மார்ச் 1 மக்களவையில் தமது தீர்மானத்தை மது லிமாயி முன்மொழிந்தார். அவருக்குப் பிறகு, என் போன்றவர்களுக்கு அவையில் பேச வாய்ப்புத் தரப்படும் நிலைமை இருந்தது.
எழுப்பிய பிரச்னைக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பி.ஆர். பகத் பதில் அளித்தார்: ""பத்திரிகை செய்தி குறித்து, இலங்கை அரசுடன் கலந்து விவரம் தெரிவிக்குமாறு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தைக் கேட்டுள்ளோம். உண்மை விவரங்கள் கிடைத்ததும் தெரிவிக்கிறோம்.''
அன்றைய விவாதத்தில் இந்திய ஆதிக்கத்திலுள்ள தீவுகள் பற்றி மற்ற நாடுகளிலும் அதிரடிச் செய்திகள் அடிக்கடி வருவதாக உறுப்பினர்கள் சிலர் கேள்விகளை எழுப்பினார்கள். கச்சத்தீவு பிரச்னையை மட்டும் விவாதிக்குமாறு அவைத்தலைவர் கூறினார்.
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் பேராசிரியர் சி.ஜி. ஸ்வெல் கேட்டார்: ""1956-ல் இருந்தே கச்சத்தீவு பற்றி இந்தியாவுக்குள்ள உரிமைக்குப் போட்டியாக இலங்கை அரசாங்கம் பிரச்னை எழுப்புவதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. அப்படியென்றால், தனது உரிமையை நிலைநிறுத்திக் கொள்ள இந்தியா ஏன் இதுவரை தக்க முயற்சி எடுக்கவில்லை?''
அதற்கு இணை அமைச்சர் பகத் பதில் அளித்தார்: ""இதற்கு முன்னதாகவே, 1921-ல் இருந்தே கச்சத்தீவு பற்றிய பிரச்னை இருந்து வருகிறது. கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்று கவனித்துப் பார்த்தால், அந்தத் தீவில் யாரும் குடியிருக்கவில்லை. மனித சஞ்சாரமே கிடையாது. குடிக்கத் தண்ணீர்கூட அங்கு கிடைக்காது. ஆகையால் அது யாருக்குச் சொந்தம் என்று கூற முடியாது.''
பத்திரிகைச் செய்திகள் கிளப்பிய அதிர்ச்சியைவிட அதிகமான அதிர்ச்சியை அமைச்சரின் பதில் அவையில் உண்டாக்கியது. வழக்கமாக, எத்தகைய கடினமான கேள்வியைப் போட்டாலும், அதற்கு குழப்பமான, எதிர்பாராத திருப்பங்களை உடைய விவரங்களைத் தேடிப்பிடித்துத் தந்து, கேள்வி கேட்பவர் மறுகேள்வி கேட்க முடியாதபடி திக்குமுக்காடச் செய்யும் வகையில் பதில்களைத் தயாரிப்பதில் திறமை படைத்த அதிகாரிகள் இந்திய நிர்வாகத்தில் இருக்கிறார்கள். இப்படி ""கச்சத்தீவு எந்த நாட்டு ஆதிக்கத்திலும் இல்லை'' என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதும், எதிர்க்கட்சியினர் ஆவேசமாகக் கிளம்பினார்கள். என்ன செய்வது என்று புரியாமல் ஆளுக்கட்சியினர் திகைத்து உட்கார்ந்திருந்தார்கள்.
திகைப்பு, கூச்சல். ஒரே சமயத்தில் பல குரல்கள்! ஒன்றையொன்று மிஞ்சும் வகையில். விவாதத்தில் கலந்துகொள்ள இருந்த மற்றவர்களைப் பேச யாரும் விடவில்லை. இவ்வளவுக்கும் இடையில் பேராசிரியர் ஸ்வெல் தமது குரலை உயர்த்தி மீண்டும் கேட்டார்: ""நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லை! அந்தத் தீவில் தண்ணீர் இல்லையென்று ஏதோ ஒரு பதிலைத் தந்து நான் கேட்ட கேள்வியை அமைச்சர் திசை திருப்புகிறார். நான் கேட்டது எந்த அரசின் ஆதிக்கத்தில் கச்சத்தீவு இருக்கிறது என்பதுதான்!''
இந்தத் துணைக் கேள்விக்கு இணை அமைச்சர் ஆங்கிலத்தில் தந்த பதில் அப்படியே இங்கு தரப்படுகிறது:
Shri B.R. Bhagat: I said that it is neither under the possession of India nor of Ceylon... (Interruptions).
அமைச்சர் கூறியதன் தமிழாக்கம்: பி.ஆர். பகத்: ""நான் கூறியது, அந்தத் தீவு இந்தியாவின் ஆதிக்கத்திலும் இல்லை, இலங்கை ஆதிக்கத்திலும் இல்லை என்பதுதான்!'' (அவையில் அமளி).
அவையில் எழுந்த கூக்குரல் மேலும் அதிகமானது. யார் சொல்வதும் யாருக்கும் கேட்கவில்லை! அவைத் தலைவர் டாக்டர் ஜி.எஸ். தில்லான் அமைதிப்படுத்த முயன்றார். முடியவில்லை. கடைசியாக பிரதமர் இந்திரா காந்தியைப் பார்த்து, ""நீங்கள் ஏதாவது விளக்கம் தர முடியுமா?'' என்று கேட்டார். இதற்கிடையில் அரசாங்க அதிகாரிகள் சில குறிப்புகளை எழுதிப் பிரதமருக்கு அனுப்பியது எங்களுக்குத் தெரிந்தது.
பிரதமர் இந்திரா காந்தி எழுந்து, அமைச்சர் கூறியதுபோல் எழுப்பப்பட்ட பிரச்னை குறித்து முழு விவரங்கள் இல்லை என்றும், இலங்கை அரசுடன் நல்ல நட்புறவுடன் இந்தியா இருக்கிறது என்றும், விவரங்கள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், மேற்கொண்டு ஏதாவது கூறுவது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும் என்றும், விவரங்கள் கிடைத்ததும் மேற்கொண்டு அரசாங்கம் அவைக்கு விரிவான அறிக்கையைத் தரும் என்றும் சொன்னார்.
அரசாங்க அதிகாரத்துக்கு நீண்டகாலமாக உட்பட்டுள்ள பகுதிகள் பற்றிய விவரங்களைக்கூட உடனடியாகத் தர முடியாமல், விவரங்களை இனிமேல்தான் திரட்டுவதாக அரசாங்கம் கூறுவதை எதிர்க்கட்சியினர் கண்டித்தார்கள். விவரங்கள் கிடைத்ததும் மீண்டும் அவை அவற்றை ஆராயலாம் என்று அவைத் தலைவர் ஒருவாறு விவாதத்தை முடிவு செய்தார்.
நிலைமையைச் சமாளிக்க 1968 மார்ச் 4-ல், கச்சத்தீவு பற்றிய இந்தியாவின் உரிமையில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் எதிர் நடவடிக்கைகளை எதையும் எடுக்கவில்லை என்றும் பிரதமர் இந்திரா காந்தி ஓர் அறிக்கையை அவை முன்வைத்தார்.
இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் ஒரு செய்தியில் அரசாங்கம் கோமாளித்தனமான பதிலை முன்வைத்தது பலமான கண்டனத்தையும், அரசின் வெளிநாட்டுக் கொள்கையின் பலவீனத்தையும் வெளிப்படுத்தியது. மக்கள் அவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால் எதைப்பற்றியும் ஆளுங்கட்சியினர் கவலைப்படுவது இல்லை என்றாலும், அரசாங்கத்தைப் பற்றி நாட்டு மக்களுக்கு இருந்த நம்பிக்கையும், உலக அரங்கில் இருந்த மதிப்பும் குறைந்துவிட்டன.
மீண்டும் கச்சத்தீவு பற்றி நாடாளுமன்றத்தில் அவ்வப்பொழுது கேள்விகள் கேட்கப்பட்டாலும், ""இலங்கை அரசுடன் நட்புமுறையில் நிலைமைகளைப் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். நல்ல முறையில் இருநாடுகளிடையே அமைதியையும் நட்பையும் வலுப்படுத்தும் வகையில் விரைவில் முடிவுகளை எடுப்பது பற்றி அரசாங்கம் கவனித்து வருகிறது'' என்று மத்திய அரசு சார்பில் திரும்பத் திரும்ப பதில்களும், சமாதானங்களும் தரப்பட்டன. அரசாங்க அறிவிப்பில், "விரைவில்' என்பதற்கும், "கவனத்தில் இருக்கிறது' என்பதற்கும், வரையறுக்கப்பட்ட கால அளவு கிடையாது. இந்தியா ஏதோ ஒரு சிக்கலில் அகப்பட்டுள்ளது என்பது மட்டும் வெளிப்பட்டது.
1967 மே மாதத்தில் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற டாக்டர் ஜாகீர் ஹுசைன் 1969 மே மாதத்தில் இறந்ததும், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில், காங்கிரஸ் தலைமைக்கும் பிரதமர் இந்திரா காந்திக்கும் ஏற்பட்ட போட்டியில், காங்கிரஸ் வேட்பாளர் என். சஞ்சீவ ரெட்டி தோற்கடிக்கப்பட்டு, இந்திரா காந்தி ஆதரித்த வி.வி.கிரி வெற்றி பெற்றார். அதன்பிறகு, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரு பிரிவுகளாகப் பிளவுபட்டது. தமிழ்நாட்டில் பழைய காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலோர் பெருந்தலைவர் காமராஜ் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து இருந்தனர்.
1970 பொதுத் தேர்தலில், "கரிபி ஹட்டாவ்' (ஏழ்மையை ஒழிப்போம்) என்ற முழக்கத்துடன் இந்திரா காந்தி பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். அதனை அடுத்து கிழக்கு வங்காளப் பகுதியில் ஏற்பட்ட மோதலில், பாகிஸ்தான் தோல்வி அடைந்து, இந்திய உதவியுடன் முஜிபுர் ரகுமான் தலைமையில் பங்களாதேஷ் தனிநாடாக அமைந்ததும், இந்திரா காந்தியின் செல்வாக்கும், எதையும் செய்யலாம் என அவர் அரசாங்கம் எடுத்த முயற்சிகளும் வலிவடைந்தன.
பங்களாதேஷ், பர்மா, இந்தோனேஷியா போன்ற நாடுகளுடன், எல்லைக் கோடுகளையும், கடல் ஆதிக்கத்துக்கான வரையறைகளையும் நிர்ணயிக்கும் உடன்பாடுகளை இந்திய அரசாங்கம் செய்தது. அதில் ஒன்றாக இந்தியா - இலங்கை இடையிலுள்ள பாக் ஜலசந்தியில் புதிய எல்லைக் கோடுகளை மாற்றி அமைக்க இந்தியா முற்பட்டது.
அதன் விளைவாக எழுதப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கையில் 1974 ஜூன் 26 - 28 தேதிகளில், இந்தியாவின் சார்பாக இந்திரா காந்தியும், இலங்கை சார்பாக சிரிமாவோ பண்டாரநாயகாவும் கையெழுத்திட்டனர். அப்பொழுது 1974 பிப்ரவரி - மே மாதங்களில் வரவு - செலவுத் தொடர் கூட்டத்தை முடித்து நாடாளுமன்றம் விடுமுறையில் இருந்தது. அடுத்த தொடர்கூட்டம் ஜூலை 22-ல் தொடங்கியது. இந்திய - இலங்கை உடன்படிக்கை ஜூலை 23 நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என்று எங்களுக்குத் தெரியவந்தது.
உடன்பாடு பற்றிச் சில குறிப்புகள் பத்திரிகைகளில் வெளிவந்தாலும் நாடாளுமன்றத்தில் உடன்படிக்கை அதிகாரபூர்வமாக வைக்கப்பட்ட பிறகுதான் முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. இதற்கிடையில் இந்திய - இலங்கை உடன்படிக்கையில், குறிப்பாக, கச்சத்தீவு பற்றிய எந்த விவரங்களையும் தமிழக முதல்வர் கருணாநிதியிடமோ, மாநில அரசாங்கத்துடனோ, மத்திய அரசு எந்த வகையிலும் கலந்து ஆலோசனை செய்யவில்லை என்பது நாடாளுமன்றத்திலுள்ள திமுகழக உறுப்பினர்களாகிய எங்களுக்குத் தெரியவந்தது.
1974 ஜூலை 23 அன்று இந்திய - இலங்கை உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுவரன் சிங் முன்வந்தபொழுது, நாடாளுமன்ற தி.மு. கழகத் தலைவரான நான் அதனை எதிர்த்துப் பேசியதாவது: ""இந்த உடன்படிக்கையைத் தயாரிப்பதற்கு முன்னதாக இந்த நாடாளுமன்றத்தையும், சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். இந்தியாவில் ஒரு பகுதியை மற்றொரு நாட்டிடம் ஒப்படைப்பது என்பது மிகக் கீழ்த்தரமான செயலாகும். அண்டை நாடான இலங்கைத் தீவுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தையும், இறையாண்மை உரிமைகளையும் உதறித் தள்ளுவது சரியல்ல. இது, எந்த அரசாங்கத்தாலும் நினைத்துப் பார்க்க முடியாத கேவலமான, படுமோசமான பாதகச் செயலாகும். இந்தக் கீழ்த்தரமான உடன்படிக்கையைச் சிறுதுளியும் ஏற்றுக்கொள்ளாத நாங்கள் அவையின் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமல் வெளியேறுகிறோம்.''
அண்ணா தி.மு.க.வில் சேர்ந்திருந்த கி. மனோகரன் பார்வர்டு கட்சியின் பி.கே. மூக்கையா தேவர், இந்திய முஸ்லிம் லீகின் முகமது ஷெரீப், சுதந்திரா கட்சியின் பி.கே. தேவ், சோஷியலிஸ்ட் கட்சி மது லிமாயி, பாரதீய ஜன் சங் தலைவர் வாஜ்பாய் ஆகியோர் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வெளியேறினார்கள்.
உடன்படிக்கை வைக்கப்பட்டதற்கு மறுநாள், ஜூலை 24, 1974 அன்று அரசாங்கத்தின்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் கச்சத்தீவை இலங்கையிடம் சரணடையச் செய்த இந்தியாவின் போக்கை தி.மு. கழகம் உள்பட்ட எதிர்க்கட்சிகள் கண்டித்தன.
1975 ஜூன் 25-ம் தேதி நெருக்கடிகால பிரகடனத்தின்கீழ் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் கச்சத்தீவு உள்பட்ட பல சீர்கேடுகளையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. 1974 உடன்படிக்கை போதாதென்று 1976 மார்ச் 23-ம் தேதி மற்றொரு உடன்படிக்கையின் மூலம் மன்னார் வளைகுடாவில் உள்ள வட்கே பாங்க் பகுதியில் மூன்றாண்டு காலத்துக்கு மீன் பிடிக்கும் உரிமையை இலங்கை மீனவருக்கு வழங்கியதுடன், மூன்றாண்டு காலத்துக்குப் பிறகு ஆண்டுக்கு 2000 டன் அளவுக்கு உயர்தர மீன்களை இலங்கைக்கு உடன்பாடான விலையில் விற்க இந்தியா ஒப்புதல் அளித்தது. இரண்டாவது உடன்படிக்கையைப் போட்டபொழுது தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஆட்சியின்கீழ் மத்திய அரசு நேரடியாக மாநில நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தியது. ஆக, தன்போக்கில் மத்திய அரசு இலங்கை அரசுக்கு இந்திய - தமிழ்நாட்டு உரிமைகளை அடிமைப்படுத்துவது தொடர்ந்தது.
பல நூற்றாண்டுகளாக, தமிழகத்துக்கு உள்பட்ட ஒரு பகுதியாக, 1947-ல் ஆங்கிலேயர்கள் வெளியேறிய காலத்தில்கூட, ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு உள்பட்டு கச்சத்தீவு இருந்தது.
மேலும், 1974 ஜூலை 24-ல் நாடாளுமன்றத்தில் பேசிய வந்தவாசி உறுப்பினர் ஜி. விஸ்வநாதன், 1824-ன் ராமநாதபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவு பற்றிய ஆவணங்களின் நகல்களை அவை முன் வைத்தார். 1880-ல் இலங்கை அரசாங்கம் தயாரித்த நில வரைபடத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள சிறு சிறு தீவுகள் பலவற்றின் விவரங்கள் தரப்பட்டபொழுது, இலங்கையின் வட மாநிலங்களுக்கு உள்பட்டதாக கச்சத்தீவு காட்டப்படவில்லை. இதுபற்றி அப்பொழுது இலங்கை அமைச்சரவை செயலாளராக இருந்த பி.பி. பியரிஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி பின்வரும் குறிப்பை எழுதி வைத்துள்ளார்: ""இலங்கை வட மாநிலங்களின் எல்லைகளை வரையறுக்கும் கோப்புகளை நான் பார்வையிட்டபொழுது, இலங்கை ஆதிக்கத்துக்கு அப்பாற்பட்டு கச்சத்தீவு இருந்ததுடன், அது ராமநாதபுரம் ராஜாவுக்குச் சொந்தமானது என்பது தெளிவாகத் தெரிகிறது.''
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க. அரசின் கோரிக்கை 2001, மார்ச் 25-ல் ஆளுநர் உரையில் குறிப்பிடத்தக்கது. இதனையொட்டி எழுந்த பிரச்னைக்கு எதிர்ப்பாக மே 2-ல் இலங்கை அமைச்சர் ஒருவர் கூறிய ஆங்கில அறிவிப்பு கீழே தரப்படுகிறது:
‘‘It is impossible to give it (Katchatheevu) back to them as it has been recognised by the international community as an integral part of our country since it was handed over by late Indira Gandhi.’’
இந்த அறிவிப்பை வெளியிட்டவர் யார் தெரியுமா? இலங்கையின் அப்போதைய மீன்வள மற்றும் கடல்துறை அமைச்சராக இருந்த மகிந்த ராஜபட்ச என்பவர். அவர்தான் இலங்கையின் தற்போதைய குடியரசுத் தலைவராக இருக்கிறார். எந்த ஆதாரத்துடனும் கச்சத்தீவை இலங்கை பெறவில்லை என்பதுடன், இந்திரா காந்தி பார்த்து இலங்கைக்குக் கொடுத்ததுதான் கச்சத்தீவு என்பதை இலங்கையின் குடியரசுத் தலைவரே நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார்!
தொடக்கத்திலிருந்து இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்கும்பொழுது, சட்டத்தை மீறி, நாட்டின் இறையாண்மையை மீறி, நாட்டு மக்களின் விருப்பத்துக்கு எதிராக, தமிழ்நாட்டு மக்களின் - மீனவர்களின் வேண்டுகோள்களை மீறி எவ்வித அடிப்படையும் இல்லாமல் கச்சத்தீவை இந்திய அரசாங்கம் இலங்கையிடம் ஒப்படைத்தது முற்றிலும் தவறான ஒன்று என்பது தெரிகிறது.
1947-ல் விடுதலைக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் தனிநாடுகளாகப் பிரிந்தபொழுது, எல்லையோரத்தில் இருந்த சில பகுதிகளைப் பரிமாற்றம் செய்யத் தலைப்பட்டதில், மேற்கு வங்காளத்தில் இருந்த பெருபாரி பகுதியின் ஒரு பாதியை இந்தியா 1958 உடன்படிக்கை மூலம் பாகிஸ்தானுக்குத் தந்தது. இதனை மேற்கு வங்காள மக்களும், மாநில அரசாங்கமும் எதிர்த்தன. கடைசியில் சட்ட நிலைமையைக் கவனித்திட, உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் ஒரு பார்வைக் குறிப்பை அனுப்பினார். அதன்மீது நடைபெற்ற வழக்கில், நாட்டின் ஒரு பகுதியை நீக்கி வெளிநாட்டுக்குத் தருவதை அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் மட்டுமே செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெருபாரி வழக்கின் முடிவுபோல, கச்சத்தீவை இலங்கைக்குத் தருவதில் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாகத்தான் இந்தியா செயல்பட்டிருக்க வேண்டுமே தவிர, இந்தியப் பிரதமர் மட்டுமே கையெழுத்திட்ட உடன்படிக்கைக்கு எத்தகைய மதிப்பும் சட்டபூர்வமாகக் கிடையாது. அவ்வாறு முறைப்படி செய்யாதவரை, கச்சத்தீவு, இன்றளவும், என்றளவும், தொடர்ந்து இந்திய ஆதிக்கத்தில் அதன் இறையாண்மைக்குட்பட்டுதான் இருந்து வருகிறது.
http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=80867&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D!
♥ "இரு வெளிநாட்டவர்கள் என்னைக் கொள்ளப் பார்த்தார்கள்" -ராஜபக்சே அலறல் ♥
மகிந்தவைக் கொல்லும் சதித்திட்டதில் இரு வெளிநாட்டவர்களும் உள்ளடக்கமாம் |
இலங்கை அதிபரைக் கொல்லுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தற்கொலைக் குண்டு வெடிப்புத் திட்டத்தில் இரு வெளிநாட்டவர்களும் ஈடுபட்டதாக அரசு அறிக்கை கூறுகிறது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேயைக் கொல்வதற்காக தற்கொலைக் குண்டுதாரியை ஏற்பாடு செய்ததில் சர்வதேச நிறுவனத்தின் வாகன ஓட்டிகள் மூவருடன் 2 வெளிநாட்டவருக்கும் தொடர்பு உள்ளதாக இலங்கை வாராந்தப் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது. மேலும் இரு அரசியல்வாதிகளும் இந்தத் திட்டத்தில் தொடர்பு பட்டுள்ளனர் என்றும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கைக் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மேல் மாகாண புலனாய்வுப் பிரிவானது ஜனாதிபதியின் பாதுகாப்பு பற்றி எச்சரிக்கை கொடுத்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுள்ளது. இச்சதித் திட்டத்தில் தொடர்புள்ளவர்கள் என்று சந்தேகிக்கும் அமெரிக்கர் ஒருவர், சுவீடன் நாட்டவர் ஒருவரும் 3 உயர் பதவி புலி உறுப்பினர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த வாராந்த பத்திரிகை மேலும் கூறியுள்ளது. இதற்கான வெடிமருந்துகள் யு.என்.ஓ.பி.எஸ், யு.என்.கெச்.சி.ஆர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிதியம் ஆகியவற்றில் பணியாற்றிய வாகன ஓட்டிகளால் எரிபொருள் தாங்கிகளினுள் மறைத்து வைக்கப்பட்டு கிளிநொச்சியில் இருந்து கொழும்புக்குக் கடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. http://athirvu.com/target_news.php?subaction=showfull&id=1246258260&archive=&start_from=&ucat=2& |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
"புழுதி வாரும் வழுதிக்கு...."--நக்கீரன் கட்டுரை
"புழுதி வாரும் வழுதிக்கு ஒரு கடிதம்"--நக்கீரன்
திரு. வழுதி,நாலு சுவர்களுக்க உள்ளே பேசப்பட வேண்டிய விமர்சனங்களை இப்படி புதினத்தில் எழுதி எதைச் சாதிக்க நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. உமது புலம்பலுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் புதினத்தின் நோக்கம் என்னவென்பதும் எனக்கு விளங்கவில்லை.
இதே புதினம்தான் லெனின்கிராட் போர் பற்றியும், சிங்கள இராணுவம் அகலக் கால் வைக்கிறது, வன்னி சிங்கள இராணுவத்தின் புதைகுழியாக மாறப் போகிறது என மனம் போன போக்கில் எழுதிய பரபரப்புக்
கட்டுரைகள், அரசியல் களங்கள் முதலியவற்றையும் வெளியிட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது.
உம்மை ஒரு அதிமேதாவி என்று நினைத்துக் கொண்டு அந்த மிதப்பில் இப்படியான கட்டுரைகளை எழுதுகிறீர்கள் என நான் எண்ணுகிறேன். நிகழ்வுகள் நடந்த பின்னர் அதன் பிழை சரி பற்றி எந்தப் பேயனும் விமர்சனம் செய்யலாம். அதைத்தான் நீர் செய்கிறீர். மறைந்த தேசத்தின் குரல் பாலசிங்கம் பற்றி எனக்கும் அவ்வப்போது சில கருத்து வேற்றுமைகள் எழுந்ததுண்டு.
அதற்காக அவரை விழுந்தடித்துக் கொண்டு விமர்சனம் செய்ய நான் நினைக்கவில்லை. அவர் தமிழீழ விடுதலைக்கு ஆற்றிய தொண்டு, அதற்காக அவர் கொடுத்த விலைதான் எனக்கு மேலாகப்பட்டது. இப்போது அவர் மறைந்துவிட்டார். மறைந்தவர் திரும்பி வரமாட்டார் என்ற துணிச்சலில் யாரும் அவர் சொன்னதாக எழுத முடியும். அதில் நீரும் ஒருவர்.
(1) "உண்மை சொல்லும் நம்பக ஊடகங்களாக ஒரு காலத்தில் போற்றிய தளங்களையெல்லாம், வதந்தி பரப்பும் துரோகத் தளங்களாகப் பார்க்க வேண்டிய கதிக்குள் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்" என எழுதியுள்ளீர்கள்.
நீர் எந்த உலகத்தில் இருக்கிறீர் எனத் தெரியவில்லை. மக்கள் "நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்" என எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? யாரால் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனச் சொல்லமுடியுமா? மக்கள் மடையர்கள் என்று எதை வைத்துச் சொல்கிறீர்? உண்மை என்னவென்றால் மக்கள் அந்தச் செய்தியை நம்ப மறுத்தார்கள். அதனை அவசர அவசரமாக வெளியிட்டுத் தலைவருக்கு "வீரமரணக்கம்" செலுத்த பத்மநாதன் எத்தனித்த போது மக்ககள்தான் அதனை நிராகரித்தார்கள்.
மக்களின் உணர்வுகளை வீரமரணச் செய்தியைக் காவிச் சென்றவர்கள், வானொலி, தொலைக்காட்சி மக்களால் துரத்தப்பட்டார்கள். கனடாவில் இதுதான் நடந்தது. பத்மநாதனை உங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். ஆனால் அவருக்கு மக்களது உணர்வுகள் தெரிந்திருக்கவில்லை. அதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்க மாட்டேன். இப்போது கூட யார் யார் இறந்துபட்டார்கள் என்பதை அவர் பட்டியல் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
சிறிலங்கா அரசு செய்யாத அல்லது செய்யநினைக்காத திருப்பணியை பத்மநாதன் செய்கிறார் என்பதுதான் எனது கவலை. கோபம். மற்றப்படி அவர் தலைவரின் வலது கையாக இருந்தார் என்பதில் எந்த கருத்து முரண்பாடும் இல்லை. இந்திய இராணுவத்துக்கு எதிராக போராட முடியாது என்று கூறி பலர் இயக்கத்தில் இருந்து விலக முன்வந்த போது "போகிறவர்கள் போகலாம் . எனக்கு கே.பி. இருந்தால் போதும்" என்று தலைவர் சொன்னார்.
"ஆக, இப்போதிருக்கும் சூழலில் அந்த மனிதர் மீது சேறு பூசுவதை நிறுத்திவிட்டு - கட்டுக்கோப்புடனும், ஒருங்கிணைவுடனும், கூட்டுச்சிந்தனையுடனும் உருப்படியாக ஏதாவது செய்ய முற்படுவதே தமிழர் எல்லோருக்கும் நல்லது" என எழுதியுள்ளீர். மெத்த நல்லது.
ஆனால் இந்த சேறு பூசும் திருப்பணியை நீர்தான் முதலில் தொடக்கி வைத்தீர் என்பது நினைவிருக்கட்டும்.
"மக்கள் தமது ஊர்களில் வசிக்க வேண்டும்; வசித்தாலும், போராட்டத்திற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்; தயாராக இருந்தாலும், ஒரு கெரில்லாப் போராளிக்கு உதவ அவர்கள் முன்வர வேண்டும். தமிழீழத்தின் தற்போதைய களப் புறநிலையில் இவை எதுவுமே இல்லை" என அடித்துச் சொல்கிறீர்.
எந்த அடிப்படையில்? நீர்தான் களத்தில் இல்லையே? அந்த நிலைமை இப்போது இல்லாமல் இருக்கலாம் அது எப்போதும் அப்படி இருக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது.
(2) "மன்னிப்புக் கேட்டல்" என்ற நிலைக்குப் போகாமலும், அதற்கு ஒரு நூலிழை அளவு கீழே வரை சென்றும் - மிகவும் சாதுரியத்துடன் அவர் அன்று அந்தக் கேள்வியைக் கையாண்டார்" என்பது சரியாக இருக்கலாம். ஆனால் பாலசிங்கம் அதனை தன்னிச்சையாகவே செய்தார். அதுதான் அவர்விட்ட பிழை. அதுதான் தமிழ்ச்செல்வனை அப்படிச் சொல்லவைத்தது.
(3) "கர்வத்துடனும், கெளரவத்தடனும் வாழ்ந்த எமது மக்கள் கம்பி வேலிகளுக்குப் பின்னால் கண்ணீரோடு நிற்கின்றார்கள்; அவர்களைப் பக்குவமாக மீட்டெடுத்து அவர்களது பழைய கம்பீர வாழ்வை அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும். இத்தனை ஆண்டு காலம் எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய போராளிகள் பலர் சிங்களத்தின் சிறை முகாம்களில் அடைபட்டுள்ளார்கள்; அவர்களையும் மெதுவாக மீட்டெடுத்து அவர்களது சகவாழ்வுக்கு நாம் வழிசெய்ய வேண்டும்.
இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் பணிகள் நிமித்தம் அனுப்பப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருந்த எமது போராளிகள் பலர் உயிர் ஆபத்தான சூழல்களில் சிக்குண்டுள்ளார்கள்; அவர்களையும் நுட்பமாக மீட்டெடுத்து நாம் காக்க வேண்டும்." என எழுதுகிறீர்கள். என்னைக் கேட்டால் மக்கள் இன்னும் 6 மாதங்களில் மீள்குடியமர்த்தப்படுவார்கள். அதற்கான அழுத்தத்தை எம்மால் அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்த முடியும். ஏற்பட்டு வருகிறது.
அது சரி "போராளிகள் பலர் உயிர் ஆபத்தான சூழல்களில் சிக்குண்டுள்ளார்கள்; அவர்களையும் நுட்பமாக மீட்டெடுத்து நாம் காக்க வேண்டும்" என்பது சரிதான். அந்த "நுட்பம்" என்ன என்பதை சொல்லவில்லையே? போரில் தோற்றவர்களை போர்க் கைதிகளாக கருதி அவர்கள் பன்னாட்டு சட்டங்கள் மரபுகளுக்கு இசைவாக நடத்தப் படவேண்டும். ஆனால் சிங்களக் காட்டுமிராண்டிகளிடம் அதனை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். வெள்ளைக் கொடியோடு போனவர்களுக்கு என்ன நடந்தது?
(4) "ஆயுதப் போராட்டத்தைப் பின்புலமாக வைத்து அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் காலம் - உண்மையில் செப்ரெம்பர் 11, 2001 அன்றுடன் இந்த உலகத்தை விட்டும், கடந்த மே 18, 2009 அன்றுடன் தமிழர்களை விட்டும் போய்விட்டது" என்பது முழுதும் சரியில்லை. செப்தெம்பர் 11, 2001 க்குப் பின்னர்தான் சொசோவோ சுதந்திரநாடாக முகிழ்ந்துள்ளது. அதனை உருவாக்கியவர்கள் இதே மேற்குல நாட்டுத் தலைவர்கள்தான்.
கொசோவோ விடுதலை இராணுவத்துக்கும் வி.புலிகளின் ஆயுதப் போராட்டத்துக்கும் கொசோவோ நாட்டுக்கும் தமிழீழத்துக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. 1984 இல் இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதிகளால் சுடப்படாது இருந்திருந்தால் எமது போராட்டம் வெற்றி பெற்றிருக்கும். வட - கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஒரு தன்னாட்சியை உருவாக்குவதில் இந்திரா காந்தி உறுதியாக இருந்தார். இராசீவ் காந்தியின் முட்டாள்த்தனத்தால்தான் எல்லாம் கெட்டது.
இந்தியாவைப் பகைக்கக் கூடாது என்ற கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். ஆனால் அதனை சேரடியாகச் செய்ய முடியாது. தமிழகத்தின் ஊடாகத்தான் செய்ய முடியும். சென்ற தேர்தலில் அந்த முயற்சி தோற்றாலும் அது முழுத் தோல்வி அல்ல. சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் தமிழ் உணர்வாணர்களின் கடுமையான உழைப்பால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழீழ போராட்டத்தின் நான்காவது கட்டம் பற்றி அதன் நன்மை தின்மை சாதக பாதகம் வெற்றி தோல்வி பற்றிய விமர்சனத்தை வரலாற்று ஆசிரியர்களிடம் விட்டுவிடுவோம். நாம் தொடர்ந்து இந்தப் போராட்டத்தை எந்த வடிவத்தில் எந்தப் பாதையில் நகர்த்துவது என்பதுபற்றி மட்டும் எல்லோரும் சிந்தித்துச் செயல்படுவோம்.
ஊத்தைத் துணிகளை தெருவில் வைத்துத் துவைப்பதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் யாழ்ப்பாண மாநகரசபை வவுனியா நகரசபைக்குத் தேர்தல் வருகிறது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைப்பதற்கு நாம் பாடுபட வேண்டும்.
இது நாம் எல்லோரும் செய்யக் கூடிய உடனடிப் பணி. தமிழீழ மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுதலை செய்து விட்டோம் என ஆளுவோர் கொக்கரிக்கிறார்கள். ஆளும் கட்சி வெற்றி பெற்றால் அது உண்மையாகி விடும்.
- நக்கீரன்
http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=193:q----q-&catid=35:2009-06-20-00-24-54&Itemid=54
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ அமெரிக்கர்கள் இலங்கை செல்ல வேண்டாம்: ஒபாமா ♥
அமெரிக்கர்கள் இலங்கை செல்ல வேண்டாம்: ஒபாமா
அமெரிக்க அரசு இலங்கை செல்லும் அமெரிக்கருக்கான ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விடுதலைப்புலிகளை வெற்றி கொண்டிருப்பதாக இலங்கை அரசு அறிவித்து இருந்தாலும் அங்கு விடுதலைப்புலிகளின் குழுக்கள் தொடர்ந்து இருக்கிறது. அவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன.
எனவே அமெரிக்கர்கள் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே அங்கு இருக்கும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்ல கூடாது. இங்கு கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாமல் இருக்கின்றன. ஆயுத குழுக்களும் திடீர் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் பெருமளவு கூடுமிடம், அரசியல் பேரணிகள், படை முகாம்கள், அரசு அதிகாரிகள், ராணு வத்தினர் வாகன அணி வகுப்பு, உயர் பாதுகாப்பு பகுதி போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
பொதுபோக்கு வரத்து வாகனங்களில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். இலங்கையில் குடியிருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=11147
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ இளமையை தொலைத்து… இன விடுதலை நோக்கி... பெண் புலிகள் ! ♥
இளமையை தொலைத்து… இன விடுதலை தேடி… பெருமிதம் கொள்ளச் செய்யும் பெண் புலிகள்.
'அபிதா'…
- இது இலங்கை அரசுக்குச் சொந்தமான கப்பல். காங்கேசன் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த இந்தக் கப்பலைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது புலிகளின் திட்டம். ஏற்கெனவே ஒருமுறை புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிய கப்பல்தான் இது.
"நான் கப்பலை அடிக்கறப்ப… நல்லூர் முருகனுக்கு திருவிழா நடக்கும் காலமாய் இருக்கவேணும். ஏனெண்டால், அப்பத்தான் கடலை வித்து காசு வைச்சிருப்பா அம்மா. நீங்க என் சாவு செய்தியை அவகிட்ட சொல்லும்போது அவாளால ஒழுங்கா சோறு சமைச்சு சாப்பாடு போட முடியும்…"
- 'கேப்டன் அங்கயற்கண்ணி' என்றழைக்கப்படும் புஷ்பகலா துரைசிங்கம், தன் தோழிகளிடம் இப்படி சொல்லிக்கொண்டே இருப்பாள். சொன்னது போலவே 94-ம் வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் உடல் முழுக்க வெடிகுண்டுகளோடு நெடுந்தூரம் கடலில் நீந்திச்சென்று, அந்தக் கப்பலை மோதித் தகர்த்தாள். அவள்தான், தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முதல் பெண் கடற்கரும்புலி!
1985 ஆவணி 18… விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி அதிகாரப்பூர்வமாக கொடியேற்றித் தொடங்கப்பட்ட நாள். அதற்கு முன்பு புலிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்வது, இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்க நாடகங்கள் போடுவது என்ற அளவில் மட்டும் உதவிக் கொண்டிருந்தனர் பெண்கள்.
அன்றிலிருந்துதான் ஆயுதம் ஏந்தி நேரடியாக களத்துக்கு வந்தனர். வாழ்வைக் கொண்டாட வேண்டிய பதினெட்டு, இருபது வயது பருவத்தில், இளமையை தொலைத்து 'எம் இனத்துக்கு ஒரு தேசம் வேண்டும்' என்று தாயகக் கனவுகளை நெஞ்சில் சுமந்து, கையில் ஆயுதம் ஏந்திய பெண்கள் அவர்கள்.
இந்தப் பெண்களின் பெருமுயற்சியால் மட்டுமே விடுதலைப் புலிகள் வென்ற போர்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது 'ஜெயசிக்குறு' என்று அழைக்கப்படும் போர். நிலப்பகுதியை இரண்டாகப் பிரிக்கும் ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான சிங்களப் படையினரும், ஆயிரக்கணக்கான புலிகளும் ஈடுபட்டனர். அதில் ஏராளமானனோர் பெண் புலிகள்.
அது ஓரிரு நாளில் முடிந்த போரல்ல… ஒன்றரை வருடங்களைத் தாண்டியும் நீண்ட போர். மழைக் காலங்களில் பதுங்கு குழிகளுக்குள் தண்ணீர் நிறையும். கழுத்தளவு தண்ணீரில் நாள் கணக்கில் நின்று எதிரிக்கு குறி வைக்க வேண்டும்.
நூற்றுக்கணக்கான பதுங்குக்குழிகளை பெண்களே வெட்ட வேண்டும். இறுதியில் ஏ-9 நெடுஞ்சாலை புலிகளின் வசமானது. அந்த வெற்றியின் முழுப் பெருமையும் பெண் புலிகளையே சேரும்.
இவை, பெண் புலிகளின் தரைப்படை தாக்குதல்கள். இதுதவிர… பெண் கடற்புலிகள், பெண் வான்புலிகள் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சகல பலங்களிலும் பெண்கள் சம பங்குடன் இருந்தார்கள்.
இன்றைக்கு விடுதலைப் புலிகள் பெருமளவில் சிதறடிக்கப்பட்டிருக்கும் நிலையில், புலிப்பெண்களின் உடல்கள், வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதியிலும் நந்திக்கடல் பகுதியிலும் பிணங்களாக மிதந்து கொண்டிருக்கின்றன – கனவு ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு!
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ " தமிழர்கள்தான் நண்பர்கள் இந்தியா உணரும் காலம் ஒருநாள் வரும்"- நக்கீரன் கட்டுரை ♥
காங்கிரஸ்காரர்களே...! -ஜெகத் கஸ்பர்.
ஜூன் 21, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்க்டிக் பனிக்கண்டத்தில் தமிழ் ஈழ மக்களுக்கு நம்பிக்கை தரும் அரசியல் நிகழ்வொன்று நடந்தது. 300 ஆண்டுகளாய் டென்மார்க் நாட்டின் காலனியாதிக் கத்திலிருந்து விடுதலைபெறப் போராடி வரும் கிரீன்லாந்து தன்னாட்சி உரிமை கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டது. வெகுவிரைவில் முழு விடுதலை சாத்தியப்படும் என்பதும் தெரிகிறது. 22 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கிரீன்லாந்து நாட்டின் மொத்த மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 57,000 பேர். ஒரு லட்சம் குடிமக்கள் கூட இல்லாத கிரீன்லாந்து தனிநாடாக மாறமுடியுமென்றால் தமிழ் ஈழம் எப்படி மலராமல் போய்விடும்?! நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.
நாடிழந்து நாடோடிகளாய் ஆன யூதர்கள் 1948-ல் தமக்கென ஓர் தாயகம் அமைக்க ஈராயிரம் ஆண்டுகள் ஆயிற்று. தன்னுரிமை இழந்த அயர்லாந்து இனத்தவர் மீண்டும் தமக்கான குடியரசை 1920-ல் அமைக்க 700 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. தென் அமெரிக்கா வின் அனைத்து நாடுகளுமே தன்னிச்சையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்துகொண்டு உருவான நாடுகள்தான். பின்லாந்து, எஸ்தோனியா, இந்தோனேஷியா என தன்னிச்சையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்து உருவான நாடுகள் உலக வரைபடத்தில் பல உண்டு.
உலக வரைபடம் அடித்தல், திருத்தல், புதிய உரு வாக்கல்களுக்கு உள்ளாக்கப்பட முடியாத இறுக்கம் கொண்டதல்ல. கடந்த 50 ஆண்டுகளில் மட்டுமே நாற்பதுக்கும் மேலான புதிய நாடுகள் இப் பூமிப் பந்தில் உருவாகியுள்ளன. தேசிய இனங்களுக்கு அரசியல் சுயநிர்ணய உரிமை உண்டு என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைபெற்று நிற்கும் அரசியல் ஒழுங்கு, தேசிய இனமாக இருக்கத் தகுதியுடையோர் யார்? ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், நீண்ட காலம் பொதுமொழி, பொதுப் பண்பாடு, பொது வாழ்க்கை முறை, பொது வரலாறு ஆகியவற்றைக் கொண்டு வாழும் எந்த ஒரு இனமும் "அரசியல் சுய நிர்ணய உரிமை கொண்ட தேசிய இனம்' என்பதே கோட்பாடு. அந்த அடிப்படையில் தான் ஈழத்தமிழ் மக்களும் ஓர் தனித்துவமான தேசிய இனம், அவர்களுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டு என வாதிடுகிறோம்.
தேசிய இனங்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டால் இந்தியா பல் வேறு நாடுகளாக சிதறுண்டு போகாதா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். உண்மை என்ன வென்றால் ஓர் ஜனநாயகக் கூட்டாட்சியாக, எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும், இந்தியாவின் பயணம் நாம் பெருமை கொள்ளத் தக்கதாவே இருந்து வருகிறது. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அழகிரி, ஆ.ராசா இவர்களெல் லாம் வேஷ்டி கட்டிக் கெண்டு கேபினட் அமைச் சர்களாக பாராளுமன்றத்திற்குள் வரும்போது தமிழகமும் இந்திய ஆட்சி அமைப்பில் பங்கேற்கிறது என்ற உணர்வு உண்மையாகவே ஏற்படுகிறது. பணம் படைத்தவர்கள், சில ஜாதிகள், சில மொழி பேசுகிறவர்களின் மேலாதிக்கம் பல்துறைகளிலும் நிலவுகிற போதும் கூட சமூக நீதிக்கான அரசியற் சக்திகள் உறுதியாக இயங்குகின்ற சமூக அரசியற் களத்தினை இந்திய ஜனநாயகம் உறுதி செய்துள் ளது. மாநில சுயாட்சி என்ற கோரிக்கையினை முன்வைக்கிற உரிமையினையும், அதனை அடைவதற்கான வன்முறையற்ற ஜனநாயக வழியிலான நடைமுறைகளையும் இந்திய ஆட்சி அமைப்பு அனுமதித்துள்ளது.
ஆனால் ஸ்ரீலங்கா அவ்வாறானது அல்ல. அது ஒற்றையாட்சி அமைப்பு. தேசிய இனங் களின் கூட்டாட்சிக்கான ஏற்பாடு அரசியல் சட்ட அடிப்படையில் இல்லை. அந்நாட்டின் அரசு மதம் பௌத்தம். இந்து, கிறிஸ்தவ, இஸ் லாமிய மதங்களுக்கு இரண்டாம், மூன்றாம் இடங்கள்தான். அந்நாட்டின் அரசு மொழி சிங்களம். இன்று அந்நாட்டின் ராணுவத்தில் 100% பேர் சிங்களர்கள். தமிழ் மக்களை பல் லாயிரக்கணக்கில் கொன்றழித்து, தமிழீழ தாயக நிலப்பரப் பினை ஆக்கிரமித்து நிற்பது பெயருக்கு ஸ்ரீலங்கா ராணு வம் என்றாலும் உண் மையில் அது சிங்கள ராணுவம். ஸ்ரீலங்கா காவல்துறையில் 96% பேர் சிங்களர்கள். அப்படியானதொரு நாட்டை எப்படி எல்லா மக்களுக்குமான நாடு என்று நாம் கருதமுடியும்?
யாவிற்கும் மேலாய் கடந்த ஜனவரி முதல் மே-18 வரை ஸ்ரீலங்கா சுமார் 4 லட்சம் தமிழ் மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் விரட்டிக் கூட்டி முற்றுகையிட்டு நடத்திய கொலைவெறி தாக்குதலும், கடைசி மூன்று நாட்களில் மட்டுமே சுமார் 30,000 தமிழர்களை கொன்றழித்த கொடுமையும், இன்று மூன்று லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்களை மரண முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் அராஜகமும்- தமிழ் மக்களின் பிரிந்து போகும் உரிமையை அனைத்துலக சட்டங்கள், அரசியற் தார்மீகம், மானுட ஒழுக்கம் என சகல அடிப்படைகளில் நின்றும் உறுதி செய்கிறது.
வவுனியாவிலிருந்து வந்திருக்கிற செய்தி களின்படி அகதி முகாம்களில் இருக்கும் சுமார் 24,000 பேருக்கு அம்மை நோய் கண்டிருக்கிறதாம், 4,000 பேர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள் ளார்களாம். அடையாளம் தெரியாமல் வாரத்திற்கு சராசரி 60 பிணங்கள் முகாம்களுக்கு வெளியே அழுகிக் கிடக்க நாய்களால் இழுக்கப்படுகிறதாம். மாதத்திற்கு சராசரி நூறு இளம் தமிழ் பெண்கள் அனுராதபுர ராணுவத்தினரின் பாலியல் தேவைகளுக்காக கொண்டு செல்லப்படுகிறார் களாம். நாம் இப்போதும் நம்ப வேண்டுமாம்- விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் பிடியிலிருந்து தமிழ்மக்களை விடுவித்து சுபிட்சம் தருவதற்குத்தான் இந்த யுத்தத்தை ஸ்ரீலங்கா நடத்தியதென்று.
இன அழித்தல் யுத்தத்துக்கு ஸ்ரீலங்கா கொடுத்த முழக்கம்: அதாவது மனித குல வரலாற்றி லேயே மிகப்பெரும் எண்ணிக்கையில் கடத்தி வைக்கப்பட்டி ருந்த மக்களை மீட் கும் நடவடிக்கை. இந்தியாவின் சஉபய, பஒஙஊநசஞர, ஈசசலிஒஇச உள்ளிட்ட அத்தனை ஆங்கில ஊடகங்களும் இந்த மோசடி முழக்கத்தை இரவு பகலாய் இந்திய மக்களுக்கு கூவிக் கூவி விற்றன. இவர்கள் மீட்டு வந்த மக்கள் இன்று வதை முகாம் களில் என்ன பாடுபடுகிறார்களென்பதை சென்று எட்டிப் பார்த்து வரச் சொல்லுவோம். ஆனால் அவர்கள் இதனை தெரியாமலொன்றும் செய்யவில்லை என்பதே உண்மை. தெரிந்தே செய்தார்கள். மேற்குறிப்பிட்ட ஆங்கில ஊடகங்கள் இந்தியாவில் எழுந்து வரும் புதியதொரு மேலாதிக்க பாசிசத்தின் முகங்களாகவே பார்க்கப்பட வேண் டும். பர்காதத், ராஜ்தீப், அர்னாப் எல்லோரும் அழகாக ஆங் கிலம் பேசலாம்- ஆனால் அவர்கள் ஆபத்தான அரசியல் வியா பாரிகளும் கூட என்பதை தமிழ் மக்களின் தேசிய உரிமைச் சிக்கலை பயங்கரவாதமாய் விற்ற யுக்திகளில் கண்டோம்.
பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் சஉபய நடத்திய இண்ஞ் எண்ஞ்ட்ற் நிகழ்ச்சி பற்றி நான் முன்பு எழுதியிருந்தேன். அந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பங்கேற்றவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்தி நடராஜன். விவாதத்தின் ஊடே ஒரு கேள்விக்கு அவர் சொன்ன பதில் அவர் மீதான என் தனிப்பட்ட மதிப்பை உயர்த்தியது. நிகழ்ச்சியை நெறி செய்த விக்ரம், ""ஸ்ரீலங்காவில் நடப்பது தமிழ் இன அழித்தல் என்ற குற்றச்சாட்டினை ஒத்துக் கொள் கிறீர்களா?'' என்று கேட்டபோது, ""ஆம், அங்கு நடப் பது இன அழித்தல்தான்'' என்று ஒத்துக் கொண்டார்.
இரு வாரங்களுக்கு முன் கூடிய நடப்பு பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றிய போது கூட ஜெயந்தி நடராஜன் அவர்கள் அகதி முகாம்களில் வாடும் தமிழ்மக்கள் மீள் குடியமர்வு செய்யப்பட வேண்டிய அவசரத்தையும், நீதியான அரசியற்தீர்வுக்கான தேவையையும் வலியுறுத்தினார். இதனை இங்கு குறிப்பிடக் காரணம் ஈழத் தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன அழித்தலின் இரத்தப் பழியிலிருந்து காங்கிரஸ் கட்சி தப்பித்துவிட முடியாது. அதேவேளை ஒட்டுமொத்த அழிவி னின்று எஞ்சியிருக்கிற மக்களையேனும் காப்பாற்றி, அவர்களது சுயநிர்ணய உரிமையை உறுதி செய்து, விரும்பினால் அவர்களுக்கு தனிஈழம் அமைத்து தரும் வல்லமையோடு இன்று இருக்கிற ஒரே கட்சியும் காங்கிரஸ் கட்சிதான்.
நாம் யாவரும் நேசித்த ஒரு முன்னாள் பிரதம ரின் இழப்பிற்குப் பழிதீர்க்க வேண்டி இத்துணை கொடுமையான இன அழித்தலுக்குத் துணை நின்றது நியாயமா என்ற தீர்ப்பினை வரலாறு எழுதி விட்டுப் போகட்டும். அதே வேளை எனது அனுபவத்தில் தமி ழகத்தின் காங்கிரஸ் கட்சியினர் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அடிமட்ட தொண்டர்கள் தனி ஈழம் அமைவதையே விரும்புகின்றார்கள். யுத்த நிறுத்தம் கேட்டு தீக்குளித்த தமிழர்களில் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்தவரும் ஒருவர். கடந்த ஜனவரி மாதம் யுத்த நிறுத்தம் கொணர வேண்டுமென தமிழக காங்கிரஸ் பெரியவர் ஒருவர் எடுத்த நேர்மையான முயற்சிகளையும், அம்முயற்சி வெற்றிபெறாமல் தடுத்த உணர்வாளர்களையும் அறி வேன். வேண்டுதல் என்ன வெனில் இன்றிருக்கும் நிலையில் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சில கோரிக்கைகளை தமிழக காங்கிரஸ் வலுவாக தமது தலைமைக்கு வைக்க வேண்டும் என்பதுதான். இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 கோடி நிதி உதவியை செயற்படுத்த 20 பேர் கொண்ட குழுவினை ராஜபக்சே அமைத்துள்ளார். அதில் 19 பேர் சிங்களர்கள்- ஒருவர் இஸ்லாமியர். குறைந்தபட்சம் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைக் கூடவா சேர்த்துக் கொள்ளக் கூடாது? இப்படியான குறைந்தபட்ச கேள்விகளைக் கூட நாம் எழுப்பவில்லை யே என்றுதான் அங்கலாய்ப்பாக இருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் 7-ம் நாள் இலங்கை ராணு வத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய நண்பரான ஜெயசூரியா என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
""அதிகாரப் பகிர்வின் மூலம் இனப் பிரச்சனை உருவாக காரணமாக இருந்த அம்சங்களை இலங்கை அகற்ற வேண்டுமென எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். நான் கேட்கிறேன், எஸ்.எம்.கிருஷ்ணாவே... இறை யாண்மை கொண்ட ஒரு தேசமாகிய எங்களுக்கு அறிவுரை சொல்ல நீ யார்? உனது வேலையை மட்டும் நீ பார். அல்லது ஐ.நா. மனித உரிமை குழுவில் நவிபிள்ளை சூடு பட்டது போல் நீயும் சுருக்கிக் கொள்ள வேண்டிவரும். இந்தியாவே நன்றாகக் கேட்டுக்கொள். எவ்விதமான அதிகாரப் பரவலும் தமிழர்களுக்கு நாங்கள் தரப் போவ தில்லை. அதுமட்டுமல்ல இந்திய மேலாதிக்கத்தின் கடைசி எச்சமான இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத் தையும் தூக்கித் தூர வீசி எங்கள் தேசத்தை உங்கள் மேலாதிக்கத்திலிருந்து தூய்மை செய்வதுதான் எங்கள் இலக்கு. எங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைக்க வேண்டித்தான் விடுதலைப்புலிகளை நீங்கள் உருவாக்கி னீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அகற்றினோம். எங்கள் நாட்டை கைப்பற்றுவதை விட சந்திரனை உங்கள் நாட்டோடு இணைப்பது எளிதாக இருக்கும்''.
இக்கட்டுரை வெளிவந்தது இலங்கை ராணுவத் தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எழுதியது ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய நண்பர். இவை யெல்லாம் ஏன் அதிகாரத்தில் இருப்போரின் கண்களுக் குப் படவில்லை. இத்துணை கொடுமைகளுக்குப் பின்ன ரும் கூட என்றானாலும் தமிழர்கள்தான் இந்தியா வின் நண்பர்கள் என்பதை இந்தியா உணரும் காலம் ஒருநாள் வரும்.
(நினைவுகள் சுழலும்)
நக்கீரன்- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ உலகப்புகழ் பெற்ற கிருஸ் ரையன் சிங்களப் படைகளுக்குப் பயிற்சி அளித்த கொடுமை-வீடியோ இணைப்பு ♥
SAS உலகப்புகழ் பெற்ற கிருஸ் ரையன் இலங்கை படைகளுக்குப் பயிற்ச்சி அதிர்ச்சித் தகவல்--காணொளி இணைப்பு
(Chris Ryan)கிருஸ் ரையனை இராணுவ மற்றும் போலீஸ் மட்டத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். உலகப் புகழ்பெற்ற மற்றும் பரபரப்பாகப் பேசப்படும் இவரது இராணுவப்
பயிற்சிகள் மற்றும் நூல்கள் என்பன உலகப்பிரசித்தி வாய்ந்தவை. தற்போது இவர் தாமாகவே முன்வந்து, இலங்கை அதிரடிப்படையினருக்கு தாமே பயிற்சிகளை வழங்கியிருப்பதாகத் தெரிவித்து பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளார்.
காணொளிகளுடன் கூடிய இராணுவ பயிற்றுவிப்புகளை படமாக்கி, தான் எவ்வாறு இலங்கை இராணுவத்தையும், அதிரடிப்படையினரையும் போருக்கு தயார்செய்தார் என்பதை விளக்கும் காட்சிகளாக பிரசுரித்துள்ளார் கிருஸ்.விடுதலைப் புலிகளுடனான போரின் போது பல வெளிநாட்டு அரசாங்கங்கள் உதவிபுரிந்தது யாவரும் அறிந்த உண்மை இருப்பினும் தனிப்பட்ட ரீதியில் தனியார் நிறுவனம் போலச் செயல்படும் கிருஸ் ரையன்இ இலங்கை சென்று இராணுவத்தினருக்கு அளித்த பயிற்சிகள் குறித்து இதுவரை காலமும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
எமது இணையம் எமது வாசகர்களுக்காக இதனை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறது. இலங்கை சென்று பலமாதகாலமாக அதிரடிப்படையினரை கடும் பயிற்சிகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார் கிருஸ், இவர் பார்வையில் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். இருப்பினும் அவர்களின் வலிமை போரிடும் திறமை, ஒரு இலக்கை அடைய உயிர்த்தியாகம் செய்தல், கொரில்லாத்தாக்குதல் என்பன தம்மை பிரமிக்கவைத்ததாகக் கூறுகிறார் கிருஸ்.
புலிகளின் தாக்குதலில் பல அதிரடிப்படையினர் கொல்லபட்டதும், சிறப்பு அதிரடிப்படையினர் பலர் காயமடைந்ததும் அவரை மிகவும் வியப்பில் ஆள்த்தியுள்ளதாம். விடுதலைப் புலிகள் போன்ற கடும் தாக்க்குதல் நடத்தக்கூடிய ஆயுதக் குழுக்களுடன் எவ்வாறு போர்புரிவது என இவர் இலங்கை அதிரடிப்படைகளுக்கு மாதக்கணக்காக பயிற்சிகளை வழங்கியிருக்கிறார். வன்னியில் போர் நடைபெற்ற காலங்களில் சிறப்பு அதிரடிப்படையினர், மற்றும் டாஸ்க் போர்ஸ் 7 என்ற அதிரடிப் படையினருமே பல முன் நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.youtube.com/watch?v=s4RIlg0UFBQ
கூட்டம் கூட்டமாக ஆட்டுமந்தைகள் போல முன்னேறிவந்த இராணுவத்தினர் பலத்த இழப்புக்களை சந்தித்திருந்தவேளை, சிறு குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்துமாறு உக்திகளை வகுத்துக்கொடுத்தவரும் இவரே ஆவார்.மொத்தத்தில் உலகில் கிடைக்கக்கூடிய அனைத்து வழங்களையும் ஒன்றுதிரட்டி, இலங்கை அரசு போர் புரிந்துள்ளது, பாமர சிங்கள மக்கள் முதல் முகாம்களில் பணிபுரிந்த சிங்கள வேலைக்காரவரை, கிருஸ் ரையனைப் பற்றி வாய்திறக்கவில்லை.
ஒற்றுமை காக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இவ்விடையத்தை அறிந்திருந்தும் வாய்திறக்கவில்லை, அங்கும் சிங்கள ஒற்றுமை காக்கப்பட்டிருக்கிறது, போர் முடிவுக்கு வந்த பின்பும் கூட சிங்கள் ஒற்றுமை காக்கப்படுகிறது, ஆனால் தமிழர்கள் இடையே என்ன காணப்படுகிறது? சற்றே சிந்தியுங்கள், சிங்களவன் வெற்றிக்குப் பின்னால் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு இருக்கிறது, சிங்களவன் வெற்றிக்குப் பின்னால் எமது இனம் பிளவுபட்டு நின்றது காரணமாக இருக்கிறது, சிங்களவன் வெற்றிக்குப் பின்னால் தமிழர்களின் ஒற்றுமையின்மை, பொறாமை இருக்கிறது.
http://www.youtube.com/watch?v=s4RIlg0UFBQ
இதுதான் சிங்களவன் வெற்றிக்கு காரணம்.எம் தமிழினமே இனியாவது விழித்தெழுவோம், இன்னும் நேரம் கடந்துவிடவில்லை, ஒற்றுமையாக ஒன்றுபட்டு தமிழீழம் அமைப்போம். சிங்கள அரக்கர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம். கொல்லப்பட்ட மக்களுக்கும், சிறையில் வாடும் எம் உறவுகளுக்காகவும் குரல்கொடுப்போம், இனியாவது ஒன்றுபடுவோம்.. ஓரினமாக !
இவரின் பிரபல புத்தகங்கள்
நன்றி;அதிர்வு.காம்
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
நன்றி....!
Locate IP Address on Map
http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு: ஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும் தமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
சற்று முன்...!
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- "தினத்தந்தி " தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)
- "தினமணி" (1)
- "தினமணி" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)
- chat (2)
- firefox (2)
- shortcuts" (1)
- sms (2)
- video (2)
- அரசியல் (12)
- ஆனந்த விகடன் (1)
- இணைய நூல் (3)
- இணைய முகவரிகள் (2)
- இமெயில் (2)
- இமெயில் குழு (2)
- இலங்கை (21)
- ஈழ வரலாறு புத்தகம் (1)
- எல்லாம் (1)
- என் பக்கம் (9)
- கணினி தொழில் நுட்பம் (32)
- கதை (6)
- கலக்கல் டான்ஸ் வீடியோ (1)
- கவிதை (10)
- குர்து இனத்தவர் கடிதம் (1)
- குறும் படம் (2)
- சிரிப்பு (10)
- சினிமா (9)
- சீமான் (11)
- சு.பொ. அகத்தியலிங்கம் (3)
- தமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)
- தமிழச்சி (5)
- தமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)
- தமிழீழ வீடியோ பாடல் (2)
- தமிழீழம் (53)
- தமிழ் 99 (2)
- தமிழ் ஈழம் (11)
- தமிழ் தட்டச்சு உதவி (2)
- தலைவர் பிரபாகரன் தொடர் (12)
- தன்னம்பிக்கை (1)
- தாமரை (4)
- தியாகு (4)
- திருமாவளவன் (1)
- தினத்தந்தி (2)
- தினமணி (55)
- நகைச்சுவை (13)
- நக்கீரன் (2)
- படங்கள் (18)
- பாரதிராஜா (2)
- பிரபாகரன் (15)
- பெரியார் (9)
- பேச்சு (1)
- பேட்டி (4)
- பொதுவுடைமை (5)
- மனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)
- மூட நம்பிக்கை (8)
- மொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)
- ராஜபக்சே (1)
- விடுதலைப் புலிகள் (14)
- விஜய் (5)
- வீடியோ (14)
- வீடியோ படம் (85)
- வைரமுத்து (1)
- ஜி இமெயில் (2)
- ஜி மெயில் (2)
- ஜெகத் கஸ்பார் (1)
முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!
-
▼
2009
(874)
-
▼
June
(123)
-
▼
Jun 30
(7)
- "கசக்கும் கச்சத் தீவு..! "தினமணி கட்டுரை
- ♥ "இரு வெளிநாட்டவர்கள் என்னைக் கொள்ளப் பார்த்தார்க...
- "புழுதி வாரும் வழுதிக்கு...."--நக்கீரன் கட்டுரை
- ♥ அமெரிக்கர்கள் இலங்கை செல்ல வேண்டாம்: ஒபாமா ♥
- ♥ இளமையை தொலைத்து… இன விடுதலை நோக்கி... பெண் புலிக...
- ♥ " தமிழர்கள்தான் நண்பர்கள் இந்தியா உணரும் காலம் ஒ...
- ♥ உலகப்புகழ் பெற்ற கிருஸ் ரையன் சிங்களப் படைகளுக...
-
▼
Jun 30
(7)
-
▼
June
(123)