ஈழத்து சகோதரர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி கூறுவார்கள்…
“அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.
இந்த அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல் கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும் திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர் பிரபாகரன் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில் பார்த்துப் பழகியவர்களும்.
ஆனாலும் இங்குள்ள சில மூடர்கள், பிரபாகரன் என்றதும், தங்களுக்கு அவரைப் பற்றி என்னவெல்லாம் பொய்யாக எடுத்துரைக்கப்பட்டதோ கற்பிக்கப்பட்டதோ அத்தனையையும் எழுதிக் கிழி்த்தார்கள்.
இப்போது அவர்களே வெட்கித் தலைகுனியும் பல உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
குறிப்பாக, தமிழ் ஈழம் என்ற நாட்டின் கட்டமைப்பு வசதிகளை, ஒரு நாட்டின் தேசியத் தலைவர் என்ற பிரதான இடத்தில் அமர்ந்து அவர் செய்துள்ள சாதனைகள் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்கச் செய்கின்றன.
தமிழில் ராணுவக் கல்வி!
தாய்த் தமிழில் மருத்துவக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி கற்பது இன்னும்கூட தமிழகத்தில் சாத்தியமில்லாத நிலை. ஆனால் பிரபாகரனோ, புலிகளுக்கு சுத்தத் தமிழில் ராணுவக் கல்வியையே போதித்துள்ளார். ராணுவக் கல்வி என்றால், வெறும் வாய்மொழிக் கட்டளைகள்தானே என நினைக்க வேண்டாம். முழுமையான பாடத் திட்டங்களுடன் கூடிய பாரம்பரிய கல்வி அமைப்பையே தமிழ் ஈழத்தில் நடைமுறையில் வைத்துள்ளார் பிரபாகரன். இதனை இப்போது வெளிப்படுத்தியிருக்கும் சிங்கள ராணுவத்தினர், பிரபாகரனின் போர் வியூகங்கள், அதை புலிகளுக்கு கற்றுத் தர வகுத்துக் கொடுத்த முறைகள், பாசறைகள் போன்றவற்றைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறார்கள்.
இலங்கையில் முறையான, கட்டுக்கோப்பான ராணுவமாக 30 ஆண்டுகாலம் புலிகள் அமைப்பு எப்படி இயங்கியது என்ற ரகசியங்கள் இப்போதுதான் அவர்களுக்கு முழுமையாகத் தெரிய வந்துள்ளது.
ஒரு ராணுவத்திற்கு என்னென்ன தகுதிகள், கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் இருக்க வேண்டுமோ அத்தனையையும் தனது படைக்குக் கற்றுக் கொடுத்துள்ளார் பிரபாகரன். வெறும் வாய் வழி உத்தரவுகளாக இல்லாமல், ஒவ்வொன்றையும் திட்டமிட்டு, முறைப்படி அனைத்தையும் செய்து தனது போராளிப் படையை ஒரு ராணுவமாக இயங்கச் செய்துள்ளார் பிரபாகரன் என்பது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
பிரபாகரன் என்ற ஒரு தனி ஆட்சியாளரின் கீழ் இயங்கி வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிக்க, 20-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் கையேந்தி ராணுவப் பிச்சையெடுத்தது இலங்கை. இப்போது புலிகள் பகுதிகளில் தீவிர தேடுதலை நடத்தி அவர்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி பயன்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால் புலிகளோ சுயமாக, யாருடைய உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த பலம், ஆயுதங்களை மட்டுமே நம்பி கடைசி வரை களத்தில் நின்றார்கள்.
இந்த தேடுதலின் போது, புலிகளின் ராணுவ ஆவணக் காப்பகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் உத்திகள், ராணுவத் திட்டங்கள், தாக்குதல் இலக்குகள் குறித்த தகவல்கள் அடங்கிய மிக முக்கிய ஆவணங்கள் இங்குதான் இருந்ததாக சிங்கள ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 272 பைல்களில் இந்த ஆவணங்கள் உள்ளன.
இவற்றை ராணுவத்தினர் கொழும்பு கொண்டு வந்து உயர் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இவற்றைப் பார்த்த ராணுவ உயர் அதிகாரிகள் அதிர்ந்து போய் விட்டனராம். காரணம், உலகில் எந்த ஒரு ராணுவத்திடமும் இவ்வளவு முழுமையான திட்டமிடல் இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிக மிக அழகாக திட்டமிட்டு ஒவ்வொன்றையும் புலிகள் செய்து வந்துள்ளனர் என்பதை இந்த ஆவணங்கள் காட்டுகிறதாம்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் புதையல்களிலேயே மிக மிக முக்கியமானவை இந்த ஆவணங்கள்தான் என்கிறார்கள்.
பிரபாகரனுக்கு நெருங்கியவர் கொடுத்த தகவல்…
இந்த ஆவணங்கள் இருந்த இடம் குறித்த தகவலை, பிரபாகரனிடம் மிக நெருக்கமாக இருந்த ஒருவரிடமிருந்துதான் பெற்றுள்ளதாம் இலங்கை ராணுவம். அந்த முக்கிய நபர் யார் என்பதை இலங்கை ராணுவம் தெரிவிக்கவில்லை. அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் இந்த ஆவணப் புதையலைத் தோண்டி எடுத்துள்ளது ராணுவம்.
புலிகளின் சில முக்கியத் தலைவர்கள் இன்னும் ராணுவத்தின் பிடியில் விசாரணையில் இருப்பது நினைவிருக்கலாம்.
விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள், தற்கொலைப் படைத் தாக்குதல், ஆயுதக் கொள்முதல் விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனை குறித்த தகவல்கள், புலிகள் இயக்கத்தை மறு சீரமைக்க போடப்பட்டிருந்த திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் இந்த ஆவணங்களில் உள்ளது என்று போலீஸ் எஸ்.பி. வாஸ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார்.
இதைத் தவிர இலங்கையின் மொத்த ராணுவ அமைப்பை அப்படியே படம்பிடித்து வைத்தது போன்ற துல்லியமான விவரங்கள் அந்த ஆவணங்களில் உள்ளனவாம்.
இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் தமிழில் எளிமையாகப் புரியும்படி அச்சிட்டு தந்திருக்கிறார் பிரபாகரன். இதைப் பார்த்து ஆடிப் போய்விட்டார்களாம் சிங்களத்து உயர் அதிகாரிகள்.
வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, பாட்டரிகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, பாட்டரிகளையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடி குண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு டிபன்பாக்ஸ், டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் விடுதலைப் புலிகள் நிபுணத்துவம் பெற்றிருந்தது அந்தக் கோப்புகளில் தெரிய வந்துள்ளது.
இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து அவற்றை பிரபாகரனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்துள்ளனர்.
பிரபாகரன் அவற்றைக் கொண்டுதான் எதிர் உத்திகளை வகுத்து தனது படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரபாகரனுடன் இயக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ஏராளமாய் உள்ளன. அனுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரபாகரனுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் இவற்றில் உள்ளன.
வெளிநாடுகளில் வாங்கிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை வாங்கப்பட்ட நாடுகளின் பட்டியலும், அவை ஈழத்திற்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக எழுதப்பட்டிருந்தன.
இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு, அவற்றின் திறம், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அதைத் தனி ஆவணங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.
விமானங்களைச் சுட்டு வீழ்த்தக் கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120 மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி பாகங்களையும் விடுதலைப் புலிகள் வாங்கி வைத்திருந்தனர்.
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச் செயல்பட்ட புலிகளின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.
ஆயுதங்கள் தயாரிப்பு:
தமிழீழத்தின் அனைத்து ஆயுதத் தேவைகளுக்கும் வெளிநாடுகளை மட்டுமே நம்பி இருக்காமல், சொந்தமாக ஆயுதங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனர் புலிகள்.
இதற்காக புலிகள் பல ஆயுத தயாரிப்புக் கூடங்களை நிறுவியுள்ளனர். இன்னொரு பக்கம் கடல்புலிகள் கலக்கியுள்ளனர். மோட்டார் படகுகள், நீர்மூழ்கிகள் போன்றவற்றை அவர்களே கட்டியுள்ளனர். சிறு விசைப்படகு மோட்டார்களையும் புலிகளே தயாரித்துள்ளனர். இந்த திறன் இலங்கை ராணுவத்துக்குக் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் விமானங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது எப்படி என்று ஏற்கெனவே பல தகவல்கள் வெளிவந்துவிட்டன. விமானங்களின் உதிரி பாகங்களை மட்டும் வாங்கிக் கொண்டு, மற்ற அனைத்தும் தங்கள் சொந்த முயற்சியிலேயே புலிகள் செய்துமுடித்துள்ளனர்.
நிர்வாகத்துறையில் புலிகளின் திறமைக்கும் நேர்மைக்கும் இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி டி சில்வா கொடுத்த சான்று ஒன்றே போதும். அத்தனை நேர்த்தி… நேர்மை… உறுதியான நிலைப்பாடு மிக்க ஒரு அரசை நிறுவி நடத்தி வந்திருக்கிறார் பிரபாகரன்.
அவரது அந்த திறமையும் உறுதியும்தான் இந்த உலகையே அசைத்துப் பார்த்துவிட்டது… அவருக்கு எதிராக அணி திரளச் செய்திருக்கிறது.
http://tamilthesiyam.blogspot.com/2009/07/blog-post_22.htmlhttp://epaper.dinamani.com/newsview.aspx?parentid=11928&boxid=42054656&archive=true