"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-67: அணுகுமுறை மாறுகிறது!
ராஜீவ் காந்தி ஜெயவர்த்தன ரொமேஷ் பண்டாரி
இலங்கைத் தமிழர் பிரச்னையில், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு பதவிக்கு வந்த ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் காணப்பட்டது. இந்திரா காந்தியின் பழுத்த அரசியல் அனுபவத்தின் காரணமாக அவர் என்ன விரும்புவாரோ அதே திசையில் சிந்தித்த அதிகார வர்க்கத்தினர், ராஜீவ் காந்தி காலத்தில் தங்களது - விருப்பு வெறுப்புக்கேற்ப அவரை மாற்றுவதற்கு முற்பட்டனர்.
இந்திரா மறைவினால் புது தில்லியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பாதிப்புகளால் ராஜீவ் காந்திக்கு இலங்கை இனப் பிரச்னை என்பது இரண்டாம் பட்சமாகவே அமைந்தது. இச் சூழல் புது தில்லியின் அதிகார வர்க்கத்துக்கு ஏற்றதாயிற்று. இலங்கை இனப் பிரச்னையில் "தமிழர் நலன்' என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு "இந்திய நலன்' என்கிற புதிய வார்த்தைப் பிரயோகம் முன்வைக்கப்பட்டது.
"இலங்கை சிங்கள அரசின் மீது ஒரு நெகிழ்வுத் தன்மையும், தமிழ்ப் போராளி இயக்கங்கள் மீது கண்டிப்பான அணுகுமுறையும் கடைபிடிக்கப்பட்டது. ஆட்கள் மற்றும் ஆயுதங்கள் போக்குவரத்துக்கு பாக் ஜலசந்தியை போராளிக் குழுக்கள் பயன்படுத்துவதை இலங்கை-இந்திய கடற்படை மற்றும் வான் படைகள் கண்காணிக்க ஆரம்பித்தன. இவ்வாறு ஒரு புதிய நிலை உருவாகும் என போராளிக் குழுக்கள் முன்பே கணித்திருந்த காரணத்தால் அவர்கள் எதற்கும் தயாரான நிலையிலேயே இருந்தார்கள் என்பது வேறு விஷயம்.
ஜெயவர்த்தனவும் வாங்கிக் குவித்திருந்த ஆயுதங்களை நாசகார வழிகளில் தமிழர்கள் மீது பிரயோகித்தும், தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றத் திட்டத்தை தீவிரமாக நிறைவேற்றுவதிலும் குறியாக இருந்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்குதல் என்பது தீவிரமானதும் மிகப்பெரும் அளவில் தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியாவில் வந்து குவிந்தனர்.
சிங்களவர் குடியேற்றத்தைத் தகர்க்க எண்ணிய போராளிகள், அசோகர் காலத்திய புனித போதிமரம் உள்ள, பழமையும் பெருமையும் கொண்ட முந்தைய தலைநகரமான அநுராதபுரத்தில் நுழைந்து சுமார் 150 பேரைத் தாக்கி அழித்தது, ஜெயவர்த்தனவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிவிலியன்களைத் தாக்குவதில்லை என்ற கொள்கையுடைய விடுதலைப் புலிகள் முதல் தடவையாக இச் செயலைச் செய்து உலகை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தினர். இத்தகைய அணுகுமுறையைக் கையாள்வதற்கு ஒரு காரணம் இருந்தது.
வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவக் குடியேற்றத் திட்டத்தை செயல்படுத்தப் போவதான அறிவிப்புகளை அப்போதுதான் ஜெயவர்த்தன செய்திருந்தார். சிங்களவரின் பகுதியில், சிங்களவரின் உயிருக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத ஜெயவர்த்தன எப்படி தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றத்தை நிகழ்த்தி, அவர்களைப் பாதுகாப்பார் என்ற கேள்வி அம் மக்களிடையே பரவலாக எழுந்தது. இப்படி ஒரு தயக்கத்தை சிங்களவர் மத்தியில் எழுப்பினால் மட்டுமே, குடியேற்றம் தடுக்கப்பட முடியும் என்று விடுதலைப் புலிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் பலனளித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க ஜெயவர்த்தன கையாண்ட நாடகம்தான் போராளிகளுடன் பேச்சுவார்த்தை என்பது. அரசியலுக்குப் புதியவரான ராஜீவ் காந்தியை தான் விரும்பியபடி ஆட்டி வைக்கலாம் என்பதும் அவரது உள்ளக்கிடக்கையாக இருந்தது. இக் கருத்து நிறைவேற அவர் வீசிய இன்னோர் அஸ்திரம் ஜி.பார்த்தசாரதியின் வெளியேற்றத்தில் முடிந்தது.
ஜி.பார்த்தசாரதி ஒரு பிராமணத் தமிழர் என்பதால் இலங்கை இனப் பிரச்னையில் அவர் இந்திய நலனை விடுத்து, தமிழர் நலனை நாடுவதால், இரு நாடுகளிடையே உள்ள உறவு சிக்கலாகிறது என்று ஜெயவர்த்தன தரப்பிலிருந்து திரும்பத் திரும்ப பிரதமர் ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜி.பார்த்தசாரதியால் நடுநிலையாக நடந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். உண்மையில், ஜி.பார்த்தசாரதி இந்திரா காந்தியின் கருத்துக்களையே பிரதிபலித்தார். ஜி.பார்த்தசாரதிக்கு இலங்கைப் பிரச்னையின் அத்தனை பரிமாணங்களும் அத்துபடி. அவர் இந்திய நலன் மற்றும் தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார் என்பதும் உண்மை.
இந்தியாவின் மத்தியஸ்தர் முயற்சியில் நடுவராக இருந்து செயல்பட்ட ஜி.பார்த்தசாரதிக்குப் பதில் ரொமேஷ் பண்டாரி என்கிற அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் பணியில் அமர்ந்ததும் உடனடியாக கொழும்புப் பயணத்தை மேற்கொண்டார்.
கொழும்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர், ஜெயவர்த்தனவைச் சந்தித்தார். அவரோ, "இலங்கை இனப் பிரச்னை தீராததற்கு இந்தியாதான் காரணம். ஈழப் போராளிகளுக்குப் பயிற்சியும் அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களும் இந்தியா வழங்கியதால் இந்தப் பிரச்னை நீண்டுகொண்டிருக்கிறது. இந்தியா போராளிகளுக்கு உதவுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று தெரிவித்தார். கூடவே, ரொமேஷ் பண்டாரிக்கு மதிப்பு மிகுந்த, உயர்வகை அன்பளிப்பும் வழங்கப்பட்டதாகவும், அதை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அப்போது போராளிக் குழுக்கள் குற்றம் சாட்டின.
இதனைத் தொடர்ந்து, ஜெயவர்த்தனவின் வெளியுறவு ஆலோசகர் எட்மண்ட் விக்கிரமசிங்கா புது தில்லி வந்து பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். ரொமேஷ் பண்டாரி திரும்பவும் கொழும்பு சென்றார். இந்தச் சந்திப்புகளின் விளைவாக ஜெயவர்த்தன - பிரதமர் ராஜீவ் காந்தி சந்திப்பு புது தில்லியில் நிகழ்ந்தது.
கொழும்பு திரும்பிய ஜெயவர்த்தன இரண்டே வார காலத்தில், தன்னிச்சையாக போர் நிறுத்தம் அறிவித்தார். இந்தப் போர் நிறுத்தம் உணர்த்தும் உண்மை "இலங்கை நிதியுதவி கூட்டிணைப்பின்' (அண்க் ஸ்ரீர்ய்ள்ர்ழ்ற்ண்ன்ம் ஸ்ரீப்ன்க்ஷ) கூட்டம் அண்மையில் நடைபெற உள்ளது என்பதாகும்.
இந்த நிதியுதவி அமைப்புக் கூட்டம் நடைபெற இருக்கும் காலத்தில், திடீரென இலங்கையில் ஓர் அமைதிச்சூழலைத் தோற்றுவிப்பதை ஜெயவர்த்தன வாடிக்கையாகக் கொண்டிருந்தார். போர்ச்சூழலில், அதன் பாதிப்புகளைக் காரணம் காட்டி, நிதியுதவியைக் குறைத்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயத்திலேயே அவர் - போர் நிறுத்தம் செய்து, அமைதிச் சூழலை "பொய்யாக' ஏற்படுத்த விரும்பினார்.
அதே உத்தியைப் பின்பற்றித் தற்போதும் போர் நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ராஜீவ் காந்தியைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பியவுடன் இவ்வறிப்பு வெளியானதால், ராஜீவ் விருப்பப்படி வெளியிடப்பட்டதாக அவரையும் நம்ப வைத்தார் ஜெயவர்த்தன.
மேலும், இலங்கை இனப் பிரச்சினை தமிழர்கள் சார்ந்த பிரச்னை என்பதால், இந்த சமரசப் பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறக்கூடாது என்கிற நிபந்தனையையும் ஜெயவர்த்தன முன்வைத்தார். எனவே, இந்தியாவின் நட்பு நாடான பூட்டான் தேர்வு செய்யப்பட்டு, அந் நாட்டின் தலைநகர் "திம்பு' பேச்சுவார்த்தை நடைபெறும் இடமாக அறிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஓர் இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டது. இதன்படி பேச்சுவார்த்தைக்கு வசதியாக நான்கு கட்டமாக சில நடைமுறைகளை இலங்கை அரசும், போராளிகளும் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவாயிற்று.
இலங்கை அரசு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
(அ) வீதிகள், வாகனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை நிறுத்தி, அத்துமீறப்படாத பகுதிகள் என்கிற அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்றும் (ஆ) தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தி வைப்பது என்றும், (இ) நீதித் துறையினர் முன்பாகவே பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையைச் செய்வது என்றும் (ஈ) ரோந்துக்குரிய நடவடிக்கைகளுக்காக வாகனங்களை தருவித்தல், காவல் நிலையங்களுக்கு கருவிகள் அனுப்பி வைப்பது கூடாது என்றும் முடிவாயின.
இதேபோன்று போராளிகள் தரப்பில், (அ) தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆயுதங்கள், பொருட்கள் எடுத்துச் செல்வதையும் (ஆ) வடக்கு-கிழக்கில் மக்களைத் தாக்குவதை நிறுத்துவது (இ) அதேபோன்று அரசு அலுவலகங்கள், தனியார் சொத்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்துவது, (ஈ) வெளியிலிருந்து ஆட்களையும், பொருட்களையும் தருவிப்பது கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவையனைத்தும் மூன்று வாரங்கள் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டன.
இரண்டாம் கட்டமாக, இலங்கை ராணுவனத்தினருக்கும் மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பேச்சுவார்த்தைக்கு ஊறுவிளைவிக்காமல் இருக்க தாக்குதலைத் தொடரக் கூடாது என்றும், ஊரடங்குச் சட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்துவது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதேபோன்று போராளிகள் குழுவினர் பாதுகாப்புப் படையினர் செல்லும்போது தாக்குவது கூடாது என்றும், பொது நிறுவனங்களைத் தாக்குவதும் குண்டு வைத்துத் தகர்ப்பதுமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் குண்டுகளைப் புதைப்பது ஆயுதங்களை எடுத்துச் செல்வது கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
மூன்றாம் கட்டமாக, போர் நிறுத்தத்தை இருவரும் கடைப்பிடித்தல். போலீஸôர் துணையுடன் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல், தடுப்புக் காவல் கைதிகளாக சிறையில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குதல் போன்றவற்றை அரசுத் தரப்பில் செய்வது என்றும்,
நான்காம் கட்டமாக பேச்சுவார்த்தைகளின்போது எழுப்பப்படும் விவாதங்கள் முடிவு எட்டப்படும் வரையில் அப்பேச்சு விவரத்தை பகிரங்கப்படுத்தாமல் இருதரப்பிலும் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதுமான கட்டுப்பாடுகளைக் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டன.
இவை யாவும் இந்திய அரசுத் தரப்பு அதாவது ரொமேஷ் பண்டாரி எடுத்துக் கொண்ட முயற்சியினால் உருவானவை ஆகும். இந்த அட்டவணை ராஜீவ் - ஜெயவர்த்தன சந்திப்பின்போது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்தத் திட்ட நகல் போராளிக் குழுவின் ஒன்றிணைப்புக்கு (உசகஊ)அனுப்பி வைக்கப்பட்டது.
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=101398&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=