ஊடகங்கள் அணிய வேண்டிய கண்ணாடிகள்
(சென்னை பல்கலைக்கழகம் - மக்கள் ஊடகம் மற்றும் தொடர்பியல் துறை 16-3-2009 அன்று நடத்திய மா. சிங்காரவேலர் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவுக் கருத்தரங்கில் தமிழக ஊடகங்கள் மார்க்சியப் பார்வை என்ற தலைப்பில் சு.பொ. அகத்தியலிங்கம் ஆற்றிய உரை)
கருத்தரங்கின் தலைவர் அவர்களே! மேடையிலே வீற்றிருக்கும் மேனாள் துணைவேந்தர் ஜெகதீசன் அவர்களே! புலவர் ப.வீரமணி அவர்களே! ஊடகத்துறை பேராசிரியர்களே! மாணவ கண்மணிகளே! அனைவருக்கும் வணக்கம்.
தலைமையேற்று உரையாற்றிய துறைத்தலைவர் கோ.ரவீந்திரன் அவர்கள் வடசென்னையை பற்றிக் குறிப்பிட்டார். பிஅண்ட்சி மில் பற்றி குறிப்பிட்டார். வடசென்னை பின் தங்கியிருப்பது பற்றி குறிப்பிட்டார். ஊடக மாணவர்கள் வடசென்னையை பயில வேண்டும் என்றார். இது என்னுள் நச்சென பதிந்துவிட்டது அதையொட்டி சில கேள்விகளோடு என் உரையைத் துவங்க விழைகிறேன்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் பணியாற்றிய பி அன்ட் சி மில் மூடிக்கிடக்கிறது. அதைப்பார்க்கிற போதெல்லாம் பத்தாயிரம் தொழிலாளர் வாழ்வை புதைத்த சமாதியாகவே எனக்கும் தோன்றுகிறது. அதுபோல் மெட்டல் பாக்ஸ், டன்லப், ஸ்டான்டர்ட் மோட்டார் (இத்தொழிற்சாலை வடசென்னை அல்ல எனினும் ) உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், சுமார் ஒரு லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர். மக்கள் துணி கட்டுவதை நிறுத்தி விட்டார்களா? பின் ஏன் பி அன்ட் சி மில் மூடப்பட்டது. மக்கள் டப்பாக்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டார்களா? பின் ஏன் மெட்டல் பாக்ஸ் தொழிற்சாலை மூடப்பட்டது. டயர்கள், கார்களின் தேவை முடிந்து விட்டதா? பின் ஏன் டன்லப்பும், ஸ்டாண்டர்டு மோட்டார் நிறுவனமும் மூடப்பட்டது?
இந்த முதலாளிகள் திவாலாகி விட்டார்களா? இல்லை வேறு தொழிலில் கொழுக்கிறார்கள். ஆனால் அதில் பணியாற்றிய தொழிலாளிகள் சட்டப்படி பெற வேண்டியதைப் கூட பெறமுடியால் தெருவில்நிற்கிறார்கள். இது குறித்து எந்த ஊடகம் கவலைப்பட்டது? எதை எதையே புலனாய்வு செய்யும் புலிகள் உழைப்பாளிகள் வாழ்வு எப்படி சூறையாடப்பட்டது என்று எப்போதாவது புலனாய்வு செய்தார்களா?
அந்த முதலாளிகள் தரும் விளம்பரத்தில் பிழைக்கும் ஏடுகள்! ஆலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார, சமூக பண்பாட்டு விழைவுகளை ஆய்வு செய்யுமா? புலனாய்வு செய்யுமா? செய்யாது? ஏன் பல்கலைக் கழகங்கள் கூட இது குறித்து ஆய்வு நடத்த மாணவர்களை நெறிப்படுத்த தயார் இல்லையே?
இந்த கேள்விகளின் கனத்தோடு நான் உரைக்குச் செல்கிறேன்.
தேநீர் கடைகளில்
ஊடகங்கள் இல்லாத உலகை இன்றைக்கு கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. நவீன வாழ்வில் ஊடகங்கள் இரண்டறக் கலந்து விட்டன என்பது மிகையல்ல. உண்மை.
தினத்தந்தியோ தினகரனோ அல்லது வேறு ஏதேனும் ஒரு செய்திப் பத்திரிகையோ இல்லாத ஒரு முடிதிருத்தும் நிலையத்தையோ தேநீர் கடையையோ தமிழ்நாட்டில் நீங்கள் காட்ட இயலுமா? தினந்தந்தி பற்றி எத்தகைய கருத்து இருப்பினும் அது தனி. ஆனால் சாதாரண மக்களுக்கு பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிய பெருமை தினந்தந்தியையே சாரும்.
மக்களின் எழுத்தறிவு வளர்ச்சியோடு பத்திரிகையின் விற்பனை பெருகுவதும்; நாள்தோறும் பல்வேறு ஊடகங்கள் பல்கிப் பெருகுவதும் நாமறியாததல்ல. இவ்வளவுக்குப் பிறகும் 1000 பேருக்கு 70 பேர் தான் செய்திப்பத்திரிகைகள் படிப்பவர்கள் என்பதும், இதிலும் பெண்கள் விழுக்காடு மிகப்பரிதாபகரமானது என்பதும் வருத்தமான தகவல்தான். எனினும் சரிபாதி வாசகர்கள் கிராமப்புற மக்கள் என்கிற செய்தி சற்றே ஆறுதலானது.
இன்று ஊடகங்கள் என்பது வெறுமே தின, வார, மாத, பருவ ஏடுகளோடு அடங்கி விடுவதல்ல. தொலைக்காட்சியும் கைபேசியும் வந்தபின்னர் உலகம் ரொம்பவே மாறிப்போய்விட்டது.
வெகுஜன ஊடகங்களின் பிறப்பு
வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் மன்னராட்சி காலத்தில் அவர்களின் தேவைக்கு ஏற்ப "கீழ்படிதலும் விசுவாசமும் உள்ள குடிமக்களை" உருவாக்க "நீதிநெறி போதனைகள்" தாம் முன் நின்றன; அதற்கும் மேல் ஆட்சியாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப அவ்வப்போது முரசறைந்து மக்களுக்கு சேதி சொல்லுதலே ஊடகமாக இருந்தது. எப்போதும் ஆளும் வர்க்கச் சிந்தனையை சமூகத்தின் பொது புத்தியாக்கிடவே பிரச்சார உத்திகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கேற்பவே ஊடகங்கள் வடிவம் பெற்றன.
மக்களாட்சியின் தோற்றத்தோடுதான் இன்றைய வெகுஜன ஊடகங்களும் பிறந்தன. "ஊடகம் வெகுஜன ஊடகமாக மாறியதன் வரலாறு முதலாளித்துவம், ஜனநாயகம், அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்குடன் பின்னிப் பிணைந்ததாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிலப்பிரபுத்துவத்திற்கும் மன்னராட்சிக்கும் எதிராக வெடித்த புரட்சிக் கனவிலிருந்துதான் முதலாளித்துவம் உயிர்த்தெழுந்தது. அதற்குமுன் அரசுவைகளிலும், மந்திராலோசனைக் கூட்டங்களிலும் எடுக்கப்படும் முடிவுகளுக்கு மக்களின் அங்கீகாரம் தேவை இல்லை என்ற ஆளும் வர்க்க அகங்காரம் நொறுங்கிய நேரம் அது. ஆளுபவர்கள் மக்களை அணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தை மக்களே உருவாக்கி விட்டிருந்தபடியால் அவர்களைச் சென்றடைய ஊடகம் தேவைப்பட்டது. இந்தத் தேவையை அறிவியல் வளர்ச்சி பூர்த்தி செய்தது" என்கிறார் ஆர். விஜய் சங்கர் (செய்தியின் அரசியல், பக்கம்.7)
பலரிடமிருந்து பலருக்கு...
அச்சு ஊடகம் என்ற கட்டத்தை தாண்டி டிஜிட்டல் உலகில் வேகமாக பயணிக்கிறோம். இணையதளமும், கைபேசிகளும், நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் கருவிகளும் தொலைக்காட்சியும் இதர மின்னணு ஊடகங்களும் விதைத்துள்ள பெரிய வாய்ப்பும் வலிமையும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அதுமட்டுமல்ல பழைய உலகில் தகவல் தொடர்பு என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, ஒருவரிடமிருந்து பலருக்கு பரவியது; புதிய உலகில் தகவல் தொடர்பு என்பது பலரிடமிருந்து பலருக்கு ஒரே நேரத்தில் பரவுகிறது. ஆக இன்றைய ஊடகங்களின் வீச்சும் வேகமும் நம்மை வியக்க வைக்கிறது.
இந்த வலிமைமிக்க ஊடகங்கள் எதைச் செய்கின்றன? எதைச் செய்ய வேண்டும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இன்றைய கருத்தரங்கின் மைய இழை என நான் கருதுகிறேன்
நாம் தமிழ்நாட்டு ஊடகங்களைச் சுற்றியே பேசப்போவதால் அதன் தொடக்கம் குறித்து சில செய்திகளைக் கூறியாக வேண்டும்.
நமது பாரம்பரிய வேர்
"இந்திய விடுதலைக் கிளர்ச்சியும் தமிழ்ப்பத்திரிகைத் துறையும் இணைந்தே வளர்ந்தன. ஆம், ஏனெனில் அவை இரட்டைக் குழந்தைகள் என்பார் ம.பொ.சி. "அடக்குமுறைகளை தாங்கிக்கொண்டோ - எதிர்த்துக்கொண்டோ - பார்த்துக்கொண்டோ இந்திய இதழ்கள் வளர்ச்சி அடைந்தன. பூனை இருக்கும் வீட்டில் எலியும் போராட்டத்திற்கு இடையே குடும்பம் நடத்தி குட்டிகள் போடுவது போல" என க. திரவியம் `தமிழ் வளர்த்த தேசியம்' எனும் நூலில் குறிப்பிடுவார்.
ஆக, இந்திய ஊடகங்கள் விடுதலைப் போராட்டப் பாரம்பரியத்தைக் கொண்டவை. குறிப்பாக பத்திரிகைகளுக்கு அது நூற்றுக்கு நூறு உண்மை. இதர மின்னணு, ஊடகங்கள் சமீபத்தில் தோன்றினாலும் இன்னும் அந்தப் பாரம்பரிய வாசம் கொஞ்சம் இருக்கிறது. அதென்ன பாரம்பரிய வாசம்? "பாஷாபிமானம், சமயாபிமானம், தேசாபிமானம்" என அந்த நாட்களில் கூறுவர். அதாவது மொழிப்பற்று, மதப்பற்று, தேசப்பற்று இவையே இந்தியப் பத்திரிகைகளின் துவக்க காலப் பார்வையாக இருந்தது என்பார், இதழியல் குறித்து பல நூல்கள் எழுதிய அ.ம. சாமி, "ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்றுசேர்க்கும் பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்" என்றே புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் புகழ்ந்துரைப்பார். இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி என்று உண்டு. "தமிழகத்தில் இதேகால கட்டத்தில் இதற்கு இணையாக சமூக சீர்திருத்த பார்வையும் வலுவாக தடம் பதிக்கத் துவங்கிவிட்டது" என்பதும், "பொதுவுடமை சிந்தனை ஊடகங்களில் தலைகாட்டத் துவங்கிவிட்டது" என்பதும்தான் அது.
"தேசியம் வளர்த்த இதழியல்", "திராவிடம் வளர்த்த இதழியல்", "பொதுவுடமை வளர்த்த இதழியல்" என தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு இந்த மூன்று போக்குகளும் தமிழக ஊடகத் துறையில் அழுத்தமான தடங்களை பதித்துள்ளன என்பதை நாம் ஆழமாக மனதில் பதியவைக்க வேண்டும்.
(உலகத் தமிழராய்ச்சி நிறுவனமும் ராஜமாணிக்கனார் நினைவு அறக்கட்டளையும் இணைந்து இந்த ஆய்வுகளை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது)
அந்த பாரம்பரியத்தின் தொடர் கண்ணிகள் தமிழக ஊடகத்துறையில் முற்றாக அறுந்துவிடவில்லை. எனவேதான், "தமிழக ஊடகத் துறை "சில தனித்த போக்குகளும்", "இன்றைய உலக-தேசிய ஊடகத் துறையின் பொதுப்போக்குகளும்" இணைந்த கலவையாக காட்சி அளிக்கிறது.
கட்டளையிடும் எஜமானனாக
"வெகுஜன ஊடகங்கள் மக்களுக்குத் தொடர்ந்து செய்தி சொல்கின்றன. அவர்களுக்கு கேளிக்கையும் அளிக்கின்றன. அவற்றைப் படிக்கும் அல்லது பார்க்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் நடத்தை முறைகளையும் விதைத்து சமூகத்தின் நிறுவனங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டு இயங்குவதற்கான தகுதியுடையவர்களாக்குகின்றன. சொத்துக்கள் ஒரு பக்கம் குவிந்துள்ள, பெரும் வர்த்தக மோதல்களைக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்துடன் இயைந்து செல்லக்கூடியவர்களாக மக்களை உருவாக்க முயற்சிக்கின்றன. இவை தம்மிடையே போட்டியிட்டுக்கொண்டு அரசாங்க மற்றும் தனியார் ஊழல்களையும் அக்கிரமங்களையும் அம்பலப்படுத்தி பேச்சுரிமைக்கும் பொது நலனுக்கும் குரல் கொடுப்பதுபோல் தோன்றினாலும் அவை இந்த அமைப்புக்கு எதிராக மக்களைத் திருப்பும் அளவுக்குத் செல்லாமல் அடக்கியே வாசிக்கின்றன. என ஆர். விஜயசங்கர் (செய்தியின் அரசியல், பக்கம்4) வலுவாக வாதிடுகிறார். அமெரிக்க சிந்தனையாளர்களான எட்வர்ட் ஹெர்மன் மற்றும் நோம் சோம்°கி இவர்களை மேற்கோள் காட்டி, அவர்கள் எழுதிய "பொதுப்புத்தியில் கருத்து ஒப்புதலை உருவாக்குதல்" (ஆயரேகயஉவரசiபே ஊடிளேநவே) என்ற நூலை அடியொற்றி இவ்வாறு வாதிடுகிறார்.
நாம் எதை நம்ப வேண்டும்? எதை சந்தேகிக்க வேண்டும்? எதை நேசிக்க வேண்டும்? எதை வெறுக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? எதை யோசிக்க வேண்டும்? எதை ரசிக்க வேண்டும்? எதை வாங்க வேண்டும்? எங்கு வாங்க வேண்டும்? எப்படி வாங்க வேண்டும்? எதை உண்ண வேண்டும்? எதை உடுத்த வேண்டும்? என நம் வாழ்வின் சகல அம்சங்களையும் அ முதல் ஃ வரை கட்டளையிடுகிற எஜமானனாக இன்றைய ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன அல்லவா?
ஒவ்வொரு மனிதனின் கருத்தையும் செதுக்குவதில் மீடியாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன; உண்மையில் தனி மனிதனின் - சமூகத்தின் கருத்தை வடிவமைப்பதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிப்பதை அமெரிக்க அறிஞர் நாம் சோம்°கி அவர் பாணியில் சொன்னாரென்றால்; தமிழகத்தில் தந்தை பெரியார் அவருடைய மொழியில் சொன்னார். "உலகம் உயர்ந்தோர் மாட்டே என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்னைப் பொறுத்தவரை உலகம் பிரச்சாரத்தின் மாட்டே" என்பார்.
கட்சி சார்பு ஏடுகள்
அந்தத் தெளிவு தமிழக ஊடகங்களுக்கு ஆதிமுதலே இருப்பதை அறியலாம். மற்ற எந்த மாநிலங்களையும் விட பகிரங்கமாகக் கட்சி சார்பாக ஏடுகளும், தொலைக்காட்சிகளும் செயல்படுவது தமிழ்நாட்டில்தான் அதிகம்.
முரசொலி, நமது எம்ஜிஆர், விடுதலை, தீக்கதிர், ஜனசக்தி, தமிழோசை ஆகிய தின ஏடுகளும், ஜெயா டிவி, கலைஞர் டிவி, மக்கள் டிவி, சன் டிவி என கட்சி சார்பு தொலைக்காட்சிகளும், கட்சி சார்பு வார, மாத, பருவ, இலக்கிய ஏடுகளும் பலப்பல. இதனால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.
கட்சி சார்பாக இருப்பதால் அதற்கேற்ப சில சமூகப் பொறுப்புகள் அவற்றுக்கு கட்டாயமாகின்றன. அவற்றின் நம்பகத்தன்மையை உள்ளடக்கத்தை பளிச்சென புரிந்துகொள்வது மிக எளிது. இது நல்ல அம்சம். ஆனால் கட்சி சார்பாக செயல்படுவதால் அதன் அனைத்து அம்சங்களையும் கட்சிக் கண்ணோட்டத்தில் வாசகர்கள் விருப்பு வெறுப்போடு எடைபோடுவதும் இயல்பாகிவிடும். ஆபத்தும் உண்டு.
கட்சி சாராத பிற ஏடுகள் நடுநிலை ஏடுகளாக கூறிக் கொள்கின்றன. சாராம்சத்தில் அப்படியாக உள்ளனவா? - இது அடிப்படையான கேள்வி.
மாமேதை காரல் மார்க்° கூறுவார்; "உற்பத்தி சாதனங்களையும் உற்பத்தி நடவடிக்கைகளையும கட்டுப்படுத்துகிற அதிகார வர்க்கம் அதே நேரத்தில் அறிவு ரீதியான உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. எனவே அறிவு ரீதியான உற்பத்தி சாதனங்கள் பெற்றிராதவர் பெற்றிருப்பவர்களின் கருத்துக்கு இலக்காகிறார்".
கட்டுப்படுத்தும் காரணிகள்
பச்சையாகச் சொல்லப்போனால் என்னதான் நடுநிலைமை, நேர்மை, பத்திரிகை சுதந்திரம் என்றெல்லாம் வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபட்டாலும் இறுதியில் சுரண்டும் வர்க்க நலன் காப்பதில்தான் போய் முடியும். வர்க்க சமூகத்தின் இயல்பு அதுதான்.
விடுதலைப்போராட்ட காலம்போன்றோ அல்லது 60களைப் போன்றோ பத்திரிகை துவங்குவது இன்று அவ்வளவு மலிவல்ல. அப்போதெல்லாம் குறைந்த முதலீட்டில் ஏடுகள் தொடங்கி சில ஆயிரம் பிரதிகள் விற்றால் போதும். அப்போதும் நட்டம் இருக்கும். ஆயினும் தனி நபரோ அல்லது சிலர் கூட்டாகவோ லட்சிய நோக்கில் தாங்கிக்கொள்ள முடியும். (உ.ம். திராவிட இயக்க ஏடுகள், பொதுவுடமை ஏடுகள்) அப்படி செய்யவும் செய்தன. ஆனால் இன்று பெரும் பொருட் செலவு மிக்கது ஊடகத்துறை. அச்சு ஊடகமாயினும் மின்னணு ஊடகமாயினும் இதுதான் நிலை. எனவே பெரும் வருவாய் ஈட்டாமல் ஊடகத்தை தொடர முடியாது. வருவாய்க்கு விற்பனை மட்டும் போதாது. விளம்பரமின்றி ஊடகங்கள் இன்று வாழாது.
எனவே இன்று ஊடகங்களை கட்டுப்படுத்துகிற காரணங்களில் 1) `ஊடக முதலாளிகளை' அடுத்து 2) `விளம்பரங்கள்' முக்கிய பங்கு வகிக்கின்றன. 3) வர்த்தகம் சுமூகமாக நடந்திட `எதிர்வினைகள்' பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. 4) அரசு மற்றும் ஏகபோக, பன்னாட்டு நிறுவனங்களின் நிபுணர்கள் யோசனையை கேட்க வேண்டியுள்ளது. இந்த நான்கு காரணிகளுக்கும் அடிநாதமாக சில சில்லறை கண்துடைப்பு நடவடிக்கைகளுடன் இந்த சமூகத்தை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்கிற கருத்து அடிநீரோட்டமாக இயக்கும். இதன் பொருள் `கம்யூனிச எதிர்ப்பு' என்பது இதன் மையமாக இருக்கும் என நோம் சோம்°கி சுட்டிக்காட்டுகிறார்.
எல்லாத் தத்துவங்களும் உலகை அதன் துன்ப துயரங்களை வியாக்கியானம் செய்வதோடு நின்றுவிடும். அதுவரை சுரண்டும் வர்க்கத்துக்கு ஆபத்து இல்லை. ஆனால் அதை மாற்ற முற்படும் போதுதான் பிரச்சனை. அதற்குரிய தத்துவம்தான் மார்க்சியம். ஆகவேதான் மார்க்சிய தத்துவம் - கம்யூனிச தத்துவம் சுரண்டல் வர்க்கத்துக்கு எதிராக இருப்பதால் இதனை முடிந்தவரை அடக்கிவைப்பதே ஊடகங்களின் தலையாயப் பணி. தமிழக ஊடகங்களும் அதற்கு விதிவிலக்கு இல்லை. தமிழக ஊடகங்களின் "சமூகப் பொறுப்பும்", "அறிவியல் நோக்கும்" பெரும் கேள்விக்குறியாகி வருகின்றது.
நான்கு நோக்கங்கள்
ஆங்கிலத்தில் ஊடகங்களின் நோக்கமாக நான்கைக் கூறுவார்கள். (1) ஐசூகுடீசுஆ- தகவல் தெரிவித்தல் (2) நுனுருஊஹகூஐடீசூ - பயிற்றுவித்தல் (3) நுசூடுஐழுழகூநுசூ - விழிப்புணர்வூட்டல் (4) நுசூகூநுசுகூஹஐசூ - பொழுதுபோக்கு. இதில் `கடைசி' அம்சம் தமிழ் ஊடகத்துறையில் முதலிடம் வகிக்கிறது. தகவல் தெரிவித்தல் ஓரளவு நடைபெறுகிறது. (அதிலும் வர்க்க சார்பு உண்டு) மற்ற இரண்டிலும் பெரும் பள்ளம் நிலவுகிறது.
இவை தவிர ருவடைவைல ஏயடரந என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிற `பயன் மதிப்பு' இன்றைய ஊடக நுகர்வு கலாச்சாரத்தில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. அதில் தமிழ் ஊடகங்கள் வர்த்தக நோக்கிலும், விளம்பர நோக்கிலும் செய்தாலும் அதில் ஆர்வம் காட்டுகிறது. உதாரணமாக 10ம் வகுப்பு வினா-விடை, பிள° 2 வினாவிடை, வேலைவாய்ப்புச் செய்திகள் பயிற்சிகள், கணினி தகவல்கள் பயிற்சிகள், மருத்துவ யோசனைகள், தன்னம்பிக்கைப் பயிற்சிகள் என பலவற்றில் ஏறத்தாழ எல்லா ஊடகங்களும் ஈடுபடுகின்றன. அவற்றின் தரம் மற்றும் அறிவியல் அணுகுமுறை இவற்றில் குறைபாடுகள் நிரம்பவே உண்டு. எனினும் இம்முயற்சிகளை பொதுவில் வரவேற்க வேண்டும்.
தகவல் தருவதில் அதாவது செய்திகள் அளிப்பதில் ஊடகங்களுக்கு இடையே கடும் போட்டியே நிலவுகிறது. எனினும் தகவல்களை / செய்திகளை வடிகட்டி தங்கள் வர்க்க சார்பை அவை காட்டிக்கொள்கின்றன.
பெரியார் பிறந்த மண்ணில்
கூடுதல் கவலை என்னவெனில் பெரியார் பிறந்த மண்ணில் சிங்காரவேலர் பிறந்த மண்ணில் பகுத்தறிவிற்கு கொள்ளி வைக்கிற காரியங்களை ஊடகங்கள் காலை முதல் இரவுவரை செய்கிறது என்பதுதான். சோதிடம், பேய், மந்திரம், வாஸ்து என சகல மூட நம்பிக்கைகளும் நவீன அறிவியலைப் பயன்படுத்திக் கொண்டு வேகமாகச் செய்யப்படுகிறது ஜோதிட ஏடுகள் பல்கிப் பெருவது கவலை அளிக்கிறது. பிள்ளையார் பால் குடிக்கிறார், மேரி மாதா ரத்தக்கண்ணீர் வடிக்கிறார், பேய் நடமாடுகிறது என பலவற்றை தொலை காட்சியும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு தரும். ஆனால் அவை அறிவியல் ரீதியாக அம்பலப்படும்போது மவுனம் சாதிக்கும். ஏன் இந்த அநீதி? அன்றாடம் பார்க்கிற அனுபவிக்கிற இதற்கு விளக்கம் தேவையா? சேது சமுத்திர திட்டம் முடங்கிப் போனது. தமிழகத்தில் நியாயமாக எழ வேண்டிய கோபம் - அறிவுபூர்வமான விழிப்புணர்வு ஏற்பட்டதா? ஊடகங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவா நடந்தன? உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
ஜோதிட ஏடுகள் மலிந்துள்ளன அது மட்டுமல்ல மக்களின் ஜோதிட நம்பிக்கைகுள் புகுந்து மதவெறி பிரசாரமும் நடக்கிறது. உதாரணமாக குமுதம் ஜோதிடம் இதழில் ஒரு இஸ்லாமியராக மாறிய சகோதரியின் கேள்விக்கு பதில் அளித்த ராஜகோபால் அவர்கள், இந்துக்கள் கண்ணாக மதிக்கும் பசுவின் மாமிசத்தை உங்கள் கணவர் உண்பதால் தான் உங்கள் குழந்தைக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உங்கள் கணவரை அந்த பழக்கத்தில இருந்து மீட்டுடெத்தால் உங்கள் குழந்தையின் பார்வை சரியாகும் என்று பதில் அளித்ததன் மூலம் ஒரு வகையில் இந்துத்துவ மதவெறியர்களின் பசுவதை எதிர்ப்பு என்கிற கருத்தை திணிக்கிறார். மருத்துவ விஞ்ஞானத்தை மறைமுகமாக நிராகரிக்கிறார்கள்.
அது மட்டுமா கிரகப் பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள் என்பதன் வாயிலாக அர்த்தம் புரியாமல் சமஸ்கிருத ஸ்லோகங்களை மன்னம் செய்ய வழிகாட்டுகின்றன. அதன் மூலம் தெய்வீக சக்தி தமிழுக்கு கிடையாது என்றும் சமஸ்கிரதத்துக்குத் தான் தெய்வீக சக்தி உண்டென்றும் மக்களை நம்பச் செய்கின்றனர்.
மேல் வர்க்க....மேல் வர்ண
ஊடகங்கள் தொலைத்துவிட்ட ஒன்று தலித் பார்வை . உத்தபுரம் `தீண்டாமை சுவர்' இடிக்கப்பட்டது என்பதைக்கூட எழுத /கூற தமிழ் ஊடகங்கள் தயங்கின. ஆனால் மேல்சாதியினர் மலையேறியதுதான் செய்தி. "தலித் மக்களின் சிறப்புகூறு திட்டம்" தமிழகத்தில் செயலிழந்து நிற்பதை பற்றி எந்த ஊடகம் கவலைப்படுகிறது? தீண்டாமை இன்று நிலவுவதை புலனாய்வு செய்து எந்த ஏடு வெளியிட்டது? சிலைகள் அவமதிக்கப்படுகிறபோது பரபரப்பு செய்தி தருகிற ஏடுகள்; நூற்றாண்டாய் அங்கு புரையோடிப் போயிருக்கிற சாதி ஆதிக்கம் குறித்து கனத்த மவுனம் சாதிப்பது ஏன்? இட ஒதுக்கீடு சட்டம் வந்தபோது எதிர்த்தும் ஆதரித்தும் சூடாக செய்தி விற்பனை செய்யும் ஊடகங்கள் அந்த இட ஒதுக்கீடு அமலாகாத இருட்டுப்பகுதிகளை பற்றிய அறிக்கைகளை ஆய்வுகளை இருட்டடிப்பு செய்வது ஏன்? ஊடகங்கள் இன்னும் "மேல் வர்க்க மேல்வர்ண" ஆதிக்கத்தில்தான் உள்ளது என சாய்நாத் ஆய்ந்து எழுதியது உண்மையே! தமிழ்நாட்டில் தங்களை மேல்நிலையாக்கிக் கொண்டு தன் சொந்த வர்க்கத்திற்கும் சொந்த வர்ணத்திற்கும் துரோகம் செய்கிற ஊடக நிறுவன முதலாளிகளுடன் அப்படி தான் என்பது கூடுதல் வேதனை. புலனாய்வு ஊடகங்கள் இந்த சமூக பிரச்சனை குறித்து காட்டிய அக்கறை என்ன?
பெண் நிலை/ பெண் மொழி
பெண்கள் பற்றிய பார்வையில் தமிழக ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊனம் மன்னிக்க முடியாதது. அதுவும் வேறு யாரையும் விட உரக்கவும் வெளிப்படையாகவும் முற்போக்காகவும் பெண் விடுதலை பேசிய பெரியார் பிறந்த மண்ணில் பெண்களுக்கு ஊடகங்கள் செய்யும் தீங்கு அதிகம். மிக அதிகம். மகளிர் தினத்தன்று எங்கோ குடிக்கிற ஒரு பெண்ணின் படத்தைப் போட்டு இதுதான் மகளிர் உரிமை என்று ஏகடியம் பேசுகிற அளவுக்கு ஒரு ஏட்டுக்கு தலைக்கொழுப்பு உச்சத்தில் இருந்தது. பிற ஏடுகளும் சடங்காக சில செய்திகளை வெளியிடுவதைத் தவிர வேறு என்ன செய்தன? பொதுவாக மொழி என்பது வரலாற்று ரீதியாக ஆதிக்க சக்திகளாலும், ஆண்களால் கட்டமைக்கப்பட்டது. ஆகவே `பெண்கள் மொழி, ஒடுக்கப்பட்டவர் மொழி' என மொழியின் கட்டமைப்பிலேயே ஜனநாயகப்படுத்தல் தேவைப்படுகிறது என உணரும் காலம் இது.
ஆனால் தமிழக செய்தி ஏடுகளில் அந்த `பெண் மொழி' இல்லை. ஆண் மொழி மட்டுமல்ல ஆதிக்க மொழியுமே கோலோச்சுகிறது. கிரைம் செய்திகளில் இதைத்தூக்கலாகக் காணலாம். பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாகச் சித்தரிக்கும் கொடுமை சர்வ சாதாரணம். போலீ° மொழிதான் செய்தி ஏடுகளுடையதாகவும் இருப்பதைப் பார்க்கலாம். `குஷ்பு பேச்சு தொடர்பான விவாதத்தில் உணர்ச்சி கொம்பு சீவப்பட்டதே தவிர அறிவுபூர்வமான விவாதம் நடத்தப்படவே இல்லை. ஆணுறை வியாபாரிகள் தங்கள் விற்பனைக்காக ஆண்டுதோறும் நடத்தும் சர்வே (அதுவே இட்டுக்கட்டப்பட்டது என்பதே உண்மை) அதையொட்டி நடிகைகள் பேட்டி என்பது வியாபார யுக்தி. ஆனால் பெரியார் பூமியில் பெண் விடுதலை சார்ந்து விவாதம் நடந்ததா? அல்லது `கட்டுப்பாடற்ற பாலுறவு' மற்றும் `கட்டுப்பெட்டியான பஞ்சாங்கப் பெண்' என இரு கோடிகளுக்கு இடையே விவாதம் அனல் பறந்ததா? உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.
கே° விலை கூடினாலும் குறைந்தாலும் குடும்பப் பெண்கள் கவலை அல்லது மகிழ்ச்சி என்றுதானே தலைப்பு போடப்படுகிறது. தொலைக்காட்சிகள் எம் கிராமத்து பெண்களின் கழிவறை வசதியின்மையைவிட சிகப்பழகில்தான் அக்கறை காட்டுகிறது. எம் பெண்களின் ரத்தசோகை குறித்தோ போஷாக்கின்மை குறித்தோ கவலைப்படுவதைவிட ஷேர் மார்கெட் சூதாட்டத்து பெண்கள் பற்றியே கவலைப்படுகிறது. சொல்லச் சொல்ல நீளும்.
ஐ°வர்ராயும் விவசாயிகள் தற்கொலையும்
ஐ°வர்யராய் திருமணத்தை நாட்கணக்கில் முதல் பக்கத்தில் தரமுடிந்த இந்திய ஊடகங்கள் ஏறத்தாழ ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை குட்டிச் செய்தியாக ஒதுக்கித்தள்ள முடிந்தது எதனால்? பிரசாந்த்-கிரஹலட்சுமி விவகாரத்து விவகாரம் (இதிலும் ஆணாதிக்க நிலையில்தான் தந்தார்கள் என்பது வேறு சங்கதி) குறித்து பல நாட்கள் செய்தி தந்த தமிழக ஊடகங்கள் கடன் தொல்லையால் சிறுநீரகத்தை விற்கும் நெசவாளர்கள் குறித்து தந்தார்களா? கஞ்சித் தொட்டி திறந்தபோது பரபரப்பு செய்தியாக்கியவர்கள் தாராளமய உலகமயக் கொள்கையின் விளைவு என்பதை சொன்னார்கள்?
அதுமட்டுமல்ல அரசியல் லாவணிக் கச்சேரிகள் நடத்த களம் அமைத்து சூடாக பத்திரிகை வியாபாரம் செய்யும் தமிழக ஊடக முதலாளிகள் தமிழக சமூக பொருளாதார நிலைமைகள் பள்ளத்தில் கிடப்பது குறித்து பகிரங்க உரையாடலுக்கு இடம் தந்தார்களா?
பிரதமர் வேட்பாளர் யார்?
தனிநபர் தாக்குதல் களமாக மாறிப்போயுள்ள ஊடகத்தில் கருத்து மோதல் - திறந்த உரையாடல்கள் விவாதம் என்பதற்கான இடம் எங்கே?
இந்தியா என்பது பல மொழி பேசுபவர்களை கொண்ட நாடு பல்வேறு மத நம்பிக்கைகள் உடைய நாடு. ஆயிரக்கணக்காண சாதிகளும் வர்ண அடுக்கு முறையும், தீண்டாமையும் உள்ள நாடு. இங்கே முதல்வரையோ, பிரதமரையோ, குடியரசுத்தலைவரையோ மக்களே நேரடியாகத் தேர்வு செய்வது சம நீதிக்கு உதவாது. நேரடியாக தேர்வு என்றால் ஆதிக்கமதம், ஆதிக்க இனம் ஆதிக்க வர்க்கம் இவைகளின் கையே ஓங்கும் . எனவே தான் டாக்டர் அம்பேத்கார் போன்றோர் பிரதிநிதித்துவ முறையை பரிந்துரைத்தனர். இந்துத்துவ சக்திகள் இதை மாற்ற முனைகின்றன. குடியரசு தலைவரை மக்களே நேரடியாகத் தேர்வு செய்ய வேண்டும் என குடியரசு தலைவர் தேர்தலின் போதுஊடகங்கள் பிரச்சாரம் செய்ததும், இப்போது பிரதமர் வேட்பாளர் யார் என எழுப்புவதும் ஆபத்தானது. அம்பேத்கார் வகுத்த நேர்பாதையை சீர் குலைப்பதாகும். இதைத்தானே ஊடகங்கள் செய்கின்றன.
சென்னை மயிலாப்பூர் அல்லது பெசன்ட் நகரில் சாலையில் சின்னச் சம்பவம் என்றாலும் பெரிதாகப் பேசும் ஊடகங்கள் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தாராளமயக் கொள்கையால் சீரழிக்கப்பட்டு கிடப்பதை என்றேனும் முன் நிறுத்தினார்களா?
நிலம்: வர்க்கபாசம்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தலைக்கு 2 ஏக்கர் நிலம் வீதம் 50 லட்சம் தரிசு நிலம் 25 லட்சம் பேருக்கு வழங்க திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி தந்தது. அது சாத்தியமில்லை. அவ்வளவு நிலம் இல்லை என அதிமுக மறுத்தது. ஆனால் முந்தைய ஆட்சியில் ஆளுநர் உரையில் உள்ளதை கலைஞர் எடுத்துக்காட்டினார். அது அதிகாரிகள் சொன்னதை நம்பி தவறாக தரப்பட்டதாக அதிமுக தரப்பு விளக்கம் தந்தது. இந்தத் தகவல் எல்லாம் ஏடுகளில் வந்தன. ஆனால் "ஆளுநர் உரையில் சொன்னது பொய்" எனில் அதை அடுத்த உரையில் மறுத்தார்களா? மாற்றி தந்தார்களா? இல்லை. அப்படியானால் "ஆளுநர் உரையும் நம்பத்தகுந்தது இல்லையா?' 50 லட்சம் ஏக்கர் நிலம் எங்கே போனது? யாரும் கேட்கத்தயார் இல்லை - இடதுசாரிகளைத் தவிர. ஆனால் ஊடகங்கள் இதைக்கண்டு கொள்ளவே இல்லை. இதில் கிளைமாக்° என்னவெனில் இந்த நிலங்கள் யார் யாரால் அபகரிக்கப்பட்டு நூறு ஏக்கர், ஐநூறு ஏக்கர், ஆயிரம் ஏக்கர் என வேலிபோடப்பட்டுள்ளது என்கிற விபரத்தை சென்னையில் காமராஜ் அரங்கில் பெரிய மாநாடு நடத்தி பட்டியலை அச்சிட்டு கொடுத்தபோதும், எல்லா ஊடகங்களும் அந்த மாநாட்டிற்கு வந்திருந்தும் அதனை வெளியிடவில்லை. ஏனெனில் தங்களுக்கு விளம்பரம் தரும் பெரிய நிறுவனங்கள்தாம் அந்த காரியத்தை செய்துள்ளன என்பதால், வெளியிட மறுத்து விட்டன. இதுதான் தமிழக ஊடகங்களின் வர்க்க பாசத்திற்கு சரியான உதாரணம்.
இதேபோல பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இன்னொன்றை பார்ப்போம். குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் கிண்டி கிங் இன்°டிடியூட் மற்றும் குன்னூர் பா°டர் நிறுவனம் இவற்றை மத்திய அரசு மூடிவிட்டு தனியாரிடம் கொடுக்க முனையும்போது அதன் ஆபத்துகளைக் கூற இடதுசாரி ஏடுகளைத் தவிர வேறு இல்லை.
தேவையான கண்ணாடிகள்
தலித் பார்வை, பெண் பார்வை, உழைக்கும் மக்கள் பார்வை என அடிப்படையாக இம்மூன்றிலும் உலக ஊடகங்கள், தேசிய ஊடகங்கள் அடியொற்றியே தமிழக ஊடகங்களும் செல்கின்றன.
தேர்தல் நேரம். ஆகவே பலவற்றை நான் இங்கு பகிரங்கமாக பேச முடியாது. ஆனால் மலையும் மடுவுமாய் சமூகம் மேலும் மேலும் பிளவுபட்டு வருவதை, சிறு பகுதியினருக்கான ஒளிரும் இந்தியாவும், பெரும்பான்மை மக்களுக்கு வறண்ட இந்தியாவும் என இரண்டு இந்தியாவாக பிளவுண்டதை ஊடகங்கள் சொல்லுமா? மதவெறியின் கோர விளைவுகளை - ராணுவத்தில் நீதித்துறையில் எங்கும் ஊடுருவிவிட்ட மத, சாதி ஆதிக்கத்தை ஊடகங்கள் தோலுரிக்குமா? புதிய பாதையில் தேசம் நடை போட வழி காட்டுமா? தனிப்பட்ட அமைச்சர்களின் செயல்திறன் குறைவால்தான் பிரச்சனைகள் புரையோடுவதாக மாற்றி மாற்றி குற்றஞ் சாட்டுபவர்கள்; கொள்கைக் கோளாறை முன்னிலைப்படுத்துவதில்லையே ஏன்? எதிரும் புதிருமாக கச்சை கட்டி நிற்பவர்கள் சாராம்சத்தில் ஒரே வர்க்க நலனைத் தானே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற உண்மையை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுமா? கொள்கை மாற்றத்துக்கு குரல் கொடுக்குமா? நிச்சயம் ஊடகங்கள் அதைச் செய்யப்போவதில்லை. தனி நபர் மோதல்களாக - லாவணிக் கச்சேரியாக - உணர்ச்சி போராட்டமாக - தேர்தல்களம் மாற்றப்படும். ஊடகங்கள் அக்காரியத்தைத் தான் செய்யும் இன்னும் பேச தேர்தல் நடத்தை விதி குறுக்கீடு செய்வதால் இத்தோடு அமைகிறேன்.
ஒரே ஒரு வேண்டுகோள் இங்கே எம் உரை கேட்ட மாணவர்களில் ஒருவராவது ஊடகத்துறையில்/ பெண் பார்வையில்/ தலித் பார்வையில்/உழைக்கும் மக்கள் பார்வையில்/ கிராமத்துப் பார்வையில்/தொலை நோக்குப் பார்வையில்/ அறிவியல் பார்வையில் மொத்தத்தில் மார்க்சியப் பார்வையில் செயல்பட முனைந்தால் அதுவே எமக்கு வெற்றி
பெரியார் அணிந்த சமூகக் கண்ணாடியை - அம்பேத்கார் அணிந்த சமூகக் கண்ணாடியை - சிங்காரவேலர் - அணிந்த சமூகக் கண்ணாடியை - மாணவர்கள் அறிய வேண்டும். இன்றைய சமூகத் தேவையை - சமூக அறிவியில் கண்ணோட்டத்தில் - மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்க்கப் பழக வேண்டும் என்பதே என் விழைவு. வேண்டுகோள்.
'மார்க்சிய கண்ணோட்டம்' என்பது சிலருக்கு ஏற்கத்தக்கதாக இல்லாமல் கூட இருக்கலாம். அல்லது நீங்கள் நாளை பணியாற்றப்போகிற நிறுவனத்தில் அதற்கு இடம் இல்லாமல் போகலாம். ஆயினும், காந்தியின் ஒரு அளவுகோலைப் பயன்படுத்த நீங்கள் முயன்றாலேகூட நன்மைகள் நிறைய விளையும்.
ஆம். மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார் "உன்னுடைய பேச்சு, எழுத்து, செயல் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கிற கடையனுக்கும் கடையனுக்கு சிறிதாவது பயன்படுமா, நன்மை தருமா என்று யோசித்துப்பார்" காந்தியின் இந்த அளவு கோலையாவது மனதில் எப்போதும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன்.
வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
சு.பொ. அகத்தியலிங்கம்
Thanks!
ஆதிசிவம், சென்னை. நன்றி!...