நேர்காணல்: மினர்வா & நந்தன்
இரண்டாம் பகுதியின் தொடர்ச்சி...
சிறையில் இருந்து வெளியே வந்ததும் சி.பி.எம்மில் சேருகிறீர்கள். அங்கு உங்கள் செயல்பாடு என்னவாக இருந்தது. அங்கிருந்து வெளியேற என்ன காரணம்?
நான் கட்சியில் சேர்ந்த நேரம் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டிருந்தது. சி.பி.எம். தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்தார்கள். மற்றக் கட்சிகளைப் போல, மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு, ஈ.எம்.எஸ், பி.ராமமூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஏ.பாலசுப்பிரமணியம் போன்ற இடைநிலைத் தலைவர்களை அரசு கைது செய்தது.
கேரளாவில் நெருக்கடி நிலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி முழு அடைப்பு போராட்டமே நடத்தியது. தலைவர்களைக் கைது செய்த இந்திராகாந்தி அரசு அவர்களை மிசாவில் அடைக்கவில்லை. வலதுசாரி பாசிசக் கட்சிகளை அடக்கத்தான் இந்த நெருக்கடி நிலை என உலகிற்கு இந்திராகாந்தி அறிவித்தார். இதற்கு சி.பி.ஐ. ஆதரவு தெரிவித்தது. சோவியத் அரசும் இதை நியாயப்படுத்தியது. நெருக்கடி நிலை, இடதுசாரிகளுக்கு எதிரானதல்ல என அறிவிக்கத்தான் தலைவர்களை அரசு கைது செய்யவில்லை.
ஆனால் அந்தத் தலைவர்களாலும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அவர்கள் நடத்திய பத்திரிகைகளும் முன் தணிக்கை செய்யப்பட்டே வந்தது. இந்த நடவடிக்கைகளால் எங்களுக்கு சி.பி.எம் மேல் பெரிய மரியாதை இருந்தது. இந்திய ஆளும் வர்க்கம் பற்றிய பார்வை, இந்திய முதலாளிகளின் ஆதிக்கம், விவசாயம் பற்றிய தெளிவு போன்றவற்றில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அறிவியல் பூர்வமான பார்வை இருந்தது.
அதேபோல் சீனத்தின் பாதையே எங்கள் பாதை என்று சொல்லும் எம்.எல். கட்சிக்கும், சோவியத் என்ன செய்தாலும் சரி என்று சொல்லும் சி.பி.ஐ. கட்சிக்கும் இடையே சுதந்திரமான ஒரு கட்சியாக சி.பி.எம். தான் இருந்தது. இதனால் உலக கம்யூனிச இயக்கங்கள் எதுவும் சி.பி.எம். கட்சியை ஆதரிக்கவில்லை. பெய்ஜிங் வானொலியில் இவர்களை 'சர்வதேச அனாதைகள்' என்றே கூறினார்கள்.
சீனாவின் ஒரே தலைவர் மாசேதுங் தான் என அவர்கள் அறிவித்தபோது இங்குள்ள மார்க்சிஸ்டுகள் அதை விமர்சித்தார்கள். 'ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் தவறே செய்ய மாட்டார், எனவே அவரையே பின்பற்ற வேண்டும் என கத்தோலிக்கர்கள் கூறுவது போல் இருக்கிறது' என விமர்சித்தார்கள். ஏ.பாலசுப்பிரமணியமும் 'சோவியத்தோ, சீனாவோ எந்த ஒரு இடமும் குருபீடம் போல் செயல்பட முடியாது' என எழுதினார். இவ்வாறு அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மாறுபட்டது எங்களை ஈர்த்தது. இதனால் சிறையிலிருந்தபோதே சி.பி.எம்மில் சேர்ந்தோம்.
அமைப்பு கட்டுவது, பத்திரிகை நடத்துவது, போராடுவது என சிறைக்குள் வழக்கம் போல் எங்களது செயல்பாடுகள் தொடர்ந்தன. அந்த நேரத்தில் தான் ஈழப்போராட்டம் வலுப்பெறுகிறது. அதில் சி.பி.எம். எடுத்த நிலைப்பாட்டில் கொஞ்சமும் நியாயம் இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை. அவர்கள் முற்றிலும் இந்திய அரசின் நிலையை ஆதரித்தார்கள். ஈழப்போராட்டம் நியாயமானது என்ற கருத்து எங்களுக்கு இருந்தது.
ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக சிறைக்குள்ளேயே பெரிய எழுச்சி ஏற்பட்டது. மதுரை சிறைச்சாலையில் ஜெயவர்த்தனேயின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. நான் அப்போது திருச்சி சிறையில் இருந்தேன். அங்கு 1500 கைதிகளையும் திரட்டி சிறைக்குள் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தினோம். அதில் ஈழச்சிக்கல்களை விளக்கி நான் பேசினேன்.
83-ல் காலவரையற்ற சிறைப்போராட்டத்தை தொடங்கினோம். அதில் முதல் கோரிக்கையாக ஈழப்போராட்டத்தை நியாயப்படுத்தினோம். அதைத் தவிரவும் பத்தாண்டுகள் ஆன ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக அந்தப் போராட்டம் நடைபெற்றது. அதில் ஒருநாள் உண்ணாவிரதமிருந்து அந்தப் பணத்தை ஈழ அகதிகள் நிதிக்காக அரசுக்கு அனுப்பினோம். இதற்காக சிறையில் இருந்து பதினைந்து நாட்கள் விடுப்பில் வெளியே போய் பல்வேறு தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினேன்.
அதற்கு முன்னதாக 79ல் சிறைக்குள் ஒரு கைதியை போலீசார் அடித்துக் கொன்று விட்டு தற்கொலை செய்து விட்டதாகக் கூறினார்கள். இதை எதிர்த்து கைதிகள் சிறைக்குள் போராட்டம் நடத்தினார்கள். போலீசாருக்கும் கைதிகளுக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. தேவாரம் தான் அபோது டி.ஐ.ஜி.யாக இருந்தார். கைதிகள் மீது துப்பாக்கிச்சூடும், லத்தி சார்ஜும் நடைபெற்றது. அதன்பிறகு தான் சிறைக்கைதிகளுக்காக கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷன் உருவாவதற்கு வெளியிலிருந்த சி.பி.எம். தோழர்கள் தான் கடுமையாகப் போராடினார்கள்.
83 சிறைப்போராட்டத்திற்கு பிறகு எனக்கும் கட்சிக்கும் இடையே ஈழப்போராட்டத்தை முன்னிறுத்தி கருத்து வேறுபாடுகள் உருவானது. தேசிய இனச்சிக்கலை வலியுறுத்தி ஈழப்போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரித்தது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 85ல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன். வெளியே வந்ததும் சி.பி.எம். கட்சியின் முழுநேர ஊழியராகச் சேர கட்சி அழைத்தது. மூலதனம் பதிப்பு வேலைகள் காரணமாக என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதே நேரத்தில் கட்சியுடனான என்னுடைய முரண்பாடும் அப்படியே தான் இருந்தது. சிறையில் இருக்கும்போது, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.பரமேஸ்வரன், லெனின் கூறியதாக ஒரு கருத்தை வெளியிட, அதை நான் மறுத்தேன். இதனால் அவருக்கும் எனக்கும் கடுமையான முரண்பாடு ஏற்பட்டது. அதனால் நான் சிறையில் இருந்து விடுப்பில் வெளியே வரும்போது எனக்கு எந்த உதவிகளும் செய்யக்கூடாது என தோழர்கள் சிலருக்கு அவர் கூறியிருந்தார்.
செம்மலர் பத்திரிகையில் பாரதிதாசன் குறித்து கட்டுரை ஒன்று வெளியானது. அதில் பாரதியின் வழித்தோன்றல் தான் பாரதிதாசன் எனவும், அவரைப்போலவே இவரும் தேசிய ஒற்றுமையை முன்னிறுத்தினார், இடையில் திராவிடம் என்று போனாலும் இறுதியில் மீண்டும் அவர் பாரதியின் கருத்துக்கு வந்துவிட்டார் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதை மறுத்து நான் எழுதினேன்.
'பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் இருந்த தனிப்பட்ட உறவு என்பது வேறு. பாரதியார் அடிப்படையில் இந்திய தேசியக்கவி. பாரதிதாசன் தமிழ்த்தேசியக் கவி. பாரதிதாசன் பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டதில் இருந்து இறுதிக்காலம் வரை அந்த நிலைப்பாட்டில் தான் இருந்தார். இந்திய-சீன எல்லைப்போரின் போது, இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும், நேரு தான் இந்தியாவின் தலைவராக இருக்க வேண்டும் என்ற கருத்து தான் பெரியாருக்கு இருந்தது. அதைத்தான் பாரதிதாசனும் பிரதிபலித்தார். அதை வைத்துக்கொண்டு தான் இவர்கள் அவரை இந்திய தேசியக்கவி என்று கூறுகிறார்கள்.
பின்னாட்களில் சம்பத்தின் தமிழ்த்தேசியக் கட்சியுடனும், சி.பா.ஆதித்தனாருடைய நாம் தமிழர் கட்சியுடனும் அவருக்கு நெருக்கம் அதிகமானது. அந்த நாட்களில் பெரியாரையே அவர் திட்டிக்கொண்டிருந்ததாக அவருடைய மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் கடைசிவரை தமிழ்த்தேசியம் பக்கம் தான் நின்றார். எனவே அவரை இந்திய தேசிய ஒற்றுமையை வலியுறுத்தினார் என்று எழுதுவது சரியல்ல' என்று எழுதினேன்.
இந்தக் கட்டுரையை வெளியிட செம்மலர் பத்திரிகை மறுத்து விட்டது; கட்டுரை பாலம் இதழில் வெளிவந்தது. இப்படி தொடர்ச்சியாக கட்சியுடன் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டன. 87ல் இந்திய-இலங்கை உடன்பாடு ஏற்பட்டது. அதை சி.பி.எம். ஆதரித்தது. இதற்கு மேல் சகித்துக் கொள்ள எதுவும் இல்லை என்ற நிலை அப்போதுதான் ஏற்பட்டது. இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள சந்துரு அப்போது வழக்கறிஞராக இருந்தார். அவர் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர். இந்தியா இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புவதைக் கண்டித்து நடைபெற்ற மனிதச்சங்கிலியில் கலந்து கொண்டார்.
கட்சி அவரை அழைத்து 'ஏன் கலந்து கொண்டீர்கள்' என விளக்கம் கேட்டது. "நான் மனுஷன், அதனால் மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டேன்" என அவர் விளக்கம் சொன்னார். அதனையடுத்து சந்துரு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் இனி கட்சியில் நீடிக்க முடியாது என்பதை உணர்த்தின. நான் அப்போது மூலதன வேலைகள் காரணமாக அம்பத்தூரில் தங்கியிருந்தேன். அம்பத்தூரை விட்டு வெளியே சென்று நான் பேசக்கூடாது என்று கட்சி என்னை முடக்கியது.
தேசிய இனச்சிக்கல்கள், ஈழப்பிரச்சனை தொடர்பாக கட்சிக்குள் ஒரு விவாதம் நடத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். அதைத் தொடர்ந்து நிராகரித்தார்கள். எம்.ஜி.ஆர் இறந்த தினத்தன்று கமிட்டி கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தடைபட்டிருந்ததால், திரும்பிச் செல்ல முடியாமல் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்தோம்.
'பேசுவதற்கு ஒன்றுமில்லை, இன்றாவது ஈழப்பிரச்சனை குறித்துப் பேசுவோம்' என வலியுறுத்தி நான் பேச வைத்தேன். அன்று உறுப்பினர்களுக்குள் கடுமையான மனக்கசப்பு ஏற்பட்டது. ஜோதிபாசு பேசியது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஒன்றாகவும், தீக்கதிரில் வேறாகவும் வெளிவந்திருந்தது. அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு தீக்கதிர் பத்திரிகை பொய்ச்செய்தி வெளியிடுகிறது என வாதிட்டேன்.
அந்த நேரத்தில் சி.பி.எம். மாவட்ட மாநாடு நடைபெற்றது. நான் கமிட்டி பதவியை விட்டு விலகினேன். இதற்குக் காரணமாக, 'என் கீழே இருக்கும் உறுப்பினர்களிடம் என்னால் அதிக நாட்கள் பொய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவே இதை விட்டு விலகுகிறேன்' என்று சொன்னேன். இதுதொடர்பாக உ.ரா.வரதராஜனுடன் கடுமையான விவாதம் நடைபெற்றது. 'கமிட்டி பதவியை விட்டு விலகினாலும் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவீர்கள்' என்று அவர் கூறினார். 'நீங்கள் யார் என்னைக் கண்காணிப்பதற்கு, நாங்கள் கண்காணிக்க வேண்டிய நிலையில் தான் தலைவர்கள் இருக்கிறீர்கள்' என்று கூறினேன்.
மாநாட்டில் எனக்குப் பேசுவதற்கு எட்டு நிமிடம் ஒதுக்கப்பட்டது. நான் பேச ஆரம்பித்ததுமே குறுக்கிட்டு, 'தி.மு.க.வில் பேசுவது போல் பேசக்கூடாது' என்றார்கள். 'நீங்கள் சோ.ராமசாமி பேசுவது போல் பேசாதீர்கள்' என நான் பதில் கூறினேன். இனிமேல் கட்சிக்குள் போராடி ஜெயிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.
நேருவின் மொழிக்கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்று நல்லசிவம் அறிக்கை கொடுத்தார். அது ஒரு ஏமாற்று மோசடி என்று நான் அவருக்குப் பதில் எழுதினேன். 'அனைத்து மொழிகளும் சமம் என்கிற லெனினின் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்களா, அல்லது இந்தியும், ஆங்கிலமும் மட்டும்தான் தேவை என்கிற நேருவின் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்களா?' எனக் கேட்டிருந்தேன். அவர் கட்சிக்குள் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. என்னை அழைத்து அதுகுறித்து விவாதித்தார். பேச்சு புலிகள் பக்கம் திரும்பியது. 'புலிகள் போராட்டத்தை நான் எதிர்க்கவில்லை, ஆனால் தொழிற்சங்கத்தில் கிடைப்பது போல இடைக்கால நிவாரணம் தற்போது கிடைப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் இல்லையா?' என்று கேட்டார்.
'இடைக்கால நிவாரணம் தொழிற்சங்கத்தை கலைப்பது போல இருக்கக்கூடாது' என்று நான் சொன்னேன். இதேபோல் பல வாக்குவாதங்கள் நடைபெற்றன. 89 செப்டம்பர் 11ம் நாள் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்த நாள். நாங்கள் மூன்று தோழர்கள் இணைந்து 'திலீபன் அறிமுக மன்றம்' ஒன்றை ஆரம்பித்தோம். அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஈழச்சிக்கல் குறித்து நான் விரிவாகப் பேசினேன். கூட்டத்தில் சி.பி.எம்மை கடுமையாகத் தாக்கிப் பேசினேன்.
கூட்டம் நடைபெறப்போகிறது என்று அறிந்தவுடனே, நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என கட்சியில் இருந்து சொன்னார்கள். அதைமீறி நான் கலந்து கொண்டேன். மறுநாள் தீக்கதிர் பத்திரிகையில் நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி வெளியானது. சி.பி.எம்முடன் உறவு முறிந்து போன பின்னணி இதுதான். அவர்கள் பேச்சளவில், எழுத்தளவில் இந்தியாவை பல்தேச இனமக்களை கொண்ட நாடாகக் கருதினாலும், அவர்களின் வேலைத்திட்டம் இந்தியாவை ஒரே நாடாகக் கருதுகிறது.
சாதி ஒழிப்பு குறித்து தனியான சிந்தனையோ, வேலைத்திட்டமோ அவர்களிடம் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை நிலப்பிரபுத்துவ சமூகத்தின் மிச்சசொச்சம் தான் சாதி. வர்க்கப் போராட்டம் நடந்து முடியும்போது சாதி தானாக ஒழிந்து விடும் என்பது தான் அவர்களது கருத்து. இதனால் தான் இடஒதுக்கீட்டில் அவர்களுக்கு ஆர்வம் கிடையாது. இட ஒதுக்கீடு தொழிலாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்தி, முதலாளித்துவ ஒழிப்பு ஐக்கியத்தை அழித்து விடும் என்பது அவர்கள் கருத்து.
கட்சியின் பார்ப்பனத் தலைமை மட்டுமே இதற்குக் காரணமல்ல. கட்சியின் அமைப்பிலேயே கோளாறு இருக்கிறது. கட்சிக்குள் முழுநேர ஊழியர்களாக வருபவர்கள் எல்.ஐ.சி. சங்கம், வங்கி ஊழியர்கள் சங்கம் போன்றவற்றில் இருந்து தான் கட்சிக்குள் வருகிறார்கள். மண்டல் குழு பரிந்துரை, இட ஒதுக்கீடு போன்றவை இந்த பார்ப்பன ஊழியர்களை நேரடியாக பாதிக்கும். எனவே இதனை அவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். இதைத்தான் கட்சித்தலைமை பிரதிபலிக்கும். சமூகநீதிக் கொள்கையில் அவர்களுக்கு உண்மையான அக்கறை கிடையாது.
தேசிய இனச்சிக்கல், சாதிப் பிரச்சனைகள் போன்றவற்றில் ஆளும் வர்க்கத்தின் பார்வை தான் அவர்களின் பார்வை. இடது வண்ணம் பூசப்பட்ட ஆளும் வர்க்கப் பார்வை. அடிப்படையில் அவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் பக்கம் நிற்கிறார்கள். நாம் தமிழ்த்தேசியம் சார்ந்தோ, சாதி ஒழிப்பு சார்ந்தோ பேசினால் அவர்களுக்கு அது எதிரானது. எனவே நான் அவர்களோடு மாறுபட்டேன்.
அப்போதிருந்த சி.பி.எம். நிலைக்கும், இப்போதிருக்கும் நிலைக்கும் ஏதாவது வித்தியாசத்தை காண்கிறீர்களா?
முன்னைவிட மோசமாக இருக்கிறது. 64ல் கட்சியின் முதல் வேலைத்திட்டம் குறித்த விவாதம். அதில் தேசிய இனச்சிக்கல் குறித்துப் பேசுகிறார்கள். கருத்து வேறுபாட்டால் கட்சி இரண்டு பிளவாக நின்றது. ஏ.பாலசுப்பிரமணியம், சுந்தரைய்யா போன்றவர்கள் 'தேசிய இனப்பிரச்சனை என்பது லெனினின் கொள்கை தான். இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் பிரிந்து போகும் உரிமையோடு கூடிய, சுயநிர்ணய உரிமை கொண்ட தேசிய இனங்களின் ஐக்கியமாக இருக்க வேண்டும்' என்றார்கள்.
1912லேயே ஸ்டாலின் "இந்தியாவில் தேசிய இனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ வளர்ச்சி இந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. பின்னாளில் தேசிய இனங்கள் தங்களது உரிமைகளை வலியுறுத்தும்" என்று எழுதினார். 20களிலேயே இந்தியாவில் மொழிவழி தேசிய இனங்கள் தங்களை உறுதியாக நிலைநாட்டிக் கொண்டார்கள். அதனுடைய ஒரு வெளிப்பாடு தான் பெரியாரின் சுயமரியாதை இயக்கம். தமிழ்த்தேசியம் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் முயற்சி அது. பஞ்சாபில் 'அக்கார்டி' இயக்கம் ஒருபுறம் பிரிட்டனை எதிர்த்துக் கொண்டே 'பஞ்சாப் பஞ்சாபிகளுக்கே' என்ற முழக்கத்தை முன்வைத்தது.
இதற்கெல்லாம் முன்னோடியாக வங்காளம் திகழ்ந்தது. வந்தே மாதரம் பாடலை சட்டர்ஜி எழுதும்போதே ஏழுகோடி மக்கள் தொகை என்றுதான் எழுதினார். பாரதியார் அதை முப்பதுகோடி என்று மொழிபெயர்த்தார். ஏனெனில் சட்டர்ஜி எழுதியது வங்கதேசத்துக்கான பாடல்தான். பிற்காலத்தில் ஆந்திராவில் எழுந்த தெலுங்கானா போராட்டம் என்பது தெலுங்கு தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம் தான்.
ஆனால் கம்யூனிஸ்டு கட்சி 41ல் பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையின் போது தான் தேசிய இனச்சிக்கலுக்கு முக்கியத்துவம் தருகிறது. அதற்காக ஒரு குழு அமைத்து ஆய்வு செய்தது. இறுதியில் இந்தியா என்பது பிரிந்து போகும் உரிமையுடைய பல்வேறு தேசிய இனங்களை உடைய ஒரு பல்தேசிய நாடு என அறிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில் தான் பாகிஸ்தான் தனிநாடு கேட்கிறது. எனவே அதை ஆதரிக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்கள்.
பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஏற்பட்ட கலவரங்கள், 'நேரு ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளர், எனவே அவரது கையை வலுப்படுத்த வேண்டும்' என சீனா, சோவியத் கருதியது போன்ற பல்வேறு பின்னணிகளில் கம்யூனிஸ்டு கட்சி தேசிய இனச்சிக்கலில் தங்களுக்கிருந்த கொள்கையை கை கழுவியது. ஈ.எம்.எஸ். போன்ற தலைவர்கள் 'சுயநிர்ணய உரிமையை ஆதரித்தால் இந்திய பாட்டாளி வர்க்கம் பிளவுபட்டு விடும். ஆனால் மார்க்சியக் கட்சி என்ற முறையில் தேசிய சுயநிர்ணய உரிமையை எதிர்க்க முடியாது, அதே நேரத்தில் அதை வலியுறுத்தவும் கூடாது' என்ற நிலையை எடுத்தார்கள்.
வெளிப்படையாக 'சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க வேண்டும்' என்ற மற்றொரு கருத்தும் அங்கே வெளிப்பட்டது. எனவே இதை விவாதித்து முடிவெடுப்பதாக அறிவித்து 72 வரை எட்டு வருடங்கள் கட்சிக்குள் விவாதங்கள் நடைபெற்றன. மாநிலங்களில் இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக (பி.ராமமூர்த்தியை எதிர்த்து, ஏ.பாலசுப்பிரமணியத்திற்கு ஆதரவாக) அதிகம் பேர் வாக்களித்திருந்தார்கள். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இறுதியில் இந்தியா விருப்பம் சார்ந்து இணைந்த தேசிய ஒன்றியமாக இருக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். இது கட்சியின் தீர்மானம்.
இந்தியாவுக்குச் சொன்ன இந்த கருத்தை, அளவுக்கு மீறி அவர்கள் இலங்கையில் திணித்து விட்டார்கள். சமீபத்தில் கொசோவாவுக்கும் விடுதலை கூடாது என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் வங்கதேசப் பிரிவை ஆதரிக்கிறார்கள். ஏனெனில் வங்காளத்தில் கட்சி பெரிய கட்சி. அதனால் வங்க மக்களின் தேசிய உணர்வை எதிர்த்து நிற்க முடியவில்லை. இதற்கு வங்க தேசிய உணர்வு மட்டும் காரணமல்ல. இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கை இவர்களது கொள்கையாக இருப்பதும் ஒரு காரணம்.
வங்கதேசப்பிரிவினை பாகிஸ்தானை பலவீனப்படுத்தும் எனவே இந்திய ஆளும் வர்க்கம் அதை ஆதரிக்கிறது. கம்யூனிஸ்டுகளும் ஆதரிக்கிறார்கள். இந்தியப்படையை இலங்கைக்கு ஆளும் வர்க்கம் அனுப்பியபோது அதை வரவேற்றார்கள். இப்படித்தான் முன்னைக் காட்டிலும் சி.பி.எம்மின் நிலைமை பலமடங்கு மோசமாகி விட்டது.
சி.பி.எம்மில் இருந்து வெளியேறியதும் தமிழ்த் தேசிய செயல்பாட்டில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினீர்கள் அல்லவா?
இந்தியா இலங்கைக்கு ராணுவம் அனுப்புகிறது. ஈழத்தில் தமிழ்மக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த நேரத்தில் உறுதியாகச் செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தேன். சுப.வீரபாண்டியனுடன் இணைந்து 93ல் தமிழ்த் தமிழர் இயக்கம் ஆரம்பித்தோம். அவர் அப்போதே சொன்னார் "உங்க அளவுக்கு எல்லாம் எனக்கு தத்துவார்த்த சிந்தனை கிடையாது, தி.மு.க. நல்லதாக இருந்தால் அதில் போய் இணைஞ்சுக்கலாம். ஆனா இருக்கிற தி.மு.க. நல்ல தி.மு.க.வா இல்லை அதுதான் பிரச்சனை". அதன்பிறகு பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது. விவாதங்களின் முடிவில்தான் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆரம்பமானது.
நக்சலைட் வாழ்க்கையிலும் சரி, தமிழ்த்தேசியவாதியாகவும் சரி பல்வேறு ஒடுக்குமுறைகளை சந்தித்திருக்கிறீர்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
நக்சலைட் வாழ்க்கையின் போராட்ட வடிவமே ஆயுதப்போராட்டம் தான். சிறையில் இருக்கும்போதும் ஆயுதப் போராட்டத்தை நடத்த விரும்பினோம். வாய்ப்பு கிடைத்தபோது அதைத்தான் செயல்படுத்தினோம். எனவே அதற்குப் பதிலான அவர்களின் அடக்குமுறையும் அந்த வடிவத்திலே தான் இருந்தது. எவ்வளவோ சித்திரவதைகள், அடி, உதை எல்லாவற்றையும் சந்தித்து விட்டோம். அதோடு ஒப்பிடும்போது தமிழ்த் தேசியவாதியாக அடக்குமுறையை சந்திக்கவே இல்லை. ஏதோ பேசுகிறோம், தடை செய்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்ற அளவில் தான் இருக்கிறது. மக்கள் போராட்டம் அந்த அளவுக்கு வளரவில்லை. வளர்ந்தால் அடக்குமுறை வரக்கூடும்.
தமிழ்த்தேசியவாதிகள் வைக்கும் முழக்கங்களில் ஒன்று 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்பது. நீங்கள் பெரியாரைப் படித்தவர். நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து தொடங்கி பின்னால் திராவிட முன்னேற்றக் கழகம் வரை தமிழ்த்தேசியம் தான் இதற்கு அடிப்படை. எந்த ஒரு தமிழ்த்தேசியக் கட்சியும் தி.மு.க எட்டிய அந்த வெகுஜன எல்லையை எட்டவே இல்லை. சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி, சம்பத் போன்றவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் யாருமே தமிழ்நாட்டின் வெகுமக்களை, தமிழ்த்தேசிய இனத்தை தி.மு.க. அளவுக்கு சென்று சேரவில்லை.
65ல் நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் தி.மு.க.வுக்கு முக்கியப் பங்கு உண்டு. 38ல் பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். எல்லைமீட்புப் போராட்டத்தில் பெரியார் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேவிகுளம், பீர்மேடு பறிபோவதைப் பற்றியோ, திருப்பதியை இழப்பதைப் பற்றியோ அவர் கவலைப்படவே இல்லை. அதே நேரத்தில் பொருளியல் ரீதியாக வடமாநிலத்தவர், மார்வாடிகள் இங்கு ஆதிக்கம் செய்வதைப் பற்றி பெரியாருக்கு ஒரு பார்வை இருந்தது.
திராவிடம் என்ற கருத்தியலினுடைய வரலாற்று உள்ளடக்கம் தமிழ்த்தேசியம் தான். தமிழ்த்தேசியத்தின் ஒரு உருத்திரிந்த வடிவம் தான் திராவிடம்.
அண்ணா திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தபோது பெரியார் "மொழிவழி மாநிலங்கள் அமைப்பதற்கு முன்னால் நாமும் திராவிட நாடு பற்றிப் பேசினோம். இப்போதுதான் மொழிவழி மாநிலங்கள் அமைந்து விட்டதே, இப்போது எந்த மலையாளியோ, தெலுங்கனோ தனிநாடு கேட்கிறானா? எனவே தனித்தமிழ்நாடு தான் நம் நோக்கமே தவிர, திராவிட நாடு அல்ல. இந்தச் சூழ்நிலையில் திராவிட நாடு கேட்பது ஒரு மோசடி" என்று கூறினார். இன்னொரு சமயத்தில் "நான் ஆதித்தனாருடன் இணைந்து தனித்தமிழ்நாடு கேட்டு போராடுவேன்" என்றே பெரியார் குறிப்பிட்டார்.
அண்ணாவிடம் பொதுக்குழு மாநாட்டில் கோவை செழியன் "கட்சியின் பெயரை மாற்ற வேண்டும். இங்கு திராவிட நாடு எங்கிருக்கிறது? நாம் தமிழ்நாட்டில் தானே இருக்கிறோம். எனவே தமிழர் முன்னேற்றக் கழகம் என்று வைக்க வேண்டும்" என்று கேட்கிறார். "அப்படி மாற்றினால் அதைச் சொல்லியே பெரியார் நம்மை ஒழித்துத் தள்ளிவிடுவார். அதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம்" என்று அண்ணா கூறினார்.
பின்னால் தி.மு.க.விலிருந்து வைகோ பிரிந்தபோது நான் அவரிடம் கூறினேன். "இதுதான் நல்ல சந்தர்ப்பம். இதைப் பயன்படுத்தி திராவிடம் என்ற சொல்லை ஒழித்து விட்டு தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ, மறுமலர்ச்சி தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ வையுங்கள்" என்று சொன்னேன். "அய்யோ இதை வைச்சே கலைஞர் ஒழிச்சுடுவார்" என்று பதறினார் வைகோ.
'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்தியத் தேசியமும் ஒருகட்டம் வரைக்கும் முற்போக்கானது. இந்தியத் தேசியத்தை ஆதரித்த காங்கிரஸ்காரரான சோமசுந்தர பாரதியார் தமிழ்த்தேசியம் என்ற பேச்சு வந்தபோது அதை ஆதரித்து பெரியாரோடு ஒன்றுபட்டார். ராஜாஜியை ஆதரித்த ம.பொ.சியும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை ஆதரித்தார். எனவே திராவிடம் என்ற வார்த்தையும் தமிழ்த்தேசியத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தவரை அது முற்போக்கானது தான்.
"திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்" என்பதுதான் சரியாக இருக்க முடியும். திராவிடம் என்பது முந்தைய காலத்துக்குரிய ஒரு கருத்து. 'அந்த சிறைக்குள்ளேயே தான் இருக்க வேண்டும். வெளியே வரக்கூடாது' என்று சொன்னால் அது சிதைவாக மாறும்.
திராவிடம் என்ற வார்த்தை இந்தி எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, தமிழ்மண் காப்பு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பது போன்றவை தான். இதுதான் திராவிடம் என்றால் திராவிடத்தின் உள்ளடக்கம் தான் தமிழ்த்தேசியம். ஆனால் இந்த உள்ளடக்கத்தை இழந்து திராவிடம் என்ற சொல் வெறும் பதவிச்சண்டைக்கான சொல்லாக இன்று சிதைந்து சீரழிந்து கொண்டிருக்கிறது.
அதாவது நாற்காலி அரசியலில் கொள்கைகளை விட்டுவிட்டார்கள் என்று சொல்கிறீர்களா?
ஒவ்வொரு புரட்சியும் ஒரு அரசியல் புரட்சியில் இருந்துதான் தொடங்குகிறது. அரசியல் புரட்சியின் முக்கியமான கேள்வி யாருக்கு அதிகாரம் என்பது தான். அதிகாரத்தைக் கைப்பற்றாமல் சமூகத்தை மாற்ற முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றாமல் பொருளியலை மாற்ற முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றாமல் பண்பாட்டை மாற்ற முடியாது. அதிகாரம் வேண்டும் என்று நினைப்பதில் தவறே இல்லை.
ஆனால் இவர்கள் தேடும் அதிகாரம் மேலே சொன்ன மாற்றங்களை உருவாக்குவதற்கான அதிகாரம் அல்ல. 52ல் தி.மு.க. தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த அதிகாரத்தின் மூலம் திராவிட நாடு சாத்தியமில்லை என்பதால் அவர்கள் போட்டியிடவில்லை. அதே தி.மு.க.தான் 57ல் போட்டியிடுகிறது. இப்போது வரை அது நீடிக்கிறது. இடையில் கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள் ஆசை காட்டினார்கள்; இவர்கள் பலியானார்கள்.
கட்சி தேர்தலில் நிற்காத போது தொழிற்சங்கப் போராட்டம், மொழிப்போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். நிறைய இளைஞர்களை ஈர்த்தார்கள். போராட்டங்களுக்காக மாதக்கணக்கில் சிறைத்தண்டனை அனுபவித்தார்கள். தேர்தலில் போட்டியிட்ட போது பதவிகளின் மீது மோகம் வந்தது. அந்தப் பதவிகள் தங்கள் நோக்கங்களுக்கு உதவுமா என்று பார்க்கத் தவறி விட்டார்கள். அப்படியே தங்களது குறிக்கோளையும் இழந்து விட்டார்கள். இலக்கை கைவிட்டு அமைப்பைப் பாதுகாத்தார்கள். இப்போது எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு 'இங்க கொஞ்சம், டெல்லியில் கொஞ்சம் கிடைச்சா போதும்' என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள்.
உண்மையான அதிகாரமில்லாத அதிகாரத்தின் மீது கொண்ட மயக்கம் இது. இவர்கள் கையில் இருக்கிற அதிகாரத்தை வைத்துக்கொண்டு இலவசங்கள் தருவதைத் தவிர எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. தேர்தலின் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாது என்பதால் தான் நாங்கள் (தமிழ்த் தேசியவாதிகள்) தேர்தலைப் புறக்கணிக்கிறோம்.
தமிழ்த்தேசியத்தில் கலாச்சாரம் என்பதை எதன் அடிப்படையில் வரையறுக்குறீர்கள்? ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரமா?
பண்பாடு என்பதே ஒரு சமூகத்தை ஒன்றுபடுத்தியிருக்கிற விழுமியங்களின் தொகுப்பு. ஆதிக்கத்துக்கும் அடிமைக்குமான போராட்டம் அல்லது நீதிக்கும் அநீதிக்குமான போராட்டம் எப்படி சமூகத்தில் வேரூன்றியிருக்கிறதோ, அதேபோல் இரு பண்பாடுகளுக்கிடையேயான ஒரு போராட்டம் தான் ஒரு தேசிய இனப்பண்பாடாக மாறுகிறது. பிறப்பினால் வேற்றுமை பாராட்டுவதையும், சாதியத்தையும் நியாயப்படுத்துகிற பண்பாடு ஒருபக்கம். மற்றொரு பக்கம் இதை எதிர்த்து பிறப்பினால் வேற்றுமை இல்லை என்று சொல்கிற பண்பாடு. இந்த இரண்டும் இன்றோ, நேற்றோ முளைத்து விடவில்லை. நம்முடைய வரலாறு நெடுகிலும் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதன் ஒருபக்கம் தான் திருவள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை நீடிக்கிறது. மற்றொரு பக்கம் பார்ப்பன கருத்தியல்கள்.
முற்போக்கான தமிழ்த்தேசிய பண்பாடு என்பதன் அடையாளமாக குறள் நெறியை முன்வைக்கிறோம். குறள்நெறி என்பது சமத்துவம், பகிர்வு, அன்புடைமை என்பதை அடிப்படையாகக் கொண்டது. நிலையாமை தான் அதன் மெய்யியல். இதைத்தான் நாம் தமிழ்த்தேசிய பண்பாடு என்கிறோம்.
இது சாதீயத்திற்கு, மதவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிற ஒரு பண்பாட்டு நிலைப்பாடு. தமிழ்த்தேசிய பண்பாடு விரிவடைவதன் ஒரு பகுதிதான் சாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெறுவது. எழுத்துக்களின் வடிவங்கள், உடைகள் என எல்லாவற்றிலும் காலத்திற்கு தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்த மாற்றங்கள் சமத்துவப் பண்பாட்டின் இழைகளாக இருக்க வேண்டும். சமத்துவப் பண்பாட்டின் மாற்றங்களுக்கு இணையாகத் தான் இந்தப் பண்பாடு வளர வேண்டும்.
பல்வேறு பண்பாடுகளும் ஒரு தமிழ்த்தேசிய பண்பாட்டோடு இணைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இணைவுகளை அங்கீகரிக்கிற ஒரு பண்பாட்டைத் தான் நாம் தமிழ்த்தேசிய பண்பாடு என்கிறோம். தமிழ் நாட்காட்டி வைத்திருப்பதால் அதையே தான் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. உலகம் முழுவதும் பயன்படுத்தும் நாட்காட்டியை நாமும் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் நம்முடைய மாதங்கள், வருடங்கள் போன்றவற்றையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரை, விளையாட்டுகள் சமூகத்தின் பொருள் உற்பத்தி முறையில் இருந்துதான் வருகின்றது. விலங்குகளோடு இரண்டு கால் விலங்குகளாக மனிதன் இருந்த நிலை மாறி கால்நடைகளை உழவுக்குப் பயன்படுத்துவது, தன்னுடைய பயணத்திற்குப் பழக்கப்படுத்துவது என மாற்றத் தொடங்கிய காலத்தில் தான் ஜல்லிக்கட்டு தொடங்கியிருக்கும். பிரபுத்துவ, சாதீய சமூகத்திற்கு முன்னதாகவே ஜல்லிக்கட்டு இங்கே இருந்து வந்திருக்கிறது.
நிலப்புரபுத்துவ சமூகத்தின் ஒரு கூறாகத் தான் ஜல்லிக்கட்டு இருந்திருக்கிறது என்ற வாதமும் வைக்கப்படுகிறது. அதாவது தன்னிடமிருந்த அடிமைகளையும், மாடுகளையும் நிலப்பிரபுக்கள் மோதவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் ஜல்லிக்கட்டு என்ற ஒரு கூற்றும் உள்ளதல்லவா?
ஒவ்வொரு பழக்கமும் அந்தந்த காலத்தின் நிகழ்வை உள்வாங்கித்தான் மாறும். ஆடு, கோழி பலியிடுவது என்பது நீண்டகாலமாக நம் மக்களின் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இடையில் நிலப்புரபுத்துவ காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது அடிமைகள் ஆடு, கோழிகளை நிலச்சுவான்தார்கள் வீட்டில் கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்தது. தஞ்சை, திருவாரூரின் ஒரு சில பகுதிகளில் இந்தப் பழக்கம் இப்போதும் தொடர்கிறது. பொங்கல் பண்டிகையிலும் நிலப்பிரபுத்துவம் வந்து விட்டது. அதற்காக பொங்கலை நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?
சமூகத்தின் உற்பத்திப் பெருக்கமும், ஆதிக்க சக்திகளும், அதன் கருத்தியலும் தேசியப் பண்பாட்டில் கலப்பதை நாம் அடியோடு தடுத்து விட முடியாது. இதன் அடிப்படையில் தான் ஜல்லிக்கட்டையும் பார்க்க வேண்டும். இதிலிருக்கிற பிரபுத்துவத்தை ஒழிக்க வேண்டும். எல்லோரும் கலந்து கொள்ளும்படியும் பாதுகாப்பானதாகவும் அதை மாற்ற வேண்டும். நம்முடைய இயக்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கனவே இருக்கிற பழக்கம் அது, அப்படியே தொடரட்டும், காலப்போக்கில் அது மறையட்டும் என்று தான் சொல்கிறேன். அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்த் தேசியவாதிகள் கற்பு என்ற பெயரில் பெண்களை மறுபடியும் வீட்டுக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு 'குஷ்பு-கற்பு' பிரச்சினையின்போது பெண்ணியவாதிகளால் வைக்கப்பட்டது, அது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஒவ்வொரு கருத்தும் சமூகத்தில் எப்படி வந்தது, யாரைப் பாதுகாக்க வந்தது என்று பார்க்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு சமூகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் அவளைப் பாதுகாக்க கற்பை வைத்தார்கள்.
எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய விழுமியங்களோ, கருத்துக்களோ கிடையாது. ஒவ்வொரு கருத்தும் ஒரு காலத்திற்குப் பொருந்தும்; இன்னொரு காலத்திற்குப் பொருந்தாது. கலையும் இலக்கியமும் கடவுளையும், அரசரையும் புகழ்ந்து பாடுவதற்கே என்ற நிலையில் இருந்தபோது 'கலை கலைக்காகவே, இலக்கியம் இலக்கியத்துக்காகவே' என்ற முழக்கம் வந்தது. அப்போது அது மிகவும் முற்போக்காகக் கருதப்பட்டது. பின்னர் அதுவும் பின்னால் தள்ளப்பட்டு 'கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே' என்ற கருத்து முற்போக்குக் கருத்தாக இப்போது இருக்கிறது.
இப்படித்தான் கற்பும். பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரு காலகட்டத்தில் பாதுகாப்புக்கு ஒருவன் தேவை என்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட கருத்துதான் அது. ஆனால் இன்று அது பெண்ணை அடிமைப்படுத்துகிற கருத்தாக மாறிவிட்டது. எனவே அதை எதிர்ப்பதைப் பற்றி எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அது ஜனநாயகத்தின் பெயரில் சமூக உறவுகளில் அராஜகத்தை நுழைப்பதாக இருக்கக் கூடாது.
குஷ்பு முன்மொழிந்த கருத்து அராஜகம். அதனால் அதை எதிர்த்தோம். அதில் ஆணாதிக்க சிந்தனை எதுவும் கிடையாது. எங்கெல்ஸ் "குடும்பம் என்ற அமைப்பில் எனக்கு உடன்பாடு கிடையாது. குடும்பம் என்ற அமைப்பே ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான். ஆண், பெண் இருவருக்கும் பாலியல் சுதந்திரம் வேண்டும். அது குடும்பங்களில் இல்லை." என்று குறிப்பிடுவார். ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. தேசிய இனத்தின் சமூக கட்டமைப்பையே அது சீரழித்து விடும்.
ஒரு ஒழுங்கை எதிர்ப்பது என்பது இன்னொரு ஒழுங்கை கட்டமைப்பதற்காக; ஒழுங்கே இல்லாமல் எப்படியும் போகலாம் என்பதற்காக அல்ல.
தமிழ்த் தேசியவாதிகள் ஆரியமயமாகிவிட்ட சிறுதெய்வ வழிபாட்டை ஆதரிப்பது குறித்து?
ஒரு சமூகம் என்பது ஒரு தனிமனிதனோ, சில மனிதர்கள் இணைந்தோ, அரசனோ திட்டம் போட்டு உருவாக்குகிற செயல் அல்ல. ஒரு தேசியச் சமூகம் என்பது வரலாற்று வழியில் மலர்ந்து, நிலைத்து நிற்பது. இருக்கிற எதார்த்தங்களில் இருந்து தான் ஒரு இயக்கம் தோன்ற வேண்டியிருக்கிறது. சிறுதெய்வ வழிபாடு ஏன் தோன்றியது, எப்படி வளர்ந்தது என்பதெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்.
முருக வழிபாடு எப்படித் தோன்றியது, குலத்தலைவர்கள் எப்படி தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள் என்பதெல்லாம் ஆராய்ச்சிக்குரியது. இப்போதைய சூழ்நிலையில் இன்றைய அரசியல் தலைவர்கள் நாளை கடவுளாக்கப்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று வேண்டுமானால் நாம் யோசிக்கலாம். இந்த வழிபாட்டு முறைகள், அதில் வெளிப்படுகிற மெய்யியல் சிந்தனைகள், அதில் வெளிப்படுகிற போராட்டப் பதிவுகள் இதையெல்லாம் ஒரு தேசிய இனத்தினுடைய வரலாற்று ஆழங்களிலிருந்து வளர்ந்து வருபவை.
மார்க்சியம், தத்துவம் என எல்லாவற்றிலும் மாவோ தேர்ச்சி பெற்றவராய் இருந்தாலும் அவரது வெற்றிக்கு முக்கியக் காரணம் சீனாவின் வரலாற்றை மிகத்தெளிவாக அவர் புரிந்து வைத்திருந்தது தான். லெனினும் ரஷ்யாவின் வரலாற்றில் அதிக தேர்ச்சி பெற்றிருந்தார். இங்குள்ள தலைவர்களுக்கு அந்தப் புரிதல் இல்லை என்பது வருத்தமான செய்திதான்.
நம்முடைய வரலாறு என்பதை திருவள்ளுவரில் தொடங்கி முருகவழிபாடு, வள்ளலார் என எல்லாவற்றில் இருந்தும் தான் ஆரம்பிக்க வேண்டும். அதற்காக முருகனை தூக்கிக்கொண்டு ஊர்வலம் போக வேண்டும் என்று சொல்லவில்லை. சிறுதெய்வ வழிபாடு குறித்து விவாதிக்கலாம், ஆராய்ச்சி செய்யலாம் ஆனால் அதுவே சமூக மாற்றத்திற்குக் காரணமாக இருந்து விடாது.
மாவோ குறித்துப் பேசுவதால் இந்தக் கேள்வி. இங்குள்ள நக்சலைட்டுகள் நம் சமூக சூழ்நிலையை உள்வாங்காமல் செயல்படுவதாக ஏற்கனவே குறிப்பிட்டீர்கள். இப்போதைய நக்சலைட்டுகளின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?
நம் இந்தியச் சமூகம் பற்றிய, தமிழ்ச்சமூகம் பற்றிய, ஆளும் வர்க்கம் பற்றிய பார்வைகள் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறாக உள்ளது. எனவே நக்சலைட்டுகள் என்ற ஒரே வார்த்தையின் கீழ் எல்லாரையும் கொண்டு வர முடியாது. இப்போதைய நக்சலைட்டுகள் மரபுவழிக்கட்சியின் பார்வையில் இருந்து தங்களை முறித்துக்கொண்டு வந்துவிடவில்லை. ஆனால் ஒரு சிலர் அந்த பார்வையை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
ஆரம்பத்தில் சாரு மஜூம்தார் சீனாவை அப்படியே காப்பியடித்தார். மாவோ முதலாளிகளை தரகு முதலாளிகள் என்றார். இவரும் அதே வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் சீனா ஒரு அரைக்காலனிய நாடு என்றார், சாருவும் இந்தியாவை அரைக்காலனிய நாடு என்றார். மாவோ விவசாயப்புரட்சியை கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்றார். இவரும் அதையே சொன்னார். சீனா அப்போது தொழிற்வளர்ச்சியில் பின்தங்கியிருந்தது அதனால் அங்கு தொழிற்சங்கங்கள் இல்லை. இங்கிருந்த தொழிற்சங்கங்களையும் சாரு மஜூம்தார் கலைக்கச் சொன்னார். அங்கு நாடாளுமன்றம் இல்லை, அதனால் மாவோ தேர்தலில் போட்டியிடவில்லை. இங்கு நாடாளுமன்றம் இருந்தும் இவர்கள் போட்டியிடவில்லை.
இந்தப் பார்வையில் இருந்து முழுமையாக இப்போதைய இயக்கவாதிகள் விடுபட்டு விட்டதாக எனக்குத் தோன்றவில்லை. நான் 'சுவருக்குள் சித்திரங்கள்' தொடர் எழுதும்போது எம்.எல். தோழர்கள் சிலர் 'நக்சலைட்டுகள் பற்றி எழுத வேண்டாம், அது எதிர்வினையை ஏற்படுத்தி விடும்' என்று கூறினார்கள். 'அப்படி எதிர்வினை ஏற்பட்டால் மகிழ்ச்சிதான், ஏனெனில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும்போது, பல்லாயிரம் பேர் ஓர் இயக்கத்தை நம்பி எல்லாவற்றையும் துறந்து அந்த இயக்கத்தில் சேரும்போது அதன் தலைவர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருக்கக்கூடாது, பொறுப்புணர்வோடு அந்தப் போராட்டத்தை நடத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஓர் இயக்கத்தை தவறாக வழிநடத்துபவர்களை அவசரக் குடுக்கைகள் என்று சொல்வதில் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை' எனக் கூறினேன்.
நக்சலைட்டுகள் இப்போதும் யாரையாவது திட்டுவது, சொன்னதையே சொல்வது என்றுதான் இருக்கிறார்கள். இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவே இல்லை. இன்றுவரை எந்த ஆயுதப் போராட்டமும், புரட்சியும் நடந்து விடவில்லை. அதற்காக அவர்களை நான் குறைகூறவில்லை. நிஜ வாழ்க்கை அதை அங்கீகரிக்காதபோது அதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி.
சமூகத்தின் உணர்வுநிலையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டிருக்கும்போது, அந்த மாற்றத்தை செயல்படுத்த அரசு எந்திரம் தடையாக இருக்கும்போது ஆயுதம் உதவும். ஆனால் சமூகத்தின் உணர்வு நிலையையே மாற்றுவதற்கு ஆயுதம் உதவாது. இதுபோன்ற செயல்களை லெனின் 'செயலற்ற தீவிரவாதம்' என்று குறிப்பிடுவார். அந்த செயலற்ற நிலையைத்தான் இப்போதைய நக்சலைட்டுகளிடம் நான் பார்க்கிறேன்.
சமீபத்தில் தமிழ்த் தேசியவாதிகள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு விருது வழங்கி கவுரவித்தது. அதே மேடையில் மகாலிங்கம் சமஸ்கிருதத்தை ஆதரித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து...
மகாலிங்கத்திற்கு விருது கொடுத்தது மிகப்பெரிய தவறு. அதில் என் பங்கு எதுவும் இல்லை. நெடுமாறனுடைய முடிவு அது. எனக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டால் நான் அங்கு சென்றிருக்கவே கூடாது அல்லது அங்கிருந்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். சென்றபிறகு அந்த மேடையில் அழைத்தவர்களையே தாக்கிப் பேசுவது நாகரீகமாக இருக்காது. சமஸ்கிருதத்தின் முதன்மை பற்றி பொள்ளாச்சி மகாலிங்கம் பேசியதை வைகோ அந்த மேடையிலேயே மறுத்துப் பேசினார்.
மொழிக்கொள்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. ஒரு மொழிக்கொள்கை தான் சரி என்றும், இருமொழிக் கொள்கையால் ஆபத்து இல்லை என்றும் இருவேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
தேசிய இனம் என்பதே ஒருமொழி அடிப்படையிலானது. எனவே தம்மொழி முதன்மை பெற வேண்டும் என்கிற போதே ஒருமொழிக்கொள்கை தான் சரி. ஆங்கிலத்தை தேவை கருதி பயன்படுத்துவதில் தவறே இல்லை. ஆனால் அதற்கு இருமொழிக் கொள்கை என்ற பெயர் எங்கிருந்து வந்தது? இருமொழிக்கொள்கை என்று வரும்போதே தமிழையும் ஆங்கிலத்தையும் சம இடத்தில் வைக்கிறோம் என்றுதானே அர்த்தம்.
காங்கிரஸ்காரர்கள் சொல்லும் மும்மொழிக்கொள்கை என்பது இந்தி ஆதிக்கம் தான். அதேபோல் இருமொழிக்கொள்கை என்பது ஆங்கில ஆதிக்கக் கொள்கைதான். அதாவது மும்மொழிக்கொள்கை என்பது இந்தி என்கிற ஒருமொழிக் கொள்கை. இருமொழிக்கொள்கை என்பது ஆங்கிலம் என்கிற ஒருமொழிக் கொள்கை.
எல்லா பாடத்திட்டங்களும் தமிழில் இல்லாத நிலையில் நாம் ஆங்கிலத்தைப் புறக்கணித்து விட்டால் தமிழ் மாணவர்கள் பின்தங்கி விடுவார்கள் என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறதே?
ஆங்கிலத்தில் இருக்கும்போது அதை அப்படியே படிப்பதில் தவறில்லை. அதை தமிழில் மாற்றுவதற்கு இங்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? பொறியியல், மருத்துவ படிப்புகள் இப்போது ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. அதை தமிழில் கொண்டு வரும்வரை அந்தக் கல்லூரிகளை மூடி விடுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. அதைத் தமிழில் கொண்டு வருவதற்கு என்ன தடை என்று தான் கேட்கிறோம்.
தமிழ்த் தேசியமே இறுதி இலக்கு என்று இருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகள் தனித்தனி அமைப்புகளாக செயல்படுவது ஏன்?
அமைப்புக்கள் என்பதே கருத்துக்களின் வெளிப்பாடு தான். சுபவீயின் வற்புறுத்தலின் பேரில் தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் முதலில் எழுந்த கேள்வியே அமைப்புகளின் குறிக்கோள் என்ன என்பது தான். நாங்கள் தேசிய விடுதலை என்றோம், பெ.மணியரசன் தன்னுரிமை என்றார். சுபவீயோ, 'தன்னுரிமையோ, தேசிய விடுதலையோ, அல்லது வேறொன்றோ எதை வேண்டுமானாலும் குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் நெடுமாறன் தலைமையில் ஒன்றிணைந்து ஒரே இயக்கமாக செயல்பட வேண்டும்' என்று கூறினார்.
விவாதம் நீண்டுகொண்டே போய் இறுதியில் பொதுமுழக்கமாக 'தமிழ்த்தேசிய இறையாண்மை' என்பதை வைத்துக் கொள்ளலாம் என முடிவானது. முதலில் எல்லா அமைப்புகளும் இணைந்து இயங்குவது, பின்னர் அதை கூட்டமைப்பாக மாற்றி, காலப்போக்கில் ஒரே அமைப்பாக கொண்டு வந்து விடலாம் என முடிவு செய்தோம். நெடுமாறன், 'நாம் மூன்று அமைப்புகள் மட்டும் இணைந்தால் போதாது, தமிழ்நாட்டில் நம்மைப்போல் எண்பது அமைப்புகள் உள்ளன. அனைவரும் இணைந்து இயங்கலாம்' என்றார்.
இந்தக் கருத்தில் எனக்கு மாறுபாடு இருந்தது. 'இந்த மூன்று அமைப்புகள் மட்டும்தான் தீவிரமாக வேலை செய்யும். மற்றவர்களிடம் அந்தத் தீவிரம் இருக்காது. எனவே தெருமுனையில் மன்றம் வைத்திருப்பவர்களை எல்லாம் நம்முடன் இணைத்துக் கொண்டால் அது அரசியல் இயக்கமாக இருக்காது' என்று கூறினேன்.
என்னுடைய முக்கியமான கோரிக்கையாக தேர்தல் புறக்கணிப்பு இருந்தது, பெ.மணியரசனுக்கு அதில் உடன்பாடு இருந்தது. அதை நெடுமாறன் ஒத்துக்கொள்ளவில்லை. 'நமக்கு ஆதரவான சக்திகள் போட்டியிடும்போது அதை ஆதரிக்க வேண்டும். பிற்காலத்தில் நாமே போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார். இப்படி ஒரு கருத்தை வைத்திருப்பவரோடு எப்படி ஒன்றுசேர முடியும்? பார்க்கிறவர்களுக்கு அவர் தமிழ்த்தேசிய பெருந்தலைவராக இருக்கலாம்; பத்திரிகைகள் அவருக்கு முக்கியத்துவம் தரலாம். அதற்காகவே எல்லோரையும் ஒன்று சேர்த்து விட முடியாதே!
அதே நேரத்தில் தனித்தனி கொள்கைகள் இருப்பதாலேயே இந்தி எதிர்ப்பு, தமிழ்மொழிப் பாதுகாப்பு போன்ற கோரிக்கைளுக்காக நாங்கள் ஒன்று சேர்ந்து போராடாமலும் இல்லை.
புதுவையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் எனக்கு முன்னால் பேசிய ஒரு தோழர், 'எல்லாக் கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்' என்று குறிப்பிட்டார். நான் பேசும்போது, 'எதற்காக எல்லாக் கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். எல்லாக் கம்யூனிஸ்டுகளும் ஒன்று சேர்ந்து அது ஒரு சிறு குழுவாக மக்கள் மத்தியில் இருப்பதற்குப் பதிலாக, ஒரு கம்யூனிஸ்டு கட்சி வெகுமக்களைத் திரட்டி புரட்சி செய்தால் போதுமானது. அப்படித்தான் உலக வரலாற்றில் மாற்றங்கள் சாத்தியமாகியிருக்கிறது' என்று குறிப்பிட்டேன்.
அதுபோல தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டில் நூறுபேர் கொண்ட ஒரு குழுவாக இருப்பதற்குப் பதிலாக, தமிழ்த் தேசியவாதிகளில் ஒழுங்காகச் செயல்படுகிற பத்துபேர் தமிழ்த்தேசிய சிக்கலை சரியாகப் புரிந்து கொண்டு மக்களைத் திரட்டி மாற்றம் கொண்டு வர முடியுமானால் அதுதான் முக்கியமானது. அதற்கு நீங்கள் குறிப்பிட்ட இந்த சேர்க்கை முரண்பாடாகத் தான் இருக்கும்.
இதில் எனக்கு சுபவீயோடும் முரண்பாடு இருக்கிறது. சமூகநீதி மாநாட்டில் பேசும்போது, 'மண்டல் குழுவை நாம் ஆதரிக்கிறோம், வடநாட்டில் எதிர்க்கிறார்கள். அதை எல்லோரும் இணைந்து தான் அமல்படுத்த வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது. நமக்கு உடன்பாடு இருந்தாலும் அதை நாம் நிறைவேற்றிக் கொள்வதற்கு அனைவருக்கும் ஒரே அரசியல் அமைப்புச் சட்டம் என்ற அமைப்பு தான் தடையாக இருக்கிறது. எனவே சமூகநீதியுடன் கூடிய தனி அரசு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்று பேசினேன்.
'விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தத் தீர்மானம் தேவையற்றது, தீர்மானத்தை உடனடியாக கைவிடவும்' என்று சுபவீ கோரினார். மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம், தமிழ்வழிக்கல்வி, இட ஒதுக்கீடு இந்த மூன்று கோரிக்கைகளும் போதுமானது என்பது அவரது கருத்து. இப்படி கருத்து வேறுபாடுகளை வைத்துக் கொண்டு தமிழ்த்தேசியம் என்ற பெயர் இருப்பதாலேயே நாங்கள் அனைவரும் எப்படி இணைந்து இயங்க முடியும்? தமிழ்த்தேசியம் என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல, அது ஒரு அறிவியல் கண்ணோட்டம். சமூக மாற்றம் பற்றிய ஓர் அறிவியல் பார்வை. அந்த அறிவியலை எந்த ஒற்றுமைக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.
தமிழ்மொழி பாதுகாப்பு, ஈழப் பிரச்சனை போன்றவற்றின் வழியாக பி.ஜே.பி. போன்ற மதவாத இயக்கங்கள் தமிழ்த் தேசியவாதிகளோடு இணைந்து செயல்பட முயற்சிக்கிறார்கள் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை? சமீபத்தில் கூட ஈழப்பிரச்சனைக்காக நெடுமாறனும் இல.கணேசனும் இணைந்து பணியாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டு கூட எழுந்தது..
நாங்கள் பி.ஜே.பி.யோடு எந்தக் காலத்திலும் இணைந்தது கிடையாது. நெடுமாறன் இல.கணேசனோடு சேர்ந்து ஜெயலலிதாவுக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் கொடுத்த விழாவில் போய் பேசினார். 'ராஜாஜியைப் போல் திறமையானவர் ஜெயலலிதா' என்று பாராட்டிப் பேசினார். அது அவருடைய கருத்து. அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. பி.ஜே.பி. என்பது இந்திய தேசியத்தின் படுபிற்போக்கான ஒரு வடிவம். இந்துத்துவ, பார்ப்பனீய, சாதி ஆதிக்கத்தை கட்டி நிறுவுகிற ஒரு அமைப்பு. அவர்களோடு நமக்கு எந்தவிதமான அரசியல் உறவோ, அமைப்பு உறவோ இருக்க முடியாது. ஈழ விடுதலையை பி.ஜே.பி.யால் ஒருபோதும் ஆதரிக்கவே முடியாது.
அதே நேரத்தில் பி.ஜே.பி.யின் பின்னால் இருக்கிற தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், தமிழர்களுக்கும் நமக்கும் எந்த உறவும் இல்லை என்றும் சொல்ல முடியாது. ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் வந்தபோது பி.ஜே.பி.யும், கம்யூனிஸ்டுகளும் இணைந்து போராடினார்கள். தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் ஒன்றிணைந்தார்கள். பி.ஜே.பி.யின் எந்த கொள்கையையும் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அதே நேரத்தில் நியாயமான கோரிக்கைக்காக நம்முடன் இணைந்து போராட வரும்போது புறக்கணிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. அதற்கு நாம் பொறுப்பேற்கவும் முடியாது. பி.ஜே.பி.யோடும் சரி, காங்கிரசோடும் சரி எங்களுக்கு எந்த உறவும் கிடையாது.
திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது?
கோரிக்கைகள், செயல்பாடுகள் அடிப்படையில் பெரியார் திராவிடர் கழகத்தோடு எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஈழப்போராட்டம், தமிழ்த்தேசிய கோரிக்கைகள் போன்றவற்றில் அவர்கள் எங்களோடு உடன்படுகிறார்கள். 65ல் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தது போன்ற பெரியாரின் மொழிக்கொள்கைகளோடு நாங்கள் வேறுபடுகிறோம். அவர்களுக்கு அது தெரிந்தாலும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் தமிழ்வழிக்கல்வி, இடஒதுக்கீடு போன்ற போராட்டங்களில் அவர்கள் தீவிரமாகவே இயங்கி வருகிறார்கள்.
திராவிடர் கழகத்தோடு எங்களுக்குப் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் எங்களைத் தீவிரவாதிகளாகவே பார்க்கிறார்கள். அவர்களின் தொண்டர்களோடு நாங்கள் பேசக்கூடாது என எதிர்பார்க்கிறார்கள்.
ஈழத்தில் போராட்டம் மூலமே விடுதலை சாத்தியம் என்பது உங்களைப் போன்றவர்களின் கருத்து. அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று சிலரும், ஒருங்கிணைந்த இலங்கைதான் சரி என்று சிலரும் பேசி வருகின்றனர். இதற்கான அடிப்படை எது?
குறிப்பிட்ட மக்கள் இனத்தினுடைய பிரச்சனை அந்த மக்கள் இனத்தால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மையான ஜனநாயகம். தங்கள் கொள்கை என்ன, இந்தியாவுக்கு எது பொருந்தும் என்பதை வைத்துக்கொண்டு ஈழப்பிரச்சனையை பார்க்கக்கூடாது. தமிழீழ மக்கள் ஒன்றுபட்ட இலங்கையைத் தான் விரும்புகிறார்கள் என்று இவர்களால் மெய்ப்பிக்க முடிந்தால் அதற்கு ஆதரவாகப் போராடலாம்.
ஈழ மக்களின் வரலாறு, அவர்களின் சிக்கல்கள், நடத்திய போராட்டங்கள் எதைப் பற்றியும் பேசாமல் வெறுமனே ஒன்றுபட்ட இலங்கை என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இங்கு போனஸ் 12 சதவீதமா, 13 சதவீதமா என்று போராட்டம் நடத்தி விட்டு தங்கள் உயிருக்காகவும், உரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் மக்களைப் பார்த்து 'பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வது எப்படி சரியாக முடியும்?
புலிகளுக்கு சரியான அரசியல் சித்தாந்தமோ, அமையப் போகிற ஈழம் குறித்த தெளிவான பார்வையோ இல்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. 'புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிற பகுதிகளில் சாதி ஆதிக்கமும், பெண்ணடிமைத்தனமும் அதிகமாக இருக்கிறது. அதுகுறித்த பார்வை அவர்களிடம் இல்லை' என்ற கருத்தும் ஈழ எழுத்தாளர்கள் ஷோபாசக்தி போன்றவர்களால் முன்வைக்கப்படுகிறது. இதுகுறித்து?
புலிகள் வெளியிட்டிருக்கிற ஆவணங்கள், அறிக்கைகள் எதையும் படிக்காமல் மேம்போக்காக கூறும் குற்றச்சாட்டு இது. சாதி ஒழிப்புப் போராட்டத்தில், வர்க்கப் போராட்டத்தில் உண்மையான ஆர்வத்தோடு இயங்குபவர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்தில் தான் இருக்கிறார்கள். சாதி குறித்து தெளிவான பார்வை இருந்தால் அதை ஒரே நாளில் சட்டம் போட்டு தடுத்துவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
அதிகாரத்தை கைப்பற்றிய பின்பு, சாதி ஒழிப்பில் முக்கிய கவனம் செலுத்திய பின்னாலும் அது பண்பாட்டுத் தளத்தில் வெகுகாலம் நீடிக்கும். புலிகள் சாதிமறுப்பை தீவிரமாக கடைப்பிடிக்கிறார்கள். சொந்த சாதிக்குள் திருமணம் செய்வதை அமைப்புக்குள் தடை செய்திருக்கிறார்கள்.
அகநிலையில் திட்டமிட்டு அந்த அமைப்பு சாதி ஒழிப்புக்கு போராடுவது ஒருவகை, புறநிலையில் அவர்கள் நடத்தும் போராட்டமே சாதி ஒழிப்புக்கு வகை செய்வது இன்னொரு வகை. புரட்சிகரமான போராட்டம் என்பது பகைவனுக்குள் இருக்கும் நஞ்சை அழிப்பது மட்டுமல்ல, நமக்குள் இருக்கும் நஞ்சையும் அழிப்பது என்று மாவோ குறிப்பிடுவார்.
ஒரு பதுங்கு குழிக்குள் இருந்து போராடுபவன் பதுங்கு குழிக்குள் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாது. இந்தியப் படை இலங்கைக்குள் நுழைவது வரை பெண்கள் படை என்ற ஒன்று அங்கு இல்லை. காயத்திற்கு மருந்து போடுவது, சமைப்பது, உதவி செய்வது போன்றவற்றைத்தான் பெண்கள் செய்து வந்தார்கள். இந்தியப் படையிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குத் தான் அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எல்லைத்திறப்புப் போரை பெண்கள் தான் தலைமை தாங்கி நடத்தினார்கள். அதற்கு மரியாதை தரும் விதத்தில் கிளிநொச்சியில் வெற்றிக்கொடியை விதூஷா தான் ஏற்றினார். பெண்ணை அடிமையாக நடத்துகிற இயக்கத்தினால் இதை சாதிக்க முடியுமா? ஒரு பெரிய மாற்றம் ஈழச்சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறது. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் உடைந்து நொறுங்கி இருக்கிறது.
போர்த் தாக்குதலால் வீடுகளை விட்டு வேறு நாடுகளுக்கு குடியேறிய உயர்ஜாதி மக்களின் வீடுகளை புலிகள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள். அங்கிருந்த பொருட்களை குறிப்பெடுத்து, அவர்கள் என்றாவது வந்தால் திருப்பிக் கொடுப்பதற்காக பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். அதே நேரத்தில் அந்த வீடுகளை வசிக்க இடமில்லாதவர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள்.
ஈழப்படையில் இருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியவர்களும், இலங்கை உளவுத்துறையும் அந்த மக்களிடம் பரப்புகிற முக்கியமான செய்தியே இதுதான், 'உங்கள் வீடுகளில் கீழ்ச்சாதியினரை கொண்டு வந்து குடியமர்த்தியுள்ளார்கள்'. எனவே விடுதலைப்புலிகள் சாதியைப் பாதுகாக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் அவதூறு தான்.
என்னைப் பொறுத்தவரை ஷோபாசக்தி போன்றவர்களெல்லாம் பைத்தியங்கள். அவர்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. புலிகளுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்பவர்கள் அரசின் கைக்கூலிகளாக கூட இருக்கலாம்.
சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் குறித்துப் பேசுவதால் இந்தக் கேள்வி. சாதி, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக தீவிரமாகப் போராடியவர் பெரியார். அவரை உங்கள் அமைப்புக்கு எந்த அளவுக்கு அணுக்கமானவராகப் பார்க்கிறீர்கள்?
அவரை தமிழ்த் தேசியத்தின் தந்தை என்ற இடத்தில் தான் வைத்திருக்கிறோம். தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என்பது பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தான். ஒரு இனம் தன்னைத்தானே அடையாளம் காண்கிற போராட்டத்தின் தொடக்கமாக அது இருந்தது. அதே நேரத்தில் ஒரு தேசிய இனத்தின் பார்வையாக மட்டும் இல்லாமல் அதற்குள் இருக்கிற சாதியத்தையும் அது எதிர்த்தது.
சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் என்பதே பார்ப்பன எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும் தான். கடைசிவரையில் அவர் அதில் உறுதியாக இருந்தார். 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்தாலும் அரசியல் இயக்கம் எதையும் அவர் கட்டவில்லை. அமைப்புக்குள் ஜனநாயகத்தன்மையை கட்டமைக்காதது ஒரு மிகப்பெரிய குறை. தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற நிலையை அவர் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகத் தான் வீரமணி போன்றவர்கள் இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தெளிவான கருத்தியலோ, அறிவியல் கண்ணோட்டமோ பெரியாரிடம் இல்லாததால் தான், அவர் பெயரைச் சொல்லி ஜெயலலிதாவால் அரசியல் நடத்த முடிகிறது. இவ்வளவு குறைகள் இருந்தாலும், அந்தக் குறைகளை வரலாற்று, சமூகப் பின்னணியோடு நாம் புரிந்து கொள்கிறோம். அவரோடு நாம் நிறுத்திக்கொள்ளப் போவதும் இல்லை. பெரியார் தந்த புத்தி போதும், சொந்தப் புத்தி வேண்டாம் என்பதில் நமக்கு உடன்பாடு இல்லை. பெரியாரிடம் பக்தி எதுவும் நமக்குக் கிடையாது. அவரையும் நாம் கூர்மையாக விமர்சிக்கிறோம்.
ஆனால் நாம் விரும்பக்கூடிய சமூகநீதி தமிழ்த்தேசத்தை முன்வைத்தவர் அவர்தான். அவரிடமிருந்து தான் நாம் அதை விரிவாக்குகிறோம், உள்ளடக்கத்தை சுருக்குகிறோம், அரசியல் இயக்கமாக மாற்றுகிறோம். அந்த அர்த்தத்தில் தான் அவரை தந்தை என்கிறோம்.
அதே நேரத்தில் தந்தை, அண்ணா போன்ற பட்டப் பெயர்கள் எல்லாம் தங்களை யாரும் எதிர்த்து விடக்கூடாது என்பதற்காக திராவிட இயக்கம் வைத்துக்கொண்ட சூழ்ச்சி என்பதையும் உணர்ந்திருக்கிறோம். அண்ணா சொல்றேன், அப்பா சொல்றேன் என்றால் யாரும் எதிர்த்துப் பேசிவிட மாட்டார்கள். ஜனநாயக மறுப்புக்காக தரப்பட்ட பட்டங்கள் தான் தந்தையும், அண்ணாவும். நான் அந்தக் கோணத்தில் அவரை தந்தையாகப் பார்க்கவில்லை.
இப்போதைய சூழ்நிலையில் தமிழ்த்தேசியம் எந்த அளவுக்கு சாத்தியம்? அதன் செயல்திட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன?
சாத்தியம், சாத்தியமில்லை என்ற கோணங்களில் அதை அணுகுவது தவறு. பழக்கத்தில் ஊறியவர்களாக மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுகிற வர்க்கங்கள், அரசுகள் இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதைத்தான் பிரிட்டிஷ் அரசும் செய்தது. 'உங்களுக்கு ஆளுகிற தகுதி வரவில்லை, இந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உங்களை ஆளும் பொறுப்பை சரியாக செய்யும், இதுதான் நிரந்தரம்' என்று கூறி மக்களை நம்ப வைத்து விட்டார்கள்.
இந்தியா தான் இறுதி என்ற கருத்து இந்திய வல்லாதிக்க ஆளும் வர்க்கத்தின் கருத்து. ஆனால் இந்தக் கருத்தை புரட்சியாளர்களையும் நம்ப வைத்து விட்டார்கள். இந்தியா என்ற ஒன்று இல்லாமல் போவதை அவர்களால் கற்பனை செய்யவே முடியவில்லை. அதனால் தான் அன்புக்குரிய இந்தியா, பெருமைக்குரிய பாரததேசம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் ஆளும் வர்க்கத்தின் வெற்றி.
தமிழ்த் தேசியம் சாத்தியமா, இல்லையா என்பதை விட தேவையா, இல்லையா என்பதுதான் முக்கியமான கேள்வி. சாத்தியமற்றதாகத் தோன்றுகிற ஒன்று தேவையென்றால் அதை சாத்தியமுள்ளதாக மாற்றுவதற்கு போராடுவது தான் நம்முடைய வேலை. தமிழ்த்தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா, இல்லையா? அடிமைப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு விடுதலை வேண்டும். விடுதலை தேவை என்றால் சாத்தியமில்லாமல் இருக்கிற அதை சாத்தியமுள்ளதாக்குவதற்கு தேவையான உழைப்பை நாம் செலுத்த வேண்டும்.
தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்து விட்டால், அந்தத் தேவையை மக்களுக்கு உணர்த்துவதன் மூலமாக இந்தக் கருத்தியலை ஒரு பொருளியல் ஆற்றலாக நாம் மாற்ற முடியும். வெகுமக்கள் சக்தியை கொண்டு சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்.
*******
http://www.keetru.com/literature/interview/thiyagu_2.php