சிங்களப் பேரினவாத மனப்பான்மையுடைய சிங்களவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் தங்கள் நலன்களுக்குப் பாதகமான சட்ட முன்வடிவங்களை ஆங்கிலேயர் வைக்கயில் அவை தமிழர்க்கு ஒரு சில சலுகைகளையே அளித்த போதிலும், அவற்றுக்கு முட்டுக்கட்டையிட்டு, தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் அவற்றுக்கு எதிராகத் தங்கள் மக்களின் எதிர்ப்புக் குரல்களை ஒன்றிணைக்க முயற்சித்தனர்.
தாங்கள் ஆட்சிக்கு வந்த பின் புதிய வடிவில் வேறு பல சட்டங்களைக் கொண்டு வந்து, பழைய சட்டங்களைத் தூக்கியெறிந்து தமிழர்களை ஒடுக்க நினைத்தனர்.
ஆரம்ப காலச் சிங்கள இனவாதம், சட்ட வடிவங்களை முன்வைத்தே தமிழர்களை ஒடுக்கியது.
1920-சட்ட நிரூபண சபைக்கான திருத்தம்:
மலையக மக்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு, டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசை அரசு அமலாக்க நினைக்கிறது. ஆனால் மலையக மக்களின், குறிப்பாக தமிழர்களின் வாக்குரிமையால் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு கிடைத்துவிடும் என்றும், அம்மக்களின் ஆதரவால் இடதுசாரிகளின் கை, பாராளுமன்றத்தில் ஓங்கும் என்பதால் சிங்களவர்கள் இதை அமலாக்குவதை எதிர்த்தனர்.
1931-"டொனமூர் சிபாரிசு' சில திருத்தங்களுடன் அமலாதல்:
அத்திருத்தங்களினால் யாழ் சிறுபான்மையினர் பாதிப்படைகின்றனர். யாழ் பகுதி மக்கள் கடுமையாக இதை எதிர்க்கின்றனர்.
1937-"உள்ளாட்சித் தேர்தல் வாக்குரிமைச் சட்டம்':
இச்சட்டத்தால் உள்ளாட்சித் தேர்தலில் தோட்டத் தொழிலாளர் பங்கேற்காத வகையில், அவர்களின் நலன்களை அமலாக்காதபடிக்கு, அவர்களுக்கு வாக்குரிமையைப் பறிக்கக்கூடிய வகையில் இச்சட்டம் வந்தது. இதன் மூலம் பழைய ராணுவ முகாம் பாணியில் காலனிகளில் தமிழர்கள் பிற சமூக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.
1940-"வாழ்விடத் தெரிவு பிரஜைகளை பதிவு செய்தல்' சட்டம்:
இச்சட்டத்தின் மூலம் தமிழர்கள் தாங்கள் எந்தப் பகுதி மற்றும் குடியிருப்புகளில் தங்கி வாழ்கின்றனர் என்பதைப் பதிவு செய்தல் வேண்டும். அது மட்டுமல்லாது அவர்களின் நடமாட்ட விஸ்தரிப்பையும் இதன் மூலம் கட்டுப்படுத்துகிறது. இச்சட்டத்தில் சில விதிகள் கடுமையாக்கப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
1939-இல் இருந்ததை விட 57,000 பேர் தமிழர்களின் எண்ணிக்கையில் குறைக்கப்பட்டனர். மேலும் இச் சட்டத்தின் மூலம் 1943-இல் பெருமளவுக்கு வாக்காளர்கள் குறைக்கப்பட்டனர்.
1948-49 "குடியுரிமைச் சட்டம்':
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமான 15 லட்சம் மக்கள் தொகையுள்ள மலையகத் தமிழர்களுக்கு விழுந்த முதல் அடி இதுவாகும். தமிழருக்கான குடியுரிமை மறுக்கப்பட்டது. உலகில் எந்த நாட்டிலுமே இல்லாத ஒரு குடியுரிமைச் சட்டம் இது.
சில நாடுகளில் அம்மண்ணிலேயே பிறந்தவர்களுக்குக் குடியுரிமை உண்டு. வேறு சில நாடுகளில் சில காலம் வாழ்ந்தாலே குடியுரிமை பெறும் தகுதி கிடைத்து விடுகிறது. இன்னும் சில நாடுகளில் குடியேறியவர்கள் அங்குள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்து ஏற்றுக்கொண்டாலே போதுமானது.
ஆனால் தலைமுறை தலைமுறையாக இலங்கையிலேயே வாழ்ந்து, இந்தியாவுடன் தொடர்பினை இழந்த மக்களுக்கு; அதே நாட்டில் ஏற்கெனவே குடியுரிமை பெற்றிருந்தவர்களுக்கு, இச் சட்டத்தின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டது.
இது ஒரு விநோதமான சட்டமாகும். சிங்களப் பெயர் அமைந்திருந்தால் அவர்களுக்குப் பிரஜா உரிமை உண்டு. குழந்தைகளுக்கோ உறவினருக்கோ தமிழ்ப் பெயர் இருக்குமானால் அவர்களுக்கு பிரஜா உரிமை இல்லை. இச்சட்டம் குடும்பங்களையே பிளவுபடுத்தியது. மேலும் இஸ்லாமியப் பெயர் கொண்டிருந்தால் அவர்களுக்குப் பிரஜா உரிமை இல்லை.
இதில் விசித்திரம் என்னவென்றால், "குடியேறியவர் லைசென்சு கொள்கை சட்டத்தின்' கீழ் ஏற்கெனவே சட்டப்பூர்வமாக குடியேறியவர்கள், இச்சட்டத்தின் மூலம் சட்ட விரோதமாகக் குடியேற்றியவர்களாகக் கருதப்பட்டனர்.
1949- "இந்திய பாகிஸ்தான் குடியிருப்பு சட்டம்':
இச்சட்டத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள், பத்தாண்டுக்கு முன்பிலிருந்து தொடர்ச்சியாக அந்நாட்டிலேயே இருந்திருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். இது மேலோட்டமாகச் சாதாரண ஒரு நிகழ்ச்சியாகத் தெரியும்.
ஆனால் பத்தாண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இருந்திருப்பதை நிரூபிப்பதில் கண்டிப்பான வழிமுறைகளும் சிக்கலான நடைமுறையும் பல அதிகார விதிகளும் உருவாக்கப்பட்டுக் குடியுரிமை பெறுவதை மேலும் சிக்கலாக்கின.
1948-49 "தேர்தல் திருத்தச் சட்டம்': (Elecltion Amendment Act:)
தமிழர்களுக்கு வாக்குரிமைப் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது இச்சட்டத்தின் மூலம்தான். தொகுதிகளின் எண்ணிக்கையில் அதிகமான அளவிற்கு சிங்களவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
1. தோட்ட நிர்வாகிகள் உரிமையாளர்களின் நலன்கள் இதன் மூலம் பாதுகாக்கப்பட்டது. தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல; 1931-இல் அளிக்கப்பட்ட வாக்குரிமை பறிக்கப்படுகிறது. 1949-இல் உருவான குடியேற்ற மசோதாவில் உள்ள ஷரத்துக்கள் இறுதி வடிவம் பெறுதலும் இச்சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள். இச்சட்டப்படி 1951 ஆகஸ்டு 5 வரை பிரஜா உரிமைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
2,37,034 விண்ணப்பங்களில் குடும்பத்தவர் உள்ளிட்ட 8,25,000 பேருக்கு தமிழ் பிரஜா உரிமை கோரப்பட்டது. ஆனால் 1951-இல் இருந்து 1962 வரை 11 ஆண்டுகள் விண்ணப்பங்களை அரசு பரிசீலனை செய்வதிலேயே கழித்தது. 1962-இல் ஒரு லட்சத்து முப்பத்து நாலாயிரத்து நூற்று எண்பத்தெட்டு பேர் விண்ணப்பித்ததில் 16.2 சதவிகிதம் பேரே பிரஜா உரிமை பெற்றனர்.
1956-"ஆட்சி மொழிச் சட்டம், தனிச் சிங்கள மொழிச் சட்டம்':
இலங்கை முழுவதும் சிங்கள மொழி ஒரே ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் அரசாங்க நிறுவனங்கள், கல்வி, நீதிமன்றம் போன்ற துறைகளில் இதனை அமல்படுத்திய விதம், தமிழர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பெரும் தொல்லைகளை அளிப்பதாக இருந்தது.
1957, 1965 ஒப்பந்தங்கள் ரத்து:
தமிழ் தலைவர்களுடன் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயகா 1956-லும், டட்லி சேனநாயகா 1965-ஆம் ஆண்டிலும் ஆட்சி மொழிச் சட்டம் மற்றும் பிற பாகுபாடுகளினால் ஏற்படும் விளைவுகளை ஒட்டி, தமிழர்களுக்கு ஏற்பட்ட குறைகளை நீக்கிட ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
ஆனால் இந்த இரண்டு ஒப்பந்தங்களுக்கு எதிராகச் சிங்களவரிடையே செல்வாக்கு மிக்க புத்த பிட்சுக்கள் மற்றும் தலைவர்களின் தலையீடு காரணமாக இவை ரத்து செய்யப்பட்டன. அவ்வப்போது தமிழர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று சிங்கள ஆட்சியாளர்கள் அறிவிப்புச் செய்து கொண்டே வந்தனர்.
அவர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அறிவிப்புகளை அளிப்பதும் சில அரசியல் பதவிகளை அளித்து அரசியல் லாபத்திற்காகச் சிறுபான்மையினரைப் பயன்படுத்திக் கொண்டும் வந்தனர். அது மட்டுமல்லாது தமிழை ஒரு மாநில மொழியாகவும் ஆக்கியது உள்பட, சிறப்பு வசதிகள் தமிழர்களுக்குச் செய்யப்பட்டன. ஆனால் சில நேரங்களில் சிங்கள இனவாதக் கொள்கை கொண்டவர்களால் இவை எதிர்க்கப்பட்டன.
சில நேரங்களில் அவர்களே பெரும் விளம்பரங்களை இச்செயல்களுக்குத் தந்தனர். ஆனால் இச்சட்டங்களை உண்மையிலேயே அமல்படுத்தியது மிகமிகக் குறைவே ஆகும்.
1960-61 "கல்வித் துறை தேசியமயம்':
பள்ளிகளை தேசியமயமாக்கியது, 2 ரோமன் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் பிரிவினரை மிகவும் பாதித்தது. தனியார் பாடசாலைகள் பல தேசிய மயமாக்கப்பட்டன. வெளித் தோற்றத்தில் ஒரு முற்போக்கான அம்சமாக இது தென்படும். ஆனால், இதை அமலாக்கும்போது மதச்சிறுபான்மையினருடைய நிறுவனங்கள் அனைத்தும் அரசு மயமாக்கிச் சிங்களவருடைய நிர்வாகத்தின் கீழ் நிலைநிறுத்தப்பட்டது.
இதன் மூலம் மலையகத்தில் இருக்கும் தமிழ்ப் பாடசாலைகள் அனைத்தும் சிங்களப் பாடசாலைகளாகவும் மாற்றப்பட்டன. அங்கு சிங்கள மொழி முதன்மை பெற்றுக் குழந்தைகளின் தாய்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனால் மலையக மக்கள் பெருமளவிற்குப் பாதிப்பு அடைந்தனர். மதச் சிறுபான்மையோருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பறிக்கப்பட்டது.
அதே நேரத்தில் 1964-இல் அக்டோபர் 30-ஆம் தேதி ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தப்படி சுமார் 6 லட்சம் பேர் குடியுரிமை இழந்து விடுகின்றனர்.
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=76852&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=