சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் "ஆழிப் பேரலை" என்னும் இயற்கையின் கோரப் பசிக்கு ஆயிரக் கணக்கில் மனித உயிர்கள் பறிக்கப்பட்டபோது, அந்த இயற்கையின் சீற்றத்துக்கு எதிராக எதுவும் செய்ய இயலாத நிலையில் மனிதகுலம் அலறித்துடித்தது!
பேரலையில் அள்ளுண்டுபோன மனித உயிர்களுக்காகப் பிரார்த்தனைகளை நடாத்தித் தன் இயலாமைக்குப் பரிகாரம் தேடிக்கொண்டது உலக சமுதாயம். எஞ்சியிருந்தவர்களுக்கு உதவுவதற்காக இனம்-மொழி வேறுபாடின்றி உதவுவதற்கு ஓடோடி வந்தது சர்வதேசம்.
ஆனால்…….மனிதர்களால்…………."ஏகாதிபத்தியப்" பேராசை கொண்ட நாடுகள் சிலவற்றின் உதவியோடு நிகழ்த்தப்பட்ட பல்லாயிரக் கணக்கிலான மனிதப் படுகொலைகளைக் கண்டும், காணாதவர்களைப் போன்று கைகளைக் கட்டிக்கொண்டிருந்தது இதே சர்வதேசம்.
போதாதென்று…. அங்கு மனித அவலங்கள் நடந்தேறுவதற்கான அத்தனை இழுத்தடிப்புகளையும் சாவகாசமாகப் புரிந்து கொண்டிருந்தன 'ஐ.நா'வும் அதன் அங்கத்துவ நாடுகள் சிலவும்!
இயற்கையின் கோபத்தின்போது உயிர்கள் பலியான நிகழ்வு மட்டுமே இடம்பெற்றிருந்தது. அப்போது "இயற்கை" எவரையும் சித்திரவதை செய்யவில்லை பாலியல் துன்புறுத்தல்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கவில்லை! பட்டினிபோட்டுப் பணியவைக்கும் தந்திரத்தையோ, பசியால் பரிதவிக்கும் மக்களைப் பார்த்துக் கைகொட்டி ரசிக்கும் ஈனத்தனத்தையோ இயற்கை செய்துவிடவில்லை.
ஆனால், மனிதனால் நடத்தப்படும் செயற்கை அவலங்களைச் சகமனிதனே வேடிக்கை பார்க்கும் விநோதமும்….. அதற்கு அண்டை நாடுகளே ஆயுதங்களையும், தொழிநுட்ப உதவிகளையும் வழங்கும் வஞ்சகமும் நம் கண்களின் முன்னாலேயே அரங்கேறியிருக்கிறது.
பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அந்த "ஹிட்லரிச" கொடுமைகளை வெளியுலகிற்கு அறிவித்துக் கொனண்டிருந்தன. இவற்றில் சில, தங்கள் வர்த்தக லாபங்களுக்காகச் செயல்பட்டனவாயினும்…. உண்மை நிலையினை உலகிற்கு உணர்த்துவதில் இவைகாட்டிய ஆர்வமும் நேர்மையும் பாராட்டப்பட வேண்டியவையே!
ஆனால்…. இவற்றையெல்லாம் பார்த்துச் "சர்வதேசம்" மசிந்துவிடவில்லை.
கண்களின் முன்னே அரங்கேறிக்கொண்டிருந்த படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும்- தாமும் மனிதர்களாகவே 'தோல் போர்த்தியிருந்த' இவர்கள் பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள்.
ஆம் இவர்களது கண்கள் இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தன; ஆனால் மூளையோ எதிர்கால அரசியல் சூதாட்டத்தில் உலகை வெல்லப்போகிறவர்கள் யார்?- அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதில் "கண்ணாயிருந்தது".
இதயமோ இறுகிக்கிடந்தது.
பதவி வந்துவிட்டால் அது கண்களை மறைத்துவிடும் என்று சொல்வதுண்டு.ஆனால் இருக்கும் பதவியினைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சிலர் தங்கள் கண்களை மறைத்துக் கொண்ட "காட்சிகள்" இந்த அவல அத்தியாயத்தில் இடம்பெற்றதையும் மறக்க இயலவில்லை.
இனமானம்-தமிழ் வீரம் பற்றி வாய்கிழியப் பேசிய தலைவர்களது வாய்கள், கூசாமல் தங்கள் "நடுவண்" எசமானர்கள் கூறிய பொய்களை வழிமொழிந்து கொண்டிருந்தன!
தமிழ் மக்கள், சிங்களப் படைகளின் மூர்க்கத்தனமான குண்டுவீச்சுகளுக்கு அஞ்சிப் பதுங்கு குழிகளுக்குள் இருந்தவாறு உயிர்வாழும் கணங்களை எண்ணிக்கொனண்டிருந்த வேளையில்; இலவச உணவுப்பொட்டலங்களை வழங்குவதுபற்றி அக்கரையில் இருந்தவாறு "ஆலோசனை" நடாத்திக்கொண்டிருந்தார்கள். இது ஒரு வகையில் செத்துக்கொண்டிருக்கும் மக்க்களுக்கு "வாய்க்கரிசி" போடுவதற்கு ஒப்பான செயலே என்பது இந்தத் தலைவர்களுக்குப் புரியாமற்போனது "எட்டாவது" உலக அதிசயம்.
இரத்தக் கறைபடிந்த சில நாடுகளும், ஊழல் மாசுபடிந்த ஐ.நா வின் அதிகாரிகள் சிலரும் திட்டமிட்டு நடாத்திய "தமிழினக்கொலை" நாடகம் முற்றுமுழுதாக நிறைவடைந்த சமயத்தில்……சுமார் அரைலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டும், மூன்று லட்சம்பேர் முட்கம்பி வேலிகளுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டும் இருந்தார்கள்.
ஏற்கனவே முப்பதாண்டுகளாக நீடித்த இனப் போரின் காரணமாக ஈழத்தமிழினத்தின் மொத்த மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உலகப்பந்தின் நாடுகள் பலவற்றில் ஏதிலிகளாய்த் தஞ்சமடைந்திருந்தார்கள்.
மேலும் சில லட்சம் பேர் கொல்லப்பட்டிருந்தனர். எஞ்சியோர் தங்கள் வாழிடங்களில் இருந்தாலும் சிங்களப் படைகளின் நடுவே "பலியாடுகளாய்" பாதி உயிரைக் கைகளில் பிடித்தபடி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்
"சிங்" சொல் அம்பலம் ஏறுமா?
சிங்கள அரசு, தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று பிரகடனஞ்செய்து நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில்.. இன்றுவரை ஈழத்தமிழினத்தின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை அளிக்கும் திட்டம் எதனையும் சிங்கள அரசு முன்வைக்கவில்லை.
விடுதலைப்புலிகளை அழித்துவிட்டால் ஈழத்தமிழினத்துக்குத் தானாகவே உரிமைகள் யாவும் "மடியில் வந்து விழுந்துவிடும்" என்னுமாப்போல் செயலாற்றிய இந்தியமும் இப்போது கையைப்பிசைந்து கொள்ளும் நிலையில்தான் உள்ளது.
மாறாக ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மேற்குலகின் ஆரம்ப முயற்சிகளுக்குக்கூட குறுக்கே நின்றது இந்தியா!
அதுமட்டுமன்றி தனது "சொல் கேட்கும்" நாடுகளையும் 'மனித உரிமை மீறல்'களுக்கு ஆதரவாகச் செயல்படவைத்தது.
ஏற்கனவே அமெரிக்காவால் பாதிக்கப்பட்ட வியட்நாம்; கியூபா; வெனிசுலா போன்ற நாடுகளும்; வெள்ளையர்களின் ஆதிக்கத்தின் கீழ் பல ஆண்டுகளாக இன ஒதுக்கல்களுக்கு உள்ளான தென்னாபிரிக்கா போன்ற- இயற்கையிலேயே விடுதலை உணர்வு கொண்ட ஆபிரிக்க நாடுகளும் கூட மேம்போக்காக "மேற்கு-கிழக்கு" என்னும் பூகோள அடிப்படையில் அமைந்த வேறுபாட்டினையும், மேற்கின் ஆதிக்கத்தின்கீழ் அடிமைப்பட்டிருந்த கசப்பினையும் எண்ணி ஓரணியில் இணைந்து கொண்டன.
இதனால்
பேரினவாதச் சிங்கள அரசின் கொடுங்கோன்மைக்கு இலக்காகி, கடந்த முப்பது வருடங்களில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மக்களைப் பலிகொடுத்துக் கட்டியெழுப்பப்பட்ட ஓர் விடுதலைப் படையினை, சர்வதேச மரபுகள் யாவற்றையும் மதியாது செயல்பட்டு அழிக்கமுனைந்த ஓர் அரசின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கு "நற்சான்றிதழ்" வழங்கும் நாடாகத் தன்னை "உயர்த்திக்" கொண்டது இந்தியம்.
அதன் வழியாகத் தனது "ஆசிய வல்லரசுப் போட்டியில்" தான் வெற்றிபெற்று விட்டதான பொய்ம்மை மயக்கத்தில் அநீதிக்குத் துணைபோயிருக்கிறது இந்த "அஹிம்சா மூர்த்தி"யின் தேசம்!
இப்போது, "ஈழத்தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதில் இந்தியா ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லை" என்னும் வாக்குறுதிகள் சிலவும் காதில் வந்து விழத்தான் செய்கின்றன.
என்றாலும், தமிழ்மண்ணில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த "ஏப்பிரல் - மே" மாதங்களில் முகர்ஜிகளும், மேனன்களும் கூறிய செய்திகளையும் அதற்குத் "தமிழகத் தலைமை" ஒத்தூதிய சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இப்போது "சிங்" சொல்வதாகச் சொன்னவற்றில் எவ்வளவு உண்மை இருக்கறது என்பதை காலந்தான் தீர்மானிக்கவேண்டும்.
சர்வதேசம் நம்பிக்கை தருமா?
சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்குப் பின், உலகின் ஒரேயொரு வல்லரசாகத் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட அமெரிக்கா- அல்கைடா தீவிரவாதிகளால் அதன் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதைக் காரணங்காட்டி……… தனக்குப் போட்டியாக அல்லது எதிரியாக நினைத்திருக்கும் நாடுகளின் தலைமைகளை வீழ்த்துவதற்காக கண்டுபிடித்த புதிய "ஆயுதம்" "பயங்கரவாதம்" ஆகும்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், தனது கூலிப் படைகளின் உதவியோடு தனக்குப் போட்டியாகச் செயல்பட்டு வந்த நாடுகளின் தலைமைகளைப் பதவியிறக்கம் செய்தோ அல்லது கொன்றோ தன்னை உலகக் காவலனாக நிலைநிறுத்திக்கொண்டது அமெரிக்க நாடு!
இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இது நிறைவேற்றிய சதிகள் ஏராளம்.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் அது தன் கையில் எடுத்திருப்பது "பயங்கரவாதம்" அதற்கு ஏதுவாக வந்துவாய்த்தது அல்கைடாவின் தாக்குதல்! (இதுகூட அமெரிக்காவின் கைவண்ணந்தான் என்னும் தகவல்களும் கசிந்ததுண்டு) இந்தச் சம்பவத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட "புஷ்" நிர்வாகம் ஆப்கானிஸ்தான், ஈராக் என்று தனது திட்டங்களை ஏனைய மேற்கு நாடுகளின் உதவியோடும், "கையேந்திப் பிழைக்கும்" வளரும் நாடுகளின் ஆசியோடும் துரிதகதியில் நிறைவேற்றி முடித்தது. தொடர்ந்து அதன் கவனம் வடகொரியா, ஈரான் என்பதில் நிலைத்திருக்கிறது.
இதில் வேடிக்கை யாதெனில், ஈராக் போரின்போது வாக்களிக்கப்பட்ட "பலஸ்தீனம்" தொடர்பான பிரச்சனை இன்னும் இழுபறியாகவே போய்க்கொண்டிருக்கிறது.
மேற்சொன்ன அனைத்துப் போர் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்காவுக்குக் கைகொடுத்தது "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்னும் சுலோகமே!
ஆனால், தீவிரவாதம், விடுதலைப் போராட்டம், சாதாரண வன்செயல்கள் இவற்றுக்கிடையில் தெளிவான வேறுபாட்டினை வரையறை செய்யும் முன்பாகவே அனைத்தையும் "பயங்கரவாதம்" என்று முத்திரையிட்டு தனது அப்போதைய திட்டத்தினை நிறைவேற்றி முடித்தது அமெரிக்கா.
அதே நேரத்தில் தங்கள் நாடுகளில் பாதிக்கப்பட்ட இனங்கள் போராட முயன்றபோது அதற்குப் "பயங்கரவாத" முலாம் பூசி ஈவிரக்கமின்றி அழித்துவிடலாம் என்று "கணக்குப் போட்ட" சீனா, இந்தியா, ஸ்ரீலங்கா போன்றவை இதனைத் தமக்குச்சாதகமாகப் பயன்படுத்த முயன்றதன் விளைவுதான் உலகின் இன்றைய மனிதப் படுகொலைகள்.
உண்மையில் அமெரிக்கா போன்ற வல்லரசு ஒன்று நேர்மையாக மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து நடக்குமேயாயின் ஏனைய நாடுகளும் அதனைப் பின்பற்றவேசெய்யும். ஆனால் உலகம் முழுவதும் அதிகாரப் போட்டியிலும், பொருளாதார வளத்திலும் ஆர்வங்காட்டும் அளவுக்கு "மனித உரிமைகளுக்கு" மதிப்பளிப்பதில்லை என்பதுதான் உண்மை.
அமெரிக்கவின் "பயங்கரவாத" முத்திரை குத்தப்பட்ட விடுதலை இயக்கமான "விடுதலைப் புலிகள்" இயக்கத்தினை, அந்நாட்டின் சிறுபான்மை இனத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலேயே தடை செய்தன ஏனைய மேற்கு நாடுகள். இத்தனையும் செய்து விட்டு, வேறெந்த அந்நிய நாட்டுடனும் போரிடாத அல்லது போரிட வேண்டிய நிர்ப்பந்தமில்லாத ஸ்ரீலங்காவுக்கு இந்நாடுகள் வேவு விமானங்களையும், அதிவேகக் குண்டுவீச்சு விமானங்களையும், ஆட்லறி ஏவுகணைகளையும் தாராளமாக வழங்கின.அவற்றை இயக்குவதற்குப் பயிற்சிகளையும் அளித்தன.இத்தனை ஆயுதங்களையும் அந்நாடு தனது சொந்தக் குடிமக்களான தமிழருக்கு எதிராகவே பயன்படுத்தும் என்பதை இப்போது "மனிதாபிமானம், மனித உரிமை" என்று பேசும் மேற்குலகம் தெரியாது இருந்திருக்கமுடியாது.
இப்போது இந்நாடுகள் யாவும் ( ஐ,நா உட்பட) ஈழத்தமிழரது துன்பங்கள் பற்றியும், அவர்கள் சிங்கள அரசின் மனிதாபிமானமற்ற செயல்களால் அவதிப்படுவது குறித்தும் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆமாம்….. பேசிக்கொண்டுதானிருக்கின்றன…… இன்னும் செயலில் எதுவும் நடைபெறுவதாகக் காணோம்!
ஏதோவொரு வகையில் கறைபடிந்த கரங்களைக் கொண்டிருக்கும் இவை இதயசுத்தியுடன் ஈழத்தமிழர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது அரசியல் உரிமைகளை மீட்டுத்தர முயற்சி செய்யும் என நம்புவோம்.
இது ஒருவகையில் "கண்களைப் பறித்துவிட்டுக் காட்சி கொடுக்கும் நூதன செயல்தான்". என்றாலும் இதனை விட்டால் ஈழத்தமிழனுக்கு வேறுவழி?
சர்வசித்தன்
ஈழநேசன்
ஈழத் தமிழர்கள் இன அழிப்புக்குள்ளாகி, பல்லாயிரக் கணக்கில் பலி கொள்ளப்பட்டு, எஞ்சிய தமிழர்கள் தொடர்ந்தும் படுகொலை செய்யப்பட்டும், வதைமுகாம்களில் அவலப்பட்டும் வரும் நிலையில் கருணாநிதியினால் அறிவிக்கப்பட்ட 'உலகத் தமிழ் மாநாடு' பற்றிய அதிருப்தி தமிழகமெங்கும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறு பாரிஸ் ஈழநாடு தனது இன்றைய இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
தமிழக முதல்வர் கொலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மீண்டும் ஒரு அரைநாள் உண்ணாவிரதப் போராட்டக் களம் திறக்கப்பட்டுள்ளது போலவே தெரிகின்றது.
வன்னி மீதான சிங்களப் படைகளின் தாக்குதல் உச்சம் பெற்று, தமிழீழ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது தமிழகத்தில் எழுந்த உணர்ச்சி அலைகளை உச்ச நிலையை அடைந்த வேளையில், சோனியா காந்தி அம்மையாரின் நரபலி வேட்டை தடைபட்டு விடக் கூடாது, அவர் தரும் வரம் இடை நின்று போகக்கூடாது என்ற கடமை உணர்வோடு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆடிய நாடகமும், எழுதிய கடிதங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.
இப்போதும் அவர் கடிதம் எழுதிய சாதனையை 'கின்னஸ்' சாதனையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வார ஏடுகள் கூட அடிக்கடி கேலிச் சித்திரம் வரையும் அளவிற்கு அவரது கடித சாதனை ஏற்கப்பட்டுள்ளது.
கருணாநிதி அவர்களது இந்தத் துரோக நாடகத்தைக் கண்டு வெகுண்டெழுந்த முத்துக்குமரன் தன்னைத் தீயிற்கு இரையாக்கித் தமிழகத்தைப் போர்க் கோலம் பூணச் செய்தார். அவரைத் தொடர்ந்து, மேலும் பல தமிழுணர்வாளர்கள் தம்மைத் தீயுக்கு இரையாக்கி தமிழீழ மக்களைக் காப்பாற்றக் கோரினார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பல்வேறு தமிழுணர்வுக் கட்சிகளும் அமைப்புக்களும் தொடர் போராட்டங்களை நடாத்தினார்கள். தமிழகப் பெண்கள் பலர் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். தமிழுணர்வுப் பெரியார் பழ. நெடுமாறன் ஐயா அவர்கள் தலைமையில் மேலும் பல போராட்டங்கள் என்று தமிழகம் போர்க் களமானது.
கொலைஞர் இதற்கெல்லாம் கலங்கிப் போவாரா… என்ன? அணிசேர்க்கக்கூடிய கட்சிகளை அணி சேர்த்து, அதே சோனியாவின் தமிழக காங்கிரஸ் கட்சியுடன் களமிறங்கினார். டெல்லி அசைகின்றது என்றார். டெல்லி பணிகின்றது என்றார். கலைஞர் அவர்களது நாடகத்தில் மன்மோகனும் காமடி சீனுக்கு வந்தார்.
எம்.கே. நாராயணனும், சிவ்சங்கர் மேனனும் அநுமான் வேடத்துடன் கலைஞரிடம் வந்தார்கள். அதே வேகத்துடன் இலங்கைக்கும் சென்றார்கள். தமிழகத்துத் தமிழர்கள் நம்பிவிட்டார்கள் மீண்டும் சீதைகளை சிறை மீட்க ராமர்கள் புறப்பட்டுவிட்டார்கள் என்று. பாவம், அவர்களுக்குப் புரியவில்லை நடைபெறுவது மகாபாரதம் என்று. கடல்கடந்து சென்றவர்கள் சகுனிகள் என்று.
கொழும்புக்குச் சென்ற சகுனிகள் ராஜபக்ஷ சகோதரர்களுடன் விருந்துண்டுவிட்டு, அவர்களது இன அழிப்புப் போருக்கு ஊக்கமும் ஆதரவும் கொடுத்துவிட்டுத் திரும்பினார்கள். கலைஞர் அகமகிழ்ந்து போனார். என்னால்தான் அவர்கள் கொழும்புக்குப் போனார்கள். இதோ வருகிறது யுத்த நிறுத்தம் என்றார்.
முள்ளிவாய்க்கால் வரை வன்னித் தமிழர்களைத் துரத்திச் சென்ற சிங்களப்படை தமிழர்கள்மீது கொத்துக் குண்டுகளையும், விஷ வாயுக் குண்டுகளையும், தடைசெய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களையும் கொண்டு கொத்துக் கொத்தாகத் தமிழர்களைக் கொன்று குவித்தது.
தமிழகம் மீண்டும் கொந்தளிக்கத் தொடங்கியது. போராட்டங்கள் தீவிரமாகியது. டெல்லியின் தீர்மானத்தை எதிர்த்து நின்றால், காங்கிரஸ் கட்சியின் தயவு இல்லாமல் போய்விடும். எனவே, டெல்லியையும் எதிர்க்காமல், தமிழகத்தையும் எழுச்சி கொள்ளாமல் செய்வதற்கு கலைஞர் தேர்ந்தெடுத்த நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது.
அதன் இயக்குனரும், கதாசிரியரும், நடிகருமாகக் கலைஞர் அவர்களே இருந்து, காலை உணவுக்குப் பின்னர், அண்ணா சமாதி அருகே அரைநாள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
தகவல் அறிந்ததும் அவரது மனைவியார் தலைமாட்டிலும், துணைவியார் கால் மாட்டிலும் கதிரை போட்டு அமர்ந்து கொண்டார்கள். தமிழ் சினிமா கதாநாயனுக்கான அத்தனை ஏற்பாடுகளும் தடல்புடலாக நடந்தேறியது.
டெல்லிக்குச் செய்தி அனுப்பப்பட்டது. அங்கிருந்து பதிலும் வந்தது. உண்ணாவிரதம் வெற்றி என்ற அறிவிப்போடு மதிய உணவுக்காக வீடு போய்ச் சேர்ந்தார். அத்துடன் போராட்டங்கள் நிறைவுக்கு வந்தது.
டெல்லியின் திட்டப்படி கலைஞரது ஆதரவுடன் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைகள் நடாத்தி முடிக்கப்பட்டது.
அந்த இடைவெளியில் நடாத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் சோனியாவுடன் மீண்டும் கைகோர்த்த கலைஞர் வெற்றியும் பெற்று, தன் வாரிசுகளுக்கான மந்திரிப் பதவிகளையும் போராடிப் பெற்றுக் கொண்டார்.
கலைஞர் கருணாநிதியின் அத்தனை துரோகங்களும் தமிழக மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவருக்கு எதிரான அணி மிகப் பலவீனமாக இருந்ததனால் மக்களது நம்பிக்கையை அவர்களால் திரட்ட முடியவில்லை.
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் சிங்கள அரசு அந்த யுத்தத்தில் உயிர்தப்பிய தமிழர்களை வதை முகாம்களுக்குள் வைத்துக் கொடூரமாக சித்திரவதை செய்து, படுகொலைகள் புரிந்துவருவதனால், மீண்டும் தமிழகம் எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்பட்டு வரும் நிலை கலைஞர் மீது கரையோரத் தமிழ் மக்களும் அதிருப்தியில் உள்ளார்கள். இதைத் தனக்குச் சாதகமாக்க அ.தி.மு.க. தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கள் கையிலெடுத்துப் போராட ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில், கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்ட 'உலகத் தமிழ் மாநாடு' பற்றிய அதிருப்தி தமிழகமெங்கும் அதிகரித்து வருகின்றது. ஈழத் தமிழர்கள் இன அழிப்புக்குள்ளாகி, பல்லாயிரக் கணக்கில் பலி கொள்ளப்பட்ட நிலையில், எஞ்சிய தமிழர்கள் தொடர்ந்தும் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இப்படியான விழா தேவையில்லை என்று பல அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
கலைஞர் கருணாநிதி அவர்களைச் சுற்றி எங்கும் அவருக்கு எதிரான கருத்துக்கள் மேலெழுந்து வருவதால், கலைஞர் அவர்கள் மீண்டும் ஒரு அரை நாள் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்ற வேண்டிய கால கட்டாயத்தினுள் நுழைந்துள்ளார்.
கொலைஞர் இதற்கெல்லாம் கலங்கிப் போவாரா… என்ன?
நன்றி: ஈழநாடு(பாரிஸ்)
கடவுளே போய் காரியம் நடக்கேலை, பூசாரி போகின்றார் எல்லாம் நடந்துவிடும் என்று நம்பச் சொல்கின்றார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், வவுனியாவிற்கு நேரில் சென்று முகாம்களைப் பார்வையிட்டுவிட்டு திரும்பிய பின், உலகத்திலே மிக மோசமான முகாம் என்று தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
இத்தனைக்கும் அவர் பார்வையிடுவதற்கு சென்றிருந்த முகாம், படையினரால் ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்டு தரம் உயர்ந்ததாக காண்பிக்கப்பட்டிருந்த ஒரு தடுப்பு முகாம். அதனையே உலகத்தில் மிக மோசமான முகாம் என பான் கீ மூன் வர்ணித்திருந்தார் எனில், அவர் போகாத ஏனைய முகாம்கள் குறித்து சொல்லத் தேவையில்லை.
இன்றும் அந்தச் சிறை முகாம்கள் அதனை விட மிகமோசமாக, மனிதர்கள் வசிக்க முடியாதவையாக இருக்கின்றன என்பதை சர்வதேச ஊடகங்கள் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி வருகின்றன. ஆனாலும் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அங்கு இன்னமும் சிறை வைக்கப்பட்டிருக்கின்றார்கள். கடந்த மே மாதம் இலங்கைக்குச் சென்றிருந்த பான் கீ மூன், அந்த மக்களை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்றே அப்போது எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட செயலர் பான் கீ மூன், 'சிறீலங்கா அரசாங்கம் தன்னால் முடிந்த அதிகளவிலானவற்றை செய்து கொண்டிருக்கிறது' என்று புகழாரம் சூட்டியதுடன், 'சிறீலங்காவின் முயற்சிகளை தான் பாராட்டுகின்றேன்' என்றும் கூறிவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்காமல் திரும்பியிருந்தார். ஐ.நா. சபையின் நடவடிக்கைகளை வெளிக்கொண்டுவரும் இன்னர் சிற்றி பிரஸ் கூட கேலி செய்கின்ற அளவிற்கு இலங்கைக்கான இவரது பயணம் அமைந்திருந்தது.
ஆனால், பான் கீ மூன் தனது பயணத்தின் போது தனது நலன்சார்ந்த உடன்படிக்கைகளை சிறீலங்கா அரசுடன் செய்துகொண்டிருந்தார் என்ற விபரங்கள் அண்மையில் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தமிழ் மக்களைப் பகடைக் காய்களாக வைத்து ஐ.நா பொதுச்செயலர் ஆடிய ஆட்டங்கள் தமிழ் மக்களிடையே பெரும் வேதனையையும், அவரது நடுநிலை தொடர்பாக நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தியிருந்தன.
அத்துடன், பான் கீ மூனின் மருமகன் (மகளின் கணவன்) சித்தார்த் சட்டர்ஜி ஒரு இந்தியக் குடிமகன் என்பதுடன், இந்திய இராணுவ சிறப்பு படையணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், இலங்கையில் இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்த காலத்தில் அங்கு போரில் ஈடுபட்டிருந்தவர் எனவும் தகவல்கள் உள்ளன. இப்போது ஐ.நா. செயலரின் மகளும், மருமகனும் ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.
இவர்களுக்கான பதவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் ஐ.நா. பொதுச் செயலர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்நிலையில்தான், தற்போது இராணுவச் சிறை முகாம்களில் வாடும் தமிழ் மக்களின் நிலை தொடர்பாக நேரடியாக ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அரசியல்துறை அதிகாரியான லைன் பாஸ்கோவே சென்றிருக்கின்றார்.
ஐ.நா. செயலர் பான் கீ மூனினால் நேரடியாக இவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு இத்தனை அவலங்களை ஏற்படுத்திவிட்டு, அந்த மக்களை இன்னும் சிறையில் அடைத்து வைத்திருக்கும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிவிட்டே செயலர் பான் கீ மூன் தனது சிறப்புப் பிரதிநிதியாக பாஸ்கோவேவை அனுப்பிவைப்பதற்கு தீர்மானித்ததாக ஐ.நா. செய்திகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறீலங்காவிடம் 'இரந்து' தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுவிடலாம் என ஐ.நா இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளதையே இது காட்டுகின்றது. மக்கள் மீது உலகில் தடை செய்யப்பட்ட குண்டுகளை எல்லாம் கொண்டுவந்து கொட்டி பேரழிவை ஏற்படுத்திய சிறீலங்கா, வன்னியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளால் அந்த மக்களின் கால்கள் பறி போய்விடும் என்று கவலைப்பட்டு மீளக் குடியேற அனுமதிக்காமல் காலத்தை இழுத்தடிப்பதை இந்த சர்வதேச சமூகம் இப்போது புரிந்துகொண்டுள்ளது.
மயிலே மயிலே என்று சிறீலங்காவிடம் கெஞ்சி இறகைப் பெற்றுவிடலாம் என்று நம்பிய உலகிற்கு, தானாக அது இறகைத் தராது, அதனிடம் இருந்து இறகைப் பிடுங்கித்தான் எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இப்போது சரியான வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.
உலகிற்குப் புரிந்த இந்தத் தத்துவம், ஐ.நாவிற்கு எப்போது புரியும்..?
நன்றி: ஈழமுரசு (19-25.09.2009)
1919-ம் ஆண்டு ஜாலியன் வாலா காக் கடுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரையும், அவரது மேலதிகாரி மைக்கேல் ஓ டயரையும் இங்கிலாந்து வரை தேடிச் சென்று, ஜெனரல் டயர் நோய்வாய்ப்பட்டு ஜெனரல் டயர் இறந்துவிட, எஞ்சியிருந்த மைக்கேல் ஓ டயரை விழா ஒன்றில் சுட்டுக்கொன்றார் ஷாஹித் உத்தம் சிங். தன் தேசத்து மக்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்ட கொடியவனில் ஒருவனையாவது சுட்டுக் கொன்ற திருப்தியுடன் 31 ஜுலை 1940 அன்று இங்கிலாந்து நாட்டில் தூக்கிலிடப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டார்.
இவரது எஞ்சிய உடல் பாகங்கள் கல்லறையில் தோண்டி எடுக்கப்பட்டு, 1974-ம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, அரச மரியாதையுடன் அவரது பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த மாவீரரைக் கவுரவப்படுத்தி 'காத்திருந்தேன்... கதை முடித்தேன்!' என்ற தலைப்பில் ஜுனியர் விகடன் நாடு போற்றும் வீரர்கள் வரிசையில் வரிசைப்படுத்தியிருந்தது. உண்மையாகவே, அந்த தேசிய உணர்வாளனின் தியாகம் போற்றப்பட வேண்டியதுதான். உலக மக்களும் அறிந்து கொள்ள வேண்டியதுதான். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
ஈழத் தமிழர்களான நாங்களும் இதய பூர்வமாக அந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம். இப்படியேதான் நாங்கள் எங்கள் நாட்டுப் படுகொலைகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்... இந்திய தேசத்தை அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயர்கள் போலல்லாது நாங்கள் மலர்க்கொத்துக்கள் வழங்கி இந்திய அமைதிப்படையை வரவேற்ற காலம்... நம்பிக்கையோடு எம் தேசத்தின் அமைதிக் காற்றைச் சுவாசிக்கும் ஆவலில் குதூகலித்திருந்த காலம்... தமிழர்களைக் காப்பாற்ற என்ற கொட்டொலியுடன் 1987 இல் கால் பதித்த இந்திய அமைதிப்படையை நம்பி விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்து அமைதி காத்த காலம்...
தமிழீழ மண்ணில் கால் பதிக்கும்வரை அமைதிப் படையாகவே வந்த இந்தியப் படை தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டதும், சுய ரூபம் காட்டியது. சிங்கள தேசத்தின் காவல் படையாக மாறிய இந்திய அமைதிப் படையின் துரோகத் தனத்தைக் கண்டு கொதித்த தமிழர்களை பொறுமை காக்க வைத்து திலீபன் அவர்களிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வைத்து, காந்திய தேசத்திடம் நீதி கோரி, காந்திய வழியில் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
1- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2- சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
என்ற சாதாரண கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று திலீபனால் ஆரம்பிக்கப்பட்ட தியாக வேள்வி இந்திய அரசால் கண்டு கொள்ளப்படாமலே விடப்பட்டது. உறுதி தளராத திலீபன் 26 செப்ரம்பர் 1987 சனிக்கிழமை காலை 10.48 மணிக்குத் தன் இறுதி மூச்சை எம் சுவாசத்தில் கலக்கவிட்டு கண்களை மூடிக்கொண்டார்.
எதிரியின் கொடுமையிலும் பார்க்க, துரோகியின் துரோகத்தின் வலி தமிழீழ மக்களின் நெஞ்சில் நெருப்பை மூட்டியது. இதைத் தொடர்ந்தும் இந்தியத் துரோகத்திற்கு குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட 12 வேங்கைகள் பலியானதால் உருவான கொந்தளிப்பு இந்திய அமைதிப் படைக்கு எதிராகத் திரும்பியது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப்படை ஆரம்பித்த நம்பிக்கைத் துரோகப் போர் யாழ். வைத்தியசாலையையும் விட்டு வைக்கவில்லை. யாழ். வைத்தியசாலைக்குள் புதுந்த இந்திய இராணுவம் அங்கு பணியாற்றிய வைத்தியர்கள், தாதிகள், நோயாளிகள் என்று யாரையும் வேறுபடுத்திப் பார்க்காமல் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது. தொடர்ந்து முன்னேறிய இந்திய இராணுவத்தின் கொலைக் கரங்களுக்கு சிறியவர், பெரியவர், இளைஞர், யுவதிகள், ஆண்கள், பெண்கள், வயோதிபர் என்ற வேறுபாடு தெரியவில்லை.
காந்தி தேசத்தின் படைகள் ஈழத் தமிழர்கள் சுமார் பத்தாயிரம் பேரைக் காவு கொண்டது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாத இந்தியப் படை 31 மார்ச் 1990 அன்று அன்றைய சிறிலங்கா அதிபர் பிரேமதாசவால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டது. தமது உறவுகள் அழிக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் முகமாக, இந்தியத் துரோகங்களுக்கும் ஈழப் படுகொலைகளுக்கும் காரணமான இந்தியாவின் அந்த நாளைய பிரதமர் ராஜீவ் காந்தி அதே உத்தம் சிங் பாணியில் பலி கொள்ளப்பட்டார்.
அன்று துப்பாக்கியுடன் டயரை நெருங்க முடிந்த உத்தம் சிங் போல அந்த தமிழீழப் பெண்ணால் நெருங்க முடிந்திருந்தாலும் நிச்சயம் குறி தவறியிருக்கும் என்பதால், தன்னையே வெடிகுண்டாக்கித் தன் வீரசபதத்தை முடித்துக் கொண்டாள் என்று ஈழத் தமிழர்கள் அவரை மாவீரராக ஏற்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
அன்று, உத்தம் சிங் எடுத்த முடிவைத்தான் பின்னர் தானு எடுத்தார். உத்தம் சிங் தேசிய வீரராக கவுரவிக்கப்பட்டது சரி என்றால், தானுவும் எமது மக்களால் தேசிய வீரங்கனையாகப் போற்றப்பட வேண்டியவர்தான். இந்தியா உத்தம் சிங்கிற்கு உரிய கவுரவம் வழங்க இங்கிலாந்து அரசு அனுமதித்தது போலவே, தமிழீழம் தானுவுக்கு உரிய கவுரவம் வழங்கப்போகும் காலத்தில் இந்தியாவும் அதற்கான அனுமதியை வழங்கவேண்டும்.
நன்றி: ஈழநாடு
சிங்கள அரசின் கொடூர யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வன்னி மக்கள் திட்டமிட்டு அவர்கள் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். வன்னி மண் சிங்கள தேசத்தினால் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளதை நாம் மறந்துவிட முடியாது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழ் தனது இன்றைய கட்டுரையில் தெரிவித்துள்ளது.
அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது:-
வன்னி மக்களைச் சிறுகச் சிறுக முற்றாக அழித்தெழிக்கும் சிங்கள அரசின் திட்டத்திற்கு, மேற்குலக நாடுகளும் பல மனித உரிமைகள் அமைப்புக்களும் தெரிவித்துவரும் கண்டனங்களை சிங்கள அரசு செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. இந்த நாடுகளின், அமைப்புக்களின் அழுத்தங்களைச் சமாளித்தவாறே தனது கொடூரங்களை நிறைவேற்றி வருகின்றது.
வன்னி வதை முகாம்களுக்குள் வைத்திருந்த மூன்று இலட்சம் மக்களில் முப்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது, என்பதே இதுவரையில் தெரியப்படுத்தப்படவில்லை. அது குறித்து யாரும் அலட்டிக் கொள்வதாகவும் தெரியவில்லை. இதுவரை தெரிய வந்த கணக்குப்படி 5,000 ற்கும் குறைவானவர்களாலேயே இராணுவத்தினருக்கும், ஒட்டுக் குழுவினருக்கும் இலஞ்சம் வழங்கித் தப்பிச் செல்ல முடிந்திருக்கிறது.
விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்பவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் முகாம்களுக்குத் திரும்பி அழைத்து வரப்படுவதில்லை. ஏற்கனவே இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் என்று சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட பத்தாயிரம் என்ற கணக்கு தற்போது பதின்மூவாயிரமாக அதிகரித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்த மூவாயிரம் விடுதலைப் புலிகளையும், முகாமிலிருந்து தப்பிச் சென்ற சுமார் ஐயாயிரம் தமிழர்களையும் சேர்த்தாலும் முகாமில் இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் 22,000 பேர் இலங்கையின் பல்வேறு சித்திரவதைக் கூடங்களுக்குள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இலங்கை அரசின் உத்தரவின்பேரில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அண்மையில் பிரித்தானிய 'சனல் 4′ தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட படுகொலைக் காட்சிகளில் சிங்கள தேசத்தின் ஒட்டு மொத்த காட்டுமிராண்டித்தனமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா வதை முகாம்களுக்குள் தடுத்து வைத்திருக்கும் தமிழர்களை விடுவித்து அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்ற பெரும்பாலான சர்வதேச நாடுகளின் அழுத்தங்களைச் சமாளிக்க சிங்கள தேசம் மேலும் பல தடுப்பு முகாம்களை உருவாக்கி வருகின்றது. வவுனியா முகாம்களில் இருந்து விடுவிக்கிறோம் என்ற விளம்பரத்தோடு, அங்கிருந்த மக்கள் வடக்கிற்கும், கிழக்கிற்கும் அழைத்துச் செல்லப்பட்டு, 'இடைத்தங்கல் முகாம்' என்ற பெயரில் அமைக்கப்பட்ட பல்வேறு தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு வருகின்றார்கள். சிலர் அங்கிருந்து அழைத்துச் சென்று அவர்களுக்குப் பரிச்சயம் அல்லாத அரச ஒட்டுக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுப்பகுதியில் மக்களால் கைவிடப்பட்ட வீடுகளில் கட்டாயமாகக் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
வன்னியில் தமிழ் மக்களது மீள் குடியேற்றம் என்பது திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்பட்டு, வன்னி மக்கள் நிரந்தர அகதிகளாக்கப்பட்டு, வேறு பிரதேசங்களில் கட்டாய குடியேற்றம் செய்யப்படுவது மிகவும் அபாயகரமான விடயமாகும். 1995-ம் ஆண்டில் சிங்களப் படைகள் யாழ். குடாநாட்டை ஆக்கிரமிக்கும் யுத்தத்தை மேற்கொண்டபோது, அங்கிருந்த ஐந்து இலட்ச் மக்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்த போதும் அவர்கள் பட்டினி தெரியாத அளவுக்கு வன்னி மண் அவர்களுக்கு வாழ்வு வழங்கியது. தற்போது, சிங்கள அரசின் கொடூர யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வன்னி மக்கள் திட்டமிட்டு அவர்கள் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். வன்னி மண் சிங்கள தேசத்தினால் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளதை நாம் மறந்துவிட முடியாது.
ஏற்கனவே, சிங்கள அரசுகள் திட்டமிட்டு எமது வளம் கொழிக்கும் பூமிகளை அபகரித்து வந்துள்ளது. கிழக்கே தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களும், கரையோரக் கிராமங்களும் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் 'மணலாறு' என்ற வளமான பகுதி சிங்களக் குடியேற்றங்களால் அபகரிக்கப்பட்டு, 'வெலியோய' என்ற முற்றுமுழுதான சிங்களப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. 'மகாவலி கங்கை' திட்டத்தால் பல்வேறு தமிழ்க் கிராமங்கள் சிங்களவர்களின் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு, அங்கு பூர்வீகமாக வசித்து வந்த தமிழர்கள் விரட்டப்பட்டுள்ளனர்.
வவுனியாவரை ஊடுருவியுள்ள சிங்கள குடியேற்ற மண் அபகரிப்பு வன்னிவரை விரிவாக்கம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழர்களின் வளமான பூமிகளை வல்வளைப்புச் செய்வதன் ஊடாக, தமிழர்களின் தேசிய சிந்தனையைச் சிதைக்கும் சிங்கள இனவாதிகளின் திட்டங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கில் தமிழர்களின் பூர்வீக பூமியான சாம்பூர் தற்போது சிங்கள அரசால் அபகரிக்கப்பட்டு, அங்கே இந்திய அரசின் துணையோடு அனல் மின் நிலையம் உருவாக்கும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
யாழ். குடாநாட்டில் தமிழர்களின் வளமான நிலங்களும் வீடுகளும் அபகரிக்கப்பட்டு, உயர் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டு, அங்கே தமிழர்களின் மீள் குடியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறே, வன்னியும் பல கூறுகளாக்கப்பட்டு, பாரிய பல படை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, அங்கே நிலை கொண்டுள்ள இலட்சத்திற்கும் அதிகமான படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தங்கும் விடுதிகள் அமைக்கப் பாரிய நிலப்பகுதி சிங்கள அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே புத்த கோவில்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
தமிழர்களுக்குப் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி, இலட்சக்கணக்கான தமிழர்களைப் பலிகொண்டதுடன் திருப்திப்படாத ராஜபக்ஷ அரசு, எஞ்சியுள்ள தமிழர்களையும் அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்தும் அப்புறப்படுத்தி நிரந்தர அகதிகளாக்குவதன் மூலம் அவர்களை அடுத்த வேளை உணவுக்கு மட்டுமே சிந்திக்க வைக்கும் நிலைக்குள் வைத்திருக்கும் சதி முயற்சியில் இறங்கியுள்ளது.
வன்னி முகாம்களிலிருந்து எமது மக்களை உடனடியாக விடுவிக்கும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதுடன், அந்த மக்களுக்கான மண்ணை மீட்கும் போராட்டத்தையும் தொடர வேண்டிய கடமை புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளது.
நாகரியமடையாத, அடைய விரும்பாத காட்டுமிராண்டி இனமாக மேற்குலகால் அடையாளம் காணப்பட்டுள்ள சிங்கள அரசுமீது மேலும் பல அழுத்தங்களைக் கொண்டு வருவதன் மூலமே எஞ்சியுள்ள எமது மக்களையும், எமது மண்ணையும் சிங்கள இனவாதிகளிடமிருந்து மீட்க முடியும்.
எமது மக்களை மட்டுமல்ல… அவர்களது மண்ணை மட்டுமல்ல… எமது தேசத்தை மீட்கும் போராட்டத்திலும் நாம் தொடர்ந்து செல்வோம்!
எமது மக்களையும், எமது மண்ணையும், எமது தேசியத்தையும், எமது தேசியத் தலைவரை நேசிக்கும் தமிழர்களே, களம் நோக்கி வாருங்கள்! கைகோர்த்துப் போராடுவோம்!!
ஈழநாடு (பாரிஸ்)
விடுதலைப் புலிகளது இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பலம் பொருந்திய சக்தியாக புலம் பெயர் தமிழர்களே உள்ளனர். தமது தாயக மக்களின் விடுதலைக்காகவும், தாயக மண்ணின் விடுதலைக்காகவும் புலம் பெயர் தமிழர்கள் தாம் வாழும் தேசத்து மக்களையும் அரசையும் தமது நியாயங்களை ஏற்றுக்கொள்ள வைப்பதன் மூலமாக சிங்கள தேசத்திற்கு மேலும் மேலும் பல நெருக்கடிகளை உருவாக்க முடியும்.
இந்த மக்கள் சக்தியைச் சிதைப்பதற்கான பெரும் திட்டமிடல்களுடன் சிங்கள தேசம் பலரை நம் மத்தியில் ஊடுருவச் செய்து, தகவல்களைத் திரட்டுவதுடன் பிளவுகளை உருவாக்கும் சதி முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. சிங்கள தேசத்தின் தமிழர்கள் மீதான யுத்தம் புலம்பெயர் தேசமெங்கும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்காக நம்மவர்கள் பலர் விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளனர் என்ற அபாயகரமான உண்மைகளையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சமாதான காலத்தில் இவ்வாறு ஊடுருவல் செய்த பலர் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலமிழக்கச் செய்ததிலும், அவர்களது களமுனைத் தகவல்களை எதிரிக்கு வழங்கிப் பேரழிவுகளை உருவாக்கியதையும் இறுதிவரை கள முனையில் இருந்த பல போராளிகள் கண்ணீரோடு தெரிவிப்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். மிகவும் உசார் நிலையிலுள்ள சிங்கள உளவுப் பிரிவினரின் முழுக் கவனமும் புலம்பெயர் தமிழர்கள் மீது திருப்பப்பட்டுள்ளது. எத்தனை தமிழர்கள் இதுவரை விலை போயுள்ளனர் என்ற கணக்கு இப்போதைக்கு வெளிவரப் போவதில்லை.
புலம்பெயர் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவதிலும், குழுக்களை உருவாக்குவதிலும் சிங்கள தேசம் எடுக்கும் முயற்சிக்குப் பலர் துணை போக ஆரம்பித்துள்ளதாகவே அண்மைக்கால சம்பவங்கள் தெரிவிக்கின்றன. பிரான்சில் இந்த நிலை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகின்றது.
பிரான்சில் நடக்கும் போராட்டங்களில் தமிழ் மக்களைப் பெருந்தொகையில் திரட்டுவதற்காக களத்தில் முன்நின்று பாடுபடுபவர்கள் அழைப்பு விடும் நிலையில், அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சிலர் மேற்கொள்ளும் பிரச்சார நடவடிக்கைகளின் பின்னணிகள் அவதானமாக ஆராயப்பட வேண்டும். போராட்டத்தில் மக்கள் பெருந்தொகையாகக் கலந்து கொண்டால், தாம் மேற்கொண்டுள்ள சதி முயற்சிகள் தோல்வி அடைந்துவிடும் என்ற அச்சம் காரணமாக முன் நின்று பாடுபடும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீது சேறு பூசும் அவதூறுகளும் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது.
தமிழீழத் தேசியத் தலைவர் கடந்த வருட மாவீரர் தின உரையில் மிகத் தெளிவாகவே புலம்பெயர் தமிழர்களுக்கும், இளையோர்களுக்கும் தனது ஆணையைத் தெரிவித்துள்ளார். 'புலம்பெயர் தமிழர்களே, போராடுங்கள்!, இளையோரே, போராடுங்கள்!' என்பது அவரது வேத வாக்கு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் பணியை தேசியத் தலைவர் அவர்கள் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துள்ளார். நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்ற அவரது விருப்பத்தை புலம் பெயர் தமிழர்கள் யாரும் தவிர்த்துவிட முடியாது.
எங்களது மண்ணின் விடுதலைக்காகவும், எங்களது மக்களின் விடிவிற்காகவும் தங்களை ஆகுதியாக்கி அந்த மண்ணில் தமிழீழக் கனவோடு கண்ணுறங்கும் 31,000 மாவீரர்களது தியாகமும், அந்தப் போர்க்களத்தில் தங்களைப் பலி கொடுத்த இலட்சத்திற்கும் மேலான தமிழர்களுக்கும், இறுதி யுத்த காலத்தில் சிங்கள தேசத்தின் இனஅழிப்புக் கொடூரங்களில் சிதைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட, உயிரோடு புதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், போராளிகள், தளபதிகள் அனைவருக்குமாக நாம் என்ன கைமாறு செய்யப் பொகின்றோம்?
இத்தனை தழிமர்களைக் கொன்று குவித்த பின்னரும் எஞ்சிய தமிழர்களை வதை முகாம்களுக்குள் வைத்து சித்திரவதைகள் புரியும், கடத்திச் சென்று படுகொலைகள் புரியும் சிங்கள தேசத்திற்கு நாம் என்ன பதில் கொடுக்கப் போகின்றோம்?
புத்தன் போதித்த அன்பு சிங்களவனுக்குப் புரியாத மொழி. காந்தி போதித்த அகிம்சை இந்தியாவுக்குப் பொருந்தாத மொழி. எங்கள் தேசத்து உறவுகளுக்கு எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கை புலம்பெயர்ந்து, பாதுகாப்புடன் நீதி ஆட்சி செய்யும் நிலங்களில் வாழும் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்களே. நாங்கள் போராடுவதற்கும், எங்களுக்கான நீதியைக் கோருவதற்கும், எமது உறவுகளது அவலங்களுக்காகக் குரல் கொடுப்பதற்கும் நாங்கள் வாழும் ஜனநாயகத்தைப் பேணும் நாடுகள் என்றுமே தடை போட்டதில்லை. எமக்கான போர்க்களம் என்றுமே திறந்துள்ளது. போராட வேண்டியவர்கள் நாங்கள் மட்டுமே. போர்க் களத்தில் நாங்கள் போராளிகள் மட்டுமே.
எங்களுக்கான கடமைகளை நாங்கள் செய்வது மட்டுமே எமது பணி. யார் வருகிறார்கள்? யார் வரவில்லை? அவர்கள் வந்தால், நாங்கள் வரமாட்டோம்! அவர்கள் வராவிட்டால் நாங்கள் வரமாட்டோம்! என்ற வார்த்தைகளும் வாதங்களும் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க எண்ணுபவர்களின் தேசியத் துரோகமாகவே கணிக்கப்பட வேண்டும்.
தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் எவரும் போர்க் களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது. தமிழ்த் தேசியத்திற்கான போர்க் களம் பொதுவானது. அங்கே நாம் வகிக்கும் பங்குகள் மட்டுமே எம்மை முதன்மைப்படுத்தும். மக்களே தலைமையைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளார்கள். மக்களே யாரை ஏற்றுக்கொள்வது, யாரை நிராகரிப்பது என்பதை முடிவு செய்வார்கள். தலைவர்களாக யாரும் தம்மை நியமித்துக் கொள்ள முடியாது என்ற யதார்த்தம் தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.
தமது போர்க்களத்தை வழிநடாத்த, நெறிப்படுத்த யாருக்கு முடியும் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்.
தேசியத் தலைவரை நேசிப்பவர்களே! மாவீரர்களை பூசிப்பவர்களே! எங்கள் மக்களை சிங்கள இனவாத அழிப்பிலிருந்து மீட்போம் என்ற உறுதியுடன் அனைவரும் போர்க்களத்திற்கு வாருங்கள்! அங்கே உங்கள் திறமைக்கான பணிகளும் பதவிகளும் காத்திருக்கின்றது.
புலிக்கொடி ஏந்திப் புயலாக வாருங்கள்! இது புலிகளின் காலம் என்று உறுதியோடு வாருங்கள்!!
நன்றி: ஈழநாடு (பாரிஸ்)