Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, August 2, 2009

♥ செலவுமிக்க முதல் 10 நகரங்கள்- 2009 ♥

உலகளாவிய ரீதியில் வாழ்க்கைச்செலவுமிக்க முதல் 10 நகரங்கள்- 2009

உலகளாவிய ரீதியில் Mercer நிறுவனமானது 6 கண்டங்களின் 143 நகரங்கள் பூராகவும் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் உலகளவில் வாழ்க்கைச் செலவுமிக்க நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் போது வீட்டு விலை, போக்குவரத்து, உணவு,உடை, வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடங்களாக 200 விடயங்களை கருத்தில் கொண்டமை குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை மையமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.நியூயோர்க் நகருக்கு 100 புள்ளிகள் கொடுத்து அதை ஒப்பிட்டு மற்ற நகரின் செலவை கணக்கிட்டனர். இந்த ஆய்வில் உலகளாவிய ரீதியிலான நாணய தளம்பல்கள், பொருளாதார சரிவு ஆகியன மிக முக்கிய மாற்றங்களுக்கு காரணமாகியது.

டோக்கியோ நகரம்

குறிப்புக்கள்
  • டோக்கியோ நகரமானது மொஸ்கோ நகரினை பின்தள்ளி வாழ்க்கைச்செலவுமிக்க நகரங்களில் 1வது இடத்துக்கு வந்துள்ளது.
  • ஜொகனஸ்பேர்க் நகரம் வாழ்க்கைச்செலவில் மலிவானதாகும்.
  • ஆசிய,ஐரோப்பிய நகரங்கள் முதல் 10 இடங்களை வகிக்கின்றன.
  • அவுஸ்ரேலியா, நியூசிலாந்து,இந்தியா ஆகியன வீழ்ச்சிப் போக்கை காட்டுகின்றன.
  • அமெரிக்கா,சீனா,ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் உயர்வு பெற்றுள்ள.

ஜொகனஸ்பேர்க் நகரம்

ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள்,ஆபிரிக்கா
ஆய்வின் பிரகாரம் பெருமளவான ஐரோப்பிய நகரங்கள் கீழ்நோக்கிய இறக்கங்களை காட்டுகின்றன.லண்டன் நகரம் 2008ல் 3ம் இடமும்,ஒஸ்லோ நகரம் 2008ல் 4ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன.ஆனால் இவை 2009ல் முறையே 16ம்,14ம் இடங்களை வகிக்கின்றன.

ஜெனிவா,சூரிச் முறையே 4ம்,6ம் இடங்களை வகிக்கின்றன.கொபென்ஹகென் மாற்றமின்றி 7ம் இடத்திலும்,மிலான் மற்றும் பாரிஸ் ஒரு இடம் வீழ்ந்து 11ம்,13ம்இடங்களை வகிக்கின்றன.

ஜேர்மனி ,ஸ்பெய்ன் நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் வீழ்ச்சி கண்டுள்ளன.அதேபோல் சுவீடன், உக்ரேன், செக் குடியரசு,ரொமேனியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் நகரங்களும் தரப்படுத்தலில் வீழ்ச்சி கண்டுள்ளன.

Warsaw plummeting 35இல் இருந்து 113க்கும், Glasgow (129ம் இடம்) , Birmingham (125tம் இடம்) ஆகிய UK நகர்கள் முறையே 60 மற்றும் 59 இடங்கள் வீழ்ந்துள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளின் நகரங்களில் துபாய் நகரம் 2008ல் 52ம் இடமும், அபுதாபி நகரம் 2008ல் 65ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன. ஆனால் இவை 2009ல் முறையே 20ம்,26ம் இடங்களை வகிக்கின்றன.டெல் அவிவ் நகரம் மாத்திரமே மத்திய கிழக்கு நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் இறக்கம் பெற்றுள்ளது.(14ம் இடத்திலிருந்து 17ம் இடம்)

அதிகமான ஆபிரிக்க நகரங்கள் தரப்படுத்தலில் மேல் நோக்கி உயர்வு பெற்றுள்ளதுடன்,அவற்றின் சுட்டெண்களும் குறைவடைந்துள்ளது. கெய்ரோ 44ம் இடத்திலிருந்து 57ம் இடத்துக்கும், ஜொகனஸ்பேர்க் நகரம் அடிமட்டத்துக்கும் சரிவடைந்துள்ளது.

அமெரிக்கா (America's)
அமெரிக்க நகரங்களில் நியூயோர்க் நகரம் 2008ல் 22ம் இடமும்,லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் 2008ல் 55ம் இடமும் , வாசிங்டன் நகரம் 2008ல் 107ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன.ஆனால் இவை 2009ல் முறையே 8ம்,23ம்,66ம் இடங்களை வகிக்கின்றன.

கனடிய நகரங்களில் டொரண்டோ நகரம் 2008ல் 54ம் இடமும்,ஒட்டாவா நகரம் 2008ல் 85ம் இடமும் , மொன்றியல் நகரம் 2008ல் 72ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன.ஆனால் இவை 2009ல் முறையே 85ம்,121ம்,103ம் இடங்களை வகிக்கின்றன.

தென் அமெரிக்க நகரங்களில் வெனிசுவேலாவின் கரகஸ் நகரம் தரப்படுத்தலில் முதன்மை இடம் வகிக்கின்றது.

Sao Paolo 25ம் இடத்திலிருந்து 72ம் இடத்துக்கும் மற்றும் Rio de Janeiro 31ம் இடத்திலிருந்து 73ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.
Bogota 87ம் இடத்திலிருந்து 120ம் இடத்துக்கும், Buenos Aires 26 இடங்கள் முன்னேறி 112ம் இடத்தினையும் வகிக்கின்றன.


ஆசியா
ஆசியாவினைப் பொறுத்தவரை டோக்கியோ நகரம் உலகளாவிய ரீதியில் 1ம் இடத்தையும்,ஒசாகா நகரம் 2ம் இடத்தையும் வகிக்கின்றன.கொங்கொங் 5ம் இடத்தையும், சிங்கப்பூர் கடந்த வருடத்திலிருந்து 3இடங்கள் முன்னேறி 10ம் இடத்தையும் வகிக்கின்றன.இந்த பிராந்தியத்தில் தொடந்து கராச்சி(140ம் இடம்) செலவு குறைந்த நகரமாகும் , ஆனால் கடந்த வருடத்தை விட ஒரு இடம் முன்னேறியுள்ளது.

இந்திய நகரங்கள் எல்லாம் தரவரிசையில் இறக்கங்களை காட்டியுள்ளன.புது டில்லி 55ம் இடத்திலிருந்து 65ம் இடத்துக்கும், மும்பாய் 48ம் இடத்திலிருந்து 66ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.

சீன நகரங்களில் பீஜிங் 11இடங்கள் முன்னேறி 9ம் இடத்துக்கு வந்துள்ளது. Shanghai, Shenzhen , Guangzhou முறையே 12ம்,22ம்,23ம் இடங்களை வகிக்கின்றன,

அவுஸ்ரேலியா,நியூசிலாந்து
அவுஸ்ரேலிய நகரங்களில் சிட்னி 15ம் இடத்திலிருந்து 66ம் இடத்துக்கும், மெல்பேர்ன் 36ம் இடத்திலிருந்து 92ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.

நியூசிலாந்து நகரங்களில் ஒக்லண்ட் 78ம் இடத்திலிருந்து 138ம் இடத்துக்கும், வெலிங்டன் 93ம் இடத்திலிருந்து 139ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.


வாழ்க்கைச்செலவுமிக்க முதல் 10 நகரங்கள் - 2009
1ம் இடம் டோக்கியோ நகரம் - ஜப்பான் (2008ல் 2ம் இடம்)
2ம் இடம் ஒசாகா நகரம் - ஜப்பான் (2008ல் 11ம் இடம்)
3ம் இடம் மொஸ்கோ நகரம் - ரஷ்யா (2008ல் 1ம் இடம்)
4ம் இடம் ஜெனிவா நகரம்-சுவிட்சர்லாந்து(2008ல் 8ம் இடம்)
5ம் இடம் கொங்கொங் நகரம்-கொங்கொங்(2008ல் 6ம் இடம்)
6ம் இடம் சூரிச் நகரம் - சுவிட்சர்லாந்து (2008ல் 9ம் இடம்)
7ம் இடம் கொபென்ஹகென் நகரம்-டென்மார்க் (2008ல் 7ம் இடம்)
8ம் இடம் நியூயோர்க் நகரம்-அமெரிக்கா(2008ல் 22ம் இடம்)
9ம் இடம் பீஜிங் நகரம் - சீனா (2008ல் 20ம் இடம்)
10ம் இடம் சிங்கப்பூர் நகரம் - சிங்கப்பூர் (2008ல் 13ம் இடம்)

http://kklogan.blogspot.com/2009/07/10-2009.html

♥ தலைவர் பிரபாகரன் தொடர் 12 ♥

தலைவர் பிரபாகரன் தொடர் 12


'ஐயோ, உயிருக்கு ஆபத்தில்லையே?' என்றுதான் முதலில் கேட்டிருக்கவேண்டும். ஆனால் பிரபாகரன் கேட்டது, `ஐயோ, யார் செய்தது?'

அவருக்குத் தெரியும். அத்தனை எளிதில் போகக்கூடிய உயிர் இல்லை அது. ஏனெனில் சதாசிவம் கிருஷ்ணகுமார் என்கிற வெங்கிட்டு என்கிற கிட்டுவின் உயிர், ஏழு கடல் தாண்டி, ஏழு மலைதாண்டி எங்கோ ஒரு ரகசிய இடத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அசுரனின் உயிர் போல ஈழ விடுதலை என்னும் பெருங்கனவுக்குள் புதைத்துவைக்கப்பட்டிருப்பது. சற்றும் நிகரற்ற போராளி. அப்பழுக்கே சொல்லமுடியாத அர்ப்பணிப்பு உணர்வின் சொந்தக்காரர். ஒப்புவமையற்ற சுறுசுறுப்பு. ஓயாத களப்பணி. புலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே பிரபாகரனுக்கு கிட்டு ஒரு முக்கியத் தளபதி.

அவருக்குத்தான் ஆபத்து என்று செய்தி வந்திருந்தது. அன்றைக்கு மார்ச் 31-ம் தேதி. 1987-ம் வருடம். யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்கு வீதி வழியே கிட்டுவின் மிட்சுபிஷி லான்ஸர் போய்க்கொண்டிருந்தது. மிகச் சரியாகக் குறி பார்க்கப்பட்டு எங்கிருந்தோ வீசப்பட்ட கையெறி குண்டு, காரில் மோதி வெடித்தது. எழுந்த பெரும் சத்தமும் சூழ்ந்த கரும் புகையும் சில வினாடிகள் பிராந்தியத்தை நிலைகுலையவைத்துவிட்டன.

சில வினாடிகள்தாம். ஐயோ, உள்ளே இருப்பது கிட்டுவல்லவா? பாய்ந்து கதவைத் திறந்து அவரை வெளியே இழுத்தபோது எங்கிருந்து என்று தெரியாமல் ரத்தம் பொங்கிக்கொண்டிருந்தது. கிட்டுவை மருத்துவமனைக்கும் தகவலைப் பிரபாகரனுக்கும் உடனே உடனே அனுப்பிவிட்டு, யாழ்ப்பாணத்து மக்கள் கவலை தின்று காத்துக்-கிடந்தார்கள்.

அப்போதுதான் பிரபாகரன் கேட்டார். யார் செய்தது?

பிரச்னை. பெரிய பிரச்னை. மாபெரும் அரசு இயந்திரத்துக்கு எதிராக ஒரு யுத்தத்தை திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், இயக்கத்துக்கு உள்ளே இம்மாதிரியான பிரச்னைகள் எழுவது ஆபத்து. ஆனாலும் கிருமிகள் போல விஷ எண்ணங்கள் சில மனங்களுக்குள் நுழைந்துவிடுகின்றன. பதவிப் போட்டி. அதிகாரப் போட்டி. ஆளுமையில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்கிற ஒப்பீடு.

மாத்தையாதான் காரணம் என்று இயக்கத்தில் பலபேருக்குச் சந்தேகம். விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டாம் நிலைத் தளபதியும் பிரபாகரனின் மிக நெருங்கிய சகாவுமான கிட்டுவின் கார் மீது வேறு யார் குண்டு வீசத் துணிய முடியும்? தவிரவும் கிட்டுவைப் பகையாளி என்று கருத, இயக்கத்தில் வேறு யாரும் கிடையாது.

ஒரு வீரனாகக் களத்தில் கிட்டுவின் இருப்பும் செயல்பாடும் மிகத் தீவிரமானது. அவருக்கு பிரபாகரன் தான் ராணுவ குரு. துப்பாக்கி பிடிக்கக் கற்றுக்கொண்டது அவரிடம்தான். ஒரு சமயம் ஊராட்சித் தேர்தல் ஒன்று நடந்தது (1983). கண் துடைப்புத் தேர்தல். அதனைப் புறக்கணியுங்கள் என்று புலிகள் மக்களிடம் சொல்லியிருந்தார்கள். இருப்பினும் அரசாங்கம் தேர்தல் வேலைகளில் மும்முரமாகவே இருந்தது. ராணுவப் பாதுகாப்-புடன் வாக்குச் சாவடிகளில் தேர்தல் தினம் விடிந்தபோது, கிட்டு துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச் சாவடிகளுக்குப் போனார். கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்த்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவலுக்கு இருந்த ராணுவத்தினர் அத்தனை பேரும் இல்லாமல் போனார்கள்.

கிட்டு பயின்றது கெரில்லா தாக்குதல்தான். ஆனாலும் அவருடைய வேகம் பிற போராளிகளால் எளிதில் கடைப்பிடிக்கக்கூடியதல்ல. பிரபாகரனுக்குத் தனிப்பட்ட முறையில் இதில் மிகப்பெரிய பெருமித உணர்வு உண்டு. ஒரு சுத்த வீரனைப் பெறுவதைக் காட்டிலும் தலைவனுக்கு வேறு பெரிய மகிழ்ச்சி இருந்துவிட முடியாது.

அதனால்தான் துடித்துப் போனார். மருத்துவமனையிலிருந்து வந்த தகவல் விரும்பக்கூடியதாக இல்லை. கிட்டுவின் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் ஒரு கால் போய்விட்டது.

1979-ம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த கிட்டுவுக்கு, பிரபாகரன் இரண்டு விஷயங்கள் கற்றுக்கொடுத்தார். முதலாவது, யுத்தம் செய்வது. அடுத்தது, சமையல் செய்வது.

`வெங்கிட்டு, சமையலை எளிதாக நினைக்காதே. ஒரு போராளிக்குச் சமைக்கத் தெரியவேண்டியது மிகவும் அவசியம். வேளைக்குச் சாப்பிடவேண்டும் என்பதற்காக அல்ல. நாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் ருசி குறித்து அதிகம் யோசிக்காது இருப்போம். சாப்பாட்டு ருசி ஒழிந்தால்தான் விடுதலைக்கான யுத்தத்தில் முழுக்கவனம் செலுத்தமுடியும்' என்பார் பிரபாகரன்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அத்தனை பேருக்குமே சமைக்கத் தெரியும். அது அங்கே ஒரு கட்டாயப்பாடம். என்னத்தையாவது போட்டுச் சமைத்து கூடி உட்கார்ந்து சாப்பிடும் வழக்கம் எப்போதும் உண்டு.

சென்னையில் இருந்த காலத்தில் ஒருநாள் கிட்டு, `இன்றைக்கு எனக்கு இங்கே சாப்பாடு இல்லை. வெளியே ஒரு புரட்சி செய்யப்போகிறேன்' என்று தோழர்களிடம் அறிவித்தார். என்னவோ விவகாரம் என்று பிரபாகரனுக்குப் புரிந்துவிட்டது. `நண்பா ஜாக்கிரதை' என்று மட்டும் சொன்னார். காத்திருந்தார்கள். கிட்டு தனது அன்றைய உணவு கோட்டாவான பத்து ரூபாயுடன் கூடுதலாகக் கொஞ்சம் பணம் கேட்டு வாங்கிக்கொண்டார். குளித்துவிட்டு வேட்டி கட்டிக்கொண்டார். மேல் சட்டை அணியாமல் நாலணாவுக்கு ஒரு பூணூல் வாங்கிப் போட்டுக்கொண்டு நெற்றியிலும் கழுத்திலும் இரு தோள்களிலும் வயிற்றிலும் பட்டை பட்டையாக விபூதி பூசிக்கொண்டார். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ருத்திராட்ச மாலை வாங்கி அணிந்துகொண்டு, `சரி வருகிறேன்' என்று புறப்பட்டு வெளியே போனார்.

அவர் நேரே போன இடம் ஒரு மிலிட்டரி ஹோட்டல். இயக்கத் தோழர்கள் சிலர், என்ன நடக்கிறது என்று பார்க்க அவருடன் வந்து உட்கார, கிட்டு சர்வரிடம் திட்டவட்டமாகத் தனது ஆர்டர்களை அளித்தார். மட்டன் பிரியாணி. முட்டை பொடிமாஸ். கோழிப் பொரியல்.. வேறென்ன இருக்கிறது?

சுற்றிலும் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த யாரைப்பற்றியும் கவலைப்படாமல் வக்கணையாக ருசித்துச் சாப்பிட்டு முடித்து பில்லுக்குப் பணம் கொடுத்துவிட்டு, அந்த ஹோட்டலின் உணவுத்தரத்தையும் பாராட்டிவிட்டு பெரிதாக ஓர் ஏப்பம் விட்டபடி எழுந்து வந்தார் கிட்டு.

அந்தணர்களைக் கிண்டல் செய்வது என் நோக்கமல்ல. ஓர் அந்தணர் மிலிட்டரி ஹோட்டலுக்கு வந்தால் மற்றவர்கள் எத்தனை பதற்றமாகிவிடுகிறார்கள் என்று பார்த்தீர்களல்லவா? தோற்றத்துக்கும் செயல்பாடுகளுக்கும் நாமே நெருங்கிய தொடர்பை உண்டாக்கிவிடுகிறோம் என்று சொல்லிவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார். விழுந்து விழுந்து சிரித்தார் பிரபாகரன்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாணத் தளபதியாக இருந்தவர் பண்டிதர். 1985-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அவர் ஒரு தாக்குதலில் மரணமடைய, அந்தப் பொறுப்புக்குக் கிட்டுவை அமர்த்தினார் பிரபாகரன்.

கிட்டு இயக்கத்துக்கு வந்த சமகாலத்தில்தான் மாத்தையாவும் வந்தார். மாத்தையா பருத்தித்துறையைச் சேர்ந்தவர். அவரும் பிரபாகரனிடம் போர்ப்பயிற்சி பெற்று வளர்ந்தவர்தான். யாழ்ப்பாணத்துக்குக் கிட்டு என்றால், வன்னிக்கு மாத்தையா. சம அந்தஸ்துதான். சம பொறுப்புதான். ஒரே பதவிதான். ஆனாலும் கிட்டுவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. அவர் நடத்திய தாக்குதல் சம்பவங்கள். அவற்றில் கிடைத்த வெற்றிகள். பிரபாகரனுக்கு அவர் மீதிருந்த அன்பு. இயக்கத்தோழர்கள் மத்தியில் வளர்ந்த மரியாதை. யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் பரவிய புகழ், இந்தியத் தொடர்புகள், கிட்டுவின் வாசிப்பு ஆர்வம், உலக அறிவு, அரசியல் அறிவு, எல்லாவற்றுக்கும் மேலாக அவரது அர்ப்பணிப்புணர்வு..

இன்னது என்று சொல்லமுடியாது. மாத்தையாவுக்கு கிட்டுவின் வளர்ச்சி பிடிக்காது போயிற்று. செய்தது மாத்தையாதான் என்று அப்போது தெரியாவிட்டாலும், அந்த கார் குண்டு வீச்சு ஏதோ ஓர் அபாயத்தின் ஆரம்பம் என்று பிரபாகரன் மனத்தில் பட்டது. உமா மகேஸ்வரன் விவகாரம் முடிந்து, அதன்பின் தன் காதல் திருமண களேபரங்கள் முடிந்து, இயக்கத்தில் பலர் பிரிந்து, போராடி ஒன்று சேர்த்து, இழுத்துக்கட்டி ஒருவழியாக சுதந்திரப் போரில் முழுக் கவனம் குவிக்க ஆரம்பித்த தருணத்தில், இது பேரபாயம் என்று உள்ளுக்குள் ஒரு குரல் ஓலமிட்டது.

அந்த அபாயத்தின் அதிர்வு அத்துடன் நிற்காமல் கருணா போன்றோரின் கலகங்கள் வரை நீண்டது புலிகளின் சுதந்திரப் போராட்டத்தின் இரண்டாவது பாகம். அந்த இரண்டாவது பாகத்தில் பிரபாகரனின் களப்பணியும், சிந்தனையும் எப்படி இருந்தது?

ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நாம் மீண்டும் களத்தில் சந்திப்போம்..



(முதல் பாகம் முற்றும்)

http://eelavarkural.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

♥ தலைவர் பிரபாகரன் தொடர்-11 ♥

தலைவர் பிரபாகரன் தொடர்-11


ன்னிக்கவேண்டும். நீங்கள் சாக அனுமதிப்பதற்கில்லை என்றார்' பிரபாகரன்.

நான்கு பெண்களும் ஆளுக்கொரு பக்கம் திரும்பி நின்றிருந்தனர். நான்கு முகங்களிலும் நான்கு கோபங்கள். இதே உண்ணாவிரதம் கூடாது என்று அரசாங்கக் காவல் துறையினர் வந்து இழுத்துச் செல்வார்கள் என்றுதான் அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். போகிற வழியில் தர்ணா செய்யலாம். லாக்கப்பில் கலாட்டா செய்யலாம். கோர்ட்டில் கோஷம் போடலாம், சிறைச்சாலையில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கலாம், செய்தி வெளியே வரும், விஷயம் பெரிதாகும், மக்கள் திரண்டு ஊர்வலம் போவார்கள், கல்லூரி காலவரையறையற்று மூடப்படும் என்று அடுத்தடுத்த திட்டங்கள் தயார்.

எதிர்பார்க்கவில்லை. இப்படி இழுத்து வந்து வலுக்கட்டாயமாகச் சாப்பிடவைத்து போதனை செய்யும் இந்த மனிதர் யார்?

என் பெயர் பிரபாகரன் என்றார் பிரபாகரன். கேள்விப்பட்டிருந்தார்கள். பார்த்ததில்லை. இவரா? சே. ஒரு புரட்சி இயக்கத்தின் தலைவர் இத்தனை குள்ளமாக, கட்டை குட்டையாக, மெல்லிய குரலில் பேசிக்கொண்டு... பார்த்தால் குண்டு வைக்கக்கூடிய ஆசாமிபோல் தெரியவில்லையே? குரலில் என்ன ஒரு மிருது!

சுற்றி இருந்தவர்களும் அப்படித்தான் இருந்தார்கள். அன்பான பேச்சு. கனிவான பார்வை. துடிப்பான கண்காணிப்பு. உயிர் விலைமதிப்பற்றது. வீணாக அதனை இழக்கக்கூடாது. உங்களை நான் தமிழகத்துக்கு அனுப்புகிறேன். தேசத்துக்கு ஏதாவது செய்ய நினைத்தால் உருப்படியாகச் செய்யுங்கள். சம்மதமா? சம்மதித்தார்கள். தோணி ஏறினார்கள்.

மதிவதனி, வினோஜா, லலிதா, ஜெயா என்கிற அந்த நான்கு பெண்களும் கோடியக்கரை வரைக்கும் தோணியில் வந்து அங்கிருந்து பஸ் பிடித்துச் சென்னைக்கு வந்து சேர்ந்தபோது, அழைத்துச்சென்று தங்கவைக்கும் பொறுப்பு திருமதி அடேல் பாலசிங்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

திருவான்மியூர் வீட்டில் நான்கு பெண்களுக்கும் அறை ஒதுக்கப்பட்டது. பாலசிங்கம் தன் மனைவியைத் தனியே கூப்பிட்டுச் சொன்னார். கவனம். யாழ்ப்பாணத்து ஒழுக்க விதிகள் ரொம்பக் கடுமையானவை. திருமணமாகாத பெண்களை நாம் ஆயுதங்களைப் பாதுகாப்பதுபோல் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். ஆண்களுடன் பேசுவது, பழகுவது, அவர்கள் புழங்கும் இடத்தில் சகஜமாக வந்து போவதற்குக் கூட கண், காது, மூக்கு வைத்துவிடுவார்கள். தம்பி, உன் பொறுப்பு என்று சொன்னது அவர்களது நிகழ்காலத்துக்கு மட்டுமல்ல. எதிர்காலத்துக்கும் சேர்த்து.

அடேலும் பெண் தான். ஆனால் ஆஸ்திரேலியப் பெண். லண்டனில் வசித்த பெண். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண். அவர் யாழ்ப்பாணத்து மக்களை அப்போதுதான் படித்துக்கொண்டிருந்தார். விடுதலைப் புலிகளின் முகாமில் முதல் முதலில் அவர் வந்து சேர்ந்தபோதே நிறைய சங்கடங்களைச் சமாளிக்கவேண்டியிருந்தது.

ஒருவழியாகப் பிரபாகரன் அவரை `அன்ரி' (ஆண்ட்டி) என்று அழைத்து ஆரம்பித்துவைக்க, அதுவே அவரது நிரந்தர உறவு முறையாயிற்று.

ஆனால் இந்தப் பெண்கள்?

பிரபாகரன் வந்தார். அனைவருக்கும் அந்த நான்கு பேரையும் அறிமுகம் செய்துவைத்தார். இனி இவர்களும் நம்மைச் சேர்ந்தவர்கள். சமையலில், பிற வேலைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆயுதம் பழக விரும்பினால் ரொம்ப சந்தோஷம். கற்றுக்கொடுங்கள். இன்னும் சில பெண்கள் விரைவில் வந்து சேர வாய்ப்பு இருக்கிறது. வந்தார்கள். ஒருவர் இருவரல்லர். நிறையவே வந்தார்கள். தமிழகத்தில் பயிற்சி, ஈழத்தில் யுத்தம், வாருங்கள் என்று.

`டெலோ' கூப்பிட்டு நிறையப் பெண்கள் தோணி ஏறியிருந்தார்கள். கல்லூரிப் பெண்கள். படிப்பை விட்ட, படித்து முடித்த பெண்கள். துரதிருஷ்டவசமாக அவர்களைத் தமிழகத்தில் தங்க வைக்கவோ, முறையான பயிற்சியளிக்கவோ டெலோ ஏற்பாடு செய்யத் தவறியிருந்தது. என்ன செய்வது, எங்கே போவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்களுக்குப் பிரபாகரன் ஒரு மூத்த சகோதரன் போல நின்று அழைத்தது, மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

அத்தனைபேரும் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களில் அடைக்கலமானார்கள். திருவான்மியூரில் தங்குமிடம். சென்னைக்கு வெளியே பல இடங்களில் பயிற்சி. போவார்கள், வருவார்கள், சமைப்பார்கள், சாப்பிடுவார்கள். பேசித் தீர்த்துவிட்டுப் படுத்துத் தூங்கினால் மறுநாள் மீண்டும் பயிற்சி.

பிரபாகரன் வருவார். அனைவருடனும் பேசுவார். உற்சாகமான, நம்பிக்கையூட்டக்கூடிய அற்புதமான பேச்சுகள். அனைவரையும் கூப்பிட்டு உட்காரவைத்து கோழியடித்துக் குழம்பு வைப்பார். பாலசிங்கம் மீன் சமைப்பதில் கில்லாடி.

வேறு பல தோழர்கள் கறிகாய் நறுக்குவார்கள். கடைக்குப் போவார்கள். துணி துவைப்பார்கள். வீடு பெருக்கி, சுத்தம் செய்வார்கள். ஹாஸ்டல் வார்டன் மாதிரி அடேல் பாலசிங்கம் அத்தனை பேரையும் கட்டி மேய்ப்பார்.

`அன்ரி, நீங்களும் ஏன் பிஸ்டல் சுடக் கற்கக்கூடாது?' பிரபாகரன் ஒருநாள் கேட்டார். அவருக்கும் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி முடித்துத் திரும்பிய ஒருநாள் தற்செயலாகப் பிரபாகரன் சொன்னார். `நான் மதிவதனியை விரும்புகிறேன்.'

ஒரு கண்ணிவெடிகூட அத்தனை அதிரச் செய்திருக்க முடியாது. இயற்கை என்ன இலங்கை அரசா? எதிர்த்து நின்று போராடி ஜெயிக்க? ஆனால் ஆரம்பத்தில் யாருக்கும் புரியவில்லை. அல்லது புரிந்துகொள்ள யாரும் விரும்பவில்லை. அன்றைக்கு உமா மகேஸ்வரனை அத்தனை கேள்வி கேட்டாயே, இன்றைக்கு உன் காதல் அத்தனை முக்கியமாகிப் போய்விட்டதா என்றுதான் பெரும்பாலானோர் கேட்டார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கம் காதலுக்கு எதிரியல்ல. காதலித்துக்கொண்டே காலம் கழிப்பதற்கோ, கழட்டிவிட்டுவிட்டுப் போய்விடுவதற்கோதான் எதிரி. ஒரு பெண்ணைப் பிடிக்கிறதா? கூப்பிட்டுப் பேசு. பெண்ணிடமல்ல. பெற்றோரிடம். புரியவை. மணந்துகொள். தீர்ந்தது விஷயம்.

ஆனால், உமா மகேஸ்வரன் பாதித்திருந்தார். மிகவும் பாதித்திருந்தார். இயக்கத்திலிருந்து அவரை வெளியேற்றியது, அவர் ப்ளாட் இயக்கம் கண்டது, ஒரு பெரும் படை அவருடன் போனது, பல வெளிநாட்டுத் தொடர்புகள் அவருடன் சென்றது எல்லாம், எல்லாமே எல்லோரையும் பாதித்திருந்தன. அதனால், பிரபாகரனுக்குக் காதல் என்றபோது சுற்றி நின்று கேள்வி கேட்டார்கள். சொற்களில் கோபம் சேர்த்து, சுற்றிச் சுற்றி அடித்தார்கள்.

பிரபாகரன் அனைவருக்கும் பொறுமையாக பதில் சொன்னார். ஆமாம், காதலிக்கிறேன். திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். நீங்களும் காதலிக்கலாம். திருமணம் செய்துகொள்ளலாம். திருமணத்தை நாம் தடுப்பதே இல்லை.

பாலசிங்கம் இயக்கத்தில் ஒவ்வொருவரிடமும் தனியே பேசினார். பேசிப்பேசிப் புரியவைத்தார். காதல் இயற்கையானது. திருமண உறவு ஆரோக்கியமானது. அதற்குத் தடைபோடுவதன்மூலம் எதையும் பெரிதாகச் சாதித்துவிட முடியாது. முறையற்ற உறவைத்தான் கூடாது என்று சொல்கிறோம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

பலர் புரிந்துகொண்டார்கள். சிலர் புரிந்துகொள்ள மறுத்தார்கள். பெரிய களேபரத்துக்குப் பிறகுதான் பிரபாகரன் மதிவதனி திருமணம் நடந்தது.

மதிவதனியின் பெற்றோர் புங்குடுத் தீவிலிருந்து புறப்பட்டு வந்திருந்தனர். பாலசிங்கம் அவர்களுடன் உட்கார்ந்து பேசிப் புரியவைத்திருந்தார். 1984-ம் வருடம் அக்டோபர் முதல் தேதி. திருப்போரூர் முருகன் கோயிலில் மிக எளிமையாக நடந்த திருமணம் அது. குறைந்தபட்ச உறவினர்கள், குறைந்தபட்ச நண்பர்கள்.

திருமணம் முடிந்தபிறகும்கூட இயக்கத்தில் பலரால் அதை நம்பமுடியாமலேயே இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பு உலகெங்கும் பரவத் தொடங்கியிருந்த காலம் அது. லண்டனில் புலிகள் இருந்தார்கள். பிரான்ஸில் இருந்தார்கள். ஸ்விட்சர்லாந்தில் இருந்தார்கள். ஆஸ்திரேலியாவில் பரவியிருந்தார்கள். தகவல் ஒவ்வொரு இடமாகப் போகப் போக, அத்தனை பேரும் நிஜமா, நிஜமா என்று நம்பமுடியாமல்தான் கேட்டார்கள்.

இந்தக் கட்டத்தில் பாலசிங்கம் செய்த உதவி மகத்தானது. அவர்தான் பேசினார். அவர் மட்டும்தான் பேசினார். பேசிப்பேசிப் புரியவைத்தார். தனி மனித உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கப் பழகுங்கள். அப்படிக் கொடுக்காத சந்தர்ப்பங்கள் அனைத்தும் விரிசலை உண்டாக்கியிருக்கின்றன. தனி வாழ்க்கை ஒழுங்காக இருந்தால்தான் இயக்கமாகச் செயல்படும்போது முழுக்கவனம் செலுத்த முடியும்.

ஒன்று சொல்லவேண்டும். பிரபாகரன் மாதிரி ஒரு செயல்வெறி கொண்ட வீரரைத் திருமணம் செய்துகொள்ள ஒரு துணிச்சல் வேண்டும். தன்னைத்தானே நாட்டுக்கு நேர்ந்துவிட்டுக்கொண்டவரின் வீட்டை ஆள்வதென்பது சாதாரண செயலல்ல. விவசாய விஞ்ஞானம் படித்துக்கொண்டிருந்த மதிவதனி அதன்பின் வீட்டு நிர்வாக விஞ்ஞானம் பயில ஆரம்பித்தார்.

மூன்று குழந்தைகள் அவர்களுக்குப் பிறந்தன. சார்ல்ஸ் ஆண்டனி, துவாரகா, பாலச்சந்திரன். மூன்றுமே மாவீரர்களின் பெயர்கள். (பாலச்சந்திரன் என்பவர் மதிவதனியின் சகோதரர். அவரும் புலிகள் இயக்கத்தில் இருந்து வீரமரணம் அடைந்தவர்தான்.)

வாழ்நாளில் பெரும்பகுதி கானகத்தில். இன்று உறங்கும் இடத்தில் நாளை இருப்போமா என்று தெரியாது. இன்று கிடைத்த உணவு நாளை கிடைக்குமா தெரியாது. இன்றிருக்கும் உயிர் நாளை இருக்குமா என்றும் தெரியாது.

அதனாலென்ன? இந்த வாழ்க்கையும் இனிக்கத்தான் செய்கிறது. ஓய்வான சமயங்களில் பிரபாகரன் வீட்டு வேலைகளும் பார்த்தார். கோழியடித்துக் குழம்பு வைக்க இப்போதும் தயங்குவதில்லை. வாருங்கள், ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்றால், இரு என்று ஓடிச் சென்று ஒரு பூந்தொட்டியை எடுத்துவந்து அருகே வைத்துக்கொண்டு, ம், எடு என்னும் குழந்தைத்தனம் அப்படியேதான் இருக்கிறது, தன்னால் ஒழுங்காக இங்கிலீஷ் பேசமுடியவில்லையே என்கிற வருத்தத்தைப் போலவே.

ஆ, அது ஒரு தீராத வருத்தம். அடிக்கடி சொல்லி ஏங்குவார். மதிவதனி கமுக்கமாகச் சிரிப்பார். சர்வதேசத் தலைவர்களுடன், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சகஜமாகப் பேசமுடியாமல் என்ன ஒரு சிக்கல்! யாராவது இங்கிலீஷ் தெரிந்தவர்கள் உடன் இருந்தே தீரவேண்டியிருக்கிறது. சே. படித்திருக்கலாம்.

டே தம்பி, நீயாவது படி என்று மகனை முழு மூச்சில் படிக்க வைத்தார். சார்ல்ஸ் ஆண்டனி யாழ்ப்பாணத்தில் பள்ளியிறுதித் தேர்வு எழுதியபோது, அவரது தனிப்பாடம், விருப்பப்பாடம் ஆங்கிலம். அந்த வருடம் யாழ்ப்பாணத்தில் ஆங்கிலப் பரீட்சை எழுதிய ஒரே மாணவன் சார்ல்ஸ் ஆண்டனிதான்.

அவருக்காக ஒரே ஒரு கேள்வித்தாள் தனியாக வந்தது!.

(தொடரும்)

http://eelavarkural.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

♥ தலைவர் பிரபாகரன் தொடர் 10 ♥

தலைவர் பிரபாகரன் தொடர் 10

யிரத்தித் தொள்ளாயிரத்தி எண்பத்தி மூன்று என்பது ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை தேவதைகளாலும் சாத்தான்களாலும் ஒருமித்து சபிக்கப்பட்ட ஆண்டாக இருந்தது. எத்தனை அவலங்கள்! திரும்பிய பக்கமெல்லாம் கொலைகள், கொள்ளைகள், கலவரம். ஒதுங்க ஓர் இடமில்லாமல் மக்கள் ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்தார்கள். வாழ்விடங்கள் இல்லாமல் போயின. பிள்ளைகளின் படிப்பு போனது. தொழில் போனது. உறவுகள், தொடர்புகள், சொத்து சுகங்கள், மேலான நிம்மதி அனைத்தும் இல்லாமல் போன வருடம் அது.

தறிகெட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இல்லை அது. உட்கார்ந்து யோசித்து திட்டமிட்டுச் செய்யப்பட்ட கலவரம். பீடாதிபதி ஜெயவர்த்தனா ஆசீர்வாதமளித்திருந்தார். அவர் அதிபர். கண்ணசைத்தால் போதும். கலவரதாரிகள் சிலிர்த்துக்கொண்டு எழுந்துவிடுவார்கள். ஒரு கையில் வாக்காளர் பட்டியல். மறுகையில் ஆயுதம். வீடு வீடாகத் தேடிச் சென்று கொல்வது ஒரு சுகம். இழுத்துப் போட்டு எரிப்பது ஒரு சுகம். குழந்தைகள் கதறுகின்றனவா? தூக்கிப் போட்டு கீழே விழும்போது சுட்டுத்தள்ளு. பார்க்கும் மக்கள் வாயடைத்து நிற்பார்கள். கொத்தாகச் சுட்டுத்தள்ள அதுவே தருணம். வீணாக்காதே. ஓடுகிறார்களா? பிடித்து நிறுத்திக் கத்தியைச் சொருகு. கடைகளுக்குள் புகுந்துகொண்டு ஷட்டரை இறக்கிவிடுகிறார்களா? விட்டுவிடு. அவர்களுக்கு உள்ளேயே ஜீவ சமாதியளித்துவிடலாம். ஒரு கடைக்கு ஒரு கேன் பெட்ரோல் போதும். நீ புகைக்காதவனாயினும் பரவாயில்லை. பாக்கெட்டில் எப்போதும் தீப்பெட்டி இருக்கட்டும்.

இதெல்லாம் காவியத்துக்குப் பாயிரம் போல. மேல் பேச்சுக்கு `விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம்' என்று சொல்வார்கள். ஏய், பார்த்தாயா? இங்கே புலிகள் இருக்கிறார்களா? மரியாதையாகச் சொல்லிவிடு. பிரபாகரன் இங்கேதான் பதுங்கியிருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். எங்கே?

ஊர் ஊராக ராணுவ டிரக்குகள் போகும். இறங்கி, எதிர்ப்படுபவர்களைப் பிடித்து விசாரிப்பார்கள். அடித்துத் துவைத்துத் தூக்கிப் போடுவார்கள்.

அப்படித்தான் ஜூலை 15-ம் தேதி மீசாலை கிராமத்துக்கு ராணுவம் போனது. இரண்டு ஜீப்புகள், ஒரு மினி பஸ், பின் தொடரும் ஒரு பெரிய ராணுவ டிரக். நிறைய வீரர்கள். அனைவரிடமும் ஆயுதங்கள். சுற்றி வளைத்து நின்றவர்கள் மத்தியில் நான்கு விடுதலைப் புலிகள் மாட்டிக்கொண்டார்கள். அதுவும் பதுங்க வழியில்லாத வெட்ட வெளிப் பிரதேசம்.

சரி, தாக்கத் தொடங்கலாம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு சுட ஆரம்பித்தார்கள். உக்கிரமான சண்டை. வீரம் செறிந்த சண்டை. நான்கு பேருக்கும் நூறு பேருக்கும் இடையிலான சண்டை. ஆனால் பதுங்கியிருந்து தாக்குவதற்கும் வெட்டவெளியில் நின்று பதிலடி தருவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. எதிரியின் குறி சரியாக அமையும் வரை மட்டுமே உயிர் பிழைத்திருக்க முடியும்.

பல நிமிடங்கள் நீடித்த அந்த யுத்தம் இரண்டு விஷயங்களைத் தெளிவாக்கியது. இலங்கை வீரர்களுக்குக் குறி பார்த்துச் சுடத் தெரியாது என்பது ஒன்று. வெட்டவெளியில் சுற்றி வளைக்கப்பட்டு சிக்கிக்கொண்டாலும் விடுதலைப் புலிகளுக்குத் தப்பிக்கத் தெரியும் என்பது இரண்டாவது.

இரண்டு பேர் அன்றைக்குத் தப்பித்தார்கள். இரண்டு பேர் இறந்தார்கள். அதுவும் சிங்கள வீரர்களால் கொல்லப்பட்டு அவர்கள் உயிர் துறக்கவில்லை. குண்டடி பட்டிருந்தது. ஓட முடியாது என்று தெரிந்து, எதிரியிடம் நான் மாட்டிக்கொள்ளக்கூடாது, என்னைச் சுட்டுவிடு என்று கேட்டு சக போராளியால் சுடப்பட்டு இறந்து போனார்கள். சுட்டவர்களின் முகமெங்கும் கண்ணீர். சுடப்பட்டவர்களின் முகங்களில் புன்னகை.

சீலன், ஆனந்த் என்கிற அந்த இரு போராளிகளுள் சீலன் பிரபாகரனுக்கு மிக நெருக்கமான தோழன். பின்னாளில் தனக்குத் திருமணமாகி, முதல் குழந்தை பிறந்தபோது அந்தச் சீலனின் இயற்பெயரான சார்லஸ் ஆண்டனி என்பதையே அதற்கு வைக்குமளவுக்கு நெருக்கமான தோழன்.

எனவே பிரபாகரன் துடித்து எழுந்தார். விட்டுவிடுவதற்கில்லை. சீலன், ஆனந்தின் உயிர் இயற்கையில் கரைவதற்குள்ளாக ஒரு பதிலளித்தாகவேண்டும். செல்லக்கிளி என்று கூப்பிட்டார். கிளி பறந்து வந்தது. கூடவே அவரது படைப்பிரிவினர். மறுபுறம் புலனாய்வுப் பிரிவினர் தட்டி எழுப்பப்பட்டு, யாழ்ப்பாணம் முழுதும் இரவு நேரங்களில் ராணுவ வாகனங்கள் ரோந்து போகும் பாதைகள் பற்றிய விவரம் உடனே, உடனே வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது.

பரபரவென்று திட்டம் தீட்டப்பட்டது. திருநெல்வேலியைத் தேர்ந்தெடுத்தார்கள். யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலி. ராணுவக் கவச வாகனங்கள் இரவுப் பொழுதில் அணி வகுத்துப் போகும் பாதை. வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். புறப்பட உத்தரவு கேட்டார் செல்லக்கிளி.

இரு, நானும் வருகிறேன் என்றார் பிரபாகரன். கோபம் குறையவில்லை. சற்றும் அணையாத தீ. உள்ளுக்குள் கனன்ற பெருநெருப்பு. புறப்பட்டார். பிரபாகரன், செல்லக்கிளி, விக்டர், சந்தோஷம், புலேந்திரன், கிட்டு. பதினான்கு பேர் கொண்ட குழுவில் ஆறு கமாண்டர்கள். பிரபாகரனே களமிறங்கினாலும் இந்தத் திட்டத்துக்கு செல்லக்கிளிதான் கமாண்டர் என்று முடிவு செய்யப்பட்டது.

இருள் மூடிய வானம். செல்லக்கிளி பலாலியாழ்ப்பாணம் சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியிருந்தார். பொது மக்களிடம் சாங்கோபாங்கமாக விஷயம் சொல்லப்பட்டிருந்தது. யாரும் வெளியே வரவேண்டாம். கடைகளைத் திறக்கவேண்டாம். வாகனங்களை வெளியே எடுக்க வேண்டாம். இன்றொருநாள் வீட்டில் நிம்மதியாகத் தூங்குங்கள். இனி தூங்க அவகாசம் கிடைக்குமா என்று சொல்லமுடியாது.

சாலையில் கண்ணிவெடிகள் பொருத்தப் பட்டன. எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செல்லக்கிளி ஒருதரம் போய்ப் பார்த்தார். பதினான்கு பேரும் நிலையெடுத்து சாலையின் இரு புறமும் அணி வகுத்துப் பதுங்கி நின்றார்கள். பிரபாகரன் காத்திருந்தார்.

மாதகல் என்னும் இடத்தில் ராணுவ முகாம் ஒன்று உண்டு. அங்கிருந்துதான் புறப்படுவார்கள். புறப்பட்டார்கள். முன்னால் ஒரு ஜீப். பின்னால் ஒரு கவச வாகனம். மொத்தம் பதினைந்து வீரர்கள்.

வருகிறார்கள் என்றார் செல்லக்கிளி. அலர்ட் ஆனார்கள். ஜீப் நெருங்கியது. கண்ணிவெடி பொருத்தப்பட்ட இடத்தை அது தொட்டபோது பிரபாகரன் விசையை அழுத்தினார்.

வெடித்தது. வெடித்தார்கள்.

அதுதான் ஜெயவர்த்தனாவை அதிரச் செய்தது. எண்பத்தி மூன்றாம் வருடம் ஜனவரியிலேயே ஆரம்பித்த அரசாங்கக் கலவரத் திருவிழா தன் அடுத்த பரிமாணத்தை எட்டுவதற்கும் அதுவே காரணமாயிற்று. அன்றைக்கு ராணுவ டிரக்கில் சென்றுகொண்டிருந்த அத்தனை பேரும் இல்லாமல் போனார்கள்.

விவரிக்க முடியாத கொடூரங்கள். எங்கும் மரண ஓலம், காணுமிடமெல்லாம் ரத்தம். யாழ்ப்பாணம் ஒரு மாபெரும் திறந்தவெளி மயானமாகிக்கொண்டிருந்தது. அவலம் ஒரு பக்கம். சீற்றம் ஒரு பக்கம். பிரபாகரன் விடாமல் பதில் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த சமயம் அது. மக்களின் முழு ஆதரவும் புலிகளின் பக்கம் இருந்தது. இைளஞர்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை நோக்கிப் படையெடுத்து வந்து சேரத் தொடங்கிய தருணம் அது.

ஒரு மாறுதலுக்கு அந்தச் சமயம் நான்கு பெண்கள் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். கல்லூரி மாணவிகள். பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு அநியாயம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திலிருந்த கடைசித் தமிழ் மாணவர் வரை நீக்கிவிட்டு, முற்றிலும் சிங்கள மயமாக்க அரசு மேற்கொண்ட முயற்சி.

எனவே `நாம் உண்ணாவிரதம் இருப்போம்' என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்த அந்த மாணவிகள் நான்கு பேரும் ஒப்புக்குச் சொல்லவிலை. உண்மையிலேயே சாகும் வரை உண்ணாவிரதத் திட்டம் அவர்களிடம் இருந்தது. யார் சொல்லியும் கேட்கவில்லை.

விஷயம், பிரபாகரனுக்குப் போனது. நான்கு பெண்கள். யார் அவர்கள்? விவரம் திரட்டப்பட்டது. எதற்கு உயிர் விட வேண்டும்? இந்த மன உறுதியை இவர்கள் வேறு உருப்படியான விதங்களில் வெளிப்படுத்தலாம் அல்லவா? ம்ஹும். வேண்டாம். அவர்கள் உண்ணாவிரதம் இருந்து செத்துப் போக அனுமதிக்காதீர்கள். தூக்கி வந்துவிடுங்கள் என்று சொன்னார்.

ஒரு ஜீப். நான்கு போராளிகள். மின்னல் வேகம். அந்த நான்கு பெண்களும் பிரபாகரனின் எதிரே நின்றுகொண்டிருந்தார்கள். பெயரென்ன என்று கேட்டார்.

நான்கு பேரும் பேரைச் சொன்னார்கள். அதிலொரு பெயர் மதிவதனி..

(தொடரும்)

http://eelavarkural.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D


♥ தலைவர் பிரபாகரன் தொடர் -9 ♥

தலைவர் பிரபாகரன் தொடர் -9


1984-ம் ஆண்டு இரண்டு கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய விஷயம். சர்வ சாதாரணமாக எம்.ஜி.ஆர். அந்தத் தொகையைத் தன் சொந்த சேமிப்பிலிருந்து எடுத்துக் கொடுத்ததில் மலைத்துப் போனார் பிரபாகரன். இரவெல்லாம் கண் விழித்து உட்கார்ந்து பணத்தை எண்ணினார்கள். அத்தனையும் நூறு ரூபாய் நோட்டுக் கட்டுகள். எண்ணி முடித்து எடுத்து வைத்தபோது விடிந்தே போயிருந்தது.

`தம்பி நேரில் வராததில் முதல்வருக்கு வருத்தம்தான்' - பாலசிங்கம் சொன்னார்.

`அவசியம் நேரில் பார்த்து நன்றி சொல்லத்தான் வேண்டும்' என்றார் பிரபாகரன்.

அந்த வாரமே ஒரு நாள் குறிக்கப்பட்டது. ராமாவரம் வீட்டுக்குப் பிரபாகரனும் பாலசிங்கமும் நேரில் சென்று எம்.ஜி.ஆரைச் சந்தித்தார்கள். வரவேற்றார். உட்காரச் சொல்லிப் பேச ஆரம்பித்தார்.

தமிழகத்தில் இன்றைக்கு இலங்கை குறித்துப் பேசாத தலைவர்கள் யாருமில்லை. முதன்முதலில் அவர்களுக்கு உதவலாம், உதவ வேண்டும், உதவுவது நமது கடமை என்று கருதிச் செயல்பட்டவர் எம்.ஜி.ஆர். அவர் ஆரம்பித்து வைத்ததைத்தான் மற்றவர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். எம்.ஜி.ஆர். செய்தது வெறும் பண உதவி மட்டுமல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் சிக்கலான ஒரு சூழலில் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த சமயம் அது. அப்போது எம்.ஜி.ஆர். நீட்டிய நேசக்கரம், அவர்கள் தன்னம்பிக்கை இழக்காதிருக்கப் பேருதவி புரிந்தது.

இந்திய உளவு அமைப்பான RAW அப்போது போராளிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்துக்கொண்டிருந்தது. டெலோ இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். இருந்தது. ப்ளாட் இருந்தது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இலங்கைப் போராளி இயக்க இளைஞர்கள் வட இந்தியாவில் சில ரகசியப் பயிற்சி முகாம்களில் மும்முரமாகப் பயின்றுகொண்டிருந்தார்கள். என்ன காரணத்தினாலோ இந்தப் பயிற்சி முகாமில் பங்குபெற முதலில் புலிகளை அழைக்கவில்லை. பிறகு கடுமையாக முயற்சி செய்து, வாதாடித்தான் இடம்பெற முடிந்தது. ஆனால், சொற்பமான போராளிகளுக்கு மட்டுமே பயிற்சி தர முடியும் என்று சொல்லப்பட்டது.

இந்த ஓர வஞ்சனையில் மிகவும் மனம் நொறுங்கிப் போயிருந்தார் பிரபாகரன். என்னவாவது செய்து தமது போராளிகளுக்கு நல்ல பயிற்சியளிக்க வேண்டும், தரமான ஆயுதங்களை வாங்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தவருக்கு எம்.ஜி.ஆர். அளித்த பணம் ஒரு வரமாகவே தெரிந்தது.

உடனடியாக சென்னைக்கு வெளியே புறநகர்ப் பகுதிகளில் சில பயிற்சி முகாம்கள் நிறுவப்பட்டன. இலங்கையிலிருந்து பல விடுதலைப் புலிகள் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு இந்த முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். மறுபுறம் நவீன ஆயுதங்களை வாங்குவதற்கான ஆலோசனைகள் பலமாக நடைபெற்றன.

பிரபாகரன், `கே.பி.யைக் கூப்பிடுங்கள்' என்று சொன்னார்.

கே.பி. என்கிற குட்டி என்கிற குமரன் பத்மநாதன் என்கிற செல்வராஜா குமரனைப் பற்றிப் பொதுவாக வெளியே யாருக்கும் அதிகம் தெரியாது. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதக் கொள்முதல் பிரிவின் தலைவர் அவர். இலங்கையில் மயிலிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். எளிய மீனவக் குடும்பம். இளமையில் வறுமை. கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறி, இயக்கத்துக்காகப் பாதியில் விட்டவர். தொடக்கத்தில் `டெலோ'வில் உறுப்பினராக இருந்தார் கே.பி. குட்டிமணி, தங்கதுரை காலத்து டெலோ.

உமா மகேஸ்வரன் விவகாரம் வெடித்து, விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டபோது, மனம் வெறுத்துப் போன பிரபாகரன், டெலோவுடன் இணைந்து செயலாற்ற முடிவு செய்து அங்கே போனபோது அறிமுகமானவர்.

பிரபாகரன் டெலோவில் அதிககாலம் இல்லை. ஆனால், சில நல்ல நட்புகள் அவருக்கு அங்கே ஏற்பட்டன. கே.பி. அதிலொருவர்.

ஒரு சம்பவம் நடந்தது. வெகு முக்கிய சம்பவம். 1981-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி ஒரு பெரும் கொள்ளைக்குத் திட்டமிட்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளும் டெலோவும் இணைந்து திட்டமிட்ட கொள்ளை. நீர்வேலிக் கொள்ளை என்று சரித்திரம் அதனைச் சொல்லும்.

வடமராச்சி பகுதியில் உள்ள பல வங்கிக் கிளைகளிலிருந்து அன்றைக்குப் பணத்தைத் திரட்டிக்கொண்டு ஒரு வேன் யாழ்ப்பாணத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. அரசாங்கத்துக்குச் சொந்தமான வேன். உள்ளே இருந்த பணத்தின் மொத்த மதிப்பு எண்பது லட்சம். நல்ல செக்யூரிடி. ஆயுததாரிகளின் பாதுகாப்பு. கொண்டுபோய்த் தலைமையகத்தில் சேர்த்துவிட்டால் தீர்ந்தது விஷயம்.

அப்படியா? நாம் அந்தப் பணத்தை எடுக்கிறோம் என்று பிரபாகரன் சொன்னார். ஒரு கைத்துப்பாக்கி வாங்கக்கூடப் பணமில்லாமல் இயக்கங்கள் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்த தொடக்ககாலத்தில் வங்கிக்கொள்ளைகள்தான் அன்றைக்கு அவர்களுக்கு ஒரே வழியாக இருந்தது.

டெலோவுடன் இணைந்து செயல்படலாம் என்று முடிவு செய்து பிரபாகரன் குழுவினர் வந்து சேர்ந்திருந்த புதிது. ஒரு கம்பீரமான தொடக்கமாக அது அமைவதற்கு இந்தக் கொள்ளை பெரிதும் உதவும் என்று இரு தரப்புமே நினைத்திருந்தது. திட்டமிட்டார்கள். யாழ்ப்பாணம் பாயிண்ட் பெட்ரோ நெடுஞ்சாலையெங்கும் போராளிகள் அணி வகுத்து மறைந்து நின்றார்கள். வேன் புறப்பட்ட இடத்துக்குச் சற்றுத்தள்ளி ஒரு மோட்டார் சைக்கிளில் இளம் போராளி ஒருவர் தயாராகக் காத்திருந்தார். அவருக்கு இடப்பட்டிருந்த உத்தரவு, வேனை விடாமல் பின் தொடர்ந்து வா என்பது.

வேனின் முன்னும் பின்னும் செக்யூரிடி போலீஸார் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருப்பார்கள். அவர்களிடம் ஆயுதம் இருக்கும். போலீஸாருக்குப் பின்னால் இந்த மோட்டார் சைக்கிள் வரவேண்டும். இடையே யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது. தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நீர்வேலியை அடைவதற்குச் சற்றுமுன்னால் வேகமெடுத்து செக்யூரிடி பைக்குகளைத் தாண்டி இந்த வண்டி முன்னால் வரவேண்டும். வேன் வந்துவிட்டது என்பதை அறிவிக்கும் எச்சரிக்கை சிக்னல் கொடுக்க வேண்டும். மிச்ச வேலையை மறைந்திருக்கும் விடுதலைப் புலி, டெலோ போராளிகள் பார்த்துக்கொள்வார்கள்.

வாக்கி டாக்கிகளோ, மொபைல் போன்களோ புழக்கத்தில் இல்லாத காலம். நேரடித் தகவல் ஒன்றுதான் வழி. பாதுகாப்பு பந்தோபஸ்துடன் வரும் பண வண்டியைப் பின் தொடர்ந்து வந்து, ஒரு கட்டத்தில் முன்னேறி நண்பர்களுக்குத் தகவல் தந்து காரியத்தைக் கச்சிதமாக முடிக்கப் பேருதவி புரியும் மிகப்பெரிய பொறுப்பு.

செய்து முடித்தவர் கே.பி., அன்றைக்குத்தான் பிரபாகரன் அவரை நெருக்கமாகப் பார்த்தது. புன்னகை செய்தார். கையைப் பற்றி அழுத்தினார். நண்பா, நாம் இன்னொரு நாளும் சந்திப்போம்.

அப்போது நினைத்திருக்க முடியாது, அந்த இன்னொரு நாள் சந்திப்பு, நிரந்தர உறவாகப்போகிறது என்று. அப்படித்தான் ஆனது.

நீர்வேலி சம்பவத்துக்குப் பிறகு கே.பி. தமிழகத்துக்குத் தப்பி வந்து இருந்தார். போராளி இயக்கங்களுக்கு இங்கே ஆயுதங்கள் வாங்கி அனுப்ப முயற்சி செய்துகொண்டிருந்த வக்கீல் கந்தசாமி என்பவரிடம் அசிஸ்டெண்டாகச் சேர்ந்தார் கே.பி. மும்பையில் வாசம். இந்திய - பாகிஸ்தான் எல்லையிலும் இந்திய - நேபாள எல்லையிலும் வேலை. நிறைய வெளிநாட்டுப் பயணங்கள். ஒவ்வொரு பயணமும் புதிய புதிய பாஸ்போர்ட்களில்.

கே.பி. ஒரு உலகம் சுற்றும் வாலிபன். இன்றைக்குவரை அப்படித்தான். அவரிடம் தாய்லாந்து குடியுரிமை இருப்பதாகச் சொல்லுவார்கள். அவரது தாய்நாட்டுக் குடியுரிமை எண் 550971231.

எம்.ஜி.ஆர். கொடுத்த பணத்தில் ஒரு பகுதியை ஆயுதக் கொள்முதலுக்காகச் செலவிடுவது என்று முடிவு செய்து கே.பி.யைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னார் பிரபாகரன். அநேகமாக புலிகள் இயக்கத்துக்கென கே.பி. செய்த முதல் அசைன்மெண்ட் அதுவாகத்தான் இருக்கவேண்டும். குறுகிய காலத்தில் பல நாடுகளில் தனக்கு உருவாகியிருந்த தொடர்புகளை வைத்து ஏராளமான நவீனரகத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், கண்ணி வெடிகள், தகவல் தொடர்புக் கருவிகளை வாங்கி பத்திரமாகக் கப்பலேற்றி அனுப்பிவிட்டார் கே.பி.

சென்னை துறைமுகத்துக்கு சரக்கு வந்து சேர்ந்தபோது பிரபாகரனுக்கு இன்னொரு சிக்கல் வந்தது. ஆயுதங்கள் வந்துவிட்டன. ஆனால் எப்படி எடுப்பது? முன்னதாக உமா மகேஸ்வரன் இதே மாதிரி ஓர் ஆயுதக் கொள்முதல் செய்திருந்தார், அவருடைய ப்ளாட் இயக்கத்துக்காக. அதுவும் இதே மாதிரி சென்னை துறைமுகத்துக்கு வந்தபோது புலனாய்வு அதிகாரிகள் மோப்பம் பிடித்துவிட்டார்கள். கோடிக்கணக்கான பணம். அசுர முயற்சி. ஒரு தவம் மாதிரி செய்து வரவழைத்த ஆயுதங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு, காணாமல் போயின. உமா இடிந்தே போய்விட்டார்.

பிரபாகரன் யோசித்தார். முயற்சி செய்வது பெரிய விஷயமில்லை. அது சரியான பலனைத் தரவேண்டும். வேண்டியது கொஞ்சம் புத்திசாலித்தனம். உடனே பாலசிங்கத்தைக் கூப்பிட்டார். அண்ண, நீங்கள் முதலமைச்சரிடம் விஷயத்தைச் சொல்லுங்கள். எதையும் மறைக்கவேண்டாம். நமது ஆயுதக் கப்பல் வந்திருக்கிறது. சேதாரமில்லாமல் நமக்குச் சரக்கு கிடைத்தாக வேண்டும். அவர்தான் உதவ வேண்டும். அவரால் மட்டும்தான் உதவ முடியும்.

எம்.ஜி.ஆருடனான அடுத்த சந்திப்பு அப்போது நடந்தது. இப்போதும் எம்.ஜி.ஆர்.தான் உதவினார். சற்றும் சலனமில்லை. பரபரப்பில்லை. ஒரு ஈ எறும்புக்கும் விஷயம் தெரியாது. ஒரே ஒரு போன்கால். யாருக்குச் செய்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆயுதங்கள் அனைத்தும் அலுங்காமல் குலுங்காமல் திருவான்மியூர் வீட்டுக்கு வந்து சேர்ந்தன..

(தொடரும்)

http://eelavarkural.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

♥ தலைவர் பிரபாகரன் தொடர் 8 ♥

தலைவர் பிரபாகரன் தொடர் 8




என்ன நடக்கிறது இலங்கையில்? யார் இந்த இளைஞர்கள்? தமிழகத்தில் என்ன செய்கிறார்கள்? இந்திய அரசு ரகசியமாக இவர்களுக்குப் பயிற்சியளிக்கிறதாமே? பண உதவி செய்கிறதாமே? உண்மையா? எப்படிச் செய்கிறார்கள்? ரா (RAW) மூலமாகவா? யார் பொறுப்பு?

எம்.ஜி.ஆருக்கு அப்போது பல சந்தேகங்கள் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் இலங்கைப் போராளிக் குழுக்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த விவரம் கூட மாநில அரசுக்கு சரியாகத் தெரியாது. `ஆமாம், பயிற்சி நடக்கிறது' என்று தெரியவந்தபோது எங்கே, எந்த இடத்தில் என்கிற விவரமில்லாமல்தான் வந்தது. வடக்கே ஏதோ ஓரிடத்தில் என்று சொல்லப்பட்டது. என்ன பயிற்சி, யார் அளிக்கிறார்கள் என்பதெல்லாம் ரகசியமாக இருந்தது. இந்திய அரசு, இலங்கைப் போராளி அமைப்புகளை ஆதரிக்கிறதா என்ன? பிரதமர் இந்திராகாந்தி இதுபற்றியெல்லாம் வாய் திறப்பதே இல்லை. எல்லாம் ரகசியம். பரம ரகசியம்.

பாண்டிபஜார் சம்பவத்துக்குப் பிறகுதான் தமிழக மக்கள் பேச ஆரம்பித்தார்கள். ஆஹா! சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாகிறார்கள் என்று உருக ஆரம்பித்தார்கள். பத்திரிகைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கட்டுரைகள் வர ஆரம்பித்தன. ஒரு தமாஷ். இலங்கையில் எத்தனை இயக்கங்கள் செயல்படுகின்றன, யார் யார் முக்கியஸ்தர்கள் என்பதெல்லாம் அப்போது இங்கே தெரியாது. இலங்கைப் போராளி என்றாலே புலிதான். தெரிந்த ஒரே பெயர். வெலிக்கடைச் சிறைப் படுகொலை விவரங்கள் தெரியவந்தபோது குட்டிமணி, தங்கதுரை, ஜகன் போன்ற பெயர்கள் தெரிந்தன. பெயர்கள்தான். முகம் தெரியாது. 1983 ஜூலை மாதம் அங்கே இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்ட மாபெரும் இனப்படுகொலை வைபவத்துக்குப் பிறகு இந்த விவரங்கள் படிப்படியாகப் பரிமாணம் பெறத் தொடங்கி, இலங்கையில் என்னவோ விபரீதம் என்று இங்கே விழித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். அரசியல் கட்சிகள் கூர்ந்து நோக்கத் தொடங்கின. என்ன செய்யலாம், எப்படி உதவலாம், யாரைத் தேடிப் பேசலாம் என்று எல்லோரும் தவிக்கத் தொடங்கினார்கள்.

எண்பத்தி நாலாம் வருடம் ஏப்ரல் மாதம் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஓர் அழைப்பு விடுத்தார். வாருங்கள் பேசுவோம். எத்தனை பேர் இருக்கிறீர்கள் தமிழகத்தில்? ஐந்து போராளி இயக்கங்களா? சரி, பரவாயில்லை. அனைவரும் வாருங்கள். நான் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறேன். ஆனால் ஒன்று. உங்களிடையே ஒற்றுமை வேண்டும். ஒரே நாடு, ஒரே பிரச்னை, ஒரே மக்கள், ஒரே இனம். ஒரே இலக்குக்காகத்தானே போராடுகிறீர்கள்? ஏன் தனித்தனிக் குழுக்கள்? அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் என்ன? சம்மதமென்றால் நான் உதவுகிறேன். வாருங்கள், பேசுவோம். உண்மையில் அது எம்.ஜி.ஆரின் விருப்பம் மட்டுமல்ல. கிட்டத்தட்ட தமிழக மக்கள் அத்தனை பேரின் விருப்பமாகவும் அன்றைக்கு அதுதான் இருந்தது.

உலக அரசியலில் பனிப்போரும் தமிழக அரசியலில் வெப்பப்போரும் மிகுந்திருந்த காலகட்டம் அது. இலங்கைப் போராளிக் குழுக்களை எம்.ஜி.ஆர். அழைத்துப் பேசவிருக்கிறார் என்கிற தகவல் தெரிந்ததுமே அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். எல்லோரும் வாருங்கள். இங்கும் இளைப்பாறலாம். ஆனால் ஒரு விஷயம். எம்.ஜி.ஆர். சந்திப்புக்கு அழைத்திருக்கும் தினத்துக்கு ஒருநாள் முன்னதாக!

பிரபாகரன் அப்போது திருவான்மியூரில் தங்கியிருந்தார். ஆண்டன் பாலசிங்கம், இராகவன், பேபி சுப்பிரமணியம், பண்டிதர், சங்கர், ரகு என்று அவருடன் ஒரு சிறு குழு (இதில் சங்கரும் ரகுவும் மெய்க்காப்பாளர்கள்.) அவர் தங்கியிருந்த இடத்திலேயே இருந்தது. சற்றுத்தள்ளி இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வேறு பல போராளிகள் தங்கியிருந்தார்கள்.

இது பிரச்னை. பெரிய பிரச்னை. எம்.ஜி.ஆர். சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக கலைஞர் கூட்டியிருக்கும் கூட்டத்துக்குப் போவது மிகுந்த தர்மசங்கடத்தை விளைவிக்கக்கூடியது. போகாமல் இருப்பது அவமதிப்பது போல் ஆகிவிடும். என்ன செய்யலாம்?

பிரபாகரன் சிந்தித்தார். பிரச்னை, அவர்கள் அழைப்புக்குச் சம்மதிப்பதா? இல்லையா? என்பது மட்டுமல்ல. தமிழகத்தில் அப்போது முகாம் அமைத்து இயங்கிக் கொண்டிருந்த ஐந்து பெரும் போராளி அமைப்புகளின் தலைவர்களையும் இரண்டு தலைவர்களும் அழைத்திருந்தார்கள். என்றால் கண்டிப்பாக உமாமகேஸ்வரனும் வருவார். புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த நாளாக, நாங்கள்தான் உண்மையான விடுதலைப் புலிகள் என்று கொஞ்சநாள் சொல்லிக்கொண்டிருந்தவர், பிறகு PLOTE என்னும் அமைப்பைத் தொடங்கி அப்போது நடத்திக்கொண்டிருந்தார். அவரும் தமிழகத்தில் தான் இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பின் பத்மநாபா, ஈரோஸின் பாலகுமார், டெலோவின் சிறீ சபாரத்தினம் அத்தனை பேரும் தமிழகத்தில்தான் இருந்தார்கள். முதல்வர் முன்னிலையில் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் முன்னிலையில் இந்த எதிர் துருவங்கள் மோதிக்கொள்ளும்படி ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால்?

தமிழகம் மதிக்காது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பிறகு ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்கள். உன்னதமான நோக்கத்துடன் தேசப்பணி புரிபவர்களைப் பிறகு வெறும் கிரிமினல்களாகத் தமிழகம் பார்க்கத் தொடங்கிவிடும். எதற்கு இந்த அபாயம் என்று பிரபாகரன் நினைத்தார். ஆனால் தமிழகத்தின் இரண்டு பெரும் அரசியல் சக்திகள் அழைத்திருக்கும்போது, அதனை மதித்து நாம் போகாமல் இருந்தால் தவறாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறதே?

என்ன ஆனாலும் எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்த கூட்டத்துக்குப் போட்டியாக, முதல் நாள் கலைஞர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தைத் தவிர்த்தே தீருவது என்று இறுதியில் முடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆர். கூட்டத்துக்குப் போவதா? இல்லையா? என்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். அதற்கு இருபத்தி நான்கு மணிநேர அவகாசம் இருக்கிறது.

ஒரு விசித்திரம். இதே மாதிரிதான் அன்றைக்கு உமாமகேஸ்வரனும் நினைத்திருக்கிறார்! கலைஞரின் அழைப்பை அவரும் ஏற்கவில்லை. கூட்டத்துக்குச் செல்லவில்லை. மற்ற மூன்று போராளி இயக்கத் தலைவர்களும் கலைஞரைச் சென்று சந்தித்த விவரம் மறுநாள் பேப்பர்களில் வந்திருந்தன. எம்.ஜி.ஆர். கடுப்பானார். உடனே அன்றைய டி.ஐ.ஜி. அலெக்சாண்டரை அழைத்து பிரபாகரனை நேரில் சந்தித்து, தன்னை வந்து பார்க்கச் சொல்லி அனுப்பினார்.

திருவான்மியூர் வீட்டுக்கு அலெக்சாண்டர் வந்தபோது பிரபாகரன் அங்கே இல்லை. பாலசிங்கம் இருந்தார். அலெக்சாண்டர் அவரிடம் விவரம் சொன்னார். முதல்வர் கோபமாக இருக்கிறார். கலைஞரின் போட்டிக் கூட்டத்துக்குப் போராளித் தலைவர்கள் போனது அவருக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் போகவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறார். உடனடியாக பிரபாகரனைச் சந்திக்க விரும்புகிறார். இன்று மாலையே.

தர்மசங்கடம்தான். ஆனால் சமாளித்தாகவேண்டும். நான் வரவில்லை, நீங்கள் மட்டும் போய்வந்துவிடுங்கள் என்று பாலசிங்கத்தை அனுப்பிவைத்தார் பிரபாகரன்.

பாலசிங்கம், மு. நித்தியானந்தம், கர்னல் சங்கர் ஆகியோர் அன்றைக்கு எம்.ஜி.ஆரைச் சந்திக்க ராமாவரத்துக்குப் போனார்கள். வரவேற்றார். உட்காரச் சொல்லி அன்புடன் விசாரித்தார். `எங்கே பிரபாகரன்' என்று கேட்டார். `அவர் ஒரு பயிற்சி முகாமுக்கு அவசரமாகப் போயிருக்கிறார், அதனால் வரமுடியவில்லை' என்று பாலசிங்கம் சொல்லிச் சமாளித்தார்.

எம்.ஜி.ஆருக்கு ஏமாற்றம்தான். ஆனாலும் சமாளித்துக்கொண்டு பேசினார். என்ன நடக்கிறது இலங்கையில்? போராளிக் குழுக்கள் எத்தனை இயங்குகின்றன? இந்தியா என்ன உதவி செய்கிறது? பயிற்சி அளிக்கிறதா? பண உதவி செய்கிறதா? இது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் எதுவும் சரிவரத் தெரிவதில்லை.

பாலசிங்கம் அனைத்தையும் பொறுமையுடன் விளக்கினார். இலங்கை அரசின் இனப்படுகொலைகள். `கறுப்பு ஜூலை'யில் நடைபெற்ற களேபரங்கள். போராளி இயக்கங்களுக்கு இந்திய உளவுத்துறை அளிக்கும் பயிற்சிகள். இருநூறு விடுதலைப்புலிகளுக்கு மட்டும் பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதி கிடைத்த விவரம். சொற்பமான பண உதவி. இந்திய அரசு எங்களை மட்டும் ஏன் ஓர வஞ்சனை செய்ய நினைக்கிறது என்று புரியவில்லை ஐயா.

ஓஹோ! என்றார் எம்.ஜி.ஆர். `உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். என்ன வேண்டும் சொல்லுங்கள்' என்று கேட்டார்.

ஒரு கணம் பாலசிங்கம் விழித்தார். அருகிலிருந்த கர்னல் சங்கர் சட்டென்று, `நாங்கள் தமிழகத்தில் பயிற்சி முகாம் நடத்த விரும்புகிறோம். ஆயிரம் பேருக்காவது பயிற்சியளிக்க நினைக்கிறோம். அதற்கு ஒரு கோடி செலவாகும். ஆயிரம் பேருக்குப் பிறகு ஆயுதங்கள் வாங்க இன்னும் ஒரு கோடி. உங்களால் இரண்டு கோடி ரூபாய் தந்து உதவ முடியுமா?'

எம்.ஜி.ஆர். சிரித்தார். நாளைக்கு மாலை வாருங்கள் என்று மட்டும் சொல்லி அனுப்பிவைத்தார்.

பெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் மறுநாள் மாலை பாலசிங்கம் எம்.ஜி.ஆரைச் சந்திக்க மீண்டும் வந்தார். வந்ததும் எம்.ஜி.ஆர். அவர்களை லிஃப்டில் ஏற்றி பொத்தானை அழுத்தினார். மேல் மாடிக்குப் போகப்போகிறோம் என்று நினைத்தவர்களுக்கு வியப்பு. லிஃப்ட் கீழே, தரைத்தளத்துக்குக் கீழே போனது. நின்றதும் இறங்கி, கதவைத் திறந்தால் விசாலமான ஓர் அறை. அறையெங்கும் பெட்டிகள். இரண்டு காவலாளிகள் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். அவர்களிடம் இரண்டு விரல்களைக் காட்டி சைகை செய்தார். இரண்டு பெட்டிகள் வெளியே எடுத்து வரப்பட்டன.

இரண்டு பெட்டிகளில் இரண்டு கோடி..

(தொடரும்)


http://eelavarkural.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D


♥ தலைவர் பிரபாகரன் தொடர் 7 ♥

தலைவர் பிரபாகரன் தொடர் 7

டனே சென்னைக்குச் செல்லவும்..

யாழ்ப்பாணத்திலிருந்து அந்த ஒரு வரி உத்தரவு லண்டனில் இருந்த பாலசிங்கத்துக்குச் சென்றபோது, அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் பிரபாகரனுக்கு அறிமுகமாகி வெகுகாலம் ஆகியிருக்கவில்லை. படித்தவர், யோசிக்கத் தெரிந்தவர், அரசியல் தெரிந்த அளவுக்குத் தத்துவம் அறிந்தவர், மார்க்ஸியம் புரிந்த அளவுக்கு மனித மன ஆழங்களையும் புரிந்துகொள்ளக்கூடியவர், இயக்கத்துக்கு சித்தாந்த ரீதியில் ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்துக்கொடுக்க வல்லவர், அதே சமயம் அரசியல் ரீதியில் இயக்கம் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வல்லவர் என்று பிரபாகரன் அவரைப் பற்றி மதிப்பிட்டிருந்தார்.

மதிப்பீடுகளில் தவறேதும் இல்லை. ஆனால், பாலசிங்கத்திடம் பிரபாகரன் தீர்க்கச் சொல்லி அளித்த முதல் பிரச்னை ஒரு காதல் விவகாரமாக அமைய நேர்ந்ததுதான் விசித்திரம்.

தன் மனைவி அடேலுடன் பாலசிங்கம் சென்னை வந்து சேர்ந்ததும் பிரச்னையின் முழுப்பரிமாணம் அவருக்குப் புரியவைக்கப்பட்டது.

`என்னால் நம்ப முடியவில்லை. இயக்கமே பிளவுபடும் அளவுக்கா இது முற்றிவிட்டது?' என்றார் பாலசிங்கம்.

சந்தேகமில்லாமல். ஏனென்றால், அந்தக் காதல் வலையில் சிக்கியிருந்த உமாமகேஸ்வரன், புலிகள் அமைப்பின் மத்தியக் குழு சேர்மன்! சர்வ வல்லமை படைத்த பதவி. தேச விடுதலை என்னும் மிக உயர்ந்த நோக்கத்துடன் போராடத் தொடங்கியிருந்த வீரர்கள் அத்தனை பேரையும் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருந்தவர் அவர். பிரபாகரனுக்கு அடுத்தபடி அவர்தான் எல்லாம். இயக்கத்தின் செயல்பாடுகளைப் பரவலாக்குவது, வெளிநாடுகளில் ஆதரவு திரட்டுவது என்று அடுத்தடுத்த ஏராளமான பொறுப்புகள் அவரிடம் விடப்பட்டிருந்தன. வெளிநாட்டுத் தொடர்புகள் அனைத்தையும் உமா மகேஸ்வரனே வைத்திருந்தார்.

அதுதான் பிரச்னையாகிப் போனது. அத்தனை சுலபத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடிக்குத் தடுத்து நிறுத்தியது.

`உமா, ஏன் இப்படி? நீங்களும் ஊர்மிளாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறீர்கள் என்றால், அதனை வெளிப்படையாகத் தெரிவித்துவிடலாமே? திருமணம் தவறல்ல. முறை தவறிய உறவுதான் பிரச்னை. தயவுசெய்து ஒப்புக்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு முடிவுக்கு நீங்கள் வந்தே ஆகவேண்டும். ஒன்று, ஊர்மிளாவைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். அல்லது மத்தியக் குழுத் தலைமைப் பொறுப்பிலிருந்து நீங்களாக விலகிவிடுங்கள்' என்றார் பாலசிங்கம்.

உமாமகேஸ்வரனும் ஊர்மிளாவும் பாலுறவு கொண்ட காட்சியை நேரில் சிலர் பார்த்திருந்தார்கள். அவர்கள்தாம் தலைமைக்குத் தகவல் கொடுத்தவர்கள். முன் விரோதம் கொண்ட யாரோ ஒருவர் என்றெல்லாம் எளிதில் தள்ளிவிட முடியாதது அது. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பார்த்திருக்கிறார்கள். நம்பகமானவர்கள். இயக்கத்தின் விசுவாசம் மிக்க போராளிகள்.

இல்லவே இல்லை என்றார் உமா மகேஸ்வரன். ஆமாம், இல்லவே இல்லை என்றார் ஊர்மிளா.

சரி, முறை தவறிய உறவு இல்லை என்றே வைத்துக் கொண் டாலும் காதல் உண்டல்லவா? திருமணம் செய்துகொள்வதில் என்ன பிரச்னை என்று பாலசிங்கம் கேட்டார். உமா பேசாதி ருந்தார். காரணம் இருந்தது. தெல்லிப்பளை கணபதி பிள்ளை என்பவரது மகளை உமா மகேஸ்வரன் தனது கல்லூரிக் காலம் முதலே காதலித்து வந்தார். (பிறகு அவரைத்தான் திருமணமும் செய்து கொண்டார். ஊர்மிளா மஞ்சள் காமாலை வந்து இறந்தார்.) இப்போது ஊர்மிளாவைத் திருமணம் செய்து கொண்டால் அந்தக் காதல் என்னாகும்?

சென்னை தண்டையார் பேட்டையில் தங்கியிருந்தபடிக்கு, அமைப்பு சார்பில் கடிதங்கள் எழுதுவது, ஆவணங்கள் தயாரிப்பது போன்ற பணி களில் ஈடுபட்டிருந்த உமாமகேஸ் வரனுக்கு உதவி செய்யத்தான் ஊர்மிளாவும் சென்னை வந்திருந்தார். இருவருக்கும் ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்பதால், எழுத்து சார்ந்த பணிகள் அனைத்தும் அவர்கள் வசம் விடப்பட்டிருந்தன. வெகு விரைவில் இயக்கத்தைப் பரவலாக்க பிரிட்டனுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் உமா தயாராக இருந்தார்.
அப்போதுதான் இந்தப் பிரச்னை வெடித்தது. பிரபாகரன் கண்மூடி யோசித்தார். வேறு வழியில்லை. உயிர்த்தோழனானாலும் இனி உனக்கு இயக்கத்தில் இடமில்லை என்று சொன்னார்.

உமாமகேஸ்வரனும் ஊர்மிளாவும் புறப்பட்டுப் போனார்கள். மனத்துக் குள் வன்மம் வளரத் தொடங் கியிருந்தது. ஏதாவது செய்ய வேண்டும், ஏதாவது செய்யவேண்டும் என்ற வேகம் மேலோங்கி நின்றது. அவருக்கு இயக்கத்தில் கணிசமான ஆதரவாளர்கள் இருந்தார்கள். பிரபாகரன் யார் நம்மை வெளியேற்றுவதற்கு? நாம் அவரை வெளியேற்றுவோம். நாம் தான் நிஜமான விடுதலைப்புலிகள். அறிவித்துவிடுங்கள் என்று ஏகமனதாகச் சொன்னார்கள்.

இயக்கம் இரண்டு பட்டு நின்ற காலம் (1981) அது. அரசியல் தளத்திலும் பரபரவென்று பல மாறுதல்கள் நடந்து கொண்டிருந்தன. `டெலோ'வை நிறுவி, வளர்த்துக்கொண்டிருந்த குட்டிமணியும், தங்கத்துரையும் கைதாகி சிறையில் இருந்த நிலையில், சிறீ சபாரத்தினம் டெலோவின் தாற்காலிகத் தலைவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். பிரபாகரனுக்கு மிக இளம் வயதிலிருந்தே குட்டி மணியையும் தங்கதுரையையும் தெரியும். அப்பழுக்கில்லாத நேசமும் நட்பும் கொண்டவர்கள் அவர்கள்.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளும் அட்ட காசங்களும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில், டெலோவும் விடுதலைப்புலிகள் அமைப்பும் இணைந்து பணியாற்றினால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று இரு தரப்புத் தலைவர்களுமே நினைத்தார்கள். நட்பு அடிப்படையில் இரு இயக்கங்களும் இணைந்து பணியாற்ற முடிவு செய்தது அன்றைய சூழலில் சாத்தியமாகவும் இருந்தது.

ஆனால், அதையே காரண மாகச் சுட்டிக்காட்டி, விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு தன்னுடையதுதான் என்று உமா மகேஸ்வரன் பிரசாரம் செய்யத் தொடங்கிவிடும் அபாயம் பலமாக இருந்தது. டெலோவுடன் இணைந்து வேலை செய்வது பிரபாகரன் தான்; விடுதலைப்புலிகள் அல்ல என்று சொல்லிவிடலாம் அல்லவா?

ஒன்று, உமாமகேஸ்வரன் விவகாரம் தீரவேண்டும். அல்லது அவர் இயக்கத் திலிருந்து முற்றிலுமாக வெளி யேற வேண்டும். இரண்டு மில்லாமல் டெலோவுடன் கூட்டணி வைப்பது மிகப்பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று பிரபாகரன் நினைத்தார்.

சிறீ சபாரத்தினத்தைச் சந்தித்துப் பேசினார். அவருக்கும் புரியாமல் இல்லை. ஆனால் தனி நபர் ஒருவருடைய பிரச்னை யினால் ஒரு போராட்டத்தின் வேகம் மட்டுப்படுகிறதே என்கிற கவலையும் கோபமும் அவருக்கு இருந்தது. பிரபாகரனுக்கு இல்லாத கோபமா?

அந்தக் கோபம்தான் பாண்டி பஜாரில் வெடித்தது. கண்ணன் என்கிற நண்பருடன் டிபன் சாப்பிட வந்திருந்த உமா மகேஸ்வரனை பிரபாகரன் தற்செயலாகக் கண்டார். மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். உடன், இராகவன். (புலிகள் இயக்கத்தில் தொடக்க காலத்தில் மிக முக்கியமான உறுப்பினராக இருந்தவர். பிறகு அபிப்பிராய விரோதங்கள் காரணமாக வெளியேற்றப்பட்டு, இயக்கங்கள், அரசியல் அனைத்திலிருந்தும் ஒதுங்கி, கனடாவில் வசித்து வருகிறார்.)

`உமா, பிரபா!' என்று முதலில் பார்த்து எச்சரித்தது கண்ணன் தான். சட்டென்று உமாமகேஸ்வரன் தன் பிஸ்டலில் கைவைக்க, அதற்குள் பிரபாகரன் முந்திக் கொண்டார்.

காலில் குண்டடி பட்டு கண்ணன் விழ, உமா மகேஸ்வரன் உயிர் பிழைக்கத் தப்பியோட ஆரம்பித்தார். துரத்திய பிரபாகரனையும் இராகவனையும் பாண்டி பஜார் போலீஸ்காரர்கள் கைது செய்தார்கள். உமாவும் பிறகு பிடிபட்டார். பெயரென்ன என்று இன்ஸ்பெக்டர் கேட்டபோது உமா மகேஸ்வரன், முகுந்தன் என்று சொன்னார். பிரபாகரன், கரிகாலன் என்று சொன்னார்.

அங்கே, நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜெயவர்த்தனே. இங்கே குலுங்கிச் சிரித்தார் எம்.ஜி.ஆர்.

(தொடரும்)

http://eelavarkural.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D


♥ தலைவர் பிரபாகரன் தொடர் 6 ♥

தலைவர் பிரபாகரன் தொடர் 6


ரியான இருட்டுக் காடு. யாரும் அத்தனை சுலபத்தில் பொடிநடை யாக உள்ளே வந்துவிட முடியாத அளவுக்கு அடர்த்தியும் அபாயங்களும் நிறைந்த காடு. அபாயத்தில் பெரிய அபாயம், கால் வைக்கும் இடங்கள். அடடே காய்ந்து கிடக்கிறதே என்று அடியெடுத்து வைத்தால் அப்படியே உள்ளே போய்விட வேண்டியதுதான். புரையோடிய சதுப்பு நிலம். மேலே தரை போலவும், கீழே பல அடி ஆழத்துக்குச் சேறுமாகப் பல இடங்களில் இருக்கும். சுற்றிலும் கனத்த மரங்கள். முட்புதர்கள். என்னவென்று பெயர் தெரியாத காட்டுச் செடிகள். பகலில் கூடப் பல இடங்களில் இருட்டாகவே இருக்குமளவுக்கு அப்படியொரு அடர்த்தி.

கஷ்டப்பட்டு அந்தப் பிரதேசத்தைக் கடந்துவிட்டால் சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவில் நல்ல தரை உண்டு. அருமையான விவசாய நிலம். பயிர் செய்யலாம். குடிசை போட்டு சுகமாக வாழலாம். மனித வாசனையே கிடையாது. யானை வாசனை மட்டும்தான்.

`பிரமாதம், இங்கேயே நாம் கூடாரம் அமைக்கலாம்' என்று பிரபாகரன் சொன்னார். அது புகழ்பெற்ற வவுனியா கானகத்தின் ஒரு பகுதி. எந்தப் பக்கத்து மெயின் ரோடிலிருந்து வந்தாலும் ஏழு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தாக வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் உயிருடன் அந்த ஐம்பது ஏக்கர் நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்துவிடலாம். `பூந்தோட்டம்' என்று பெயர். பிரபாகரன் தான் வைத்தார்.

தோழர்கள் பரபரவென்று நிலத்தைச் சீராக்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். தக்காளி விதைக்கலாமா? வெண்டைக்காய்? கத்திரி கூட நன்றாக விளையும். ஆளுக்கொன்று ஆசைப்பட்டார்கள். கொஞ்சம் அரிசி கூட முயற்சி செய்து பார்க்கலாமே?

சத்தியமாகத் தங்களைத் தேடிக்கொண்டு காவல் துறையினர் வந்துவிட முடியாத இடம் என்பது உறுதியான சந்தோஷத்தில் அவர்கள் உற்சாகமாக விவசாயம் செய்தார்கள். உத்வேகத்துடன் துப்பாக்கி சுடப் பழகினார்கள். மணிக்கணக்கில் ஓடவும் எகிறிக் குதிக்கவும் சரேலென்று பதுங்கவும் பாயவும் ஓடியபடி சுடவும் சுட்டுவிட்டுத் தப்பிக்கவும் அக்கறையுடன் பயிற்சியெடுத்தார்கள்.

யானைகள் நிறைந்த அந்தக் கானகத்தின் நடுவே சுமார் இருபது புலிகள் பிறந்து வளர்கின்றன என்று சொன்னால்கூட அப்போது யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். யாழ்ப்பாணம் முழுதும் இளைஞர்கள் பல்வேறு குழுக்களாகவும் உதிரிகளாகவும் ஆயுதப் புரட்சி குறித்து கனவு கண்டுகொண்டிருந்த சமயத்தில் முறையான பயிற்சி, அதன்பிறகு செயல் என்று தீர்மானமாகக் களமிறங்கிய முதல் நபர் பிரபாகரன்.

`நண்பர்களே, ஒரு விஷயம். ஓர் இயக்கம் ஒழுங்காக வளர்வதும் வாழ்வதும் சாதிப்பதும் அத்தனை எளிதான செயலல்ல. நம்மிடையே மிகச் சிறந்த கட்டுப்பாடுகள் இருந்தாலொழிய நமது போராட்டம் வெல்லாது. உங்களில் எத்தனை பேர் வீடு, குடும்பம், காதல், திருமணம் போன்ற சிந்தனைகளை முற்றுமுழுதாகத் துறக்கத் தயாராக இருக்கிறீர்கள்?'

பிரபாகரன் கேட்டார். அத்தனை பேரும் கைதூக்கினார்கள்.

`சரி. நம்மில் யாரும் புகை பிடிக்கக்கூடாது. மது அருந்தக்கூடாது. எந்த விதமான லாகிரி வஸ்துக்களுக்கும் இயக்கத்தில் இடமில்லை. இது கட்டாயம். யாராவது விதி மீறினால் உடனே வெளியேற்றப்படுவீர்கள். முற்று முழுதான விழிப்புணர்வுடன் அத்தனை பேரும் இருந்தாகவேண்டும். சம்மதமா?'

`சரி' என்றார்கள்.

`இயக்கத்தில் யாரும் வீட்டுக்குப் போகக்கூடாது. வீட்டாருடன் ரகசியமாகக் கூடத் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா எல்லோரும் முக்கியம்தான். லட்சியம் அனைத்தைக் காட்டிலும் முக்கியம். நாம் அவர்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்கும் அது பிரச்னையாகிப் போகும். புரிகிறதா?'

முன்பொரு நாள் அதிகாலை ஐந்து மணி சுமாருக்கு வல்வெட்டித்துறையில் பிரபாகரன் வீட்டுக்கு போலீஸ் வந்து கதவு தட்டியதே? அப்போது எழுந்து வெளியே போனதுடன் சரி. இன்றுவரை அவர் தன் வீட்டுப்பக்கம் சென்று பார்த்ததில்லை. அந்த மன உறுதியைத்தான் அவர் தமது தோழர்களிடம் அன்றைக்கு வாக்குறுதியாகக் கேட்டார்.

`எந்தக் காரணத்தாலாவது இயக்கத்திலிருந்து யாராவது வெளியேற நேர்ந்தால் அவர்கள் வேறொரு இயக்கத்தில் போய்ச் சேரவோ, புதிய இயக்கம் தொடங்கவோ கூடாது. புலிகள் அமைப்புக்குள் நிகழும் எந்த ஒரு விஷயமும் வெளியே குறிப்பாக எதிரிகளுக்குத் தெரியக்கூடாது. நாம் நட்புணர்வுடன் இருப்போம். ஆனால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக முக்கியம். எந்த விதியையும் யாரும் மீறுவதற்கில்லை. மீறுவது என்று யார் முடிவு செய்தாலும் அது இயக்கத்துக்கு துரோகம் செய்வதாகும். சம்மதமா?'

அவர் கவலைப்பட்டதில் நியாயம் இல்லாமல் இல்லை. யாழ்ப்பாணத்தில் அன்றைக்கு இம்மாதிரி புரட்சிகரக் கனவுடன் களமிறங்கிய பல இளைஞர் குழுக்கள் வெகு சீக்கிரத்தில் காணாமல் போய்க்கொண்டிருந்தன. மாணவர் பேரவை இருந்தது, சிதைந்து விட்டது. பிறகு இளைஞர் பேரவை வந்தது. அதுவும் சிதறிவிட்டது. டி.எல்.ஓ. என்று ஒரு குழு தொடங்கப்பட்டது. ஒரே ஒரு வங்கிக்கொள்ளையுடன் காணாமல் போய்விட்டது. பெயர் வெளியே தெரியும் முன்பே இயக்கம் சிதைந்த கதைகள் அநேகம்.

அம்மாதிரியான அனர்த்தங்கள் ஏதும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் அறவே கூடாது என்று அவர் நினைத்தார். அதனால்தான் யாரும் எண்ணிப் பார்க்கமுடியாத கடும் நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டன.

இயக்கத்தின் உறுப்பினர்களுக்குப் பிரபாகரன் அளித்த போர்ப்பயிற்சி களுக்குக் கூட முன்மாதிரிகள் கிடையாது. கெரில்லாப் போர் முறைதான். திடீரென்று தோன்றித் தாக்கிவிட்டுக் காணாமல் போய்விடும் முறை. உலகின் பல பாகங்களில் பல இயக்கங்கள் கடைப்பிடிக்கும் வழக்கம்தான். ஆனாலும் யார் எப்படிச் செய்கிறார்கள், எப்படித் தாக்குகிறார்கள், எப்படித் தப்புகிறார்கள் என்றெல்லாம் பிரபாகரன் ஆராயவில்லை. விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவும் இல்லை.

இதோ பாருங்கள். இது நம் மண். நமது பிரச்னை. நமது எதிரிக்கு எது சரி என்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்னொரு இடத்தில் கையாளப்படும் போர்க்கலை உத்திகள் இங்கே எடுபடும் என்று சொல்வதற்கில்லை. தெற்கே ஜனதா விமுக்தி பெரமுனா ஒரு புரட்சி செய்தார்களே, என்ன ஆயிற்று பார்த்தீர்கள் அல்லவா? அதுவும் ஆயுதப் புரட்சிதான். அரசுக்கு எதிரான புரட்சிதான். சீனப் புரட்சி, ரஷ்யப் புரட்சி முன் மாதிரிகளை வைத்துக்கொண்டு வியூகம் வகுத்தார்கள். என்ன ஆனது? பதினைந்தாயிரம் பேரை பலி கொண்டது தவிர வேறென்ன லாபம்?

வேண்டாம். யாரையும் பார்க்காதீர்கள். நமக்கு முன்மாதிரிகளைத் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். நமக்கு நாம்தான் ஆசிரியர்கள். நமது பாதையை நாம் தீர்மானிப்போம். இந்தக் காட்டுக்குள் இப்படியொரு வசதியான பயிற்சியிடத்தை நமக்கு நாமே கண்டெடுக்கவில்லை? அதே மாதிரி, நமக்கேற்ற போர்ப்பயிற்சிகளை நாமே உருவாக்கிக்கொள்வோம்.

அப்படித்தான் அவர் ஆரம்பித்தார்.

தமிழர்களை புழு பூச்சி அளவுக்குக் கூட மதிக்காத இலங்கை அரசின் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் 1978 செப்டம்பர் 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயவர்த்தனே அரசுக்கு எந்த வகையில் சவால் விடுக்கலாம் என்று அரசியல் கட்சியினர், போராளி இளைஞர்கள் எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிரபாகரன் அதற்குள் காரியத்தைச் செய்தே முடித்துவிட்டார். ஏர் லங்காவுக்குச் சொந்தமான ஒரு ஆவ்ரோ விமானம். பயணிகள் இறங்கும் வரை பொறுத்திருந்துவிட்டு வெடிக்கும் விதத்தில் ஏற்பாடு செய்து தேசத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தார்.

இது பேசும் இயக்கமல்ல; செய்யும் இயக்கம் என்று அத்தனை பேருக்கும் புரிந்தது அப்போதுதான். எல்லாம் சரியாக இருந்தது. எல்லோரும் சரியாகவே இருந்தார்கள். சற்றும் எதிர்பாராத விதத்தில்தான் அந்தப் பிரச்னை வந்தது.

பிரச்னை என்பது பூத மாகத்தான் வரவேண்டுமா என்ன? ஒரு காதலாக அது வந்தது.

(தொடரும்)

http://eelavarkural.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D


♥ தலைவர் பிரபாகரன் தொடர் 5 ♥

தலைவர் பிரபாகரன் தொடர் 5

'சேலத்துக்குப் போய்விடலாம்' என்று குட்டிமணி சொன்னார். அவர் தயாராக இருந்தார். தங்கதுரைக்கும்கூட அதுதான் அப்போது விருப்பம். சேலத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை. நண்பர்கள் அங்கே இருந்திருக்கலாம். வேறு ஏதாவது பணிகள் இருந்திருக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இருந்திருக்கலாம்.
ஆனால் பிரபாகரனுக்கு விருப்பமில்லை. சேலம் சென்று என்ன செய்வது? வெறுமனே ஊர் சுற்றுவது தவிர வேறு எந்தப் பயனுமில்லை. தப்பித்து வந்தது, பதுங்கியிருப்பதற்காக என்று அவர் கருதவில்லை. செயல், செயல் முக்கியம். ஏதாவது செய்தாக வேண்டும். மிகத் தீவிரமாக இயங்கவேண்டிய தருணம் என்று தனக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டார். ஒரு தாற்காலிக ஏற்பாடாகவே தமிழகப் பயணத்தை அவர் எண்ணினார். சில நாட்கள் சென்னைக்குச் சென்று தலைவர்களைச் சந்திப்பது அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. யாராவது உதவ வேண்டும் அதற்கு. யார்?

ஒரு செய்தி வந்திருந்தது. அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பித்த செட்டி தனபாலசிங்கம் மயிலாப்பூரில் வசித்துக்கொண்டிருக்கிறான்.

அடடே அப்படியா என்றார் பிரபாகரன். செட்டியை அவருக்குத் தெரியும். வெகு நன்றாகத் தெரியும். அவனது சகோதரன் செல்லக்கிளியையும் தெரியும். செட்டியின் பெற்றோர், உறவுக்காரர்கள் அனைவரையும் தெரியும். செட்டி ஒரு மாதிரியான ஆள். ஒரு மாதிரி என்றால், உள்ளூர் கிரிமினல் என்று பொருள். கொள்ளைத் திட்டங்களில் ஆர்வம் கொண்டவன். அவனது வயதை ஒத்த தமிழ் இளைஞர்கள் பலர் விடுதலை வேட்கையுடன் ஆயுதம் ஏந்திய சமயம், எந்த வங்கியில் கைவைக்கலாம் என்று மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தவன். போராளி இளைஞர்கள் தமது செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அரசு வங்கிகளில் கொள்ளையடிப்பதை தமக்குத்தாமே அனுமதித்துக்கொண்டதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு வரிசையாகக் கைவரிசை காட்டுவதில் மும்முரமாக இருந்தவன்.

விடுதலை, தமிழர் நலன், மேலான சகவாழ்வு, சுதந்தரக் காற்று குறித்தெல்லாம் செட்டிக்கு எக்காலத்திலும் அக்கறை கிடையாது. போராளி இளைஞர்கள் வங்கிக்கொள்ளைகளில் ஈடுபடுகிறார்களா? நல்லது. அவர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஆயுதம் வாங்கிக்கொண்டு போகட்டும். நான் கூடச் சென்று என் பங்குக்குக் கொஞ்சம் அடித்துக்கொள்கிறேன். எனக்கு ஆயுதம் வாங்க வேண்டாம். ஆனால் ஆகவேண்டிய காரியங்கள் வேறு பல உண்டு.

பிரபாகரனுக்கு இது தெரியும். செட்டி அப்படித்தான். அவனைத் திருத்த முடியாது. அது வேறு வார்ப்பு. ஆனாலும் பழகுவதற்கு நல்லவன். பலமுறை உடன் உட்கார்ந்து பேசியிருக்கிறான். போராளி இளைஞர்களின் பல காரியங்களுக்கு அவ்வப்போது உதவிகூட செய்திருக்கிறான். யாழ்ப்பாணத்தில் அவனைத் தெரியாத போராளிகள் கிடையாது. குட்டிமணி, தங்கதுரை தலைமுறையைச் சேர்ந்தவர்களிலிருந்து பிரபாகரன் தலைமுறைக்காரர்கள் வரை அனைவர் மத்தியிலும் அவன் பிரபலம். மாணவர் பேரவை, இளைஞர் பேரவை உறுப்பினர்களுக்கெல்லாம் கூட அவனைத் தெரியும்.

தெரியுமே தவிர யாரும் மதிக்கமாட்டார்கள். பார்த்தால் ஒரு வணக்கம். நீ சுகமா, நான் நலம். தீர்ந்தது விஷயம். சற்று ஒதுங்கியே இருப்பது வழக்கம்.

பிரபாகரனும் அப்படித்தான். ஆனாலும் இந்தச் சமயத்தில் மயிலாப்பூரில் செட்டி வந்து தங்கியிருப்பது ஒரு முக்கியமான செய்தி. சென்னைக்குப் போகும் எண்ணத்தில் இருந்த பிரபாகரனுக்கு அது ஒரு நல்ல செய்தியாகவும் பட்டது. குறைந்தபட்சம் தங்கிக்கொள்ள ஓரிடம். போதாது?
பிரபாகரன் வேதாரண்யத்திலிருந்து பஸ் ஏறிப் புறப்பட்டு மயிலாப்பூர் வந்து சேர்ந்தார்.

அதற்குள் அவர் செட்டியுடன் சென்று சேருவது பற்றி, பெரியஜோதி சேலம் சென்றிருந்த தங்கதுரைக்கும் குட்டிமணிக்கும் தகவல் சொல்லி விட்டார்.

அவர்கள் அதிர்ந்து போனார்கள். உடனே பிரபாகரனைத் தொடர்பு-கொண்டார்கள். தம்பி வேண்டாம். அவன் ஆபத்தானவன். தவிரவும் உன்னுடைய நோக்கத்துடன் ஒத்துப்போக முடியாதவன்.

அப்படியா? செட்டி பிரபாகரனுடன் வேறு விதமாகத்தான் பேசிக்-கொண்டிருந்தான். நீங்கள் எல்லோரும் என்னைத் தவறாகப் புரிந்து-கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அக்கறை இருக்கிறது. எனக்கும் போராட்டத்தில் ஈடுபாடு இருக்கிறது. நம் மக்களின் நல்வாழ்வின்மீது ஈடுபாடு இருக்கிறது. யாழ்ப்பாணம் திரும்பியபிறகு நீ வேறு செட்டியைப் பார்க்கப் போகிறாய், பார்.

பிரபாகரனிடம் இயல்பாக ஒரு வழக்கம் உண்டு. அவரால் எந்தக் கூட்டத்திலும் சகஜமாக இருக்கமுடியும். ஆனால் எந்தக் கூட்டத்தின் சட்டைச் சாயமும் தன்மீது ஒட்டாமல் பார்த்துக்கொள்வார். பின்னாளில் `டெலோ'வாக உருப்பெற்ற தங்கதுரையின் நண்பர் வட்டத்தில் இருந்தபோதும் பிரபாகரன் தனது தனித்துவத்தை விட்டுக்கொடுத்ததில்லை. செட்டி போன்ற கிரிமினல்களுடன் தொடர்பு இருந்தாலும் தனது லட்சியத்தை மாற்றிக்கொண்டதில்லை.

இதோ பார் செட்டி, வங்கிக்கொள்ளை உனக்கு மிகுந்த கிளுகிளுப்புத் தருகிறது என்பதை நான் அறிவேன். கொள்ளையடிப்பது என் நோக்கமல்ல. ஆனால் இயக்கம் நடக்கப் பணம் வேண்டும். வங்கியில் இருப்பது மக்கள் பணமல்லவா என்று கேட்காதே. அது அரசாங்க வங்கி. கொள்ளையுடன் நீ தேங்கிப் போவதால் நீ கிரிமினல் என்று கருதப்படுகிறாய். பணமே இல்லாது போனாலும் என் செயல்பாடு நிற்கப்போவதில்லை. வித்தியாசம் புரிகிறதா?

நிறையப் பேசினார்கள். யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிய பிறகு என்ன-வெல்லாம் செய்யவேண்டும் என்று பேசிப்பேசித் திட்டமிட்டார்கள். திட்டங்கள் செயல்படுத்தப்படத் தேவையான பணத்துக்குத் தானே பொறுப்பு என்று செட்டி சொன்னான். வேறென்ன? வங்கிக்கொள்ளைதான்.

1974-ம் ஆண்டு மத்தியில் பிரபாகரன் மீண்டும் இலங்கைக்குத் திரும்பிச் சென்றார். பரபரவென்று காரியங்கள் நடைபெறத் தொடங்கின. சாத்வீகிகள் அங்கே தபால் தலைப் போராட்டம் என்று ஒன்றை நடத்திக்கொண்டிருந்த போது, பிரபாகரன் தனது நண்பர்களை அழைத்தார்.

காத்திருந்தது போதும் நண்பர்களே. நாம் தொடங்கலாம் என்று சொன்னார். ஒரு பக்கம் வங்கிக்கொள்ளைகள் ஆங்காங்கே நடைபெற்றன. பொறுப்பு செட்டியுடையது. பிரச்னையே அங்குதான். இயக்கப் பணிகளுக்காக என்று சொல்லிவிட்டு நடத்திய கொள்ளைகளில் பாதிப் பணம் வந்து சேரவே இல்லை. அடடே, செட்டி கார் வாங்கிவிட்டானாமே? அப்படியா? அவன் பளபளவென்று சில்க் சட்டை போட்டுக்கொண்டு போகிறான், கமகமவென்று செண்ட் அடித்துக்கொண்டு வருகிறான் என்று ஆளுக்கொரு தகவல் சொன்னார்கள்.

பிரபாகரனுக்கு வெறுப்பாக இருந்தது. ம்ஹும். சிலரைத் திருத்தமுடியாது. அதற்காக வருத்தப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதில் அர்த்தமில்லை. சரி, நாம் குண்டு வைக்கலாம் என்று எழுந்தார்.

ஒரே நாள். ஒரே சமயம். யாழ்ப்பாணத்தின் முக்கியமான ஒரு கடைவீதி, ரயில்வே ஸ்டேஷன், ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்று தேர்ந்தெடுக்-கப்பட்ட சில இடங்களில் பிரபாகரன் வைத்த குண்டுகள் வெடித்தன. சிறீமாவோ பண்டாரநாயகா திரும்பி உட்கார்ந்து வடக்கிருக்க ஆரம்பித்தார்.

உண்மையில் பிரபாகரனுக்கு அப்போது பொது அமைதிச் சீர்குலைவு நோக்கமாக இருக்கவில்லை. அவரது இலக்கு வேறு. ஒரு பெரும் படுகொலையைத்தான் தொடக்கப்புள்ளியாக மனத்தில் குறித்து வைத்திருந்தார். முதல் அத்தியாயத்தில் பார்த்த ஆல்ஃப்ரட் துரையப்பா. நிச்சயமாக ஒழிக்கப்படவேண்டிய கிருமி என்று தீர்மானம் செய்திருந்தார்.

அந்த வருடம் ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று காவல் துறையும் நகர மேயரான துரையப்பாவும் இணைந்து நடத்திய களேபரத்தில் ஒன்பது தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர். தமிழர்கள் அத்தனை பேரின் வெறுப்பும் அவர் பக்கம் திரும்பியிருந்தது.

துரையப்பாவின் கணக்கைத் தீர்த்ததுதான் பிரபாகரனின் வெளியே தெரிந்த முதல் செயல். அதன்பிறகு அவரது `புதிய தமிழ்ப் புலிகள்' புதிய வேகம் கொண்டு இயங்க ஆரம்பித்துவிட்டது. 1976 மே 5-ம் தேதி பிரபாகரன் இயக்கத்துக்கு வேறு பெயர் வைத்தார். தமிழீழ விடுதலைப் புலிகள். புதிய விதிமுறைகள் வகுத்தார். புதிய ஒழுக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பழைய அமைப்பில் இருந்த பிசிறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டன. சரி செய்ய முடியாதவை களையப்பட்டன, செட்டியைப் போல.

(தொடரும்)

http://eelavarkural.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

♥ தலைவர் பிரபாகரன் தொடர் 4 ♥

தலைவர் பிரபாகரன் தொடர் 4


ல்வெட்டித்துறையில் அப்போது இருபது இருபத்தைந்து இளைஞர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள். இரண்டு நண்பர்கள் அவர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். ஒருவர், நடராஜா தங்கதுரை. இன்னொருவர், செல்வராஜா யோகச்சந்திரன். துடிப்பானவர்கள். ஏதாவது செய்யவேண்டும் என்கிற தணியாத தாகம் கொண்டவர்கள். தரப்படுத்துதல் என்கிற பெயரில் தமிழ் மாணவர்களை அரசாங்கம் பழிவாங்கிக்கொண்டிருப்பதில் வெறுப்புற்றிருந்தவர்கள். தமிழ் அரசியல்வாதிகளால் பத்து பைசாவுக்குப் பிரயோஜனமில்லை என்று வருந்திக்கொண்டிருந்தவர்கள். தமிழர்களின் மீட்சிக்கு ஆயுதம் ஒன்றே இறுதி வழி என்று முடிவு செய்து, களம் இறங்கியிருந்தவர்கள்.

ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை. ஆயுதம் கிடைப்பது. வெடிபொருள்கள் கிடைப்பது. கிடைத்ததெல்லாம் இரண்டாம் தரம். உடைந்த துப்பாக்கிகள். துருப்பிடித்த பிஸ்டல்கள். கெஞ்சிக் கூத்தாடினால் ஏழெட்டு ரவைகள் கிடைக்கும். சுடுவதற்குப் பயிற்சி வேண்டாமா? பயிற்சிக்கு ரவைகளை வீணாக்கினால் புரட்சிக்கு என்ன செய்வது?

தவித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு மெக்கானிக்கை நட்பாக்கிக்கொண்டு, கிடைத்த உடைந்த துப்பாக்கிகளைக் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொல்லியிருந்தார்கள். குழுவின் இளம் உறுப்பினராகச் சேர்ந்திருந்த பிரபாகரனுக்கு, அந்த மெக்கானிக்கின் அசிஸ்டெண்டாக வேலை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

துருப்பிடித்த பிஸ்டல்களைக் கழற்றிப் போட்டு ரிப்பேர் செய்யும் மெக்கானிக்கின் கைவிரல்களையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பார் பிரபாகரன். எண்ணெய் போட்டுத் தேய்த்துத் தேய்த்து மெருகேற்றி, பகுதி பகுதியாக மீண்டும் இணைத்து, ஒரு நல்ல உருப்படியாக மாற்றி வைத்துவிட்டு மெக்கானிக் எழுந்து போனதும் பிரபாகரன் அதனைக் கையில் எடுப்பார். மீண்டும் பகுதி பகுதியாகக் கழற்றிப் போட்டுவிட்டு, மெக்கானிக் செய்தது போலவே திரும்ப இணைத்துப் பார்ப்பார். அதுதான் ஆரம்பம்.

தங்குமிடம்தான் பெரும் பிரச்னையாக இருந்தது. டீக்கடைகளின் பின்புறம். ரயில்வே லைன் ஓரத்து புதர் மறைவுகள். நண்பர்களின் வீடுகள். கோயில் திண்ணைகள். பள்ளிக்கூடத் திண்ணைகள். உலகம் உறங்கும் வரை விழித்திருந்துவிட்டு, ஒதுங்கிப் படுப்பார். ஊர் விழிப்பதற்கு முன்னால் எழுந்து போய்விட வேண்டும். எந்த இடமானாலும் சரி. இதுதான் விதி. இதுதான் வாழ்க்கை.

ரொம்பக் கஷ்டமாக இருக்கிறதா தம்பி? தங்கதுரை ஆதரவாகக் கேட்பார். பிரபாகரன் சிரிப்பார். என்ன சாப்பிட்டாய்? அடுத்த கேள்வி அநேகமாக அதுவாகத்தான் இருக்கும்.

பொதுவாக அந்நாட்களில் பிரபாகரன் உட்கார்ந்து வயிறாரச் சாப்பிட்டது வெகு அபூர்வம். வசதியில்லாமல் இல்லை. இடமில்லை என்பதுதான் விஷயம். போலீஸ் தேடத் தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததுமே தலைமறைவாகியிருக்க வேண்டும். வீடுவரை வந்துவிட்டபின் தப்பித்தது சற்றே பிழை. இன்னும் கொஞ்சம் முன்கூட்டி யூகித்திருக்க வேண்டும். இப்போது தேடுதல் தீவிரமடைந்திருக்கும். எங்கும் கண்காணிப்புக் கழுகுகள் வட்டமிட்டபடியேதான் இருக்கும்.

இத்தனைக்கும் அன்றைய பிற தமிழ் இளைஞர்கள் செய்ததுபோல், அப்போது அவர் வங்கிக்கொள்ளை எதிலும் ஈடுபடவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து பாயிண்ட் பெட்ரோவுக்குப் போகும் பேருந்து ஒன்றில் தீ வைத்த குழுவில் அவர் இருந்தார். மக்கள் இல்லாத பேருந்து. ஷெட்டுக்குப் போய்க்கொண்டிருந்தபோது வழியில் நிறுத்தி, ஓட்டுநரை இறங்கி நடந்து போகச் சொல்லிவிட்டு எரித்தார்கள். அதற்குத்தான் போலீஸ் தேடிக்கொண்டிருந்தது.

வெறும் ஆர்வம். ஏதாவது செய்யும் ஆர்வம். கவன ஈர்ப்பில் ஆர்வம். அரசாங்கத்தைப் பதறச் செய்யமாட்டோமா என்கிற தவிப்பு. அப்படியாவது தமிழர்களுக்கு ஏதாவது செய்யமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பு. ஆனால், இம்மாதிரியான உதிரிச் செயல்கள் பெரிய அளவில் உதவாது என்று மட்டும் அவருக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்க வேண்டும். ஆனால் இதுவல்ல. இப்படியல்ல. எனில் எது? எப்படி?

யோசித்துக்கொண்டிருந்தார். இரவுப் பொழுதுகளில் வயல்வெளியில் இறங்கி வெகுதூரம் நடப்பார். வயல் காட்டில் எங்கே கிழங்கு பயிரிட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பார். சர்க்கரை வள்ளிக் கிழங்கு. இருட்டில் தடவிப் பார்த்து செடியை உணர்ந்து, கிழங்கைத் தோண்டி எடுத்துக்கொள்வார். மேலும் நடந்து மிளகாய்த் தோட்டம் பக்கமாகப் போய் நாலைந்து பச்சை மிளகாய்களை வேலியோரம் நின்று பறித்துக்கொள்வார்.
எங்காவது கால்வாய் அல்லது குளத்தில் கிழங்கைக் கழுவி, கையாலேயே தோலைச் சீவிவிட்டு பச்சையாக அப்படியே உண்பார். தொட்டுக்கொள்ளப் பச்சை மிளகாய்.

கஷ்டம்தான் இல்லை? யோகச்சந்திரன் என்கிற குட்டிமணி கேட்பார். இல்லையே என்பார் பிரபாகரன். பச்சை சர்க்கரை வள்ளிக்கிழங்கும் பச்சை மிளகாயும் வெகு விரைவில் அவரது இஷ்ட உணவாகிவிட்டிருந்ததுதான் காரணம்.

வீட்டை விட்டு வெளியேறி எத்தனை நாளானது என்பதே நினைவில்லை. வாழ்க்கை அதன் போக்கில் காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரபாகரன் மறைந்திருந்த இடத்துக்கு வேலுப்பிள்ளை வந்து நின்றார்.

அதிர்ந்து போய்விட்டார் பிரபாகரன். அப்பா, நீங்களா? இங்கேயா?

போலீஸ்காரன் தேடுவது பிழைப்புக்கு. அவனிடம் சிக்காதிருக்க முடியும். பெற்றவன் தேடுவது அப்படியா? தம்பி, என்ன இது? என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

பிரபாகரன் உடனே பதில் சொல்லவில்லை. வெகுநேரம் யோசித்தார். பிறகு சொன்னார். அப்பா, உங்களுக்கு முழுக்கப் புரியுமா என்று தெரியவில்லை. என்னால் உங்களுக்கு இனி பயனில்லை. என்னை விட்டுவிடுங்கள்.

தலைமறைவுக் காலத்தில் பிரபாகரனைச் சுற்றி ஒரு சிறு குழு சேர்ந்திருந்தது. தங்கதுரை, குட்டிமணி குழுவிலிருந்தவர்கள் அல்லர். இது வேறு குழு. வேறு இளைஞர்கள். பிரபாகரனைப் போலவே ஆர்வமும் துடிப்பும் மிக்க இளைஞர்கள். அதிகமில்லை. பத்துப் பதினைந்து பேர் இருக்கலாம். ஒரு குழுவாகச் செயல்படலாம் என்று முடிவு செய்திருந்தவர்கள். பிரபாகரனைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தவர்கள். தமக்குள் பேசி தங்கள் இயக்கத்துக்குப் `புதிய தமிழ்ப் புலிகள்' என்று பெயரிட்டிருந்தார்கள்.

வெளியில் யாருக்கும் தெரியாது. பெயர் அல்ல; அப்படியொரு குழு உருவானது கூட. தலைமறைவு வாழ்க்கை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. கொஞ்சம் வெளிச்சத்தில் நடமாட முடிந்தால் ஏதாவது செய்யலாம் என்று எண்ணியிருந்தார்கள்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, பிரபாகரன் பதுங்கியிருந்த இடம் அவரது தந்தைக்குத் தெரிந்தது போலவே போலீஸுக்கும் தெரிந்து போனது. அடுத்த இடம் தேடும் அவசரத்தில் அப்போது இருந்தார் பிரபாகரன். அப்போதுதான் வேலுப்பிள்ளை வந்திருந்தார்.

சொல் தம்பி. என்ன செய்யப்போகிறாய்?

இந்தியாவுக்குப் போகப்போகிறேன் அப்பா என்று அவர் சொல்லவில்லை. ஆனால் அதைத்தான் அப்போது செய்தார்..

தொடரும்

http://eelavarkural.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

♥ தலைவர் பிரபாகரன் தொடர் 3 ♥

தலைவர் பிரபாகரன் தொடர் 3

ந்தல் போட்டிருந்தார்கள். பெரிய பந்தல். வீட்டுக்குப் பக்கத்திலேயே, காம்பவுண்டுக்கு உள்ளேயே. நீரில் நனைத்து மாவிலைக் கொத்து செருகி, இரண்டு வாழை மரங்களை நிமிர்த்தி வைத்துக் கட்டினார்கள். உறவுக்காரர்களும் நண்பர்களும் வண்டி கட்டிக்கொண்டு வாசலில் வந்து இறங்கியபோது ஊரே திரண்டு நின்று வரவேற்றது.

வேலுப்பிள்ளை வீட்டுத் திருமணம் என்பது ஊர்த் திருவிழா மாதிரி. ஒப்புக்குக் கூட பத்திரிகை என்று ஏதும் அச்சடிக்கவில்லை. எல்லாம் வாய்வார்த்தைதான். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் விஷயம். அழைத்தால் கலந்துகொள்ளும் வைபவமா அது? அத்தனை பேரும் தங்கள் மகள் திருமணமாகவே நினைத்தார்கள். பெரிய பெரிய கோலங்களால் வீதியை நிறைத்து, முகத்தில் புன்னகை ஏந்தி நல்வரவு சொன்னார்கள்.

வேலுப்பிள்ளைக்கு மட்டும் கவலையாக இருந்தது. தம்பியைக் காணோம். எங்கே போனான்? மனைவியிடம் கேட்டுப் பார்த்தார். பதிலில்லை. மூத்த மகன் மனோகரனிடம் கேட்டார். தெரியவில்லை. ஜகதீஸ்வரியிடம் கேட்டார். ம்ஹும். வினோதினி, உன்னிடமாவது சொல்லிவிட்டுப் போனானா?

தெரியவில்லையே அப்பா என்றார் கல்யாணப்பெண்.

அலங்காரம் நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை ராஜேந்திரன் கொழும்புவில் வேலை பார்க்கிறவர். ஓர் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் நல்ல உத்தியோகம், பெரிய சம்பளம். கௌரவமான குடும்பம். சம்பந்தம் அமைந்தது தெய்வச் செயல்.

திருமணத்துக்கு வந்து இறங்கியதிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எங்கே உங்கள் கடைசிப் பிள்ளை பிரபாகரன்? கண்ணிலேயே தென்படவில்லையே?

வேலுப்பிள்ளைக்குக் கவலையாக இருந்தது. சில காலமாகவே பிரபாகரனின் நடவடிக்கைகள் அவருக்குக் குழப்பம் தந்தன. யார் யாரோ நண்பர்கள் என்று வருகிறார்கள். ரகசியமாகப் பேசுகிறார்கள். வழியனுப்புவது போல் வெளியே செல்பவன், பலமணி நேரம் கழித்துத்தான் திரும்பி வருகிறான். மாணவர் பேரவைக் கூட்டத்தில் பார்த்ததாக யாரோ வந்து சொல்லிவிட்டுப் போகிறார்கள். யாழ்ப்பாணம் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய அப்பு சைக்கிள் கடையின் பின்புறம், தண்டவாளத்தில் தனியே அமர்ந்திருந்தான் என்று சொல்வார்கள்.

அரசியல் ஆர்வம் இருந்தால் சரி. தடுப்பதற்கில்லை. பிரபாகரன் வயதை ஒத்த அத்தனை பிள்ளைகளுக்கும் இருக்கிற விஷயம். அவர்கள் மாணவர்கள். அரசால், புதிய கல்வித் துறைக் கொள்கைகளால் வஞ்சிக்கப்பட்டவர்கள். சிங்கள மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் தருவதற்கென்றே தமிழ்ப் பையன்களை பலி கொடுக்கும் சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். சும்மா இருந்துவிட முடியாது. ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகமே போகாத தலைமுறை ஒன்று உருவாகிவிடும்.

அதுதான் அரசின் விருப்பம். பெரிய விளைச்சலற்ற வடக்கு மாகாணத்தின் வளமை முழுதும் கல்வியால் வந்தது.

அதில்தான் கைவைக்கிறார்கள். நீ படிப்பது அபாயம். எங்கள் சிங்களப் பிள்ளைகள் படிக்காதிருந்தால் அபாயம். ஒதுங்கு.

இவனுக்கு வழி விடு. நீ தொண்ணூறு எடுத்தால் உனக்கு சீட். இவன் அறுபது எடுத்தாலே சீட்.

தமிழ் இளைஞர்கள் அத்தனை பேரும் கொதித்துப் போயிருந்த காலம் அது. பிரபாகரனும் கொதித்திருக்கலாம். தப்பில்லை. ஆனால், இந்தப் பிள்ளையின் நடவடிக்கைகளில் ஏன் இத்தனை பூடகம்? போராட்டக் கூட்டங்களை அறிவிக்கும் போஸ்டர் ஒட்டப் போகிறான் என்றால் வீட்டில் சொல்லிவிட்டே போகலாமே? தம்பி, நீ போஸ்டர்தானே ஒட்டுகிறாய்?

புன்னகைதான் பதில். அப்பா, கவலைப்படாதீர்கள். இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன்.

சில நாள் சொன்னபடி பிரபாகரன் வீட்டுக்கு வந்துவிடுவார். சில நாள் வர முடியாமல் போய்விடும். முதலில் கவலைப்படுவார்கள். பிறகு பழகிவிட்டார்கள். ஆனால், சகோதரியின் திருமணத்துக்கு முதல்நாள் கூடவா?

தம்பி வந்துவிட்டானா? மாப்பிள்ளை வீட்டார் நாலைந்து முறை கேட்டுவிட்டுப் போய்விட்டார்கள். இன்னும் ஆளைக் காணோம். எங்கே போய்விட்டாய், தம்பி?

வேலுப்பிள்ளை கவலையுடன் பின்புறம் சமையல் நடந்துகொண்டிருக்கும் பந்தலுக்குப் போனார். ஊர்ப் பெண்கள் எல்லோரும் கூடி கறிகாய் நறுக்கிக்கொண்டிருந்தார்கள். கொதிக்கும் உலையிலிருந்து வாசனை மிதந்து வந்தது. இங்கே சாம்பார். அங்கே பாயசம். பச்சடி தயார். பொரியல் தயார். ரசம் தயார். யாரப்பா, வடை மாவில் உப்பு போட்டாகிவிட்டதா?

ஐயா, தம்பி வந்துவிட்டான். யாரோ சொன்னார்கள். ஆண்டவனே என்று ஒரு கணம் கண்ணை மூடி மனத்துக்குள் வணங்கிவிட்டு வேகமாக உள்ளே போனார் வேலுப்பிள்ளை.

பிரபாகரன், மாப்பிள்ளை ராஜேந்திரனின் அறையில் நின்றுகொண்டிருந்தார். வணக்கம். பயணமெல்லாம் சுகமாயிருந்தது தானே?

உயரம் சற்று மட்டுத்தான். ஆனால் உறுதியான தேகம். எதையும் தாங்கும் என்பது போல. கையைப் பிடித்துக் குலுக்கும்போது லேசாக வலித்த மாதிரி இல்லை? பலசாலி போலிருக்கிறது. ஆனால், முகத்தில் என்ன ஒரு வசீகரப் புன்னகை. கண்ணில் தீப்பொறி மாதிரி ஏதோ ஒன்று. படித்தவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்று. பிரபா, நீங்கள் என்ன படித்திருக்கீங்கள்? கேட்க நினைத்தார். ஏனோ மறந்துவிட்டது. இன்னொன்றும் கேட்க நினைத்தார். அக்கா கல்யாணத்துக்குக் கூட பக்கத்தில் இல்லாமல் அப்படியென்ன வேலை? அதையும் கேட்கவில்லை. கேட்க முடியவில்லை என்பதுதான் சரி.

தாமதமாக வந்தாலும் ஒரு பொறுப்புள்ள தம்பியாக, அந்தத் திருமணச் சடங்குகள் நிறைவடையும் வரை பிரபாகரன் பிறகு உடனிருந்தார். வேலுப்பிள்ளைக்கு நிம்மதி. வினோதினிக்கு சந்தோஷம். அம்மாவுக்குப் பெருமிதம். என்ன இருந்தாலும் பிள்ளை பக்கத்தில் இருப்பது ஒரு பலம் அல்லவா? இப்படியே இருந்துவிட்டால் தேவலை. அப்படித்தான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் பிரபாகரன் அதிக சமயம் எடுக்கவில்லை. 1972-ம் ஆண்டு ஏதோ ஒரு மாதம், ஏதோ ஒரு தினம். நியாயமாக சரித்திரம் அந்தத் தேதியைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஏனோ தவறிவிட்டது. அப்போது அவருக்கு வயது சரியாகப் பதினாறு. அதில் சந்தேகமில்லை.

இருள் பிரியாத அதிகாலைப் பொழுதில் வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள்?

ஒருவர் இருவர் மாதிரி தெரியவில்லை. ஏழெட்டுப் பேர்? பத்திருபது பேர்? அல்லது அதற்கும் மேலே? படுக்கையில் இருந்தபடி கண்ணைத் திறக்காமல் வேலுப்பிள்ளை குழம்பிக்கொண்டிருந்தார். மெல்லத் திரும்பிப் பார்த்தபோது மனைவியும் மகனும் சற்றுத்தள்ளி, பாயில் படுத்திருப்பது தெரிந்தது. நல்லவேளை, பிரபாகரன் இருக்கிறான்.

சில நிமிடங்களில் வெளியே கேட்ட சத்தம் வலுத்தது. பேச்சு சத்தம் மட்டுமல்ல. இப்போது நிறைய பூட்ஸ் சத்தமும் கேட்டது. எனவே, போலீஸ்.

கதவை அவர் திறந்ததுதான் தாமதம். தடதடவென்று இருபது, இருபத்தைந்து போலீஸார் வீட்டுக்குள் நுழைந்து அங்குமிங்கும் தேடத் தொடங்கிவிட்டார்கள்.

ஏய், என்ன நடக்கிறது? இங்கே என்ன செய்கிறீர்கள்? நான் வேலுப்பிள்ளை. மாவட்ட நிலவள அதிகாரி. நீங்கள் தேடும்படியாக என் வீட்டில் ஏதுமில்லை.

இன்ஸ்பெக்டர் ஒருவர் மெல்ல அவர் அருகே வந்து, நிறுத்தி நிதானமாகக் கேட்டார். எங்கே உங்கள் பிள்ளை பிரபாகரன்?

திக்கென்றது வேலுப்பிள்ளைக்கு. பேச்சு வராமல் உள்ளே கைகாட்டினார்.

சற்றுமுன் அவர் பார்த்த இடத்தில், ஒரு தலையணையும் பாயும்தான் இருந்தன. தம்பி இல்லை..


http://eelavarkural.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

♥ தலைவர் பிரபாகரன் தொடர் 2 ♥

தலைவர் பிரபாகரன் தொடர் 2

ந்து வயதுப் பையன்கள் யாரும் அந்த மாதிரி மணிக்கணக்கில் பொறுமையாக உட்காரமாட்டார்கள். கலவரம், உயிரிழப்பு, கண்ணீர், சோகம் என்று பெரியவர்கள் கதறுவதை உணர்ச்சிவசப்படாமல் உற்றுநோக்க மாட்டார்கள். குடியுரிமைச் சிக்கல் தொடர்பான விவாதங்களை உன்னிப்பாக கவனிக்கமாட்டார்கள். மொழியால், இனத்தால், கலாசாரத்தால் முற்றிலும் வேறுபட்ட இரண்டு இனங்களின் பிரச்னையைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்க உள்ளபடியே விரும்பமாட்டார்கள்.

அவர்களுக்கு விளையாட வேண்டும். பள்ளிக்கூடம் போகவேண்டும். வீட்டுக்கு வந்தால் தாய்மடி. நல்லதாக நாலு கதை கேட்டுப் படுத்தால் தீர்ந்தது விஷயம். சூழலின் சூடு ஓரளவு தாக்கியிருப்பினும் அடிப்படை விருப்பங்களில் பெரிய மாறுதல்கள் இருக்காது.

ஆனால் அந்தப் பையன் முற்றிலும் வேறு மாதிரி இருந்தான். அவனது ஆர்வங்கள் இன்னது என்று அவனது பெற்றோருக்கு சரியாகப் புரியவில்லை. படிக்கிறாயா? படிக்கிறேன். கோயிலுக்குப் போகிறாயா? போகிறேன். விளையாடுகிறாயா? விளையாடுகிறேன். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் ஏன் அடிக்கடி தனியே போய் உட்கார்ந்து யோசிக்கிறாய்? என்ன ஓடுகிறது உன் புத்தியில்? இந்த வயதில் என்ன சிந்தனை? பெரியவர்கள் பேசுமிடத்தில் நீ வந்து நிற்பதை அவ்வப்போது பார்க்கிறேன். உன்னால் தொந்தரவில்லை. குறுக்கே பேசுபவனில்லை நீ. ஆனாலும் இந்தப் பேச்சில் உனக்கு என்ன புரியும்?

பதில் சொல்லமாட்டான். கணப்பொழுதுப் புன்னகை. ஓடியேவிடுவான். ஆனால் திரும்பி வருவான். அதே மாதிரி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பான். என்ன ஆர்வம் இது? என்ன மாதிரியான அக்கறை இது? அக்கறைதானா? ஏதாவது புரியுமா இவனுக்கு?

அன்றைக்கு அப்படித்தான் அவனது அப்பாவும் நண்பர்களும் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தார்கள். கலவரத்தில் கொளுத்தப்பட்ட பாணந்துறை குருக்கள் பற்றி. நல்லவர். மிகவும் சாது. ஈ, எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்காதவர். கோயிலில் புகுந்த கலவரக்காரர்கள், குருக்களை இழுத்து வந்து நிறுத்தி உயிரோடு கொளுத்திவிட்டார்கள். யார் என்ன செய்ய முடியும்? ஊரே பற்றி எரிகிறது. கண்மூடித்தனமாக அடிக்கிறார்கள். கட்டி வைத்து எரிக்கிறார்கள். பார்த்த இடத்தில் உயிரைப் பறிக்கிறார்கள். வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடலாம். நாட்டை விட்டல்லவா ஓடச் சொல்கிறார்கள்? விதி. வேறென்ன சொல்வது?

பெரியவர்கள் சொந்த சோகத்தில் புலம்பிக்கொண்டிருந்தபோது அந்தச் சிறுவன் முதல்முறையாக வாயைத் திறந்தான். ``அப்பா, ஒரு நிமிடம். தாக்கத்தான் வருகிறார்கள் என்று தெரியுமல்லவா? அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை?''

தூக்கிவாரிப்போட்டது வேலுப்பிள்ளைக்கு. வல்வெட்டித்துறையில் அந்தக் காலகட்டத்தில் அப்படியொரு கேள்வியை யாராலும் கேட்டிருக்க முடியாது. பிரபாகரன் கேட்டான். சிறுவன். மிகவும் சிறுவன். தெரிந்துதான் கேட்கிறானா? தற்செயலாக வந்துவிட்ட கேள்வியா?

வாய்ப்பே இல்லை. வேலுப்பிள்ளையின் மகன் அப்படியெல்லாம் சிந்திக்கக்கூட முடியாது. எத்தனை சாது! எப்பேர்ப்பட்ட ஒழுக்க சீலர். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாத அணில் குஞ்சு அவர். அவர் மனைவி பார்வதி, அவருக்கு மேல். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கோயில், கடவுள், பதிகம். கொஞ்சம் வெளியே வந்தால் தமிழரசுக் கட்சி. தந்தை செல்வா. அவரது அறவழிப் போராட்டங்கள். தந்தை சொன்னால் சரி. தந்தை செய்வது சரி. பேப்பரைப் பார். அவர் என்ன பேசியிருக்கிறார் இன்றைக்கு?

`திருமேனியார் குடும்பம்' என்பார்கள். வல்வெட்டித்துறையில் அவர்கள் மிகவும் பிரபலம். வேலுப்பிள்ளையின் பாட்டனார் திருமேனி வெங்கடாசலம் கட்டிய வைத்தீஸ்வரன் கோயில் இன்றளவும் வல்வெட்டித்துறையில் பிரபலமானது. தான் கட்டிய கோயிலுக்கு மட்டுமல்ல. யார் வந்து கேட்டாலும் கோயில் பணி என்றால் அள்ளிக்கொடுக்கும் வம்சம் அது. அரசாங்கத்தை நம்பிப் பயனில்லாதபோது ஆண்டவனைத்தான் நம்பியாகவேண்டியிருக்கிறது.

என்றாவது விடியும் என்ற ஒற்றை நம்பிக்கை அவர்களிடம் மிச்சமிருந்தது. நிம்மதியாக ஒரு வாழ்க்கை. சுதந்தரமாக ஒரு வாழ்க்கை. கலவரமில்லாத ஒரு வாழ்க்கை. படுத்தால், யார் கதவு இடிப்பார்களோ என்று அஞ்சாமல் உறங்க ஒரு வாழ்க்கை. இரவிருந்தால் பகலிருக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்தவர்கள் அவர்கள். எல்லாம் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் ஆணி வேரைத்தான் சிறுவன் பிரபாகரனின் கேள்வி அன்றைக்கு முதல்முறையாக அசைத்துப் பார்த்தது.

குருக்கள்தானே? தினசரி கோயில் திருப்பணி செய்கிறவர்தானே? கடவுளா காப்பாற்றினார்? அல்லது நீங்கள்தான் காப்பாற்றினீர்களா? யாரால் என்ன முடிந்தது? தாக்க வந்தவர்களை அவர் திருப்பித் தாக்கியிருக்கவேண்டும். நிச்சயமாக, தாக்க முயற்சியாவது செய்திருக்க வேண்டும். எதிர்ப்புக் காட்டாமல் கட்டுண்டு, பற்றி எரிந்து இறந்தவரைப் பற்றிப் பரிதாபம் பேசி என்ன பயன்?

அதிர்ந்து போனார் வேலுப் பிள்ளை. திருப்பித் தாக்குவதா?

ஆம். அதிலென்ன தவறு என்று பிரபாகரன் கேட்டபோது வல்வெட்டித்துறை மட்டுமல்ல; இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதுமே அறவழிப் போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை கொண்டிருந்தது. தந்தை செல்வா என்கிற எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சிதான் ஒரே நம்பிக்கை. இலங்கை தமிழ் காங்கிரஸ் இருந்தாலும் செல்வா மட்டுமே செல்லுபடியாகக் கூடியவர். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல்கள், அறிக்கைகள் மற்றும் அழுகைகள். ஆயுதம் என்று சிந்திக்கக்கூடிய தலைமுறை அப்போது இல்லை.

அது அப்போதுதான் பிறந்திருந்த தலைமுறை. பிரபாகரன் அதில் முதல் செட்.

`தம்பி, இதோ பார். இதுதான் இந்தியா. நமக்கு வடக்கே இருக்கும் தேசம். கூப்பிடு தூரம். ஒரு காலத்தில் நம் ஊரிலிருந்து மதியம் புறப்பட்டுப் படகில் போய் மாலைக்காட்சி சினிமா பார்த்துவிட்டு இரவு ஊருக்குத் திரும்பி வந்துவிடுவார்கள்.எத்தனை பாகவதர் படங்கள், சின்னப்பா படங்கள், எம்.கே. ராதா படங்களெல்லாம் பார்த்திருக்கிறோம் தெரியுமா? யாரும் பாஸ்போர்ட் கேட்டதில்லை. விசா கேட்டதில்லை. அத்தனை இணக்கமான தேசம். நம் மக்களுக்கு அங்கே வியாபாரத் தொடர்புகள் இருந்தன. நம் ஊரிலேயே பல குடும்பங்கள் அங்கே பெண் எடுத்திருக்கின்றன. நடுவில் இருப்பதை ஒரு கடலாகவே யாரும் நினைத்ததில்லை. சற்றே பெரிய கால்வாய். அவ்வளவுதான். ஆனால் எல்லாம் ஒரு காலம். இப்போது இல்லை. நான் சொல்ல வந்ததும் அது இல்லை. இந்தியாவில் ஒரு சுதந்தரப் போராட்டம் நடந்தது. ஆ, அதற்கு முன்னால் நான் உனக்கு மகாத்மா காந்தியைப் பற்றிச் சொல்ல வேண்டும்...'

பிரபாகரன், காந்தி கதையை அப்பாவிடம் கேட்டுக்கொண்டாலும் தனியே எடுத்துப் படித்த புத்தகங்கள் சுபாஷ் சந்திர போஸைப் பற்றியதாகவே இருந்தன. அந்த வயதில் அவனுக்கு சுபாஷின் சாகசங்கள் பிடித்திருந்தன. பிரிட்டிஷார் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தேசம் விட்டுத் தப்பிப் போன சுபாஷ். ஜெர்மனியில் ஹிட்லரைச் சந்தித்த சுபாஷ். நீர்மூழ்கிக் கப்பலில் ஜப்பானுக்குத் தப்பிய சுபாஷ். தனி மனிதனாக ஒரு ராணுவத்தையே உருவாக்க முடிந்த அவரது பேராற்றல்.

பிறகு பகத்சிங்கைத் தெரிந்துகொண்டான். எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்குப் பிடித்தது. என் மண்ணில், என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படித் தடைபோடலாம்?

அப்பா, நான் காந்தியை மதிக்கிறேன். ஆனால், இந்தியாவின் கதை வேறு. நமக்கிருக்கும் பிரச்னைகள் அவர்களுக்கு இருந்ததில்லை. வெள்ளைக்காரன் ஆட்சியைப் பிடித்ததுதான் அங்கே பிரச்னை. இந்தியர்களைப் பூண்டோடு ஒழித்துக் கட்டவா பார்த்தான்? அங்கே ஒரே ஒரு ஜாலியன் வாலாபாக். இங்கே ஊருக்கு ஊர் சொக்கப்பனை. எப்படி ஒப்பிடுவீர்கள்? பிரிட்டிஷாருக்கு அங்கே அதிகாரம் செலுத்துவது ஒன்றே குறி. இனப்படுகொலை அல்ல. எந்தப் பாணந்துறை குருக்கள் அங்கே உயிரோடு கொளுத்தப்பட்டார்? நேற்றைக்கு அத்தை வந்திருந்தாரே, அவரது கணவரை அடித்தே கொன்ற கதையைச் சொல்லி அழுதாரே. அதற்கு ஏதாவது காரணம் இருந்திருக்க முடியுமா? அத்தையின் கணவருக்கும் அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நமது போராட்ட வழிகளை நாம் தீர்மானிப்பதில்லை அப்பா. நம் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்...

வேலுப்பிள்ளை கலவரமடையவில்லை. ஆனால் கவலைப்பட்டார். இது வேறு தலைமுறை. வேறு விதமாகச் சிந்திக்கிறது. மாவட்டக் காணி அதிகாரியாக உத்தியோகம் பார்த்து, செய்தித்தாள் அரசியலில் திருப்தியுற்று, கோயில் பணிகளில் கவலை கரைக்கும் தன்னைப் போலில்லை தன் மகன். சிந்திக்கிறான். ஆனால் வேறு விதமாக. ஆபத்தாக ஏதும் வராதவரை பிரச்னையில்லை. பார்வதி, தம்பி எப்போதும் படித்துக்கொண்டிருக்கிறானே, என்னவென்று எப்போதேனும் பார்த்தாயா?

பெற்றோருக்கும் இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனுக்கும் மட்டுமல்ல. திருமேனியார் வீட்டுக் கடைக்குட்டி, ஊருக்கே தம்பி. பின்னாளில் ஈழத் தமிழ் மக்கள் அத்தனை பேருக்கும்கூட அதுவே உறவு முறையாக இருக்கும் என்று வேலுப்பிள்ளை நினைத்திருக்க மாட்டார் அப்போது.

(தொடரும்)


http://eelavarkural.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!