1977-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழம் என்ற கோஷத்தை முன் வைத்து நிற்கும் அதே வேளையில் தமிழர் மத்தியிலான எழுச்சி, உணர்ச்சி ஊட்டக்கூடியதாக மாறியது. அதேபோன்று சிங்கள வெறியர்களின் வெறியாட்டமும் வேகமடைந்தது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டுமே இனக் கலவரம் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. இதை ஒட்டியே 1977-ஆம் ஆண்டுக் கலகத்தை காண வேண்டும்.
1977-ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி அடைந்து ஆட்சியை அமைத்தது வெறிக் கூட்டத்திற்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்தது.
அநுராதாபுரம், குருனாகலை, கோகாலை, களனியா, கொழும்பு, கந்தளாய், அம்பாறை, திருகோணமலை, மூதூர், இரத்னபுரி, கண்டி ஆகிய மாவட்டப் பகுதிகள் கலவரத்தின் அடித்தளமாக விளங்கின. 1977-இல் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் மடிந்தனர். இக் கலவரத்தால் 77,000 தோட்டத் தொழிலாளர்கள் வீடிழந்து அகதிகளாயினர்.
அரசாங்கத்தின் தலைவர்கள் வெறிமிக்க வகையில் அறிக்கைகளை விடுத்தனர். "போர் என்றால் போர்' "சமாதானம் என்றால் சமாதானம்' என்று ஜெயவர்த்தன கொக்கரித்தார். "சிங்களவரோடு போரிட்டு மடியப் போகிறீர்களா அல்லது இணங்கி வாழப் போகிறீர்களா என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்' என்று வெளிப்படையாகவே அறிக்கை விடுத்தவர் ஜெயவர்த்தன.
தமிழ் ஈழத்திற்காகப் போராடுவோர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியே இந்த அடக்குமுறையைச் சிங்களவர்கள் கையாண்டனர்.
அரசு தரப்பில் உள்ள வெறியர்களாலேயே தமிழ் எதிர்ப்புப் பிரசாரம் செய்யப்பட்டது. அமைச்சர் சிறில் மத்தியூ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது என்னவென்றால், ""பயங்கரவாதத்தைச் சட்டபூர்வமான வழிமுறைகளில் தடுத்து நிறுத்த முடியாது; யாரும் தடுத்து நிறுத்தியதும் இல்லை. பயங்கரவாதம், பயங்கரவாதத்தாலேதான் இதுவரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.*
இந்தக் கலவரத்தில் குண்டர்களை அணி திரட்டுவது என்பது போய், அரசே போலீசை அணி திரட்டி தாக்குதலை மேற்கொண்டது. இதில் இரண்டு வகைத் தந்திரங்கள் கையாளப்பட்டன.
சிங்களவர்கள் பெரும்பான்மையாய் உள்ள தென் பகுதியில், சிங்கள மக்களில் இருந்து குண்டர்களைத் திரட்டிச் சிறுபான்மைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால் வட பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், அரசின் காவல் துறையே ஆயுதமேந்தித் தாக்கியது. அரசு திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்னவென்றால், யாழ்ப்பாணத்தில் இக்கலவரத்தை முன்னின்று நடத்த வழிகாட்டியாய் இருந்த டி.ஐ.ஜி. கலவரம் முடிந்தவுடன் ஐ.ஜி. ஆகப் பதவி உயர்வு அளிக்கப்படுகிறார்.
1977-இல் நடந்த இந்த மோசமான கலவரத்தைப் பற்றி அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல்வேறு மனித உரிமைக் கழகங்கள் நிர்ப்பந்தித்தன. கலவரத்தைப் பற்றி விசாரிக்க அனா செனிவரத்தினாவையே அரசு நியமிக்கிறது. அவர் அளித்த அறிக்கையை 1983-இல்தான் அரசு வெளியிட்டது. அந்தச் சமயம் அவர் மலேசியாவில் ஹை கமிஷனராக பதவி பெற்றுப் போய்விட்டார்.
அந்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு அவர் குறிப்பிடுகிறார்: "தேர்தல் நேரத்தில் நடந்த வன்முறையில் 7,817 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 78 துப்பாக்கிச்சூடும், 62 கொலைகளும், திருட்டு, கொள்ளை அடிப்பு, சூறையாடல், கற்பழிப்பு அனைத்தும் இதில் அடங்கும்.
மேலும் தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரத்தில் 3,327 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் 131 கொலைகளும், 74 கற்பழிப்புகள் உட்பட சூறையாடல்களும், தாக்குதல்களும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் 77-ஆம் ஆண்டு முடிவில் ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்யும்போது மொத்தம் 83,082 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 76-ஆம் ஆண்டு கலவரத்தை ஒப்பிடுகையில் 48 சதவிகிதம் அதிகமாகி உள்ளது.
இன ரீதியான தாக்குதல்களின் விளைவாகத்தான் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு ஏற்பட்டு இந்த 48 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்பட்டது' என்கிறார்.
1978-ஆம் ஆண்டு ஜெயவர்த்தன புதிய அரசியல் சட்டத்தை அமல்படுத்துகிறார். இதற்கிடையில் அரசாங்கத்தினுடைய அதிரடி விசாரணைக் கைதுகளும், சித்திரவதைகளும் தொடர்ந்து நடக்கின்றன. சித்திரவதை புரிவதில் மிகச் சிறந்த திறமைசாலியாகப் பேர் எடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம் பிள்ளை என்பவர் தீவிரவாத தமிழ் இளைஞர்களால் 25.4.78 அன்று (விடுதலைப்புலிகளால்) துப்பாக்கியால் சுட்டுச் சாகடிக்கப்படுகிறார். ("புலிகள் வரலாறு' 1975-1984)
அதோடு மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக ஒரு போலீஸ் கோஷ்டியே தாக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறது. (இன்ஸ்பெக்டர் பேரம்பலம், காவலர் பாலசிங்கம், போலீஸ் டிரைவர் ஸ்ரீவர்த்தனா ஆகியோர்)
உடனடியாக அரசாங்கம் பயங்கரவாதத்தை முறியடிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அவசரநிலைப் பிரகடனம் செய்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது.
6 தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். பலர் சித்திரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். புதிய அரசியல் சட்டப்படி ஜனாதிபதிக்கு ஒட்டுமொத்தமான அதிகாரம் அளிக்கும் வகையில், புத்தமதமும், சிங்கள மொழியும் விசேஷ அந்தஸ்தைப் பெற்று, தமிழ் மொழி பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தீவிரவாதத் தமிழ் இளைஞர்களால், ஏர்சிலோன் கம்பனியின் ஆவ்ரோ விமானம் நொறுக்கப்படுகிறது. (7.9.1978-)
இந்நிகழ்ச்சி அரசுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும், தமிழ்ச் சுதந்திர இயக்கத்திற்கு ஓர் உத்வேகத்தை அளிக்கக்கூடியதாகவும் மாறுகிறது. இதற்கிடையில் பல வங்கிகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.
1979-இல் தொடர்ந்து வன்முறை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜெயவர்த்தன பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமலாக்குகிறார். அரசியல் சட்டத்தில் மனித உரிமைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. எந்தவிதமான விசாரணையுமின்றி, யாரையும் கைது செய்யவோ, 18 மாதம் வரை காவலில் வைக்கவோ ஒரு தனி அதிகாரத்தை ராணுவம் பெறுகிறது. கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்குவதற்கு இது வழிவகுத்தது.
யாழ்ப்பாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணப் பகுதிக்கு ராணுவப் பட்டாளங்கள் மேலும் பல அனுப்பப்படுகின்றன.
பிரிகேடியர் வீரதுங்காவிற்குத் தனி அதிகாரம் அளிக்கப்பட்டு, "தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுங்கள்' என்ற ஜனாதிபதியின் கட்டளையுடன் அவர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படுகிறார்.
6 மாதத்தில் தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்று சூளுரைத்து, சட்டத்தால் தனித்த அதிகாரம் அளிக்கப்பட்டு, அரசால் ஊக்குவிக்கப்பட்டு யாழ் பகுதிக்கு அவர் வருகிறார். யாழ் பகுதியில் ஒரு பாசிச ராணுவ பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறார்.
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் கைதும், சித்திரவதையும் மிருகத்தனமாக நடைபெறுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்கள் சாலையோரத்தில் தூக்கி வீசப்படுகின்றனர்.
லண்டனில் உள்ள சர்வதேச மனித உரிமைக் கழகமும் பல்வேறு சங்கங்களும் இந்தப் பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டிக்கின்றன. நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டவுடனேயே வீடு புகுந்து கைது செய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
இப்படி மறைந்து போனவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து ஒரு சில மாதத்திலேயே மிக உயர்ந்த பட்சமாக வளர்கிறது. யாழ் நகரம் ஒரு மாபெரும் சுடுகாடாக ராணுவத்தால் ஆக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, எதிர்த்துக் கேட்க ஆளில்லாத ஒரு நிலைமையும் தோன்றியது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்துடன் ராணுவம் தொடர்ந்து தமிழர் பகுதியில் நிறுத்திவைக்கப்படவும் ஏற்பாடாயிற்று.
1979 ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை உலகம் கண்டிராத காட்டுமிராண்டித் தர்பார் யாழ் பகுதியிலே நடந்தது. 1980-ஆம் ஆண்டில் ராணுவத்தின் வெறித்தாக்குதல் நடக்கும் அதே நேரத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் மாவட்டங்களுக்கு அதிகாரத்தை பரவலாக்க வழி ஏதும் இதில் இல்லை.
இதைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்கள் 1981-ஆம் ஆண்டு வருகிறது.
இவ்வாண்டில் அரசுக் காட்டுதர்பாரின் பயங்கரத் தாக்குதல் உச்சநிலையை அடைகிறது. மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் நின்ற ஒரு ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும் இரு போலீஸôரும் தமிழ் இளைஞர்களால் கொல்லப்பட்டனர். ஒரு முஸ்லிம் போலீஸ்காரர் காயம் அடைந்தார். அதற்குமுன் நீர்வேலியில் ஒரு வங்கிக் கொள்ளை நடைபெறுகிறது. இதையொட்டி, பெருமளவில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு மிரட்டப்படுகிறார்கள்.
ராணுவத்தினர் திட்டமிட்ட முறையில் தாக்குதலை ஆரம்பித்தனர். இந்த சமயத்தில்தான் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகத்தின் ("பிரைட் ஆஃப் நார்த்' வடக்கின் பெருமை) என்ற கட்டிடப் பகுதி தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது. இதில் பல நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட கிடைத்தற்கரிய விலை மதிப்பற்ற நூல்களும், தமிழ் இன வரலாற்று ஆதாரப் பொருட்களும் பழந்தமிழ் இலக்கியச் சுவடிகளும் சாம்பலாக்கப்பட்டன. இதன் மூலம் வடக்குப் பகுதியின் கெüரவத்தைக் கொளுத்திவிட்டதாக தமிழ் மக்கள் ஆவேச வெறி கொண்டனர்.
உலகின் அனைத்து முனைகளிலும் உள்ள அறிஞர்களும் இந்நூலக எரிப்பால் அதிர்ச்சி அடைந்தனர். இதுமட்டுமல்லாமல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகம், ஈழநாடு நாளிதழ் அச்சகம், யாழ்ப்பாணத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இல்லம், சுன்னாகம் பொதுக்கடை வீதி ஆகியவைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன!
கடைத்தெருவில் பொதுமக்கள் அனைவரும் தாக்கப்பட்டனர். அதில் பலர் காயமடைந்தனர். 5 பேர் மரணம் அடைந்தனர்.
இந்தப் பயங்கர சூழ்நிலையையும், குழப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்கள் திட்டமிட்டபடி ஜூன் நான்காம் நாள் நடைபெற்றன. நிர்வாகக் குழப்பத்தைப் பயன்படுத்தி அரசு தேர்தலில் பயங்கர ஊழல்கள் மற்றும் தில்லுமுல்லுகளைச் செய்தது.
அன்று காலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மாபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஜெயவர்த்தனாவின் வேட்பாளர் அனைவரும் தமிழர் பகுதிகளில் டெபாசிட் இழந்தனர்.
யாழ் பகுதியில் நடந்த அச்சுறுத்தும் அரச பயங்கரவாத அழிவு நிகழ்ச்சிகளைக் கண்டறிந்து வெளி உலகிற்குத் தெரியப்படுத்த ங.ஐ.த.ஒ.உ. (ஙர்ஸ்ங்ம்ங்ய்ற் ர்ச் ஐய்ற்ங்ழ் தஹஸ்ரீண்ஹப் ஒன்ள்ற்ண்ஸ்ரீங் அய்க் உவ்ன்ஹப்ண்ற்ஹ்) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சார்லஸ் அபயசேகர உள்ளிட்ட உண்மை அறியும் குழு ஒன்று யாழ் பகுதியில் விசாரணை செய்தது. ஆனால் அவர்கள் தங்கள் அறிக்கையை கொழும்பில் வெளியிட முனைந்தபோது அரசு குண்டர்களால் தாக்கப்பட்டனர்.
ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் வன்முறை பரவியது. இலங்கைத் தமிழர்களின் அனைத்துப் பகுதிகளும் தாக்கப்பட்டு அவர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
மட்டக்களப்பில் இந்துக்கோவில் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது.
ஜூலை முதல் வாரத்திற்குள் அம்பாறை, பதுளை, வெலிஓயா, பண்டாரவளை, நீர்கொழும்பு, கேகாலை போன்ற இடங்களில் வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. ஜாஎவை, பேலியாகொடை, அம்பிலிப்பிட்டி, பண்டாரகமை ஆகிய பகுதிகளில் நவீனவகை குண்டர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. இந்த நவீன வகைத் தாக்குதலின் முதல் நிகழ்ச்சியாக, ஒரு புகைவண்டி வழியில் நிறுத்தப்பட்டுக் கொளுத்தப்படுகிறது. பல தமிழர்கள் வண்டியிலிருந்து பிடித்து வெளியில் இழுக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள். பல பிரயாணிகள் பலத்த காயமடைகிறார்கள். அவர்களில் தமிழ் எம்.பி.யும் ஒருவர்.
கலவரம் பல பகுதிகளில் பரவுகிறது. பண்டாரவளைப் பகுதியில் ஜூலை 11-ஆம் நாள் இரண்டாவது தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. இது நீர்கொழும்பையும், கெüனியாவையும் தொற்றுகிறது.
மலையகத் தோட்டப்பகுதியிலும் கலவரம் மூண்டு எட்டியாந்தோட்டை என்ற பகுதியில் மூன்று தமிழ் தோட்டத் தொழிலாளிகள் பேருந்திலிருந்து வெளியில் இழுக்கப்பட்டுத் தாக்கப்படுகிறார்கள். பின்னர் பேருந்திற்குத் தீ வைக்கப்பட்டு அதில் தமிழர்கள் எரிக்கப்படுகிறார்கள்.
இரத்தினபுரிப் பகுதியில் கடைகள் சூறையாடப்படுகின்றன; கடைகளைக் கொளுத்திய பின் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் தலைமையில் ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்.
மதகுரு எதிரிலேயே ஒரு தமிழர் கொல்லப்படுகிறார். அதுமட்டுமல்ல, அங்குள்ள எஸ்டேட்டிலும் பல தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்.
பயங்கரவாதம் ஒரு உச்சநிலைக்குச் சென்றது. இலங்கையே தீப்பற்றி எரியும் வகையில் இனவெறி மிக உச்சமான கோரத்தாண்டவம் ஆடியது.
நாளை: அடக்குமுறையின் உச்சகட்டம்
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&