ராஜபக்சேயை கொல்ல 3 தடவை முயன்றனர்: விடுதலைப்புலிகள் மீது ராணுவம் குற்றச்சாட்டு
கொழும்பு, ஜூன். 13-
இலங்கை அதிபர் ராஜ பக்சேயை கொலை செய்ய விடுதலைப்புலிகள் 3 தடவை முயன்றனர் என்று சிங்கள ராணுவம் குற்றஞ்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக சிங்கள ராணுவ இணையத் தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
இலங்கை அதிபர் ராஜபக்சேயையும், அவரது தம்பியும் பாதுகாப்பு செயலாளருமான கோதபய ராஜபக்சேயையும் தற்கொலை தாக்குதல் மூலம் படுகொலை செய்ய விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர். ஆனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பலத்த பாதுகாப்பு காரணமாக விடுதலைப்புலிகளின் திட்டம் நிறைவேறவில்லை.
ராஜபக்சேயை படுகொலை செய்ய மனித வெடிகுண்டாக வந்த கரும்புலியை ராணுவத்தினர் உயிருடன் பிடித்தனர். வி.ஐ.பி.க்களை கொல்ல அவருக்கு கிளிநொச்சியில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு பங்களா வீட்டில் இருந்து 4 தற்கொலை உள்ளாடைகளை கடந்த மாதம் 14-ந்தேதி ராணுவம் கைப்பற்றியது.
அதன் தொடர்ச்சியாக ஒரு என்ஜினீயரிங் மாணவரை பிடிக்க முயன்றபோது அவர் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சுஜிந்திரன் என்று தெரிய வந்தது.
அவர் குடும்பத்தினர் கொழும்பில் தங்கி இருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் உதவியுடன் ராஜபக்சேயை கொல்ல 3 தடவை முயற்சி நடந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி ராணுவ அணிவகுப்பை பார்வையிட வந்த ராஜபக்சேயை கொல்ல ஒரு விடுதலைப்புலி வந்தார். அவரை ராணுவ வீரர்கள் உயிருடன் பிடித்தனர். அவருக்கு ரகசிய உதவிகள் செய்திருந்த ராணுவ அதிகாரியும் பிடிபட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 4-ந்தேதி கண்காட்சியை பார்வையிட வந்த ராஜபக்சேயை கொல்ல 2-வது தடவை முயற்சி செய்தார். வெடிகுண்டு தீவிரவாதிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ராஜபக்சே உயிர் தப்பினார்.
கடந்த மார்ச் மாதம் தற்கொலை தீவிரவாதிகள் வேறுவிதமாக முயற்சிகளில் ஈடுபட்டனர். இஸ்லாமிய கூட்டத்தில் குண்டு வெடிப்பை நடத்தி சில மந்திரிகளை காயம் அடைய வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மந்திரிகளை ராஜபக்சே பார்க்க வரும்போது அங்கு தற்கொலை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காகவே மனித வெடிகுண்டு கரும்புலி ஒருவர் அந்த மருத்துவமனையில் தயாராக இருந்தார். இதை உளவுப்பிரிவினர் கண்டு பிடித்து சரியான நேரத்தில் தகவல் தந்தனர். இதனால் அந்த படுகொலை முயற்சியில் இருந்தும் ராஜபக்சே தப்பினார்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக விடுதலைப்புலிகளின் 3 தாக்குதல் முயற்சிகளையும் ராணுவம் திறம்பட முறியடித்து விட்டது.
இவ்வாறு அந்த இணையத்தள தகவலில் கூறப்பட்டுள்ளது.
http://www.maalaimalar.com/2009/06/13104856/CNI030130609.html
http://www.maalaimalar.com/2009/06/13104856/CNI030130609.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com