![http://www.comp.nus.edu.sg/~naresh/india/images/india.jpg](http://www.comp.nus.edu.sg/%7Enaresh/india/images/india.jpg)
கடை தேங்காயை எடுத்து வழிப்-பிள்ளையாருக்கு உடைத்ததுபோல, இந்தியாவிற்குச் சொந்தமான, அதுவும் தமிழக மீனவர்களின் இச்சைத்தீவான கச்சத் தீவு முற்றிலும் வேறு ஒரு நாட்டிற்கு கைமாற உள்ளது. இலங்கைப் பாதுகாப்புப் படை அதிகாரி கூறிய இந்தத் தகவல், மீனவர்கள் மத்தியில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலை-களை ஏற்படுத்தி-இருக்கிறது.
இதைப்போல, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்திய கொலை வெறித்தாக்குதல்களைத் தடுக்க மத்திய அரசு எவ்வித கடும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதுகாப்பு ரீதியில் அண்டை நாடான இலங்கையின் உதவி எப்போதும் தேவை என்பதால் இந்திய அரசு இலங்கையைப் பொறுத்தவரை மென்மையான போக்கை கடைப்-பிடித்து வந்தது. எந்த ஆபத்தைத் தடுக்க தவிர்க்க இலங்கையை இந்தியா அணுசரித்துச் சென்றதோ, அதே ஆபத்தை இலங்கை அரசு நமக்குத் தேடித்தந்துள்ளது. இது வெறும் ஆபத்தல்ல... மட்டுமல்ல பேராபத்து!
இந்தியாவிற்குச் சொந்தமான கச்சத்தீவு, ஓர் ஒப்பந்தத்தின் மூலம் 1974-ம் ஆண்டு இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்டது. இந்தியாவின் கிழக்குக் கடலோரத்தில் பாக் நீரிணைப்பில் உள்ள கச்சத்தீவு, தேசப் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
ராமேஸ்வரத்தில் இருந்து வடக்கே 17 கி.மீ. தொலைவில் உள்ள கச்சத்தீவை சுற்றிய கடற்பகுதி, மீன் வளம் நிறைந்தது. சேதுபதி மன்னர்களின் சொத்தான கச்சத்தீவு சுமார் 350 மீட்டர் அகலமும், ஒன்றரை கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. மொத்த பரப்பளவு 285 ஏக்கர். கச்சன்- கச்சம் என கடல் ஆமையை அழைப்பார்கள். இந்தத் தீவில் ஒரு காலத்தில் ஆமைகள் அதிக அளவில் வசித்ததால், இதைக் கச்சத்தீவு என்று அழைக்கின்றனர்.
கச்சத்தீவு இலங்கைக்கு அருகே இருப்பதால், இதைச் சொந்தம் கொண்டாட இலங்கை அரசு கடந்த 100 ஆண்டுகளாக முயன்று வந்தது. ஆனால், இந்தத் தீவு ராமநாதபுரத்தை ஆட்சி செய்த சேதுபதி மன்னர் பரம்பரையினருக்கு உரியது.
ராமேஸ்வரத்தில் 1605-ம் ஆண்டு தொடங்கிய சேதுபதி மன்னர்களின் ஆட்சி, 1803-ம் ஆண்டில் முடிவிற்கு வந்தது. அதன்பிறகு ஜமீன்தார் முறையை கொண்டுவந்த ஆங்கிலேய அரசு, மங்களேஸ்வரி நாச்சியாரை ஜமீன்தாராக நியமித்தது. அப்போது, அவருக்கு அளித்த நில உடமை பட்டியலில் கச்சத்தீவும் இடம்-பெற்றிருந்தது. கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தமானது என்று விக்டோரிய மகாராணி பிரகடனம் செய்திருந்தார். ராமேஸ்வரம் பேரூராட்சியின் சொத்து அதிகார எல்லை பற்றிய பட்டியலிலும் கச்சத்தீவு இடம்பெற்றுள்ளது.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாரை கடல்வழி காட்டும் தெய்வமாக அனைத்து மத மீனவர்களும் மதிக்கின்றனர். கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்-கும் போது கிழிந்துவிடும் பருத்தி நூல் மீன்பிடி வலைகளை சரி-செய்ய, கச்சத்தீவில் ஓரிரு நாட்கள் தங்குவது மீனவரின் வழக்கமாக இருந்தது. இதைத்தவிர ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் கச்சத்தீவில் அந்தோணி-யாருக்கு இருநாட்ட-வரும் விழா எடுத்தனர்.
இந்த விழாவின்போது, இரு நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தங்களது உறவினர்களைச் சந்தித்து ஆனந்தம் அடையும் இடமாகக் கச்சத்தீவு இருந்தது. கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் தங்களது நாட்டு பொருள்களை, பண்டமாற்று முறையில் விற்பனை செய்தனர். ராமேஸ்வரத்திலிருந்து படகில் கச்சத்தீவிற்குச் செல்லும் பக்தர்களிடம் சுங்கவரி, திருவிழாக் காலத்தில் மட்டும் வசூலிக்கப்பட்டது. இருநாட்டு மீனவர்களும் தங்களுக்குள் ஏற்பட்ட மீன்பிடி பிரச்னைகளைப் பேசித் தீர்க்கின்ற பஞ்சாயத்து மேடையாகவும் கச்சத்தீவு ஒரு காலத்தில் திகழ்ந்தது.
இந்நிலையில் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. இருநாட்டு எல்லைகளில் போர்ப் பதற்றம் நிலவியது. அப்போது இந்தியாவை அதிர வைக்கும் சம்பவங்கள் இலங்கையில் திகழ்ந்தன. பாகிஸ்தான் போர் விமானங்கள் கொழும்பு விமான நிலையத்தில் இறங்கின. அவை அங்கே எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம் என்று இலங்கை அரசு சிறப்பு அனுமதி அளித்தது.
கொழும்பு வரை வந்த இந்த விமானங்கள், தென்னிந்தியாவில் உள்ள ராமேஸ்வரம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நகரங்கள் மீது எந்த நேரத்திலும் குண்டு வீசலாம் என்ற அச்சம் இந்தியத் தரப்பிற்கு ஏற்பட்டது. தங்களது எதிரி நாடான பாகிஸ்தான் விமானங்களை இலங்கையில் தரையிறங்க அனுமதிக்க வேண்டாமென அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி கோரினார்.
இவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இலங்கை, இந்தியாவுடனான நட்பு தொடர வேண்டுமானால், இலங்கைக்கு அருகே உள்ள கச்சத்தீவை தமக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத்-தொடர்ந்து 1974-ம் ஆண்டில் கச்சத்தீவு ஒப்பந்தம் தயாரானது.
அப்போது இந்தியாவின் தென்பகுதியில் ராணுவத்தளம், விமானத்தளம், கப்பற்-படை-தளம் எதுவும் பெரிய அளவில் செயல்படாத நிலை. தென்னிந்தியா, யுத்த ரீதியில் பாதுகாப்பற்ற பகுதியாகவே அப்போது இருந்தது.
இந்திரா காந்தியும், ஸ்ரீமாவோ பண்டாரநாயகவும் செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்களுக்குச் சாதகமான ஷரத்துக்கள் உள்ளதால் மீனவர்களுக்கு உரிமை இழப்பு ஏற்படாது என்று இருநாடுகளும் அறிவித்தன. இந்தியா, இலங்கை மீனவர்கள், இருநாட்டு கடலிலும் பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கலாம். கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோயிலுக்குச் சென்று வழிபட இந்தியர்களுக்கு பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் தேவையில்லை என்பது ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஷரத்து.
ஆனால், இலங்கை அரசும், கடற்படையும், பாதுகாப்புப் படையும் இந்த ஒப்பந்த விதிகளை அன்று முதல் இன்று வரை மதிக்கவில்லை. விடுதலைப்-புலிகள் ஊடுருவலை காரணம் காட்டி அப்பாவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று குவிப்பது தொடர்கிறது. மீனவர் மீதான தாக்குதல் இதுவரை நிறுத்தப்படவில்லை. கச்சத்தீவு கடற்பகுதிக்குச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக்-கூறி, இலங்கை கடற்படை வழக்கு தொடர்கிறது.
இந்த நிலையில் அண்மையில் நடந்த போரில் இலங்கைப் படைகள் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை வெற்றியோடு முடிக்க இந்தியவும் பாகிஸ்தானும், சீனாவும் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கின. உலகில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள ராக்கெட் குண்டுகள், ஏவுகணைகள், கண்ணி வெடிகள் மற்றும் ரசாயன ஆயுதங்களை இலங்கைக்குத் தொடர்ந்து வழங்கியது பாகிஸ்தான் தான்.
இதற்குக் கைமாறாக கச்சத்தீவை தமக்குத் தருமாறு இலங்கை அரசிடம் பாகிஸ்தான் நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த ரகசிய கோரிக்கையை இலங்கை அரசு அப்போது ஏற்காவிட்டாலும், இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது. பிரபாகரனையும், ஏராளமான விடுதலைப்-புலிகளையும் கொன்று குவித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியை இலங்கை அரசு பாகிஸ்தானுடன் இப்படிப் பகிர்ந்து கொண்டுள்ளது.
ஏற்கெனவே இலங்கை கடற்படையினருடன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் சிலர் இந்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் கச்சத்தீவுக்குச் சென்றிருந்தனர். இதைப்பற்றி நமது இதழில் மட்டுமே அப்போது செய்தி வெளியானது.
தற்போது கச்சத்தீவில் கடற்படைத்தளம் அமைக்க பாகிஸ்தான் இடத்தைத் தேர்வு செய்துவிட்டது. இந்தக் கடற்படை தளத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் வந்திறங்க 'ரன் வே' ஒன்றையும் பாகிஸ்தான் அமைக்கப்போகிறது. இதற்கான செலவை பாகிஸ்தான் ஏற்கிறது என்றும் இலங்கையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது, கச்சத்தீவில் கடற்படைத்தளம் அமையவுள்ள இடத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்ற ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையே இலங்கை கடற்படை பயன்படுத் தியதாகத் தகவல். ராமேஸ்-வரத்தில் இருந்து சென்ற மீனவர்களை வலுக்-கட்டாயமாகக் கச்சத்-தீவிற்கு அழைத்துச்சென்று, துப்பாக்கி முனையில் செடிகொடிகளை அகற்றி தரையை சமப்படுத்தச் செய்திருக்கிறார்கள். இலங்கை கடற்படையின் இந்தச் செயல்குறித்து மீனவர்கள் கடந்த வாரம் புகார் செய்தனர். இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மேகம் சூழும்போதெல்லாம் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் கொழும்பில் தரையிறங்குவதை அப்போதையை பிரதமர் இந்திரா காந்தி தனது சாமர்த்திய செயல்பாட்டால் தடுத்து நிறுத்தினார். ஆனால், இப்போது இந்தியாவிற்கு மிக அருகே கச்சத்தீவிலேயே கடற்படை தளத்தை அமைக்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் என்பது உறுதி.
விடுதலைப்புலிகளை ஒடுக்க இலங்கைக்கு சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவும் உதவின. இதற்குக் கைமாறாக இலங்கை அம்பாந்தோட்டையில் நூறுகோடி டாலர் செலவில் துறைமுகம் அமைக்கும் பணியை இலங்கை அரசு சீனாவிடம் அளித்துள்ளது.
இந்நிலையில் கச்சத்தீவில் அமையவிருக்கும் கடற்படைத் தளம், பாதுகாப்பு ரீதியில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். ஒரு காலத்தில் இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொண்ட இலங்கை, தற்போது நமது எதிரி நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நட்பு நாடாக மாறிவிட்டது. இலங்கையில் துறைமுகம் அமைக்கும் பணி என்ற பெயரில் சீனா காலூன்றிவிட்டது. இதற்கு அடுத்த படியாக பாகிஸ்தான் காலூன்றப் போகிறது.
இதில் மிக மோசமான விஷயம் எதுவென்றால், கச்சத்தீவிலும் அதையொட்டியுள்ள இலங்கைக் கடற்பகுதியிலும் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு எடுக்கும் துரப்பண பணியை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ளது. கச்சத்தீவின் நிலத்தடியில் பெட்ரோலியம் அல்லது உலோகம் கிடைத்தால், அதை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்று கச்சத்தீவு ஒப்பந்தத்தில் (1974) தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்த விதியை இலங்கை இதுவரை கடைப் பிடித்ததில்லை. இனியும் கடைப்பிடிக்கப் போவதில்லை.
பாகிஸ்தான் ஆக்கிரமிக்கத் துடிக்கும் கச்சத்தீவில் பாகிஸ்தான் எண்ணெய் நிறுவனம் தோண்டவுள்ள எண்ணெய்க் கிணறுகள், சேதுசமுத்திர திட்ட கால்வாயின் மிக அருகே அமையப்போவது இந்தியாவின் துரதிருஷ்டம். சேது கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்களை கச்சத்தீவில் இருந்து கண்காணிக்க முடியும். இதை மனதில் கொண்டுதான் பாகிஸ்தான் அரசு கச்சத்தீவில் கால்பதிக்கும் நடவடிக்கைகளை துரிதப்-படுத்தியுள்ளது.
இதுவரை இலங்கை கடற்படையிடம் அடிபட்டு உதைப்பட்டு மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்களை இனிமேல் பாகிஸ்தான் கடற்படையும் அடித்து உதைத்துக் கொடுமை படுத்தலாம். இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்த இலங்கை அரசு, இப்போது தமிழக மீனவர்களையும் அழிக்க அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. தமிழக மீனவர்களை காக்கவும், நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன? இலங்கைத் தமிழர் பிரச்னையைப் போலவே இந்த விஷயத்திலும் வேடிக்கை பார்க்கப் போகிறார்களா?
Www.eeladhesam.coM
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com