வவுனியா வதைமுகாமில் இருப்பதைவிட வன்னியில் செல்லடிபட்டு செத்திருக்கலாம்
வன்னியில் கொட்டும் குண்டு மழையில் இருந்து விட்டு வவுனியா செட்டிக்குளம் அகதிகள் முகாமில் இருப்பதுதான் கடினமாக உள்ளதாக தமது வேதனைகள் நிறைந்த இன்றைய அகதிமுகாம் வாழ்க்கையை பற்றி கண்ணீரும் இரத்தமும் சிந்திய வரிகளாக்கி தமிழகத்தில் இருக்கும் உறவுக்கு எழுதிய கண்ணீர்மடல்.
07-05-2009 திகதியிட்ட கடிதம் சுமார் ஒரு மாதத்தின் பின்னர் கிடைக்கப் பெற்றது. வழக்கமான சுக விசாரிப்புக்களுடன் தொடங்கும் கடிதம் ஒரு கட்டத்தில் நகர மறுக்கின்றது… வார்த்ததைகள் கனக்கின்றன… நா தழுதளுக்கின்றது… கண்கள் நமது கட்டுப்பாட்டை மீறி தாரை தாரையாக கண்ணீர் சிந்துகின்றது. சிரமப்பட்டு வாசித்த போது…
10மீட்டர் தூர இடைவெளியில் வீழ்ந்து வெடித்து சிதறிய செல்வீச்சில் இருந்து அதிஸ்டவசமாக உயிர்பிழைத்து வவுனியா செட்டிக்குளம் அகதிகள் முகாமிற்கு வந்த பின்னர்தான் யோசிக்கின்றோம். அங்கேயே இருந்து செல்லடிபட்டு செத்திருந்தாலும் பறவாயில்லை போலிருக்கு.
மூன்று கிழமைக்கு ஒரு தடவை அரிசி, மா, பருப்பு குறிப்பிட்ட அளவுதான் தாரங்கள்;. அதுவும் பழுதாகிப்போய் வண்டுகள் பிடித்த சாமான்கள் தான். என்ன செய்வது நல்ல பொருட்கள் வாங்கி சமைத்து சாப்பிடுவது என்றால் காசு வேணும். எதற்கெடுத்தாலும் காசுதான் வேணும்;. காசு இருந்தால் எதுவும் செய்யலாம்.
கிடைப்பதை சமைத்து சாப்பிடுவது என்றாலும் மனசு நிறைய வேதனைகளை சுமந்தவாறு நடமாடும் பிணங்களாக வாழ்ந்துவரும் நிலையில் எவ்வாறு சாப்பிடுவது.
பசித்த வயிற்றுக்கு ஒரு வாய் சாப்பிடலாம் என்டால் கூட இங்கே நல்ல மனநிலை இல்லை. எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு கவலை, ஏக்கம், எதிர்பார்ப்பு எல்லாமே இருக்கு. எங்களின் அடுத்த கட்டம் என்ன என்பதே கேள்விக்குறிதான்.
இந்த முகாமில் ஒரு தடவை எல்லோரையும் களைந்து எடுத்துவிட்டான். இனி என்ன நடக்குமெண்டு தெரியவில்வை. சிலவேளைகளில் வன்னியை விட்டு வராமலே இருந்திருக்கலாம் போலிருக்கும்.
வருத்தம் வந்தால் கூட ஆசுபத்திரிக்கு விடமாட்டாங்கள். பிள்ளைக்கு காச்சல் வந்து ஒரு கிழமையாகிவிட்து. எனக்கு தெரிந்த கைவைத்தியம் தான் பார்கிறது. இன்னும் மாறின பாடில்லை.
இவருக்கும் மலேரியா வந்து மருந்து எடுக்க வெளியே போகமுடியாமல் இருகின்ற போது எனக்கும் செங்கமாரி வந்துவிட்து. என்ன செய்யிறது? ஆண்டவன் மீது நம்பிக்கைவைத்து மீதமிருக்கும் நாட்களை நகர்த்திக் கொண்டிருகிறம்;.
உணவு பொருட்கள் வாங்கிதுக்கு, தண்ணி பிடிப்பதற்கு, மலம் கழிப்பதற்கு என எதற்கு சென்றாலும் லைனில் நின்றுதான் நிறைவேற்ற முடியும். அதுவும் மலம் கழிப்பதற்கு போனால் கூட நூற்றிற்கு மேற்பட்டவர்களுடன் லைனில் நின்று மணித்தியாலக் கணக்கில் காத்திருந்துதான் இயற்கை கடன்களை கழிக்க முடியும்.
சீரான கழிப்பறைகள் கூட இல்லாது குழிகளை தோண்டி அதன் மீது தடிகளை குறுக்கலாக வைத்து அமைக்கப்பட்ட தற்காலிக கழிப்பறைகள்தான் இருக்கு. அதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன் உயிராபத்து நிறைந்ததாகவும் உள்ளது.
அண்மையில் இரண்டு குழந்தைகள் மலம் கழிக்க சென்ற பின் காணாமல் போயிருந்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அடுத்தநாள் பார்தால் கழிப்பறை குழிக்குள் பிணமாக கிடக்குதுகள். இந்த கொடுமையை யாரிம் போய் சொல்வது.
மரண வேதனை ஒருபக்கம் என்றால் நிழல் போல் எங்கும் தொடரும் ஆமிக்காரங்களை கண்டால் உடம்பெல்லலாம் பதறுது. எவ்வளவு துன்பம் வந்தாலும் மானம் மரியாதையோடு வன்னியில் வாழ்ந்து வந்தனாங்கள். இங்கு வந்து ஒவ்வொரு நிமிடமும் எது செய்வதென்டாலும் சிங்களவனுக்கு முன்னால செய்ய வேண்டியிருக்கு.
அதைவிட அப்பப்ப, ஆமிக்காரனோடு வால்பிடித்து திரியும் கூட்டம் வந்து இளம் வயது பெடியள் பிள்ளைகளை வலுகட்டாயமாக பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள். அரக்கர்களிடம் பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு அழும் சனங்களை பார்த்தால் இவங்களுக்கு கெதியா முடிவு கட்டமாட்டாங்களோ என்ற எண்ணம்தான் தோன்றி மறையும்.
இவ்வாறு பிடித்து செல்லப்படும் இளைஞர் யுவதிகள் திரும்புவதில்லை. வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு நடைபிணங்களாக வாழ்ந்து வருகின்றனர் உறவுகள்.
இந்த அக்கிரமங்களை எல்லாம் பார்க்கும் போது வன்னியில் செல்பட்டு செத்திருக்கலாம் என்டு நினைக்கிறது. இப்ப கூட பிள்ளை இல்லை என்டால் நாங்கள் எப்போதோ உயிரை விட்டிருப்பம்.
எங்கள் சனம் கடைசிவரை தமிழ் நாட்டைதான் நம்பி இருந்ததுகள். எல்லோரும் சேர்ந்து கைவிட்டதால நாங்கள் இப்படி வதை முகாமில் இருந்து வதைபட்டுக் கொண்டிருக்கிறம்.
பான் கீ மூன் வந்தவர் வந்து என்ன பிரியோசனம். ஆமிக்காரங்களால் ஒழுங்கு செய்த இடத்தில கொஞ்ச சனத்தை பார்த்துவிட்டு போய்விட்டார். யார்வந்து போனாலும் எங்கட தலைவிதியை மாத்தமுடியாது.
தமிழனாக பிறந்ததுக்கு இதுதான் வாழ்க்கை என்றாகி போய்விட்ட பிறகு மற்றவர்களை குறைசொல்லி என்ன நடக்கப்போகுது.
இப்ப எங்களுக்கு இருக்கிற கொஞ்ச நம்பிக்கை வெளிநாட்டில இருக்கிற எங்கட மக்கள் தான்.; தொடர்ந்து போராடி நரக வேதனை அனுபவிக்கிற முகாமில் இருந்து எங்களை வெளியில கொண்டுவர ஏதாவது செய்வினம் என்டுதான் இறுதி மூச்சை கையில் பிடித்து காத்திருக்கிறம்.
இவ்வாறு உலகத் தமிழர்களை நோக்கிய வேண்டுகையுடன் கண்ணீர் கடிதம் முடிவடைகின்றது. ஆனால் வதைமுகாமில் வதைபடும் எமது உறவுகளது வேதனை நிறைந்த வாழ்க்கைதான் இன்றும் தொடர்கதையாக உள்ளது.
உலகத்தமிழர்களே நடந்தவற்றை உண்மையா பொய்யா என்று ஆராய்வதை விடுத்து அடிமைகளை விட கேவலமாக நடாத்தப்பட்டுவரும் எமது உறவுகளை காத்து சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு ஏதாவது செய்யமுடியுமா என சிந்தித்து செயற்படுங்கள்.
உலகமே கைவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கம் இத்தருணத்தில் புலம் பெயர் நாடுகளில் வசித்துவரும் ஈழத்தமிழர்களும் தமிழகத்து உடன்பிறப்புகளும் தான் எம்மக்களின் ஒரே நம்பிக்கை. இப்போது தேவை கைகொடுத்து தூக்கிவிடுவதற்கான ஆதரவு கரமே. செய்வீர்களா…?
ஈழதேசம் இணையத்தளத்திற்காக : இரா.மயூதரன் (11-06-2009)
http://eeladhesam.com/
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com