கொடுமை தாங்காமல் முகாம் மக்கள் சிங்களப்படையினருடன் மோதும் நிலை வரும்!
முகாம்களில் காணப்படும் கொடூரமான வாழ்க்கைச் சூழல் காரணமாக அங்குள்ள மக்கள் மிகப் பெரியளவில் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
முகாம் மக்களின் நிலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முட்கம்பிகளால் அடைக்கப்பட்ட பகுதிக்குள் அந்த மக்கள் வாழ்கிறார்கள். பருவமழை காரணமாக அந்தப் பகுதி நீரில் ஊறிப் போய்க் கிடப்பதுடன் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாகவும் மாறியுள்ளது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அந்த மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
அங்கு மிகக் கொடூரமான நிலைமை காணப்படுகின்றது. அடுத்த மாதம் வடக்கு - கிழக்கில் பருவமழை பெய்யத் தொடங்கிவிடும். அதன் பின்னர் நிலைமை இன்னும் மோசமாக மாறிவிடும். முகாம்களுக்குள் வாகனங்கள்கூடச் செல்ல முடியவில்லை.
இத்தகைய நிலையால் அங்குள்ள மக்கள் படையினருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தகையதொரு நிலை குறித்து நாங்கள் எச்சரிக்கின்றோம்.
முகாம்களில் சிறுவர்கள் நோயால் மடிந்துகொண்டிருக்கிறார்கள். இதனைப் பார்த்துக்கொண்டு பெற்றோர்களால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.
நோய் வாய்ப்பட்டுள்ள சிறுவர்களை மேற்கொண்டு சிகிச்சைக்காக முகாமில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் படைத்தரப்பு அதற்கு அனுமதி மறுத்துள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com