சிறீலங்கா அரசின் படைத்துறை பலப்படுத்தல்களின் நோக்கம் என்ன? |
விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் விடுத்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. இந்த காலப்பகுதியில் போர் நிறைவுபெற்ற பின்னர் வழக்கமாக மேற்கொள்ளப்படும் போருக்கு பின்னரான அபிவிருத்திகளோ அல்லது பாதுகாப்பு தளர்வுகளோ பெருமளவில் மேற்கொள்ளப்படவில்லை. |
மாறாக சிறீலங்கா அரசின் படைத்துறை கட்டமைப்புக்களில் பல மாற்றங்களும், மறுசீரமைப்புக்களும், பலப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. படையினரின் எண்ணிக்கைகளின் அதிகரிப்புக்களுக்கு அப்பால் கட்டமைப்புக்களில் பல மாற்றங்களும், பலப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த வாரம் புதிய தளபதிகள் முப்படையிலும் புதிதாக நியமனம் பெற்றுள்ளதுடன், இராணுவத்தளபதியாக முன்னாள் வன்னி மாவட்ட கட்டளை தளபதியும், வன்னி படை நடவடிக்கையின் ஓருங்கிணைப்பு தளபதியுமான லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா நியமனம் பெற்றுள்ளார். சிறீலங்கா இராணுவத்தின் தளபதிகளாக வன்னி அல்லது யாழ் மாவட்ட கட்டளை தளபதிகளே நியமனம் பெறுவதுண்டு. முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்செக்கா யாழ்குடாநாட்டு கட்டளை தளபதியாக போர் நிறுத்த காலத்தில் பணியாற்றியதும் நினைவுகொள்ளத்தக்கது. இந்த நிலையில் தற்போதைய தளபதியின் நியமனம் எதிர்பார்த்ததாகவே இருந்த போதும், கடும்போக்குடைய தளபதியின் நியமனத்தை தொடர்ந்து இராணுவத்தரப்பில் பல மாற்றங்களும் பதவி உயர்வுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. சிறீலங்கா இராணுவத்தின் அதிகாரிகளின் ஓய்வுக்காலம் 55 வயதாக உள்ளதால் 50 வயதான ஜெயசூரியா தளபதியாக நியமிக்கப்பட்டதும், அவர் மூப்பு அடிப்படையில் எட்டாவது இடத்தில் உள்ளதும் பல சலசலப்புக்களை படைத்தரப்பில் ஏற்படுத்தியுள்ளன. இருந்த போதும் இராணுவத்தரப்பில் பல மாற்றங்களை அவர் மேற்கொண்டுள்ளார். கடற்படை மற்றும் வான்படையினர் மட்டத்தில் தளபதிகள் மாற்றப்பட்டுள்ள போதும் அதன் கட்டமைப்புக்களில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இராணுவத்தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களில் முக்கியமான மறுசீரமைப்புக்கள் வருமாறு. முன்னாள் யாழ்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறீ வடமாகாண ஆளுனராகவும், மேஜர் ஜெனரல் சுமித் பாலசூரியா வெளிநாடு ஒன்றிற்கு தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாது சிறப்புப்படை, கவசத்தாக்குதல் படை றெஜிமென்ட் உட்பட பல றெஜிமென்ட்களின் கட்டளை அதிகரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். எனினும் இந்த மாற்றங்களில் வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்ட பல கட்டளை அதிகாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் வளங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா வன்னி பிராந்திய கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் சாகி கலகே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிறப்பு படையணியை வழிநடத்தியவர். யாழ்குடாநாட்டு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மென்டக்க சமரசிங்கா இராணுவ தலைமையக பிரதம அதிகாரியாகவும், அவரின் இடத்திற்கு மேஜர் ஜெனரல் ராஜித சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவேந்திர சில்வா இராணுவ தலைமையகத்தின் நடவடிக்கை பணிப்பாளராகவும், 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் அருணா பெரோராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரசன்னா டீ சில்வா இணைந்த பயிற்சிகளுக்கான பணிப்பாளராக நியமிக்ப்பட்டுள்ளார். அவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ டிவிசன்களின் கட்டளை அதிகாரிகள் பலருக்கும் பதவி உயர்வுகளுடன் புதிய பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. 57 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் சூள டயஸ் ஜெர்மன் நாட்டு பிரதி தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் இரு வாரங்களுக்கு முன்னர் பாதுகாப்பு வானகங்கள் பின்தொடராது தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுவிட்டு நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்த வேளை ஏற்பட்ட விபத்து ஒன்றில் அவர் பலத்த காயமடைந்திருந்தார். அவருக்கு இடுப்பு பகுதியில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை படுகொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சில கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ள போதும் படைத்தரப்பு அதனை மறுத்துள்ளது. மேலும் வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்ட பல அதிகாரிகளுக்கு சூழற்சி முறையில் வெளிநாடுகளில் இரஜதந்திர பதவிகளை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே பாதுகாப்பு துறை பிரதம அதிகாரியாக நியமனம் பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா இராணுவ கட்டமைப்பில் மேலும் பல மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய பல திறமை மிக்க அதிகாரிகளை கொண்டு கூட்டுப்படை தலமையகம் (Joint Operations Command) ஒன்றை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இஸ்ரேலின் படை கட்டுமானங்களின் அடிப்படையில் சிறீலங்கா படை கட்டுமானங்களை மாற்றி அமைக்கும் பணிகளையும் படைத்தரப்பு மேற்கொண்டு வருகின்றது. அதாவது தரைப்படையினருக்கென தனியான வான்படை பிரிவும், கடற்படையினருக்கென தனியான வான்படை பிரிவுகளும் அமைக்கப்படவுள்ளன. இதனிடையே இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியின் ஓரங்கமாக கடந்த வாரம் கஜபா றெஜிமென்ட் படையணியில் புதிய 22 ஆவது பற்றலியன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படையணியின் பயிற்சி நிறைவுவிழா கடந்த வாரம் அனுராதபுரம் சாலியபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த பற்றலியனின் கட்டளை அதிகாரியாக மேஜர் டி ஆர் என் கெட்டியாராட்சி நியமிக்கப்பட்டுள்ளதுடன், அது துணுக்காய் பகுதியிலும் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போர் நிறைவுபெற்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் சிறீலங்கா அரசு தனது படை கட்டுமானங்களை விரைவாக மறுசீரமைத்து வருவதுடன், அதனை வலுப்படுத்தியும் வருகின்றது. இந்த வலுப்படுத்தல்களில் கடற்படை வான்படை வளங்களும் உள்ளடங்கியுள்ளன. கடந்த வாரம் கொழும்பில் வான்பாதுகாப்பு ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தென்னிலங்கை ஊடகங்களை பொறுத்தவரையில் சிறீலங்கா படையினரின் தற்போதைய பலப்படுத்தல்கள் வெளியாரின் தலையீடுகளை தடுப்பதற்காக என தெரிவித்து வருகின்றன. ஆனால்; சிறீலங்காவின் படையினரின் வளங்களை கணிப்பிடும் போது அதன் அண்டை நாடுகளில் எதனுடனும் அது பொருந்தப்போவதில்லை. எனவே அண்டைநாடுகள் எவையுடனும் போர் புரியும் நிலையில் சிறீலங்கா இல்லை என்பது தெளிவானது. எனவே எதனை எதிர்கொள்வதற்கு சிறீலங்கா தன்னை தயார்படுத்தி வருகின்றது? மீண்டும் ஒரு சமச்சீரற்ற மோதலை களத்திற்குள் அது எதிர்கொள்ளப்போகின்றதா? அல்லது வெளியில் இருந்து சிறீலங்காவை நோக்கி நகரப்போகும் ஒரு ஆயுதப்போரை எதிர்கொள்ள அது தன்னை தயார்படுத்தி வருகின்றதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. http://seithy.com/breifArticle.php?newsID=17047&category=Article |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com