இலங்கையில் முடங்கிய 'வணங்கா மண்' நிவாரணப் பொருள்கள்!
இலண்டனில் இருந்து இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் கொழும்பு துறைமுகத்தில் நாதியற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை விநியோகம் செய்வதில் இந்திய, இலங்கை செஞ்சிலுவைச் சங்கங்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால் நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போய்ச்சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 884 தொன் நிவாரணப் பொருள்களை இலண்டனைச் சேர்ந்த "மெர்சி மிஷன்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அனுப்பியது. நிவாரணப் பொருள்களை ஏற்றிவந்த 'வணங்கா மண்' என பெயரிடப்பட்ட 'கேப்டன் அலி' என்ற கப்பலை இலங்கை அனுமதிக்க மறுத்து ஜூன்7-ல் திருப்பி அனுப்பியதை அடுத்து இக்கப்பல் ஜூன்-14-ல் சென்னை வந்தது.
வேறு கப்பலில் நிவாரணப் பொருள்கள்: பின்னர் பல்வேறு நிகழ்வுகளுக்குப் பிறகு நிவாரணப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வழங்க இலங்கை ஒப்புக் கொண்டது. இதனையடுத்து நிவாரணப் பொருள்கள் 27 கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு 'கேப் கொலராடோ' என்ற கப்பல் மூலம் கடந்த ஜூலை 6 அன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் 'கேப் கொலராடோ' கப்பலை இலங்கைக் கடல் எல்லையில் இலங்கை ராணுவம் தடுத்து நிறுத்தியது. பின்னர் பல்வேறு தரப்பினரின் வற்புறுத்தலை அடுத்து நிவாரணப் பொருள்களை அனுமதிக்க இலங்கை சம்மதித்தது.
32 இலட்சம் கோரி கடிதம்: இதனைத் தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் கொழும்புத் துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டன. வவுனியா வரை இவற்றைக் கொண்டு சென்று விநியோகம் செய்ய ஆகும் செலவுத் தொகை ரூ.32 லட்சத்தை அளித்தால் மட்டுமே பொருள்களை விநியோகிக்க முடியும் என இலங்கை செஞ்சிலுவை சங்கம் கடிதம் அனுப்பியது. இது குறித்த செய்தியை இலங்கை செஞ்சிலுவை சங்கம் மறுத்து வந்த நிலையில் நிவாரணப் பொருள்கள் அனைத்தும் கொழும்பு துறைமுகத்திலேயே கேட்பாரற்ற நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செஞ்சிலுவைச் சங்கங்களிடையே மோதல்: நிவாரணப் பொருள்கள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து இலங்கைச் செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலர் நாயகம் சுரேன் பீரிஸ் கூறுகையில், ""நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை இந்திய செஞ்சிலுவைச் சங்கம்தான் எடுக்க வேண்டும். இது குறித்து இந்தியத் தூதரக அதிகாரிகளிடமும் தெரிவித்துவிட்டோம்'' எனக் கூறியுள்ளார்.
ஆனால் இலண்டனிலிருந்து வந்த நிவாரண பொருள்களை வழி மாற்றி இலங்கைக்கு அனுப்பியதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது. தேவை எனில் "மெர்சி மிஷனை'த்தான் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தொடர்புகொள்ள வேண்டும் என்று இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் விளக்கம் கூறுகிறது.
இது குறித்து 'மனிதம்' அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம் கூறியது: மெர்சி மிஷனின் தொடர்பு அலுவலராக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இரு அரசுகளின் ஒப்புதலின்பேரில்தான் சென்னையிலிருந்து மாற்றுக் கப்பலில் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்தோம்.
அப்போது இந்திய, இலங்கை செஞ்சிலுவைச் சங்கங்கள் சார்பில் அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர். ஆனால் பொருள்கள் இலங்கை சென்றவுடன் நிவாரணப் பொருள்களை விநியோகிக்க ஆகும் செலவுத் தொகையான ரூ.32 லட்சத்தைத் தருமாறு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்குக் கடிதம் அனுப்பினர். அவர்கள் எங்களிடம் அத்தொகையைக் கேட்டார்கள்.
ஆனால் எங்களால் மேலும் தொகை ஏதும் அளிக்க இயலாத நிலையை தெரிவித்தோம். இது குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதை அடுத்து மூன்றாம் தரப்பினரிடம் பணம் கேட்கவில்லை என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் மறுத்தது. எனவே இப்போது பணம்பெற வழியில்லாததை அடுத்து இந்தியச் செஞ்சிலுவை சங்கம்தான் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர்.
ரூ.32 இலட்சம் யாரும் கட்டத் தயாரில்லை. நாங்கள் தொடர்பு பிரதிநிதிகள்தான். எனவே எங்களால் தொடர்ந்து ஏதும் செய்ய இயலாது. இந்திய அரசு தலையிட்டால் ஒழிய நிவாரணப் பொருள்கள் விநியோகம் ஆவது சந்தேகம்தான்' என்றார் சுப்பிரமணி.
- முகவை க.சிவகுமார்,
நன்றி: தினமணி (25.07.2009)
http://www.tamilkathir.com/news/1638/58//d,full_view.aspx
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com