தமிழகத்தில் இலங்கை அகதிகள்--'பி.எல். படிச்சுட்டு கல் உடைக்கிறான்...'
'இருந்த ஊரிலும் இடமில்லை; வந்த ஊரிலும்வாழ்வில்லை...' என்கிற கதையாக அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத் தில் அகதிகளாக இருக்கும் ஈழத்தமிழர்கள்.
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் பிள்ளைகள் கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பித்தால், அது நிராகரிக்கப்படுவதாக ஒரு விவாதம் சமீபத்தில் சட்டமன்றத்தில் எழுந்தபோது, 'ஈழத்தமிழ்
பிள்ளைகள் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பித்தால், முதல்வரிடம் பேசி முறையான வாய்ப்பு வழங்கப்படும்...' என்று சமாதானம் சொல்லியிருந் தார் நிதியமைச்சர் அன்பழகன்.ஆனால், ''எங்கட பிள்ளைங்க மெத்தப் படிச்சு மட்டும்என்ன புண்ணியம்? அரசாங்க உத்தியோகம் கிடைக்காவிட்டாலும் பரவா யில்லை, எந்த கம்பெனிக்குப் போனாலும் 'இலங்கைத் தமிழனா... போடா வெளியே!' என்று விரட்டியடிக்கிறார்கள். தாய் மண்ணைத் தொட்ட பின்னும் கல்லு டைத்து, மண் சுமந்து பிழைக்கத் தான் நாங்கள் ஜென்மம் எடுத்திருக்கிறோமா?'' என்று விசும்பு கிறார்கள் அகதிப் பெற்றோர்கள்.
பொறியியல், சட்டம், கலை என்று பல வகையான கல்லூரிப் படிப்புகளை முடித்துவிட்டு, தமிழ் அகதி இளைஞர்கள் கட்டட வேலை, பெயின்டர் வேலை என்று கூலித் தொழிலுக்குப் போய்க்கொண்டிருக்கின்றனர். ஈழத்தமிழ் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் நல்வாழ்வுக்காக களப்பணியில் இறங்கியிருக்கும் நேரு, இந்த வேதனைகளை விளக்குகிறார்.
''ஒரு சமயத்துல இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இங்கே பள்ளி, கல்லூரிகள்ல இட ஒதுக்கீடு, இலவச பஸ் பாஸ்னு ஏகப்பட்ட சலுகைகள் இருந்தன. ஆனா, காலப் போக்குல எங்களுக்கான சலுகைகள் படிப்படியா குறைஞ்சுகிட்டே வருது. குறிப்பா, 2003-ம் வருஷத்துல இருந்து எங்க மேலே ஏகப்பட்ட கெடுபிடிகள் பாய ஆரம்பிச்சிருக்கு. அகதிக் குழந்தைகள் அரசு பள்ளிகள்ல படிப்பு வேண்டிப் போறப்ப... எந்த சிக்கலும் பண்ணாம பள்ளிகள்லசேர்த்துக்கிறாங்க.
அப்படியே சிலபள்ளிகள்ல சிக்கல் பண்ணினாலும், பணம் கொடுத்துத் தனியார் பள்ளிகள்ல பிள்ளைகளைச் சேர்த்துப் படிக்க வச்சுடுறோம். ஆனா, ப்ளஸ்-டூ முடிச்சுட்டுக் கல்லூரி வாழ்க்கையில அடியெடுத்து வைக்கிறப்ப, 'நீ இலங்கை அகதி'னு சொல்லி, அரசு கல்லூரிகள்ல ஸீட் தர மறுக் கறாங்க. எங்களுக்கான ஒதுக்கீடு குறித்துக் குரல் கொடுத்தாலும், எந்தப் பலனும் கிடைக்கிறதில்லை. தனியார் கல்லூரிகள்லயும் இதே பிரச்னைதான். ஆனாலும், எக்கச்சக்கமா பணம் கட்டுறோம்னு சொன்னா, கொஞ்சம் மனசு இரங்கி வந்து ஸீட் தர்றாங்க.
ஆனா, ஒவ்வொரு செமஸ்டருக்கும் கொள்ளைப் பணம் கட்டிப் படிக்கிறதுக்கு எங்க கையிலே காசு ஏது? 'அகதிகள் முகாமைவிட்டு வெளியே போகக் கூடாது, அங்கே பேசக் கூடாது, இங்கே பேசக்கூடாது'னு எங்க மக்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள். இதுக்கு நடுவுல கஷ்டப்பட்டு கூலி வேலை பார்த்துக் குழந்தைகளைப் படிக்க வைக்க நினைக்கிற பெத்தவங்களால பிரைவேட் காலேஜுக் கான ஃபீஸை எப்படிக் கட்ட முடியும்? ப்ளஸ்-டூ படிப்புல ஆயிரத்துக்கு மேலே மார்க் எடுத்தும், வறுமையால கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாம இருக்கிற முகாம் குழந்தைகள் பத்தி, ஈழ இன உணர்வு உள்ளவங்ககிட்டே எடுத்துச் சொன்னோம்.
அதோட விளைவா நடிகர் சூர்யா, சத்யராஜ், மணிவண்ணன் போன்றவர்கள் எங்க பிள்ளைகளுக்கு உதவ இந்த ஆண்டு முன் வந்திருக்காங்க. இப்படிக் கஷ்டப்பட்டுப் படிச்சு முடிச்சாலும் எங்க எதிர்காலம் கேள்விக்குறியாத் தான் இருக்கு. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காவிட்டாலும்கூடப் பரவாயில்லை...அதுக்கு சம்பந்தமேஇல்லாத வேலையைக்கூடத் தரமாட் டேன்னுதான் சொல்றாங்க.
இப்படித்தான் பாருங்க... டெலாம், ஷோபா, லூமன், சிவாகரன், ஆனந்தசிவம்னு ஐந்து பேர் தமிழக அரசு சட்டக் கல்லூரிகள்ள பி.எல். படிச்சு பாஸ் பண்ணிட்டு, வழக்கறிஞரா ப்ராக்டீஸ் பண்றதுக்காக பார் கவுன்சில்ல பதிவு பண்ணப் போனப்போ... 'நீ இந்திய பிரஜை இல்லை. அதனால ப்ராக்டீஸ் பண்ண முடியாது'ன்னு சொல்லி புறந்தள்ளிட்டாங்க. என்ன தான் அரசு கல்லூரின்னாலும் பல வகையான செலவு களைப் பண்ணி, அஞ்சு வருஷமா விழுந்து விழுந்து படிச்சதுக்கான பலனில்லாம நொந்து போய்க் கிடக்கிறாங்க. இந்தப் பதிவுக்காக அலைஞ்சு திரிஞ்சு வெறுத்துப் போன பவானிசாகர் அகதிகள் முகாம்ல இருந்த ஆனந்த சிவம், பிழைப்புக்காக எங்கேல்லாமோ போய் ஒரு கட்டத்துல செத்தே போயிட்டாரு. அதே முகாம்ல இருக்கிற டெலாம் குடும்பத்தினரும் அவனோட வக்கீல் தொழிலை நம்பித்தான் எதிர்காலத்தை ஓட்ட நினைச்சி ருந்தாங்க. ஆனா, வக்கீலுக்குப் படிச்சது வீணாகிப்போய் ஏதாவது பிரைவேட் கம்பெனியில நல்ல வேலைக்குப் போகலாம்னு நினைச்சு ஏறி இறங்காத கம்பெனி யில்லை. ஆனா, எல்லா கம்பெனியிலேயும் சொல்லி வச்ச மாதிரி, 'இலங்கை அகதிக்கு இங்கே வேலை இல்லை'னு முகத்துல அடிச்சுத் திருப்பி அனுப்பிட்டாங்க. பத்து மாசத்துல குறைஞ்சது இருநூற்றியறுபது இன்டர் வியூக்களை அட்டெண்ட் பண்ணின அந்தப் பையனால, ஒரு வேலைகூட வாங்க இயலலை. விளைவு, பெயின்டர் வேலைக்கும் கல் உடைக்கிற வேலைக்கும் போயிட்டிருக் கிறான். என்ன கொடுமை பாருங்க! இந்த டெலாம் மாதிரியே இன்னும் ஏகப்பட்ட பேர் தமிழக முகாம்கள் முழுக்கத் தவிச்சுக் கிடக்கிறாங்க.
எங்களோட பிரச்னைகள் குறித்து முதல்வர், அமைச்சர் முதலியவங்களுக்கு மனு அனுப்பினாலும் கூட சிக்கல்தான். அந்த மனு நகலை எடுத்துக் கொண்டு வந்து க்யூ பிராஞ்ச் போலீஸ்காரங்க, 'யாரைக் கேட்டு மனு அனுப்பினே?'னு குடைஞ்செடுக்கிறாங்க. நிலைமை இப்படியே போயிட்டிருந்தா... எங்க எதிர்காலம் என்ன ஆகுறது? எங்க சந்ததிகள் முழுக்க இனி கூலி வேலை பார்த்தே மடிய வேண்டியதுதானா? இந்த வேதனைகளை எல்லாம் கனிமொழி எம்.பி-யை சமீபத்துல சந்திச்சு விளக்கியிருக்கோம். எங்களுக்கு அரசாங்க உத்தியோகம் கொடுங்கன்னு கேட்கலை; படிப்புக்கு ஏற்ற மாதிரி ஓரளவு வருமானம் வரும் வகையில சாதாரண வேலைக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாலும் தேவலை என்று புலம்பியிருக்கோம். அவங்களும் 'அப்பா கிட்ட பேசி நல்ல தீர்வு கிடைக்க முயற்சிக்கிறேன்'னு சொல்லியிருக்காங்க. நல்ல சேதி வருமா என்று பார்ப் போம்...'' என்கிறார் வேதனை பொங்க.
ஈழத்தமிழர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாத நிலை குறித்து சில சீனியர் வழக்கறிஞர்களிடம் பேசியபோது,
''அட்வகேட் ஆக்ட்படி ஒருவர் இந்தியாவில் சட்டம் பயின்றிருந்தாலும், அந்த நபர் இந்தியப் பிரஜையாக இருந்தால் மட்டுமே பார் கவுன்சிலில் பதிவு செய்து ப்ராக்டீஸ் செய்ய இயலும். அதே நேரத்தில், பி.எல். படித்து விட்டு ஒருத்தன் கல் உடைக்கிறான், பெயின்ட் அடிச்சு குடும்பத்தைக் காப்பாத்துறான் என்பதும் கொடுமை யான விஷயமே. அரசுதான் தலையிட்டு இவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர வேண்டும்!'' என்கிறார்கள்.
- எஸ்.ஷக்தி
படங்கள்: 'ப்ரீத்தி' கார்த்திக்
நன்றி:விகடன்
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com