கொழும்பு, ஜூன் 17- இலங்கையில் மூத்தூர் பகுதியைச் சேர்ந்த 224 தமிழர்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாக வேறு இடத்திற்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் கூறப்பட்டுள்ளதாவது:
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூத்தூர் என்னுமிடத்தைச் சேர்ந்த 58 குடும்பங்களைச் சேர்ந்த 224 தமிழர்கள் போர் காரணமாக பாதுகாப்பு பகுதிக்கு வந்தனர். அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கீரிமுட்டி என்னுமிடத்தில் உள்ள முகாமில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களை திரிகோணமலை மாவட்டத்தில் கிளிவெட்டி முகாமிற்கு செல்லுமாறு அரசு அதிகாரிகளும் ராணுவத்தினரும் வலியுறுத்தினர். இதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இடம் மாறவில்லை என்றால் அவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நிவாரண உதவிகளும் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனாலும் அவர்கள் இதற்கு சம்மதிக்காமல் வாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போலீஸôர் வரவழைக்கப்பட்டு அவர்கள் வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றப்பட்டனர். அப்போது, ஐநா பிரதிநிதிகளும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்களும் அங்கு இருந்ததாகவும் இணையதளச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நேற்று காலை மொத்தம் 10 பேருந்துகளில் ஏற்றப்பட்ட அவர்கள் வெறுகால் ஆற்றுப்பாலம் வழியாக கிளிவெட்டிக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.
அவர்களின் சொந்த கிராமமான மூத்தூரை ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கிராமத்திலிருந்து 750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2500 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீரிமுட்டி, பழச்சோலை, வாவடிவெம்பு ஆகிய முகாம்களை மூடுவதற்கு உத்தரவிட்டிருப்பதாகவும் இதையடுத்து கீரிமுட்டியில் தங்கியிருந்த தமிழர்கள் கிளிவெட்டிக்கு மாற்றப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com