பறவையே.. விரி சிறகை உறவைக் காக்க
என் எண்ணததில் என்றும் என் இனப் பறவையின் சரணாலயம்..
வெண் பனிமலை முகடுகளும் தீங்கனிச் சோலை தழுவிய ஆற்றுப் படுக்கைகளும்..
பச்சை வயல் வெளி விரிப்புகளும்.. அந்த வெண்மணல் தடவும் கடலலைச் சிரிப்புகளும். தென்றல் தாளாட்டும் குளக் கரையும.;.. புல்லினங்கள் கூடுகட்டும் தென்னம்பனைச் சரடுக் காடுகளும்..
தொன்மைத் தமிழ் வாழவைக்கும் எங்கள் தமிழ் தாய் இலக்கிய வருடல்களும்..
வீர வரளாறுகளும் புதைத்து வைத்துள்ள வீர மணி முத்துக்களின் துயிலும் இல்லங்களும்.
எந்தன் முந்தை வினை தொடங்கிய கரப்பன் வழி குடியிருப்பும்.. கன்னித் தமிழகமும் ஈழத்து நிலப் பரப்பு எங்கும் பறந்து.. சிறகடித்த மூத்தகுடிப் பறவையினம் நாம்.. சிறகொடிந்து வாழ்வோமா.. இல்லை எம் கூட்டைச் சீரமைத்து நாடு காண்போமா..
தவமிருந்து இந்த பறவைகளைப் பெற்றவளின் பரம்பரை இராட்சியத்தில்..
வளமிருந்தும்.. பலமிருந்தும்.. ஓற்றுமை ஒன்றுமட்டும் குறைவாக இருந்ததனால்..
புலமிருந்து வந்தவனிடம்..பறிபோகிறது எங்கள் குடியுரிமை..
அன்றும்.. இன்றும்.. நாங்கள் மாறவில்லை.. ஆதனால்தான் இன்றும் எமக்கென்று சொந்தமாக ஒரு நாடுமில்லை..
அன்று பறிக்கப்பட்ட பறவைகளின் சரணாலயத்தில்.. உன்னைப் போல்.. நானும் நின்று.. கூடி மகிழ்ந்து வாழ்ந்த கிளைகள்.. முறிக்கப்பட்டன..
இன்று கூடு இழந்து அந்த மண்ணையும் மரத்தையும் நினைந்து வாழும் ஒரு ஏதிலிப் பறவையாகி..
சிறகு இழந்து வாடும் என் உறவுகளை நினைத்து வாடுவதும்.. எங்கெல்லாம் ஓடுவதும். கண்ணீரால் கண்களை மூடுவதும் தாளாது இன்று என் சோகத்தைப் உன்னிடத்தில் பாடுகிறேன்..
கூடுகள் இழந்த போது சுதந்திரம் தொலைத்த பறவைகள் .. பாரினில் நல்ல புகழிடம் தேடி.. தாமிருந்த மரத்தின் வேரிடம் கூடச் செல்லாது வேறு இடம் வந்து கூடின..
பறவைகள் சில சிறகொடிந்து பாதி வழியிலும் வீழந்தன.. திசைமாறிப் போயின பல.. நோயில் விழுந்தன சில.. தங்க வந்த இடத்தில் தாராளமக வாழ்ந்தாலும் தங்கக் கூட்டுக் கிளிகளாகி.. நாடு இழந்த பறவைகளாகி இன்று நாதியற்றுத் தவிக்கின்றன .
தாய்த் தமிழப் பறவை அடைகாத்த குஞ்சுகளே.. உன்தாயின் முட்டைக் கருவரைக்குள் செட்டையடிக்க முடியாது நீ முடங்கிக் கிடந்த பொழுது.
ஓரு ஒற்றை ஓட்டைவைத்து கொத்தி உடைப்பெடுக்க ஆசைப்பட்டாய்..
அந்த இருண்ட முட்டைக்குள் செட்டைகள் கூட சரியாக முளைக்காத.. உன் ஊன் உடல் வளராப் பருவத்தில் கூட நீ போராட துணிந்தாய்.. அகண்ட இந்த வானிடையில் சுதந்திரமாக பறக்கத் துடித்தாய்.. இன்றுமட்டும் எப்படி நீ உன்சிறகை விரிக்க மறுக்கிறாய்…
உன்னை விழுங்க எத்தனை பாம்புகள்.. உன்தாய் கட்டிய கூட்டைப் பிய்த்து எறிய எத்தனை மந்திகள் கொப்புகள் தாவின.. உன் தாய்க் கூட்டில் கூட சில வேற்றுப் பறவைகள் களவாய்க் கூடி முட்டைகள் இட்டன.. பின்பு உன் தாயின் மடிக்குள் அவை நெருப்பைக் அள்ளிக் கொட்டின..
சுதந்திரக் குஞ்சே நீ பிறக்கும் முன்னே நீ இறந்துவிடக் கூடாது என்பதற்காக உன் உறவுகள் எல்லாம் காவலில் நின்றார்..
உன் அம்மாளுக்கும் ஐயாவுக்கும் நீ இன்று அறுபதாவது பிள்ளை.. உன் தேனையை உலகுக்கு காட்டு.. உல்லாசமாய் திரியும் நேரமல்ல… விரித்து எழுந்து பறந்து எழுப்பி விடு உணர்வுத்தீயை..
உன் அக்காளும் அண்ணாவும் உன்னைப் போல்தான் கொண்ட ஆசைக்கு அளவு இல்லை
சுற்றும் வல்லூறு வரும் என்று தெரிந்தும் உல்லரசமாய் வாழ நினைந்து பறந்து எங்கோ போய் வீழ்ந்தார்.. இன்னும் பல உறவுகள் காணாமல் தொலைந்தார்
காற்றும் அவர்க்குச் சொன்னது காலத்தின் கொடுமையை.. நேற்று வீசிய கொடும் புயலில் கிளை பலவும் முறிந்து போயின.. ஆனாலும் ஆணிவேருக்கு அழிவில்லை.. மீண்டும் தளைத்து விழுதெறியும் புதிதாய் பிறக்கும் உனககும் கூடுகட்ட கிளைபரப்பும்..
மரம் கொத்தி அமைத்த பொந்துக்குள்ளும.;. கரம் பொத்தி வளர்த்த குஞ்சுகளைக் கொல்ல கருநாகம் வழிகாட்ட விரியன்கள் புகுந்துவிட்டன..
சில பீனிக்ஷ்சுகள் மட்டும் எரிதணலில் வாழ பழகிப் போராடுகின்றன.. தாய்ப் பறவையும் தன் பிள்ளைகளை நினைத்து வாடுகிறது..
இங்கிருந்து இந்த வாய்ப் பறவையும் கூவுகிறது.. கூவினால்தான் விடியுமென்று பொய்யாக நினைக்கவில்லை.. விடியல் தெரிகின்றது.. கிழக்கு வெளிக்கும் நேரம் வருகிறது.. சாமக் கோழியின் கூவலுக்கும் உலகம் ஒருமுறை விழித்துதான் உறங்கவேண்டும்.. விடியும் வரை கூவ குயில்களும் மயில்களும் வருகின்றன.. முடியும்வரை ஓன்றாய்க் கூவி உலகை எழுப்ப..
நீயும் உன் சிறகை விரித்து வா..
ஆற்று வெளிகள் எல்லாம் நம்மக்கள் நாகரீகம்;.. வேற்று படை சூழ.. வாழ்ந்த நிலமெல்லாம் விட்டு வந்து.. தென்கோடிப் பனை வட்டு நிலம் மட்டும்தான் இன்று மிச்சம்..அந்நிலமும் பறிபோக செய்கின்ற சதிகளுக்குள் சிலநரிகள் சிங்கத்தின் பக்கம்..
பறவையே எம் உயிரை துச்சமென மதிக்காது அச்சமுடன் அந்த பச்சைப் பனை நிலத்தை விட்டு வந்தது பிழையானது என எண்ணத் தோன்றுகிறது..
மிச்சமிருக்கும் உறவை இச்சகத்துள் காத்துவிட எச்சமிருக்கும் வாழ் நாளைத் தமிழுக்கு தந்துவிட்டு சாவென்று சொல்கிறகு என் மனது.. நீயும் வா சேர்ந்து செயல்படு..
நோகும் இதயத்குள் வேகுது நினைவுகள்.. பறக்கமுடியாத உறவுப் பறவைகளை மறக்க முடியாது.. இறகிருந்தும் பறக்க வகையிலாப் பறவைகள் நாம் வாடிப் பயனற்று போனோமோ..
கூடி நின்று கழத்தறுக்க உடன் பிறந்தவனிடம் கத்தி கொடுத்து காத்திருந்த கயவரிடம் கத்திக் கத்திக் காப்பாற்றக் கேட்டோம்..
வற்றிப் போனது எங்கள் குரல்கள்.. சுற்றிப்பார்த்து வந்தவனும் பாதிக் கணக்கும் சொல்லவில்லை.. மீதியிருந்த எங்கள் சொந்தங்கள்; எல்லாம் வேடன் கூட்டுக்குள் கண் மூடுகின்றது.. நாங்கள் வாய்திறந்ததற்கு பயனில்லையோ.. உலகம் காய் நகர்த்துகிறதாம்..
வல்லரசு வல்லூரு வட்டமிட்டு தான் பிடித்த செய்மதிப் படத்தை பொய் மதிக்கும் ஐநா பாதுகாப்புச் சபைக்கு காட்டி என்ன பயன்..
சொந்தங்கள் வந்து சோகங்கள் ஆற்ற முடியாமலும் வாழத்தான் வாவென்று அழைத்ததா வாய் மூடிக் கிடக்கும் இந்த உலகப்பிணம்..
இறையாண்மை என்னும் ஆமை ஒன்றும் ஊர்கின்றதாம்.. சில கொக்குகள் சொல்லக்கேட்டு ஆமை தொங்கிய கதைதானோ.. நாங்களும் பள்ளிச் சிறுவர்களும் போடும் சத்தம் பலித்திடும் என்றுதான் பொறுத்திருந்து பார்ப்போமா.. போராடத் துணியோமா..
பச்சப் பசும் சோலை வாழ்ந்து நல் கனிகள் உண்ட எம் பறவையினம்.. கொச்சத் தமிழில் திட்டு வாங்கி சோற்றுக்குத் தட்டு ஏந்தி.. சிங்களச் சிறைக் கூட்டுக்குள் விக்கித் தவிக்குதாம் தண்ணீருக்கும.;.. எச்சிலிலைப் பருக்கை கூட தேடும் சிற்றெறும்புக்குக் கிடைக்காதபடி வழித்து உண்ணுதாம் பறவை பாதிவயிறு நிறப்ப.. எச்சிக் கையால் எங்கணம் இனித் தமிழன் காக்காய் கலைப்பான்..
இரந்து வந்தவர்க்கெல்லாம் விரைந்து விருந்து வைக்கும் வன்னிப் பறவையினம்..
பிறந்த குழந்தைக்கும்அருந்தப் பாலின்றி தவிக்குதங்கே…
பாலைக் குடித்துப் பாகுடன்நெய்யமுது உண்ட வன்னியின்பாலகன்..
நாளைச் சோற்றுக்கு வேளைக்கே எழும்பி வரிசையில் நிற்குதாம்..
உடுத்தக் கந்தலும் இன்றி முனங்கி அழுவதும்.. பருந்துகள் குதறிய காயம் வலிக்க மருந்தின்றிச் சாவதும் உன் உறவின்நிலை..
சன்னங்கள் பட்டெங்கள் சரீரங்கள் சாயத்தானே எண்ணங்கள் தமிழ் காக்க எழுந்தன..
அன்னங்கள் போலிருந்த தமிழ் பெண்களும் விண்ணெங்கும் எங்கள் புலிக்கொடி ஒளிக்க எங்கள்பகை வாசல் எரித்தனர்..
தமிழ் மன்னர்கள் வாழ்ந்தகாலத்தில் எங்கள்சின்னங்கள் பொறித்த கோட்டைக்குள்.. சிங்கங்களர் புகுந்திடல் தகுமா.. தமிழ்த் தங்கங்களே.. அங்கெங்கள் தலைவன் படை நிமிரும்
வெட்டினாலும் ஒட்டிக் கொள்ளும் அந்த சுதந்திப் பறவையின் சிறகுகள். தலைமேல் தீயள்ளிக் கொட்டினாலும் எழும் பறவை இனமே.. என் அன்புப் புறவையே நீ பீனிக்ஷ் பறவையாகு தமிழ் காக்க எரிதணலில் விழுந்து வேகு..
மணிவண்ணன்
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com