'தமிழ்வின்' அமைக்கும் சரணாகதி களம் ,
சிங்களவர்களின் கால்களை நோக்கி 'ஓரடி முன்னே'!
ஈழமக்கள் காப்பு அமைப்பு தமிழ்நாடு
'தமிழ்வின்' இணையதளத்தை மையமாகக் கொண்டியங்கும் ஒரு குழு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையைக்கைப்பற்றவும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் சரணாகதி படுகுழிக்குள் தள்ளவும் முனைந்து செயல்படுகிறது. இதனை நான் கடந்த மே 24-ம் தேதி அனுப்பிய மின்னஞ்சல் செய்தியிலேயே சுட்டிக்காட்டியிருந்தேன். தேசியத்தலைவர் இறந்து விடவில்லை என்று மே 19-ம் நாள் அறிவித்த புலிகளின் பன்னாட்டு பேச்சாளர் செல்வராசா பத்மனாதன் மே 24-ம் நாளன்று அவர் இறந்து விட்டார் என்று உறுதி செய்வது போல தாமே 'அதிகாரப்பூர்வ' செய்தி ஒன்றை வெளியிட்ட அறிக்கையை 'தமிழ்வின்' மட்டுமே வலிந்தும் பல நாட்கள் பதிப்பித்தது. துரோகியாக மாறிப்போன செல்வராசா பத்மனாதனோடு ஒரு குழு 'தமிழ்வின்'னை மையமாகக்கொண்டு எதிரிகளின் கொலைக்கரங்களில் தமிழர்கள் சரணடையும் நிலைப்பாட்டை திணித்து வருவது இப்போது தெளிவாகியுள்ளது. அண்மையில் 'தமிழ்வின்' பதிப்பித்துள்ள சரண்தவராஜா என்பவர் எழுதியுள்ள 'ஈரடி பின்னே…ஓரடி முன்னே' என்ற கட்டுரையானது இதனை உறுதி செய்கிறது.
சரண்தவராஜா தனது கட்டுரையில் தகவல்வெளிப்போரின் மூலம் இலங்கை மற்றும் இந்திய அரசுகள் எதைச்சாதிக்க விரும்பிகின்றனவோ அதை அப்படியே வழிமொழிந்து எதிரிகளின் தற்போதைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அனைத்து போராளிகளும் ஈழத்தமிழர்களும் சரணாகதி அடைந்து பொது மன்னிப்புக் கோரும்படி தூண்டுகிறார். இவ்வாதத்திற்கு அடிப்படைகளாக அவர் முன்வைக்கும் கருதுகோள்கள் ஆர்வமூடுபவையாக உள்ளன. முதலாவதாக அவர் தகவல் வெளிப்போரின் தன்மைகளைக் குறித்து தன் பொன்னான கருத்துக்களை உதிர்க்கிறார். அதாவது சிறீலங்கா அரசின் தகவல்வெளிப்போரும், தேசியத்தலைவரின் இறப்பு குறித்த செய்திகள், தயா மாஸ்டர் ஜார்ஜ் மாஸ்டர் ஆகியோர் வழங்கும் தகவல்கள் புலம்பெயர் தமிழர்களிடையே குழப்பத்தையும் மோதல்களையும் உண்டாக்குகின்றனவாம். நல்லது. தேசியத்தலைவரின் இறப்பு குறித்த செய்தியை தானே சிந்திக்கும் ஆற்றல் பெற்ற எவரும் இதுவரை நம்பவில்லை. தயாமாஸ்டரும் ஜார்ஜ்மாஸ்டரும் மருத்துவசாலையிலிருந்து கைது செய்யப்பட்டார்கள். பெண்புலித்தளபதி தமிழினியும் கைது செய்யபட்டதாக அறிகிறோம். வேறெந்த தலைவரும் கைது செய்யப்பட்டதை சிறீலங்கா அரசே உறுதி செய்ய முடிய வில்லை. இந்த மூன்று தலைவர்களை விட அதிமுக்கியம் வாய்ந்த வேறு மூன்று தலைவர்கள் சிறீலங்கா அரசிடம் வெகு காலத்திற்கு முன்பே சரணடைந்து விட்டனர். அவரகள் வேறு யாருமில்லை. கருணா, டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி ஆகியோர்தான். இவரகள் சரணடைந்ததால் புலம்பெயர் தமிழர்களிடம் எவ்வித்த பாதிப்பும், பிளவும், மோதலும் இடம்பெறவில்லை. தயாமாஸ்டரும், ஜார்ஜ் மாஸ்டரும், தமிழினியும் இவர்களைப்போல் துரோகிகளும் இல்லை. எனவே இவர்களின் கைது புலம்பெயர் தமிழர்களிடம் எந்த குழப்பத்தையும் ஏர்படுத்தாது என்பது தெளிவு. 'தமிழ்வின்' கூட்டம் வலிந்து புலம்பெயர் தமிழர்களிடையே ஒரு குழப்பநிலை உள்ளது போன்ற தோற்றத்தை உண்டாக்க முனைவது தெரிகிறது.
போரின் முடிவும், ஐக்கிய நாட்டவையில் சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்ததும் எதிர்தரப்பை உற்ச்சாகப்படுத்தி இருக்கின்றன, விடுதலைப்புலி என்ற நாமத்தையே உச்சரிக்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது என்கிறார் சரண்தவராஜா. எதிரி என்ன சொல்கிறானோ அதனை ஏற்றுக்கொண்டு தலையாட்டுவோம் என்கிறார் தவராஜா. அதற்கு மேல் அவரால் சிந்திக்க முடியவில்லை. போரின் முடிவு உலகத்தமிழர்களின் இயக்கத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை. ஈழமக்களுக்கு பேரிழப்பு நேரிட்டிருக்கிறது. ஆனால் புலிகளின் செல்வாக்கை உடைத்து விட்டதாக சிறீலங்கா அரசு பரப்புரையில் ஈடுபட்டாலும், அவர்களின் உலகவலைப்பின்னல் அப்படியே இருப்பதாக சிறீலங்கா அரசின் வெளியுறவு அமைச்சர் பொகலகாமாவே ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்போது சிறீலங்கா அரசின் போர் என்பது புலிகளின் அந்த வெளிப்புறக் கட்டமைப்பை நோக்கித்தான் நீண்டு வருகிறது. புலித்தலைவர்களோடு தொடர்புடைய வெளிநாட்டினரை இனம்காண சிறீலங்கா அரசு முயன்று வருவது கண்கூடு. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஐ.நாவில் சிறீலங்காவின் தீர்மானம் வெற்றி பெற்றாலும் மேற்கு நாடுகள் அதன்மீது பொருளாதாரத்தடைகளை விதிக்க முயற்சிப்பதை கவனிக்க வேண்டும்.
அதே வேளை நான்காம் ஈழப்போர் உலகத்தமிழர்களின் மீது ஏர்படுத்திய தாக்கம் தொய்வின்றி இன்று வரை தொடர்ந்தும் வருகிறது. இந்த உலக எழுச்சியானது விடுதலைப்போரின் இரண்டாம் தலைமுறையினரால், கடந்த இருபத்தி ஐந்தாண்டுகளுக்குள் பிறந்தவரகளால் முன்னின்று நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த எழுச்சி இன்னும் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்று பகுத்தறிவோடு எதிர்பார்க்கலாம். அதுதான் நான்காம் ஈழப்போர் தமிழர் விடுதலை இயக்கத்தில் ஏற்படுத்தி இருக்கும் திருப்புமுனை. இந்த திருப்புமுனை எழுச்சி ஒரு வடிவத்தை மட்டும் எடுக்காது. ஈழத்திலும், தமிழகத்திலும், உலகத்திலும் பல வடிவங்களை எடுக்ககூடியது. ஆனால் இந்த எழுச்சியை எவ்வாறேனும் ஒடுக்கி விட வேண்டும், புலித்தலைமையிடமிருந்து தமிழர்களை எவ்வாறேனும் பிரித்து விட வேண்டும் என்று சிறீலங்கா அரசு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இதற்க்காக அது தமிழர்களுக்குள்ளே ஒரு துரோகிகளின் தலைமையை ஏற்படுத்தத் தயங்காது. இதனை எதிர்பார்த்தோ அல்லது சிறீலங்கா அரசுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்டோ என்னவோ ஒரு கூட்டம் அவசரம் அவசரமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தக்கூட்டத்தின் உள்ளக்கிடக்கையை பத்மனாதன் விரைந்து அறிவித்தார். தலைவர் இறந்து விட்டதாக அறிவித்தார். புலிகள் இனி ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். முதற்கட்டமாக சிறீலங்கா அரசு அதனை நிராகரித்திருந்தாலும் புலிகள் பெயரில் ஒரு டம்மி தலைமையை உருவாக்க வேண்டிய தேவை சிறீலங்கா அரசுக்கும் துரோகக்கூட்டத்திற்கும் உண்டு. எனவே அதற்குரிய தளத்தை விரிவாக்கிட சிறீலங்கா அரசும், துரோகக்கூட்டத்தினரும் முயற்சித்தபடியே இருப்பார்கள். சரண்தவராஜா போன்றவர்கள் இந்த முயற்சிக்கு முதுகெலும்புகளாக இருப்பவரகள் என்பதை அவரது கட்டுரையை படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.
சரண்தவராஜா உலகத்தமிழர்களின் எழுச்சியை எவ்வாறெல்லாம் திரிக்கிறார் என்பதை அக்கட்டுரையில் வெளிப்படும் அவரது கருத்துக்கள் காட்டுகின்றன. முதலில் விடுதலைப்புலி என்ற நாமத்தையே உச்சரிக்க முடியாத நிலைமை தோன்றியிருப்பதாக கூறுகிறார். பின்னர் விடுதலைப்புலிகள் என்ற நாமம் இருக்கக்கூடாது என்றே புலம்பெயர் அறிவுஜீவிகளும் மாற்றுக்குழுக்களும் விரும்புவதாகக் கூறுகிறார். பிள்ளையான் குழுவினரோ கருணா குழுவினரோ அப்படித்தான் விரும்புவார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அவர்கள் ஏற்படுத்திய மாற்றுக்குழுக்கள் எல்லாம் ராஜபக்சேவின் மிரட்டலுக்கு அடிபணிந்து பயந்து தங்கள் மாற்றுக்குழுக்களை கலைத்து விட்டு ராஜபக்சேவின் சுதந்திராக்கட்சியிலேயே போய் சேர்ந்து கொண்டனர் என்பதை இஙே கவனிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் என்ற ஒரே ஒரு பெயர்தான் சிங்கள இனவெறிக்கு ஒரே மாற்றாக இருந்தது, இருந்து வருகிறது. அதனாலேயே சிங்கள இனவெறியர்கள் விடுதலைப்புலிகளின் பன்னாட்டு வலைப்பின்னலை எவ்வாறேனும் தாக்கி விடவேண்டும் என முயற்சிக்கின்றனர். அந்த முயற்சிக்கு தோள் கொடுக்க வருகின்றனர் 'தமிழ்வின்' மாற்றுக்குழுவினர்!
விடுதலைப்புலிகள் என்ற பெயரே இருக்கக்கூடாது என்றுரைக்கும் இந்த மாற்றுக்குழுவினர் இன்னொரு ஆயுதப்போராட்டம் என்பது நினைத்துப்பார்க்க முடியாதது என்றும் முடிவு கட்டிவிட்டனர். இல்லையேல் சிங்கள இனவெறியர்கள் வீசும் எலும்புத்துண்டுகளை பொறுக்கி எடுப்பது எப்படி? இதனை தெரிவிக்கும் சரணாகதி தவராஜா ஜனநாயக வழிமுறையில் இனி இறுதி இலக்கை நோக்கி நகர வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார். அதென்ன ஜனநாயக வழிமுறை? சிறீலங்கா அரசு நடத்தப்போகும் ஊராட்சி மன்ற தேர்தல்களில் பங்கெடுப்பதாம். அதுவும் விடுதலைப்புலிகள் முன்பு உருவாக்கிய அரசியல் கட்சியான 'விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி' என்ற பெயரில் தேர்தலில் போட்டியிடவேண்டுமாம். ஏன் விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சியின் பெயரில் போட்டியிட வேண்டுமாம்? இல்லையேல் யார் வெற்றி பெறமுடியும்? விடுதலைப்புலிகள் என்ற பெயரை விட்டுவிட்டு ஈழமண்ணில் யாரும் வெற்றி பெற முடியாது என்பது உலகறிந்த விடயம். விடுதலைப்புலிகள் என்ற பெயரையே பயன்படுத்தும் நிலைமை இல்லை என முதலில் சொன்னவர், பின்னர் பல்டியடித்து விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறுவது விடுதலைப்புலிகளின் தலைமையை தாங்கள் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
அதுசரி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் மாற்றுக்குழுவினருக்கு அங்கீகாரம் கிடைத்து விடுமா? கருணா குழுவினருக்கும், பிள்ளையான் குழுவினருக்கும் எங்கே கிடைத்தது அங்கீகாரம்? ஈழத்தில் அல்ல, சிங்களத்தில்தான்! அதுவும் அவர்கள் தங்கள் மாற்றுக்குழுக்களை கலைத்து விட்டு எவ்வித அடையாளமுமின்றி சிங்களக்கட்சியில் போய்ச்சேர்ந்த பின்னர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரணாகதி தவராஜா ஜனநாயகவழியில் இறுதி இலக்கை நோக்கி நகர வேண்டும் என்று கூறும்போது எந்த இலக்கை நோக்கி மாற்றுக்குழுவினர் நகர விரும்புகின்றனர் என்பது இங்கே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி போன்றோர் எந்த இலக்கை இநோக்கி நகர்ந்தார்களோ அந்த இலக்கை நோக்கித்தான். அதுவே அவர்களது இறுதி இலக்கு. அந்த இலக்கினை அடையும் போது போரில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் போராளிகள் ஆகியோரை கைவிட்டுவிடுவார்களா சரணாகதிக்குழுவினர்? மாட்டாவே மாட்டார்கள். அந்த அளவுக்கு கல்மனம் படைத்தவர்கள் அல்ல மாற்றுக்குழுவினர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் அவர்களிடம் தீர்வு இருக்கிறது. ஆம், சரணாகதி தவராஜா கூறுகிறார்: போராளிகளும் மக்களும் பொதுமன்னிப்பு பெறவேண்டும்! எவ்வளவு அருமையான தீர்வு! சுமார் முப்பது ஆண்டுகளாக வீரஞ்செறிந்த விடுதலைப்போர் நடாத்தி ஈழத்தமிழரின் இழந்த வரலாற்றை மீட்டெடுத்த போராளிகளும் அவர்களுக்கு இறுதிவரை துணையிருந்த மக்களும் சரணடையவேண்டும். அவர்கள் சரணடையாவிட்டால் மாற்றுக்குழுவினர் சிங்கள அரசு வீசும் எலும்புகளை நிம்மதியாகப் பொறுக்கிக்கொள்ள முடியாதல்லவா?
'தமிழ்வின்' குழுவினர் ஒரு தீர்மானகரமான திட்டத்துடனயே களத்தில் இறங்கியிருப்பதாகவே அவர்களது கட்டுரை புலப்படுத்துகிறது. தங்கள் சரணாகதி – பொதுமன்னிப்பு படலத்தை நிறைவேற்றி சிங்களவன் வீசும் எலும்புத்துண்டுகளை பொற்றுக்கிகொள்ள இப்போதிருந்தே பேரம்பேசியாக வேண்டுமே! தமிழ்வின் மாற்றுக்குழுவினர் அதற்கும் ஒரு தலைசிறந்த திட்டம் வைத்திருக்கின்றனர். சரணாகதிதவராஜா சொல்கிறார்: ஈழ நிலைமைகள் குறித்து ஆராய அனைத்துலக ஆலோசனை சபை ஒன்றை உருவாக்கவேண்டுமாம்! அவ்வாறு செய்தால்தானே தங்கள் துரோகத்தனத்திற்கு அனைத்துலக அங்கீகாரத்தைக் கோர முடியும்! தமிழ்வின் மாற்றுக்குழிவினர் விடுதலைப்புலிகளின் தலைமையை கைப்பற்றவும், விடுதலைப்புலி என்ற பெயரையே இல்லாதொழிக்கவும், சுதந்திராக்கட்சியில் போய்ச் சேர்ந்துகொள்ளவும், சிங்களவன் வீசும் எலும்புத்துண்டுகளை வீசியெடுக்கவும் முன்வைக்கும் அருமையான திட்டம் இதுதான். இத்திட்டத்தினூடே விடுதலைப்புலிகளின் போராட்டம் நிகழ்த்தியிருக்கும் பல அரிய சாதனைகளை பாராட்டவும் தயங்கவில்லை. கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாக தமிழினத்தின் அடையாளத்தை நிறுவுவதில் விடுதலைப்புலிகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் அவர்கள் செய்திருக்கும் தியாகமும் அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிடக்கூடியவையல்ல.
ஆனால் அதெற்கென்ன செய்வது? சரணாகதி கூட்டத்திற்கு இடத்தை சிங்களவன் கைகளில் ஒப்படைக்க வேண்டும், அவன் வீசும் எலும்புத்துண்டுகளை பொறுக்கிக்கொள்ள வேண்டும். அவ்வளவே. எனவே இனி தனிநாட்டுக்கோரிக்கையை கைவிட்டுவிட வேண்டும். ஆனால் அதனை சும்மா போகிற போக்கில் விட்டுவிட்டால் பெருந்திரளான மக்கள் ஆதரவு கிடைக்காது. எனவே சொல்கின்றனர் 'தமிழ்வின்' குழுவினர்: "தனி நாடு கோருவதற்கான காரணங்கள் மறைந்து விடவில்லை; அப்படியே உள்ளன". இது தமிழ்வின் மாற்றுக்குழுவின் சார்பில் சரணாகதி தவராஜா சொல்வதில்லை. இன்றைக்கு நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இதேபோல் தனி நாட்டுக்கொரிக்கையை முன்வைத்து அரசியல் நடத்திய தி.மு.க. தலைவர் அண்ணாதுரை1962-ம் ஆண்டு நேரு தலைமையிலான நடுவணரசு 'பிரிவினை தடைச்சட்டம்' கொண்டு வந்தவுடன் தனிநாட்டுத் தாகம் தீர்க்க தேச ஒற்றுமை குளிர்பானம் அருந்தியபடி கொள்கையை குழி தோண்டிபுதைத்து விட்டு அண்ணாதுரை சொன்னார்: "தனிநாடு கோருவதற்கான காரணங்கள் மறைந்துவிடவில்லை; அப்படியே இருக்கின்றன". இனத்துரோகிகளுக்கு காரணங்கள் அப்படியே இருக்கும். எதிரிகளிடம் சரணடைந்து பதவி சுகம் பெறுவது வரை இனத்துரோகிகள் அவ்வாறு சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எதிரிகளிடம் சரணாகதி அடைவார்கள். எலும்புத்துண்டுகளை பொறுக்கிக்கொள்வது வரை மாற்றுப்பாதை, ஜனநாயகப்பாதை எனப் பசப்புவார்கள். எதிரி வீசும் எலும்புத்துண்டுகளை பொறுக்கியெடுத்த பின்னர், பதவி நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டபின்னர் சரணாகதிப்பாதையே சமத்துவப்பாதை என சாதிப்பார்கள்.
ஈழமக்கள் காப்பு அமைப்பு தமிழ்நாடு
இந்த அறிக்கைக்கும் ஈழதேசம்.கொம் இணையத்திற்கும் எந்த விதமான ஒரு தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்
http://eeladhesam.com/
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com