"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-10: வகுப்புக் கலவரங்கள்
தோட்டங்களில் வேலைசெய்ய சிங்களவர்கள் மறுத்ததால், ஆங்கிலேயர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். எப்படி அமெரிக்காவில் வேலைசெய்ய ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பர்களை அடிமைகளாக அழைத்து வந்தனரோ, அதேபோல தோட்டங்களில் வேலைசெய்ய ஆங்கிலேயருக்குத் தேவையான கூலித் தொழிலாளர்கள் தமிழகத்தில் கிடைத்தனர்.
ஏககாலத்தில் இந்தியாவிலும் ஆங்கிலேயர் ஆட்சி நடந்ததால் சென்னை மாகாணத்தின் தென் பகுதியிலிருந்து கூலியாட்களைத் தருவிப்பது இவர்களுக்கு மிகச் சுலபமாயிருந்தது. மேலும் சிங்களவர்களை அடக்கவும் இச்செயலால் முடிந்தது. 1827-இல் மட்டும் இலங்கையில் குடியேறிய இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை 10,000. 1877-லோ 1,46,000 ஆக உயர்ந்தது. (ஆதாரம்: இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், ஈழ ஆய்வு நிறுவனம்). இந்தியத் தமிழர்களை மலையகத் தோட்டங்களில் ஈடுபடுத்தும்போது அடைந்த இன்னல்கள் இருக்கிறதே அது சொல்லுந்தரமன்று (இதன் விவரம் தனிக் கட்டுரையாக பிற்பகுதியில் வருகிறது).
இதனால் சிங்களவர் வாழ்வு கேள்விக்குறியாயிற்று. அவர்களால் சிறு தொழில் துறையிலோ, சிறு வாணிபத்திலோ ஈடுபட முடியவில்லை. இவைகளில் முஸ்லிம்களும், செட்டியார்களும் பெருமளவில் ஈடுபட்டு வந்தனர்.
சிங்களவர்களுக்கென ஏதாவது தொழில் அல்லது வியாபாரம் வேண்டும்-அதற்கெனச் சிங்களவர்கள் மது வகைகள், கிராஃபைட், தோட்டங்கள் ஆகியவற்றில் தங்களது கவனத்தைச் செலுத்தலாயினர். இவற்றுக்கான மூலதனத்திற்காக சிங்களவர் தமிழர்களையே அண்டி இருக்க வேண்டியதாயிற்று.
கட்டாயத்தின் மூலம் மதமாற்றம், புத்த மடாலயங்களின் ஆதிக்கங்கள், புதிய வகையான பொருளாதார வளர்ச்சிகள், புதிய நிர்வாக நிறுவன உருவாக்கம் போட்டி முதலாளித்துவம், ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை மற்றும் காலனியச் சுரண்டலின் புதிய வடிவங்கள் ஆகிய அனைத்தும் பழைய சமூக வாழ்வைப் பாதித்தன. இதனால் புதிய சமூக வளர்ச்சிகளும் குழுக்களும் உருவாயின.
சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் வெறுப்புற்ற படித்த சிங்கள அறிவு ஜீவிகள் தமிழர் எதிர்ப்பு புத்த கலாசாரத்தை தோற்றுவிக்க முனைந்தனர். இதற்குத் தகுந்தாற்போல் சிங்களவர்க்கென ஒரு கல்வித் திட்டத்தை ஆங்கிலேயர் வடிவமைக்கலாயினர். இதனால் சிங்களவர்கள் மத்தியில் படித்தவர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
நிலத்தை மிகப் பெரிய சொத்தாகக் கருதிய-சிங்கள சமூகத்தில் இருந்த பழைய மதக் கருத்துகள் அனைத்தும் புத்தமதக் கலாசாரக் கருத்துகள் என வடிவம் கொண்டன.
புத்தக் கலாசாரத்தைப் பெரிதும் போற்றிய சிங்களவர் விழிப்புணர்வுக் காலனியாதிக்கத்தின் எதிர்ப்பாகச் செயல்பட்டதா என்றால் இல்லை; அவர்கள் தங்களின் எதிர்ப்பு எல்லையை மிகவும் சுருக்கிக் கொண்டனர்.
ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் விரிவாக வளரவில்லை. அதே நேரத்தில் புத்தமத மறுமலர்ச்சி குறுகிய வகுப்புவாதமாக மாறியது.
""சிங்களம்-ஆரிய மொழியே'' என்ற கோஷத்தை முன்வைத்து அதன் மூலம் சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற கருத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டத் தலைப்பட்டனர். இந்தச் சுட்டிக் காட்டுதல் மூலம் தங்களைத் திராவிட இனத்தவர்க்கு மேலான உயர்குடிப் பிறப்பார் என வாதிக்கலாயினர்.
இது ஒரு மோசமான விஷவிதைதான். எனினும் தங்களது அரசியல் வியூகம் இப்படித்தான் வகுக்கப்பட வேண்டும் என்றே அப்போதைய சிங்கள அறிவுஜீவிகள் விரும்பினார்கள். முன்பு பார்த்த புத்தமதத்தின் மூன்று நம்பிக்கைகளை ஆதாரமாக்கிய இந்த ஆரிய இனவாதத்தினால் சிங்களவர்களுக்கும் பிற மதத்தவர்களுக்குமான புதிய இன மோதல்கள் எழுந்தன.
இதனால் புத்த மதச் சிங்களவர்களுக்கு முன்னர் முஸ்லிம், கிறிஸ்தவர், தமிழர் (இந்து) முதலானோர் அந்நியர்களாக, தாழ்த்தப்பட்டவர்களாகத் தரம் பிரிக்கப்பட்டனர். இந்த ஆரிய இனவாதத்தினால் விளைந்ததே 1904-1912 காலத்தில் விதைத்த இனமோதல் போக்காகும்.
19-ஆம் நூற்றாண்டின், தொடக்கத்தில் சிங்களவர்கள் திடீரென அந்நிய எதிர்ப்புக் கோஷத்தை முன் வைத்தனர். இந்தக் காலக்கட்டத்தில் தங்களுக்குத் துணையாகத் தமிழர்களையும் உடன் சேர்த்துக் கொண்டனர். இந்த அந்நிய எதிர்ப்பு கோஷமானது கிறிஸ்தவர் எதிர்ப்பாக மாறிக் கலவரத்தை ஏற்படுத்தும் அல்லது தூண்டும் அளவுக்குப் போய்விடுகிறது.
இவ்விதத்தில் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுந்த ஆங்கிலேயருக்கு எதிரான தேசபக்த இயக்கம் என்று சொல்லப்பட்டவை அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் வகுப்புவாதமாக மாறியது. அந்த வகுப்புவாதத்தை நியாயப்படுத்த, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் புத்த மதத் தத்துவ முலாம் பூசப்பட்டது. அதற்காகவே தாங்கள் ஆரியர்கள் என்பதற்கானச் சான்றுகளைத் தேடுவதன் மூலம் தங்களுக்கென ஒரு தேசியத் தனித்தன்மையை உருவாக்க முனைந்து செயல்பட்டனர். இப்படி முனைந்து செயல்படுதலின் மூலம் அவர்கள் பின்னால் வரப்போகும் பல கலவரங்களுக்கு அடித்தளம் போட்டுக் கொண்டனர்.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சம் எழுதப்பட்டது. அப்போதிலிருந்து சிங்களவரின் கலாசார உயர்வு, இன ஆளுமை வடிவில் நடந்த கலவரங்கள் பல.
கி.பி. 1279-இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த தமிழ் மன்னன் விக்கிரமசிங்கன் காலத்தில் ஒரு மதக் கலவரம் எழுந்தது. இந்தக் கலவரத்தில் புத்தர்கள் இரண்டு தமிழர்களைக் கொன்றனர். இதற்காகப் பழிக்குப் பழி முடிக்கவென விக்கிரமசிங்கன் கலகக்காரர்களின் தலைவன் புஞ்சிவண்டா என்பவனையும், எதிர்ப்பட்ட பதினேழு சிங்களவர்களையும் கொன்று முடித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
1519-இல் ஆண்ட சங்கிலி மன்னன் ஆட்சிக் காலத்தில் சிங்களவர்கள் வகுப்பு மோதல் ஒன்றில் ஈடுபட்டதால் அவர்களைக் கண்டிக்கு அடித்துத் துரத்தினான்.
அடுத்துத் தென்னிந்தியாவில் வசித்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் ஈழத்து மன்னார் துறையில் 600 பேரைக் கிறிஸ்தவராக மதமாற்றம் செய்தார். இதில் வெறுப்புற்ற மன்னனுக்குப் புத்த பிட்சுகள் மேலும் தூபம் போட்டதன் விளைவாக அவன் 600 பேரையும் கொன்று விடுகிறான்.
இதைக் கேள்வியுற்ற போர்த்துக்கீசியர் அம்மன்னனுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தனர். அது மட்டுமில்லாமல், போர்த்துக்கீசியர் நல்லூர் கீரிமலைப் பகுதி தவிர, இதர பகுதிகளிலிருந்த இந்துக் கோயில்கள் அனைத்தையும் இடித்துத் தள்ளினர்.
1863-இல் தொடங்கி 1880 வரை புத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையே கலகங்கள் தொடர்ந்து நடைபெற்றன.
புத்த பிட்சுகளும் பல கலகங்களுக்குத் தலைமை தாங்கினர் என்பது எமர்சன் டெனண்ட், ஆளுநர் பெüர்னிங் போன்றோரின் குறிப்புகளின் மூலம் தெரிய வருகிறது.
இதில் மிகெத்துவளை குணனந்தா (ஙண்ஞ்ங்ற்ன்ஜ்ஹப்ங் ஓன்ய்ஹய்ஹய்க்ஹ) இககனமா இரத்தினபாலா உனான்சே (ஐட்ஹஞ்ஹம்ஹ தஹற்ய்ஹல்ஹப் மய்ஹய்ஸ்ரீங்)போன்ற புத்த பிட்சுகள் கலகத்தைத் தூண்டியவர்களாக அறியப்படுகிறது.
இந்த பிட்சுகளோடு அப்போது இருந்த மடுகல்லை, கெப்பிட்டிப்பொலை, பீலிமா தல்வா அநகாரிக தர்ம பாலா, பிரியதாசா, பத்தரமுல்லை ஸ்ரீ சுபத்தி போன்றோர்களும் மதக்கலவரத்தில் ஈடுபட்டதற்காகச் சிலருக்கு மரணதண்டனையும் வேறு சிலருக்கு ஆயுள்தண்டனையும் ஆங்கிலேய அரசால் அளிக்கப்பட்டது.
1880-க்குப் பின் ஏற்பட்ட கலவரங்கள் யாவும் மதச் சிறுபான்மையோர் மீதே நடத்தப்பட்டன. இவற்றுக்கான காரணம் என்னவெனில் சிங்களவரிடையே இருந்த வியாபார ரீதியான பகைமை, பொருளாதார ரீதியாக இருந்த தாழ்வு மனப்பான்மை ஆகியவையாகும். 1903, 1904, 1912 ஆண்டுகளில் நடந்த கலவரங்கள்கூட இவற்றையே காட்டுகின்றன.
புத்தப் பேரினவாத கலாசார உணர்வுகளுக்குத் தூபம் போட்டு வளர்க்கப்பட்ட உணர்வுதான் மண்ணின் மைந்தர் கொள்கை. இதனால் புத்தர்கள் அல்லாதவர்கள் அனைவரையும் இலங்கை மண்ணிலிருந்து விரட்டக் கூடிய நிலைக்கு அவர்கள் வந்தனர். இதில் தமிழர்களும் அடங்குவர். இந்நிலைகளுக்கு ஏற்பத்தான் 1948க்குப் பிறகு ஆட்சிமுறையில் பல புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
நாளை: யாழ்ப்பாணத் தமிழரும், மலையகத் தமிழரும்
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=71810&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%22%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-10:+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நாளை: யாழ்ப்பாணத் தமிழரும், மலையகத் தமிழரும்
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=71810&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%22%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-10:+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com