கச்சத்தீவைச் சூழ்ந்து வரும் கடும் புயல்!
இரா. செழியன்
தமிழில் "கச்சம்' என்றால் "ஆமை' என்று பொருள். ஒருவகை ஆமைகள் நிறைந்திருந்த காரணத்தினால் கச்சத்தீவு என்ற பெயர் ஏற்பட்டது. 5 கிலோ மீட்டர் நீளமும், இரண்டரை கிலோ மீட்டர் அகலமுமாக மொத்தம் 255 ஏக்கர் பரப்பளவில் கச்சத்தீவு உள்ளது. சிறியதொரு கடல் திட்டு என்றாலும், கடுமையான புயல் அதனைச் சூழ்ந்து கிளம்பியுள்ளது. கடல் பரப்பில் காற்று அழுத்தம் குறைந்தால் கடும் சூறாவளி எழும். அதைப்போல், இந்திய அரசின் அழுத்தம் குறைந்த, பலவீனம் அடைந்த நிலையில் புயலின் வேகம் பலமாகக் கூடுகிறது.
கச்சத்தீவில் இலங்கை ராணுவத் தளம் ஒன்றை அமைக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை அடுத்து, கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். ""எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க முன்வந்தால் கச்சத்தீவை மீட்க சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரத் தயார்!'' என்று தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதி அதற்கு ஒருவகையான ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.
கச்சத்தீவில் இலங்கை அரசாங்கம் ராணுவத் தளம் அமைக்கப்போவதாக தற்பொழுது வந்திருப்பதைப்போன்ற செய்திகள் கடந்த 40 ஆண்டுகளில் பல தடவைகள் வந்துள்ளன.
1968 பிப்ரவரி 29-ஆம் தேதியில் தில்லி பத்திரிகைகளில், ""இலங்கை ஆதிக்கத்தில் கச்சத்தீவு முழுமையாக அடங்கியிருப்பதால், தனது முழு நிர்வாகத்தையும் அங்கு செயல்படுத்த இலங்கை அரசாங்கம் முற்பட்டிருக்கிறது'' என்ற செய்தி வந்தது. அதனையொட்டி, ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை நான் நாடாளுமன்ற மக்களவை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன்.
என்னைப்போலவே மற்றும் பலரும் அத்தகைய தீர்மானங்களைக் கொடுத்திருந்ததால் குலுக்குச் சீட்டு முறையில் உறுப்பினர் மது லிமாயிக்கு முதலிடம் கிடைத்து, 1968 மார்ச் 1 மக்களவையில் தமது தீர்மானத்தை மது லிமாயி முன்மொழிந்தார். அவருக்குப் பிறகு, என் போன்றவர்களுக்கு அவையில் பேச வாய்ப்புத் தரப்படும் நிலைமை இருந்தது.
எழுப்பிய பிரச்னைக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பி.ஆர். பகத் பதில் அளித்தார்: ""பத்திரிகை செய்தி குறித்து, இலங்கை அரசுடன் கலந்து விவரம் தெரிவிக்குமாறு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தைக் கேட்டுள்ளோம். உண்மை விவரங்கள் கிடைத்ததும் தெரிவிக்கிறோம்.''
அன்றைய விவாதத்தில் இந்திய ஆதிக்கத்திலுள்ள தீவுகள் பற்றி மற்ற நாடுகளிலும் அதிரடிச் செய்திகள் அடிக்கடி வருவதாக உறுப்பினர்கள் சிலர் கேள்விகளை எழுப்பினார்கள். கச்சத்தீவு பிரச்னையை மட்டும் விவாதிக்குமாறு அவைத்தலைவர் கூறினார்.
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் பேராசிரியர் சி.ஜி. ஸ்வெல் கேட்டார்: ""1956-ல் இருந்தே கச்சத்தீவு பற்றி இந்தியாவுக்குள்ள உரிமைக்குப் போட்டியாக இலங்கை அரசாங்கம் பிரச்னை எழுப்புவதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. அப்படியென்றால், தனது உரிமையை நிலைநிறுத்திக் கொள்ள இந்தியா ஏன் இதுவரை தக்க முயற்சி எடுக்கவில்லை?''
அதற்கு இணை அமைச்சர் பகத் பதில் அளித்தார்: ""இதற்கு முன்னதாகவே, 1921-ல் இருந்தே கச்சத்தீவு பற்றிய பிரச்னை இருந்து வருகிறது. கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்று கவனித்துப் பார்த்தால், அந்தத் தீவில் யாரும் குடியிருக்கவில்லை. மனித சஞ்சாரமே கிடையாது. குடிக்கத் தண்ணீர்கூட அங்கு கிடைக்காது. ஆகையால் அது யாருக்குச் சொந்தம் என்று கூற முடியாது.''
பத்திரிகைச் செய்திகள் கிளப்பிய அதிர்ச்சியைவிட அதிகமான அதிர்ச்சியை அமைச்சரின் பதில் அவையில் உண்டாக்கியது. வழக்கமாக, எத்தகைய கடினமான கேள்வியைப் போட்டாலும், அதற்கு குழப்பமான, எதிர்பாராத திருப்பங்களை உடைய விவரங்களைத் தேடிப்பிடித்துத் தந்து, கேள்வி கேட்பவர் மறுகேள்வி கேட்க முடியாதபடி திக்குமுக்காடச் செய்யும் வகையில் பதில்களைத் தயாரிப்பதில் திறமை படைத்த அதிகாரிகள் இந்திய நிர்வாகத்தில் இருக்கிறார்கள். இப்படி ""கச்சத்தீவு எந்த நாட்டு ஆதிக்கத்திலும் இல்லை'' என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதும், எதிர்க்கட்சியினர் ஆவேசமாகக் கிளம்பினார்கள். என்ன செய்வது என்று புரியாமல் ஆளுக்கட்சியினர் திகைத்து உட்கார்ந்திருந்தார்கள்.
திகைப்பு, கூச்சல். ஒரே சமயத்தில் பல குரல்கள்! ஒன்றையொன்று மிஞ்சும் வகையில். விவாதத்தில் கலந்துகொள்ள இருந்த மற்றவர்களைப் பேச யாரும் விடவில்லை. இவ்வளவுக்கும் இடையில் பேராசிரியர் ஸ்வெல் தமது குரலை உயர்த்தி மீண்டும் கேட்டார்: ""நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லை! அந்தத் தீவில் தண்ணீர் இல்லையென்று ஏதோ ஒரு பதிலைத் தந்து நான் கேட்ட கேள்வியை அமைச்சர் திசை திருப்புகிறார். நான் கேட்டது எந்த அரசின் ஆதிக்கத்தில் கச்சத்தீவு இருக்கிறது என்பதுதான்!''
இந்தத் துணைக் கேள்விக்கு இணை அமைச்சர் ஆங்கிலத்தில் தந்த பதில் அப்படியே இங்கு தரப்படுகிறது:
Shri B.R. Bhagat: I said that it is neither under the possession of India nor of Ceylon... (Interruptions).
அமைச்சர் கூறியதன் தமிழாக்கம்: பி.ஆர். பகத்: ""நான் கூறியது, அந்தத் தீவு இந்தியாவின் ஆதிக்கத்திலும் இல்லை, இலங்கை ஆதிக்கத்திலும் இல்லை என்பதுதான்!'' (அவையில் அமளி).
அவையில் எழுந்த கூக்குரல் மேலும் அதிகமானது. யார் சொல்வதும் யாருக்கும் கேட்கவில்லை! அவைத் தலைவர் டாக்டர் ஜி.எஸ். தில்லான் அமைதிப்படுத்த முயன்றார். முடியவில்லை. கடைசியாக பிரதமர் இந்திரா காந்தியைப் பார்த்து, ""நீங்கள் ஏதாவது விளக்கம் தர முடியுமா?'' என்று கேட்டார். இதற்கிடையில் அரசாங்க அதிகாரிகள் சில குறிப்புகளை எழுதிப் பிரதமருக்கு அனுப்பியது எங்களுக்குத் தெரிந்தது.
பிரதமர் இந்திரா காந்தி எழுந்து, அமைச்சர் கூறியதுபோல் எழுப்பப்பட்ட பிரச்னை குறித்து முழு விவரங்கள் இல்லை என்றும், இலங்கை அரசுடன் நல்ல நட்புறவுடன் இந்தியா இருக்கிறது என்றும், விவரங்கள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், மேற்கொண்டு ஏதாவது கூறுவது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும் என்றும், விவரங்கள் கிடைத்ததும் மேற்கொண்டு அரசாங்கம் அவைக்கு விரிவான அறிக்கையைத் தரும் என்றும் சொன்னார்.
அரசாங்க அதிகாரத்துக்கு நீண்டகாலமாக உட்பட்டுள்ள பகுதிகள் பற்றிய விவரங்களைக்கூட உடனடியாகத் தர முடியாமல், விவரங்களை இனிமேல்தான் திரட்டுவதாக அரசாங்கம் கூறுவதை எதிர்க்கட்சியினர் கண்டித்தார்கள். விவரங்கள் கிடைத்ததும் மீண்டும் அவை அவற்றை ஆராயலாம் என்று அவைத் தலைவர் ஒருவாறு விவாதத்தை முடிவு செய்தார்.
நிலைமையைச் சமாளிக்க 1968 மார்ச் 4-ல், கச்சத்தீவு பற்றிய இந்தியாவின் உரிமையில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் எதிர் நடவடிக்கைகளை எதையும் எடுக்கவில்லை என்றும் பிரதமர் இந்திரா காந்தி ஓர் அறிக்கையை அவை முன்வைத்தார்.
இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் ஒரு செய்தியில் அரசாங்கம் கோமாளித்தனமான பதிலை முன்வைத்தது பலமான கண்டனத்தையும், அரசின் வெளிநாட்டுக் கொள்கையின் பலவீனத்தையும் வெளிப்படுத்தியது. மக்கள் அவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால் எதைப்பற்றியும் ஆளுங்கட்சியினர் கவலைப்படுவது இல்லை என்றாலும், அரசாங்கத்தைப் பற்றி நாட்டு மக்களுக்கு இருந்த நம்பிக்கையும், உலக அரங்கில் இருந்த மதிப்பும் குறைந்துவிட்டன.
மீண்டும் கச்சத்தீவு பற்றி நாடாளுமன்றத்தில் அவ்வப்பொழுது கேள்விகள் கேட்கப்பட்டாலும், ""இலங்கை அரசுடன் நட்புமுறையில் நிலைமைகளைப் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். நல்ல முறையில் இருநாடுகளிடையே அமைதியையும் நட்பையும் வலுப்படுத்தும் வகையில் விரைவில் முடிவுகளை எடுப்பது பற்றி அரசாங்கம் கவனித்து வருகிறது'' என்று மத்திய அரசு சார்பில் திரும்பத் திரும்ப பதில்களும், சமாதானங்களும் தரப்பட்டன. அரசாங்க அறிவிப்பில், "விரைவில்' என்பதற்கும், "கவனத்தில் இருக்கிறது' என்பதற்கும், வரையறுக்கப்பட்ட கால அளவு கிடையாது. இந்தியா ஏதோ ஒரு சிக்கலில் அகப்பட்டுள்ளது என்பது மட்டும் வெளிப்பட்டது.
1967 மே மாதத்தில் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற டாக்டர் ஜாகீர் ஹுசைன் 1969 மே மாதத்தில் இறந்ததும், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில், காங்கிரஸ் தலைமைக்கும் பிரதமர் இந்திரா காந்திக்கும் ஏற்பட்ட போட்டியில், காங்கிரஸ் வேட்பாளர் என். சஞ்சீவ ரெட்டி தோற்கடிக்கப்பட்டு, இந்திரா காந்தி ஆதரித்த வி.வி.கிரி வெற்றி பெற்றார். அதன்பிறகு, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரு பிரிவுகளாகப் பிளவுபட்டது. தமிழ்நாட்டில் பழைய காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலோர் பெருந்தலைவர் காமராஜ் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து இருந்தனர்.
1970 பொதுத் தேர்தலில், "கரிபி ஹட்டாவ்' (ஏழ்மையை ஒழிப்போம்) என்ற முழக்கத்துடன் இந்திரா காந்தி பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். அதனை அடுத்து கிழக்கு வங்காளப் பகுதியில் ஏற்பட்ட மோதலில், பாகிஸ்தான் தோல்வி அடைந்து, இந்திய உதவியுடன் முஜிபுர் ரகுமான் தலைமையில் பங்களாதேஷ் தனிநாடாக அமைந்ததும், இந்திரா காந்தியின் செல்வாக்கும், எதையும் செய்யலாம் என அவர் அரசாங்கம் எடுத்த முயற்சிகளும் வலிவடைந்தன.
பங்களாதேஷ், பர்மா, இந்தோனேஷியா போன்ற நாடுகளுடன், எல்லைக் கோடுகளையும், கடல் ஆதிக்கத்துக்கான வரையறைகளையும் நிர்ணயிக்கும் உடன்பாடுகளை இந்திய அரசாங்கம் செய்தது. அதில் ஒன்றாக இந்தியா - இலங்கை இடையிலுள்ள பாக் ஜலசந்தியில் புதிய எல்லைக் கோடுகளை மாற்றி அமைக்க இந்தியா முற்பட்டது.
அதன் விளைவாக எழுதப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கையில் 1974 ஜூன் 26 - 28 தேதிகளில், இந்தியாவின் சார்பாக இந்திரா காந்தியும், இலங்கை சார்பாக சிரிமாவோ பண்டாரநாயகாவும் கையெழுத்திட்டனர். அப்பொழுது 1974 பிப்ரவரி - மே மாதங்களில் வரவு - செலவுத் தொடர் கூட்டத்தை முடித்து நாடாளுமன்றம் விடுமுறையில் இருந்தது. அடுத்த தொடர்கூட்டம் ஜூலை 22-ல் தொடங்கியது. இந்திய - இலங்கை உடன்படிக்கை ஜூலை 23 நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என்று எங்களுக்குத் தெரியவந்தது.
உடன்பாடு பற்றிச் சில குறிப்புகள் பத்திரிகைகளில் வெளிவந்தாலும் நாடாளுமன்றத்தில் உடன்படிக்கை அதிகாரபூர்வமாக வைக்கப்பட்ட பிறகுதான் முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. இதற்கிடையில் இந்திய - இலங்கை உடன்படிக்கையில், குறிப்பாக, கச்சத்தீவு பற்றிய எந்த விவரங்களையும் தமிழக முதல்வர் கருணாநிதியிடமோ, மாநில அரசாங்கத்துடனோ, மத்திய அரசு எந்த வகையிலும் கலந்து ஆலோசனை செய்யவில்லை என்பது நாடாளுமன்றத்திலுள்ள திமுகழக உறுப்பினர்களாகிய எங்களுக்குத் தெரியவந்தது.
1974 ஜூலை 23 அன்று இந்திய - இலங்கை உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுவரன் சிங் முன்வந்தபொழுது, நாடாளுமன்ற தி.மு. கழகத் தலைவரான நான் அதனை எதிர்த்துப் பேசியதாவது: ""இந்த உடன்படிக்கையைத் தயாரிப்பதற்கு முன்னதாக இந்த நாடாளுமன்றத்தையும், சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். இந்தியாவில் ஒரு பகுதியை மற்றொரு நாட்டிடம் ஒப்படைப்பது என்பது மிகக் கீழ்த்தரமான செயலாகும். அண்டை நாடான இலங்கைத் தீவுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தையும், இறையாண்மை உரிமைகளையும் உதறித் தள்ளுவது சரியல்ல. இது, எந்த அரசாங்கத்தாலும் நினைத்துப் பார்க்க முடியாத கேவலமான, படுமோசமான பாதகச் செயலாகும். இந்தக் கீழ்த்தரமான உடன்படிக்கையைச் சிறுதுளியும் ஏற்றுக்கொள்ளாத நாங்கள் அவையின் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமல் வெளியேறுகிறோம்.''
அண்ணா தி.மு.க.வில் சேர்ந்திருந்த கி. மனோகரன் பார்வர்டு கட்சியின் பி.கே. மூக்கையா தேவர், இந்திய முஸ்லிம் லீகின் முகமது ஷெரீப், சுதந்திரா கட்சியின் பி.கே. தேவ், சோஷியலிஸ்ட் கட்சி மது லிமாயி, பாரதீய ஜன் சங் தலைவர் வாஜ்பாய் ஆகியோர் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வெளியேறினார்கள்.
உடன்படிக்கை வைக்கப்பட்டதற்கு மறுநாள், ஜூலை 24, 1974 அன்று அரசாங்கத்தின்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் கச்சத்தீவை இலங்கையிடம் சரணடையச் செய்த இந்தியாவின் போக்கை தி.மு. கழகம் உள்பட்ட எதிர்க்கட்சிகள் கண்டித்தன.
1975 ஜூன் 25-ம் தேதி நெருக்கடிகால பிரகடனத்தின்கீழ் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் கச்சத்தீவு உள்பட்ட பல சீர்கேடுகளையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. 1974 உடன்படிக்கை போதாதென்று 1976 மார்ச் 23-ம் தேதி மற்றொரு உடன்படிக்கையின் மூலம் மன்னார் வளைகுடாவில் உள்ள வட்கே பாங்க் பகுதியில் மூன்றாண்டு காலத்துக்கு மீன் பிடிக்கும் உரிமையை இலங்கை மீனவருக்கு வழங்கியதுடன், மூன்றாண்டு காலத்துக்குப் பிறகு ஆண்டுக்கு 2000 டன் அளவுக்கு உயர்தர மீன்களை இலங்கைக்கு உடன்பாடான விலையில் விற்க இந்தியா ஒப்புதல் அளித்தது. இரண்டாவது உடன்படிக்கையைப் போட்டபொழுது தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஆட்சியின்கீழ் மத்திய அரசு நேரடியாக மாநில நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தியது. ஆக, தன்போக்கில் மத்திய அரசு இலங்கை அரசுக்கு இந்திய - தமிழ்நாட்டு உரிமைகளை அடிமைப்படுத்துவது தொடர்ந்தது.
பல நூற்றாண்டுகளாக, தமிழகத்துக்கு உள்பட்ட ஒரு பகுதியாக, 1947-ல் ஆங்கிலேயர்கள் வெளியேறிய காலத்தில்கூட, ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு உள்பட்டு கச்சத்தீவு இருந்தது.
மேலும், 1974 ஜூலை 24-ல் நாடாளுமன்றத்தில் பேசிய வந்தவாசி உறுப்பினர் ஜி. விஸ்வநாதன், 1824-ன் ராமநாதபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவு பற்றிய ஆவணங்களின் நகல்களை அவை முன் வைத்தார். 1880-ல் இலங்கை அரசாங்கம் தயாரித்த நில வரைபடத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள சிறு சிறு தீவுகள் பலவற்றின் விவரங்கள் தரப்பட்டபொழுது, இலங்கையின் வட மாநிலங்களுக்கு உள்பட்டதாக கச்சத்தீவு காட்டப்படவில்லை. இதுபற்றி அப்பொழுது இலங்கை அமைச்சரவை செயலாளராக இருந்த பி.பி. பியரிஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி பின்வரும் குறிப்பை எழுதி வைத்துள்ளார்: ""இலங்கை வட மாநிலங்களின் எல்லைகளை வரையறுக்கும் கோப்புகளை நான் பார்வையிட்டபொழுது, இலங்கை ஆதிக்கத்துக்கு அப்பாற்பட்டு கச்சத்தீவு இருந்ததுடன், அது ராமநாதபுரம் ராஜாவுக்குச் சொந்தமானது என்பது தெளிவாகத் தெரிகிறது.''
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க. அரசின் கோரிக்கை 2001, மார்ச் 25-ல் ஆளுநர் உரையில் குறிப்பிடத்தக்கது. இதனையொட்டி எழுந்த பிரச்னைக்கு எதிர்ப்பாக மே 2-ல் இலங்கை அமைச்சர் ஒருவர் கூறிய ஆங்கில அறிவிப்பு கீழே தரப்படுகிறது:
‘‘It is impossible to give it (Katchatheevu) back to them as it has been recognised by the international community as an integral part of our country since it was handed over by late Indira Gandhi.’’
இந்த அறிவிப்பை வெளியிட்டவர் யார் தெரியுமா? இலங்கையின் அப்போதைய மீன்வள மற்றும் கடல்துறை அமைச்சராக இருந்த மகிந்த ராஜபட்ச என்பவர். அவர்தான் இலங்கையின் தற்போதைய குடியரசுத் தலைவராக இருக்கிறார். எந்த ஆதாரத்துடனும் கச்சத்தீவை இலங்கை பெறவில்லை என்பதுடன், இந்திரா காந்தி பார்த்து இலங்கைக்குக் கொடுத்ததுதான் கச்சத்தீவு என்பதை இலங்கையின் குடியரசுத் தலைவரே நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார்!
தொடக்கத்திலிருந்து இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்கும்பொழுது, சட்டத்தை மீறி, நாட்டின் இறையாண்மையை மீறி, நாட்டு மக்களின் விருப்பத்துக்கு எதிராக, தமிழ்நாட்டு மக்களின் - மீனவர்களின் வேண்டுகோள்களை மீறி எவ்வித அடிப்படையும் இல்லாமல் கச்சத்தீவை இந்திய அரசாங்கம் இலங்கையிடம் ஒப்படைத்தது முற்றிலும் தவறான ஒன்று என்பது தெரிகிறது.
1947-ல் விடுதலைக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் தனிநாடுகளாகப் பிரிந்தபொழுது, எல்லையோரத்தில் இருந்த சில பகுதிகளைப் பரிமாற்றம் செய்யத் தலைப்பட்டதில், மேற்கு வங்காளத்தில் இருந்த பெருபாரி பகுதியின் ஒரு பாதியை இந்தியா 1958 உடன்படிக்கை மூலம் பாகிஸ்தானுக்குத் தந்தது. இதனை மேற்கு வங்காள மக்களும், மாநில அரசாங்கமும் எதிர்த்தன. கடைசியில் சட்ட நிலைமையைக் கவனித்திட, உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் ஒரு பார்வைக் குறிப்பை அனுப்பினார். அதன்மீது நடைபெற்ற வழக்கில், நாட்டின் ஒரு பகுதியை நீக்கி வெளிநாட்டுக்குத் தருவதை அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் மட்டுமே செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெருபாரி வழக்கின் முடிவுபோல, கச்சத்தீவை இலங்கைக்குத் தருவதில் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாகத்தான் இந்தியா செயல்பட்டிருக்க வேண்டுமே தவிர, இந்தியப் பிரதமர் மட்டுமே கையெழுத்திட்ட உடன்படிக்கைக்கு எத்தகைய மதிப்பும் சட்டபூர்வமாகக் கிடையாது. அவ்வாறு முறைப்படி செய்யாதவரை, கச்சத்தீவு, இன்றளவும், என்றளவும், தொடர்ந்து இந்திய ஆதிக்கத்தில் அதன் இறையாண்மைக்குட்பட்டுதான் இருந்து வருகிறது.
http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=80867&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D!
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com