'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
'அபிதா'…
- இது இலங்கை அரசுக்குச் சொந்தமான கப்பல். காங்கேசன் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த இந்தக் கப்பலைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது புலிகளின் திட்டம். ஏற்கெனவே ஒருமுறை புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிய கப்பல்தான் இது.
"நான் கப்பலை அடிக்கறப்ப… நல்லூர் முருகனுக்கு திருவிழா நடக்கும் காலமாய் இருக்கவேணும். ஏனெண்டால், அப்பத்தான் கடலை வித்து காசு வைச்சிருப்பா அம்மா. நீங்க என் சாவு செய்தியை அவகிட்ட சொல்லும்போது அவாளால ஒழுங்கா சோறு சமைச்சு சாப்பாடு போட முடியும்…"
- 'கேப்டன் அங்கயற்கண்ணி' என்றழைக்கப்படும் புஷ்பகலா துரைசிங்கம், தன் தோழிகளிடம் இப்படி சொல்லிக்கொண்டே இருப்பாள். சொன்னது போலவே 94-ம் வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் உடல் முழுக்க வெடிகுண்டுகளோடு நெடுந்தூரம் கடலில் நீந்திச்சென்று, அந்தக் கப்பலை மோதித் தகர்த்தாள். அவள்தான், தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முதல் பெண் கடற்கரும்புலி!
1985 ஆவணி 18… விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி அதிகாரப்பூர்வமாக கொடியேற்றித் தொடங்கப்பட்ட நாள். அதற்கு முன்பு புலிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்வது, இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்க நாடகங்கள் போடுவது என்ற அளவில் மட்டும் உதவிக் கொண்டிருந்தனர் பெண்கள்.
அன்றிலிருந்துதான் ஆயுதம் ஏந்தி நேரடியாக களத்துக்கு வந்தனர். வாழ்வைக் கொண்டாட வேண்டிய பதினெட்டு, இருபது வயது பருவத்தில், இளமையை தொலைத்து 'எம் இனத்துக்கு ஒரு தேசம் வேண்டும்' என்று தாயகக் கனவுகளை நெஞ்சில் சுமந்து, கையில் ஆயுதம் ஏந்திய பெண்கள் அவர்கள்.
இந்தப் பெண்களின் பெருமுயற்சியால் மட்டுமே விடுதலைப் புலிகள் வென்ற போர்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது 'ஜெயசிக்குறு' என்று அழைக்கப்படும் போர். நிலப்பகுதியை இரண்டாகப் பிரிக்கும் ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான சிங்களப் படையினரும், ஆயிரக்கணக்கான புலிகளும் ஈடுபட்டனர். அதில் ஏராளமானனோர் பெண் புலிகள்.
அது ஓரிரு நாளில் முடிந்த போரல்ல… ஒன்றரை வருடங்களைத் தாண்டியும் நீண்ட போர். மழைக் காலங்களில் பதுங்கு குழிகளுக்குள் தண்ணீர் நிறையும். கழுத்தளவு தண்ணீரில் நாள் கணக்கில் நின்று எதிரிக்கு குறி வைக்க வேண்டும்.
நூற்றுக்கணக்கான பதுங்குக்குழிகளை பெண்களே வெட்ட வேண்டும். இறுதியில் ஏ-9 நெடுஞ்சாலை புலிகளின் வசமானது. அந்த வெற்றியின் முழுப் பெருமையும் பெண் புலிகளையே சேரும்.
இவை, பெண் புலிகளின் தரைப்படை தாக்குதல்கள். இதுதவிர… பெண் கடற்புலிகள், பெண் வான்புலிகள் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சகல பலங்களிலும் பெண்கள் சம பங்குடன் இருந்தார்கள்.
இன்றைக்கு விடுதலைப் புலிகள் பெருமளவில் சிதறடிக்கப்பட்டிருக்கும் நிலையில், புலிப்பெண்களின் உடல்கள், வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதியிலும் நந்திக்கடல் பகுதியிலும் பிணங்களாக மிதந்து கொண்டிருக்கின்றன – கனவு ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு!
முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com