'என் தேசத்து மண்ணே!
உனக்கு என் ரத்தத்தை தருவேன்.
இந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்...'
அலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இறந்தாரா இல்லையானு மர்மம் ஈழத்தமிழர்களைத் தூங்க விடாம பண்ணிட்டிருக்கிற நேரத்தில் பிரபாகரன் எனக்கு எப்படி தொடுவானம் ஆனாருன்னு யோசிச்சேன். நாம தொடணும் நினைக்கிற, ஆனால் தொடமுடியாத வானமா இருக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை. சரி, தவறு முடிவுகளைத் தாண்டி பிரபாரகனின் வாழ்வுக்கும் அர்த்தம் இருக்கு. மரணத்துக்கும் பெருமை இருக்கு.
கன்னடாதான் எனக்கு தாய்மொழி. இந்தியாதான் என் தாய்நாடு. இலங்கையில் தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும். அடக்கு முறை உங்களை எந்தத் திசையில் செலுத்தும்னு யாருக்கும் தெரியாது. எல்லா வசதிகளோடும், வாய்ப்புகளோடும் வாழுற நமக்கு நம்பிக்கையான நாலுபேரை சேர்க்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு. ஆனா, பிரபாகரன் பின்னால் உயிரை துச்சமா மதிக்கும் பெரிய இளைஞர் கூட்டம் சேர்ந்ததுக்கு முக்கியமான காரணம், அவர்கிட்டே இருந்த அர்ப்பணிப்பு உணர்வுதான். ஒரு பேட்டியில் முதன்முதலா நான் அவரை கவனிக்க ஆரம்பிச்சேன்.
''புல்லைக்கூட மிதிக்கக்கூடாது நினைக்கிற அப்பாவுக்கு மகனா பிறந்து நீங்க, வன்முறையைக் கையில் எடுக்கலாமா?''னு கேள்வி கேட்கிறார் நிருபர். 'புல்லும் துன்பப்படக்கூடாது'னு நினைக்கிறவருக்கு ஒரு பையன் எப்படி இருக்கணுமோ அப்படித்தான் நான் இருக்கிறேன்' என்பது பிரபாகரனின் பதில். சக மனிதர்கள் துன்பப்படும்போது அதைப் பொறுத்துக்கொள்ளாத இயல்புதான் அவரின் மாபெரும் கௌரவம். அதை சிந்தனையா மட்டும் வெச்சுக்காம உயிரைப் பணையம் வைத்து மக்களின் துன்பத்தை நீக்க போராடியது அவரின் பெருமிதம்.
குழந்தை இயேசுவை பிரதிபலித்த ஒரு முகம், முப்பது வருஷத்துக்குப் பிறகு, இயேசுவை சிலுவையில் அறைந்தவனின் கொடூர முகத்தை பிரதிபலித்ததுனு ஒரு கதை கேட்டிருக்கோம். துப்பாக்கி தூக்கி ஒரு வாழ்க்கை நடத்தணும்னு பிரபாகரனுக்கோ, ஆயுதம் தூக்கிய புலிகளுக்கோ பிறக்கும்போதே இலட்சியம் இருந்திருக்க முடியாது.
என் அம்மா தீவிரமான கிறிஸ்டியன். இப்பவும் இயேசுவைத் தவிர அவளுக்கு வேற உலகம் தெரியாது. தலைவலி வந்தாலும் இயேசு கிறிஸ்துதான் முதல் டாக்டர். வாரம் தவறாம சர்ச்க்குப் போறதும், நாள் தவறாம பிரார்த்தனைப் பண்றதும் எனக்கு பழக்கமான விஷயம். நியாயமா நானும் தீவிரமான கிறிஸ்டியனா மாறி இப்ப வாரம் தவறாம சர்ச்சுக்கு போகவேண்டியவன். ஆனா, சின்ன வயசுல ஏற்பட்ட அனுபவங்களால், சர்ச் எனக்கு அலர்ஜியாகிடுச்சு. நான் படிச்ச கிறித்துவ பள்ளியில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சிஸ்டரை எப்பவும் பெரிய மூங்கில் குச்சியோடுதான் பார்த்திருக்கேன். என்னுடைய சின்ன சின்ன தவறுகளுக்கு அவங்களுடைய முரட்டு அடி, என் பாதங்களில் பட்டி உயிர்ப்போகிற வலி தெறிக்கும். அடிச்சவங்ளே, 'அன்பான இயேசுவும் தூரமாகிட்டார். ஜெபமும் தூரமாகிடுச்சு.
எனக்கு ஏற்பட்ட சின்ன சின்ன கசப்பான அனுபவங்களே என் கடவுள் நம்பிக்கை தீர்மானித்து, இப்ப வரைக்கும் சர்ச் மேல அலர்ஜி இருக்கு.
நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ எல்லாத்துக்குமே நாம சின்ன வயசில் கேட்டு வளர்கிற விஷயங்களுக்கு, நம்ம குணத்தைத் தீர்மானிக்கிற சக்தி உண்டு. காந்தி அதற்கு சிறந்த உதாரணம். துப்பாக்கி வெச்சிருந்த வெள்ளைக்காரங்களை காந்தி அகிம்சையால எதிர்க்கலையான்னு நிறையபேர் கேட்கிறாங்க. சின்ன வயசுல அரிச்சந்திரன் கதையைக் கேட்டு, 'உண்மையை மட்டும் பேசுவது' என்று முடிவெடுத்தார் காந்தினு படிக்கிறோம். ஒவ்வொருத்தரோட பால்ய வயதில் எந்த விஷயம் பாதிக்குமோ அதுவாகவே மாறிப்போகிறதுதான் இயற்கை. உலகம் முழுக்க லட்சக்கணக்கான உதாரணம் இருக்கு. மனிதர்களை மாடுமாதிரி வேலிப்போட்டு அடைத்து கதற கதற அடித்து கொன்ற ஜாலியன் வாலாபாக் கொடுமையை நேரடியா பார்த்து வளர்ந்த ஒரு சின்னப் பையன் பகத்சிங்கா மாறத்தான் செய்வான். உலகத்துக்கு அது நியாயமா இல்லையானு விவாதிக்கலாமே தவிர, பகத்சிங் உருவாவதை யாரும் தடுக்க முடியாது.
கேட்டு வளர்ந்த கதையே காந்தியைப் பாதிக்கும்போது, பிரபாகரன் பார்த்து வளர்ந்த துயரம் அவரைப் பாதிக்காதா? கண்ணுக்கு முன்னால ஒரு தவறும் செய்யாத கோயில் குருக்களை உயிரோடு எரித்ததைப் பார்த்த சின்னப் பையன் மனதில் வன்முறை விதைக்கப்படுவதை தடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? சாதாரண ஒரு ஃபுட்பால் மேட்சில் பிரான்ஸ் கால்பந்து வீரர் ஜிடேன், சக விளையாட்டு வீரரை தலையால் வன்மத்தோடு முட்டியதை நிறைய சின்னக் குழந்தைகள் பார்த்திருப்பாங்கன்னு அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டார். அந்த நிகழ்வால் பிள்ளைகள் மனதில் வன்முறை விதை விழும்னு உலகமே பதறுச்சு. 'அக்கா, அக்கா'னு பேசிக்கிட்டிருந்த ஒருத்தியை சீரழித்து கொலை செய்கிற காட்சியை ஒரு சிறுவன் பார்த்தா என்னா ஆகுமோ, அதுதான் பிரபாகரன். ஒரு பிரபாகரனை ஜெயிக்கிறதுக்காக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிச்சிருக்கு இலங்கை அரசு. உலகமே வேடிக்கைப் பார்க்க, விலங்குகளைவிட மோசமாக வேட்டையாடப்பட்டார்கள் ஈழத்தமிழர்கள். அதை பல சின்னக் குழந்தைகள் நேர்ல பார்த்திருக்காங்களே நினைக்கும்போது ஈரக்குலை அதிருது. இன்னும் நூறு பிரபாகரன்கள் உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிற அரசாங்கத்தின் அதிகார அறியாமையை என்ன சொல்றது?
'ரொம்ப கொடூரமான சர்வாதிகாரி பிரபாகரன்'னு சொல்றாங்க. இனவெறியில் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் இல்லை அவர். இன மக்கள் துன்பப்படும்போது அவர்களுக்காக கடைசிவரை களத்தில் நிற்க நினைக்கிற போராளி. தாக்குதல் அல்ல பிரபாகரனின் நோக்கம். தற்காப்பு மட்டுமே. பாம்பின் விஷம்கூட தற்காப்புக்கான ஆயுதமா மாறும். விஷம் கொடுமையானது என்பதில் கருத்து வேறுபாடு யாருக்கும் இல்லை. சம உரிமையை இலங்கை தமிழர்களுக்கு உறுதி செய்திருந்தால் எதற்காக இந்த வன்முறை?
தனிப்பட்ட மனிதனின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இருக்க எல்லா வாய்ப்பும் இருக்கு. ஆனால், ஒரு சமூகத்தின் மொத்த கோபமும் ஒண்ணு சேருதுன்னா, அதில் நூறு சதவீதம் நியாயம் இருந்தே தீரணும். அதை ஆதாரங்கள் தேடி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் அடிமட்ட வேலைகள் செய்து சேர்க்கும் காசுல, பெரிய பங்கை தன்னுடைய போராட்டத்துக்கு அனுப்பறாங்கன்னா அதில் எப்படி நியாயம் இல்லாம இருக்கும்?
ஆயுதம் தாங்கிய இயக்கம் எப்படி ராணுவம் மாதிரி எதிர்தாக்குதல் நடத்தலாம்னு கேட்கிறாங்க. அடிக்கிறதுதான் அராஜகம். திரும்பி அடிக்கிறது தற்காப்புதான். உலகம் முழுவதும் தன்னுடைய ராஜாங்கத்தை பரப்பி அதில் மன்னனா முடிசூடணும்னு நினைக்கிற வல்லரசு தோரணை பிரபாகரன்கிட்டயோ, அந்த போராட்டத்திலோ இல்லை. தன்னுடைய வேரை, அடையாளத்தைப் பாதுகாப்பதுதான் முதன்மை நோக்கம். அதில் வெறும் லட்சியவாதியாக மட்டும் இல்லாமல், தேர்ந்த செயல்வீரனாவும் இருந்தார் பிரபாகரன். சொந்த மண்ணில் வேரைக் காக்கும் போராட்டத்தில் இறந்து போறவங்களும் வேராகிடுறாங்க.
கொள்கைக்காக, லட்சியத்துக்காக சாகவும் தயாரா கழுத்தில் எப்பவும் சயனைடு குப்பியோடு இருந்த பிரபாகரன் இப்பவும் எப்பவும் இளைஞர்களுக்கு ரோல்மாடல்தான். என்னுடைய மகன் உயிரோடு இருந்தால், பிரபாகரன் கதை சொல்லி, 'உன்னுடைய ரோல்மாடலா அவ'னு சொல்ற அளவு நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்திருக்காரு. லட்சியத்துக்காக உயிரைத் துச்சமாக மதித்த சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சுகதேவ் எல்லாமே நாம கேட்டு வளர்ந்த ஹீரோக்கள், பிரபாகரன் நாம பார்த்து வளர்ந்த ஹீரோ, ஒரு வேளை அவர் இறந்திருந்தால், அவரைபோன்றவர்கள் நம் கண் முன் இறந்துபோக சம்மதிச்சோம் என்பது நம்முடைய அவமானமே தவிர அவருக்கு அது வீர மரணம்தான்.
முப்பது வருஷத்துக்கு மேல் ஒரு இயக்கத்தை, அதுவும் உலகமே தடைவிதித்த ஒரு இயக்கத்தை கட்டிக் காத்ததும், வெற்றி பெற்றதும் சாதாரண காரியம் இல்லை. பிரபாகரனைப் போன்ற அர்ப்பணிப்பு உள்ள தலைவர்கள் பெற்றெடுக்கிற ஈரம், ஈழத்தமிழ் மண்ணுக்கு இருக்கிறதே பெருமையான விஷயம்.
''வன்னியில் நடந்த குண்டுப்வெடிப்பில்
ஐந்துபேர் பலியானார்கள்.
ஐம்பதுபேர் புலியானார்கள்''னு
ஒரு கவிதை படிச்சேன். அதில் இருக்கிற வார்த்தை நயங்களைவிட, கருத்து உண்மைகளுக்கு காந்தம் அதிகம். உண்மை கசப்பா இருந்தாலும் ஒத்துக்கிட்டுதான் ஆகணும். விரும்பி சுமந்த சிலுவை இயேசுநாதரை உருவாக்கலாம். திணிக்கப்பட்ட சிலுவைகள் பிரபாகரன்களைதான் உருவாக்கும். சும்மா, 'உச்' கொட்டிக்கிட்டே இல்லாம..
இன்னும் தொடருவேன்...
நன்றி: தெனாலி.காம் http://www.thenaali.com/thenaali.aspx?A=192
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com