எம் மூத்த மகன் பிரபாகரன் - சீமானின் தாய் அன்னம்மாள்
`படுபாவி ராஜபக்ஷே போரை நிறுத்துறேன்னு சொல்லிப்போட்டு கூட்டம் கூட்டமா நம்மாளுகளை கொல்றானேய்யா. இந்த காக்கா குருவியைவிட நம்ம உசுருக ஈனமாயிடுச்சு. எப்பையா இதுக்கெலாம் தீர்வு கெடைக்கும். நம்ம வாழ்க்கைல அமைதி பெறக்கும்?" காலையிலிருந்து மிளகாய்த் தோட்டத்தில் வேலைபார்த்த அலுப்போ களைப்போ சிறிதும் தெரியாமல் இலங்கையின் இனப்படுகொலை குறித்துப் பேசும் இவர்கள்தான் இயக்குநர் சீமானின் தாய் அன்னம்மாள். தந்தை செபஸ்த்தி.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூரில் இருக்கிறது சீமானின் வீடு. கிராமத்து எளிமையும், யதார்த்தமும் துளியும் குறையாத வீடு அது.
"என் மகன் சீமானை உள்ள தூக்கிப் போட்டாங்க. ஒரு பாவமும் செய்யாதது ஒலகத்துல தப்பு போல. அந்தப் புள்ளை கேக்குற நெசமான கேள்விக்கு யாருகிட்டவும் பதிலில்லை. புள்ளையைப் பார்த்தே ரொம்ப நாளாச்சு. எலந்தைப் பழமும் எள்ளுருண்டையும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். பட்டணத்துக்குப் போறவுககிட்ட கொடுத்து விடணும்" என்றபடி தாய்ப்பாசம் தன்னை மீறிக் கசிய… கிராமத்து போராளியாகப் பேசுகிறார் சீமானின் தாய் அன்னம்மாள்.
சீமானைப் பற்றி சொல்லுங்கள்?
"பஞ்சாமிர்தமா அஞ்சு புள்ளைக. மூணு பையக, ரெண்டு பொண்ணுக. சீமான்தான் ரெண்டாவது. மெத்தப் படிப்பும் தம்பிதான். சடுகுடு, கராத்தே, ஆடுறது, பாடுறது, ஓடுறது, ஓடியாறது, திரைப்படம் பாக்குறது, கவிதை எழுதுறதுன்னு இப்பயிருக்கிற மாதிரித்தான். பொதுச்சங்கதிகளில் ஈடுபடவும் அதுக்கான வேலைகளையும் செஞ்சுகிட்டே இருப்பான். தனக்குன்னு சிந்திக்கத் தெரியாத புள்ளை. சடுகுடு ஆடி காலை பெசக்கிட்டு, கராத்தேவுக்குப் போயி கைய பெசக்கிட்டு வரும். வயல் வேலை அத்தனையும் பாக்கும்.
பள்ளிக்கோடம் போறப்ப புதுசா செருப்பு வாங்கி போட்டனுப்புவே. மக்கா நாளு செருப்பு இருக்காது. நண்பர் கேட்டாகன்னு குடுத்துடும். அதே போல புதுச் சொக்கா போட்டுவிடுவேன். நண்பர் யாராவது கேட்டாகன்னு குடுத்துடும். நண்பருக்குனா சீமான் உயிரையும் குடுக்கும்.
அந்த கொணந்தான் இன்னைக்கு ஊருக்கும், நம்ம மக்களுக்காகவும் போராட வைக்குது. நல்ல வழியைச் சம்பாதிச்சிருக்காரு. இப்பப் போற பாதையும் நல்ல பாதைதான். முடிவும் நல்லாதான் இருக்கும்.
நம்ம மக்கள் சாகக் கூடாது, நல்லா இருக்கணும்னுதான் நெனைக்கிறாரு. அது தப்புங்களா தம்பி? அவரு நம்ம மக்களுக்காக போராடுறது எங்களுக்குப் பெருமைதான். தம்பி, இன்னமும் தகிரியமா போராடணும்னு நெனைக்கிறோம்.'
சீமானிடம் வெளிப்படும் போராட்ட குணத்திற்கு நீங்கள் தானே ஆணிவேர்?
"எவ்வளவு காலந்தான் பூமியில வாழப்போறோம். ஈழத்துல நம்ம ஆட்கள் படுற அவதி இங்க தெரியணும்ல. காசு பணம் சம்பாதிக்க வேணாம். சொத்து சொகம் வேணாஞ் சாமி. தம்பிக்காக காலம்பூரா நாங்க ஒழைப்போம். அல்லாடுற நம்ம மக்களை நல்ல நிலைக்கு தம்பி கொண்டு வந்தாலே போதும்."
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பற்றி சீமான், எல்லா மேடைகளிலும் பேசுகிறாரே?
"பேசட்டுமே! அதுக்காக சந்தோஷந்தாபடுறேன்! பிரபாகரன்தான் என் மூத்த மகன்!! அதுக்கப்புறந்தான் எம் புள்ளைகயெல்லாம்.
எம் மூத்த மகன் பிரபாகரன் பண்றது கெடுதலா? நன்மைதானே! நம்ம மக்கள் யாரும் சாகக்கூடாதுன்னு நெனைக்கிறாரு. தம்பி செய்யுறது சரிதான்! இப்ப நடக்குற போரில் நமக்கு வெற்றி கெடைக்கும். நம்ம மக்கள் நல்ல நிலைக்கு வந்துடணும் என்கிறதுக்காக நான் வேண்டாத தெய்வமில்லை. பிரபாகரன் கண்டிப்பா ஜெயிக்கும். தமிழ் ஈழம் கெடைக்கும். ரவைக்கும் பகலுக்கும் கஷ்டப்படுற பிரபாகரன் நல்லா இருக்கணும். அந்த சாமி அவருக்கு நீண்ட ஆயுசைக் கொடுக்கட்டும்?
அங்க பிஞ்சுக் கொழைந்தக கை காலெல்லாம் குண்டுபட்டு பொத்தலாயி மருந்தில்லாம கடலோர மணலுல அனாதையா படுக்க வச்சுருக்கிற காட்சிகளை பாத்ததுலருந்து சோறு எறங்கலை தம்பி.
பள்ளிக்கூடம்கூட நிம்மதியா போக முடியலை. பதுங்கு குழிக்கு ஓடுதுக. ஒரு பெட்டியைத் தூக்கிட்டு ஊரைவிட்டே போறாக. ஒரு வேளைச் சோத்துக்கே தட்டுத் தடுமாறுதுகளே. படுக்கிறது, குளிக்கிறது, சாப்பிடுறது, சுடுகாடெல்லாம் ஒரே எடத்துக்குள்ள நடக்குதே தம்பி.
போதாததுக்கு, அந்தப் பயலுக நம்ம புள்ளைகள கெடுக்கிறானுக. கருவையெல்லாம் கலைச்சு அநியாயம் பண்றானுக. அதுதான் எனக்கு வகுத்தெரிச்சலா இருக்கு. காசுக்காக வேஷம் போட்டுத் திரியறாய்ங்க."
சீமான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போவதாகக்கூட பேச்சுகள் எழுகிறதே?
"தானா கையூண்டி கரணம் பாஞ்சுதான் இந்த நிலைக்கு வந்துருக்கு தம்பி. எல்லாமே சீமானோட முடிவுதான். அரசியலுக்குப் போக இஷ்டமெல்லாம் கெடையாதுன்னு தம்பி தெளிவா சொல்லிடுச்சு! சம்பாதிக்கணும்.. வீட்டுக்கு சேக்கணுங்கிற ஆசை கிடையாது. மக்கள் நல்லா இருக்கணும். மக்களுக்காக மகன் போராடுறான். போராடி வெற்றி பெற்று வரட்டும். எம் மவராசனை தமிழ் மக்களுக்குத் தாரை வார்த்தாச்சு. இனி, அவுக பாத்துக்குவாக!
தம்பிக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு இருக்கோம். `அங்க சாகையில் இங்க எனக்கெதுக்கு கல்யாணம்'னு கேக்குறாரு. அங்க மக்கள் துயரம் நீங்கினாத்தான் கல்யாணம் பண்ணிக்குவேங்கிறாரு. தனி மனுஷனா மூத்த மகன் பிரபாகரன் போராடுவதை மக்கள் புரிஞ்சுக்கணும். அவர் குடும்பம், குட்டின்னு ஒதுங்கி வாழ இடமா இல்லை. நம்ம மக்கள் சாகக் கூடாதுன்னு நெனைக்கிறாரு. எல்லாரும் சமமா வாழணும்னு நெனைக்கிறாரு தப்பில்லையே."
இந்தத் தேர்தல் எப்படியிருக்கும்?
"இலங்கையில் நடக்குற `இனக் கொலைகளை' வாக்கா மாத்தணும்னு ஆளாளுக்குத் துடிக்கிறாங்க. ஒண்ணும் பண்ண முடியலைங்கிறப்ப எதையாவது பண்ணி மக்களை திசை திருப்புறாக. ஆனா, இது ரொம்பத் தாமதம். ஒலகம் பூரா இருக்குற தமிழர்கள் முழிச்சுகிட்டாக.. அங்க இன்னல்படுற நம்ம குழந்தைகளோட ரத்தத்தையும் கண்ணீரையும் விரயமாக்கி அரசியல் பண்றவுகளை எந்த சாமியும் எப்பவும் மன்னிக்காது. தமிழினம் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும் கண்ணீருக்கும் அதுக்குக் காரணமான எல்லோரும் பதில் சொல்லியே தீரணும்." வீரம் செறிந்த தமிழ்த் தாய் அன்னம்மாளின் முகத்தில் கண்ணீர் உருண்டோடுகிறது..
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com