மலேசியாவில் தமிழன் துயர்!
''ஆஸ்திரேலியாவில் சில இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர் என்பதற்காக தூதரகக் கண்டனம், அவசர அமைச்சரவைக் கூட்டம் என ஆர்ப்பரிக்கிறதுஇந்திய அரசு. ஆனால்... மலேசியாவில் பிழைக்கச் சென்று படாத பாடு படும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் விஷயத்தில் இந்திய அரசும், தூதரகமும் பாராமுகம் காட்டுகிறதே ஏன்? தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா?'' காரசாரமாகக் கேள்வி கேட்கிறார் கலைவாணன்.
மலேசியாவின் பிரதான எதிர்க்கட்சியான 'மக்கள் நீதிக் கட்சி'யின் கடராம் மாநிலத் தலைவராக இருந்த கலைவாணன்... தற்போது அதில் இருந்து விலகி, 'மாற்று செயல் அணி' என்ற தமிழர் நலன் அமைப்பைத் தொடங்கியுள்ளார். மலேசிய தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக சென்னை வந்திருக்கும் அவரை சந்தித்தோம்.
''மலேசியாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் தமிழர்கள், வேலைக்கு வந்து முறையான
ஆவணங்கள் எதுவும் இன்றி, போலீஸ் கண்ணில் சிக்காமல், அங்கும் இங்கும் தலைமறைவாக இருக்கிறார்கள். இங்குள்ள ஏஜென்ட்டுகள் பணத்துக்கு ஆசைப்பட்டு, அவர் களை மலேசியா அனுப்பிவிடுகிறார்கள். இப்படி ஏமாற்றப்பட்டவர்கள் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் கெஞ்சுகின்றனர். ஆனால், இந்திய தூதரகத்தில் தமிழர்கள் நாயை விட கேவலமாக நடத்தப்படுகிறார்கள். டர்பன் கட்டிய பஞ்சாபிகள் மற்றும் வட இந்தியர்கள், தமிழர்கள் என்றாலே அடித்து விரட்டாத குறையாகத் திட்டி அனுப்புகின்றனர். ஒரு நாளைக்கு 400 பேருக்கு விசா அளிப்பதற்காக ஒவ்வொரு நபரிடம் இருந்தும் 165 வெள்ளியை இந்திய தூதரகம் வாங்குகிறது. ஆனால், பாதிக்கப்படும் தமிழர்களைக் காப்பாற்ற அது தயாராக இல்லை.
இத்தனைக்கும் இந்தியாவில் இருந்து அதிக அளவில் மலேசியா செல்வது தமிழர்கள்தான். அவர்களுடன் பேசி, பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக இந்திய தூதரகத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவதில்லை. எனக்குத் தெரிந்து 20 ஆண்டுக்கும் மேலாக இதே நிலைதான். இதை விடக் கொடுமை... சில சமயம், இப்படி வரும் தமிழர்களை இந்திய தூதரக அதிகாரிகளே மலேசிய போலீஸிடம் பிடித்துக் கொடுப்பதுதான். கடைசியில், அவர்கள் சிறையில் சித்ரவதை செய்யப்படுகின்றனர். அதன் பிறகாவது அவர்களை மீட்டு இந்தியா அனுப்ப முயற்சிக்கிறதா என்றால், அதுவும் இல்லை. இப்படி சிறைகளில் உயிரை விட்ட தமிழர்கள் ஏராளம்...'' என்ற கலைவாணன் தொடர்ந்தார்.
''இந்தியாவுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் மிகவும் ஏழ்மையான நாடு. ஆனால்... ஏமாற்றப்பட்டு புகார் அளிக்க வரும் வங்கதேசவாசிகளை போலீஸ் கையில் சிக்கா மல் காப்பாற்றுவதற்காக, ஒரு பெரிய கட்டடத்தையே வாடகைக்கு எடுத்துள்ளது வங்கதேச தூதரகம். பரிதவிக்கும் வங்கதேசவாசிகளை தங்க வைத்து உணவு வழங்குகிறார்கள். தேவைப்பட்டால், வங்கதேச தூதர் மலேசிய பிரதமர் வரை பேசுகிறார். ஆனால், இந்தியாவோ தன் நாட்டு தமிழர்களை காட்டிக்கொடுக்கிறது.
இதுவே ஒரு வட இந்தியனுக்கு பிரச்னை என்றால், விழுந்து விழுந்து சேவை செய்கிறது இந்திய தூதரகம். சில மாதங்களுக்கு முன்பு வட இந்தியக் குழு ஒன்று இப்படி மாட்டிக்கொண்டது. அவர்களை பத்திரமாகக் காப்பாற்றி இந்தியா அனுப்பி வைத்தது தூதரகம். இந்திய தூதர கத்தில் இதே ஒரு தமிழன் இருந்தால்... தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? எனவே, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தமிழர்களையும் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். இதை வற்புறுத்தவும், வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்பவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்திக்க சென்னை வந்தேன். ஆனால், யாரையும் சந்திக்க முடியவில்லை.
மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தமிழ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும், அல்லது சொந்த மக்களைக் காப்பாற்ற முடியாததற்காக அந்த தூதரகத்தை மூட வேண்டும்!' என முடித்தார் கலைவாணன்.
இந்த லட்சணத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் நலன் காக்க என தனி அமைச்சகம் வேறு!
- பா.பிரவீன்குமார்
தமிழா, தமிழா!
சர்வதேச அளவில் தமிழர்களின் நிலைமை இப்படி என்றால்... இந்திய அளவில்?
தமிழகத்தைத் தவிர்த்து, இந்தியாவின் எல்லா மாநில தமிழ் சங்கங்களும் கூடி, இந்திய தமிழ் சங்க கூட்டமைப்பை உருவாக்கி யுள்ளன. டெல்லியில் நடந்த இந்தக் கூட்டத் தில் தமிழக அரசுக்கு கண்டனங்களும் கோரிக்கைகளும் குவிந்தன.
இது குறித்து, இந்திய தமிழ் சங்கக் கூட்டமைப்பின் துணைத் தலைவர், மீனாட்சி சுந்தரத்திடம் பேசினோம்.
''இந்தியாவின் எல்லா மாநிலங்களில் வாழும் தமிழர்களும் பெரும்பாலும் இரண் டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். எத்தனையோ முறை தமிழக அரசிடம் மனுக்களும், கோரிக்கைகளும் வைத்த போதும்கூட இது வரை எந்த ஒரு நடவடிக்கையையும் எடுத்ததில்லை!'' என்று கொதித்தார்.
பெங்களூர் தமிழ் சங்கச் செயலாளர் தாமோதரனிடம் பேசியபோது, ''ஈழத்துக்கு அடுத்தபடியாக கர்நாடகத் தில்தான் தமிழர்கள் அதிகளவில் இன்னலுறுகின்றனர். கர்நாடகத்தில் ஆண்டுதோறும் தமிழ் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. தமிழ் ஆசிரியர்களை நியமிப்பதே இல்லை, தமிழ் புத்தகங்களை வழங்குவதே இல்லை. இதை பல முறை கர்நாடக அரசை வலியுறுத்த தமிழக அரசிடம் கூறியும் இது நாள் வரை எந்த பலனுமில்லை. இதனால் தமிழர்களின் குழந்தைகள் தாய்மொழியை கற்கும் உரிமையைக்கூட இழந்துவிட்டனர். காவிரி பிரச்னையில் அடி, உதைபடும் தமிழர்களுக்கும், தமிழர் உடைமைகளுக்கும், தமிழ் திரையரங்குகளுக்கும் கூட நஷ்டஈடு கொடுக்க கர்நாடக அரசை வற்புறுத்துவதில்லை. கர்நாடக சிறைகளில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன் றும் வாடுகின்றனர். இதற்காக தமிழக அரசு என்ன செய்திருக்கிறது? ஆனால், கர்நாடக அரசு வெளி மாநிலங்களில் வசிக்கும் கன்னடர்களுக்கும், கன்னட சங்கங்களுக்கும் ஆண்டுதோறும் நிதி உதவி செய்து வருகிறது. இதற்கென்று ஒரு தனி இயக்குநகரத்தை நியமித்து கர்நாடகத்தில் இருந்து பாடப்புத்தகங்களை வேறு மாநிலங்களுக்கு அனுப்புகிறது. ஆந்திராவோ, பிற மாநில ஆந்திர மக்களுக்காக தனி அமைச்சரவையே அமைத்து நலத் திட்டங்களை செய்து வருகிறது. ஆனால், தமிழக அரசு?'' என்று சலித்துக் கொண்டார்.
நவி மும்பை தமிழ் சங்கத்தின் செயலாளரான மகா தேவனோ, ''மகாராஷ்டிர அரசு தமிழ் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தும் தமிழ் புத்தகங்கள் இல்லாமல் தமிழை கற்க முடியாமல் போகிறது. இது குறித்து புத்தகம் அனுப்ப வேண்டினோம், அனுப்பவில்லை. இது நாள்வரை நாங்கள் வாடகைக் கட்டடத்தில்தான் சங்கம் நடத்துகிறோம், தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்காக பத்து பைசா கூட செல விடவில்லை!'' என்றார்.
கொல்கத்தா பாரதியார் தமிழ் சங்கச் செயலாளர் ஸ்ரீதரன், ''மேற்கு வங்காள அரசு ஆண்டு தோறும் வங்கமொழி மேம்பாட்டுக்காக பிற மாநிலங்களில் வசிக்கும் பண்பாட்டு அமைப்புகளுக்கு நிதி உதவியும்சலுகைகளையும் வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு இது நாள் வரை பிற மாநில தமிழர்களுக்காக தமிழின் நலம் பேண ஒரு கட்டடத்தையாவது கட்டித் தர வேண்டும்...'' என்கிறார்.
நம்மிடம் பேசிய ஒரு வெளி மாநில தமிழ்சங்கத் தலைவர், ''ஒரு முறை தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கப் போனோம். அருகில் இருந்த ஒரு மூத்த அமைச்சர் 'பொழைக்கப் போன இடத்தில் அடி உதைனு வந்தா, அதையும் வாங்கித்தான் தீரணும், எங்களைக் கேட்டா போனீங்க..? இங்கே உள்ளவங்களுடைய பிரச்னையை தீர்க்கறதே பெரும்பாடா இருக்கு...'' என்று உதாசீனமாகப் பேசினார்!'' என வாடினார்.
தமிழுக்கு அமுதென்று பேர்... தமிழனுக்கு?
- இரா.வினோத்--
Regards,
VIJAYSHANKAR,
PhD Research Fellow,
Insititute for Physics and Technology,
University of Bergen, Bergen,
Norway.
Mob: +4747954330,
நன்றி
prema.angel2@gmail.கம
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com