'எனக்கு முடிவு கட்ட நெடுமாறன் கோஷ்டி சதி!' - கருணாநிதி திடுக்!
பழ நெடுமாறன் கோஷ்டியினர் எனக்கு முடிவு கட்ட சதி செய்கின்றனர். அந்தப் பழியை உலகத் தமிழர்கள் மீது போடவும் தயாராகி வருகின்றனர் என முதல்வர் கருணாநிதி திடுக்கிடும் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.
'இலங்கைத் தமிழர் விஷயத்தில் முதல்வரின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இடையே கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 3.50 லட்சம் தமிழர்கள் படும் துன்பத்திற்கு ராஜபட்ச மட்டும் காரணம் அல்ல; பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும்தான் காரணம்…' என்று இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில், முதல்வரின் செயல்பாடுகள் குறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளாரே? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள (இவரே கேள்வி கேட்டு பதில் சொல்லும் அறிக்கை!) முதல்வர்,
"நெடுமாறன் கோஷ்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. உண்மைக்கு மாறான தகவல்கள், நெடுமாறன் மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றன.
எனக்கு ஒரு முடிவு கட்ட திட்டமிட்டு, அந்தப் பழியை உலகத் தமிழர்கள் யார் மீதாவது போட்டு விட்டு, தாங்கள் தப்பித்துக்கொள்ள, அந்தக் கோஷ்டியினர் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யும் பிரச்சாரம் என்று நான் கருத வேண்டியிருக்கிறது.
நெடுமாறன் போன்றவர்களுக்கு, ஜெயலலிதாவின் செயல்பாடுகள் தான் பிடிக்கும். ஜெயலலிதாவைப் போல், அவரைப் பிடித்து குண்டர் சட்டத்திலோ அல்லது பொடா சட்டத்திலோ மாதக் கணக்கில் சிறையில் தள்ளினால், அதுதான் சிறந்த நடவடிக்கை என்பர். எப்படியிருந்தாலும், 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார்.
http://www.envazhi.com/?p=11768
சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட முதல் தண்டனை!
சிறீலங்காவிற்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) எனும் வரிச் சலுகை நீடிப்பை இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவானது சிறீலங்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு இதழ் தெரிவித்தள்ளது.
அவ்விதழில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இறுதி வரை இந்த வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நீடிக்கும் என்றே சிறீலங்கா
எதிர்பார்த்திருந்தது. ஆனால், அது நீடிக்கப்படமாட்டாது என்ற அறிவிப்பை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டபோது, அதில் கலந்துகொண் டிருந்த சிறீலங்காவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கோகன்ன ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவைத் தண்டித்துவிட்டதாக குற்றம்சாட்டியதுடன், அக்கூட்டத் தொடரில் இருந்து வெளியேறி வெளிநடப்பும் செய்தார்.
அத்துடன், இந்த நெருக்கடியை சிறீலங்கா வேறு வழியில் கையாளும் எனத் தெரிவித்த பாலித கோகன்ன, மேற்கில் இருந்து இது கிழக்கிற்கு இது மாறும் எனவும் சீனா, இந்தியா, ஜப்பான், கொரியா, ஈரான் போன்ற நாடுகள் தங்களுக்கு உதவும் எனவும் கூறியுள்ளார். சமாதான முயற்சிகளில் இருந்து சிறீலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறி தமிழ் மக்களுக்கு எதிரான போரை ஆரம்பித்த காலத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சிறீலங்காவிற்கு வழங்கிவரும் இந்த வரிச்சலுகையை நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்கள்.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் தற்போது இந்த நல்ல முடிவை எடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள இந்த முடிவானது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு, தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் சிறீலங்கா அரசிற்கு கிடைத்துள்ள முதல் தண்டனையாக பார்க்கப்படுகின்றது.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சிறீலங்காவிற்கு இது உச்சம் தலையில் விழுந்த ஒரு அடியாகவே பார்க்கப்படுகின்றது. சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அந்நாடு உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருந்தது.
அரசியல் சாசனத்தை நிறுவாமை, காணாமல் போதல்கள் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல் விடயங்கள் தொடர்பில் விளக்க மளிக்குமாறு 130 பக்க அறிக்கை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவிற்கு ஏற்கனவே அனுப்பி வைத்திருந்தது. இந்த அறிக்கைக்கு நேற்று முன்தினம் புதன்கிழமைக்கு முன்னதாக சிறீலங்கா உரிய பதில்களை அனுப்பி வைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விடயத்தைக் கையாள்வதற்கென நான்கு மூத்த அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றை சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சில நாட்களின் முன்னர்தான் நியமித்திருந்தார். ஆணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் தமது கருத்துக்களை ஐரோப்பிய ஒன்றியத்திடம் அவர்கள் தெரிவிப்பார்கள் எனவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், தமக்கு தெளிவான உறுதியான பதில் வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனால், சரியான பதிலை அளிக்க சிறீலங்காவினால் இறுதிவரை முடியவில்லை. அத்துடன், ஜி.எஸ்.பி. வரிச்சலுகைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவிருக்கும் மனித உரிமை விசாரணைகள் எதற்கும் இடமளிக்கப் போவதில்லை என்று சிறீலங்காவின் பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
ஜி.எஸ்.பி. வரிச் சலுகைகள் அவசியம். ஆனால் முன்நிபந்தனைகளை ஏற்கப் போவதில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை இலங்கைக்க வர அனுமதிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு சிறீலங்கா இதுவரை அனுபவித்து வந்த வரிச்சலுகை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிக்கப்படமாட்டாது என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.
இனிமேல் வரிச்சலுகை நீடிக்கப்படுவது மிகக் கடினம்' என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை தொடர்பான அதிகாரி ஒருவரும் கூறியிருக்கிறார். இதேவேளை, ஜி.எஸ்.பி. விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என இலண்டனை மையமாகக் கொண்ட சிறீலங்கா இராஜதந்திரியருவர் தெரிவித்துள்ளார். 'இதன் காரணமாக நாங்கள் மாற்றுவழிகளை ஆராய்கிறோம். இது அரசையல்ல, மக்களைத்தான் பாதிக்கப் போகின்றது`` என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இறக்குமதி வரிச்சலுகையை வழங்கிவருகின்றது. அந்த வகையில் பொலிவியா, கொலம்பியா, ஈக்குவடோர், பெரு, வெனிசூலா, கோஸ்தா-றிக்கா, எல்சல்வடோர், கௌதமாலா, கொண்டுராஸ், நிக்கரகுவா, பனாமா, மோல்டோவா, ஜோர்ஜியா, மொங்கோலியா ஆகியவற்றுடன் சிறீலங்காவையும் சேர்த்து சுமார் 15 நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இந்த வரிச்சலுகையை வழங்கியிருக்கின்றது. இறுதியாக பங்களாதேசையும் இணைத்து 16 நாடுகள் ஆக்கப்பட்டுள்ளன.
சுமார் 7200 பொருட்களுக்கு இந்த வரிச்சலுகை வழங்கப்படுகின்றது. இந்த வரிச்சலுகைக்கு சிறீலங்கா உட்படாதபோதும், இலங்கையில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவு காரணமாக இந்த வரிச்சலுகை அந்நாட்டுக்கு வழங்கப்பட்டது. இதனால், 2002ம் ஆண்டு முதல் சிறீலங்கா ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஜீ.எஸ்.பி. பிளஸ் என்ற இந்த வரிச்சலுகைத் திட்டத்தை அனுபவித்து வருகின்றது.
இந்த சலுகைத் திட்டத்தின் மூலம் 4000 பொருட்களுக்கு சிறீலங்கா வரிச்சலுகை பெருகின்றது. இதில் பெருமளவு இலாபத்தை ஆடை ஏற்றுமதி மூலமே சிறீலங்கா பெறுகின்றது. ஆடை ஏற்றுமதி மூலம் 42 மில்லியன் டொலர்களை சிறீலங்கா வருடம் தோறும் பெறுகின்றது. இந்தத் தொழில் மூலம் ஒரு இலட்சம் பேர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இந்த வரிச்சலுகை நீடிப்பு நிறுத்தமானது, சிறீலங்காவின் வருமானத்தை நேரடியாகப் பாதிப்பதுடன், இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்தப் போகின்றது. இது இவ்வாறிருக்க, 2008ம் ஆண்டினை விட இந்த ஆண்டு சிறீலங்காவின் பொருளாதார வளர்ச்சி வீதம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்கா அரசின் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக இந்த வீழ்ச்சி வேகம் காணப்படுவதாக அனைத்துலக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 'உலகில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி எமது ஏற்றுமதிப் பொருட்களுக்கான தேவையை வெகுவாக குறைத்துவிட்டது. அதன் பலன் பொருளாதார வளர்ச்சி பின்புறமாகத் திரும்பிவிட்டது' என்று புள்ளிவிபர மற்றும் கணக்கெடுப்பு திணைக்களத்தின் பதில் இயக்குநர் நளினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆயத்த ஆடைகளுக்கும் தேயிலைக்குமான கிராக்கி உலக சந்தையில் குறைவடைந்ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 2009ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கடந்த ஆண்டை விட பொருளாதார வளர்ச்சி 2.1 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது.
2008ம் ஆண்டில் அது 7 விழுக்காடாக இருந்தது. சேவைத் துறைகளான வங்கிகள், கப்பல்துறை, தொலைத்தொடர்புத்துறை என்பன வீழ்ச்சியில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. சேவைத்துறையின் வளர்ச்சி விழுக்காடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1471&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com