'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
ஈழம்: கனவிலிருந்து வாழ்க்கைக்கு...
Last Updated :
இலங்கையில் போர் முடிவுக்கு வந்திருக்கும் சூழ்நிலையில், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திலும் ஓர் ஆழ்ந்த மெüனத்தை அவதானிக்க முடிகிறது. ""அடுத்தது என்ன; இனி நாம் என்ன செய்யப்போகிறோம்?'' என்ற கேள்விகள் ஒவ்வொருவரிடமும் தொக்கி நிற்பதையும் உணர முடிகிறது. ஏறத்தாழ ஓர் அறுபதாண்டு காலப் போராட்டம் - முப்பதாண்டு காலப் போர் லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் குடித்துவிட்டு, ஓர் இனத்தையே அகதி இனமாக்கிவிட்டு படுதோல்வியில் முடிந்திருக்கிறது. இந்தப் போரின் முடிவு கசப்பானதாக இருக்கலாம். நம்மால் ஜீரணிக்க முடியாததாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. அதிலிருந்து தப்பி நம்மால் ஓடி ஒளிந்துகொள்ள முடியாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் ஈழத் தமிழர்கள். இந்தப் போராட்டமும் போரும் தொடங்க எவையெல்லாம் காரணங்களாக இருந்தனவோ அந்தக் காரணங்கள் அனைத்தும் இன்றும் அப்படியே இருக்கின்றன. ஆனால், கேட்டவை கிடைக்காததுடன் இருந்தவற்றையும் இழந்து நிற்கின்றனர் அவர்கள். தம்முடைய மொழிக்கும் தம்முடைய இனத்துக்கும் தம்முடைய பண்பாட்டுக்கும் சம உரிமை கேட்டு போராடிய அவர்களுக்கு, இன்று இவை எதுவுமற்ற பழைய வாழ்க்கையே பெருங்கனவாக மாறியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழினமும் தன்னை ஆத்மப் பரிசோதனைக்கு உள்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு நேரமிது. இனி கடந்த காலத்தை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. ஓயாத குண்டுகளுக்கு இடையே உறவுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து முகாம்களில் அடைந்து கிடக்கும் பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் இன்றைய தேவை இன்னொரு போரோ போராட்டமோ அல்ல. ஈழத் தமிழினம் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த தமிழினமும் மூன்று தளங்களில் தீவிரமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். முதலாவதாக, மறு நிர்மாணம் மற்றும் வளர்ச்சி. முகாம்களில் சிக்கியுள்ளோரை விடுவிப்பதோடு, மறு நிர்மாணம் மற்றும் வளர்ச்சியில் தன்னுடைய முழு கவனத்தையும் ஈழத் தமிழினம் செலுத்த வேண்டும். இந்த வளர்ச்சியை சுயமாகத் தேடிக்கொள்ள இயலாது. நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின், தேசத்தின் வளர்ச்சியுடன் சேர்ந்தே அது சாத்தியமாகும். ஆகையால், ஈழத்தமிழ்ச் சமூகம் தம்மிடையே காணப்படும் வேறுபாடுகளைக் களைவதோடு, பொருளாதார ரீதியாக கடும் சவால்களை எதிர்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த இலங்கையின் வளர்ச்சியின் ஊடாகத்தான் இந்த வளர்ச்சியை வென்றெடுக்க முடியும் என்ற உண்மையை உணர வேண்டும். இரண்டாவதாக, நல்லெண்ண நடவடிக்கைகள். ஒருபுறம் வளர்ச்சியை முன்னெடுக்கும் அதே நேரத்தில் மறுபுறம் நல்லெண்ணச் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தமிழர் - சிங்களர் இடையேயான இனவெறிப் பதற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதிகாரமும் உரிமைகளும் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு இன அடிப்படைவாதத்தை முன்வைத்து அரசியல் ரீதியாக உருவாக்கப்படும் தடைகளைத் தகர்க்க இது முக்கியமானது. மூன்றாவதாக, சகல தளங்களிலும் தமிழர்களுக்கு சம உரிமைகள், அதிகாரப் பகிர்வுகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வு. இந்தத் தளத்தைப் பொருத்த அளவில் தமது வலுவை முழுமையாக இழந்து நிற்கும் ஈழத் தமிழர்களால் செயல்பாட்டை முன்னெடுக்க இயலாது. ஆகையால், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் சர்வதேச அளவில் இதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இலங்கை அரசின் மீது சர்வதேச சமூகம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க காரியமாற்ற வேண்டும். தவிர, முதல் இரு தளங்களிலும் அனைத்து வகைகளிலும் ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும். உலகில் போரால் பாதிக்கப்படாத சமூகங்கள் ஏதுமில்லை. ஆனால், போரைவிடவும் போருக்குப் பிந்தைய காலகட்டமே பல சமூகங்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் தீர்மானித்திருக்கின்றன. இன்றைய ஜெர்மனியும், ஜப்பானும் இதற்கு நிதர்சன உதாரணங்கள். கனவுகள்; நம்பிக்கைகள்; உண்மைகள். இவை எல்லா தருணங்களிலும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமுமில்லை; வெவ்வேறாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமுமில்லை. கனவிலிருந்து போராட்டத்திற்குச் சென்ற ஈழத் தமிழினம், கனவிலிருந்து வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டிய நேரமிது. எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், ""உணவுதான் உணவு; கனவு உணவல்ல!''
http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=66027&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...
முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com