ஈழப்படுகொலையில் மகிழும் இந்திய ஊடகங்கள்!
சம காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அழித்து முடிக்கப்பட்ட ஒரு இனத்தை வெட்டி முடமாக்கி முகாம்களுக்குள் முடக்கியிருக்கிறார்கள். பேரினவாதிகள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலைக்கு பழிவாங்கும் விதத்தை நம்பும் படியாகவும் உணர்த்தும் விதமாகவும் நடத்தப்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு இந்தியாவின் ஆகப் பெரிய பாசிசப் படுகொலையாகும்.
நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை மறைக்க சிங்கள அரசு தமிழ் மக்களை உளவியல் ரீதியாக தாக்கியழிக்கிறது. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இயலாமையால் அழுகிறார்கல். தமிழககமோ இறுக்கமான மொனத்தில் உறைந்திருக்கிறது. பெருந்தொகையான மக்கள் கூட்டம் காணாமல் போனது தொடர்பாக கேள்விகளை எழுப்ப வேண்டிய வட இந்திய அங்கில ஊடகங்களோ ஈழப் போரின் முடிவாக இதைக் கொண்டாடி மகிழ்கின்றன.
ஆங்கில ஊடகத்தின் தமிழகப் பிரிவில் வேலை பார்க்கும் எனது பெண் நணபர் ஒருவர் நேற்று என்னிடம் கேட்கிறார். மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் பொடி எல்லாம் எடுத்துட்டாங்களாமே? உங்களுக்குத் தெரியுமா?
எங்கம்மா இறந்தது மட்டும்தான் எனக்குத் தெரியும் பிரபாகரன் இறந்தாரா? அவரது மனைவி இறந்தாரா? என்பதெல்லாம எனக்குத் தெரியாது? பொதுவாக இவர்கள் இறப்பதில்லை என்பது மட்டும் தெரியும். நீங்கள் டில்லி டெஸ்கிற்கு செய்தி கொடுத்து விட்டீர்களா? இலங்கை அரசின் ஆர்மி சைட்டில் இதை போட்டிருக்காங்களா? என்று கேட்டேன் அவரோ எங்க சேனல்ல ப்ளாஸ் நியூஸ் போகுது என்றார். எனக்கு எதுவும் அதிர்ச்சியாக இல்லை. சிறிது நேரத்தில் எஸ்,எம்,எஸ் ரூகள் தொலைபேசி அழைப்புகள் விசாரிப்புகள் எதுவும் அதிர்ச்சியாக இல்லை. கடந்த சில நாட்களாகவே இறுக்கமாக மட்டுமே இருக்க முடிகிறது தமிழக மக்களைப் போல,
இலங்கையின தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரை இந்தியா நடத்துகிறது. இலங்கை நடத்தி முடித்த இன அழிப்பின் பின்னரான உளவியல் சிதைப்புப் போரை இலங்கையின் தூதரகத் திட்டத்தோடு வட இந்திய ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. கடுமையான மனச்சிதைவுக்கு உள்ளாக்கப்படும் ஒரு இனத்திற்கு நம்பிக்கை ஊட்டும் எந்த நடவடிக்கைகளையும் தமிழக ஊடகங்கள் செய்யவில்லை என்பதோடு. தூதரக அதிகாரிகளோடு தமிழக ஊடகவியலார்களும் நெருக்கம் பேணினார்கள் என்பது மட்டும் தெரிகிறது.
வட இந்திய ஊடகங்கள் ஈழப் போரின் தோல்வியை இலங்கை சார்ந்த ஒன்றாக மட்டுமே பார்க்கவில்லை. அவர்கள் தமிழகத்தில் வாழும் ஏழு கோடி மக்களின் தோல்வியாகவே பார்க்கிறார்கள். இவர்களின் தோல்வி அவர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. இந்து ராம். சோ ராமசாமி, சுப்ரமணியம் ஸ்வாமி போன்ற இலங்கை அரசின் நட்புச் சக்திகள் இந்தக் கொண்டாட்டங்களின் தமிழக முகங்களாகவோ முகவர்களாகவோ இருக்கிறார்கள்.
ஊடகங்கள் தமிழ் மக்கள் மீது தொடுத்திருக்கும் இந்தப் போர் காட்சி ஊடகங்கள் தொடங்கிய காலத்திலிருந்து தொடங்குகிறது. ஈராக்கிய யுத்தத்தின் போது எப்படி சி.என்.என் தொலைக்காட்சி அமெரிக்க பயங்கரவாதத்திற்கு வலது கரமாக இருந்து பிரச்சாரம் செய்ததோ அது போலவே சகல வட இந்திய ஊடகங்களும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக மோசமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இந்திய சமூக நீதி வரலாற்றில் இட ஒதுக்கீட்டு உரிமைப் போரில் எல்லாக் காலத்திலும் தமிழகமே முன்னணியில் நின்றது.
உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அமைச்சர் அர்ஜூன்சிங் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த போது வட இந்திய உயர்சாதி மாணவர்கள் துடைப்பங்களை எடுத்து நீங்கள் எல்லாம் டாக்டருக்குப் படிக்க வந்தால் நாங்கள் தெருக்கூட்டப் போகிறோம் என்று வீதிக்கு வந்ததை மிகப் பெரிய போராட்டமாக சித்தரித்து அதை தமிழ் மக்களுக்கு எதிராக சித்தரித்ததும். ஓகேனக்கல் நீர் உரிமை தொடர்பான போராட்டங்கள் வெடித்த போது அதை தமிழ் சாவனிசம் என்று ஒடுக்கிய போக்கையும ; நாம் கடந்த காலத்தில் கண்டோம். அந்த தொடர் வன்மத்தின் வெளிப்பாடுதான் இன்றைய ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிற போக்கு.
பெருந்தொகையான மக்களை இன அழிப்பு செய்து நிலத்திலிருந்து மக்களைப் பிரித்து அவர்களை முகாம்களுக்குள் முடக்கி இந்தியா இலங்கையில் ஆடியிருக்கும் நரவேட்டை ஒரு பக்கம் அந்தப் போருக்கு எதிராக தமிழக மக்கள் கொதித்தெழுந்த போது அதை ஒடுக்கி அச்சுறுத்தி அடக்கிய விதம் எல்லாம் சேர்த்து இன்று தமிழக மக்களிடம் இந்தியாவின் மீதான வெறுப்பு வளர்ந்திருக்கிறது.
( தேர்தல் வெற்றி எல்லாம் சும்மா சொல்வது அது குறித்து தனியாக எழுதுவேன்) மனுக்கொடுப்பது சத்தியாகிரகம் என்பது போன்ற ஐம்பதுகளில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வு என்னவாக இருந்ததோ அது போன்ற ஒரு உணர்வலை இன்று தமிழகத்தில் இருப்பதை மறுக்க முடியாது. இந்தியாவுக்கு எதிரான கடும் போக்கு தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. இதைத் தடுக்க முடியுமா? என்று தெரியவில்லை ஏனென்றால் குறைந்த பட்சம் போராடுகிற மக்களின் உணர்வுகளை ஆட்சியாளர்கள் மதித்திருக்க வேண்டும். தொடர் நாடகங்கள் மூலம் தேர்தல் வெற்றி கிடைத்த பிறகு இலங்கை பிரச்சனை தமிழகத்தில் ஒரு பிரச்சனையே அல்ல என்று செய்கிற உதாசீனம் இந்தியாவின் தேசீய மனோபாவத்தில் இருந்து தமிழக மக்களை வெகுவாக விலக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வெகுமக்கள் அரசியலில் தலைமைகள் இல்லாத சுழலில் அடிப்படை மாற்றத்திறாக போராடும் இடது அமைப்புகள் இந்த இளைஞர்களின் கோபத்தை அறுவடை செய்யக் கூடும்.
ஏனென்றால் நான் சந்தித்த பெரும்பாலான உணர்வாளர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள் அனைவருமே இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து காட்டும் இந்தப் படங்களை கடந்து செல்லவே விரும்புகிறார்கள். உயிரை காப்பாற்றக் கேட்ட மக்களுக்கு, உணவு கேட்ட மக்களுக்கு, போர் நிறுத்தம் கேட்ட மக்களுக்கு தங்களால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்கிற அவமானமும் குற்ற உணர்ச்சியும் ஏராளமான இளைஞர்களை கசக்கிப் பிழிகிறது. இந்த குற்ற உணர்ச்சியிலிருந்தே அவர்கள் அவலத்தைக் கடக்கிறார்கள். இந்தியா காட்டும் படங்களை உதாசீனப்படுத்துகிறார்கள்.
கடந்த ஒரு வாரத்தில் முள்ளியவாய்க்காலில் கொல்லப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலையில் தொடர்புடையவர்களை தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். போர்க் குற்றங்களை மறைத்து போட்டோக்களை வெளியிட்டு உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற முடியாது என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டிய பகுதி. நாஜிக்களின் கொலைகள நடந்து முடிந்த சில காலத்திற்கு அந்தக் கொலைக் கூடங்கள் குறித்த செய்திகள் எதுவும் உலகிற்குத் தெரியவில்லையாம். அங்கிருந்து தப்பி வந்த இருவர் கொடுத்த தகவலும். அறம் சார்ந்து எழுத நினைக்கும் சில ஆன்ம பத்திரிகையாளர்களாலுமே யூதப் படுகொலை உலகிற்கு வெளிக் கொணரப்பட்டது. அன்றைய உலகச் சூழலில் இரு துருவ அரசியல் உண்மைகள் வெளிவர ஏதுவாக இருந்திருக்கலாம் ஆனாலும் நாம் ஆகக கூடிய சாத்தியங்களோடு இரண்டு மூன்று விஷயங்களைப் பேசியாக வேண்டும்.
ஒன்று பல்லாயிரம் பல்லாயிரமாய் கொல்லப்பட்ட மக்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்து இலங்கை அரசை தண்டிக்க வேண்டும்.
இந்தப் போரில் இந்தியாவின் கொலை வெறியை உலகுக்குச் சொல்ல வேண்டும்.
இந்தப் போர் இன்னும் முடியவில்லை என்பதை சிங்கள பெரும்பான்மை வாதிகளுக்கும், அதிகாரப் பசி கொண்ட இந்தியத் தரப்பிற்கும் சொல்ல வேண்டும் என்பதே எங்களை இப்போது ஆறுதல் படுத்தும்.
http://www.nerudal.com/nerudal.7028.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com