SIGNS - மொழியில்லாத் தருணங்கள் - குறும்படம்
மூன்று மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படங்கள் தருகின்ற அனுபவத்தைவிட மிகச்சிறந்த அனுபவங்களை/உணர்வுகளை மூன்று நிமிட குறும்படங்கள் தந்துவிடும்.குறும்படங்களில் மிக முக்கிய அம்சமாக திகழ்வது இசை(சில படங்கள் விதிவிலக்கு)
சொல்லாத சொல்லையும் உணர்த்திவிடும் இசை.காற்றில் சலசலக்கும் தென்னங்கீற்று மாதிரி.
இன்று பார்த்த குறும்படம் SIGNS.
12 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படம் தருகின்ற அனுபவம் அலாதியானது.தனித்து வாழும் ஒரு இளைஞன்.
காலை எழுந்து அலுவலகம் செல்கிறான்.உணவு இடைவேளையில் அலுவலகம் அருகே ஒரு யுவதியை காண்கிறான்.தன்னை நோக்கி வருபவள் தன்னிடம் பேசப்போகிறாள் என்கிற மகிழ்ச்சியில் பேச எத்தனிக்கும்போது தன்னை கடந்து சென்று அருகிலிருக்கும் குப்பைதொட்டியில் எதையோ வீசிவிட்டு போய்விடுகிறாள். மனம் குன்றிப்போகிறான்.அவள் நினைவில் வீடு வருகிறவனுக்கு தனிமை சுடுகிறது.
மறுநாள் அலுவலகம் செல்லும்போது ரயிலில் இருவர் முத்தமிடுவதை காண்கிறான்.பரிமாற அன்பில்லாத உலகை எண்ணியபடி அலுவலகம் சென்று தன் இருக்கையில் அமர்கிறான்.
அவனது சன்னல் வழியே அருகிலிருக்கும் அலுவலகம் தெரிகிறது. அங்கே நேற்று அவன் பார்த்த அதே பெண் இருக்கிறாள். வேலையில் மும்முரமாக இருப்பவளை ரசித்துக்கொண்டே இருக்கிறான்.இவன் ரசிப்பதை அவள் கண்டுகொள்கிறாள். ஒரு அட்டையில் "புகைப்படம் எடுத்துக்கொள்" என்று எழுதி காண்பிக்கிறாள்.அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.உடனே அவள் "சும்மா விளையாடினேன்" என்கிறாள். இவன் முகம் மலர்கிறது. தன் பெயரை எழுதி காண்பிக்கிறாள். இவனும் தன்னுடைய பெயரை எழுதி காண்பிக்கிறான். மெல்ல மெல்ல வளர்கிறது நட்பு. இருவரும் எழுத்தால் பேசிக்கொள்கிறார்கள். இந்த அற்புதமான,விசித்திரமான நேசத்தால் சுழல்கிறது அவனது உலகம். ஒருநாள் "சந்திக்க விரும்புகிறாயா" என்று எழுதி சன்னல் வழியே காண்பிக்கிறான். அவள் இருக்கை காலியாக இருக்கிறது. எங்கு சென்றாள் என்கிற கவலையால் துடிதுடிக்கிறான்.மறுநாள் சோர்வுடன் அலுவலகம் வந்தமர்கிறான். அவனது முகத்தில் திடீரென்று வெயிலடிக்கிறது.என்னவென்று சன்னல்வழியே எட்டிப்பார்க்கிறான். அங்கே அவள் நிற்கிறாள்.
"தான் பதவி உயர்வு பெற்ற செய்தியை எழுதிக்காண்பிக்கிறாள். இதை நாம் கொண்டாட வேண்டுமென்கிறான் இவன். அவளும் சரி என்க,தயக்கத்தோடு "சந்திக்க விரும்புகிறாயா" என்கிறான்.சந்தோஷத்தோடு அவளும் சரி என்கிறாள். இருவரும் சந்திக்கும் ஆவலில் ஓடோடி வருகிறார்கள்.
எதிரெதிரே இருவரும் நிற்கிறார்கள்.அவன் பேச முற்படும்போது,பேசாதே என்று சைகை செய்கிறாள் அவள்.
கண்களில் குழப்பத்தோடு அவன் பரிதவித்து நிற்கும்போது தான் கொண்டு வந்திருக்கும் அட்டையை காண்பிக்கிறாள்,அதில் ஒரு இதயத்தின் படம் வரையப்பட்டு "Hi"
என்று எழுதப்பட்டிருக்கிறது. இருவரும் புன்னகைக்கிறார்கள். மனதை வருடும் இசையோடு முடிகிறது படம்.
இந்த குறும்படத்தின் மிக முக்கிய ஜீவனாக திகழ்வது இசை.அவளைக்காணாமல் அவன் தவிக்கின்ற நேரத்தில் சோகமாகும் இசை,அவளுக்காக அவன் ஓடுகின்ற போது வேகமெடுக்கிறது.குறிப்பாக 8ம் நிமிடத்திற்கு பிறகு இசையோடு நாமும் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.அடுத்து, கதாநாயகனின் முகபாவங்கள்.ஒவ்வொரு காட்சியிலும் மனதை அள்ளிப்போகிறது.கண்களாலே இருவரும் பேசிக்கொள்வது கவிதை.
மொழியில்லா தருணங்களை மிக அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள்.
மூன்று மணிநேரம் செலவிட்டு நான்கு குத்துபாடல்கள்,நாற்பது சண்டைகள்,நாலாயிரம் "பஞ்ச்" டயலாக்குகள் பார்ப்பதற்கு பதில் இதைப்போல் நான்கு படங்கள் பார்க்கலாம் :)
குறும்படத்திற்கான சுட்டி:
http://www.youtube.com/watch?v=uy0HNWto0UY
நன்றி
http://www.nilaraseeganonline.com/
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com