சென்னை: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா மிகப் பெரிய தவறை செய்து விட்டது. மிகவும் அதிகமாக நம்பிய இந்தியா தங்களை முற்றிலும் கைவிட்டு விட்டதாக இலங்கைத் தமிழர்கள் அனைவரும் வேதனையுடன் உள்ளனர் என்று ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இலங்கைத் தமிழர்கள் பால் அன்பும், பரிவும் கொண்டவர். தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சில முறை இலங்கைக்கும் சென்று வந்துள்ளார்.
அங்கு புத்த மதத் தலைவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் முன்பு சந்தித்துப் பேச முயன்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் இலங்கைக்கு மீண்டும் சென்றார். அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களை, அவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்குச் சென்று சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதிபர் ராஜபக்சேவையும் அவர் சந்தித்துப் பேசினார்.
தனது இலங்கை பயணத்தை முடித்து விட்டு சென்னைக்கு வந்த ரவிசங்கர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். இலங்கைத் தமிழர்களின் நிலை, அவர்கள் பட்டு வரும் துயரம் ஆகியவற்றை உருக்கமாக விவரித்தார். அவரது பேட்டியிலிருந்து சில பகுதிகள் ...
மனிதர்களாக இருப்பவர்கள் நிச்சயம் இலங்கையின் வட பகுதிக்கு செல்லவே முடியாது. காரணம், அங்கு காணப்படும் அவலங்களை காண மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். நானும் எனது மனதை கல்லாக்கிக் கொண்டுதான் சென்றேன்.
இடம் பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் அரசு முகாம்களுக்கு நான் சென்றேன். கொண்டு சென்றிருந்த நிவாரணப் பொருட்களை தமிழ் மக்களுக்குக் கொடுத்தேன்.
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தைப் பொறுத்தவரையில் நமது இந்திய அரசு நிறைய செய்திருக்க முடியும், செய்திருக்க வேண்டும். நமது அரசு போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பையும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உட்கார வைத்திருந்தால், இன்று ஈழத்தில் தமிழர்கள் இந்த அளவுக்கு துயரத்தை சந்தித்திருக்க மாட்டார்கள்.
இரும்புக் கம்பிகளால் போடப்பட்டுள்ள கம்பி வலைகளுக்கு மத்தியில்தான் தற்போதைய முகாம்கள் உள்ளன. அங்கிருந்து யாரும் வெளியேற முடியாது. உணவு, மருந்து, குடிநீர் என எதுவாக இருந்தாலும் பிச்சை கேட்பதைப் போலத்தான் கேட்டுப் பெற வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர் ஈழத் தமிழர்கள்.
பிச்சைக்காரர்களையே பார்த்திராத ஈழ மக்கள் இன்று மன நலம் பாதிக்கப்படும் அளவுக்கு மிக மிக மோசமான துயர நிலையில் உள்ளனர்.
அவர்களுக்கு உரிய முறையில் விரைவில் மருத்துவ வசதிகள் செய்து தரப்படாவிட்டால், அனைவரும் மன நோயாளிகளாக மாறும் பேரவலம் உள்ளது.
இந்தியா மீது கடும் அதிருப்தி..
ஈழத் தமிழர்கள் மத்தியில் இன்று இந்தியா மீது மிகப் பெரிய அதிருப்தி நிலவுகிறது. மிக மிக நம்பினோம் உங்கள் நாட்டை. ஆனால் இன்று எங்களை ஒட்டுமொத்தமாக இந்திய அரசு கைவிட்டு விட்டதே என்று வேதனையுடன் அவர்கள் கதறி அழுகின்றனர்.
இந்தியா தங்களை கைவிட்டு விட்டதை அவர்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அதை இன்னும் கூட அவர்களால் நம்ப முடியவில்லை. இந்திய அரசும், இந்திய அரசியல்வாதிகளும் தங்களை கைவிட்டு விட்டார்களே என்ற வேதனையுடன் உள்ளனர் ஈழத் தமிழர்கள்.
தமிழர்களிடம் ஒற்றுமை இல்லையே...
இந்தியத் தமிழர்களாக இருக்கட்டும், ஈழத் தமிழர்களாக இருக்கட்டு்ம், உலகத் தமிழர்களாக இருக்கட்டும், நம்மிடையே ஒற்றுமை இல்லாததே ஈழப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாமல் போனதற்கு முக்கிய காரணம்.
தமிழ் பேசத் தெரிந்த தூதரே கிடைக்கவில்லையா..?
தமிழர் பிரச்சினை சிக்கலாக இன்னும் ஒரு முக்கிய காரணம், இந்தியாவுக்கான தூதராக இலங்கையில் இருப்பவர் தமிழரல்லாதவராக இருப்பதுதான்.
தமிழே தெரியாத ஒருவரை தூதராக வைத்துக் கொண்டு இலங்கைப் பிரச்சினையை எப்படி இந்திய அரசு தீர்க்க முடியும்?.
தமிழ் மக்களின் வலியை, வேதனையை, உணர்வுகளை, தமிழே தெரியாத இந்திய தூதரால் எப்படி உணர முடியும்?. இது மிகப் பெரிய குளறுபடி.
இந்திய அரசு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மிகப் பெரிய தவறிழைத்து விட்டது. இரு தரப்பையும் அமைதிப்படுத்த அது முயற்சிக்கவில்லை. ஒரு பக்கமாக நடந்து கொண்டதைப் போன்ற பிம்பம்தான் இப்போது ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த தமிழர்களை பல வருடங்களுக்கு அப்படியே முகாமில் வைத்திருக்க இலங்கை அரசு திட்டமிட்டுவதாக நினைக்கிறேன்.
அவர்களுக்கு வீடுகள் கட்டித் தரலாமே என்று அதிபர் ராஜபக்சேவிடம் கேட்டபோது, அதற்கு பல காலம் பிடிக்கும் என்று அவர் பதிலளித்தார்.
எனது அமைப்பின் சார்பில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறோம். பாதிக்கப்பட்டோருக்கு மன நல ஆலோசனைகளைக் கொடுப்பதற்காக ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் அளித்து வருகிறோம்.
வவுனியாவில் உள்ள அருணாச்சலம் முகாமில் மட்டும் 70 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 3 முதல் 4 லட்சம் மக்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான் வன்னிப் பகுதியில் உள்ள எட்டு முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டேன். இங்குள்ள மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தர 120 மில்லியன் டாலர் தேவைப்படும். ஆனால் எங்களிடம் 20 மில்லியன் டாலர்தான் உள்ளது என்று கூறுகிறார் ராஜபக்சே என்றார் ரவிசங்கர்.
http://www.thatstamil.oneindia.in/news/2009/04/23/tn-india-has-committed-a-big-blunder-in-sl-issue.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com