தீராத புலி வேட்டை... மாறாதா இந்த வாழ்க்கை?
'எங்களை வீட்டுக்குப் போகவிடுங்கள் அல்லது, கொன்றுபோடுங்கள்' - மரண வேலிக்கு மத்தியில் இருக்கும் ஈழத் தமிழன் மன்றாடிவைக்கும் கோரிக்கை இதுதான்!
'எங்கள் உறவுகள் வீடு திரும்ப வேண்டும் அல்லது, எங்கள் உறவுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிய வேண்டும்' - உலகம் முழுக்கப் பரவியுள்ள தமிழ்ச் சொந்தங்கள் கண்ணீர் மல்கக் கேட்கும் கேள்வி இதுதான்!
'நாம் அனுப்பிய பணம் தமிழர்களுக்குக் கிடைத்ததா? அல்லது, அவர்களைப் பார்க்கத் தமிழக எம்.பி-க்கள் குழுவை விடுவீரா?' - தமிழக முதலமைச்சர் வைக்கும் கோரிக்கை இதுதான்!
இவை எதுவும் ராஜபக்ஷேவுக்குப் பொருட்டல்ல. கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் சிங்களம் மாறிப்போய் பல காலம் ஆகிவிட்டது. ஐ.நா. சபை அதிகாரியையே அங்கிருந்து விரட்டுகிறார்கள். தொண்டு நிறுவனங்களைத் துரத்துகிறார்கள். அமெரிக்கா உள்ளிட்ட மெகா நாடுகளையே 'வரட்டும் பார்க்கலாம்' என்று சவடால் விடுகிறார். அகில உலகத்தில் யாருக்கும் அடங்காத தனித் தீவாக இலங்கை மாறியதற்கு மறைமுகத் தைரியத்தை யார் கொடுப்பது? சீனாவைச் சொல்கிறது ஒரு பக்கம். இந்தியாவின் ஆசி இருப்பதான சந்தேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. பாகிஸ்தான் வெற்றி விழா விருந்து வைக்கிறது. சுற்றியுள்ள நாடுகள் செய்வது ராஜதந்திரம் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், மூன்று லட்சம் மக்களை முள்வேலிக்குள் பூட்டிவைப்பது அரக்கத் தந்திரமாக மட்டுமே இருக்க முடியும்!
''வன்னி மக்களை அவரவர் வீட்டுக்கு அனுப்பாவிட்டால் ராஜபக்ஷே மீது பல்வேறு சந்தேகங்கள் விழும்'' என்று ஐ.நா-வின் பான் கி மூன் சொன்னதும், ''யாரும் எங்களை நிர்பந்தப்படுத்த முடியாது'' என்று தட்டிக்கழித்துவிட்டார் ராஜபக்ஷே. அவரைச் சந்திக்க வந்தார் ஐ.நா-வின் அரசியல் பிரதிநிதி லின் பாஸ்கோ. ''யுத்தம் முடிந்ததும் அந்த இடத்தில் பொதுமக்களைக் குடியமர்த்த முடியாது. குரேஷியாவில் 16 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி முடியவில்லை' என்று ஞாபகப் படுத்தியிருக்கிறார் ராஜபக்ஷே. மரண ஓலம் ஓய்ந்த பாடில்லை. சர்வதேச மன்னிப்பு சபை, இது குறித்த தனது கவலையைத் தெரியப்படுத்தியுள்ளது.
''1.62 லட்சம் மக்களிடம் மட்டும்தான் இதுவரை சோதனை நடத்தியுள்ளேன். இன்னும் ஒரு லட்சம் பேரிடம் சோதனை நடத்திய பிறகுதான் இறுதி முடிவெடுப்போம்'' என்று அமைச்சர் ராகித போகல்லகாம அறிவித்துள்ளார்.
''முகாமில் 20 ஆயிரம் புலிகள் இருப்பதாகச் சொல்லி, தினமும் சுமார் 40 பேரைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள்'' என்று இலங்கை நாடாளு மன்றத்தின் ஸ்ரீலங்கா சுதந்திராக் கட்சியைச் சேர்ந்த மங்கள சமரவீரா சொன்னபோது, ஆளும் தரப்பில் இருந்து பதில் இல்லை.
''கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஐந்து ஆயிரம் புலிகள் இருப்பதாக ஃபொன்சேகா சொன்னார். செப்டம்பர் மாதம் 16 ஆயிரம் புலிகளைக் கொன்றதாகச் சொன்னார். இப்போது இன்னும் 20 ஆயிரம் புலிகள் இருப்பதாகச் சொல்கிறார். அவர் சொன்னதில் எது உண்மை?'' என்று இன்னொரு எம்.பி-யான மனோ கணேசன் கேட்டார். அதற்கு அமைச்சர் அனுர பிரியதர்ஷன் அடித்த கிண்டல் நம்முடைய கன்னத்தில் ஓங்கி அறைகிறது. ''எல்லாரும் போய்ப் பார்க்க அது மிருகக்காட்சி சாலை அல்ல. யாருக்காவது சுற்றுலா போக வேண்டும் என்று நினைத்தால், மிருகக்காட்சி சாலைக்குப் போங்கள்'' என்கிறது சிங்கள அரசு.
வன்னி மக்களைத்தான் முகாமுக்குள் அடைத்திருக்கிறார்கள் என்றில்லாமல் கடந்த வாரத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 74 பேரைக் கொண்டுவந்து முகாமில் வைத்திருக்கிறார்கள். 15 வயதுக்கு மேற்பட்ட அத்தனை இளைஞர் களையும் புலிகள் என்று சந்தேகப்பட்டு வவுனி யாவில் உள்ள காமினி மகாவித்யாலயம் பள்ளி முகாமில் அடைத்துவைத்திருக்கிறார்கள்.
அதே போல் பம்பமடு பல்கலைக்கழக முகாமில் இளம் பெண்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களில் சிலர் நிர்வாணப்படுத்தப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டு, இரண்டு மூன்று பேர்களாகக் கை கால்கள் இணைத்து கட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உலுக்குகின்றன.
உலகத்தின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகச் சிலரை மட்டும் அவர்களது வீடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்வதாகச் செய்திகள் பரவின. யாழ்ப்பாணம், திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்கு 10 ஆயிரம் பேரைக் கடந்த 11-ம் தேதி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ''அவர்கள் யாரும் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. வவுனியாவில் இருந்து தென்மராட்சியில் உள்ள கச்சாய் ராமாவில் தடுப்பு முகாமுக்குத்தான் கொண்டுபோகப்படுகிறார்கள்'' என்று சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே, யாழ்ப்பாணத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அகதிகள் முகாம்கள் இருக்கின்றன. அதில், சுமார் 30 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் இருக்கிறார்கள். இன்று ஈழத்தின் வடக்குப் பகுதி முழுவதும் அகதிகள் முகாமாக மாறிவிட்டது. விலகி விலகி இருக்கின்றன. கதிர்காமம், ஆனந்தகுமாரசாமி, ராமநாதன், அருணாசலம் ஆகிய பெயர்களில் முகாம்கள். 600 ஏக்கர் நிலத்தைச் சமப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள டென்ட் கூடாரங்கள் ஒரு வாரம் மட்டும்தான் தாங்கக்கூடியவை என்பது அனைவருக்கும் தெரியும். லட்சக்கணக்கான மக்களுக்குக் கூடாரங்கள், சாப்பாடு, மருத்துவம் மற்றும் வசதிகள் தரும் பொறுப்பு ஐ.நா. அமைப்புக்கு இருக்கிறதா அல்லது இலங்கை அரசாங்கத்துக்கா என்ற விவாதமே இன்று வரை முடிந்தபாடில்லை. செம்மண் தரை வெயிலில் கொதிக்கிறது. மழையில் சகதியாகிறது. கழிவறை இருக்கிறது. அது போய்ச் சேரும் வசதிகள் இல்லாததால், அத்தனை முகாம்களும் மலஜலத்தால் நாற்றமெடுத்து, நோய்களை விதைத்துக்கொண்டு இருக்கின்றன.
ஏற்கெனவே பொருளாதாரத் தடையால் தகிக்கும் பூமியாக இருந்தது ஈழம். அரிசி, பருப்பு, மருந்துகள், தடுப்பூசிகள், ஆன்டிபயாட்டிக், வலிநிவாரணிகள் எதுவும் அங்கு கிடைப்பது இல்லை. முக்கியத் தொழிலாக அதுவரை இருந்தது விவசாயமும் மீன்பிடித் தொழிலும். இப்போது கடலோரம் சும்மாகூடப் போக முடியாது. மீன்பிடித் தொழில் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை மொத்தமாக போர் கீறிப் போட்டுச் சிதைத்துள்ளது.
மின்சாரம் கிடையாது. பால் கிடையாது. ரேடியோ கிடையாது. பேட்டரி கிடையாது எனத் துக்கங்களை மட்டுமே கையிருப்பாக வைத்திருக்கிறது ஈழத் தமிழினம்.
அடுத்த மாதம் மழைக் காலம் ஆரம்பிக்க இருக்கிறது. இரண்டு நாள் மழைக்கே சகதிக்காடாக மாறிய முகாம்கள், அக்டோபரில் மொத்தமாக ரணகளமாகும்.
நம்முடைய கைக்கு ஒரு ஈழத் தமிழ்ச் சகோதரியின் கடிதம் கிடைத்தது. அவள் எழுதி இருந்தாள்... 'ஒற்றுமை இல்லாத எந்த இனத்துக்கும் அடிமை வாழ்க்கைதான் கடவுளால் அருளப்படும் தண்டனை!'
விகடன்
உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்! : தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும், மானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-
பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம். அதைத்தான் முதல்வர் கருணாநிதி இப்போது செய்ய நினைக்கிறார். வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர், அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!
இந்த மாநாடு தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார். இன்னொரு காரணம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பழியைத் துடைத்துக் கொள்ள உலகத் தமிழ் மாநாடு கைகொடுக்கும் என நினைக்கிறார்.
தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்கைமொழியாக இல்லை. அரச திணைக்களங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ்மாநாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.
"வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்" என எதுகை மோனையில் பேசும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை. அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்பு மொழிப் பெயர்கள்.
முதல்வர் கருணாநிதியின் பேரர்களுக்குச் சொந்தமான 'சன்' தொலைக்காட்சியில் தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம் இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
ஆண்டுக் கணக்காக சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலக்கம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளி வாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 25,000 மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உணவு, மருந்து இன்றி பல மாதங்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைந்து கிடந்தனர். சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வானூர்திகள் மருத்துவமனைகள் மீதும் பள்ளிகள் மீதும் வீசிய குண்டுகளில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்தபோது மீண்டும் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் வகைதொகையின்றி எதிரியின் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் பொட்டுப் பூச்சிகள் போல் கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டில்லியில் முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.
போரில் தப்பிய மூன்று இலக்கம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் ஆடு மாடுகள் போல் அவர்களது விருப்பத்துக்கு மாறாக, சட்டதிட்டங்களுக்கு முரணாக, திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். துப்பாக்கி ஏந்திய சிங்கள இராணுவத்தினர் காவலுக்கு நிற்கிறார்கள். மக்களது நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவணை முறையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர்" என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவுரிமை ஆர்வலர் மருத்துவர் எலின் சந்தர் வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த யூத இனப் பெணணுக்கு இருக்கும் கவலை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை. இந்திய அரசு எலின் சந்தருக்கு முதலில் விசா வழங்கிவிட்டுப் பின்னர் மறுத்துவிட்டது!
இந்தியத் தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்பியது போரை நிறுத்துவதற்காக அல்ல என்றும் தமிழ் மக்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை புரிந்த சிங்கள பயங்கரவாத அரசைப் பாராட்டுவதற்காகத்தான் என்றும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மனித உரிமை ஆர்வலருமான றிச்சர்ட் டிக்சன் எழுதியுள்ளார். மேலும் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்குப் போதிய உணவில்லை, தண்ணீர் இல்லை, மருந்து இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சின்னச் சின்ன கூடாரங்களில் வானமே கூரையாகவும் கட்டாந்தரையே பாயாகவும் படுத்து உறங்கி எழுகிறார்கள். தொடக்கத்தில் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இப்போது அரிசி, மா இரண்டையும் கொடுத்து சமைத்துச் சாப்பிடச் சொல்கிறார்கள். சமைப்பதற்கு விறகு வேண்டும். விறகு விற்றவர்கள் மீது சிங்கள இராணுவம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இந்த வதைமுகாம்களில் நடைபெறும் சித்திரவதைகளைப் பார்வையிட ஐ.நா. உட்படப் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. இந்து ராம் தவிர ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. தென்தமிழீழத்தில் செயல்பட்டுவந்த செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் ஸ்ரீலங்கா அரசின் கட்டளைக்கு இணங்க மூடப்பட்டுவிட்டன.
புலம்பெயர் தமிழர்கள் வணங்காமண் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 884 தொன் உணவு. உடை, மருந்து இன்றுவரை முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அந்த மக்களைச் சென்றடையவில்லை.
எமது உறவுகளின் அவலத்துக்கும் அல்லல்களுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆயுதம், போர்க்கப்பல்கள், இராடர், பயிற்சி, புலனாய்வு, நிதி போன்றவற்றை வழங்கி தமிழ் மக்களுக்கு எதிரான போரை திரைக்குப் பின்னால் இருந்து இந்திய அரசுதான் நடத்தியது என நாம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம். அதற்குத் திமுக அரசு துணை போனது எனக் குற்றம் சாட்டுகிறோம். இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது கைகளில் ஈழத்தமிழர்கள் கொட்டிய குருதிக் கறை படிந்துள்ளது எனக் குற்றச் சாட்டுகிறோம்!
ஐ.நா.வின் மனிதவுரிமை அவையில் இலங்கை அரசு மனிதவுரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு வாக்களித்தது தமிழ்மக்களுக்குச் செய்த இரண்டகம் எனக் குற்றம் சாட்டுகிறோம்!
தமிழினப் படுகொலையை கன கச்சிதமாக நிறைவேற்றிய மகிந்த இராபச்சே அரசுக்கு உலக நாணய நிதியம் கடன் கொடுப்பதை மேற்குலக நாடுகள் எதிர்த்தபோது "நீங்கள் கொடுக்காவிட்டால் நாங்கள் கொடுப்போம்" என இந்தியா சொன்னது வெட்கக் கேடானது எனக் குற்றம் சாட்டுகிறோம்!
முதல்வர் கருணாநிதி அரங்கேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல், உண்ணா நோன்பு, மனிதச் சங்கிலி, பொதுக் கூட்டங்கள், சட்டசபைத் தீர்மானங்கள், தந்திகள், கடிதங்கள் எல்லாமே வெறும் நாடகம் என நாம் குற்றம் சாட்டுகிறோம்!
"இலங்கைத் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்" என அப்போலோ மருத்துவமனையில் படுத்த படியே முதல்வர் விட்ட அறிக்கை ஒரு ஏமாற்று வித்தை எனக் குற்றம் சாட்டுகிறோம்!
இனமானமா? பதவியா? என வந்தபோது பதவிதான் முக்கியம் என முதல்வர் கருணாநிதி முடிவெடுத்தார் எனக் குற்றம் சாட்டுகிறோம்!
தமிழீழம் பற்றி முதல்வர் கருணாநிதி அடிக்காத குத்துக் கரணமே இல்லை எனலாம். 1985 ஆம் ஆண்டு மதுரையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு நடத்திய மதுரை மாநாட்டில் வாஜ்பாய் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில இலங்கைத் தமிழர்களின் மூலாதார முழக்கமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
ஒரு நாள் பார்த்து தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்பார். அடுத்த நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்க ஆதரவு இல்லை, ஆதரவை எப்போதோ திமுக விலக்கிக் கொண்டு விட்டது என்பார். ஒரு நாள் பிரபாகரன் எனது நண்பர் என்பார். மறு நாள் அவர் ஒரு பயங்கரவாதி, சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தவர் என வசை பாடுவார்.
இன்று "இனித் தமிழ் ஈழம் பற்றிப் பேசி பயனில்லை, மாறாக தமிழர்களுக்கு சம உரிமை, தமிழுக்கு சம தகுதி, தமிழர் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பகிர்வு போன்ற கோரிக்கைகளையே வலியுறுத்த வேண்டும். தவிரவும் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக பன்னாட்டு அளவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மீது விசாரணை வேண்டும் என்பன போன்ற வேண்டுகோள்களை முன்வைக்காமல், சிங்களவர்களுக்கு ஆத்திரமூட்டும் படி எதுவும் பேசாமல், சிங்கள பவுத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்கினியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள், தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்" என்று முதல்வர் பேசியுள்ளார். பேசியது சந்துமுனை அல்ல தமிழக சட்டமன்றம்!
மூன்று மணித்தியாலம் உண்ணாநோன்பு நோற்று "ராஜபக்ச போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்" என்று சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான். அவரிடம் "இன்று காலையில் கூட விடுதலைப் புலிகள் மீது கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கிறதே?" என்று செய்தியாளர்கள் கேட்ட போது " மழை விட்டும் தூவானம் விடவில்லை" என்று பதில் இறுத்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!
தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடிவந்த ஈழத் தமிழர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் ஆண்டுக்கணக்காக அடைத்துவைத்து அழகு பார்க்கும் ஒரே முதல்வர் கருணாநிதிதான்!
இந்திய அரசினாலும் தமிழக அரசினாலும் ஈழத்தமிழ் அகதிகள் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். திபேத் ஏதிலிகளை வீடுகளில் குடிவைத்துவிட்டு தமிழ் அகதிகளை மாட்டுத் தொழுவங்களில் அடைத்து வைத்திருக்கிறது இந்திய அரசு!
தமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, தஞ்சை மணியரசன், நாஞ்சில் சம்பத், கோவை இராமகிருஷ்ணன் போன்றோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது அதிகார வெறியல்லவா?
வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதில் முதல்வர் கருணாநிதி கெட்டிக்காரர். ''இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்தச் சிக்கலைக் கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்'' என முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.
ஒரு இலட்சம் தமிழர்கள் படுகொலை, மூன்று இலட்சம் மக்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்தில்லாமல் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அதற்குப் பெயர் இயல்பு நிலையா? தமிழர்களுக்குத் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எதுவும் இல்லை என்று கூறித் தமிழர் தாயகத்தில் பெளத்த விகாரைகளைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றி சிங்கள மயப்படுத்துவதற்குப் பெயர் இயல்பு நிலையா? எது இயல்பு நிலை?
கொண்ட கொள்கையில் சறுக்குவது என்று முடிவெடுத்து விட்டால் நொண்டிச் சாக்குகளும் சப்பைக் கட்டுகளும் வண்டி வண்டியாய் வரத்தான் செய்யும்!
தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும் மானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறோம்!
பிரபாகரனின் மரண வதந்தி குறித்த செய்திக்குப் பின்னால் இருக்கும் ஊடக வியாபாரம்
தமிழக ஊடகவியலாளர் கவிதா என்பவர் சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஊடகங்களின் நிலைமை, மனித உரிமைகள் போன்றவற்றைக் கண்டறிந்திருந்தார். அவர் இப்போது தமிழகத்தின் "காலச்சுவடு" இணையச் சஞ்சிகைக்கு இலங்கையின் நிலை குறித்தும், இலங்கை நிலைப்பாட்டில் இந்திய ஊடகங்களின் பங்களிப்புக் குறித்தும் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வரைந்திருக்கிறார். அது இங்கு மீள் பிரசுரமாகின்றது. இன்போதமிழ் குழுமம்
ஒர் ஊடகவியலாளராக, குறிப்பாக ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் பணிபுரியும் ஊடகவியலாளராக, இங்கு நின்று பேசுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை. இருந்தாலும் எனக்கும் சொல்ல சில விடயங்கள் இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை இந்திய ஊடகங்களின் மொழி குறிப்பாகத் தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வரும் ஊடகங்களின் மொழி சில வார்த்தைகளுக்குள் சுருங்கிவிட்டது. புலி எதிர்ப்பு அல்லது புலி ஆதரவு என்று சுருங்கிவிட்ட மொழியைக் கொண்டு, அதனடிப்படையிலும் அந்தப் பின்னணியிலும் பெரும்பாலான ஊடகங்கள் செயற்படுகின்றன.
பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் புலி ஆதரவுநிலை என்பது ஒரு வியாபார உத்தி. பிரபாகரனின் மரணத்தைச் இலங்கை அரசு அறிவித்த பிறகு வந்த ஒரு தமிழ்ப் பத்திரிகை தனது மரணம் குறித்த செய்தியைப் பிரபாகரன் பார்த்துக்கொண்டிருப்பது போல ஒரு புகைப்படத்தை அட்டையில் வெளியிட்டது. அந்தப் பத்திரிகை விற்பனை செய்யப்பட்டது; மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கினார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு இலங்கையைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் என்னுடன் கலந்துகொண்ட தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் பிரபாகரனின் படத்தை அட்டையில்போட்டால் அந்த இதழ் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பிரதிகள் கூடுதலாக விற்பனையாகின்றது என அந்த அரங்கில் சொன்னார். அப்போது போர் முடிந்திருக்கவில்லை. பிரபாகரன் இறந்திருக்கவில்லை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது இன்றைய சூழலில் பிரபாகரனுக்கே அதிகம் பொருந்தும். இதனால் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். பிரபாகரன் குறித்த செய்திக்குப் பின்னால் இருக்கும் வணிக சாத்தியங்கள் இத்தகைய செய்திகளை ஊக்குவிக்கும் சக்தியாக மாற்றக்கூடிய அவலம்தான் இதில் பிரச்சினை.
வணிக நிலை ஒரு புறம் இருக்க, தமிழ்ப் பத்திரிகைகளின் பொதுவான புலி ஆதரவு நிலையும் சரி, ஆங்கில ஊடகங்களின் பொதுவான புலி எதிர்ப்பு நிலையும் சரி ஈழத்தின் உண்மைகளிடமிருந்து, மக்களிடமிருந்து வெகுவாக விலகியிருந்தன என்பது மேலும் தீவிரமான பிரச்சினை. பல வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக எழும்பிய தன்னெழுச்சியான ஆதரவை இப்படிப்பட்ட எதிரெதிர் நிலைகள் கலைத்துப் போட்டுவிட்டன என எனக்குத் தோன்றுகிறது.
இலங்கையில் இருந்த தமிழர்கள் படும் அசலான துயரங்களை சொல்லப்போனால் இலங்கையில் தமிழனாக இருப்பதே துயரம் என்று இன்றும் தொடரும் நிலையை பெரும்பாலான ஊடகங்கள் கணக்கிலெடுக்கவில்லை கவனப்படுத்தவுமில்லை. அவர்களுக்குத் தேவை ஒரு பிரதிநிதி. அவர்களது அரசியல் மற்றும் வியாபார உத்திகளுக்கு ஏற்றாற்போல அந்தப் பிரதிநிதியை கதாநாயகனாகவோ வில்லனாகவோ முன்னிறுத்திக்கொள்கிறார்கள்.
இதற்கான எதிர்வினையை நான் தமிழகத் தேர்தல் குறித்த செய்தி சேகரிப்புக்காகச் சென்ற பல கிராமங்களில் பார்க்க முடிந்தது. பல இடங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு இருந்தது. ஆனால் அதை வைத்து வாக்குகளைத் தீர்மானிப்பதில் மக்களுக்குச் சிக்கல் இருந்தது. அது வேறு, இது வேறு என்பதே அவர்களது மனோபாவமாக இருந்தது. சிதம்பரத்தை அவர் தொகுதிக்குள் செய்யாமல்விட்ட விடயங்களுக்காகத் தோற்கடிப்போம், மற்றபடி அவரது ஈழ நிலைப்பாடு பற்றி எங்களுக்குப் பெரிய அக்கறை இல்லை என்று சிவகங்கையில் நான் பேட்டி கண்ட மக்கள் சொன்னார்கள்.
ஈழத் தமிழரின் துயரங்களைச் சரியான மொழியில், சரியான முறையில் மக்களிடம் எடுத்துச் செல்லாதது ஊடகங்கள் செய்த மிகப் பெரிய தவறு. ஒரு பத்திரிகையாளர் என்ற காரணத்தால் பெரும்பாலான பத்திரிகைகளைப் படித்துவிடுவேன். ஆனால் கடந்த நவம்பரில் இலங்கைக்குச் செல்லும்வரை அங்கு வெள்ளை வான் கடத்தல்கள் நடப்பது எனக்குத் தெரியாது. புலிகளாக இருக்கக்கூடும் என்று கருதப்படும் அப்பாவி இளைஞர்கள் இலங்கை அரசாலும் துணை இராணுவத்தினராலும் வெள்ளை வான்கள் மூலமாகக் கடத்தப்படுகிறார்கள். வெள்ளை வான் என்பதற்கு இலங்கை அதிகார வர்க்கத்தின் அகராதியில் பல அர்த்தங்கள் உண்டு. சக்கரங்களின் மீது பயணிக்கும் பயங்கரவாதம், மரணம், காணாமல் போவது என்று பல அர்த்தங்கள்.
போர் புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல
2005ஆம் ஆண்டிலிருந்து கடந்த நவம்பர் வரை இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட 3 ஆயிரம் இளைஞர்கள் அப்படிக் காணாமல் போயிருக்கிறார்கள். கொழும்பில் மட்டும் 300 இளைஞர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இங்கு நமது ஆங்கில ஊடகங்கள் கட்டமைத்துக்கொண்டிருப்பது போல இலங்கையில் நடந்தது புலிகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, தமிழர்களுக்கு எதிரான போர். அதிலும் அந்தப் போரில் பாதிக்கப்பட்டது, வடக்கிலிருந்த தமிழர்கள் மட்டுமல்ல, கிழக்கிலும் கொழும்பிலும் இருந்த தமிழர்களுக்கும் எதிராகவும் அந்தப் போர் நடந்தது. இந்த விடயத்தைக் கொழும்புக்கு நேரில் செல்லும்வரை என்னால் உணர முடியவில்லை.
தமிழ்நாட்டிலிருந்து வரும் எந்த ஊடகமும் இது பற்றி எழுதவில்லை. கொழும்பிலேயே தன் செய்தியாளரை வைத்திருக்கும் "த இந்து" உட்பட எந்த இந்திய ஆங்கில ஊடகத்திற்கும் அரச பயங்கரவாதத்தின் இத்தகைய முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதை அவர்கள் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தார்கள். இராணுவம் தந்த செய்திகளை மீள்பிரசுரம் செய்துகொண்டிருப்பவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவும் முடியாது.
நடந்து முடிந்த போரில் வெற்றி அல்லது தோல்வி குறித்த மயக்கங்களில் அவரவர் அரசியலுக்கு ஏற்பப் பத்திரிகையாளர்களும் சிக்கிக் கொண்டுவிட்டார்கள். இந்தப் போரின் அவலங்களை மனித உரிமைப் பிரச்சினைகளாகப் பார்க்கவும் சொல்லவும் இந்தியப் பத்திரிகைகள் தவறிவிட்டன. குறிப்பாக மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்லிக்கொள்ளும் "த இந்து" போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் செய்த இமாலயத் தவறு அதுவாகும்.
"த இந்து" வைப் பொறுத்தவரை போர் நடந்து கொண்டிருந்தால் அரசு Zero Civilian Casuality (பொதுமக்களில் யாருக்கும் உயிர்ச் சேதம் நிகழாத) கொள்கையைக் கடைபிடிக்கிறது என்று அர்த்தம். பொதுமக்கள் சிறிதும் பாதிப்படையாத ஒரு போர் என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுகிறது. போர் முடிந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும் அது பத்திரிகை ஆசிரியர் ராமைப் பொறுத்தவரை Low intensity conflict (தீவிரம் மட்டாக இருக்கும் போர்).
சமீபத்தில் வவுனியா முகாம் சென்று மூன்று மணிநேரம் இருந்து திரும்பிவந்துவிட்டு அது ஒரு மேன்மையான அனுபவம் என்று எழுதியிருந்த ராம். அந்தச் சமயத்தில் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒரு பேட்டி எடுத்திருந்தார். மூன்று பகுதிகளாக அந்தப் பேட்டி வெளியானது. அந்தப் பேட்டியில் குறிப்பிட்ட சில விடயங்களை மட்டும் இங்கு உதாரணம் காட்ட விரும்புகிறேன். குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் கொல்லப்பட்ட "த சண்டே லீடர்" பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவைப் பற்றி ராம் எழுப்பிய கேள்விகள்.
ராம்:
இலங்கையில் பத்திரிகையாளர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் நெருக்கடிகள் பற்றியும் சர்வதேச அளவில் கவலை எழுப்பப்பட்டது. இவர்களில் சிலர் உங்களுடைய நண்பர்கள். குறிப்பாக லசந்த விக்ரமதுங்க. அவர் 2009 ஜனவரியில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜூன் மாதம் பெண் பத்திரிகையாளரான கிருஷ்ணி இஃபான் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, பல மணிநேரம் விசாரிக்கப்பட்டு, பிறகு கண்டியில் விடுவிக்கப்பட்டார்.
ஜனாதிபதி மஹிந்த:
இவையெல்லாம் வேண்டுமென்றே உருவாக்கப்படுகின்றன. நீங்கள் தெருவில் யாருடனாவது சண்டைபோடுகிறீர்கள்; அந்த மனிதர் உங்களை அடித்துவிட்டால், அதற்கு அரசு பொறுப்பேற்க முடியுமா? பத்திரிகையாளர்கள் எங்களுக்கு எதிராக இருந்தால்கூட நாங்கள் அவர்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. உதாரணமாக, ஒரு தமிழ் நாளிதழின் உரிமையாளரும், ஆசிரியரும் புலிகளை ஆதரிப்பதற்கான சாட்சியங்கள் எங்களுக்குக் கிடைத்தன. ஆனால் நாங்கள் அவர்களைப் பத்திரிகையாளர்களாகத்தான் நடத்தினோம். லசந்த என் நண்பர்தான். அவ்வப்போது வந்து என்னைச் சந்திப்பார். நிறைய விடயங்களைப் பற்றிச் சொல்வார். என் கட்சியில் நடக்கும் விடயங்களையெல்லாம் கூடச் சொல்வார். அதிகாலை இரண்டு மணிக்குக்கூட வருவார். பிறகு என் வண்டியில் அவரைக் கொண்டுவிடச் சொல்வேன்.
ராம்: கடைசியாக அவர் உங்களுக்குத்தான் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டாரா?
ஜனாதிபதி மஹிந்த: ஆமாம். ஆனால் நான் அந்த நேரத்தில் பிரார்த்தனையில் இருந்தேன். நான் வெளியில் இருந்திருந்தால் தொலைபேசியை என்னிடம் கொடுத்திருப்பார்கள். பிறகு, என் பாதுகாவலர்களிடம் மிகவும் கோபித்துக்கொண்டேன்.
லசந்த விக்ரமதுங்க இறப்பதற்கு முன்பு எழுதிய ஒரு தலையங்கம் அவர் இறந்த பிறகு "த சண்டே லீடரில்" வெளியானது. பரபரப்பைக் கிளப்பிய அந்த தலையங்கத்தை ராமும் படித்திருப்பார். அதன் பிறகும் இப்படிப்பட்ட தட்டையான கேள்விகளை அவரால் எப்படிக் கேட்க முடிந்தது என்று புரியவில்லை. அந்த தலையங்கத்திலிருந்து சில வரிகளை மட்டும் இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
"தனது சொந்த மக்களைத் தொடர்ந்து குண்டுவீசிக் கொல்லும் ஒரே நாடு இலங்கைதான் என்ற எங்களது அதிர்ச்சியை நாங்கள் ஒருபோதும் மறைத்ததில்லை. நான் இரண்டுமுறை கொடுமையாகத் தாக்கப்பட்டேன் என்பது பரவலாக அறியப்பட்ட செய்தி. ஒருமுறை எனது வீட்டின் மீது எந்திரத் துப்பாக்கி குண்டு மழை பொழிந்தது. அரசின் உத்தரவாதங்கள் இருந்தாலும் இந்தத் தாக்குதல்களை நடத்தியவர்கள் பற்றி எந்த விசாரணையும் நடக்கவில்லை; அவர்கள் பிடிக்கப்படவும் இல்லை. இந்தத் தாக்குதல்களில் அரசின் கை இருக்கும் என்று நம்புவதற்கு எனக்குக் காரணம் இருக்கிறது. இறுதியாக நான் கொல்லப்படும்போது, அரசுதான் அந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கும்.
"ஜனாதிபதி மஹிந்த, என்னுடைய மரணத்தைத் தொடர்ந்து நீங்கள் பொருத்தமான தார்மீகச் சொற்களை உதிர்ப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். பொலிஸ்துறை உடனடி விசாரணை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவீர்கள். ஆனால் நீங்கள் இதற்கு முன்பு உத்தரவிட்ட விசாரணைகளைப் போல இதிலிருந்தும் எந்த உண்மையும் வெளிவரப்போவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனது மரணத்துக்குப் பின்னால் யார் இருப்பார்கள் என்று நம் இருவருக்குமே தெரியும். ஆனால் அவரது பெயரைச் சொல்லும் தைரியம் இருக்காது. என் உயிர் மட்டுமல்ல உங்கள் பாதுகாப்பும் அந்த மௌத்தில்தான் இருக்கிறது.''
லசந்த விக்ரமதுங்க இலங்கையில் மிகவும் மதிக்கப்பட்ட மிக முக்கியமான பத்திரிகையாசிரியர்களில் ஒருவர். இங்கு என். ராம் போல (இப்படிச் சொல்வதற்கு என்னை லசந்தவின் ஆன்மா மன்னிக்கட்டும்). அவர் கொல்லப்பட்டபோது இங்கிருந்த ஊடகவியலாளர்கள் சிலர் இலங்கை அரசுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பத்திரிகை சுதந்திரத்துக்கான முன்னோடியாகப் பல சமயங்களில் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட "த இந்து" விலிருந்து ஒரு பத்திரிகையாளர்கூட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆச்சரியப்படும் விதத்தில் "த இந்து" நடத்திக்கொண்டிருக்கும் "ஏசியன் காலேஜ் ஒவ் ஜெர்னலிஸம்" என்கிற ஊடகவியல் கல்லூரியிலிருந்து 60 மாணவர்கள் வந்திருந்தார்கள். உரத்த குரல்களில் கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களுடன் வந்த ஒரு பேராசிரியரிடம் எனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன். அவர் சொன்னார்: அவர்கள் இன்னும் ஊடகவியலாளராக மாறவில்லை என்று நான் மிகவும் அவமானமாக உணர்ந்த தருணங்களில் ஒன்று அது.
மக்களை விடுங்கள், இலங்கையில் ஊடகங்கள் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு வருவது பரவலாக அறியப்பட்ட விடயம். அங்கு போர் முடிந்த பிறகு புலம்பெயர்ந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை பத்துக்கும்மேல். காரணம், அவர்களது புகைப்படங்கள் அரசு சார்புத் தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டன போர்க் காலத்தில் துரோகச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்கிற குறிப்புகளுடன். இப்படியொரு செய்தி வெளியான பிறகு அந்தப் பட்டியலில் இருந்தவர்களில் ஒருவரான போத்தல ஜயந்த என்கிற சிங்களப் பத்திரிகையாளர்மீது கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது.
இலங்கையில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதை இந்திய ஊடகங்கள் கணக்கில் எடுக்கவில்லை இலங்கையில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவது, இந்தியாவில் குறிப்பாக இந்திய ஊடகத் துறையில் எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்திருக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. லசந்த விக்ரமதுங்க மரணத்துக்குப் பிறகு ஒரு போராட்டம், வித்தியாதரன் கைதுக்குப் பிறகு ஒரு போராட்டம் என்று இங்கொன்றும் அங்கொன்றுமாகப் போராட்டங்கள் நடந்தன. ஆனால் இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் மீது மிகத் தீவிரமாக நடந்துவரும் தாக்குதல்கள் இங்குள்ள ஊடகங்களால், குறிப்பாக ஆங்கில ஊடகங்களால் பெரிய அளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இலங்கை ஊடகங்களுக்குத்தான் உயிர்ப் பயம். சர்வதேச ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் இலங்கைப் பிரச்சினையில் ஏன் மெனம் காக்க வேண்டும்?
இந்த விடயத்தில் "த இந்து" வின் இரட்டை நிலைப்பாடு பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். "த இந்து" குழுமத்திலிருந்து வரும் "ஃபிரண்ட் லைன்" என்ற மாதமிருமுறை இதழ் சற்றே ஆழமான செய்திக்கட்டுரைகளை வெளியிட்டு வரும் ஓர் இதழ். மிகவும் குறைவாகவே இது விற்பனையாகிறது. இராணுவம் தந்த செய்திகளை "த இந்து" வில் அப்படியே எழுதும் அப்பத்திரிகையின் இலங்கைச் செய்தியாளர் முரளிதர ரெட்டி, ஃபிரண்ட் லைனில் எழுதுவதை எந்த ரகத்தில் சேர்ப்பதென்று தெரியவில்லை. எந்த முகாமுக்குச் சென்று வந்தது மேன்மையான அனுபவம் என்று ராம் சொன்னாரோ அந்த முகாம் நாஜிகளுக்கான வதை முகாம் போல இருக்கிறது என்று முஸ்லிம் தகவல் மையத்தை மேற்கோள் காட்டி ஃபிரண்ட் லைனில் சொல்கிறார் முரளிதர ரெட்டி. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதைப் பற்றியும் அதில் அவர் பேசுகிறார்.
"த இந்து" வைத் தவிர இங்கு வெளிவரும் ஏனைய ஆங்கிலப் பத்திரிகைகள் "த இந்து" வைப் போலத் தீவிரமாகப் புலிகளை எதிர்ப்பதில்லை, இலங்கை அரசின் குரலைப் பிரதிபலிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் தமிழ் ஈழம், அதன் மக்கள், அவர்களது துயரங்கள் குறித்து ஒருவிதமான மௌனத்தையே இவை கடைப்பிடித்தன. சமீபத்தில் "ரைம்ஸ் ஒஃப் இந்தியா" இல் வெளிவந்த வவுனியா முகாம் பற்றிய கட்டுரைகளை விதிவிலக்காகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட ஊடகங்களைப் பொறுத்தவரை இலங்கையின் மனித உரிமை என்பது பூசாவில் உள்ள சிறுவர் போராளிகளுக்கான முகாமில் தொடங்கி புத்தளத்திலுள்ள விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான முகாமில் முடிவடைந்துவிடும்.
போருக்குப் பிந்திய காலகட்டத்தில் சிறுவர் போராளிகளைப் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் கிட்டத்தட்ட எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளும் வெளியிட்டன. சிறுவர் போராளிகளின் பிரச்சினைகள், இஸ்லாமியர்களின் துயரங்களைப் பற்றி எழுதுவது அவசியம்தான். ஆனால் அப்படிப்பட்ட கட்டுரை களை வெளியிடுவதற்குப் புலிகள் ஒடுக்கப்படும் வரை அவர்கள் காத்திருந்ததன் மர்மம்தான் விளங்கிக்கொள்ளும்படி இல்லை.
போர் முடிந்த பின்னர் தமிழகத்தில் உரக்க ஒலிக்கத் தொடங்கியிருக்கும் புலி எதிர்ப்புக் குரலையும் நாம் இந்தச் சூழலில் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இலங்கை அரசின் வெற்றிக் கொண்டாட்டங்களில் உளவியல் ரீதியாக ஒடுங்கிப் போயிருக்கிறார்கள் தமிழர்கள். முடிந்தால் புலம்பெயர்வது; முடியாவிட்டால் அடிமை வாழ்க்கைக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வது என்று வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களுக்குத் தீவிரப் புலி ஆதரவு, வலுக்கும் புலி எதிர்ப்பு ஆகிய குரல்களின் பின்னணியிலிருக்கும் அரசியல் எந்த விதத்திலும் உதவாது. மாறாக, அவர்களது பிரச்சினைகளை அதிகமாக்கவே செய்யும்.
வட இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகள் பற்றியும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஈழத்தமிழர்கள் பற்றிய பெரிய அக்கறை எதையும் இந்த ஊடகங்கள் இதுவரை வெளிப்படுத்தியதில்லை. ஆனால் பிரபாகரனின் மரணச் செய்தியைக் கொண்டாட்ட மனநிலையோடு அணுகினார்கள். பிரபாகரனின் மரணத்துக்கு முன்னும் பின்னும் தமிழர் வாழும் பகுதிகள் பற்றியும் அங்கு துயருறும் மக்கள் பற்றியும் சுருக்கமாகவேனும் செய்திகளைத் தர இந்த 24 மணி நேர செய்தி அலை வரிசைகளுக்கு முடியவில்லை.
என் பார்வையில், இலங்கையில் போர் நடந்த காலம் இந்திய ஊடகத் துறையின் இருண்ட காலம். இனிமேல் அவர்கள் எப்படிச் செயற்படுவார்கள் என்பது குறித்து எந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை. இரு பக்கத்து உண்மைகள் பற்றியும் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மனிதர்களின் துயரம் பற்றியும் மொழி மற்றும் தேச எல்லைகளைக் கடந்து இனிமேலாவது இந்த ஊடகங்கள் பேசும் என்பதற்கான உத்தரவாதங்களோ அறிகுறிகளோ காணப்படவில்லை. புலி ஆதரவு அல்லது புலி எதிர்ப்பு என்கிற பெயரில் இலங்கை மக்கள் மீது குண்டுகளைப் போல வீசப்பட்ட இந்திய ஊடகங்களின் கள்ளத்தனமான மெனங்கள் தொடரும் என்பதற்கான சாட்சியங்களாக உங்களைப் போலவேநானும் இருப்பேன், தெரிந்தோ தெரியாமலோ எனக்கும் அதில் பங்கு இருக்கிறது என்கின்ற கூடுதல் குற்றவுணர்ச்சியுடன்.
விழ விழ எழுவோம் ஆவணத் திரைப்படம் நெஞ்சத்தைத் தொடுகிறது-காணொளி
இந்த ஆவணப் படத்திலிருந்து ஒரு பாடல்...
விழ விழ எழுவோம்
என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப் பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மிகச் சுருக்கமாக தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கல் அவலங்களைச் சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்றதை தெளிவுபடுத்தியுள்ள இந்த காணொளி பார்ப்பவர்களை கண் கலங்கவைக்கிறது, "விழ விழ எழுவோம் நாம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்" என்ற பாடல் வரிகள் உணர்ச்சிமிக்கதாக அமைந்துள்ளது.
இந்த 30 நிமிட ஆவணப்படம் விரைவில் பிரித்தானியாவில் வெளியிட இருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனைய ஜரோப்பிய நாடுகளிலும் தமது சொந்த நகரங்களிலும் இதனை வெளியிட விரும்புவோர் கீழ் காணும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். கருதரங்குடன் கூடிய ஒரு விவரண படமாக இதை நீங்கள் உங்கள் நகரங்களில் வெளியிட்டு, தமிழீழ மக்களின் கருத்துக்களை வெளிக்கொண்டுவரலாம். உங்கள் நகரங்களில் இப்படத்தை வெளியிட
தொடர்புகளுக்கு:00445601567481
http://www.youtube.com/watch?v=HD3dVDhCeRs
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com