![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZIuOvrrsuz0hr5yL4ZFT7sOaLTxMSsJsTeoroKJs-aiWGmHDtCknaW7n6y4_UlXRWahGVPiZKVXl2UICvrTesJU6SzcvlbEvEufgGPgYxj919G5dBueexlonBPHLhgm586Iz43wUbqKc/s400/odumnathi.bmp)
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 61 : பிரபாகரனின் சென்னை வருகை!
![](http://dinamani.com/Images/article/2009/7/30/31ph20.jpg)
பாலசிங்கமும் அவரது மனைவி அடேலும் சென்னை வந்து இறங்கினர். அவர்களை வரவேற்ற பேபி சுப்பிரமணியம் இருவரையும் சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார். தற்போதைய நிலையை பேபி, பாலசிங்கத்துக்கு விளக்கினார்.
பாலசிங்கம் The Liberation Tigers and the Freedom Struggle என்ற பிரசுரத்துக்கானவற்றை எழுதினார். அதில் இயக்கத்தின் கொள்கை, பயிற்சி அளிப்பது, தாக்குதல், நிதி சேகரிப்பு முதலானவை இடம் பெற்றிருந்தன. பாலசிங்கம் தங்குவதற்கென சாந்தோமில் இரண்டு அறை கொண்ட வீடும் எடுக்கப்பட்டது. தமிழக உளவுத் துறை அதிகாரிகள் பாலசிங்கத்திடம் தொடர்பு கொண்டு அவரை "ரா' அதிகாரிகள் முன் நிறுத்தினர்.
இந்த உரையாடலுக்குப் பின்னர், பிரபாகரன் சென்னை வருவதன் அவசியம் குறித்து தகவல் அனுப்பினார். ஏற்கெனவே பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜாமீனில் இருந்து தப்பிய காரணத்துக்காக கைது செய்யும் முயற்சி ஏதும் இதில் இருக்குமோ என ரகுவும், மாத்தையாவும் சந்தேகம் கிளப்பினர்.
எனவே முதலில் அவ்விருவரும் தமிழகம் வந்து பாலசிங்கத்திடம் விவாதித்தனர். தற்போதைய அரசியல் சூழலில் தமிழகப் போலீஸôர் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று பாலசிங்கம் உறுதி கூறினார்.
தொடர்ந்து பிரபாகரன், ""ஜெயவர்த்தனாவின் அமெரிக்க ஆதரவுப் போக்கு காரணமாகவே, இந்தியா இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் அளிக்க முன் வருகிறது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா வந்தால், அவரின் ரஷிய ஆதரவுப் போக்கு வெளிப்பட்டால் இந்தியாவின் நிலைமை மாறிவிடும் என்பதுதான் எங்கள் சந்தேகம். நமக்கோ ஈழம் வேண்டும். இந்தியாவின் ஆயுதப் பயிற்சியை நாம் பெறாது போனால் ஏனைய அமைப்புகளின் ராணுவ பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாது நாம் அழிந்து போக நேரிடும். எமது அழிவு தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக முடியும். எனவே இந்திய அரசு காலந்தாழ்த்தி எம்மை அணுகி, எமக்கு வரையறுக்கப்பட்ட அளவில் உதவியும் - பயிற்சியும் தர முன்வந்ததை ஏற்றுக் கொள்வோம்'' (இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்னையும் - எல்.டி.டி.ஈ. வெளியீடு - 1987) என்று கூறியதுடன் சென்னைக்கு வரவும் சம்மதித்தார்.
இதையொட்டி பிரபாகரன் தமிழகம் வந்தார் "ஒரு நள்ளிரவில் பாண்டிச்சேரியில் "ரா' அதிகாரிகளை பிரபாகரன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பிரபாகரன் பாலசிங்கம் மற்றும் "ரா' அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். சந்திப்பு முடிந்ததும் தம்பியும் (பிரபாகரன்), பாலுவும் சிரித்த முகத்துடன் வெளியே வந்தனர்' என்று அடேல் பாலசிங்கம் எழுதிய ‘பட்ங் ஜ்ண்ப்ப் ற்ர் ஊழ்ங்ங்க்ர்ம்’ நூலில் குறிப்பு உள்ளது.
இந்தச் செய்தியை உறுதிப்படுத்துவது போன்று பிரபாகரன் வரலாற்றை எழுதியுள்ள நாராயணசாமியும் தனது நூலில், ""டெலோ இயக்கத்தினருக்கு பயிற்சி அளிப்பது குறித்து தனது கோபத்தை பிரபாகரன் வெளிப்படுத்தி அதற்கான காரணகாரியங்களையும் விளக்கினார். பிரபாகரனை வசப்படுத்தும் நோக்கில் "ரா' அதிகாரிகள் அவருக்கு சந்திப்பின் நினைவாக ஒரு பரிசு என்று கூறி 7.6 ம்ம் ஜெர்மன் லுகர் துப்பாக்கியை பரிசாக அளித்தார்கள்'' என்று கூறியிருக்கிறார்.
எல்.டி.டி.ஈ.-யைச் சேர்ந்த 200 பேருக்கு பயிற்சி அளிக்க முடிவானது. இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், "500 பேர் கொண்ட மந்தையை வைத்திருப்பதற்குப் பதிலாக, கட்டுப்பாடும் மன உறுதியும், துணிச்சலும் கொண்ட 50 பேர் போதுமானது' என்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு டேராடூன், தில்லி உள்ளிட்ட வடஇந்தியாவின் பல பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பல பகுதிகளில் பல இடங்களில் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்தார்கள். அவர்களுக்கான தங்குமிடம் உணவு போன்ற வசதிகளை தமிழக அரசு செய்தது. உணவுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் பொருள்கள் வழங்க ஏற்பாடாகியிருந்தது, வெளியூர் செல்ல போக்குவரத்து வசதியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது.
பயிற்சி பெற்ற போராளிகளின் எண்ணிக்கை போதாது என்று மூன்றாவது ஏஜென்சி மூலம் இந்திரா உணர்ந்ததும், ஒவ்வொரு குழுவினரும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி "ஆட்கள்' சேர்த்தார்கள். இவையெல்லாம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாகவே நடந்ததால், அதிபர் ஜெயவர்த்தனாவை அச்சப்பட வைத்தது.
நாளை: ஐ.நா. சபையில் பண்ருட்டி ராமச்சந்திரன்!
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=98169&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com