'ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 58: அச்சத் தீவாக மாறிய கச்சத்தீவு
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் ராஜீய உறவு இருக்கிறது என்பதையும், அமெரிக்கா, வியன்னா ஒப்பந்தத்தின் கீழ் இந்த இரண்டு நாடுகளையும் பாதுகாக்கக் கூடிய கடமையில் இருக்கிறது என்பதையும் 1984 மே 25-ஆம் தேதியன்று அமெரிக்கத் தூதுவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி தெளிவாக்கியது. ""இஸ்ரேலின் நலனைக் காக்கும் பிரிவு ஒன்று இலங்கை அமெரிக்கத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ளது. அது இஸ்ரேலிய அதிகாரிகளின் மேற்பார்வையில் இயங்கும்'' என்று அவர் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.
இலங்கைக்கு இஸ்ரேலினது மொஸôத்தின் வருகை பற்றி யாருக்கேனும் கொஞ்ச நஞ்ச சந்தேகம் இருக்குமானாலும் அதனையும் இலங்கைப் பாதுகாப்பு மந்திரி அதுலத் முதலி அடியோடு போக்கிவிட்டார்.
""தமிழர்கள் மற்றும் அவர்களது பயங்கரவாதத்தை எதிர்க்கச் சிங்கள மக்கள் அனைவருக்கும் ஆயுதம் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இல்ரேலிய உள்நாட்டு பாதுகாப்பு ஏஜென்சியான "ஷின்பெத்'தின் உதவியின் மூலம் விரிவான உளவு வலைப் பின்னலைக் கட்டமைக்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம். மேலும் இஸ்ரேலிய உளவு ஏஜெண்டுகள் மூலம் சிங்கள வீரர்கள் பெற்ற பயிற்சியானது மிகச் சிறப்பான ஒன்றாகும். இதுவரை இப்படி ஒரு பயிற்சியை அவர்கள் பெற்றதில்லை...'' இப்படி அதுலத் முதலி பெருமிதத்துடன் பேசியிருக்கிறார்.
இவரால் புகழப்படும் "மொஸôத்'தின் கடந்த கால வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், நெஞ்சம் நடுங்கும்; உதிரமும் உறைந்துவிடும்.
1970-ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவால் வெளியேற்றப்பட்டவர் டேவிட் மாட்னி என்ற இஸ்ரேல் நாட்டு ராஜதந்திரி.
இவர் இலங்கையில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்குக்காக உளவு வேலை பார்த்த குற்றத்திற்காகத்தான் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா இவரை இலங்கையை விட்டுத் துரத்தி அடித்தார். அதே டேவிட் மாட்னி, இலங்கை வந்தவுடன் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் ""எங்கள் நட்பை நாங்கள் புதுப்பித்துக் கொண்டது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்'' என்று கூறியுள்ளார்.
ஆனால் தமிழ் மக்களோ அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தார்கள். மொஸôத் இலங்கைக்குள் இறங்கிய சில நாள்களிலேயே, தமிழர்களின் ரத்தம் ஆறாக ஓடியது. சித்திரவதைக் கொடுமைகள் உச்சநிலைக்கு வந்துவிட்டன. ராணுவமே இத்தகைய கொடுமைகளில் இறங்கலாமா... சொந்த மக்களைக் கொன்று குவிக்கலாமா என்று கேட்டதற்கு இலங்கை அரசின் பதில் என்ன தெரியுமா...?
"இலங்கை ராணுவத்தை நாங்கள் நவீனமயப்படுத்துகிறோம்' என்பதுதான்!
இதுபற்றி ஜூன் மாதம் 2-ஆம் தேதி வெளிவந்த டைம்ஸ் ஆப் இந்தியா இதழ்:
""இஸ்ரேல்-இலங்கை உறவு புதுப்பிக்கப்பட்டவுடன் சிங்கள ராணுவத்திற்கு மிகக் குறுகிய காலத்தில் அதிநவீன தொழில்நுட்ப ரீதியாகவும், தந்திரோபாய ரீதியாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது'' என்று கூறுகிறது.
மேலும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான கொலை வெறிப் பயிற்சி அளிக்க இலங்கை அரசு தேர்ந்தெடுத்த இடம் எது தெரியுமா...?
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள, ஒரு காலத்தில் இந்தியாவிற்குச் சொந்தமாய் இருந்த ""கச்சத்தீவு''.
இந்தக் கச்சத் தீவைத்தான் இந்திரா காந்தி அரசு 1974-ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தாரைவார்த்துக் கொடுத்தது.
கச்சத் தீவை இப்படி அநியாயமாக தானம் கொடுக்கலாமா என்று கேட்டபோது, இந்திரா காந்தி அரசு சொன்ன காரணம்:
""லால்பகதூர் சாஸ்திரியும், ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தம் காலாவதி ஆகாமல் காப்பாற்றவும்-இலங்கையுடன் நல்லெண்ண நட்புறவு கொள்வதற்கு ஓர் அடையாளமாகவும்தான் கச்சத் தீவு இலங்கைக்கு அளிக்கப்படுகிறது'' என்பதே!
இந்த விளக்கத்தைச் சொல்லி அப்போது தமிழக மக்கள் கிளப்பிய எதிர்ப்புக்குரலை வெற்றிகரமாக அடக்கிவிட்டார் இந்திரா காந்தி. எந்தக் கச்சத் தீவை இலங்கைக்குப் பட்டா செய்து கொடுத்து, இந்திய-இலங்கை நட்புறவை வளர்க்கப் போவதாக மார்தட்டினாரோ அதே கச்சத் தீவு இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடமாக, இந்திய மக்களுக்கு அச்சம் தரும் அச்சத் தீவாக மாறிவிட்டது.
கச்சத் தீவில் சிங்கள ராணுவம் பயிற்சி மேற்கொண்ட பிறகு இலங்கையின் ஒடுக்கு முறையின் கொடூரம் கடுமையாக அதிகரித்தது.
வல்வெட்டித்துறை, மன்னார் போன்ற கடற்கரைப் பகுதிகளில், விடுதலைக்குப் போராடும் தமிழ் இளைஞர்களை ஒடுக்குவது என்ற பெயரால் கடற்கரைப் பகுதியில் ""துடைத்து ஒழிக்கும்'' திட்டம் ஒன்று நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
""துடைத்து ஒழிப்பது'' (Search and destroy) என்பது பாலஸ்தீனர்களையும் அரபுக்குடிகளையும் விரட்டி அடிக்க யூதர்கள் கடைப்பிடித்த ராணுவ நடவடிக்கை.
அதன்மூலம் எண்ணற்ற பாலஸ்தீனிய பகுதிகளும் அகதிகள் முகாம்களும் பீரங்கியின் துணையோடு கொளுத்தப்பட்டு அங்கு வாழ்ந்த மக்கள் வெகுதொலைவிற்கு ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்ட அதே கதை இலங்கையில் கோலாகலமாக மொஸôத்தின் பாணியைப் பின்பற்றி நடந்தேறியது.
குறிப்பாகச் சொல்வதானால் இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு ""நாடற்ற (யூத) மக்களுக்காக, மக்களற்ற நாடு'' என்ற முழக்கத்தை முன்வைத்து யூதர்கள் பாலஸ்தீனியர்களின் சொந்த நாடு அவர்களிடமிருந்து எப்படி அபகரிக்கப்பட்டதோ அதேபோல பாரம்பரிய தமிழ்க் குடிகளிடமிருந்து அவர்களது ஈழ மண் சிங்களவர்களால் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=96363&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com