ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-62: ஐ.நா. சபையில் பண்ருட்டி ராமச்சந்திரன்!
பண்ருட்டி ராமச்சந்திரன், கே.சி.பந்த், எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தி, ஆர்.வெங்கட்ராமன். படம் உதவி: இதயக்கனி எஸ்.விஜயன்
பிரதமர் இந்திராவும் இந்திய அரசும் இலங்கைப் பிரச்னையைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கி இருப்பதும், தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராவதையும் பார்த்த ஜெயவர்த்தன அரசு நிஜமாகவே பயப்படத் தொடங்கியது.
போதாக்குறைக்கு, இலங்கை இனப் பிரச்னை ஐ.நா.வில் பெருமளவில் விவாதிக்கப்பட்ட சம்பவமும் ஜெயவர்த்தனாவை நெருக்கிற்று.
1961-இல் இதேபோன்று தமிழர்கள் தாக்கப்பட்டபோது, "இலங்கையில் தமிழினமும், தமிழ் மொழியும் பூண்டோடு அழிக்கப்படுவதில் இருந்து காப்பாற்ற - உண்மை நிலை அறிய ஒரு குழுவை அனுப்பவும் - காலதாமதமின்றி ஐ.நா. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழர்கள் வேண்டிக் கொள்கின்றனர்' என்று அண்ணா ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டுகோள் விடுத்துக் கடிதம் அனுப்பினார்.
அதேநிலையைப் பின்பற்றி, இலங்கை இனப்படுகொலையை ஐ.நா. மன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் இந்திரா காந்தியை முதல்வர் எம்.ஜி.ஆர். வலியுறுத்தி வந்தார். எம்.ஜி.ஆரின் இந்தக் கோரிக்கையை ஏற்று, இந்திரா காந்தி தனது தலைமையில் ஒரு குழு சென்று ஐ.நா.வில் முறையிடுவது என்று முடிவெடுத்தார். அக்குழுவில் தமிழகத்தின் சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரனையும் இடம்பெற வைத்தார், முதல்வர் எம்.ஜி.ஆர்.
பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான குழுவில் ஜி.பார்த்தசாரதி, பி.சி.அலெக்சாண்டர், பண்ருட்டி ராமச்சந்திரன், வைகுந்தவாசன் மற்றும் வெளிவிவகாரத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் இடம்பெற்றனர். இந்திரா காந்தி அமெரிக்காவில் ஐந்து நாட்கள் தங்கி, ஐ.நா. கூட்டத்திற்கு வந்திருந்த நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் தூதர்கள் அனைவரையும் சந்தித்து இலங்கை பிரச்னைத் தொடர்பாக விளக்கினார். அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பிரமுகர்களைச் சந்தித்து உரையாடவும் நேரம் ஒதுக்கி, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பெரஸ் டி.கொய்லர் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கு இலங்கை இனப் பிரச்னையில் என்ன இருக்கிறது என்பதே அப்போதுதான் புரியவந்தது. இந்தியா-இலங்கை என இரு நாடுகளின் பிரச்னையாக மட்டுமே இருந்த இலங்கைத் தமிழர் பிரச்னை - உலகம் முழுவதும் சர்ச்சை செய்யப்படும் மனித உரிமை மீறல் மற்றும் இனப்படுகொலை சம்பந்தப்பட்டதாக மாறியது அப்போதுதான்.
1983 அக்டோபரில் தொடங்கி 84 நாட்கள் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் 70 நாட்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்துகொண்டு இலங்கை இனப் பிரச்னைகளை விளக்கினார். "மக்களாட்சி நெறியினைக் கொள்கையாக ஏற்றுள்ள இலங்கையில், தமிழர்களின் பாதுகாப்புக்கும் சட்டபூர்வமான உரிமைகளுக்கும் உறுதி அளிக்கப்பட்டு, மற்ற குடிமக்களுக்குச் சமமாக, முழுமையாகக் குடியுரிமை வழங்குவதன் மூலம் மட்டுமே, இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, அமைதியாக, ஆனந்தமாக வாழ்ந்திட சுமுகமான தீர்வுகாண இலங்கை அரசு முன்வர வேண்டும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார். (அக். 21, 1983)
பண்ருட்டி ராமச்சந்திரன் மேலும் கூறுகையில், "மலையகத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியானது நமீபியாவில், தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்கள் கருப்பின மக்களுக்கு இழைத்த கொடுமைகளைப் போன்றது' என்று விளக்கினார்.
இப்படிக் கூறியதும் இலங்கை பிரதிநிதி ஐ.பி. ஃபொன்úஸகா, "இந்தியாவில் நெல்லி' பகுதியில் இஸ்லாமியருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின்போது உங்களின் உள்நாட்டுப் பிரச்னையில் இலங்கை தலையிட்டதா? நீங்கள் மட்டும் எங்கள் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிடுகிறீர்களே? என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், "இந்தியாவில் ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகளில் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்வதில்லை. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் அரசு செயல்படுகிறது அவர்களைப் பாதுகாக்க ஆவன செய்கிறது. உங்கள் நாட்டின் நிலைமை தலைகீழாக அல்லவா இருக்கிறது? இலங்கையில் நடப்பது இனப் படுகொலை. அதனால் அகதிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். அவர்கள் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள். லட்சக்கணக்கில் தோட்டத் தொழிலாளர்களாக குடியுரிமை இல்லாமல் அவர்கள் பல நூற்றாண்டு காலமாக அவதிப்படுகிறவர்கள்' என்று எடுத்துரைத்தார்.
"இலங்கையில் இருந்து இனப்படுகொலை காரணமாக லட்சக்கணக்கில் அகதிகள் ஓடிவருகிறார்கள் என்றும் இதனால் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் திடீர் செலவுகளையும், விவரமாக எடுத்துரைத்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
இவரது உரை ஐ.நா. மன்றத்தில் பிரெஞ்சு, ரஷிய, சீன, அரபி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கபட்டபோது, பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். இலங்கைப் பிரதிநிதி ஃபொன்úஸகா வெட்கித் தலைகுனிந்தார்.
ஐ.நா. சபை பொதுச் செயலாளர் ஃபெரஸ் டி. கொய்லர், இலங்கையில் தமிழர் பிரச்னை என்பது மனித உரிமைகள் மீறலாக இருக்கிறது' என்பதை ஒப்புக்கொண்டார்.
ஐ.நா. சபையில் தமிழர் பிரச்னையை எடுத்துக்கூறி, அது வெற்றியடைந்ததையொட்டி தமிழகம் திரும்பிய பண்ருட்டி ராமச்சந்திரனை, முதல்வர் எம்.ஜி.ஆர். விமான நிலையம் சென்று, ஊர்வலமாக அழைத்து வந்தார்.
இலங்கை இனப் பிரச்னை ஐ.நா. வரை சென்றதும், போராளிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்து ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்த செய்கையும் ஜெயவர்த்தனாவைத் தமிழர்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வர வைத்தன.
நாளை: ஜெயவர்த்தனா தில்லி வந்தார்!
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=98643&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com