கடைசி சாட்சியின் கதறல் வாக்குமூலம்--விகடன்
சிங்களப் படையினரின் கொத்துக் குண்டுகள், தமிழர்களின் மரண ஓலம் இவற்றுக்கிடையே ஈழப் போரின் இறுதி நாள் வரை அங்கேயே இருந்து, நடந்ததை அறிந்து அவதானித்து வைத்திருக்கும் ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு...
சில நாட்களுக்கு முன் வன்னி செட்டிக்குளம் வதை முகாமிலிருந்து படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழகக் கரையேறியிருக்கிறார்..!
ஈழ நிலைமை என்ன? பிரபாகரனைப் பற்றிய மர்மங்களுக்கு விடை என்ன?
இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் இப்போதைய ஒரே சாட்சி திருநா வுக்கரசுதான். மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட திருநாவுக்கரசை நிறைய சிரமங்களுக்குப் பிறகு சந்தித்தோம். நம் பலத்த வற்புறுத்தலுக்குப் பிறகே பேசத் தொடங்கினார்.
''ஈழத்தின் கடைசிக்கட்ட நிலைமை எப்படி இருந்தது?''
''ராணுவம் அனைத்துப் புறமும் சூழ்ந்துவிட்டது. இனி தப்பிக்க முடியாது என்கிற எண்ணம் மக்களிடத்திலும் போராளிகளிடத்திலும் உருவாகி விட்டது. பங்கருக்குள் பதுங்கி இருந்த மக்கள், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிப் போகத் தொடங்கி விட்டார்கள். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாததால், போராளிகளும் திக்கற்று நின்றார்கள். திரும்பிய பக்கமெல்லாம் கதறல்... பிணங்கள் சிதறிக் கிடந்த பாதைகளில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய மனதிலுமே இதுதான் இறுதி நிமிடம் என்கிற பதைபதைப்பு... இறப்பைக் காட்டிலும் இறக்கப் போகிறோமே என்கிற பதற்றம் ரொம்பக் கொடுமையானது... வார்த்தைகளால் சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் தெரியும்...''
''இறுதி நெருக்கடிகளை புலிகள் எப்படி சமாளிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்?''
''புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம். அதனால் போரின் இறுதி நிலை கொடூர மானதாகவும், தாங்க இயலாததாகவும் இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். புலிப்படைத் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் இருந்த அசாத்திய நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் தகர்ந்து போனது.
ஆரம்பத்தில்... கிளிநொச்சியைத் தாண்டி ராணுவத்தால் முன்னேற முடியாது என்று புலிகள் உறுதியாக நம்பி இருந்தனர். ஆனால், ராணுவம் அசுர பலத்தால் அடுத்தடுத்த நிலப் பகுதிகளை வீழ்த்தத் தொடங்கி விட்டது. அதன்பிறகு மக்களுக்கும் 'இனி ஜெயிக்க முடியுமா' என்கிற தயக்கமும் பயமும் ஏற்பட்டது. ஆனாலும், பிரபாகரன் கொஞ்சமும் தளராமல் உறுதியோடு போரை முன்னெடுத்து நடத்துவதில் தீவிரமாக இருந்தார். எத்தகைய சூழலிலும் தோல்வி குறித்த அச்சம் அவரிடத்தில் இல்லை. ஆனால், இறுதி நேரம் முழு நம்பிக்கையும் தகர்ந்து போகிற அளவுக்குக் கொடூரமானதாக மாறி விட்டது.
பிரபாகரனை குறிவைத்துத் தாக்குதல் நடப்பது தெரிந்து, 600 புலிகள் அவரை அனந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நான்கு புறமும் ராணுவம் சூழ்ந்துகொண்டு தாக்குதலை நடத்தியது. அப்போது பிரபாகரனுடன் அசாத்திய திறமை படைத்த கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட போராளிகளும் அடுத்தநிலை தளபதிகளும் பாதுகாத்து நின்றனர். அந்த இலக்கை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்த, அதில் புலிகளுக்கு நினைத்துப்பார்க்க முடியாத பேரிழப்பு ஏற்பட்டது. பிரபாகரனின் அதிமுக்கிய தளபதிகள் அதில் கொல்லப் பட்டார்கள். ஆனாலும், பானு உள்ளிட்ட முக்கிய தளபதிகளால் அந்தத் தாக்குதலில் இருந்து நூலிழையில் காப்பாற்றப்பட்டார் பிரபாகரன்!''
''கடைசி நேரத்தில் புலிகள் சமாதானத் துக்குத் தயாரானதாகவும், அதனை சிங்கள ராணுவம் சட்டை செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறதே?''
''ராணுவத்தின் அடுத்தடுத்த கொடும் தாக்குதல்களை சமாளிக்க முடியாது என்பதை, புலிகளின் முக்கியத் தளபதிகளே தெரிந்து வைத்திருந்தார்கள். இதையடுத்து, அரசியல் பிரிவின் பொறுப்பாளரான பா.நடேசன், சமாதானப் பிரிவு பொறுப்பாளரான புலித்தேவன் உள்ளிட்டவர்கள் பிரபாகரனிடம் பேசினார்கள். ஆனால், பிரபாகரன் அமெரிக்க அரசை உறுதியாக நம்பினார். 'ஹிலாரி கிளின்ட்டனிடம் நம்ம ஆட்கள் பேசி விட் டார்கள். அதனால் சீக்கிரமே அமெரிக்கா நம் விவகாரத்தில் தலையிடும். நாம் இன்னும் மூன்று நாட்கள் வரை தாக்குப்பிடிப்போம்' என பிரபாகரன் நம்பிக்கையோடு சொன்னார். ஆனால், அமெரிக்காவின் உதவி கைகூடுவதில் சில சிக்கல்கள் உருவாகி விட்டன. இந்தி யாவைக் கடந்து அமெரிக்காவால் உதவ முடியாது என்பதை புலித் தலைவர்கள் தாமதமாக... அதாவது காலம் கடந்தபிறகே புரிந்துகொண்டனர். இதற்கிடையில், ராணுவம் முற்றாக வளைத்து விட்டது. கடைசி நேரத்தில் சரணடைவது குறித்து நடேசன், பிரபாகரனிடம் பேசினார். 'நீங்கள் சரணடையச் செல்லுங்கள்... நான் களத்திலேயே நிற்கிறேன்!' என உறுதியாகச் சொல்லி விட்டார் பிரபாகரன். இந்தக் கணத்தில்தான் நாங்கள் மக்களோடு மக்களாகக் கலந்து ராணுவப் பகுதிக்கு போனோம். கடந்த மே 16-ம் தேதி வரை புலித் தலைவர்கள் பற்றிய நிலவரம் இதுதான். ஆனால், அடுத்தடுத்த நாளிலேயே புலித் தலைவர்கள் வீழ்த்தப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன.''
''வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன் உள்ளிட்ட வர்களை ராணுவம் சுட்டுக் கொன்றதாக வந்த செய்திகள் குறித்து..?''
''நடேசன் சமாதானத்துக்கு முயன்றது எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனால், சமாதான விஷயத்தை சிங்களத் தரப்புக்கு சொன்னவர்கள், அதனை எப்படி முன்னெடுத்தார்கள்என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. சிங்கள ராணுவத்தின் கட்டமைப்புப்படி சமா தானத் தகவல் பல கட்டங் களைத் தாண்டித்தான் சம்பந் தப்பட்ட பட்டாலியன் வீரர்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். அந்த இடைவெளிக்குள் துயரங்கள் நடந்தேறி இருக்க வாய்ப்பிருக் கிறது. அந்தக் கணத்தில் நாங்கள் முகாம் பக்கம் வந்து விட்டோம்... அதனால், என்ன நடந்தது என்பது குறித்து உறுதி யான தகவல் இல்லை!''
''பிரபாகரனின் நிலை என்ன ஆனது?''
''சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. 'சரணடைவதைவிட சாவதே மேல்' என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது!''
''பிரபாகரனின் பிரேதம் என சிங்கள ராணுவம் காட்டிய படம்..?''
''அதற்கு முன்னர் நான் பிரபாகரனை பார்த்திருக்கிறேன். முக அமைப்புகள் எல்லாம் அவரைப் போலவேதான் இருந்தது. ஆனாலும், அதில் வேறேதும் ஜோடிப்பு செய்யப் பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சிருந்தது. அடுத் தடுத்த தினங்களில் பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை முக்கால்வாசி மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள். பிரபாகரனைப் பிடிக்காதவர்கள்கூட, அவர் மரணித்ததாக வந்த செய்தியை நினைத்துக் கலங்கினார்கள். ஏனென்றால், தமிழீழப் போராட்டத்துக்கு அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது தமிழ் மக்கள் மனதில் ஆணியாக அறையப் பட்டிருக்கும் உண்மை.''
''பிரபாகரனின் குடும்பத்தினர் தப்பி விட்டதாக சிலரும், அவர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிலரும் முரணான கருத்துகளைச் சொல்கிறார்களே?''
''பிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையுமே ஈழத்து மண்ணில்தான் வைத்திருந்தார். போர் நெருக்கடியான நிலைக்கு வருவதற்கு முன்னரே, அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்திருக்க முடியும். ஆனாலும், அதில் பிரபாகரனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. இரண்டு மகன்களையும், மகள் துவாரகாவையும் மக்கள் பார்க்கும் படியான நிலையில்தான் அவர் வைத்திருந்தார். தன்னுடைய குடும்பத்தினரை மட்டும் வெளியே அனுப்பினால், அது புலிகள் இயக்கத்தின் பிடிப்பை உடைத்து விடும் என்பதை அவர் உறுதியாகத் தெரிந்து வைத்திருந்தார். சார்லஸ் ஆண்டனியை போர்க்களத்தில் நிறுத்தி இருந்தார். போர் மிகத் தீவிரமாக உருவெடுத்தபோது, பிரபாகரனின் மனைவி மதிவத னியை வெளியே அனுப்ப சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால் 'மதிவதனி வெளியேறக் கூடாது...' என உறுதியாக அறி வித்து விட்டார் பிரபாகரன். 'மக்கள் வேறு... குடும்பத்தினர் வேறு...' என்று அவர் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததில்லை.
உண்மையைச் சொல்வதானால், 'போரின் முடிவு தன் குடும்பத்தினர் கூண்டோடு அழிவதாகக்கூட இருக்கும்' என்பதையும் அவர் அனுமானித்து வைத்திருந்தார். அதற்காகவே பிரத்யேகமாக ஒரு மருத்துவரைச் சந்தித்து தன்னுடைய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஸ்பெஷலாக சயனைடுகளை தயாரிக்கச் சொல்லி வாங்கி வைத்திருந்தார். அதனைக் கொடுத்தனுப்பிய மருத்துவரே என்னிடம் சொன்ன விவரம் இது. சாவை பற்றிய அச்சமோ தயக்கமோ பிரபாகர னுக்கு ஒரு போதும் இருந்ததில்லை என்பதற்கு, இந்த ஒரு சம்பவமே போதும்!''
''பிரபாகரனின் குடும்பத்தினர் யாரும் தப்பித்திருக்க வாய்ப்பில்லையா?''
''போரின் இறுதி நேரம் நான் தங்கி இருந்த பங்கருக்கு அருகே ஒரு பெரிய பங்கர் இருந்தது. அங்கே நான் போன போது, அதில் பிரபாகரனின் பெற்றோர் தங்கி இருந்தார்கள். அவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, கதிர்காமர் முகாமில் வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களை ராணுவம் சித்ரவதைகள் ஏதும் செய்யவில்லை. அதன்பிறகு, பாதுகாப்பு கருதி ஒரு ஸ்பெஷல் அறையில் வைத்து, அவர்களை ராணுவத் தரப்பு மரியாதையுடன் நடத்துவதாக எனக்குத் தகவல் வந்தது. பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி போரில் மடிந்ததை நேரில் பார்த்தவர்களே உறுதி செய்திருக்கிறார்கள். அதே நேரம் துவாரகா, பாலச்சந்திரன், மதிவதனி ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது முகாமில் இருந்த எனக்கு சரிவரத் தெரியவில்லை!''
''பாலச்சந்திரன் கொல்லப்பட்டது போன்ற படம் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறதே?''
''பாலச்சந்திரன் போரின் கடைசி வரை ஈழத்தில் இருந்தது உண்மை. மற்றபடி, அவர் எப்போது பிடிபட்டார் என்பது பற்றியெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அவர் கொல்லப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதுதான் என் சிந்தைக்கு எட்டிய விஷயம்.''
''புலிகள் தரப்பில் பலரும் காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையா?''
''போரின் இறுதி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் ராணுவத்திடம் சரணடைந் தார்கள்.மொத்தமாக புலிப்படையில் 24ஆயிரம் புலிகள் இருந்தார்கள். போரின்போது ஏழாயிரத் துக்கும் மேற்பட்ட புலிகள் வீரச்சாவு அடைந் தார்கள். இதுதவிர, இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட புலிகள் இப்போது காடுகளுக்குள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு இப்போதைக்கு சாத்தியங்கள் ஏதுமில்லை. அவர்களை ஒருங் கிணைக்க இப்போதைக்கு வழியுமில்லை!''
''பொட்டு அம்மான் பற்றி எந்தத் தகவலும் இல்லையே..?''
''பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட போராளித் தலைவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்... பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மையெனில், அது பொட்டு அம்மானைக் கொன்ற பிறகுதான் நடந்திருக்க முடியும். பொட்டு அம்மான் குறித்து ராணுவத்துக்கே சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதுதான் சர்ச்சைகளுக்கு விதை போட்டிருக்கிறது. அதே நேரம், பொட்டுஅம்மான் ராணுவத்தின் கஸ்டடி யில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை!''
''இந்தியத் தேர்தல், ஈழத்து நிலைமையை மாற்றும் என புலிகள் எதிர்பார்த்தார்களா?''
''இந்தியாவில் காங்கிரஸ் அரசுதான் மறுபடியும் அமையும் என்பதை ஈழத்தில் இருந்த அடித்தட்டு மக்கள்கூட நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். மாற்று அணி வலிமையானதாக இல்லை என்பது எல்லோருக்குமே புரிந்தது. அதனால் இந்திய ஆட்சியில் மாற்றம் வரும் என்று புலிகள் எண்ணவே இல்லை. இருந்தாலும், தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாக எழும்பிய ஒற்றுமை, ஈழ மக்களை நெகிழ வைத்தது!''
- இரா.சரவணன்படம்: வி.செந்தில்குமார்
http://www.appaa.com/index.php?option=com_content&view=article&id=109:2009-07-18-05-33-18&catid=35:2009-07-08-13-09-17&Itemid=54
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com