பிரபாகரன் - பா.ராகவன்!
மே 19-ஆம் தேதி பிரபாகரனின் உடல் நந்திக்கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்திருந்தது. மே 26-ஆம் தேதி 'பிரபாகரன் - வாழ்வும், மரணமும்!' என்ற தலைப்பில் கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. பிரபாகரனின் மரணத்தை உலகப் புத்தக வரலாற்றில் முதன்முறையாக பதிவு செய்திருக்கிறது கிழக்கு. இந்த வேகம் அசாத்தியமானது. மாவீரர் தினத்தின் போது பிரபாகரன் தோன்றி ஈழமக்களுக்கு தன்னுடைய செய்தியை அறிவிப்பாரேயானால் கதீட்ரல் சர்ச்சில் கிழக்கு பதிப்பகம், நூலாசிரியர் பா.ராகவனும் பாவமனிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளோடு இந்த விமர்சனத்தை தொடங்குகிறேன்.
பிரபாகரனைத் தவிர்த்து ஈழவரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. உலகத் தமிழர்களுக்கு ஒரிஜினல் ஹீரோ. ஈழமக்களுக்கு கடவுளைப் போன்றவர். அவரது சிந்தனைகளை, குணாதிசயங்களை, செயல்பாடுகளை ஈழத்தமிழர்கள் உட்பட யாரும் இதுவரை மிகையின்றி, சார்பின்றி சொன்னதில்லை. தமிழர் மனதில் கட்டப்பட்டிருக்கும் பிரபாகரன் பிம்பமும் அத்தனை துல்லியமானதல்ல. இந்நிலையில் பிரபாகரனுக்கு டயரி எழுதியிருக்கும் பழக்கம் இருக்குமேயானால், அந்த டயரியை வாங்கிப் பார்த்து எழுதியதைப் போல நுணுக்கமாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
இதே பதிப்பகம் ஆறுமாதக் காலத்துக்கு முன்பாக 'பிரபாகரன்' என்ற புத்தகத்தை வேறொரு எழுத்தாளர் எழுதி வெளியிட்டிருக்கிறது. அதே மனிதரின் வாழ்க்கையை இன்னொருமுறையும் புத்தகமாக பதிவு செய்திருப்பதில் இருந்தே பிரபாகரனுக்கான அசைக்க முடியாத இடத்தின் அவசியத்தை உணரலாம். முதல் புத்தகத்துக்கும், இப்புத்தகத்துக்கும் கூட நிறைய வேறுபாடுகளை நடை அடிப்படையில் உணரலாம். இந்நூல் குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்ததால் வாரத்துக்கு வாரம் அத்தியாயத்தின் முடிவில் ஏற்றப்படும் டெம்போவை நூல்முழுக்க காணமுடிகிறது. கிழக்கின் பாணியான வழக்கமான ஓப்பனிங் பில்டப், ஆல்பிரட் துரையப்பா படுகொலையோடு தொடங்குகிறது.
இந்நூலில் இரண்டு ஆச்சரியங்கள். ஒன்று பிரபாகரன். மற்றொன்று பா.ராகவன். பிரபாகரன் ஆச்சரியப்படுத்துவதில் அதிசயம் ஒன்றுமில்லை. யாரும் இதுவரை அறிந்திடாத நுணுக்கமான விவரங்களை திரட்டியிருப்பதில் பாரா நூல்முழுக்க ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஆல்பிரட் துரையப்பாவை போட்டுவிட்டு நேரே சுன்னாகம் போய், பஸ் ஸ்டாண்டில் இறங்கி, 769ஆம் நம்பர் பஸ்ஸுக்காக காத்திருந்து ஏறி.. இவ்வாறாக பிரபாகரன் ஏறிச்சென்ற பஸ்ஸின் ரூட் நம்பரைக் கூட பதிவு செய்திருக்கும் லாவகம்.
சில இடங்களில் இந்த நுணுக்கம் எழுத்தாளரின் வேகத்தில் சறுக்கியிருப்பதாகவும் வாசகனாக உணரமுடிகிறது. 70களின் தொடக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் தமிழக அரசியல் தலைவர்களிடம் ஆதரவு திரட்ட தமிழகத்துக்கு படையெடுக்கிறார்கள். அவர்கள் முக்கியமாக சந்திக்க விரும்பியது பெரியாரை, குறிப்பாக அண்ணாதுரையை என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அண்ணாதுரை காலமான நிலையில் கலைஞரை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். (பார்வை : பக்கம் 34)
சுயம்புவாக பிரபாகரன் உருவான வரலாறு எளிமையான, ஆனால் கவரக்கூடிய மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரே அவர் இயக்கத்துக்கான பயிற்சிமுறைகளை ஏற்படுத்தியது. வெளிநாடுகளில் வற்புறுத்தி பயிற்சிபெற்ற சிலரும் 'தலைவரோட பாடங்களுக்கு ஈடாகாது' என்று ஒப்புக்கொண்ட அழகும், அழகோ அழகு.
80களின் தொடக்கத்தில் வல்லரசுகளுக்கான பனிப்போர் மாதிரி நடந்த கலைஞர் - எம்.ஜி.ஆர் ஈழ ஆதரவுப் போரை பதிவு செய்திருப்பதில் நூலாசிரியரின் சார்புத்தன்மை வெளிப்படுகிறது. கிட்டத்தட்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பேசுவதையே நூலாசிரியரும் பேசுகிறார். எம்.ஜி.ஆருக்கு இவ்விவகாரத்தில் புனிதத்தன்மையை ஏற்படுத்தும் விதமான சிந்தனை. கலைஞர் அப்போதுதான் முதன்முறையாக, அதுவும் எம்.ஜி.ஆர் ஆர்வம் காட்டியதால் இவ்விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்பது போன்ற தொனி தெரிகிறது. கலைஞர் அதற்கு முன்பாகவே பலமுறை ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து தமிழக பொதுமேடைகளில் பேசியிருக்கிறார். இலங்கைக்கு செல்ல கலைஞருக்கு மட்டும் விசா கொடுக்கக்கூடாது என்று சிங்கள ஆட்சியாளர்கள் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருந்ததாகவே கூட அக்காலத்தில் பேசிக்கொள்வார்கள்.
இந்தியாவில் ஈழம் குறித்து பரவலாகப் பேசப்பட காரணமாக இருந்த மதுரை டெசோ மாநாட்டைப் பற்றி நூலில் பெரியதாக ஏதும் காணக்கிடைக்கவில்லை. வாஜ்பாய், பகுகுணா உள்ளிட்ட தேசிய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிகழ்வு அது. டெசோவில் புலிகள் பங்கேற்க மறுத்ததற்கு பிரபாகரனின் நியாயம் என்னவென்றும் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.
550971231 - இந்த எண் என்னவென்று யாருக்காவது தெரியுமா? உலகம் சுற்றும் மர்ம வாலிபன் கே.பி. என்கிற குட்டி என்கிற குமரன் பத்மநாதன் என்கிற செல்வராஜா குமரனின் தாய்லாந்து நாட்டு குடியுரிமை எண். 1984ல் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவரது நடவடிக்கைகள் இருட்டானவை. இவர் யார்? என்ன செய்துக்கொண்டிருக்கிறார்? என்பது கடந்த சிலமாதங்களாக மட்டுமே ஒவ்வொன்றாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அவரது குடியுரிமை எண் உள்ளிட்ட பல விவரங்களை தேடி தேடி எழுதியிருக்கிறார் பா.ராகவன்.
1983 ஜூலைக்கலவரத்தின் கொடூரத்தை சில பத்திகளிலேயே உணரவைத்து, அதிரடியாக அதற்கு பதிலடி தந்த புலிகளின் வீரத்தை வர்ணிக்கிறார். கமாண்டர் செல்லக்கிளி தலைமையிலான அந்த மோதலில் பிரபாகரன், புலேந்திரன், கிட்டு உள்ளிட்டோரும் நேரடியாக பங்கேற்கிறார்கள். இயக்கத்தின் தலைவரே கமாண்டர் ஒருவரின் தலைமையை ஏற்று போரிடும் பாங்கு அற்புதம். பதிமூன்று சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்ட அத்தாக்குதலில் தான் பிரபாகரனின் களமாடும் திறமை வெளிப்பட்டது. ஒன்பது பேரை வீழ்த்தியிருந்தார் பிரபாகரன். ஜி3 ரக துப்பாக்கியப் பயன்படுத்திய பிரபாகரன் அதற்காக செலவிட்டது ஒன்பது குண்டுகள். ஒரு துப்பாக்கி ரவையின் விலை இருபத்தி ஐந்து ரூபாய். இப்பகுதியை வாசிக்கும்போது உடலெல்லாம் சிலிர்க்கிறது. சந்தேகமே வேண்டாம். இதுவரை உலகம் கண்ட மாவீரர்களில் பிரபாகரனுக்கு நாம் முதலிடம் தயங்காமல் கொடுக்கலாம்.
பிரபாகரன் அற்புதமாக சமைப்பார். கோழியடித்துக் குழம்பு வைப்பார். மீன் சமைப்பதில் பாலசிங்கம் கில்லாடி. பிரபாகரனின் தோழர்கள் துணி துவைப்பார்கள். வீடு பெருக்கி சுத்தம் செய்வார்கள். ஹாஸ்டல் வார்டன் மாதிரி அடேல் பாலசிங்கம் அத்தனை பேரையும் கட்டி மேய்ப்பார். சென்னை திருவான்மியூரில் பிரபாகரன் வாழ்ந்த தினங்களை ஒரு மேன்ஷன் வாசனையோடு விவரிக்கிறார் பாரா.
பிரபாகரனின் காதல் கூட ஒருமாதிரி முரட்டுத்தனமாகவே சொல்லப்படுகிறது. அதாவது விஜயகாந்த் பாணி காதல். செயல்வெறி வீரரை, நாட்டுக்காக தன்னைத்தானே நேர்ந்துக் கொண்டவரை காதலித்து மணந்தவர் மதிவதனி. பிரபாகரன் செய்த தியாகங்களில் சரிபாதியை இவருக்கும் விட்டுத்தருவதே நியாயம். இந்திய வரலாற்றில் நாடிழந்து காடும், பாலைவனமுமாக அலைந்த ஹூமாயுன் உடனேயே திரிந்த அவரது மனைவி நினைவுக்கு வருகிறார். ஹூமாயுனின் மனைவி மொகலாயரின் வீர வரலாற்றுக்குப் பரிசாக பெற்றெடுத்த அக்பரைப் போலவே மாவீரன் சார்லஸ் ஆண்டனியை ஈழத்துக்காக பெற்றுத் தந்தார் மதிவதனி.
ஈழத்தில் ஆயுதம் ஏந்திய போராளி இயக்கங்கள் கிட்டத்தட்ட முப்பதி ஒன்பது இருந்திருக்கின்றன. புலிகள் இயக்கம் தவிர்த்து ஏனைய இயக்கங்கள் இந்தியாவின் உளவுத்துறையான ரா அமைப்புக்கு அடிவருடிகளாக மாறிவிட்டன. புலிகள் இயக்கம் மட்டுமே என்றுமே 'ரா'வைச் சார்ந்து ஒத்து செயல்பட்டதில்லை. இந்நூலை வாசிப்பவர்கள் ஈழத்துக்கு வில்லன் சிங்களவனா இந்தியாவா என்று யோசிப்பார்கள். இந்திராகாந்திக்குப் பிறகு ராஜீவ் காலத்திலான இந்தியச் செயல்பாடுகளை விறுப்பு வெறுப்பின்றி பாரா எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக தீக்ஷித்தின் கை. புலிகள் இயக்கத்தில் துரோகிகள் களையெடுக்கப்பட்டதையும் (மாத்தையா போன்றவர்கள்) விறுவிறுப்பாக பேசிக்கொண்டே போகிறார்.
ஆனாலும் சகோதரப் படுகொலைகள் குறித்து புலிகளை மாதிரியே நூலாசிரியரும் 'ஆமாய்யா. ராவுக்கு அடிவருடி ஆனாங்க. போட்டுத் தள்ளினோம்' என்பது மாதிரி மிக லைட்டாக பேசுவது வருத்தத்தை தருகிறது. சிறீசபாரத்தினம் கிட்டுவால் கொடூரமாக போட்டுத்தள்ளப்பட்டதை ரொம்பவும் லேசான வார்த்தைகளில் நிரப்புகிறார். பிரபாகரனுக்கு இணையாக தமிழகத்தில் நேசிக்கப்பட்ட ஆளுமைகளில் சபாரத்தினமும் ஒருவர். அவர் படுகொலை செய்யப்பட்ட செய்தியை செய்தித்தாளில் வாசித்து கண்ணீர் விட்டவர்களை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர் வெளியேற்றம், இயக்கத்திலிருந்த இஸ்லாமியர்கள் கதி, மலையகத் தமிழர்கள் - இவர்களையெல்லாம் பாரா கண்டுகொள்ளவேயில்லை. அதுபோலவே கருணா வெளியேறிய சந்தர்ப்பம் பற்றிய தகவல்களும் மிகக்குறைவு. அமைதிப்படைச் செயல்பாடுகள், இந்தியாவோடு புலிகள் மோதவேண்டிய சூழலை விவரிக்கும்போது, புலிகள் இலங்கையோடு சேர்ந்து செயல்பட்டதையும் குறிப்பிட்டதாக தெரியவில்லை. இந்தியாவோடு பிரபாகரன் மோதவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய திலீபனின் மரணம் பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கலாம். அதே நேரத்தில் துணி வியாபாரிகளாகவும், குறி சொல்பவர்களாகவும் வேடமணிந்து ரா செயல்பட்டதை விலாவரியாக புன்னகைத்துக்கொண்டே எழுதிக்கொண்டு போகிறார் பாரா.
சகோதரப்படுகொலைகளை லேசாக எடுத்துக்கொண்ட நூலாசிரியர் ராஜீவ் படுகொலையை மிக சீரியஸாக எடுத்துக்கொண்டு புலிகள் செய்த மிகப்பெரியத் தவறு என்பதாக சாடுகிறார். அதற்கு முன்பாக ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பற்றி கோடிட்டு மட்டுமே காட்டுகிறார். அசோகா ஓட்டலில் பிரபாகரன் சிறைவைக்கப்பட்டாரா என்பது பற்றி பளிச்சென்று எழுதவில்லை. அதே நேரத்தில் சென்னையில் பிரபாகரன் மனைவி சிறைவைக்கப்பட்டதாக சொல்லப்படுவது பற்றியும் குறிப்புகள் எதுவுமில்லை. அந்த ஒப்பந்தத்தில் எம்.ஜி.ஆரின் பிரதிநிதியான பண்ரூட்டி ராமச்சந்திரனின் ரோலையும் சொல்லியிருக்கலாம்.
1991, திருப்பெரும்பெரும்புதூர் துன்பியல் சம்பவத்துக்குப் பிறகான பிரபாகரனின் வாழ்க்கை அவசர அவசரமாக நூலாசிரியரால் எழுதப்பட்டிருப்பதாக உணரமுடிகிறது. பிரபாகரன் சிந்தித்து, பொட்டு அம்மான் செயல்பட்டு, ரகு என்கிற ரகுவரன் என்கிற பாக்கியச் சந்திரன் என்கிற சிவராசன் நடத்தியதே அத்துன்பியல் சம்பவம் என்று தீர்ப்பு தருகிறார் நூலாசிரியர். இதே சிவராசன் இதற்கு முன்பாக வெற்றிகரமாக செயல்பட்டது கோடம்பாக்கம் பத்மநாபா படுகொலை என்பதையும் மறக்காமல் சொல்கிறார்.
"ஒரு காலத்தில் இலங்கைத் தீவின் மூன்றிலொரு பகுதி நிலப்பரப்பையும், மூன்றில் இரண்டு பகுதி கடற்பரப்பையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆண்டு கொண்டிருந்த பிரபாகரனையும், அவரது இயக்கத்தவர்களையும் வன்னிப்பகுதியில் ஐந்து சதுர கிலோ மீட்டர் பரப்புக்குள் சுருக்கிவிட்டோம்; மொத்தமாகப் பிடித்துவிடுவோம் என்று இலங்கை ராணுவம் அறுதியிட்டு சொல்லுமளவு நிலைமை படிப்படியாக மாறிப்போனதன் தொடக்கக் கண்ணி ராஜீவ் படுகொலையில் தான் இருக்கிறது" - இவ்வாறாக நூலாசிரியர் எழுதுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
இன்னும் மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் பிரபாகரனுக்கு மூன்றிலொரு பகுதி நிலப்பரப்பு, மூன்றில் இருபகுதி கடற்பரப்பு கிடைத்ததெல்லாம் ராஜீவ் படுகொலைக்குப் பிறகே. அடுத்த பத்தாண்டுகளில் பிரபாகரனும், அவரது இயக்கமும் அடைந்த வளர்ச்சி அலாதியானது. 91க்கும் 2006க்கும் இடையிலான சம்பவங்கள் இந்நூலில் விலாவரியாக காணக்கிடைக்கவில்லை. இலங்கையை சுருளவைத்த காட்டுநாயக்கா தாக்குதல் போன்றவற்றையாவது குறிப்பிட்டிருக்கலாம்.
நூலின் கடைசி அத்தியாயங்கள் வாரப்பத்திரிகை கவர்ஸ்டோரி பரபரப்பைக் கொண்டிருக்கிறது. நிஜமாகவே அவை வாரப்பத்திரிகையில் கவர்ஸ்டோரியாக வந்தவைதான் என்பதை நூலின் முன்னுரையில் அறிந்துகொள்ளவும் முடிகிறது. பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று இந்த அத்தியாயங்களில் அடித்துப் பேசுகிறார் நூலாசிரியர். இதற்காக தான் சேகரித்த தரவுகளைப் பட்டியலிடுகிறார். அதே நேரத்தில் பிரபாகரன் மரணமடையவில்லை என்று நம்புபவர்கள் சொல்லும் காரணங்களையும் நேர்மையாக பத்தி பத்தியாக எழுதியிருக்கிறார்.
பிரபாகரன் இல்லாத நிலையில் அடுத்தது என்ன? என்று கேள்வி எழுப்பும் பா.ராகவன் தமிழருக்கான எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையை அச்சத்தோடு பேசுகிறார். முத்தாய்ப்பாக அவர் எழுதியிருப்பது : "ஓரினம் உரத்து அழக்கூடத் தெம்பில்லாமல் தேங்கிக் கிடக்கிறது. இன்னொரு இனமோ இனிப்பு வழங்கி, ஆடிப்பாடிக் கொண்டாடுகிறது. எப்படி இந்த இருவரும் ஒன்றாக வாழமுடியும்?"
நூலின் பெயர் : பிரபாகரன் - வாழ்வும், மரணமும்!
நூல் ஆசிரியர் : பா.ராகவன்
விலை : ரூ.100/-
பக்கங்கள் : 208
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.
ஒவ்வொரு தமிழர் இல்ல நூலகத்திலும் கட்டாயம் இடம்பெற வேண்டிய நூல். பா.ராகவனின் மாஸ்டர் பீஸ் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. மிக முக்கியமான இந்நூலின் அட்டைப்படம் மட்டும் என்னை அவ்வளவாக கவரவில்லை. விஜயகாந்த் படத்தின் ஓப்பனிங் சீன் மாதிரி ஃபயராக இருக்கவேண்டாமா பிரபாகரன் புத்தகத்தின் அட்டைப்படம்?
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com