"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 15: இடதுசாரிகளை வீழ்த்திய இனவாதம்
லங்கா சமசமாஜக் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை உக்கிரப்படுத்தியதன் விளைவாக என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா, பிலிப் குணவர்த்தனா, லெஸ்லி குணவர்த்தனா, விக்ரமசிங்க போன்றவர்கள் ஆங்கிலேயரால் சிறைப்படுத்தப்பட்டனர். அன்றைய நிலையில் சிறையை உடைத்து வல்வெட்டித்துறை வழியாகத் தோணிகளில் இவர்கள் இந்தியாவுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர்.
இவர்கள் இந்தியப் பெயர்களை ஏற்று கல்கத்தா, பம்பாய், சென்னை நகரங்களில் தலைமறைவாகத் தொழிற்சங்க, அரசியல் வேலைகளில் ஈடுபட்டனர். இதன் விளைவாக இலங்கை இடதுசாரி, இந்திய இடதுசாரி இயக்கங்களுக்கிடையில் நெருங்கிய தொடர்புகள் வளர்ந்தன. பிலிப் குணவர்த்தனா இந்தியப் பற்றின் விளைவாக, தனது இரண்டாவது மகனுக்கு இண்டிகா குணவர்த்தனா என்று பெயரிட்டு அழைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பிலிப் குணவர்த்தனா லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து விலகி, புரட்சிகர சமசமாஜக் கட்சி என்ற பெயருடன் ஒரு கட்சிக்குத் தலைவரானார் (பின்னர் பொதுவுடைமைக் கட்சியுடன் சேர்ந்து ஐக்கிய முன்னணியை 1951-இல் அமைத்தார்).
இலங்கைத் தமிழர்கள் பற்றி, அவர்கள் தனி இனமென்றும் அவர்களுக்கென தாயகம் இலங்கையில் உண்டென்றும், அதில் அவர்கள் தமக்கென அரசை உருவாக்க உரிமையுடையவர்கள் என்ற நிலைப்பாட்டையும் 1935-இல் முதன் முறையாக கட்டுரை வடிவில் எழுதியவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஆவார். சமஷ்டி அமைப்பின் கீழ் இலங்கையின் இனப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது சாத்தியம் என்ற கொள்கையை அவர் முன்வைத்தார். அப்போது அவர் எந்தவொரு கட்சியையும் சார்ந்திருக்கவில்லை (1945-இல் தான் பண்டா சிங்கள மகாசபை இயக்கத்தை, சிங்களவர் விழிப்புணர்ச்சி நோக்கிற்காக ஆரம்பிப்பதாகக் கூறி, செயல்பட்டார்).
1944-இல் இலங்கைச் சட்டசபையில் சிங்களம் அரச மொழி என்ற தீர்மானத்தை ஜே.ஆர். முதன் முறையாகப் பிரேரித்தார். ஆங்கிலத்தை அகற்றி, சிங்களம் மட்டுமல்லாது, சிங்களமும் தமிழும் அரச மொழிகளாக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இடதுசாரிப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அதனால் சிங்களமும்~தமிழும் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
சிங்களவர் மத்தியில் படித்தவர் அதிகரிக்கவும் வேலையற்றவர் பிரச்னை சிக்கல் தீர்வு, சிங்களமும் தமிழும் சம அந்தஸ்துப் பெற்ற உத்தியோக மொழிகள் என்ற கொள்கையை முன்வைத்தும் இயங்கி வந்த இடதுசாரி இயக்கங்கள், இந்த நிலைப்பாட்டிலிருந்து தடுமாறி வாக்குகளை மையமாகக் கொண்ட சிங்கள இனவாத எழுச்சிக்குப் படிப்படியாக அடிபணிந்தன.
யாழ்ப்பாணம்~கொக்குவில் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் (1954) கலந்துகொண்ட பிரதமர் கொத்தலாவலை ஆற்றிய உரையில், சிங்களத்தையும், தமிழையும் சமத்துவம் பெற்ற மொழிகளாக ஆக்குவதாக உறுதி தந்தார்.
கொழும்பு திரும்புவதற்குள் ஆளும் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.) க்குள் முரண்பாடுகள் தலையெடுத்தன. மொழியை மையமாகக் கொண்டு முதலமைச்சராக யார் வரலாம் என்ற நிலையெழுந்தபடியால் கொத்தலாவலையின் வாக்குறுதி கைவிடப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் களனியா மாநாட்டில் (1955) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிங்களமே அரச மொழி என்றானது.
இந்த வேளையில் அந்நியத் தளங்களை அகற்றுதல், அந்நியக் கொடி இறக்கல், இலங்கையின் முழுமையான சுதந்திரத்திற்கு வழிகோலுதல், சமதர்மச் சமுதாயம் காணல், இந்தியாவுடனான நட்பு போன்ற கொள்கைகளை முன்வைத்த பண்டாரநாயக்கா, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரத்தை விஞ்சும் வகையில் இருபத்து நான்கு மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன்~என்ற மொழிக் கொள்கையை முன்வைத்தார். இதைப் பிரசாரப்படுத்தப் புத்த குருமார்களும், ஆயுர்வேத மருத்துவர்களும், சிங்கள ஆசிரியர்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும் முன்வந்து செயல்படவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
அப்பொழுது நகரவாசிகளையும், ஆங்கிலம் படித்த நடுத்தர வர்க்கத்தினரையும் மையமாகக் கொண்டு இடதுசாரி இயக்கங்கள் இயங்கி வந்தன. இடதுசாரி இயக்கத்தினர் அக்கறை காட்டி வந்த தொழிலாளர் இயக்கங்கள் கூட, நடுத்தர வர்க்கங்களாலேயே செயல்பட்டன. இதை நன்கு உணர்ந்த பண்டாரநாயக்காவின் இயக்கம் கிராமப்புற விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தனது அரசியல் இயக்கத்தில் ஒன்றிணைத்துக் கொண்டது. இதை முற்றுப் பெறச் செய்ய, தனிச் சிங்களமென்ற இனவாத எழுச்சியும் அவரால் உபயோகப்படுத்தப்பட்டது.
1956-இல் தனிச் சிங்களச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை இடதுசாரிகள் எதிர்த்துப் பேசி வாக்களித்தனர். சிலர் வாய்விட்டுக் கதறினர். ஒரு மொழியென்றால் இரு நாடுகள் மலரும்~என்று கொல்வின் ஆர்.டி. சில்வா நாடாளுமன்றத்தில் அழுதபடியே உரக்கக் கூறினார்.
சட்டம் நிறைவேறிய அந்த வாரத்திலேயே இடதுசாரித் தலைவர்களின் இல்லங்கள், அலுவலகங்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர்கள் வகித்து வந்த பதவிகள் பறிக்கப்பட்டன.
இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான என்.எம். பெரேரா என்பவரை, "என்.எம். பெரேரா வன முல்லே வோட் இல்லே' என்று சுவரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டன.
தேர்தலின் மூலம் சிங்களவரின் வாக்குப் பெறுவதானால் மொழிச் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க முடியாது என்று இடதுசாரிக் கட்சிகள் உணர்ந்து, தங்கள் கொள்கையிலிருந்து மெல்ல மெல்ல பின்வாங்கின. மொழி சமன் மட்டுமின்றி சிங்களப் பேரினவாதமும் இடதுசாரிக் கட்சிகளின் உள்ளேயும் தலையெடுத்தது. இடதுசாரிக் கட்சிகளால் அமைக்கப்பட்ட கூட்டணி பதவிக்கு வந்ததும் தமிழ்மொழியை ஒரு தேசியமொழியாக ஏற்கும் நிலையைக்கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.
மார்க்சிய, லெனினிச கோட்பாடுகள் கைவிடப்பட்டன. இதன் விளைவாக இடதுசாரிகளும் இனவழிச் சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டனர். தமிழ் மக்கள் மத்தியில் இயங்கிய இடதுசாரிக் கிளைகள் நிலைகுலைந்து பொதுமக்கள் தொடர்பற்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டன.
மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி ஆளுகைக்கு வந்தபோது இடதுசாரிக் கட்சிகள் சம்பள உயர்வு கோரி மேற்கொண்ட பெரிய போராட்டம் 40,000 அரசு ஊழியரின் தொழிலைப் பறித்தது. சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும், அரசுக்கெதிராக இடதுசாரிகளால் தம் மத்தியில் ஐக்கியமற்ற நிலையில் தமிழின விடுதலைப் போராட்டத்திற்குக் குறிக்கோள் கொண்ட ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் ஆதரவு தந்து, வென்றெடுக்கப்படாத நிலையில் பலவீனப்பட்டு இடதுசாரிகள் இயக்கம் தற்போது விளங்குகிறது.
இதன் வரலாற்றில்-ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்புச் சக்திகளிடையே ஐக்கிய முன்னணி உருவாகியபோது, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்டுள்ளது. இதற்கு மாறாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்ப்பாளர் மத்தியில் ஒற்றுமையின்மை நிலவியதால் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது.
நாளை: சர்வஜன வாக்குரிமைச் சட்டம்
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=74253&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com