"ஈழத் தமிழர் விவகாரத்தில் டென்மார்கிற்கு இருக்கின்ற அக்கறையில் சிறிது கூட இந்தியாவுக்கு இல்லை": தமிழருவி மணியன்
இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' பிரபல வார இதழிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
"ஈழத் தமிழர்களுக்கு எதிரான வேலையை 1948 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது. அப்போது அங்கு தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்ட்டபோது, 'இலங்கை உள்நாட்டு பிரச்னையில் இந்தியா தலையிடாது' என்று நேரு ஒதுங்கிக் கொண்டார்.
சிறிமாவோவின் ஆட்சியில் தமிழர்கள் இன்னல்பட்டபோது அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோவுடன் ஒப்பந்தம் செய்த லால்பகதூர் சாஸ்திரி இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வழி செய்தார்.
ஈழத் தமிழர்களுக்காக இந்திரா காந்தி அக்கறை காட்டியதும், ராஜீவ் காந்தி நடவடிக்கை எடுக்க முனைந்ததும் மறுக்கமுடியாத உண்மைகள். இந்திரா காந்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக புலிகளை ஆதரித்தது உண்மை. ராஜீவ் காந்தி புலிகளை வற்புறுத்தி ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனவுடன் உருவாக்கினார். அந்த ஒப்பந்தம் இலங்கை அரசிற்கும் ஈழத் தமிழருக்கும் இடையில்தான் நடந்து இருக்கவேண்டும். அதிலேயும் தவறு.
போனவையெல்லாம் போகட்டும். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, ஐந்து மாதங்கள் தமிழ் இனத்தையே முற்றாக ஒழிப்பது என ராஜபக்ச அரசு தன் இராணுவத்தைக் கொண்டு ஒரு ஈவு இரக்கமற்ற போரை நடத்தியபோது மன்மோகன் சிங்கின் இந்திய அரசு அதற்குத் துணை நின்றது. இது எந்த வகையில் நியாயம்?
விடுதலைப் புலிகளுக்காகவோ, பிரபாகரனுக்காகவோ இந்திய அரசு போராடியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு அனைத்துலக போர் விதிகளும் மீறப்பட்டு, அரக்கத்தனமாக ஈழத் தமிழர்களை முற்றாக அழிக்க ராஜபக்ச முனைந்தபோது சோனியா காந்தியோ மன்மோகன் சிங்கோ ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசவில்லை. ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு போரை நிறுத்த வழி செய்யவில்லை.
ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள உகாண்டாவில் வணிகம் செய்யச் சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை நடந்த அடுத்த கணமே இந்திய அரசு துடித்தது. பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசில் வாழும் சீக்கியர்கள் தலைப்பாகைகள் அணியக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் அந்த ஆணையை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
இன்று வியன்னாவில் சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக செய்தி வந்து சேர்ந்த அந்தக் கணமே பஞ்சாப் எரியத் தொடங்கியது. ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்கள் போராட்டக் களமாக மாறின. உடனே பிரதமர் மன்மோகன் சிங் அமைதி காக்க வேண்டுமென்று சீக்கியர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கிறார்.
புதிதாக வெளிவிவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாக ஒஸ்திரியாவிலிருக்கும் இந்தியத் தூதரகத்தோடு தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை நடத்துகிறார்.
வியன்னாவில் ஒரு உயிர் பறிக்கப்பட்டது. 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அதற்கே மத்திய அரசு துடிதுடிக்கிறது.
ஆனால் தமிழகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இலங்கைத் தீவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உறுப்பு இழந்தார்கள். உறவு இழந்தார்கள். ஈழப் பகுதியே மயானம் ஆகிவிட்டது. எங்கும் தமிழர்களின் பிணக்குவியல். திசையெல்லாம் தமிழர்களின் மரண ஓலம்.
ஐக்கிய நாடுகளுடைய செயலாளர் பான் கீ மூன் நேரில் சென்று இலங்கை நிலவரங்களைக் கண்டு நெஞ்சம் துடித்தார். இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இன்றி மரணத்தோடு போராடுகிற நிலையையும், வன்னிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதையும் கருத்தில் கொண்டு இலங்கை அரசு போர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் மனித உரிமை அமைப்பின் சிறப்பு விவாதத்தில் கொண்டு வர வேண்டுமென்று பிரித்தானியாவும், டென்மார்க்கும் செயல்பட்டன. இந்த சிறப்பு விவாதத்தைத் தடுப்பதற்காக சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும், கியூபாவும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்கிறது இந்தியா. என்ன அநியாயம்?
நமது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காமல், ராஜபக்ச அரசுக்குத் துதி பாடுகிறது காங்கிரஸ் அரசு. மனித உரிமை சபையில் சிறப்பு விவாதம் நடக்க வேண்டுமென்றால் 16 நாடுகளின் ஆதரவு தேவை. இந்த ஆதரவைத் திரட்டுவதற்கு சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும் மனசாட்சி ஒன்று இருந்தால் காங்கிரஸ்காரர்களுக்கு தமிழ் இனத்தின் மீது பற்றும் பாசமும் இருந்திருந்தால் இந்த ஆதரவை இந்தியா முன்னின்று திரட்டியிருக்கவேண்டும்.
ஆனால், எங்கேயோ இருக்கும் டென்மார்க் தன் சொந்த முயற்சியால் பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டி சிறப்பு விவாதம் நடப்பதற்கு வழிவகுத்து இருக்கிறது. இதைத் தடுக்க இந்தியா எல்லா வகையிலும் பாகிஸ்தானோடு சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகிறது.
பெற்ற தாயாக நினைத்து காங்கிரஸை தமிழர்கள் நேசிக்கின்றனர். ஆனால் மாற்றான் தாயாக தமிழர்களை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது. தமிழக மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்'' என்று ஆவேசமாய் தெரிவித்தார் தமிழருவி மணியன்.
http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3569:q---------q--&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com