இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் சூறை
சென்னை, மே.17- சென்னை தேனாம்பேட்டை பார்சன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் டைரக்டர் பாரதிராஜாவின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ் தளத்தில் சினிமா எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகள் நடைபெறும். முதல் தளத்தில் பாரதிராஜாவின் அலுவலகம் உள்ளது. முழுக்க முழுக்க ஏர்கண்டிசன் வசதி செய்யப்பட்டுள்ளது. எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகளுக்கான நவீன வசதி இங்கு உள்ளது.
நேற்று இரவு 8 மணியளவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பலினர் பாரதிராஜாவின் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் முதலில் கீழ்தளத்தில் டப்பிங் மற்றும் எடிட்டிங் வேலைகள் நடக்கும் 5 அறைகளை அடித்து நொறுக்கினார்கள்.
கீழ்தளத்தில் யாரும் இல்லை. சத்தம் கேட்டு மேல் தளத்தில் இருந்த பாரதிராஜாவின் உதவியாளர் மகேஷ், ஆபீஸ் பையன் ராம்கி ஆகியோர் ஓடிவந்தனர்.
அவர்களை தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் மிரட்டியது. ஒதுங்கி நின்று கொண்டு உயிர் தப்பிக்கொள்ளுங்கள் என்று பயமுறுத்தினார்கள். இதனால் அவர்கள் ஒதுங்கி நின்றுகொண்டனர்.
பின்னர் மேல்தளத்தில் உள்ள பாரதிராஜாவின் அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினார்கள். அதன்பிறகு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக பாரதிராஜாவின் உதவியாளர் மகேஷ், போலீசாரிடம் புகார் மனு எழுதி கொடுத்தார்.இதற்கிடையில், இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்து டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் விரைந்து வந்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சோனியாகாந்தி சென்னை வரும்போது டைரக்டர் பாரதிராஜாவும், நானும் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோம். இதையொட்டிதான் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டிருக்கிறது. அடுத்து என் வீடும், சீமான் வீடும், ஆர்.கே.செல்வமணி வீடும் தாக்கப்படலாம் என்று நினைக்கிறேன். போலீசார் எங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பு தரவேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டைரக்டர் ஆர்.சுந்தரராஜன் தெரிவித்தார்.
தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரும் டி-சர்ட் மற்றும் பேண்ட் அணிந்திருந்தனர். வாட்டசாட்டமாக இருந்தனர். அவர்கள் காரில் வந்துள்ளனர். 10 நிமிடத்தில் தாக்குதலை முடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். தாக்குதல் சம்பவத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள எடிட்டிங் மற்றும் டப்பிங் சம்பந்தப்பட்ட நவீன கருவிகள் சேதம் அடைந்துள்ளன.
இவ்வாறு மகேஷ் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று துணை கமிஷனர் மவுரியா தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com