தலைவர் பிரபாகரன் தொடர் 2
ஐந்து வயதுப் பையன்கள் யாரும் அந்த மாதிரி மணிக்கணக்கில் பொறுமையாக உட்காரமாட்டார்கள். கலவரம், உயிரிழப்பு, கண்ணீர், சோகம் என்று பெரியவர்கள் கதறுவதை உணர்ச்சிவசப்படாமல் உற்றுநோக்க மாட்டார்கள். குடியுரிமைச் சிக்கல் தொடர்பான விவாதங்களை உன்னிப்பாக கவனிக்கமாட்டார்கள். மொழியால், இனத்தால், கலாசாரத்தால் முற்றிலும் வேறுபட்ட இரண்டு இனங்களின் பிரச்னையைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்க உள்ளபடியே விரும்பமாட்டார்கள்.
அவர்களுக்கு விளையாட வேண்டும். பள்ளிக்கூடம் போகவேண்டும். வீட்டுக்கு வந்தால் தாய்மடி. நல்லதாக நாலு கதை கேட்டுப் படுத்தால் தீர்ந்தது விஷயம். சூழலின் சூடு ஓரளவு தாக்கியிருப்பினும் அடிப்படை விருப்பங்களில் பெரிய மாறுதல்கள் இருக்காது.
ஆனால் அந்தப் பையன் முற்றிலும் வேறு மாதிரி இருந்தான். அவனது ஆர்வங்கள் இன்னது என்று அவனது பெற்றோருக்கு சரியாகப் புரியவில்லை. படிக்கிறாயா? படிக்கிறேன். கோயிலுக்குப் போகிறாயா? போகிறேன். விளையாடுகிறாயா? விளையாடுகிறேன். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் ஏன் அடிக்கடி தனியே போய் உட்கார்ந்து யோசிக்கிறாய்? என்ன ஓடுகிறது உன் புத்தியில்? இந்த வயதில் என்ன சிந்தனை? பெரியவர்கள் பேசுமிடத்தில் நீ வந்து நிற்பதை அவ்வப்போது பார்க்கிறேன். உன்னால் தொந்தரவில்லை. குறுக்கே பேசுபவனில்லை நீ. ஆனாலும் இந்தப் பேச்சில் உனக்கு என்ன புரியும்?
பதில் சொல்லமாட்டான். கணப்பொழுதுப் புன்னகை. ஓடியேவிடுவான். ஆனால் திரும்பி வருவான். அதே மாதிரி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பான். என்ன ஆர்வம் இது? என்ன மாதிரியான அக்கறை இது? அக்கறைதானா? ஏதாவது புரியுமா இவனுக்கு?
அன்றைக்கு அப்படித்தான் அவனது அப்பாவும் நண்பர்களும் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தார்கள். கலவரத்தில் கொளுத்தப்பட்ட பாணந்துறை குருக்கள் பற்றி. நல்லவர். மிகவும் சாது. ஈ, எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்காதவர். கோயிலில் புகுந்த கலவரக்காரர்கள், குருக்களை இழுத்து வந்து நிறுத்தி உயிரோடு கொளுத்திவிட்டார்கள். யார் என்ன செய்ய முடியும்? ஊரே பற்றி எரிகிறது. கண்மூடித்தனமாக அடிக்கிறார்கள். கட்டி வைத்து எரிக்கிறார்கள். பார்த்த இடத்தில் உயிரைப் பறிக்கிறார்கள். வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடலாம். நாட்டை விட்டல்லவா ஓடச் சொல்கிறார்கள்? விதி. வேறென்ன சொல்வது?
பெரியவர்கள் சொந்த சோகத்தில் புலம்பிக்கொண்டிருந்தபோது அந்தச் சிறுவன் முதல்முறையாக வாயைத் திறந்தான். ``அப்பா, ஒரு நிமிடம். தாக்கத்தான் வருகிறார்கள் என்று தெரியுமல்லவா? அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை?''
தூக்கிவாரிப்போட்டது வேலுப்பிள்ளைக்கு. வல்வெட்டித்துறையில் அந்தக் காலகட்டத்தில் அப்படியொரு கேள்வியை யாராலும் கேட்டிருக்க முடியாது. பிரபாகரன் கேட்டான். சிறுவன். மிகவும் சிறுவன். தெரிந்துதான் கேட்கிறானா? தற்செயலாக வந்துவிட்ட கேள்வியா?
வாய்ப்பே இல்லை. வேலுப்பிள்ளையின் மகன் அப்படியெல்லாம் சிந்திக்கக்கூட முடியாது. எத்தனை சாது! எப்பேர்ப்பட்ட ஒழுக்க சீலர். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாத அணில் குஞ்சு அவர். அவர் மனைவி பார்வதி, அவருக்கு மேல். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கோயில், கடவுள், பதிகம். கொஞ்சம் வெளியே வந்தால் தமிழரசுக் கட்சி. தந்தை செல்வா. அவரது அறவழிப் போராட்டங்கள். தந்தை சொன்னால் சரி. தந்தை செய்வது சரி. பேப்பரைப் பார். அவர் என்ன பேசியிருக்கிறார் இன்றைக்கு?
`திருமேனியார் குடும்பம்' என்பார்கள். வல்வெட்டித்துறையில் அவர்கள் மிகவும் பிரபலம். வேலுப்பிள்ளையின் பாட்டனார் திருமேனி வெங்கடாசலம் கட்டிய வைத்தீஸ்வரன் கோயில் இன்றளவும் வல்வெட்டித்துறையில் பிரபலமானது. தான் கட்டிய கோயிலுக்கு மட்டுமல்ல. யார் வந்து கேட்டாலும் கோயில் பணி என்றால் அள்ளிக்கொடுக்கும் வம்சம் அது. அரசாங்கத்தை நம்பிப் பயனில்லாதபோது ஆண்டவனைத்தான் நம்பியாகவேண்டியிருக்கிறது.
என்றாவது விடியும் என்ற ஒற்றை நம்பிக்கை அவர்களிடம் மிச்சமிருந்தது. நிம்மதியாக ஒரு வாழ்க்கை. சுதந்தரமாக ஒரு வாழ்க்கை. கலவரமில்லாத ஒரு வாழ்க்கை. படுத்தால், யார் கதவு இடிப்பார்களோ என்று அஞ்சாமல் உறங்க ஒரு வாழ்க்கை. இரவிருந்தால் பகலிருக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்தவர்கள் அவர்கள். எல்லாம் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் ஆணி வேரைத்தான் சிறுவன் பிரபாகரனின் கேள்வி அன்றைக்கு முதல்முறையாக அசைத்துப் பார்த்தது.
குருக்கள்தானே? தினசரி கோயில் திருப்பணி செய்கிறவர்தானே? கடவுளா காப்பாற்றினார்? அல்லது நீங்கள்தான் காப்பாற்றினீர்களா? யாரால் என்ன முடிந்தது? தாக்க வந்தவர்களை அவர் திருப்பித் தாக்கியிருக்கவேண்டும். நிச்சயமாக, தாக்க முயற்சியாவது செய்திருக்க வேண்டும். எதிர்ப்புக் காட்டாமல் கட்டுண்டு, பற்றி எரிந்து இறந்தவரைப் பற்றிப் பரிதாபம் பேசி என்ன பயன்?
அதிர்ந்து போனார் வேலுப் பிள்ளை. திருப்பித் தாக்குவதா?
ஆம். அதிலென்ன தவறு என்று பிரபாகரன் கேட்டபோது வல்வெட்டித்துறை மட்டுமல்ல; இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதுமே அறவழிப் போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை கொண்டிருந்தது. தந்தை செல்வா என்கிற எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சிதான் ஒரே நம்பிக்கை. இலங்கை தமிழ் காங்கிரஸ் இருந்தாலும் செல்வா மட்டுமே செல்லுபடியாகக் கூடியவர். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல்கள், அறிக்கைகள் மற்றும் அழுகைகள். ஆயுதம் என்று சிந்திக்கக்கூடிய தலைமுறை அப்போது இல்லை.
அது அப்போதுதான் பிறந்திருந்த தலைமுறை. பிரபாகரன் அதில் முதல் செட்.
`தம்பி, இதோ பார். இதுதான் இந்தியா. நமக்கு வடக்கே இருக்கும் தேசம். கூப்பிடு தூரம். ஒரு காலத்தில் நம் ஊரிலிருந்து மதியம் புறப்பட்டுப் படகில் போய் மாலைக்காட்சி சினிமா பார்த்துவிட்டு இரவு ஊருக்குத் திரும்பி வந்துவிடுவார்கள்.எத்தனை பாகவதர் படங்கள், சின்னப்பா படங்கள், எம்.கே. ராதா படங்களெல்லாம் பார்த்திருக்கிறோம் தெரியுமா? யாரும் பாஸ்போர்ட் கேட்டதில்லை. விசா கேட்டதில்லை. அத்தனை இணக்கமான தேசம். நம் மக்களுக்கு அங்கே வியாபாரத் தொடர்புகள் இருந்தன. நம் ஊரிலேயே பல குடும்பங்கள் அங்கே பெண் எடுத்திருக்கின்றன. நடுவில் இருப்பதை ஒரு கடலாகவே யாரும் நினைத்ததில்லை. சற்றே பெரிய கால்வாய். அவ்வளவுதான். ஆனால் எல்லாம் ஒரு காலம். இப்போது இல்லை. நான் சொல்ல வந்ததும் அது இல்லை. இந்தியாவில் ஒரு சுதந்தரப் போராட்டம் நடந்தது. ஆ, அதற்கு முன்னால் நான் உனக்கு மகாத்மா காந்தியைப் பற்றிச் சொல்ல வேண்டும்...'
பிரபாகரன், காந்தி கதையை அப்பாவிடம் கேட்டுக்கொண்டாலும் தனியே எடுத்துப் படித்த புத்தகங்கள் சுபாஷ் சந்திர போஸைப் பற்றியதாகவே இருந்தன. அந்த வயதில் அவனுக்கு சுபாஷின் சாகசங்கள் பிடித்திருந்தன. பிரிட்டிஷார் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தேசம் விட்டுத் தப்பிப் போன சுபாஷ். ஜெர்மனியில் ஹிட்லரைச் சந்தித்த சுபாஷ். நீர்மூழ்கிக் கப்பலில் ஜப்பானுக்குத் தப்பிய சுபாஷ். தனி மனிதனாக ஒரு ராணுவத்தையே உருவாக்க முடிந்த அவரது பேராற்றல்.
பிறகு பகத்சிங்கைத் தெரிந்துகொண்டான். எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்குப் பிடித்தது. என் மண்ணில், என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படித் தடைபோடலாம்?
அப்பா, நான் காந்தியை மதிக்கிறேன். ஆனால், இந்தியாவின் கதை வேறு. நமக்கிருக்கும் பிரச்னைகள் அவர்களுக்கு இருந்ததில்லை. வெள்ளைக்காரன் ஆட்சியைப் பிடித்ததுதான் அங்கே பிரச்னை. இந்தியர்களைப் பூண்டோடு ஒழித்துக் கட்டவா பார்த்தான்? அங்கே ஒரே ஒரு ஜாலியன் வாலாபாக். இங்கே ஊருக்கு ஊர் சொக்கப்பனை. எப்படி ஒப்பிடுவீர்கள்? பிரிட்டிஷாருக்கு அங்கே அதிகாரம் செலுத்துவது ஒன்றே குறி. இனப்படுகொலை அல்ல. எந்தப் பாணந்துறை குருக்கள் அங்கே உயிரோடு கொளுத்தப்பட்டார்? நேற்றைக்கு அத்தை வந்திருந்தாரே, அவரது கணவரை அடித்தே கொன்ற கதையைச் சொல்லி அழுதாரே. அதற்கு ஏதாவது காரணம் இருந்திருக்க முடியுமா? அத்தையின் கணவருக்கும் அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நமது போராட்ட வழிகளை நாம் தீர்மானிப்பதில்லை அப்பா. நம் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்...
வேலுப்பிள்ளை கலவரமடையவில்லை. ஆனால் கவலைப்பட்டார். இது வேறு தலைமுறை. வேறு விதமாகச் சிந்திக்கிறது. மாவட்டக் காணி அதிகாரியாக உத்தியோகம் பார்த்து, செய்தித்தாள் அரசியலில் திருப்தியுற்று, கோயில் பணிகளில் கவலை கரைக்கும் தன்னைப் போலில்லை தன் மகன். சிந்திக்கிறான். ஆனால் வேறு விதமாக. ஆபத்தாக ஏதும் வராதவரை பிரச்னையில்லை. பார்வதி, தம்பி எப்போதும் படித்துக்கொண்டிருக்கிறானே, என்னவென்று எப்போதேனும் பார்த்தாயா?
பெற்றோருக்கும் இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனுக்கும் மட்டுமல்ல. திருமேனியார் வீட்டுக் கடைக்குட்டி, ஊருக்கே தம்பி. பின்னாளில் ஈழத் தமிழ் மக்கள் அத்தனை பேருக்கும்கூட அதுவே உறவு முறையாக இருக்கும் என்று வேலுப்பிள்ளை நினைத்திருக்க மாட்டார் அப்போது.
(தொடரும்)
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com