சிக்கலில் சிங்கள இராணுவம்! நாட்டை இராணுவ மயமாக்கி வருகிறார் ராஜபக்ச: – விகடன். |
இனி, எமது அகராதியில் முடியாது என்ற வார்த்தையே இல்லை" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி வரும் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு நித்தமும் புத்த விகாரைகளில் புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன. சிங்களப் படை வீரர்களுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. "உலகின் தர்மதுவீபம் என்ற விருதை நான் பெற்றுக்கொள்வதற்கான தகுதியை அடைந்துவிட்டேன்" என்கிறார் ராஜபக்ச. |
அவருக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் கொழும்பு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கக் காத்திருக்கிறது. கொண்டாட்டங்களில் மகிந்தாவின் அலரி மாளிகை ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவந்த முப்படைத் தளபதிகளுக்கும் நான்கு நட்சத்திர அந்தஸ்துப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஜெனரலாகவும், கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட அட்மிரலாகவும், விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல் ரொஷான் குணதிலக ஏர் சீஃப் மார்ஷலாகவும் பதவி உயர்வு செய்யப்பட்டனர். இதில் சரத் பொன்சேகாவுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தருவதை மற்ற இருவரும் விரும்பவில்லை. தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகாவும் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவும் ஆரம்பத்தில் இருந்து எதிரும் புதிருமான ஆட்கள். ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பது கொழும்பு பத்திரிகையாளர் வட்டாரத்துத் தகவல். "புலிகளை ஒடுக்குவது என்பது அவர்களுக்குக் கடல் பகுதியில் இருக்கும் ஆதிக்கத்தை அடக்குவதுதான். இதைக் கடற்படைதான் செய்து காட்டியது. கடற்புலிகளின் 11 ஆயுதக் கப்பல்களைக் கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் தான் அழித்தோம். போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளில் ஒருவரைக்கூட கடல் எல்லை வழியாகத் தப்பிச் செல்ல விடாமல் தடுத்ததும் கடற்படையின் சாதனைதான்" என்று கடற்படைத் தளபதி பொங்குகிறார். "எங்களுக்கு விமானப் படைதான் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது" என்று பாராட்டு தெரிவித்த சரத் பொன்சேகா, கடற்படைக்கு பாராட்டு தெரிவிக்கவில்லை. "யுத்தம் நடந்த காலம் முழுவதும் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்துகொண்டுதான் இருந்தன. கடைசியாக, கடந்த டிசம்பரில்கூட ஆயுதங்களைக் கொண்டு வந்தார்கள்" என்று சொல்கிறார் சரத் பொன்சேகா. இந்த ஏட்டிக்குப் போட்டிகள் இப்போதைக்கு முடிய வாய்ப்பு இல்லை. ஆனால், தனக்கு அடுத்து பொன்சேகாதான் என்பதைச் சட்டபூர்வமாக அறிவித்து விட்டார் மகிந்தா. இன்றைய சூழலில் ஸ்ரீலங்காவின் நம்பர் டூ அந்தஸ்து அவருக்கு வந்து விட்டது. எனவே, அவர் வைத்ததுதான் சட்டம். பொன்சேகாவின் முதல் திட்டம், இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. "புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இடங்களைத் தக்க வைக்க வேண்டுமானால், மொத்தம் 3 இலட்சம் இராணுவ வீரர்கள் அவசியம். ஆனால், இன்று இரண்டு இலட்சம் பேர்தான் இருக்கிறார்கள். ஒரு இலட்சம் பேரை ஜனவரிக்குள் எடுத்தாக வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார். இராணுவத்துக்கு ஆள் எடுக்கும் வேலை மும்முரமாக நடந்துகொண்டு இருக்கிறது இலங்கை முழுவதும். கடந்த நான்கு ஆண்டு போரில் மட்டும் 5,500 இராணுவ வீரர்கள் பலியானார்கள். சுமார் 20 ஆயிரம் வீரர்கள் உடல் உறுப்புகளை இழந்து ஊனமானார்கள். சுமார் 10 ஆயிரம் பேர் இராணுவத்தைவிட்டு ஓடியுள்ளார்கள். இவை தோராயமான புள்ளிவிவரங்கள்தான். "2006-07 ஆண்டுகளில் 2ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 3 ஆயிரம் வீரர்களும் இந்த ஆண்டு மே வரை 2 ஆயிரம் பேரும் இறந்துள்ளார்கள். கடைசி நாளில் மட்டும் 800 வீரர்கள் பலியானார்கள்" என்று அங்கு உள்ள பத்திரிகையாளர்கள் மத்தியில் பேச்சுள்ளது. கண்ணி வெடிகளில் சிக்கி கால்களை இழந்தவர்கள் மீண்டும் இராணுவத்தில் இணைய முடியாது என்பதால், அவர்களுக்கு ஆட்டோ ரிக்ஷாக்களை வழங்கி மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார் ராஜபக்ச. கருணா தன்னுடன் உள்ளவர்களை இராணுவத்தில் இணைக்க முயற்சி எடுத்து வருகிறார். 540 பேருக்கு விண்ணப்பங்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். பழைய போராளிக் குழுக்களில் இருந்தவர்களும் விண்ணப்பித்து வருகிறார்கள். "இவர்களை வைத்து தமிழ் இராணுவப் படையணி அமைக்க சரத் பொன்சேகா திட்டமிட்டுள்ளார்" என்று ஆர்வக்கோளாறாக கருணா சொல்லப் போக, "அப்படி எந்தத் திட்டமும் இல்லை" என்று அடுத்த நாளே மறுத்துவிட்டார் கோத்தபாய. இராணுவத்துக்கு ஆள் எடுப்பு விவகாரத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-க்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் பேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், "யுத்தம் முடிந்தாலும் அரசு யுத்த பீதியைத் தக்கவைத்துள்ளது. தற்போது யுத்தம் இல்லை. அரசாங்கத்தின் எதிரிகள் அழிந்துவிட்டார்கள். ஆனால், அரசுக்கு எதிரி ஒன்று தேவை என்ற நிலைப்பாட்டில்தான் அரசாங்கம் இருக்கிறது. ஒரு இலட்சம் பேரை இராணுவத்தில் சேர்க்கப் போவதாகச் சொல்கிறீர்கள். இதில் தமிழ், முஸ்லிம், சிறுபான்மையினர் எத்தனை பேர் இருப்பார்கள்? அல்லது முழுவதும் சிங்களவர்களைத்தான் சேர்த்துக் கொள்வீர்களா?" என்று கேட்டபோது, எந்தப் பக்கத்தில் இருந்தும் பதில் இல்லை. "இராணுவத்தைப் பரவலாக்கிக்கொண்டே போவது தமிழருக்கு மட்டுமல்ல, சமாதானத்தை நேசிக்கும், ஜனநாயக வழியில் சிந்திக்கும் சிங்களவர்க்கும் மோசமானது" என்று இன்னொரு எம்.பி-யான மனோ கணேசன் சுட்டிக் காட்டியதற்கும் பதில் இல்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இரண்டு பெரிய இராணுவத் தலைமையகங்கள் அமைக்கப்படவுள்ளன. அதன் கீழ்தான் தமிழர் வாழும் முகாம்களை ஒப்படைக்கப் போகிறார்கள். "மீண்டும் அப்பகுதியில் தீவிர வாதக் குழுக்கள் தோன்றாமல் இருக்க இராணுவம் அங்கு நிரந்தரமாக இருந்தாக வேண்டும்" என்று சரத் பொன்சேகா சொல்லிவிட்டார். இப்போதைக்கு இராணுவ நடமாட்டம் குறைவதாகத் தெரியவில்லை. புலிகள் அமைப்பு முற்றிலும் துடைத்து எறியப்பட்டதாக இராணுவம் சொன்னாலும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு காடுகளில் இப்போதும் சில பல போராளிகள் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் தமிழ்ப் பகுதியின் முதலமைச்சராக இருந்து இன்று ஒரிஸாவில் எங்கோ தங்கி இருக்கும் வரதராஜப்பெருமாள் சமீபத்தில் அளித்த பேட்டியில், இதை உறுதிப்படுத்தியுள்ளார். "காட்டுப் பகுதியில் மறைந்துள்ள புலிகள் சரணடைய வேண்டும்" என்று அரசு அறிவித்து உள்ளது. அதைவிடப் புலிகளின் சில முக்கிய உளவுத்துறை ஆட்கள் இன்னமும் கொழும்புப் பகுதியில் ஊடுருவி இருப்பதாகவும் இராணுவம் அச்சப்படுகிறது. இந்நிலையில் ஐந்து மணிக்கே அடங்க ஆரம்பித்து விடுகிறது கொழும்பு. அத்தனை கடைகளையும் இருட்டுவதற்கு முன் அடைத்துவிடுகிறார்கள். பெரும்பாலான இராணுவ வீரர்கள், புலிகளின் ஆளுமையில் இருந்த பகுதியில் தினமும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அனைத்து இராணுவ வீரர்களுக்கும் தமிழர் பகுதியில் உள்ள இடங்களை இலவசமாக வழங்க இருப்பதாக அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது. இப்போதைக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அதுதான். உயிர் இழந்த இராணுவ வீரர்களது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி வாட்டுகிறது. உலக வங்கியிடம் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கேட்டது இலங்கை. அதுபற்றி இப்போதைக்கு முடிவு செய்ய முடியாது என்று ஆறப்போட்டுவிட்டது உலக வங்கி. எனவே, இராணுவத்துக்கும் நாட்டுக்கும் உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள் என்று மக்களிடம் கையேந்தும் நிலையும் வந்துவிட்டது. "போர், போர் என்று சொல்லி இதுவரை கணக்கில்லாமல் இராணுவத்துக்குச் செலவு செய்து வந்தீர்கள். இனிமேல் இதை விசாரணை செய்ய வேண்டும். இங்கு நிறைய ஊழல் நடந்துள்ளது" என்று எதிர்க்கட்சிகள் குரலை உயர்த்த ஆரம்பித்துள்ளன. வவுனியா, மயிலிட்டி ஆகிய இரண்டு இராணுவ ஆயுதக் கிடங்குகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதற்குப் பின்னணி இந்த முறைகேடுகள்தான் என்கிறார்கள். "ஆயுதங்கள் வாங்கப்பட்டது, பயன்படுத்தப்பட்டது தொடர்பாக இனி தலைமைக்குக் கணக்குகளைக் கொடுத்தாக வேண்டும். அந்த முறைகேடுகளை மறைப்பதற்காகத்தான் விபத்து நடந்து அழிந்ததாகச் சொல்கிறார்கள். எதிர்பாராத விபத்தாக இருந்தால் யாராவது இறந்திருக்க வேண்டுமே" என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். இராணுவத் தலைமையகம் இது தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. புலிகளுக்கு உதவி செய்ததாக இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மனித வெடி குண்டுத் தாக்குதல் நடத்துவதற்காக சில மாதங்களுக்கு முன் அனுப்பப்பட்ட புலியான கிரி, தனக்கு உதவி செய்த இராணுவ அதிகாரிகளைச் சொன்னபோது, அதிகார வட்டமே அதிர்ந்து போனதாம். மேலும், மேலதிகாரிக்குப் பிடிக்காத சிலரையும் புலிகளுக்குத் தகவல் தந்தவர்கள் என்று கைது செய்ததாகவும் சொல்லப்படுகிறது. கைதான அதிகாரிகளில் ஒருவர், 'எனக்கு இராணுவத்தில் உரிய முக்கியத்துவம் தராததால் புலிகளுக்குப் பல தகவல்களைத் தந்து வந்தேன்" என்று சொல்லி இருக்கிறார். இது போன்ற விசாரணைகள் இராணுவ வீரர்கள் மத்தியில் கிலி ஏற்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டைவிட, வரும் ஆண்டில் இராணுவத்துக்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று சரத் பொன்சேகா கோரிக்கை வைத்துள்ளார். டிசம்பரில் ஜனாதிபதி தேர்தல், அடுத்த பெப்ரவரியில் பொதுத் தேர்தல் என்று அடுத்தடுத்த மெகா செலவுகள் கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்கின்றன. "சர்வதேச நாடுகளின் நம்பிகையைப் பெறுவதுதான் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது" என்ற தனது வேதனையை வெளிப்படையாக ராஜபக்ச சொல்லிக் கொண்டு இருந்தபோதுதான், 'மோசமாக வீழ்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் 22-வது இடத்தில் இலங்கை இருக்கிறது' என 'ஃபாரின் பாலிசி' இதழ் பட்டியல் போட்டுள்ளது. 117 நாடுகளின் தரவரிசை இது. புத்தரின் போதனைகளில் அசோகருக்கு அதிகம் பிடித்தது இதுதான்: 'ஒரு யுத்தத்தில் தோற்றவர்களை விட வென்றவர்கள்தான் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்!' http://seithy.com/breifNews.php?newsID=16578&category=TamilNews |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com