கடந்த இரண்டரை ஆண்டுகளாக செங்கல்பட்டு முகாமில் பரிதவித்து வந்த 17 இலங்கை அகதிகள் ஒரு வழியாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது என்று தமிழ்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது..
தமிழகத்திற்கு அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்களில் குற்றப் பின்னணி உடையவர்கள் தனியாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இது முகாம் என்றாலும் கூட கிட்டத்தட்ட இது ஒரு சிறையைப் போன்றதுதான். தமிழகத்தில் உள்ள 117 முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் வெளியில் போய் வேலை பார்க்க முடியும். ஆனால் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்களால் வெளியில் வர முடியாது.
இந்த முகாமியில் அடைக்கப்பட்டுள்ள 86 அகதிகள் தங்கள் மீது எந்த குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல் வைத்திருப்பதைக் கண்டித்தும், அகதிகள் முகாமின் கொடூரமான சூழ்நிலையைக் கண்டித்தும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உண்ணாவிரதம் இருந்து வந்த சிலரின் உடல் நிலை மோசமானதால் நிலைமை மேலும் சர்ச்சையானது.
இந்த நிலையில், 18 அகதிகளை விடுதலை செய்ய நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பான உத்தரவை எடுத்துக் கொண்டு தாசில்தார் ஒருவர் செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு வந்தார். இந்த உத்தரவு குறித்து முகாம் அதிகாரிகள், அகதிகளிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து உண்ணாவிரதத்தை விலக்கிக் கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். மேலும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
முதல் கட்டமாக நேற்று 17 அகதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இனி பொது முகாம்களில் தங்குவார்கள். அங்கிருந்தபடி மற்ற அகதிகளைப் போல வெளியில் போய் வேலை பார்க்க இவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவர்கள் தவிர மேலும் 60 அகதிகளும் படிப்படியாக விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை உத்தரவு வந்ததைத் தொடர்ந்து முதலில் கிருபா, மோகன்தாஸ், முருகானந்தம், சேவியர், கண்ணன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்களை அவர்களது உறவினர்கள் வந்து அழைத்துச் சென்றனர்.
மற்றவர்கள் அவர்களது உறவினர்களுக்காக காத்துள்ளனர்.
விடுதலையாகியுள்ள அகதிகளில் ஒருவரான சுகுமார் (49) முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கடந்த 2006ம் ஆண்டு அகதியாக தமிழகம் வந்தார். மண்டபம் முகாமில் தங்கியிருந்தார்.
அப்போது இலங்கைக்கு மளிகைப் பொருட்களை கடத்திச் சென்றபோது கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு முகாமில் அடைக்கப்பட்டார்.
சுகுமாரின் மனைவி யுவராணி, மூன்று குழந்தைகளில் 2006ம் ஆண்டு தாக்கிய சுனாமியில் சிக்கி பலியாகி விட்டனர். இதையடுத்தே அவர் முல்லைத்தீவை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
மேலும் சுகுமாரின் நான்கு சகோதரர்களும் இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் பலியாகி விட்டனராம். தற்போது யாருமில்லாத அனாதையாக உள்ள சுகுமார் மீண்டும் முல்லைத்தீவுக்கு திரும்ப விரும்பவில்லை. இதேபோன்ற கதைதான் மற்ற 16 பேரின் நிலையும் உள்ளது.
வைகுண்டவாசன் (27) என்ற இன்னொரு அகதி கூறுகையில், நான் அகதியாகத்தான் இங்கு வந்தேன். எனக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எனது சகோதரி போரில் கொல்லப்பட்டு விட்டார். எனது தாயார் வவுனியாவில் இருக்கிறார். நான் சென்னையிலேயே வசிக்க விரும்புகிறேன் என்கிறார்.
கிருபா என்கிற கிருபாகரன் மன நலம் குன்றியவர் ஆவார். இவர் உள்பட விடுதலையான அனைவருமே தாயகம் திரும்ப விருப்பமில்லாமல் உள்ளனர்.
கடந்த இரண்டரை ஆண்டு காலமாக எந்தவித விசாரணையும் இல்லாமல், குற்றச்சாட்டும் பதியாமல், வழக்கும் போடப்படாமல், உள்ளே அடைபட்டுக் கிடந்த இந்த அகதிகளுக்கு இன்று வெளிச்சம் கிடைத்துள்ளது. ஆனால் எதிர்காலம் என்னவோ இன்னும் இருள் சூழ்ந்ததாகவே உள்ளது.
http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=171:----17--&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com