நன்றி : திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=70905281&format=html
வயதாகியும் பொடியன்கள்
----------------------
- அப்துல் கையூம்
நடுத்தர வயது ஆசாமிகளுக்கு ஒரு பொது அறிவு போட்டி வைத்து "இந்தியா,
இலங்கை, மலேயா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளில் மக்களின் பேராதரவைப் பெற்றது
எது?" என்று கேட்டால் சற்றும் தாமதிக்காமல் "கோபால் பல்பொடி" என்ற சரியான
பதிலைச் சட்டென்றுக் கூறி விடுவார்கள்.
அதேபோன்று "காரம், மணம், குணம், நிறைந்தது எது?" என்று கேட்டால் T.A.S.
ரத்தினம் பட்டணம் பொடி என்ற பதில் பொடிப்பொழுதில் மன்னிக்கவும்
நொடிப்பொழுதில் நமக்கு கிடைத்துவிடும்.
யார் செய்த புண்ணியமோ மூக்குப் பொடி போடும் வழக்கம் சிறுகச் சிறுக 'கோமா'
நிலமையை எட்டி விட்டது ஆமா!. இன்றைய இளம் சமுதாயத்தினரிடையே 'பொடி'யன்கள்
யாருமேயில்லை என்று மூக்கை உயர்த்திச் சொல்லலாம். வயதான பொடியன்களைத்தான்
இன்று காண முடிகிறது.
பேருந்து வண்டியிலோ, தொடர்வண்டியிலோ பிரயாணம் செய்யும்போது மூ.பொ.
(மூக்குப் பொடி) ஆசாமிகள் வந்து நம் பக்கத்தில் அமர்ந்து விட்டாலோ நம்
பிரயாணம் அதோகதிதான். மூக்கின் உட்புறத்தில் அந்த கண்றாவி சமாச்சாரம்
திட்டுத் திட்டாய் அப்பிக்கொண்டு இருப்பதை பார்க்கும்போது நாஞ்சில்
பி.டி.சாமியின் கதை போன்று ஒரு திகில் உணர்வை நமக்கு அது ஏற்படுத்தும்.
மூக்கு இருப்பது சுவாசிப்பதற்காகவே என்று நாம் நினைத்துக்
கொண்டிருக்கிறோம். இவர்களைப் பொறுத்தவரை அது வெறும் பொடி போடுவதற்காகவே
என்று தப்புக்கணக்கு போட்டு வைத்திருக்கிறார்கள்.
மூ.பொ. ஆசாமியின் மூக்கை க்ளோசப்பில் 7 பிக்ஸல் டிஜிட்டல் கேமராவில் படம்
பிடித்து பார்த்தோமேயானால் நாம் வாழ்க்கையே வெறுத்துப் போய் விடுவோம்.
அம்மாடியோவ்.. ..! மூக்கா அது? 'குணா' குகை போலிருக்கும். பீரங்கியினுள்
வெடி மருந்தை திணிப்பதைப்போல் அவர்கள் மூக்குப்பொடியை மூக்குக்குள்
திணிக்கும்போது நமக்கு பீதியும் பேதியும் ஒருசேர கிளம்பிவிடும்.
'ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்ற பழமொழிக்கு ஏற்றார்போல்
பொடிப்பிரியர்கள் நம் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னரே அந்த மூக்குத்தூள்
துர்வாசனை நம் மூக்கைத் துளைத்து அவர்களது வருகையை நமக்கு அறிவித்து
விடும்.
ஒருகாலத்தில் 'பொடி' என்ற பெயரே அலர்ஜி ஆகிப்போய் இட்லிப்பொடி,
காரப்பொடி, ஓமப்பொடி சாப்பிடுவதைகூட நான் நிறுத்திவிட்டிருந்தேன்.
தொண்டரடி பொடி ஆழ்வாரின் கவிதையை படிப்பதைக்கூட தவிர்த்து விட்டேன்
என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
எங்களூர் கணக்கு வாத்தியார் சம்பந்தம் சார் பொடி போடும் பழக்கமுடையவர்.
அவர் தும்மினால் மேசை மீது வைக்கப்பட்டிருக்கும் சாக்பீஸ், டஸ்டர்,
ஸ்கேல் உட்பட எல்லாமே அதிரும். அக்காலத்தில் பம்மல் சம்பந்த முதலியாரின்
பெயர் மிகவும் பிரசித்திப் பெற்றிருந்த நேரம். பசங்களெல்லாம் சேர்ந்து
வாத்தியாருக்கு வைத்த பட்டப் பெயரோ 'தும்மல் சம்பந்தம்'.
'பொடி'வைத்து பேசுபவர்களையாவது நாம் மன்னித்து விடலாம். ஆனால் பொடி
போட்டு பேசுபவர்களை மன்னிக்கவே கூடாது. (இந்த புதுமொழியை "Quotable
Quotes" –ஆக யாராவது தங்கள் வலைப்பதிவில் சேர்த்தாலும் எனக்கு ஆட்சேபணை
எதுவும் இருக்கப்போவதில்லை)
நான் 'பொடி'ப்பயலாக இருந்த காலத்தில், மூ.பொ.ஆசாமிகள் இருவருக்கிடையில்
உட்கார்ந்து ரயில் பிரயாணம் செய்த அந்த சம்பவத்தை இப்போது நினைத்தால் கூட
எனக்கு தும்மல் வந்து விடுகிறது.
ரயில் பெட்டியில், முதலாம் ஆசாமி பொடி மட்டையை பிரித்தபோதே, அதிலிருந்து
சில துகள்கள், சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியின் உபயத்தால் சீறிப்
பாய்ந்து வந்து என் மூக்கைப் பதம் பார்த்தது.
ஆ.. .. .. அச்.. ச்ச்சு!
என் கண்களில் நீரை வரவழைத்த அந்த காட்டுத்தும்மலை இவர்கள் ஒரு
பொருட்டாகவே கருதவில்லை. அவர்கள் காதுக்கு அது ஒரு இனிமையான கானமாக
இருந்திருக்குமோ என்னவோ எனக்குத் தெரியாது.
பரத நாட்டியத்தில் பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து முத்திரை
காண்பிப்பது போல ஒரு சிட்டிகை மூக்குப் பொடியை எடுத்து கையிலே வைத்துக்
கொண்டார் அந்த நபர். பேருக்குத்தான் ஒரு சிட்டிகை ஆனால் அதில் ஒரு நான்கு
சிட்டிகைக்குரிய கொள்ளளவு தாராளமாகவே இருந்தது.
மனுஷன் சிட்டிகையை கையில் எடுத்ததுதான் எடுத்தார் மூக்கில் திணித்துத்
தொலைய வேண்டியதுதானே? ஊ..கும். அப்போதுதான் அவருக்கு சுவராஸ்யமாக ஏதாவது
பேச்சைத் துவங்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும் போலும்.
"என்ன ஓய்.. பேசாம இருக்குறீர்?" என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட பத்து
நிமிஷம் ஊர்வம்பு சம்பாஷணை தொடர்ந்து எடுத்த சிட்டிகையை இன்னும் மூக்குக்
குகைக்குள் நுழைத்தபாடில்லை.
இரண்டு மூன்று தடவை கையை உதறிவிட்டு ஒருவழியாக வெடிமருந்தை சாரி
பொடிமருந்தை அந்த பீரங்கி மூக்குத் துவாரத்தில் ஏற்றியாகி விட்டது.
உதறியபோதும் சில துகள்கள் காற்றில் பரவி மீண்டும் எனக்கு
ஆ.. .. .. அச்.. ச்.. .. சூ… உ. .."
மூக்கே கழன்று விழுந்து விடும் போலிருந்தது.
உண்மையான பீதி எனக்கு இப்போதுதான் ஏற்பட்டது. "நேத்து சேஷாத்திரி
ஆத்துலே.." ன்னு ஆரம்பிச்சவர் மூக்கு மடலை விடைத்துக் கொண்டு வாயையும்
மூட இயலாதவண்ணம், பாதிக் கண்களை மூடிக்கொண்டு எந்த நேரத்தில் தும்முவாரோ
என்ற சஸ்பென்ஸ் ஒருபுறம், மனுஷன் சீக்கிரம் தும்மித் தொலைத்தாவது நமக்கு
நிம்மதி கிடைக்குமே என்ற கவலை மறுபுறம் என்னை ஆட்டிப் படைத்தது.
இப்போது நான் எதிர்பார்த்தபடியே அந்த பொக்ரான் தும்மல் படுபயங்கர
சப்தத்துடன் வெடித்தது. என் கையிலிருந்த பத்திரிக்கையில் திட்டுத்திட்டாக
அந்த மூக்குப் பொடி சமாச்சாரத்தின் மழைச்சாரல் வேறு.
ஒருத்தர் பொடி போட்டால் மற்றவருக்கும் மூடு வந்து விடும் போலும்.
எதிரில் அமர்ந்திருந்த இவரது பார்ட்னர் ஜிப்பாவில் கையை விட்டு ஒரு
வெள்ளி டப்பாவை எடுத்தார். "இந்த வீணாப்போன சமாச்சாரத்தை
பத்திரப்படுத்துவதற்கு வெள்ளி டப்பா ஒரு கேடா?" என்று என் மனதுக்குள்
திட்டித் தீர்த்துக் கொண்டேன்.
பித்தளை, வெள்ளி, தங்கம், மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு, காண்டாமிருகக்
கொம்பு, ஒட்டகை எலும்பு, யானைத்தந்தம் போன்றவற்றால் செய்யப்பட்ட அலங்கார
பொடிடப்பிகளில்கூட இந்த மேற்படி பொக்கிஷத்தை இருப்பு வைத்திருப்பார்கள்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
இரண்டாவது நபரும் பொடி டப்பாவை கையிலே ஏந்தி அவரது 'மிஷனு'க்கு ஆயத்தம்
ஆக, வரப்போகிற பூகம்பத்தை ஊகித்து அங்கிருந்து நைஸாக நழுவி வேறிடத்திற்கு
இடம் பெயர்ந்தேன். பொடியனாக இருக்கையில் என் மூக்கில் ஏறிய அந்த கார
பொடிநெடி இன்றளவும் என்நாசி நரம்புகளில் படிந்திருக்கிறது.
இசைக் கலைஞர்களுக்கும் மூக்குப் பொடிக்கும் இடையேயான உறவு பிரசித்திப்
பெற்றது. மனம்புச்சாவடி வெங்கட சுப்பைய்யர், பட்டணம் சுப்ரமண்ய ஐயர்,
அரியக்குடி இராமனுஜ ஐயங்கார், நாகஸ்வரச் சக்கரவர்த்தி இராஜரத்னம் பிள்ளை,
செம்மங்குடி சீனிவாச ஐயர், 'சங்கீத கலாநிதி' டி.எம்.தியாகராஜன் என்று
மூ.பொ. ஆசாமிகளின் பட்டியல் அனுமார் வாலைப்போல் நீண்டுக் கொண்டே
போகிறது.
மூச்சு விடாமல் வேண்டுமானாலும் கூட இவர்கள் இருந்து விடுவார்கள் ஆனால்
மூக்குப்பொடி போடாமலிருந்தால் மூர்ச்சையாகி விடுவார்கள்.
"ஒயின் அருந்துவது எப்படி?" என்று பிரஞ்சுக்காரர் ஒருவர் ஒரு பத்தகம்
எழுதி வைத்திருக்கிறார். ஒயின் பாட்டிலை எப்படி திறப்பது என்பதற்கே
தனியாக ஒரு அத்தியாயம். கோப்பைக்குள் ஒயினை மெதுமெதுவாக ஊற்ற வேண்டுமாம்,
ஊற்றியபின் அதேயே கொஞ்ச நேரம் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க
வேண்டுமாம், பிறகு அதனை முகர்ந்து பார்த்து அந்த நறுமணத்தை(?) மனதுக்குள்
அசை போட வேண்டுமாம், அதன்பின்னர் பிறகு கோப்பையை மெதுவாக வாயருகே
கொண்டுச்சென்று லேசாக உறிஞ்ச வேண்டுமாம், உறிஞ்சியதை வாயில் வைத்துக்
கொண்டு முழுங்காதவண்ணம் அதன் சுவையை அனுபவிக்க வேண்டுமாம், அதைத்
தொடர்ந்து சொட்டு சொட்டாக தொண்டைக்குள் லயித்த மேனிக்காய் முழுங்க
வேண்டுமாம் - இப்படியாக ஒரு ஆராய்ச்சி நூல் எழுதி வைத்திருக்கிறார்.
மூக்குப்பொடி போடுபவர்களும் இதுபோன்று சில வரைமுறைகளை
சொல்லிவைத்தாற்போல் அவர்களுக்குள்ளாகவே வகுத்து வைத்திருக்கிறார்கள்.
பொடி ஆசாமிகள் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியான கோட்பாடுகள்/ வழிமுறைகள்/
நடைமுறை பழக்கங்கள் இருப்பதைக் காண முடிகிறது. "பொடி போடுவது எப்படி?"
என்ற ஆய்வு நூலை எந்த பிரகஸ்பதியாவது இதற்குமுன் எழுதி வைத்துப்
போயிருப்பாரோ என்னவோ?
பொடி மட்டையை சூசகமாக திறப்பது; அதிலிருந்து ஒரு சிட்டிகையை பதுசாக
கையிலெடுப்பது; இரு விரல்களுக்கிடையில் இறுக்கமாக வைத்துக் கொண்டு சில
மணித்துளிகள் உரையாடுவது; பிறகு சர்..ரென்று மூக்கால் உறிஞ்சுவது; கையை
உதறுவது - இவை யாவற்றிலும் ஒரு நளினம்/ தொழில் நுட்பம்/ லாவகம் இவர்கள்
கையாள்வதை நாம் பார்க்கலாம்.
'நாசிகா சூர்ண'த்தை மூக்குக்குள் திணித்து மூக்கைத் தடவி விட்டுக்
கொள்ளும் அவர்களது பாணியே ஒரு பிரத்தியேக ஸ்டைல். சிலபேர்கள்
கைக்குட்டையை இரண்டு ஓரத்திலும் பிடித்துக் கொண்டு ஷூ பாலிஷ் செய்வதுபோல்
மூக்கை பாலிஷ் செய்துக் கொள்ளும் யுக்தியைக் கடைபிடிப்பார்கள். அந்த
மூக்குக்கு மட்டும் வாயிருந்தால் 'ஓ..வென்று" கதறியிருக்கும்.
இந்த மூக்குப்பொடி சமாச்சாரம் சில நூற்றாண்டுகளாக நம் மக்களிடையே இருந்து
வந்திருக்கிறது.
பேரரசர் அக்பர் ஒருமுறை அரசவையில் "பிறருக்கு எதையேனும் வழங்கும்போது
கொடுப்பவர் கை உயர்ந்தும், பெறுபவர் கை தாழ்ந்தும் இருப்பதுதான் வழக்கம்"
என்று கூற "எல்லா நேரத்திலும் இப்படி இருப்பதில்லை" என்ற பீர்பால் மூக்கை
நுழைக்க அவையோர் மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள்.
''மூக்குப் பொடி கொடுப்பவரின் கை கீழாகவும், அதைப் பெற்றுக் கொள்பவர் கை
மேலாகவும் இருக்கும்'' என்று பீர்பால் மேலும் விளக்கிக் கூற பேரரசர்
அக்பர் மூக்கின் மேல் விரல்வைத்து அவரது அபார அறிவுத்திறனை ஆஹா ஓஹோவென்று
புகழ்ந்தாராம்.
எனது ஒண்ணு விட்ட கொள்ளுத் தாத்தா ஒரு பொடிப்பிரியர். பொடியின்றி
நொடிப்பொழுதும் இருக்க மாட்டார். "பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்.
மற்றெல்லோர் இடிவிழுந்து சாவார்" என்று புதுக்குறள் வேறு சொல்வார்.
நான் பொடியனாக இருந்த காலத்தில் அவரது பொடி டப்பாவை எடுத்து ஒளித்து
வைத்துவிட என் கன்னத்தில் ஒண்ணு விட்டதை மறக்கவே முடியாது, 'ஒண்ணு விட்ட
கொள்ளுத் தாத்தா' என்ற உறவை மெய்ப்பித்துக் காட்டியவர் அவர்.
மாலை நேரத்தில் வாக்கிங் போவதைக்கூட "பொடி நடையாக போய்விட்டு வருகிறேன்"
என்றுதான் சூசகமாகச் சொல்வார். அந்த பொடிநடையின் போது எத்தனை தடவை பொடி
ஏற்றுவார் என்பது எனக்குத்தான் தெரியும்.
N.V.S சண்முகம் பட்டணம் பொடி - இந்த தயாரிப்புக்கு இவர்தான்
நியமிக்கப்படாத, அதிகாரப்பூர்வமில்லாத Brand Ambassador. காரணம்
அவரிடமிருந்த அந்த மஞ்சள் பை, தகர டப்பா, ஹேண்ட்பேக் எல்லாவற்றிலும் இந்த
விளம்பரத்தைத் தாங்கிக்கொண்டு நடமாடும் விளம்பரப்பலகையாக நகரை வலம்
வந்துக் கொண்டிருந்தார்.
தன்னிடம் ஓசிப்பொடி கேட்கும் ஆசாமிகளுக்கு கொஞ்சம் கூட மூக்கைச்
சுழிக்காமல் அள்ளி அள்ளி கொடுக்கும் பொடிவள்ளல் அவர். பவ்யமாக ஓசிப்பொடி
வாங்கிகொண்டு தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டிக் கொண்டு போகும் அந்த
ஓஸிபீஸா ஆசாமிகளைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
ஒரு சிலபேர்கள் நமது பக்கத்திலேயே அமர்ந்து ஜாலியாக பேசிக்
கொண்டிருப்பார்கள். அவர் எப்போது பொடியை கையிலெடுத்தார், எப்படி போட்டார்
என்றே கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அந்த வாசனை அவரை எட்டப்பனாக
காட்டிக் கொடுத்து விடும்.
அறிஞர் அண்ணா இவ்விஷயத்தில் பலே கில்லாடி என்று சொல்வார்கள். மேடையில்
ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே யாரும்
அறியாத வண்ணம் தனது காரியத்தை கச்சிதமாக முடித்து விடுவாராம்.
சைனஸ், மூக்கடைப்பு, நீர்க்கோர்வை, மண்டைச்சளி இதுபோன்ற உபாதைகளுக்கு
இது நல்ல மருந்து என்பது மூ,பொ. ஆசாமிகளின் அசையாத நம்பிக்கை.
புகையிலை, சுண்ணாம்பு, நெய் இவைகளின் ஆபத்தான கலவைதான் இந்த
மூக்குப்பொடி. சுண்ணாம்பு = காரம், நெய் = மணம், புகையிலை = போதைகுணம்.
இதனால்தான் இது காரம், மணம், குணம் நிறைந்ததாக விளம்பரம் செய்கிறார்கள்.
குடிப்பழக்கத்திற்கும் பொடிப்பழக்கத்திற்கும் அதிக வேறுபாடு கிடையாது.
ஒருவித சிலிர்ப்புத்தன்மையும், மூளை நரம்புகளுக்கு புத்துணர்ச்சி
ஏற்படுத்துவதாகவும் ஒரு மாயை. அவ்வளவுதான். இந்த கொடிய பழக்கத்தினால்
இரத்த அழுத்தம், புற்று நோய், பக்கவாதம், நுரையீரல் மற்றும்
சுவாசக்குழாய் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் உண்மை.
ஒருகாலத்தில் புகையிலைதாசர்களுக்கும் மூக்குப்பொடிதாசர்களுக்கும் இடையே
"எது சிறந்தது?" என்ற போட்டா போட்டி நடந்திருக்கிறது. திருப்பதி
வெங்கடாசலபதி காட்டும் அபயக்கரம் 'உள்ளங்கை அகலத்து புகையிலையை
போடுங்கள்' என்று அட்வைஸ் கொடுப்பதாக புகையிலைப் பிரியர்கள் கொக்கரிக்க,
தட்சிணாமூர்த்தி தன் வலதுகரத்தால் காட்டும் சின்முத்திரை மூக்குப்பொடி
போட அட்வைஸ் கொடுப்பதாக மூ.பொ. பிரியர்கள் எசப்பாட்டுப் பாட தெய்வங்களை
விளம்பர மாடல்கள் ரேஞ்சுக்கு களமிறக்கி விட்டார்கள்.
இந்த போட்டியை இவர்கள் இலக்கியத்திலும் காட்டியிருந்தால் தேவலாமே என்று
நினைக்கத் தோன்றுகிறது. "புகையிலை விடு தூது" என்ற நூலைப்போன்று
"மூக்குப்பொடி விடு தூது" என்று ஏதாவது இவர்கள் எழுதி வைத்திருந்தாலாவது
தமிழுக்கு கிடைத்த தூது இலக்கியங்களின் எண்ணிக்கை ஒன்று கூடிப்
போயிருக்கும்.
நம்மவர்கள் உற்சாகத்திற்கு நெப்போலியனை ஏற்றிக்கொள்கிறார்கள். ஆனால் அந்த
மாவீரன் நெப்போலியனே உற்சாகத்திற்கு மூக்குப்பொடியை ஏற்றிக்கொண்டதாக
சரித்திரக் குறிப்புகள் சான்று பகர்கின்றன.
மூன்றாவது ஜார்ஜ் மன்னரின் மனைவி அரசி சார்லட், போப் பெனடிக்ட் XII,
போன்ற பிரபலங்கள் கூட மூக்குப்பொடிக்கு அடிமையாக இருந்திருக்கிறார்கள்.
இந்த புள்ளி விவரங்கள் மூ.பொ.ஆசாமிகளின் கண்களில் படாமலிருப்பது நலம்.
ஏனென்றால் இதையே சாக்காக வைத்துக்கொண்டு பொடிமட்டையை மடியில்
கட்டிக்கொண்டு, கைக்குட்டையும் கையுமாக இவர்கள் அலையக் கூடும்.
கைக்குட்டை என்றதும்தான் ஞாபகம் வருகிறது. மூ.பொ.ஆசாமிகள் பயன்படுத்தும்
கைக்குட்டையைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறா விட்டால் இந்த கட்டுரையே
பூர்த்தியாகாது.
8" x 8" சைஸில் ஒரு தடிமனான துணியில் பிரத்யேகமாக தைக்கப்பட்ட கைக்குட்டை
இவர்கள் வசமிருக்கும். மூக்குப்பொடியைச் சிந்தி சிந்தி அதன் ஒரிஜினல்
கலர் மாறி மரக்கலராய் அது உருமாறி போயிருக்கும், திட்டுத் திட்டாய்
ஆங்காங்கே இலங்கை வரைப்படம் போன்று நனைவுச் சின்னங்கள் பதிந்திருக்கும்.
ஆ.. .. .. அச் .. .. ச்.. ச்.. ச்.. சூ .. ஊ. .. ஊ.. ஊ.. ஊ..
அப்துல் கையூம்
vapuchi@hotmail.com
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com