தலையங்கம்
தமிழீழத்துக்காக விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டுவந்த 33 ஆண்டு கால போராட்டத்துக்கு கசப்பான முடிவு ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோனி உள்பட முக்கியத் தலைவர்கள் பலரும் ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்திருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு முன்வந்து போர்நிறுத்தம் செய்வதாகப் புலிகள் அறிவித்த பின்னரும் இலங்கை அரசு போரை நிறுத்த முன்வரவில்லை. இந்தப் போரை நிறுத்த இந்திய அரசும் எந்த முயற்சியும் செய்யவில்லை. இந்திய அரசின் மெத்தனத்துக்கும் நாடகத்துக்கும் தமிழக அரசும் ஒத்திசை நிகழ்த்தியது. திட்டமிட்டு நடந்தேறிய நாடகம் தேர்தலுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட வேண்டும் என்பதுதான் அதிபர் ராஜபட்சவைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலர் விடுத்த கோரிக்கையாக இருந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இரு தினங்களுக்கு முன்பே, "துப்பாக்கிகளை மெüனத்தில் ஆழ்த்துகிறோம்' என்ற புலிகளின் அறிவிப்பே, அவர்கள் ஒட்டுமொத்தமாக சயனைடு அருந்தி தற்கொலை செய்யவுள்ளனர் என்பதை உணர்வுள்ள எந்தத் தமிழனாலும் உணர முடியும். பிரபாகரன் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் தப்பிச் செல்ல முயன்றபோது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுவது பிரபாகரனை களங்கப்படுத்தும் நோக்கமே தவிர வேறில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பொருத்தவரை இறுதிவரையிலும் அவர் ஒரு தமிழ்ப் போராளி மட்டுமே. ராஜீவ் காந்தி மனிதகுண்டால் கொலையுண்ட பின்னர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாகவும் கொலைக் குற்றவாளியாகவும் பார்க்கும் நிலைமை ஏற்பட்டது. இலங்கையில் தமிழ் அடையாளத்தையும் அங்கே தம் சொந்த மண்ணை, தொழிலை, மனித உறவுகளை இழந்து நின்ற மக்களும் பிரபாகரனும் மட்டுமே இதற்கு நியாயத் தீர்ப்பு சொல்ல முடியும். மனத்துயரும் வலியும் அறியாதவர்களால் ஒரு எதிர்வினையை முழுமையாகப் பார்க்க இயலாது. பிரபாகரன் மீது தீர்ப்பு சொல்லத் தகுதியுள்ளவர்கள் அந்த மண்ணில் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே. சேகுவேரா உள்ளிட்ட பல போராளிகளும் தங்கள் விடுதலை வேள்விக்கான காரணங்களை, அரசியலைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஹிட்லர் கூட தனது நியாயத்தை தன்வரலாறாகப் பதிவு செய்திருக்கிறார். பிரபாகரன் இதுவரை எத்தகைய பதிவுகளையும் செய்திருக்கவில்லை. அது ஏன் என்பது மிகப்பெரிய புதிர். அந்தப் புதிருக்குக் காரணம் தெரியாதவரை பிரபாகரனை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. தன்னைப் போன்றே போராடிய பிற சகோதர அமைப்புகள் அழிக்கப்பட்டது வேறு எந்த நாட்டு விடுதலைப் போரிலும் பார்க்க இயலாதவொன்று. பிரபாகரன் அதனைத் தனது நியாயங்களுக்காக இலங்கையில் நிகழ்த்தியதன் விளைவு, தற்போது புலிகளுக்குப் பின் தமிழர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை என்ற வெறுமை ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை, விடுதலைப் புலிகள் அரசியல் பாதைக்குத் திரும்பியிருந்தால் இந்த வெறுமை முழுமையாக இட்டு நிரப்பப்பட்டு இருக்கலாம். தனது பலம் வாய்ந்த கொரில்லா போர்முறையை கைவிட்டு, ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரிடும் வழக்கமான போர்முறைக்கு மாறியதுதான் விடுதலைப் புலிகளின் பலவீனம் என்றும், கேப்டன் கருணாவின் ஆலோசனைகளும், இந்திய அரசின் ஆயுத உதவிகளுமே இந்த இயக்கத்திற்கு முடிவை ஏற்படுத்தின என்பதும் பொதுவான கணிப்பு. இருப்பினும், இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை. இலங்கைத் தமிழர் மீதான ஒடுக்குமுறைதான் புலிகள் அமைப்பு பிறக்கக் காரணமாக இருந்தது. இன்று புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு சொல்லலாம். ஆனால் இலங்கைத் தமிழரின் நியாயமான கோரிக்கை நிறைவேறாதவரை, அங்கே ஒவ்வொரு பெண்ணின் வயிற்றிலும் ஒரு புலி பிறந்துகொண்டேதான் இருக்கும். விடுதலைப் புலிகளும் களத்தில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், ஈழத் தமிழர் பிரச்னைக்கு இலங்கை அரசு இனி அரசியல் தீர்வு ஏற்படுத்தும் என்றும், நிரந்தர அதிகாரப் பகிர்ந்தளிப்புக்கு சம்மதிக்கும் என்றும் நினைப்பது கனவாகத்தான் இருக்கும். இந்தப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணாதவரை ஈழத் தமிழர் எழுச்சியும், தீவிரவாத உணர்வும் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருக்குமே தவிர அடங்கிவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். இலங்கைப் பிரச்னை தேர்தலைப் பாதிக்காது என்று சொன்னவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். மீண்டும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கலாம். ஆனாலும் மத்திய அரசில் அமைச்சராக உறுதிமொழியேற்றிடும் ஒவ்வொரு தமிழக அமைச்சரின் கையொப்பத்திலும் இலங்கைத் தமிழரின் கரிய ரத்தம் கசிந்திருக்கும். மையின் ஒவ்வொரு துளியிலும் இலங்கைத் தமிழரின் முகம் இருக்கும். எத்தகைய கண்ணீரும், நிவாரண உதவிகளும், வழக்கமான மணிமண்டபங்களும், மலர்அஞ்சலிகளும், தடை நீக்கங்களும், அதனை மாற்றிவிடாது.
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=61868&SectionID=132&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=61868&SectionID=132&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com