அக்காக்களை அதிகம் நேசிப்பவர்கள்
தம்பிகள் மட்டுமே!
அக்காவின் ஆழ்மன உணர்ச்சிகள்
தம்பிகளுக்கு மட்டுமே
அதிகம் தெரிந்திருக்கிறது
அண்ணாக்களைப்போல அதிகாரம்
செய்வதில்லை அக்காக்கள்
என்பதாலேயே இழைந்து
நேசிக்கும் தம்பிகளை
அக்காக்கள் ஒருபோதும்
வெறுப்பதில்லை
கல்லாமண்ணா
ரைட்டா தப்பா
ஒருகுடம் தண்ணி ஊத்தி
ஒருபூ பூத்தது
தாயம், அஞ்சுகல்லு ஆட்டம்
பல்லாங்குழிச்சோழி
ஊஞ்சல் ஓட்டம்
உல்லாசக்கண்ணாமூச்சி
அக்காக்களின் பிரத்தியேக விளையாட்டுகளை
ஆதரிப்பது தம்பிகளே!
கோயிலுக்குக்கூடவந்து
சிதறத்தேங்காய் உடைத்து'
சிரித்துப்பெருமையுடன் நிற்கும்
சின்னத்தம்பிகளை நினைத்தாலே
சிலிர்க்கிறது அக்காக்களுக்கு
பட்டுப்பூச்சிகளைத்
தொட்டுப்பிடித்து
மெல்லத்தலைசீவி
வண்ணச்சிறகுகளை
வலிக்காமல் வருடுவதுபோல
வளர்க்கிறார்கள் தம்பிகளை
அன்பான அக்காக்கள்
தங்கள் கனவுகளையும்'ஆசைகளையும்
சேமித்துக்காப்பாற்றும் தம்பிகளை
அக்காக்கள் மறப்பதில்லை
அக்காக்களின் கனவுகளுக்கு
விடிந்தபின்னும் தம்பிகள் மட்டுமே
விளக்கம் சொல்லுவார்கள்
அரைநிஜார் அணிந்த தம்பிகள்
அர்த்தராத்திரியில் கிற்றுக்கொட்டாய்
சினிமாபார்த்துத்திரும்புகையில்
சிங்கம்போல வழித்துணையாய்நடந்துவர
அங்கமேபூரித்துப்போகும்
அக்காக்கள் பலருக்கு!
மத்தாப்புச்சூடுகண்ட தம்பியின்விரல்நுனியும்
முதல்முத்தம்வாங்கிய பாண்டியாட்டச்சில்லும்
மயிலிறகைமறைத்துவைத்த கணக்குப்புத்தகமும்
வண்ணத்துப்பூச்சியைப்பிடித்து,
வால்பையன்களோடுசேர்ந்து
வத்திப்பெட்டியில் அடைத்தநிகழ்வும்
தாவணி அணிந்த முதல்நாளும்
தம்பிகளோடு கூடிக்களித்த நேரங்களும்
அக்காக்களின் அன்றாட வாழ்வில்
அடிக்கடி வந்துபோகும் நினைவுகள்!
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com