ஜெகத் காஸ்பர் அவர்களே சற்று நிறுத்த முடியுமா உங்கள் அறிக்கை மழைய....!
"வார்த்தைகளோடு விழையாடும் நீங்கள்.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விழையாடாதீர்கள்...!"
"சஞ்சனா அனுபம்" என்ற தலைப்பில் நக்கீரனில் மீண்டும் உங்கள் அறிக்கை மழை எம்மையெல்லாம் நனைத்து நிற்கிறது. தடிமன் காச்சல் வராத குறைதான். சூறாவழி, புயல்காற்று எல்லாம் ஓய்ந்த பின்னரும் உங்கள் அறிக்கை மழை மட்டும் இன்னமும் ஓயவில்லை. சிலர் பரபரப்புச் செய்தியை வெளியிட்டு பணம் சம்பாதிபார்கள், ஆனால் பணம் சம்பாதிக்க பரபரப்புச் செய்திகளை உங்களை வைத்து உருவாக்குகிறார்கள் நக்கீரன் பதிப்பகத்தினர்.
உங்கள் கட்டுரைகளை கடந்த 5 மாதங்களாகப் படித்துவருகிறேன். மே மாதம் 18ம் திகதிக்குப் பின்னர் உக்கிரமடைந்துள்ள நீங்கள், பிரபல்யமாவதற்கும், பணம் சம்பாதிக்கவும் எமது உண்ணத விடுதலைப் போராடமா கிடைத்தது. நீங்கள் ஈழத்திற்குச் சென்றிருந்தபோது வெரிடாஸ் வானொலியின் அறிவிப்பாளர் என்ற வகையில் ஒரு மரியாதையின் நிமிர்த்தமாக தேசிய தலைவர் உங்களுடன் 6 நிமிடம் பேசினார். அப்போது அங்கு நின்றிருந்தவன் நான். ஆம் அதே நீல நிற ஆடையில்.
நலம் விசாரித்த தலைவரிடம், உங்களை அறிமுகப்படுத்தி அங்கிருந்து அகன்றீர்கள். பின்னர் கிடைத்த ஈழத்து நட்புகள் அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் செய்திகளை சேகரித்து, உங்கள் அனுபவமாக அல்லவா வெளிவிடுகிறீர்கள். இதில் கொடுமையான விடையம் என்னவென்றால் நான் உங்களுக்குச் சொன்ன செய்தியையும் நீங்கள் சமீபத்தில் நக்கீரனில் உங்கள் அனுபவம்போல வெளியிட்டுள்ளீர்கள். இது ஒன்று மட்டும் போதுமே.
அத்துடன் இன்றைய தினம் நக்கீரனில் சஞ்சனா அனுபவம் என்ற தலைப்பில் ஒரு யாழ்ப்பாணப் பெண்மணியை பேட்டி காண்பதுபோலவும், அவர் கருத்துக்கள் போல உங்கள் கருத்துக்களைக் கூறியிருப்பதும் வியப்பாக உள்ளது. இது நாள் வரை தமிழீழம் மற்றும், தேசிய தலைவர் மற்றும் போராட்டம் என நீங்கள் பேசிவந்ததால் எல்லாரும் மொளனமாக இருந்தார்கள். ஆனால் தற்போது யாழ்ப்பாணப் பெண்மணியூடாக இந்திய குடிவரவு அதிகாரிகள் மென்மையாக நடந்துகொண்டார்கள் என்றும் ப.சிதம்பரம் சமாதானத்திற்காக பாடுபட்டார் எனவும் நீங்கள் கூற முனைவதை எந்தத் தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தமிழ் நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு இலங்கைத் தமிழர்களும் கியூ பிரிவால் அவதானிக்கப்படுவதும், ஆங்காங்கே கைதுசெய்யப்படுவதும், வேலைகளில் அமர்த்தப்படுவதில் வேற்றுமை பார்க்கப்படுவதும் யாவரும் அறிந்த உண்மை. மண்டபம் முகாம் தொடக்கம் செங்கல்பட்டு சிறப்பு முகாம்வரை ஈழத்தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் மத்திய அரசிற்கு வக்காளத்து வாங்க ஆரம்பித்திருப்பது பெரும் சந்தேகங்களைக் கிளப்புகிறது.
இந்திய உளவுப் பிரிவினருடன் நீங்கள் சேர்ந்து இயங்குவது போலான தோற்றப்பாட்டை உருவாக்குகிறது. தொடர்ந்தும் அந்தக் கட்டுரையில் ப.சிதம்பரம் சமாதானத்திற்காய் உழைத்தவர் என்று நீங்கள் பகிரங்கமாக குறிப்பிடுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏன் எனில் இறுதிப்போர் நடைபெறும் கால கட்டத்தில் விடுதலைப் புலிகளை சரணடையச் சொன்ன நபர்களில் ப.சிதம்பரமும் அடங்குகிறார்.
கலைஞர் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கும்போது, பறந்துவந்து அதனை முடிவுக்குக் கொன்டுவந்த சிதம்பரம் அவர்கள், இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தம் வந்துவிட்டதைப்போல பேசியதும் நாம் அறிவோம். உங்களுக்கும் கலைஞர் மகள் கணிமொழிக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் நாம் நன்கு அறிவோம் ! இந்தச் சூழலில் வெறும் அறிக்கைகளை வெளியிட்டு, புகழைச் சம்பாத்திக்க நினைக்காமல் ஈழத் தமிழர்களுக்கு உங்களால் உதவமுடியுமா எனப் பாருங்கள். எமது இனத்தின் விடுதலைக்கு உரம் சேர்க்கமுடியுமா எனச் சிந்தியுங்கள்.
வார்த்தைகளோடு விழையாடும் நீங்கள்.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விழையாடாதீர்கள்.
உங்கள் மனதை நான் ஏதேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்
இங்கணம்
தமிழரசு
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=469
மானுடநாகரீகத்தின் பயணத்தை உயர்ந்த பாதைகள் நோக்கி நிறுத்திய மக்களாட்சி (Democracy) அரசியல் தத்துவத்திற்கும் மாரத்தான் ஓட்டத்திற்கும் வியப்பான வரலாற்றுத் தொடர்பு உண்டு. சென்னையில் கடந்த ஞாயிறன்று ஏழை மாணாக்கரின் கல்விக்காய் பாடுபட்டு வரும் கிவ் லைஃப் (Give Life) திட்டத்திற்காக தமிழ் மையம் அமைப்பு நடத்திய மாரத்தான் ஓட்டத்தில் காலை மழையில் நனைந்து கொண்டே சுமார் அறுபதாயிரம் பேர் ஓடிய காட்சியின் மறக்க முடியா சிலிர்ப்புடன் மாரத்தான் வரலாற்றைத் தேடுகிறேன்.
கிறிஸ்த்து பிறப்பதற்கு முன் 546-ம் ஆண்டளவில் பெர்சியாவும், கிரீசும் உலகின் முக்கிய இரு பேரரசுகளாய் திகழ்ந்தன. மத்திய தரைக்கடலை யும் செங்கடலையும் இணைக்க பெருவாய்க்கால் கட்டும் ஆற்றலை அன்றே பெற்றிருந்த அந்தப் பெர்சியாதான் இன்றைய ஈரான். ஆசிய, ஐரோப்பிய நிலப்பரப்பின் கணிசமான பகுதிகளை பெர்சியப் பேரரசு தன் ஆளுகைக்குள் கொண்டிருந்தது.
கிரேக்க நாடு என பொதுவாக நாம் அறியும் கிரீசுப் பேரரசு அகண்ட நிலப்பரப்பினை கொண்டி ருக்கவில்லை. நகரங்களை மையமாகக் கொண்டு சிறு நாடுகளை உருவாக்கி, சுயாட்சி உரிமை தந்து, ஓர் கூட்டாட்சிப் பேரரசாக உயர்ந்து நின்றது கிரீசு. அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்ற சிந்தனையாளர்களை உருவாக்கிய பேரரசு இது. இப்பேரரசில் சுயாட்சி உரிமை பெற்று மகத்துவமாய் மிளிர்ந்தவை ஏதென்ஸ், ஸ்பார்ட்டா ஆகிய இரு நகரங்கள். ஏதென்ஸ் சிந்தனை-அறிவு வலுவும், ஸ்பார்ட்டா ராணுவ வலுவும் கொண்டிருந்தன.
கி.மு.490-ம் ஆண்டு பெர்சியப் பேரரசின் பெரும்படை கிரீசுப் பேரரசை மட்டுமல்லாது ஐரோப்பிய நிலப்பரப்பு முழுவதையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வரும் அகண்ட கனவோடு மத்திய தரைக்கடல் கடந்த ஏதென்ஸ் நகருக்கு அருகிலுள்ள ""மாரத்தான்'' என்ற சமவெளிப் பரப்பில் தரையிறங்கி தாக்குதலுக்குத் தயாரானது. கருத்தமர்வுகள், விவாதங்கள், தத்துவ சங்கங்கள் என அறிவுக்கிறக்கத்தில் கிடந்த ஏதென்ஸ் நகர் அலை அலையாய் வந்திறங்கி நின்ற பெர்சிய ராணுவத்தைக் கண்டு பிரமித்துப் போய் ஸ்பார்ட்டா நகரின் தோழமை உதவியை அவசரமாய் நாட வேண்டியிருந்தது. ஏதென்சுக்கும் ஸ்பார்ட்டாவுக்கும் இடைப்பட்ட தூரம் 226 கிலோமீட்டர்கள். தொலைபேசும் வசதியில்லா அக்காலத்தில் குதிரைகளும் பாய்ந்து பறக்க முடியா மலைகளாலான அப்பரப்பை பிடிப்பிடெஸ் என்ற வீரன் செய்தியோடு 36 மணி நேரத்தில் ஓடிக் கடந்து சேர்ந்தான். ஆனால் ராணுவ வலு கொண்ட ஸ்பார்ட்டா மூட நம்பிக்கைகளின் நகராகவுமிருந்தது. முழு நிலா நாள் வரும்வரை தங்கள் ராணுவம் நகராது என்று கூறிவிட்டார்கள். ஏமாற்றத்தை சுமந்து கொண்டு 226 கிலோமீட்டர் மீண்டும் திரும்பி ஓடினான் பிடிப்பிடெஸ்.
ஏமாற்றச் செய்தி கேட்டு ஏதென்ஸ் மனம் தளர வில்லை. மாரத்தான் களத்தில் பெர்சியப் பெரும்படையை துணிவுடன் எதிர்கொண்டனர். முதல்நாள் சண்டையில் 6400 பேரை இழந்த பெர்சிய ராணுவம் பின்வாங்கி கடல் வழியே ஏதென்சு நகருக்கு தென்புறம் நோக்கி நகரத் தொடங்கியது. இப்போது இரண்டு செய்திகள் தலைநகர் ஏதென்சு நகருக்குச் சொல்லப்பட வேண்டும். ஒன்று, மாரத்தான் போர்க்களத்தை வென்ற செய்தி, இரண்டு, பெர்சியப் படைகள் ஏதென்சு நகரை இன்னொருபுறத்திலிருந்து தாக்க முயற்சிக்கக்கூடும் என்ற எச்சரிக்கை செய்தி. இச்செய்திகளையும் எடுத்துக் கொண்டு கால்கள் கட்டிப் பறந்தான் பிடிப்பிடெஸ். மாரத்தான் களத்திற்கும் ஏதென்சு நகருக்குமிடையே அவன் கடந்த தூரம் 41.8 கிலோமீட்டர்கள்.
ஸ்பார்ட்டா நகருக்கு இடைவிடாது ஓடித் திரும்பி 452 கிலோமீட்டர்கள் கடந்த களைப்பு, நாள் முழுதும் மாரத்தான் களத்தில் சண்டையிட்ட அயற்சி... ஆயினும் மன உறுதியை வரவழைத்துக் கொண்டு, ஏதென்சு நோக்கி ஓடினான் பிடிப்பிடெஸ். சுமார் 3 மணி நேரத்தில் சென்று சேர்ந்து வெற்றிச் செய்தியை முழங்கியவன் களைப்பினால் சோர்ந்து விழுந்து அங்கே இறுதி மூச்சு விட்டான். ஆனால் பிடிப்பிடெஸ் சொன்ன எச்சரிக்கை செய்தி ஏதென்சு நகரைக் காத்தது. அன்று ஏதென்சு நகரம் பெர்சியாவிடம் விழுந்திருந்தால் ஐரோப்பிய கலாச்சாரம், மக்களாட்சி தத்துவம்-அமைப்பு முறைகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் எழுச்சி ஆகியவை நிகழ்ந்திருக்காது என வரலாற்றுத் திறனாய்வாளர்கள் கூறுவர். அந்த பிடிப்பிடெஸ் என்ற ஒற்றை வீரன் வரலாற்றுத் திருப்புமுனையான நிகழ்வின் நினைவாகத்தான் பின்னாளில் ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் ஓட்டமும் இணைக்கப்பட்டது. வியப்பென்னவென்றால் மாரத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்ட முதல் ஒலிம்பிக்கில் முதல் இடம் வென்றவர் கிரேக்க நாட்டு ஸ்பிரிடன் லூயிஸ் என்ற வீரர்.
பயிற்சி, மன உறுதி, உடற்பலம், கட்டுப்பாடு, விடாமுயற்சி, நம்பிக்கை ஆகிய விழுமியங்களின் அடையாளம் பிடிப்பிடெஸ். இதே மதிப்பீடுகளை அடியொற்றியே அவனது நினைவாக மாரத்தான் ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிறு சென்னையில் தமிழ் மையம் நடத்திய மாரத்தானும் அவ்வாறானதே.
அன்றைய தினம் அதிகாலை மழையினூடேயும் பல்லாயிரம் மக்கள் கூடி வந்து ஓடினார்கள், குடைபிடிக்க முயல வில்லை, தலைமறைக்க இடமெதையும் தேடவில்லை. வண்ணமயமான ஒன்று கூடலாயும் இருந்தது. பேதங்கள் பலவற்றை சில பொழுதேனும் இந்த ஒன்று கூடல் அறுத்திருந்தது. திருவல்லிக்கேணி வீதியை ஓடிக் கடந்தபின் "அடடா... இப்படி பழமையான கட்டிடங்களெல்லாம் சென்னையில் இருக்கின்றனவா?' என பலர் வியந்திருக்கிறார்கள்.
இந்த ஓட்டத்தினால் பெறப்படும் நிதி கிவ்லைஃப் என்ற அமைப்பினூடாக ஏழை மாணாக்கரின் கல்விக்கு வழங்கப்படும். இப்போது 14,600 பிள்ளைகளை இந்த அமைப்பு பராமரித்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில் இந்தியாவில் அகதி மக்களாய் வாழும் ஈழத்துக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு சிறப்புக் கல்வி நிதி யொன்றை கிவ்லைஃப் அமைக்க வேண்டு மென்று இயக்குநர்களை கேட்டுள்ளேன்.
ஈழத்தமிழ் மக்களுடன் இன்று இணைந்து நடக்க விருப்பம் உடையோராய் முன்வருவோர் பிடிப்பிடெஸ் போல மாரத் தான் விழுமியங் களோடு வர வேண்டியுள்ளது. மனஉறுதி, விடாமுயற்சி, நித்திய நம்பிக்கை மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது.
"மறக்க முடியுமா?' எழுதத் தொடங்கிய நாட்களில் எஸ்.ஜே.இம்மானுவேல் என்ற அருட்தந்தை அவர்களைப் பற்றிக் கூறியிருந் தேனல்லவா? அவரோடு மீண்டும் உரையாடுகிற வாய்ப்புக் கிடைத்தது. வயது இப்போது அவருக்கு 79. பெரிய இதய அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு விட்டாலும் ஆறேழு மருந்துப் பெட்டி களுடன் தமிழீழ மக்களின் நீதிக்காக எங்கு வேண்டுமானாலும் மாரத்தான் உறுதியோடு பயணம் செய்கிறார். தென் ஆப்பிரிக்காவின் பேராயர் டெஸ்மன்ட் டூடு, வாடிகன் திருச்சபை உயர் அதிகாரிகள் என ஓய்வும் சலிப்புமின்றி தன் மக்களுக்காக பலரையும் சந்திக்கிறார்.
"நடந்துவிட்ட நிகழ்வுகள் உங்களை சோர்வுறச் செய்யவில்லையா?' என்று அவரை வினவினேன். ""மிகுந்த வேதனையுறச் செய்தன. ஆனால் சோர்வுறவில்லை. முன்பைவிட இப்போதுதான் நான் மன உறுதியோடும், நீதியின்பால் பசி தாகத்தோடும், நல்ல மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடும் இயங்க வேண்டி யிருக்கிறது'' என்றார். "திருச்சபையின் மூத்த பணியாளராய் இருந்து கொண்டு தமிழீழ மக்கட்பணி செய்வதில் நிறுவன ரீதியான சிரமங்களை எப்படி சமன் செய்கிறீர்கள்?' என்றேன். அவர் சொன்னார்: ""திருச்சபை எனக்கு வீடு. அது தங்கி, உண்டு, ஓய்வெடுக்க. ஆனால் நான் கடமையாற்ற வேண்டிய களம் வெளியே தான் இருக்கிறது. வயல் வெளியோ, கடற் புறமோ, தொழிற்சாலையோ, அலுவலகமோ -எப்படி எல்லோரும் கடமையாற்ற வெளியே வர வேண்டுமோ அப்படித்தான் நானும். நான் இன்று கடமையாற்றும் களம் தமிழீழ மக்களின் விடுதலை'' என்றார்.
"பிரபாகரன் உயிரோடு இல்லை என நம்புகிறீர்களா?' என்றேன். அதற்கு அவர் கூறிய பதில் மறக்க முடியாதது. ""தலைவரது குரல் கேட்காத இந்நாட்களில்தான் அவரது குரல் முன்பைவிட பலகோடி மடங்கு பலம் பெற்றிருக்கிறது. லண்டனுக்கு வந்து பாரும். பாராளுமன்றத்தின் முன் நின்று போராடுகிறவர்களும், பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசுவதும் பழைய தமிழர்களல்ல. இங்கேயே பிறந்து வளர்ந்து துன்பங்கள் எதையும் அறியாத பிள்ளைகள் தான் இன்று களத்தில் நிற்கிறார்கள். இலங்கைக்குச் சென்று ஆயுதமேந்திப் போராடவும் நாங்கள் தயார் என திடமான உறுதியுடன் முழங்கு கிறார்கள். பிரபாகரனின் முகம் காண வேண்டுமென்ற கட்டாயத்தில் தமிழர்கள் இன்று இல்லை. முகம் காட்டாமலேயே எங்கட சனத்தின் மனங்களை பிரபாகரன் வியாபித்துவிட்டார். குரலெடுத்துப் பேசாமலேயே எங்கட இனத்தின் பயணத்தை இதுவரையில்லா உறுதியுடன் அவர் வழி நடத்து கிறார்'' என்றார்.
"நீங்கள் நிறைய படித்தவர். போப்பாண்டவரின் உயர் அவையிலேயே அறிஞராக இருந்தவர். உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களால் பேரறிஞராக அங்கீகரிக்கப்பட்டவர். உங்களுக்குக் கற்றுத்தர பிரபாகரனிடம் என்ன இருந்தது?' என்று நான் கேட்டு முடிக்குமுன்னரே அவர் சொன்னார்: ""எனது மண்ணையும், எனது மக்களையும், எனது மொழியை யும் நேசிப்பதற்குக் கற்றுத் தந்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்தான்'' என்றார்.
"இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் என் இனம் நடக்கிறபோதும் தீமைக்கு என்றும் அஞ்சேன்' என்ற உறுதியோடுதான் நடக்கிறோம். கடவுளிடமும், முடிவற்ற நீதியிலும் எனக்கு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையில் நாங்கள் நேசித்த தந்தையர் நாடான இந்தியா எங்களை காப்பாற்றும் என இன்றும் நான் நம்புகிறேன்' என்று தொடர்ந்தார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களோடான எனது உரையாடலில் ""தமிழீழம் அமையும்போது உங்கள் வெளியுறவுக் கொள்கை எப்படியிருக்கும்?'' என்று கேட்டது நினைவுக்கு வந்தது. அதற்கு அவர் தந்த பதில் நிச்சயம் இந்தியாவின் வெளியுறவு அமைப்பை வியப்புறச் செய்யும்.
(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17672
சஞ்சனாதேவிஎன்ற ஈழத்துச் சகோதரியை கடந்த புதன்கிழமை சந்தித்தேன். யாழ்ப்பாணத்துக் காரர். ஊர் குறித்துச் சொல்வ தெனில் கொக்குவில் மேற்கு. திருமணமாகாதவர். வயது சுமார் 50 இருக்கலாம். சித்த-ஆயுர்வேத மருத்துவம் படித்தவராம். இந்திய அமைதிப்படை யாழ்குடாவை ஆக்கிரமித்திருந்த காலத்தில் ராணுவத்திலிருந்த தமிழக- கேரள வீரர்கள் பலருக்கு இவர் வைத்தியம் செய்ததுண்டாம்.
""இந்திய ராணுவம் எங்கட சனத்துக்கு கன கஷ்டங்கள் தந்த போதும் தமிழக வீரர்கள் வரேக்கெ மனசுக்கு சந்தோஷமா இருக்கும். எங்கட துன்பங்களெ உரிமையோடெ சொல்லவேனும் முடியும். சில நேரம் அண்ணன், தம்பி உரிமை எடுத்துக் கொண்டு அவையளிடம் சண்டையும் பிடிப்பம்'' என்று உரையாடலினூடே குறிப்பிட்டார் சஞ்சனா.
1995 அக்டோபர் இடப் பெயர்வின் போது வன்னிக்கு வந்து, 2009-ல் ராஜபக்சே கும்பலின் இறுதிக் கட்ட கொலைவெறித் தாண்டவக்கூத்தில் அலைக்கழிக்கப்பட்டு, முல்லைத் தீவின் கடைசிநாள் காட்சிகள் வரை கண்டு, உணர்வுகளெல்லாம் செத்துப் போனவராய் வவுனியா வதை முகாமுக்கு வந்து படாத பாடுகளெல்லாம் பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்தபோது சேர்த்த தங்க நகைகளையெல்லாம் விற்று சிங்கள ராணுவத்தினருக்குக் கப்பம் கட்டி, தனது மருத்துவ சிகிச்சைக்காகவென உறவினர் சிலருடன் இந்தியா வந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் குடிவரவுப் பிரிவினர் (ஒம்ம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய்) கருணை யுடன் தம்மை நடத்தியதாய் குறிப்பிட்டார். முன்பெல்லாம் ஈழத்தமிழர் எங்கிருந்து வந்தாலும் அத்தனைபேரையும் குற்றவாளி களாய், பயங்கரவாதிகளாய், பார்க்கிற மனப்போக்கு குடிவரவுத் துறையினரிடமும் உளவுப் பிரிவினரிடமும் இருந்து வந்தது. சிதைந்து போன வாழ்வும், இறக்க முடியா நினைவுச்சிலுவைகளும் எதிர்காலம் பற்றின சூன்ய இருளுமாய் வரும் இம்மக்களை நம் குடிவரவுத்துறை இப்போதேனும் இரக்கத்துடன் பார்க்கிறதென்பது உண்மையில் ஆறுதல் தருகிறது. இன்றைய நடுவணரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நன்றிக் குரியவர்.
கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாய் இங்கு வாழ்ந்து வரும் ஈழத்து அகதி மக்களை எண்ணுகிறபோதெல்லாம் ""நீண்ட தூரப் பயணிகளுக்கும் அகதிகளுக்கும் உன் வீட்டு வாயில்களை எப்போதும் திறந்து வை'' என்ற பைபிளின் வரிகள் என் நினைவுக்கு வரும். அடையாளம், அடிப்படை உரிமைகள் இன்றி நெடுநாள் வாழ்ந்துவிட்ட இம்மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. நிறைவேற்றியுள்ள தீர்மானமும், ஓர் தீர்க்கமான முன் நகர்வு, பாராட்டி வரவேற்கத்தக்கது. கலைஞர் அவர்களின் இந்த முயற்சிக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உடன்துணையாய் இருப்பாரெனில் நிச்சயம் இவ்வாண்டு நிறையுமுன் லட்சம் ஈழ மக்களுக்கு இங்கு குடியுரிமை கிடைக்கும். அடையாளமின்றி அகதி என்ற முத்திரையோடு ஆடு, மாடுகள் போல் வாழும் வாழ்க்கை முடிவுக்கு வரும்.
ப.சிதம்பரம் அவர்கள் இது விஷயத்தில் உறுதியான துணையாய் கலைஞர் அவர்களுக்கு இருப்பார் என நம்புகிறோம், விரும்புகிறோம், உண்மையில் கடைசிக் கட்ட சண்டைகளை நிறுத்தி ஓர் முறையான யுத்த நிறுத்தம் வருவதற்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கும் நிஜமான சாத்தியப்பாடுகள் கொண்டிருந்த ஓர் வாய்ப்பினை, ஒரே ஒரு வாய்ப்பினை உருவாக்கியவர் ப.சிதம்பரம் அவர்கள்தான். பெரும் மானுட அழிவொன்று தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதில் அவர் காட்டிய அக்கறையை நான் அறிவேன். ஆனால் யுத்த நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான அந்த இறுதி வாய்ப்பினை நாசம் செய்தவர்கள் இரு தரப்பினர். எங்கோ இருந்துகொண்டு "அமெரிக்கா உதவிக்கு வரும்' என தவறான நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தவர்களும், இங்கே தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தாங்களே மொத்த குத்தகைதாரர்கள் என்பதாகத் தங்களை நடத்திக் கொண்டு வரும் சில தலைவர்களும் தான். நடந்தது என்னவென்பது ஓரிரு வாரங்களில் இதே பகுதியில் பதிவாகும். தமிழர் இன அழித்தல் யுத்தத்தில் இந்தியா பங்கெடுத்ததென்ற உண்மை ஒரு புறமிருக்க, ப.சிதம்பரம் அவர்கள் யுத்த நிறுத்தம் கொணர பாடுபட்டார் எனச் சொல்வது முரண்பாடில்லையா என்ற கேள்வி நிச்சயம் எழும். அதுவும் விளக்கப்படும்.
சஞ்சனாதேவியும் உறவினர்களும் சென்னை வந்து சேர்ந்தது நவராத்திரி நாளன்று. வடபழனி பக்கம் தெரிந்தவர்கள் மூலம் வாடகைக்கு வீடு எடுத்திருக் கிறார்கள். பாத்திர பண்டங்கள் வாங்கி பால் வைக்க பானையை தூக்கிய நேரம் தெருவில் பட்டாசு வெடித் திருக்கிறது. கணப்பொழுதில் நரம்பு மண்டலத்தை முல்லைத்தீவின் நினைவுகள் கவ்விச் சுழற்ற அருகில் ஷெல் குண்டுகள் விழுந்து வெடிக்கும் பீதியில் அலறிக் கொண்டே பால் பானையை கீழே விட்டிருக்கிறார். சஞ்சனாதேவி படிக்காத இல்லத்துப் பெண் ணல்ல, சித்த-ஆயுர்வேத மருத் துவர். சஞ்சனாதேவியுடன் வந்திருப்பவர்களில் அவரது அக்கா மகன் சபேசனும் ஒருவர். வயது 18. ஆறு வயது குழந்தையாக வேரித்தாஸ் வானொலி முகவரியிட்டு 1997-ம் ஆண்டு எனக்கு எழுதிய மறக்க முடியாத கடிதத்தை சஞ்சனாதேவி எனக்கு நினைவுபடுத்தினார். மழலையாய் சபேசன் எழுதிய அக்கடிதத்தின் உயிரைப்பிழியும் வலியை அண்ணன் அறிவுமதி அவர்களும் நானுமாய் ""உயிரைப்பிழியும் உண்மைகள்'' என்ற மறக்க முடியுமா ஒலிநாடாவில் பதிவு செய்திருந்தோம். ஆறுவயது குழந்தை சபேசன் கோணல் மாணலாய் அன்று எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இது: ""விமானம் வந்து சுற்றிச் சுற்றி குண்டு குண்டா வீசுறாங்கள். சந்திரிகா என்ற அம்மையார்தான் இதை செய்யிறவையாம். அவையளுக்கு நாங்கள் பிழையொண்டும் செய்யையிலெதானே...? எப்பவும் எனக்கு பயமா கிடக்கு. நித்திரை வரையில்லே. நீங்கள் ரேடியோவிலெ கதைக்கிற பெரியவர்தானே... சந்திரிகா அம்மையாரிடம் போன்லெ கதச்சு குண்டு வீசுறதெ நிறுத்தச் சொல்லுவியளா?
குழந்தையாய் யுத்தத்தின் கொடுமைகளைப் பார்த்து வளர்ந்த சபேசன் இன்று 18 வயது வாலிபன். மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருப்பதாய் வேதனையுடன் கூறினார் சஞ்சனா. இன அழித்தல் யுத்தத்தின் கோர விளைவுகளை எத்தனை தலைமுறைகளுக்கு சபிக்கப்பட்ட நம் இனம் சுமக்கப் போகிறதோ?
இறுதிகட்ட அழிவுகளை நினைவுகூர்ந்த அவர், ""இந்தியா எங்களைக் காப்பாற்றும் என கடைசிவரை நம்பியிருந்தோம். தமிழகம் எங்களை கைவிடாது... சண்டை நிறுத்தம் வரும் என்ற நம்பிக்கை மே 15-ம் தேதிவரைக்கும் எல்லா சனத்துக்கும் இருந்தது'' என்றார். வேலுப்பிள்ளை பிரபாகரன்கூட ""முற்றான அழிவை இந்தியா நிச்சயம் அனுமதிக்காது'' என்றே நம்பியிருக்கிறார். கிடைக்கிற உள்வட்டத் தகவல்களின்படி ""இந்தியா, இலங்கை ராணுவத்திற்கு அதிநவீன தொழில்நுட்ப உதவிகளை செய்கிறது. நம்மை பலவீனப்படுத்தவேண்டுமென்பதில் தெளிவாகச் செயல்படுகிறது. ஆனால் கிளிநொச்சியைத் தாண்டி இலங்கை ராணுவம் நகர இந்தியா அனுமதிக்காது'' என்று பலமுறை குறிப்பிட்டதாகக் கூறுகிறார்கள்.
ஊடகங்கள் இங்கு கட்டமைப்பு செய்ததுபோல் பிரபாகரன் இந்தியாவை எதிரியாகப் பார்த்தவரே அல்ல. எனது நேர்காணலின் போது ""தமிழ் ஈழம் மலர்ந்தால் அதன் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்கும்?'' என கேட்டேன். அதற்கு அவர் ஒளிப் பதிவுக்கருவியை அணைக்கக் கூறிவிட்டுச் சிரித்துக்கொண்டே சொன்னார் : ""எங்களுக்கு ஏது ஃபாதர் வெளியுறவுக் கொள்கை? இந்தியாவின்ற வெளியுறவுக் கொள்கைதான் ஈழத்தின்ற வெளியுறவுக் கொள்கையும் அப்படித்தான் இருக்க முடியும்.''
தொடர்ந்தும் பேசிய பிரபாகரன் சொன்னார், ""யாழ்ப்பாணம் ஆறு கூட இல்லாத பூமி. பெட்ரோல் டீசலெல்லாம் எங்களுக்கு இல்லெ. இருப்பதெல்லாம் திரிகோணமலையும் அதைச் சுற்றின கடலும்தான். உலகத்திலெ வேற யாரோ வந்து அங்கெ ஆளுமை செலுத்துறதிலும் பார்க்க இந்தியாவின்ற கட்டுப்பாட்டிலெ அது இருக்கட்டுமே'' என்றார்.
பிரபாகரனின் எண்ணத்தில் மிகத்தெளிவாக இருந்த இந்நிலைப்பாடுகளை இந்திய அதிகார வர்க்கம் அறிந்திருந்ததா, இல்லை முறையாகத் தெரிவிக்க விடுதலைப்புலிகள் தவறிவிட்டார்களா என்ற கேள்விகள் இன்று நம்மை வாட்டு கின்றன. இல்லை பிரபாகரனை பழி தீர்ப்பதாக நினைத்துக்கொண்டு இன அழித்தலுக்கே பங்காளியான பாவத்தை இந்திய அதிகாரவர்க்கம் செய்ததா என்பதெல்லாம் தவிர்க்க முடியாத கேள்விகள். சரியான விடைகளும் நீதியும் பெறப்படும்வரை மீண்டும் மீண்டும் இக்கேள்விகள் கேட்கப்படும்.
(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18180
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com