இந்தியாவைத் தாக்கும் வழியை சீனாவுக்கு, இலங்கை ஏற்படுத்தி கொடுத்துள்ளது: பழ.நெடுமாறன் எச்சரிக்கை
இந்தியாவைத் தாக்கும் வழியை சீனாவுக்கு, இலங்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எனவே, இலங்கையினால் இந்தியாவுக்கு ஆபத்து என்ற நிலை உருவாகியுள்ளது என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல், தேனி மாவட்ட மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில், "தமிழ் ஈழம் மலரும்' என்ற ஆய்வரங்கம் மற்றும் "ஐயம்தீர் அரங்கம்' நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், கலந்துகொண்டு பழ. நெடுமாறன் பேசியதாவது:
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் கூடாது என்பதற்காக, சிங்கள இராணுவத்திற்கு உதவி செய்வதன் மூலம் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது என்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் நல்லதல்ல.
சீனாவின் பிடிக்குள் இலங்கை சென்றுவிட்டது. ஹம்பாந்தோட்ட துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது. மன்னார் குடாவில் இந்தியா-இலங்கை கூட்டாகச் சேர்ந்து பெற்றோல் எடுக்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தையும் மீறி, பெற்றோல் எடுக்கும் உரிமையை சீனாவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது இலங்கை.
மேலும், இப்பகுதியில் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தையும் சீனா ஏற்படுத்தி வருகிறது.
இதன்மூலம், இந்தியாவின் எதிர்காலத்துக்கு அபாயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்தியாவைத் தாக்கும் வழியை சீனாவுக்கு, இலங்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
எனவே, இலங்கையினால் இந்தியாவுக்கு ஆபத்து என்ற நிலை உருவாகியுள்ளது.
யூதர்களை ஹிட்லர் அழித்தது போல, இலங்கை அதிபர் ராஜபக்ச தமிழர்களை அழித்து வருகிறார். இலங்கை அரசு தரும் செய்திகளை மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
சர்வதேச சட்டத்தையும் ராஜபக்ச மதிப்பது இல்லை. ஐ.நா. மக்களுக்கு வழங்கும் உரிமைகளையும் மதிப்பதில்லை.
ஜெனிவா ஒப்பந்தப்படி, போரில் சம்பந்தப்படாத பொதுமக்களைக் கொல்லக் கூடாது என்ற நெறிமுறைகளும் மீறப்படுகின்றன.
தற்போது 3.5 லட்சம் தமிழ் மக்களை அகதிகள் முகாமில் அடைத்து வைத்துள்ளனர். தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் கண்ணிவெடிகள் அதிகளவு புதைக்கப்பட்டுள்ளதாக காரணம் கூறுகிறார் இலங்கை அதிபர்.
ஆனால், தமிழர்கள் பகுதியில் சிங்களவர்களை குடியேற்றுகின்றார். அப்போது மட்டும் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடி வெடிக்காதா? உலகத்தினரை ஏமாற்றும் இலங்கை அதிபரின் செயலுக்கு இந்தியா உதவி வருகிறது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வளர அனுமதிக்கக் கூடாது. அது, இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடியும் என்றார் பழ. நெடுமாறன்.
http://www.nerudal.com/nerudal.9046.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com