ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: 8
ஐக்கிய இலங்கை எனும் அரசியல் தவறு!
வன்னியில் பண்டார வன்னியன் ஆட்சி தொடர்ந்தது போல தமிழர் பகுதிகள் ஆங்கிலேயர் வசமான போதிலும் அவற்றைத் தனித்தனி நிர்வாகத்திலேயே வைத்திருக்கின்றனர். அக்காலத்தில் ஆங்கிலேயரின் மிகப் பெரிய காலனியாக சென்னை மாகாணம் இருந்தமையால், ஆரம்ப காலத்தில் இலங்கையின் மூன்று பகுதிகளையும் சென்னையோடு இணைத்தே ஆட்சி புரிந்து வந்தனர். அப்போது ஆங்கிலேயரிடம் இருந்த இலங்கையின் வரைபடம்தான் (ஆரோஸ்மித் தயாரித்தது, படங்கள் பகுதியில் காண்க) இன்றும் புழக்கத்தில் இருக்கிறது.
1797-இல் இலங்கையின் தமிழர் பகுதியில் கலகம் ஒன்று நிகழ்கிறது. இதை அடக்க அல்லது மாற்று ஏற்பாடுக்கு உத்தரவிட யாழ்ப்பாணத்திலிருந்த அதிகாரி சென்னை மாகாணத்தின் அதிகாரியை நாடவேண்டியிருந்தது. இதனால் ஏற்பட்ட காலதாமதம் கலகத்தை ஊக்குவிப்பதாக அமைந்தது.
எனவே, சென்னை மாகாணத்தில் ஒரு காலும் யாழ்ப்பாணத்தில் ஒரு காலுமாக வைத்துக்கொண்டு நீதி~ நிர்வாகம் செய்வதன் சாதக பாதகங்களை உத்தேசித்து, இலங்கையின் பகுதிகளை~இலங்கை மண்ணிலிருந்தே நிர்வகிப்பது என முடிவெடுக்கப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் இலங்கை, இங்கிலாந்தின் காலனி நாடுகளில் ஒன்று என்ற அந்தஸ்தினைப் பெறுகிறது. முதல் ஆளுநராக 1798-இல் ஃப்ரெடரிக் நார்த் என்பவர் நியமிக்கப்படுகிறார்.
ஃபிரெடரிக் நார்த் ஆளுநராக வரும் வரையிலும், வந்த பின்னும் சில ஆண்டுகள் வரை யாழ்ப்பாணம், கோட்டை, கண்டி ராஜ்ஜியங்கள் தனித்தனியாகவே ஆளப்பட்டு வந்தன. இப்படித் தனித்தனியான நீதி நிர்வாகத்தை ஒன்றாக்கினால் செலவு குறையும் என்ற கருத்துப் பரவலாக எழுகிறது. வெவ்வேறான கலாசாரங்களைக் கொண்ட இலங்கையர்களை, செலவைப் பாராது, தனித்தனியாக ஆட்சி புரிவதே நல்லது என்ற எதிர்க் கருத்து ஒன்றும் அதே நேரத்தில் வலியுறுத்தப்படுகிறது.
இதைத் தீர்மானிக்க, ஆணையம் ஒன்று (1931-இல்) அமைக்கப்படுகிறது. இந்த ஆணையத்துக்கு கோல்புரூக் தலைவராக அமைகிறார். இவர் தெரிவித்த கருத்துகள்:
1. மூன்று வெவ்வேறு ஆட்சிக்குப்பட்ட பகுதிகளின் நில வருமானத்தைப் பாதிக்காத வகையில் சில சீர்திருத்தங்கள் காண்பது.
2. இந்தச் சீர்திருத்தங்கள் வெவ்வேறு கலாசாரங்களைக் கடைப்பிடிக்கும் மக்களின் தனித் தன்மையைப் பாதிக்காத அளவில் அமைய வேண்டும்.
-என்று குறிப்பிட்ட கோல்புரூக், ஆங்கிலேய அரசுக்கு ஓர் எச்சரிக்கையையும் வைக்கிறார். சிங்களவர்~ தமிழர் இருவரிடையே நிறைய வித்தியாசமிருக்கிறது; இருவரது கலாசாரமும் வெவ்வேறானவை. காலம் காலமாகப் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களை, புதிய சட்ட திட்டங்களின் மூலம் சீர்திருத்துவது என்பது ஒழுக்கமற்ற செயலாகவே இருக்கும். இதன் மூலம் உருவாகும் பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்றும் அவர் அடித்துக் கூறுகிறார். இலங்கை வரைபடம் ஒன்றையும் அத்துடன் இணைக்கிறார் (பட உதவி: தமிழ் ஈழ நாட்டு எல்லைகள்-காந்தளகம்).
கோல்புரூக்கின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது அவரால் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாகச் சிக்கனத்திற்கான விஷயங்களை மட்டும் லண்டனில் உள்ள அரசுச் செயலாளர் எடுத்துக் கொள்கின்றார். நிர்வாகம் ஒருமைப்படுத்தப்பட்டு இருந்த போதிலும் 1833 வரை மேற்கே சிலாபத்தில் இருந்து தென் கிழக்கே வளவை கங்கை வரையுள்ள இலங்கைத் தீவின் வடக்கு, வடமேற்கு, கிழக்கு கரையோரப் பகுதிகள் தமிழரின் வாழ்விடங்களாக அப்போதே ஆங்கிலேயரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
தமிழ் தேசிய இனத்தையும், சிங்கள தேசிய இனத்தையும் ஓராட்சியின் கீழ் நீதி-நிர்வாகம் செய்வதில் அவ்வப்போது தோன்றும் சில சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை; ஓய்ந்தபாடில்லை. ஆங்கிலேயருக்குத் தீராத தலைவலியாக இந்தச் சிக்கல்கள் அமைந்தது கண்டு 1882-இல் மேலும் ஓர் ஆணைக்குழு அமைக்கப்படுகிறது.
இலங்கையின் வடமேற்குப் பகுதியின் ஆட்சியரான ஜே.எப். டிக்சன் இந்தக் கமிட்டியில் ஓர் உறுப்பினர். இவர் தனது கருத்துகளை ஆணையரிடம் கொடுக்காது, அப்போதைய இலங்கை ஆளுநரான சர். ஜேம்ஸ் ராபர்ட் லாங்டனிடம் 6-ஆம் தேதி செப்டம்பர் 1833-இல் சிறப்பு மனுவாகத் தருகிறார்.
1831-இல் கோல்புரூக் ஆணைக்குழு என்ன கருத்தைச் சொன்னதோ, அதே கருத்தைத்தான் ஜே.எப். டிக்சனும் தெரிவிக்கிறார். மனுவில் டிக்சன் கூறியிருப்பதாவது:
"மூன்று வெவ்வேறான ஆட்சிப் பகுதியிலுள்ள மக்களின் தனித்தன்மைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இப்படி ஆட்சிபுரிய ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் தனித்தனி ஆட்சிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஆட்சிக்குழுக்கள் தனித்தனியாக மூன்று ஆட்சி ஆணையர்களை நியமிக்கலாம்' என்கிறார்.
"மனுவை அதற்கென ஆராயும் ஆணையத்திடம் தராது தனியாய் தருவதின் நோக்கம் என்னவெனில், ஆணையத்திடம், மூன்று ஆட்சிப் பகுதிகளில் உள்ள மக்களின் நலன்களைப் பேணுவதில் அலட்சியப்படுத்தும் போக்குக் காணப்படுகிறது' என்றும் அதில் டிக்சன் தெரிவிக்கிறார். டிக்சன் மேலும் ஒரு தகவலைத் தீர்க்கமாகக் குறிப்பிடுவதாவது:
"அரசு அமைப்பை மாற்றி ஒற்றை ஆட்சி அரசு ஒன்றை அமைப்பது தற்காலத்திற்கும் ஏன் எதிர்காலத்திற்கும் கூட உகந்ததாக இருக்காது. ஏனெனில் மூன்று மக்களும் மதத்தால், கலாசாரத்தால் மிகப்பெரிய வேறுபாட்டைக் கொண்டுள்ளனர். இந்த வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளாது ஒற்றை ஆட்சி அரசு அமைத்தால் ஆட்சியாளரின் (ஆங்கிலேயரின்) குணாம்சத்தில் மக்கள் அவநம்பிக்கை கொள்வது நிச்சயம்'~ என்றும் துல்லியமாகத் தெரிவிக்கிறார்.
மனுவைப் படித்துப் பார்த்த ஆளுநர் சர் ஜேம்ஸ் ராபர்ட் லாங்டன், "இந்த மனுவில் குறிப்பிடும் விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை' என்னும் குறிப்புடன் இங்கிலாந்தில் உள்ள காலனியாதிக்கச் செயலாளருக்கு அனுப்பி விடுகிறார்.
ஆளுநர் "கவனத்தில்' கொள்ளப்பட வேண்டிய விஷயம் என்று குறிப்பிட்டார். "கவனம்' காகிதத்தோடு நின்று போனது. டிக்சனின் கருத்துக்கு நேர் எதிரிடையாக தனது சொந்த எண்ணத்தை செயல்படுத்த ஆளுநர் தீவிரமாக முனைந்தார்.
மூன்று வெவ்வேறான ஆட்சிப் பகுதிகளை அரசின் ஒப்புதலோடு ஒன்றாக்கி உருவாக்கினார். இலங்கை முழுதும் ஒரே ஆட்சியின் கீழ் ஏற்கெனவே வந்து விட்டபோதிலும் அதுநாள் வரை தனித்தனியான நீதி நிர்வாகம் நடந்து வந்தது. அதை அவர் ஒழித்தார். இந்தச் செயல் மூலம் போர்த்துக்கீசியரும், ஒல்லாந்தரும் செய்ய முடியாத செயலைச் செய்தவர் என்ற பெருமையினையும் பெற்றார்.
ஆனால் அப்போது இலங்கையில் வசித்த நடுநிலையான ஆங்கிலப் பத்திரிகையாளர்களில், குறிப்பாக ஈ.ஜே. யங் இந்த அணுகுமுறையை "மிகப் பெரிய அரசியல் தவறு' என்று வர்ணித்தார்.
ஆக, நூற்றாண்டு கணக்கில் மூன்று பகுதிகளாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்ட இலங்கை -ஆங்கிலேயர் ஆட்சியில் நேர்மையாக இருந்த ஒரு சில ஆங்கிலேயராலேயே ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், வலிந்து திணிக்கப்பட்ட ஒரு செயலாக, நிர்பந்தமாக ஒரே இலங்கை என்ற "ஐக்கிய இலங்கை' உருவாக்கப்பட்டது. ஒரு டி.வி. பேட்டியில் ஜெயவர்த்தனே ""250 ஆண்டுகளாக இலங்கை ஐக்கியப்பட்டிருந்தது'' எனக் கூறியது உண்மை வரலாற்றைத் திரித்துக் கூறும் எவ்வளவு பெரிய பொய் என்பது மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறியலாம்.
நாளை: ஐரோப்பியர் ஏற்படுத்திய விளைவுகள்
http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=70921&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81:+8+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81!
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com