வெந்து கொதிக்கும் காங்கிரஸ்! |
தோலுரிக்கும் சி.டி... |
'இனியென்ன செய்யப் போகிறோம்?', 'கொலைஞர்', 'புதிய பராசக்தி' போன்ற தலைப்புகளில் உலவ விடப்படும் சி.டி-க்கள் காங்கிரஸ்-தி.மு.க-வின் தூக்கத்தைப் பறித்துள்ளன. இந்த சி.டி-க்களை மையம் கொண்டு எம்.நடராஜன் வீட்டில் ரெய்டு, தமிழ் உணர்வாளர்கள் சிலர் கைது என்று விவகாரம் பரபரப்பாகிற நிலையில்... காங்கிரஸ் கட்சியின் முன் னாள் தலைவரான பழ. நெடுமாறனும் காங்கிரசுக்கு எதிராக சி.டி ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்! கடந்த 22-ம் தேதி 'இறுதி யுத்தம்' என்ற தலைப்பில் பகிரங்கமாக அவர் வெளியிட்டிருக்கும் சி.டி. 'ஈழத்துக் கொடூரங்களுக்குக் காரணமே காங்கிரஸ்தான்!' என்று நெஞ்சை உலுக்கும்படிச் சொல்கிறது.
நாமும் அந்த சி.டி. காட்சிகளைப் பார்த்தோம். 'கஞ்சிக்கு வழியின்றி கதறும்குழந்தைகள்... உயிர் பயத்தில் குழந்தை குட்டிகளோடு ஓடும் பொதுமக்கள்...
|
ரத்தகாயங்களோடு உயிர்நடுங்க அலறும் பெண்கள்...' என ஈழத்து சோகங்கள் காட்சிகளாக விரிய, 'இதற்கெல்லாம் யார் கார ணம்?' என்ற கேள்வி அதில் உரக்க எழுப்பப்படுகிறது. கூடவே, காங்கிரஸ் வேட்பாளர்களின் படங்களும் வரிசை கட்டுகின்றன. நெற்றி தெறித்த பச்சைக் குழந்தை ரத்தத்தோடு கிடக்க, அதே காட்சியோடு சேர்த்துக் காட்டப்படுகிறது சிரித்தபடி நிற்கும் மத்திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரத்தின் படம். தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் கருகிய உடல் ஒரு பக்கம் கிடக்க... அதற்கு பக்கவாட்டில் கார் வேந்தன், நாராயணசாமி என காங்கிரஸ் வேட்பாளர்களின் படங்கள். அதோடு, ராஜ பக்ஷேவுடன் கைகோத்து நிற்பதுபோல் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதி ஆகியோரையும் சேர்த்துக் காட்டியிருக்கிறார்கள் இந்த சி.டி-யில்!
ஈழத்து ஓலமும் ஒப்பாரியும் இவற்றின் பின்னணியில் ஒலிக்கின்றன. ராகுல்காந்தி வீர வாளோடு சிரித்தபடி நிற்க, 'தமிழினம் அழிய இவர்கள்தானே காரணம்?' என்கிற ஆவேசப் பேச்சும், ரத்தத்தில் துவைத் தெடுக்கப்பட்ட குழந்தையும் அடுத்தடுத்து தோன்றுகின்றன. கடைசியாக 'நம்மைக் கொன்றழிக்கும் இந்தக் கூட்டத்தை விரட்டி அடிப்போம்...' என்கிற வார்த்தைகள் ஒலிக்க 'கை' சின்னம் தலைகீழாகக் கவிழ்வதுமான காட்சியோடு சி.டி. முடிகிறது.
தற்போது தமிழகம் முழுக்க விநியோக மாகிப் பரபரப்பாக செய்திகள் அடிபட்டுக் கொண்டி ருக்கும் நிலையில்... சி.டி.யை உருவாக்கிய தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவினரிடம் நாம் பேசினோம்.
''ஈழத்துக் கொடூரங்களையும் அதற்குக் காரணமான காங்கிரஸ் தலைவர்களையும் ஒருசேரக் காட்டினால்தான், அது கிராமப்புற மக்கள் வரை போய்ச் சேரும். காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் இந்த சி.டி-யை பெரிய அளவில் விநியோகிப்போம். தங்கள் முகங்களைக் காட்டிக்கொள்ள விரும்பாத ஈழ ஆர்வலர்கள் நிறையப் பேர் இந்த சி.டி-யை லட்சக்கணக்கில் தயாரிக்கவும் விநியோகிக்கவும் பொறுப்பேற்றுக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஒரு தொகுதிக்கு ஒரு லட்சம் சி.டி என விநியோகிக்க மொத்தமாக பதினாறு லட்சம் சி.டி-க்களை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் சி.டி-க்களை பெரிய திரைகளில் படமாக ஓட்டிக் காட்டவும் தயாராகி வருகிறோம்...'' என்றார்கள் தயாரிப்புக் குழுவினர்.
இதற்கிடையில், இந்த சி.டி-க்களைத் தடுப்பதில் தீவிரமாகி இருக்கும் தமிழக அரசு, பெரி யார் திராவிடர் கழக நிர்வாகிகளின் வீடுகளில் புகுந்து அத்துமீறி செயல்படுவதாகவும் புகார் கிளம்பி இருக்கிறது.
இது குறித்து பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரனிடம் பேசினோம். ''நாங்கள் வெளியிட்ட சி.டி-க்கள் சட்டத்துக்கு உட்பட் டவைதான். கருத்துச் சுதந்திரத்தை மீறி நாங்கள் செயல்படவில்லை. ஆனாலும், தமிழகம் முழுக்க இருக்கும் எங்கள் கட்சி அலுவலகங்களில் அத்துமீறி நுழைந்து சோதனை போட்டிருக்கிறது காவல் துறை. அதோடு, எங்களுக்கு சம்பந்தமில்லாத சி.டி-க்களை நாங்கள் தயாரித்தது போல ஜோடிப்பு காட்டும் வேலைகளிலும் போலீஸ் இறங்கி இருக்கிறது. எங்கள் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் ராம இளங்கோ, கோவை கட்சி அலுவலகப் பொறுப்பாளர் கதிரவன் ஆகியோரை சம்பந்தமே இல்லாமல் கைது செய்திருக்கும் போலீஸ், அவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத வழக்குகளைப் புனைந்திருக்கிறது. இரு நாடுகளின் உறவுகளைக் குலைக்கும் விதமாகவும், ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத் தும் விதமாகவும் எங்கள் நிர்வாகிகள் செயல் பட்டதாக போலீஸார் பகீர் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அத்துமீறலையும் ஜோடனையையும் வன்மை யாகக் கண்டிக்கிறோம். இதற்கு மேலும் சி.டி. விவகாரத்தில் போலீஸ் எங்கள் மீது நியாயமற்ற கெடுபிடிகளைக் காட்டினால், அதனைக் கண்டித்து, தமிழகம் முழுக்கப் போராட்டங்கள் நடத்துவோம்!'' எனச் சீறினார் விடுதலை ராஜேந்திரன்.
ஏற்கெனவே வெளியான சி.டி-க்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருக்கும் காங்கிரஸார், பழ. நெடுமாறனின் புதிய சி.டி-யால் இன்னும் உக்கிரமாகி, மறுபடியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கும் முடிவில் இருக்கிறார் கள்.
காங்கிரஸ் தரப்பில் பேசியபோது, ''ஈழத்து சோகங்களை சி.டி-யாக வெளியிட்டதை நாங்கள் குற்றம் சொல்லவில்லை. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் பதினாறு பேருடைய படங்களையும் வரிசைப்படுத்தி, கூடவே அன்னை சோனியா, ராகுல்காந்தி, முதல்வர் கலைஞர் உள்ளிட்டவர்களின் படங்களையும் காட்டி தமிழர்களை நாங்களே கொல்வது போல சித்திரித் திருக்கிறார்கள். தேர்தலில் எங்களை வீழ்த்துவதற்காக நடத்தப்படும் இந்த சதியை தேர்தல் ஆணையமும் தமிழக காவல்துறையும் உடனடியாகத் தடுக்கவேண்டும்!'' என்றார்கள்.
நெடுமாறனிடம் பேசினோம். ''இன்றைக்குஎன்ன நடக்கிறது என்பதன் பதிவுதான் அந்த சி.டி. காங்கிரசும் தி.மு.க-வும் ஈழத் தமிழர்களின் அவலம் குறித்துக் கொஞ்சமும் கவலைகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதையே அந்த சி.டி சுட்டிக் காட்டுகிறது. ஈழத்தில் புண்பட்டுக் கிடக்கும் தமிழ் மக்களின் வேதனை நிலையை மிகுந்த நனிநாகரிகத்துடன் யார் மனமும் புண்படாமல் அதில் பதிவாக்கி இருக்கிறார்கள். சி.டி. விநியோகத்தைத் தடைசெய்ய காங்கிரஸார் மெனக்கெட்டால்... அதிலி ருக்கும் உண்மைகளுக்கு பயப்படுகிறார்கள் என்றுதானே அர்த்தம்? சி.டி. முன்வைக்கும் கேள்விகளுக்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வால் என்ன பதிலை எடுத்து வைக்க முடியும்?'' என்றார்.
நன்றி ஜூனியர் விகடன்
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com